நான் வாழ்ந்த வாழ்க்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 6,219 
 
 

உள்ளே நுழைந்த எனக்கு இது ஒரு அறை போல் தென்படவில்லை. வெளியில் இருந்து உள்ளே நுழைவதற்கு கதவு இருந்தது, அதனுள் நுழைந்தேன்..உள்ளே பார்த்தால் அகன்ற வெட்ட வெளியாகத்தான் தெரிகிறது..

ஆச்சர்யம் ஆட்கள் தானாக பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் சென்று கொண்டே இருக்கிறார்கள். என்னை தாண்டி கூட போய்க்கொண்டிருக்கிறார்கள், கதவை தாண்டியும் போகிறார்கள், உள்ளேயும் வருகிறார்கள். நான் மட்டும் உள்ளே செல்ல முடியாமல் ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டிருக்கிறேன்..

அட….எதிரில் வருவது நம்ம தாய் மாமா மாதிரியிருக்குதே. ஆமாம், ஆனால் நம்ம குடும்பத்தோடு நீண்ட காலமாய் பகையாய் இருந்தாரே, என்னைக்கண்டால் பேசுவாரா, பார்போம்.

இது என்ன இந்த ஆள் என்னை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை, என்னை தாண்டி போகிறோமே, சொந்தக்காரன் என்று ஒரு புன் சிரிப்பு ஹூஹூம், அவர் பாட்டுக்கு சிரித்துக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறார்.இது எனக்கு அவமானமாக தெரிகிறது.

என்னதான் கோபம் இருந்தாலும் இப்படியா? அவருடைய பெண்ணை எனக்கு கட்டி வைக்க அப்பா ஒத்துக்கொள்ளவில்லை.அதனால் ஏற்பட்ட கோபம், தன் அக்காவிடம் உன் வீட்டுல இனி பச்ச தண்ணி குடிச்சன்னா ஏன்னு என்னை கேளு, சொல்லிவிட்டு வெளியே வந்தவர்தான், ஆயிற்று எத்தனையோ வருடங்கள், சொன்னது போலவே எங்கள் குடும்பத்தை

விட்டு விலகியே இருந்தார். அதற்காக இப்படியா எங்கோ இருக்கிறோம், ஒருத்தரை ஒருத்தர் பார்க்கிறோம், சொந்தக்காரன் என்று கூட வேண்டாம், தெரிந்தவன் என்ற முறையிலாவது பார்க்கலாமல்லவா? மனம் வெறுத்து போனது.

துயரத்துடன் தலையை தூக்கி பார்த்தேன். தூரத்தில் அப்பா வந்து கொண்டிருந்தது தெரிந்தது. நடையை பார்த்தால் வயதானவர் மாதிரியா தெரிகிறது, மனிசனுக்கு அதே தெனாவெட்டு, என்னை எதுவும் செய்ய முடியாது என்ற திமிர். இந்த திமிர்தானே அம்மாவை அடிக்கடி கண்கலங்க வைத்தது, அம்மா மட்டும் லேசுப்பட்டவளா, இந்த ஆள் அவளை எத்தனை பேசினாலும் விட்டு கொடுக்கமாட்டாள். அவளை பொருத்தவரை புருசந்தான் முக்கியம்., இதனால என்னாச்சு, என் வீட்டுக்காரியோட தினம் சண்டை, கோபிச்சுகிட்டு இரண்டும் தனியா போச்சு. தனியா போய் என்ன சாதிச்சுது, ஏச்சும் பேச்சும் எங்களுக்குத்தான்,

சொந்தக்காரனுகளுக்கு இது போதுமே, “பெத்தவங்களை தவிக்க விட்டுட்டு இவங்களுக்கு என்ன வாழ்க்கை” அப்படீன்னு பேச ஆரம்பிச்சுட்டானுங்க.

அதெப்படி இந்தாளை தனியா விமாட்டாளே எங்க ஆத்தாக்காரி, அவளுக்கு எப்பவும் புருசன் பின்னாடியே இருக்கணும், இந்தாளுக்கு எடுபிடி செய்யறதுக்கு ஒரு ஆள் இருக்குது அப்படீங்கற நினைப்பு. கடைசியா இரண்டும் சோத்துக்கு அல்லாடிக்கிட்டு இருந்தாங்களே,

என்ன பண்ணுச்சுங்க?

பாரு பாரு என்னை தாண்டி போறதை பாரு, தாய்மாமனாவது கொஞ்சம் சிரிச்ச மாதிரி இருந்துச்சு, ஆனா இந்த ஆளு என்னை கண்டுக்கவே இல்லை, அந்தாளுக்காவது மருமகன், இந்தாளுக்கு மகன், அதை கூட கண்டுக்காம போறான், ஆத்திரத்தில் இரண்டு வசவுகளை வீசிவிட்டு கொஞ்சம் தாண்டி பார்த்தேன் அம்மா வந்து கொண்டிருந்தாள்.

ஆனால் என்ன ஒரு நெஞ்சழுத்தம், அந்த கூட்டத்தோடு ஆடி பாடிக்கொண்டு வாறாளே. புருசனை கூட தனியா விட்டுட்டு இவளுக்கு என்ன ஆட்டம் பாட்டம், அதுவும் ஒருத்தரை ஒருத்தர் கை கோத்துகிட்டு, சிறிசு பெருசுன்னு தராதரம் வேண்டாம், இது கூட கை கோத்து கிட்டு ஒரு பத்து வயசு புள்ளை கூட ஆடிக்கிட்டு போறாளே.நான் நிக்கறது இவளுக்கு தெரியுதா இல்லை எங்கப்பனை மாதிரி இவளும் கண்டுக்காமா போறாளா? பார்ப்போம்.

எதிர்பார்த்த மாதிரியே அவள் என்னை கண்டு கொண்ட்தாகவே தெரியவில்லை. எனக்கு வந்த கோபத்துக்கு அளவில்லாமல் இருந்தது, சே என்னத்துக்கு நான் இவங்களை நினைச்சு அலட்டிக்கணும், எனக்குத்தான் இரண்டு பசங்க மலை மாதிரி பிறந்தானுங்களே. இந்த ஊரே பாராட்டறமாதிரி அவங்களுக்கு கல்யாணம் பண்ணிவச்சிருக்கேன், நல்ல வேலை வாங்கி கொடுத்திருக்கேன், இதுக்கு மேல என்ன வேணும், சும்மா இந்த வயசானவங்களை நினைச்சு கவலைப்பட்டுட்டு இருக்கேன். அவங்க கண்டு கிட்டு போனா என்ன? கண்டுக்காம போனா என்ன?

என் முதுகை இடித்துக்கொண்டு செல்வது தெரிந்தது. யார் எருமையாட்டம் தள்ளிகிட்டு போறது, கோபத்துடன் திரும்பி பார்த்தால்…என் வீட்டுக்காரி !

அட கமலா நீ எங்கே இங்கே? அவள் என்னை கண்டு கொள்ளவே இல்லை, தாண்டி செல்வதிலேயே இருந்தாள். நில் ! அவள் தோளை பற்றி நிறுத்த முயன்றேன் ஹூ ஹும் அவள் தோளை தொடவே முடியவில்லை, அவள் பாட்டுக்கு உள்ளே போய்க்கொண்டே இருந்தாள். நான் நிற்கிறேன் என்பது கூட அவளுக்கு தெரிந்ததாக தெரியவில்லை.

வேண்டாம் இங்கே நிக்கவே வேண்டாம், பேசாம திரும்ப போயிடலாம். முடிவு செய்து அந்த கதவின் வழியாக வெளியே முயற்சிக்கும்போது யாரோ ஒருவரால் தடுக்கப்பட்டு உள்ளே செல்லும்படி கை காட்டினார்கள்.

முடியாது என்று அவரை பார்த்து தலையசைக்க முயற்சிக்க இது என்ன வேகமாக உள்ளே இழுக்கப்பட்டேன்.என்னை மீறி இழுப்பது தெரிந்த்து, அட இதென்ன உடல் காற்றாக இருக்கிறது, எதிரில் தெரிந்த மனித கூட்டங்கள் இப்பொழுது தெரியவில்லையே.

“எதிரில் வெட்ட வெளியாய் ஆஹா இதென்ன ஒரே சந்தோசமாய், வாய் விட்டு சிரிக்க்கிறேன்.பக்கத்திலும் சிரிப்பு மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கிறது..

ஹாஸ்பிடலில் “ சாரி சார் உங்கப்பாவையாவது கடைசியா காப்பாத்திடலாமுன்னு பார்த்தோம், உங்க அம்மா இறந்து அஞ்சு நிமிசத்துலயே உயிருக்கு போராடிகிட்டு இருந்த அவர் உயிரும் போயிடுச்சு. ஒரு வேளை அவர் சம்சாரம் போறதுக்காகத்தான் வெயிட் பண்ணிகிட்டு இருந்தாரோ, உயிரை கையில புடிச்சுகிட்டு.

மறு நாள் பத்திரிக்கைகளில் “விபத்தில் கணவன் மனைவி பலி” என்று வந்திருந்தது.

மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்தும் இருவரும் ஒன்றன் பின் ஒன்றாக உயிர் பிரிந்தனர்

மனைவி இறந்த ஐந்து நிமிடகளில் கணவனும் இறந்து விட்டார்.

மகன்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர் அப்பா இருக்கும்போது நம்ம தாத்தா பாட்டியை கூட அண்ட விடாம சாப்பாட்டுக்கே வழியில்லாம் சாக வச்சாரு. நாம அப்படி வாழ கூடாது. நமக்கு சொந்தங்கள் எல்லாம் வேணும், கடைசி வரைக்கும் ஒத்துமையா இருக்க முயற்சி செய்வோம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *