நான்காம் உலகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 8, 2015
பார்வையிட்டோர்: 8,991 
 
 

விடிந்துவிட்டது. எனது மகன்கள் தங்கள் பாடசாலைகளுக்குச் செல்ல ஆயத்தமாகிறார்கள். இன்று நான் காணப்போகும் மீனா என்ற இந்தியப் பெண்மாதிரி,தன்னைச் சுற்றிய உலகைக்;கண்டு பயப்பட்டு அடைந்து கிடக்கும் வயதோ அல்லது பயமோ அவர்களுக்குத் தெரியாது.

நான் படுக்கையை விட்டெழும்பாமல்,ஜன்னலால் உலகத்தைப் பார்க்கிறேன். எனது படுக்கையறையை அண்டினாற்போல் ஒரு பிரமாண்டமான மரமிருக்கிறது;ஆங்கில நாட்டு மரங்கள்,செடிகள் பலவற்றிற்கு எனக்குப் பெயர் தெரியாது.இந்தமரத்தின் இலைகள் ஊரிலுள்ள பூவரசு மரஇலைமாதிரியிருக்கின்றன.

அந்த மரத்தின் ஒரு கிளையில் ஒரு பெரிய அணில் ஊர்ந்து கொண்டிருக்கிறது. அதைப் பின்பற்றி ஒரு சிறிய அணிலும் ஊர்ந்து கொண்டிருக்கிறது. அந்த அணில்களில் இராமர் அன்புடன் தடவியதால் ஏற்பட்ட அழகிய மூன்று கோடுகள் இருக்குமா?

தாய் அணிலைப் பின்பற்றித் தட்டுத்தறுமாறிச் செல்லும் அதன் சேயைக்கண்டதும் என்மனதை என்னவோ செய்தது.எத்தனை பாதுகாப்புணர்ச்சியுடன் இந்த தாய் அணில் தன் சேய் அணிலைத் தன்னைத் தொடரச் செய்கிறது?.

இந்தத் தாய் அணில்,தனது குட்டி அணிலைச் சரியாகப் பாதுகாக்கவில்லை என்று இந்தத் தாய் அணிலை யாரும் தண்டிப்பார்களா?

இன்று ஏன் விடிகிறது என்று எனக்குள் நான் கேள்வி கேட்டுக் கொள்கிறேன். இன்றைக்கில்லாவிட்டாலும்,நாளைக்கென்றாலும் நான் இன்று எதிர்பார்க்கும் பிரச்சினையை எதிர்நோக்கியே ஆகவேண்டும். நான்தான் அந்தக் கடமையைச் செய்யவேண்டுமென்ற எனது மேலதிகாரியிடமிருந்து நான் தப்ப முடியாது.

சாப்பாட்டைறையிலிருந்து வந்த காப்பியின் மணம் மூக்கைத்துளைக்கிறது. எனது முதலாவது மகன் தனது சர்வகலாசாலையில் ஹொஸ்டலில் இருக்கிறான்.இரண்டாவது மகனுக்குப் பதின்நான்கு வயது.அவனும் நானும் ஒரே நேரத்தில் வீட்டிலிருந்து வெளிக்கிடுவோம். நான் வேலைக்கும செல்லும் வழியில் அவனது பாடசாலை இருக்கிறது. ஒரே ட்ரெயின் எடுப்போம். ஓரு சில தரிப்புக்களில் அவன் இறங்கி விடுவான்.

இன்னும் சொஞ்ச நேரத்தில் காப்பியுடன் எனது மகன் வந்து, ‘அம்மா வெளிக்கிட்டாச்சா’ என்று கேட்பான்.
எனது அறைக்குள் வந்தவன், இன்னும் எழும்பவில்லையா என்ற ஆச்சரியத்துடன் கேட்டான்.
‘உடம்புக்குச் சுகமில்லையா அம்மா?’ பதினான்;கு வயதுச் செல்லம் அம்மாவை உற்றுப் பார்த்தான்.
‘அப்படி ஒன்றுமில்லை..’என்று சொன்னேன்.
‘ஒருமாதிரியாயிருக்கிறீர்களே’மகன் தாயின் முகத்தைப் பாசத்துடன் வருடினான்.

அவனின் பாசத்தில் உருகிய தாய்மைக்கு அவனை இழுத்துவைத்து முத்தங்கள் கொடுக்க ஆசை. ஆனால் அவனுக்குப் பதினான்கு வயதாகிறது,அரும்பு மீசை சாடையாக எட்டிப்பார்க்கிறது. அம்மாவின் முத்தங்களுக்கு வெட்கப்படும் வயது அது
‘அம்மா நான் என்ன சின்னக் குழந்தையா’ என்று கேட்டுவிட்டுப் பின்னடையும் வளரும் வாலிப வயது அது.
‘ஆறு மணிக்கு எழும்பி சாமி கும்பிடுவீங்களே, இப்போது ஏழு மணி,இன்றைக்கு இன்னும் கட்டிலை விட்டு இறங்கவில்லையே?’

என்ன என் மகன் தன் கனவில் சுந்தராம்பாளைக்கனவு கண்டானா?
கேள்விமேல் கேள்வியாகக்கேட்கிறானே?
நான் மறுமொழி சொல்லாமற் சிரித்தேன்.

என் மகன் கார்த்தி என் அறையை விட்டுப்போனதும் நான் எழும்பிப்போய்க் காலைக் கடன்களை முடித்துக்கொண்டேன்.

அதன் பின் காப்பி குடித்ததும் ஸ்ரேசனுக்குப்போனதும் ஏதோ இயந்திரவேகத்தில் நடந்தது. பெரும்பாலும்,இந்த நேரத்தில்,நானும் என் மகனும் ஒன்றாக ஸ்ரேசனுக்குப்போகும்போது பல விடயங்களைப்பேசிக் கொண்டுபோவோம். அவனது பாடசாலை விடயங்கள்,படிப்பில் வரும் பிரச்சினைகள்,மாற்றங்கள்,அவனின் எதிர்காலக் கனவுகள் என்று என்னிடமிருந்து பல கேள்விகளுக்கு என் செல்லம் பொறுமையாகப் பதில் சொல்லிக்கொண்டு வருவான்.

எனது மனதில் இன்று ஏதோ ஒருபாரம் நிறைந்திருக்கிறது என்று அவனுக்குப் புரிந்திருக்கிறது.;  எனது சிந்தனை எங்கேயோ பறக்கிறது என்று என் மகன் தெரிந்து கொண்டான் என்பதால் அவனும் என் மவுனத்தைக்கலைக்காமல் என்னுடன் வருகிறான்.

இன்று நான் பார்க்கப்போகும் மீனா என்ற இந்தியப்பெண் என் நினைவில் நிறைந்திருப்பது இந்த வளரும் வாலிபத்துக்குப் புரியாது.

மீனாவுக்கு ஒரு குழந்தையிருக்கிறது. அவளும் ஒருகாலத்தில் தனது குழந்தையிடம் இப்படிப் பலகேள்விகளைக் கேட்க ஆசைப்படுவாள்தானே?
‘என்னம்மா ஒரேயடியாக யோசிக்கிறீர்கள்,வேலையில் ஏதும் பிரச்சினையா?’
‘அப்படி ஒன்றுமில்லை மகனே..’ நான் எனது வேலை விடயம் பற்றிப் பேசவிரும்பவில்லை என்று அவன் புரிந்து கொள்கிறான்.

வாழ்க்கையில் சாதாரண மனிதர்கள்,சிலவேளைகளில் அசாதாரணமாகச் சந்திககுகம் பிரச்சினைகள் எப்படி அவர்களின் சிந்தனையைக்குழப்பும் என்ற சிக்கலைப் புரியாத வயதுள்ள என்மகனுக்கு எனது வேதனையைச் சொல்ல எனக்கு விருப்பமில்லை.

மீpனாவின் சோகமான,சிலவேளை கோபமான,பலவேளைகளில் குழப்பமான கண்கள் என்னைத் துரத்துகின்றன. இன்று நான அவளைப்பார்க்கப்போகிறேன் அவள் என்னை எப்படி வரவேற்பாள் என்று தெரியாது.

போன தடவை அவளைச் சந்தித்தபோது,நான் ஒரு இந்தியப்பெண் என்றும், தனக்கு உதவி செய்ய வந்திருப்பதாகவும் நினைத்துக்கொண்டாள்.

நான் பிரித்தானிய அரச ஸ்தாபனத்தில் வேலை செய்யும் ஒரு உத்தியோகத்தர்.எனது கடமையில் சாதி சமய.இன,மொழி,ஆண்பெண் வித்தியாசமற்ற சமத்துவத் தொழில் தார்மீகம் எப்போதும் கடைப்பிடிக்கப்படும்.அதற்கு யாரும் விதி விலக்கல்ல.

ஆனால்,மீனா,தனக்கு ஆறுதல் தரும் விடயங்களை மட்டும் நான் முனனெடுப்பேன் என்று எதிர்பார்க்கிறாள்.

எங்களுக்கு அவளைப் பற்றி வந்திருக்கும் பல புகார்கள்; அவளின் சிக்கலான வாழ்க்கைபற்றிச் சொல்லியிருக்கின்றன.அதன்பிரகாரம் நாங்கள் அவளது வாழ்க்கைநிலையை விசாரித்து அவளின் குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகிறோம் என்று விபரமாகச் சொன்னதும் அவள் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி என்னால் என்றென்றும் மறக்கமுடியாதது.

என் மூத்த மகன் ஒரு பெண்ணாகவிருந்தால், ஐந்து வயது குறைந்திருந்தாலும், பிரித்தானிய வாழ்க்கையின் சட்ட திட்டங்களில் கொஞ்சமாவது தெரிந்து, அந்தச் சட்ட திட்டங்களைச் சரியாக நடைமுறைப்படுத்தித் தன்வாழ்க்கையைக் கொண்டு நடத்தத் தன்னால் முடிந்ததசை; செய்திருப்பானா?

மீனா ஒரு பெண் அதிலும், இந்தியாவில் மிகவும் பழமையான ஒரு கிராமத்தில் பிறந்தவள்.பெண்களுக்காக வரைமுறை செய்யப்பட்ட பல சட்டதிட்டங்களுக்குள் வளர்க்கப் பட்டவள். வெளியுலகம் தெரியாமல் வாழப்பழகியவள்.

தாய்தகப்பன் காட்டிய மாப்பிள்ளைக்குத் தன் எதிர்காலத்தைப் பணயம் வைத்தவள்.அவனை நம்பி, தானறிந்த மனிதர்களை, தனக்குத் தெரிந்த சூழலை,பழகிய சினேகிதர்களை,பார்த்துப் பரசமடைந்த கிராமத்தை.தான் சந்தோசமாகச் செய்து கொண்டிருந்த அன்றாட வேலையத்தனையையும் தியாகம் செய்து விட்டு அன்னிய நாட்டுக்கு வந்தவள்.

இப்போது மீனாவின் நிலை?

எனது மகன் தனது ஸ்ரேசனில் இறங்கிக் கொண்டான். அவனிருந்த இடத்தில், ஒரு இந்திய, அல்லது ஏதோ ஒரு தென்கிழக்கு ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒரு இளம்பெண் வந்து உட்கார்ந்தாள்.

இந்தப்பெண்ணுக்கும் மீனாவின் வயதிருக்கலாம்.இருபத்தைந்து வயதுக்குக்கு; கொஞ்சம் கூடக்குறையலாம்.

ஆசியப்பெண்களைப் பகிரங்க இடங்களிற் கண்டால்,அவர்கள் லண்டனிற் பிந்து வளர்ந்தவர்களா அல்லது பலகாலம் லண்டனில் வாழ்ந்தவர்களா அல்லது இந்தியாவிலிருந்து அண்மையில் வந்தவர்களா என்று அவர்களின் நடைமுறைபாவனைகளிலிருந்து தெரியும்.

பிரித்தானியாவிற் பிறந்து அல்லது நீண்டகாலம் வாழும் ஆசியப் பெண்கள் சுறுசுறுப்பாகவும் சூழ்நிலையை அப்பட்டமாகப்புரிந்து கொண்டு நடப்பவர்களாவுமிருப்பார்கள்.
புதிதாக வந்தவர்கள் மிகவும் அடக்கமாக இருப்பார்கள். புழக்க வழக்கங்களில் பழைமை தொடர்ந்திருக்கும். அவர்கள்,சிலவேளைகளில்,பனிக்காலத்திலும் இந்திய மெல்லிய சேலை கட்டிக்கொண்டு குளிரில் தவிப்பதைக் கண்டிருக்கிறேன்.

எனக்கு முன்னிருந்த பெண் முகத்தைத் தாழ்த்திக்கொண்டு ஏதோயோசனையிலிருந்தாள்.இப்படித்தான்; மீனாவும் ஒருகாலத்தில்.லண்டன் பாதாள ட்ரெயினில் அடக்கமாக உட்கர்ந்து தன்வாழ்க்கைப் பிரயாணத்தைத் தொடங்கியிரு;பாளா?

‘இந்த உலகத்தில் என்னத்தை எதிர்பார்த்தேன்? அம்மா அப்பா சொன்னமாதிரி,புத்திசாலிப்பெண்ணாகவும்,அம்மா சொன்னமாதிரிஅடக்கமான பெண்ணாகவும் என் ஊரில் வாழ்ந்தேன்.நான் என்ன லண்டன் மாப்பிள்ளை கேட்டேனா?ஊரில் உள்ளவர்கள் பொறாமைப்படும்படி ஒரு லண்டன் மாப்பிள்ளையை என்தலையில் கட்டிவைத்தார்கள். அவன் எனக்குத் தெரியாத உலகத்தில்,நடுக்காட்டில் கண்ணைக்கட்டிவிட்டமாதிரி என்னை அனாதையாக விட்டிட்டுப்போய் விட்டானே’

மீனா தன் இதயம் வெடிக்க என்னிடம் புலம்பியதை நான் மறக்க மாட்டேன். எவர் மனதையும் வெடிக்கப்பண்ணும் அவளின் விம்மல்கள் யார்காதிலும் கேட்கப்படாத துயர்பாடலாகிவிட்டது.

அவளைப் பற்றிய நினைவுகள் என் மனதிற் கனப்பதுபோல்,அவளைப்பற்றிய விபரங்கள் அடங்கிய பைல் என்கைளிற் கனக்கிறது.
அவளின்,அவளின் குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகிறது இந்தப் பைல்.

ட்;ரெயின் ஏதோ ஒரு ஸ்ரேசனில் நின்றது.இறங்கவேண்டியவர்கள் இறங்கிக்கொள்ள,ஏறவேண்டியவர்கள் ஏறிக்கொண்டார்கள். இருண்ட குகைகைள ஊடறுத்துககொண்டோடும் பாதாள ட்ரெயினிலிந்து கொண்டு மீனாவின் இருளப்போகும் எதிர்காலத்தை யோசித்தேன்.

மீpனாவின் தாய் எத்தனை கற்பனையுடன் மகளை லண்டனுக்கு அனுப்பியிருப்பாள்?
வீட்டில் ஒரேயொரு பெண்ணான மீனாவை லண்டன் மாப்பிள்ளைக்குக் கட்டிக்கொடுத்தபோது. கிராமத்திற் பிறந்து வளர்ந்த அந்த அப்பாவித்தாய், நாகரீகமான லண்டனிற் பிறந்து வளர்ந்த,படித்த ஒருத்தன் தனது மகளின் வாழ்க்கையைப் பாழாக்குவான் என்று கற்பனை செய்திருப்பாளா?

இப்போது,தன் மகளின் வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்கும் கேவலமான மாற்றங்களைக்கேள்விப்பட்டால் அந்தத் தாய் மனம் வெடித்து இறந்து விடுவாளே.

நான் லண்டனில் ஒரு சோசியல் வேர்க்கர்.எங்கள் டிப்பார்ட்மென்டுக்கு மீனாவைப் பற்றிப் பல புகார்கள் வந்திருக்கின்றன.

அவள் தனது இரண்டு வயது மகளைச் சரியாகக் கவனிப்பதில்லை என்றும், மீனாவின் வாழ்க்கைமுறை அந்தக்குழந்தையின் வளர்ச்சிக்கும் எதிர்காலததிற்கும் பாதிப்பையுண்டாக்கும் என்ற தொனியில் அந்தப்புகார்கள் வந்திருந்தன.

இங்கிலாந்தில்,ஒருகுழந்தையின் படிப்பு,பண்பாடு,எதிர்காலம் என்பனபற்றி அந்தக் குழந்தையின் தாய்தகப்பன் பொறுப்பென்பதில் ஒருத்தரும் தலையீடுசெய்ய முடியாது. ஆனால், அக்குழந்தையின் எதிர்கால வாழ்க்கை தாய்தகப்பனின் ஸ்திரமற்ற,சமுகப்பண்பாடுகளுக்கெதிரான வாழ்க்கைமுறையால் பாதிக்கப்படுவதாக அரசுக்குப் புகார்வந்தால்,அதை விசாரிக்க சோசியல் வேர்க்கர்கள் அமர்த்தப்படுவார்கள்.

எனது டிப்பார்ட்மெட்டில் நான் ஒருத்திதான ‘இந்தியப்’பெண்மணி. மீpனாவின் கேசை என்தலையிற் கட்டிவிட்டார்கள். மீனாபேசும் இந்திய மொழி எனக்குத் தெரியாது,அத்துடன் அவளைப் பார்க்கச் சென்றபோது அவளுக்கு ஆங்கிலம் சரளமாப்பேசமுடியாது’,  என்று நான் சொன்னாலும்,’அவளின் கலாச்சாரத்தை உணர்ந்து கொண்டவள் நீ,தயவு செய்து இந்தப்பெண்மணியின் விடயத்தைப்பார்,அவள்பேசும் மொழி தெரிந்த ஒருத்தரை மொழி பெயர்ப்பாளராக உன்னுடன் போக ஒழுங்கு செய்துகொள்;’என்று என்மேலதிகாரி என்னிடம் சொல்லி விட்டார்.

இன்று,மீனா பேசும் மொழிதெரிந்த ஒரு இந்தியரை மொழிபெயர்ப்பாளராக ஒழுங்கு செய்திருக்கிறேன்.
மீனா சொல்லும் விடயங்களை அவர் எனக்கு மொழிபெயர்த்துச் சொல்ல,நான் அதை வைத்துக்கொண்டு மீனாபற்றிய றிப்போர்ட்டை எழுதவேண்டும்.

இதுவரைக்கும் எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி,அவளின் வாழ்க்கைமுறை அவளின் குழந்தையின் வளர்ச்சிக்கு பாதிப்பையுண்டாக்கும் என்றும்,குழந்தையை அவளிடமிருந்து அகற்றுவது மிக முக்கியமான கடமை என்றும் சொல்கிறது.

இதுபற்றி,நான் அவளிடம் போனவாரம்  சொல்வதை முழக்கவும் கிரகித்துக்கொள்ளவில்லை என்பது,அவளதுஅரைகுரை ஆங்கிலத்தின் விளக்கத்திலிருந்து தெரிந்தது.

நான் அவளின் அந்த விளக்கத்தை வைத்துக்கொண்டு மீனாவைப்பற்றி றிப்போர்ட்டை எழுத முடியாது.

நான் ஸ்ரேசனை விட்டு வெளியே வந்ததும்.மீனாவுக்கு மொழிபெயர்க்கும் இந்தியரான மிஸ்டர் ;தேசாய் எனக்காகக் காத்துக்கொண்டு நின்றார். சிலநாட்களுக்குமுன் அவர் எங்கள் ஒவ்வீசுக்கு வந்திருந்து மீனாவைப் பற்றி தகவல்கள பலவற்றைத் தெரிந்து கொண்டதால், இன்று அவருக்கு நிறையச் சொல்ல பெரிதாகப் புதிய விடயம் ஒன்றுமிருக்கவில்லை.

‘குட்மோர்ணிங்’ என்றார் மிஸ்டர் தேசாய். அவருக்கு மிகவும் சுத்தமான,சாந்தமான முகம்.ஆழமான கண்கள்.நரைத்த தலை சாடையாக மொட்டையாகிக் கொண்டிருக்கிறது.ஒரு காலத்தில,மிகவும் உயர்ந்து வளர்ந்தவராக இருந்திருக்கவேண்டும்.இப்போது வயதின் முதிர்ச்சியால் உடம்பு தளர்ந்திருந்தாலும்.நடையுடைபாவனையில் கம்பீரம் கனத்துக் கிடந்தது.நீண்டகாலம் லண்டனில் வாழ்ந்தாலும்,இன்னும் இந்தியக்;கலாச்சாரத்தைக் கொஞ்சமும் கைவிடவில்லை என்பதைக் கையில் வைத்திருந்த பகவத் கீதை பறைசாற்றிக்கொண்டிருந்தது.

மீனாவின்,பிரச்சினையான விடயத்தில் தலைபோடமுதல், மனதைக்குழப்பாமலிருக்க,பகவத்கீதை உபதேசத்தை நாடுகிறாரோ என்று என் மனம் ஒரு கணம் ஆராய்ச்சியில் ஈடுபட்டது.

‘உங்கள் முகம் சோர்வாக இருக்கிறNது’ மிஸ்டர் என்னையுற்றுப்பார்த்துக்கொண்டு சொன்னார். கொஞ்ச நேரத்துக்கு முன்; பதினான்கு வயது வாலிபம் கேட்ட கோள்வியை,இப்போது இந்த பழுத்த பழம் கேட்கிறது.

பதில் சொல்லாமல் மவுனமாக நடந்து கொண்டிருந்தேன்.

‘இந்தப் பெண்ணிடம், அவளைப்பற்றி வந்த புகார்களைப்பற்றி என்னவென்று கேள்வி கேட்பது என்று தெரியவில்லை’ மிஸ்டர் தேசாயின் குரலில் தர்மசங்டம் தலைகாட்டியது.

இருவரும் தெருவைக்;கடந்து அடுத்த பக்கம் போனோம். எங்களைக் கடந்து சென்ற-மிகவும் அழகான, மிக நாகரீகமாக அலங்கரித்துக்கொண்ட இரண்டு ஆசிய இளம்பெண்களை உற்றுப்பார்த்த மிஸ்டர் தேசாய் பெருமூச்சு விட்டார்.

‘லண்டன் ஒரு சொர்க்க லோகம் என்று சில பெண்கள் தங்கள் நாடுகளிலிருந்து இங்கு வருகிறார்கள்.நரகத்தின் படுகுழிகளும் இங்கேயிப்பது அவர்களுக்கு என்ன தெரியும்?’

அவரின் பேச்சுக்கு நான் ஒன்றும் சொல்லாமல் அவருடன் நடந்து கொண்டிருந்தேன்.அவர் அதைக் கவனித்தாரோ அல்லது எனக்கு ஏதும் புத்திமதி சொல்லவேண்டுமென்றோ,’ எங்கள் குழங்தைகளை இந்த நாட்டில் கவனமாக வளர்க்வேண்டும்’ என்றார்.

‘மீனாவின கணவன்; இந்த நாகரீகமான நாட்டில் பிறந்து.வளர்ந்து படித்தவன்.;அவளை இந்த நரக வாழ்க்கை நிலைக்குத் தள்ளிவிட்டானே’ நான் பொருமினேன்.

நான் சொன்னது அவருக்குப் பிடிக்கவில்லை என்பது அவரின் மவுனத்திற் தெரிந்தது.
அவர்,மனுதர்ம சாஸ்திரத்தின்படி பெண்களை ஆண்கள் எப்படியும் நடத்தலாம் என்று சொல்வதை நம்புவராக அவரிருக்கலாம்.

‘மீனா தன் கணவனைப்பற்றிச்சொல்லியதை வைத்துக்கொண்டு அப்படிச்சொல்கிறீ;கள்’அவர்குரலிற் சற்றுக்கடுமை. மீpனா தன் கெட்ட நடத்தைக்குத் தன் கணவன்தான் காரணம் என்று சொல்வதை அவர் நம்பத் தயாராகவில்லை என்பது தெளிவாகப் புரிந்தது.

அதன்பின் இருவரும் மீனாவின் வீடுவரை மவுனமாக நடந்தோம்.

மீpனாவைப்பற்றிய நல்ல அபிப்பிராயமில்லாத இவர் அவள் சொல்வதை முழுக்க முழுக்கச் சரியாக மொழி பெயர்த்துச்சொல்வாரா?
எனக்குள் வந்த கேள்வியை அவரிடம் கேட்க முடியவில்லை.

சிந்தனை தொடர,மீpனாவின் வீட்டுக் கதவைத்தட்டினேன்.

நீண்டநேரமாக ஒரு பதிலுமில்லை. இன்ற மொழி பெயர்பாளருடன் வருவேன் என்றும்,இன்று அவளுடன் வைத்துக்கொள்ளப்போகும் சந்திப்பு மிகவும் முக்கியமானது என்று அவளுக்குச் சொல்லியிருந்தேன்.

ஏன் கதவைத் திறக்க மாட்டேன் என்கிறாள்?

நாங்கள் பொறுமையுடன் மீனாவின் ‘தரிசனத்துக்குக’; காத்திருந்தோம்.

நேரம் நகர்ந்துகொண்டிருந்தது. மிஸ்டர் தேசாய் பொறுமையிழந்து தன் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டார்.

அவருக்கு இதுபோல் எத்தனையொ மொழி பெயர்ப்பு வேலைகள் இருக்கலாம்.எனக்கு இதுதான் இன்றைய முக்கியவேலை. நான் பொறுமையுடன் மீனாவுக்காகக் காத்திருந்தேன்.

காலைநேரத்தின் கலகலப்பில் லண்டன் நகர்கிறது. இந்தத் தெருவில்,உலகின் பலபாகங்களிலுமிருந்தும் வந்த பல தரப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள்,பல மொழிகள் பேசுபவர்கள், பலதரப்பட்ட கலாச்சார அமைப்புக்களைக் கொண்டவர்கள்.வாழ்க்கை என்ற பிரயாணத்தில் ஒருத்தரில் ஒருத்தர் முட்டிமோதிக் கொள்பவர்;கள்,.
பெண்களுக்கென பல கட்டுப்பாடுகளை விதித்தக் கொடுமை செய்பவர்கள் என்று பல தரப் பட்டவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள்..

இந்தக் கூட்டத்தில்; எத்தனை பெண்கள்; மீனாவின் துயர்போன்ற துயர்களைச்சுமந்து கொண்டு திரிவார்கள்?
எத்தனைபேருக்கு மீனாபோன்ற அபலைப்பெண்களின் துயரவாழ்க்கை தெரியும்?

இயந்திர வளர்ச்சியின் காரணமாக,பொருளாதார ரீதியில்,முதலாளித்துவத்தால்; தன்னை ஒரு ஆளுமையான,மற்றவர்களை அடக்கப் பிறந்த நாடாக ஆக்கிக்கொண்டது இந்த நாடு.இங்கு,கம்யூனிசச் சிக்கலகளால் நல்ல வாழ்க்கை தேடி,கிழக்கு ஐரோப்பாவிலிருந்து இங்கு குவிகிறார்களே,இவர்கள் அத்தனைபேரின் எதிர்பபர்ப்புகளும் மீனாவின் எதிர்பார்ப்பான நிம்மதியான வாழ்க்கையாக இங்கு நிறைவு பெறுகிறதா?

மிஸ்டர் தேசாய் சொன்னதுபோல்,உலகம் தெரியாத மனிதர்கள்,(அவரைப் பொறுத்தவரையில பெண்கள்),தேனில் விழுந்தழியும் மனிதர்களாக லண்டன் கவர்ச்சியால் இங்க வந்து.தங்கள் வாழ்க்கையை அழித்துக்கொள்கிறார்களா?

மீனா,லண்டன் கவர்ச்சியில் தன்னை அழித்துக்கொண்டவளில்லையே? அவளின் குடும்பம் காட்டிய வழியில்,கலாச்சாரம் சொன்ன கருத்துக்களின் வழியில் கணவனைக் கைப்பிடித்து,அயோத்தியைப்பிரிந்த சீதையாக லண்டனுக்கு வந்தவள்.

இன்று அவளின் நிலை என்ன?

நான் மிகவும் பலமாக அவளின் கதவைத் தட்டினேன். மேல் மாடியிலிருந்து அவளின் குழந்தை அழுவது கேட்டது.

நான் மேல்மாடி ஜன்னலை நிமிர்ந்து பார்த்தேன்.
மீனாவின் முகம் தெரிந்தது.
இப்போதுதான் எழுந்திருக்கிறாள் என்பது அவளின் கலைந்த தலை,கழுவாத முகத்திலிருந்து தெரிந்தது.கண்களைக் கசக்கிககொண்டு எங்களைக் குனிந்து பார்த்தாள்.

ஹலோ என்று கூடச்சொல்லாமல் என்னையும் என்னோடு கூட நிற்பரையும் உறுத்துப்பார்த்தாள்.

அவள் எங்களைப் பார்த்த விதத்தில்,என்னுடன்கூடவந்திருக்கும் இந்தியர் யார் என்று யோசிப்பது தெரிந்தது

. ‘மீனா, போனவாரம் சொன்னேனே நான் ஒரு மொழி பெயர்ப்பாளரைக் கூட்டிவருகிறேன் என்று. அவர்தான் இது.இவர் பெயர்…’ நான் சொல்லி முடிக்கவில்லை,அவள் கொஞ்சமாகத் திறந்த தனது மெல்மாடி ஜன்னலை முழக்கத் திறந்து விட்டாள்.

‘நீ இந்த ஆம்பிள்ளை நாயை ஏன் கூடடிக்கொண்டு வந்தாய்?’மீனா பெரிதாகச் சத்தம் போட்டாள்.
போனவாரம் அவளிடம் மொழிபொயர்ப்பாளர் பற்றிச் சொன்னவள் மொழி பெயர்ப்பாளர் ஒரு ஆண்மகன் என்ற சொல்ல மறந்துவிட்டேன்.

அவள்போடும் சத்தததைக்கேட்டுத் தெருவிற்போவோர்வருவோர் பலர் எங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டுபோனார்கள்.

‘மீனா,இவர் உனது பாஷை பேசுபவர்..’நான் குரலை என்னால் முடியுமானவரை அடக்கிப்பேசினேன்.நான் இன்று கட்டாயம் இவளின் றிப்போர்ட் கொடுக்கவேண்டும் எனது மேலதிகாரி சொல்லிவிட்டார்.

‘எத்தனையோ  நாய்கள் எனனுடைய மொழி பேசுபவர்கள்தான்;,என்னைக் கட்டியவனும் என்னுடைய மொழியைத்தான் பேசினான்’ அவள் உச்ச ஸ்தாயில்,அரைகுறை ஆங்கிலத்தில் கத்தினாள்;. அதைத் தொடர்ந்து எழுத முடியாத அசிங்க வார்த்தைகளைக் குப்பை குப்பையாக, ஜன்னலவழியாக எங்களை நோக்கிக்கொட்டினாள்.

‘ஒருபெண்ணின் உடம்பைக் கட்டிலில் கசக்கி நாசமாக்குபவனுக்கு, தொட்டுப்பார்த்துப் பாவித்து ருசிப்பவனுக்கு,மனித உணர்வுகளைப்புரிந்து கொள்ளும்  பாஷை எதற்கு?’

மிகவும் அற்புதமான ஒரு தத்துவக் கேள்வியைப் பிரித்தானிய சோசியல் சேர்விசுக்கு முன்னால்,சமுகத்தைக் கெடுக்கும் ஒரு பொது விபச்சாரி என்று மற்றவர்களாற் குற்றம் சாட்டப்பட்ட,இந்தியப்பெண் மீனாட்சி என்னிடம் கேட்டாள்.

நான் என்ன மறுமொழி சொல்வதாம்?

மிஸ்டர் தேசாய் மீனாவின் கேள்வியில் திக்காடிப்போயத் தனது பகவத் கீதையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு நின்றார்.

லண்டனில் வாழும் செல்வாக்கான ஒரு இந்துக்குடும்பம்.தன் மகனுக்கு இந்தியப்பண்புள்ள நல்ல பெண்ணை மணமகளாகத் தேடி வந்தபோது, பண்பு,அன்பு,கலாச்சாரம் தெரிந்த தங்கள் மகளை அவர்களிடம் மணமகளாக ஒப்படைத்தார்கள்.

கவுரமான,வசதியான வாழ்க்கை தேடி லண்டன வரும்,கோடிக்கணக்கான ,மூன்றாவது உலகம் என்று சொல்லப்படும்,வளரும் நாடுகளான இந்தியா போன்ற நாட்டுப் பெண்களில் மீனாவும்; ஒருத்தி.

உலகின் நவநாகரீக நகரென்ற புகழப்படும் லண்டன் மாப்பிள்ளை கிடைத்த ப+ரிப்பில்,குனிந்த தலையும், உடம்பெங்கும் நகைகளுமாக லண்டனிற் காலடி எடுத்துவைத்தாள் மீனா.

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதுபோல், மீனாவைக் கைபிடித்தவன் அவளைக் கைவிட்டுவிட்டான். அவனின் தாய்தகப்பனின் பணஆசைக்கு,தங்கள் மகனுக்கு ஒரு காதலி லண்டனிலிருப்பது தெரிந்து கொண்டும் அவள் வாழ்வைப் பலியாக்கியது தெரியாமல் பல இரவுகளை அழுது கழித்தாள மீpனா.

லண்டனுக்கு வந்தவள் கண்டவை, புரியாத உலகம், தெரியாத மனிதர்கள்,தெரிந்து கொள்ள முடியாத கலாச்சாரம்,அத்தனையையும் மீறிக் கணவனின் கைவிரிப்பு என்பன மீனாவுக்கு,வாழ்க்கையை ஒரு பயங்கரக்கனவாக்கியது.

அவளின் மாமன் மாமியார்,அவளுக்குப் பெண்குழந்தை பிறந்ததும், அவளையும் அவளது பெண்குழந்தையையும் வீட்டை விட்டுத் தரத்திவிட்டார்கள். ‘புருஷனைச் சரியாக நடத்தாதபடியாற்தான் அவன் உன்னை விட்டோடிப்போனான்’ அவளில் எல்லாப் பழியும் போடப்பட்டன.

எங்கே போவாள்?

‘நீ ஊர் திரும்பி வந்தால், உன்னைப்பற்றி என்ன சொல்லும,;ஊர் உலகம் எங்களை எப்படி நடத்தும் எப்படியும் மாமி மாமனாரின் மனதைத் திருத்தப்பார்.அவர்கள் உன் கணவரை உன்னுடன் சேர்த்து வைப்பார்கள்’
அவளின் தாய் தகப்பன் தங்கள் கண்ணீரைக் கொட்டி கடிதம் அனுப்பியிருந்தார்கள்.

தனித்துப்போன அவளுக்குப் பரிதாபம் காட்டும் போர்வையில்,அவளின் கணவனுக்குத் தெரிந்த ஒருவன் அவளிடம் வந்தான்.ஆண்கள் பகலிற் காட்டும் பரிதாபம்,அவர்கள் இரவிற்தேடும் இச்சைக்கு அத்திவாரம் என்று தெரியாத பேதை அவனை நம்பி விட்டாள்.

அவளிற் ‘பரிதாபம்’ காட்டும் இன்னும் பல மிருகங்களையும் அவன் கூட்டி வந்தான அவன்;. அவள் இதுவரை காணாத நரக உலகத்தைப் பல ஆண்கள் சில பணநோட்டுக்களுடன் காட்டினார்கள.

பக்கத்து வீடு மீனாவுக்குப் பரத்தைப் பட்டத்தைத் தாராளமாகக் கொடுத்தது மட்டுமல்லாமல் அவளைப் பற்றி சோசியல் சேர்விசுக்கும் அறிவித்து விட்டார்கள்.

மீனா,தன் இரண்டுவயதுக்குழந்தையைச் சரியாகப்பார்க்காமல் தன்னை வைத்து’ வியாபாரம்’ செய்வதாகப் பல புகார்கள் சோசியல் டிப்பார்ட்மென்டுக்கு வந்து குவிந்தன.

அவள் தன்னுடைய குழந்தையைச் சரியாகப் பராமரிக்காவிட்டால் அரசு அந்த உரிமையை எடுத்துக்கொள்ளும். அதைச்செய்ய முதல், மீனா பற்றிய முழு விபர அறிக்கையையும் நான் எனது டிப்பார்ட்மென்ட்டுக்குச் சமர்ப்பிக்கவெண்டும்.

மீpனாவின் வாக்குமூலத்தை மொழி பெயர்க்கவந்திருக்கும் திருவாளர் தேசாய்க்கு மீனாவைப்பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை என்பது,அவளைப்பற்றி வந்த புகார்களைச் சொன்னபோது அவரின் முகபாவங்கள் மாறியதிலிருந்து தெரிந்தது.

இப்போது அவள் ஜன்னல் வழியாகக் கொட்டும் ‘அற்புத மொழிக்’ ;கோர்வைகளைத் தாங்காமல் சோசியல் சேர்விசுக்குச் சொல்லி மீனாவின் குழந்தையை அவளிடமிருந்து பிரிக்க திருவாளர் தேசாய் தயங்கமாட்டார் என்று பட்டது.

நான் திருவாளர் தேசாயைத் திரும்பிப் பார்த்தேன். ஜன்னலால் வந்து அவரில் விழுந்த ‘அர்ச்சனை’ வார்த்தைகளால் அவர் ஆத்திரப்பட்டிருப்பது அவர் முகத்தில் தெரிந்த அருவருப்பு உணர்ச்சியிலிருந்து தெரிந்தது. இந்தப் பெண்ணின் முகத்தையும பார்க்க மாட்டேன் என்பதுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டாh.

சீதையின் தூய்மையை உலகுக்குக் காட்ட அவளை ஈவிரக்கமின்றித் தீயில் இறக்கிய இந்துத்வா ஆண்வர்க்கத்தின் பிரதிநிதி அவர்.இந்துப் பண்பாடுகளை இந்தப்பெண் இங்கிலாந்திற் சிதைப்பதை அவர் சகிப்பாரா?

அவர் முகத்தில் கோபம் வெடித்தது. வானத்திலிருந்து மழைத்துளிகள் கொட்டின.

லண்டனின் சுவாத்தியம் எப்போது மாறும் என்று சொல்லமுடியாது. லண்டனின் கால நிலை காவாலித்தனமாக வளர்ந்த பையன் பெண்களைக் கண்டால் விடும் தேவையற்ற சேட்டைகள் போன்றவை.
எப்போது மழை வரும்,எப்போது பனியடிக்கும் என்று டி.வியில் வானிலை அறிவிப்பாளர் சிரித்தக்கொண்டு சொன்னவை அடிக்கடி பொய்த்துப் போகும்.

‘என்ன இந்தப் பெண் பெரிய வாயாடியாக இருக்கிறாளே’ தேசாய் சலித்துக்கொண்டார்.

ஆண்கள் ஒரு நாட்டின் தலைவராயிருக்கும்போது,அடுத்த நாட்டாரிற்; கோபம் வந்தால் அவர்களைக ;கொடுமையான அணுகுண்டைப் போட்டு அழிக்கவும் தயங்கமாட்டார்கள்.ஒரு பெண் தன்வாழ்க்கையைச் சீரழித்த ஆண்களைக் கோபத்தால்த் திட்டத் தன் ‘வாய்’;என்ற ஆயதத்தில் வார்த்தைகள் என்ற அம்பைத் தொடுக்கும்போது இவர்களாற் தாங்கமுடியவில்லை.

‘மீனா,தயவு செயது கதவைத் திற.நாங்கள் உன்னிடத்தில் சில கேள்விகள் கேட்கவேண்டும்’ நான் செஞ்சினேன்.
‘என்ன கேட்கப்போகிறாய?’
அவளின் கேள்வி அஸ்திரமாக ஜன்னலால வந்து விழுந்தது.

‘நீ உனது தற்போதைய வாழ்க்கை நடை முறையிலிருந்து திருந்தவதாக உண்மையாகவே சில முன்னெடுப்புக்களை எடுக்கச் சம்மதித்தால்,அதற்கு அரசாங்கம் உதவி செய்யும். அப்படி நடந்தால் உனது பிள்ளையை உன்னிடமிருந்து அரசாங்கம் பறிக்காது’
நான் ஒவவொரு வார்த்தைகளாக அவளுக்குச் சொன்னேன்.

அவளின் கணவரின் குடும்பம்,மீனாவின் குழந்தையை அவளிடமிருந்து அரசாங்கம் எடுக்கவேண்டும் என்று மிகுந்த பலத்துடன் போராடிக்கொண்டிருப்பது எனக்குத் தெரியும்.இவளைப் பற்றி வந்த பல புகார்களை அந்தக் குடும்பமே யாரையும் தூண்டி அனாமதேயக் கடிதங்களை எழுதப் பண்ணியிருந்தாலும் ஆச்சரியமில்லை;.
அனாமதேயக் கடிதமோ இல்லையோ,குழந்தைகள்பற்றிய புகார்கள் வந்தால் அதை விசாரிக்கவேண்டியது அரசின் கடமை.

‘என்ன சொல்கிறாய்,நான் திருந்தப்போகிறேன் என்று வாக்குறுpதி தந்தால் என்னிடமிருந்து எனது பிள்ளையைப் பறிக்கமாட்டேன் என்கிறாயா?’

அவளின் குரலில் ஆச்சரியம்.

இவள் திருந்தி வாழச் சம்மதித்தால் அரசு அதற்கு ஆவன செய்யும். புயல் தென்றலாவதில்லையா, அணைகடந்த வெள்ளம் அருவியாவதில்லையா?காலத்தின் கோலத்தால் இந்நிலைக்கு வந்தவள் தன்வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம்தானே?

எனது நம்பிக்கை விரிந்தது.தேசாய் என்னை வெறித்துப் பார்த்தார்.

‘ இவ்வளவும் பேசி நேரத்தை வீணாக்காமல் இந்தப் பிள்ளையை இவளிடமிருந்து எடுக்க முடியாதா?’
திருவாளர் தேசாய் சட்டென்று நீதிபதியாய்-கடவுளாய் மாறி,இவளின் குற்றங்களுக்கெல்லாம் தண்டனை கொடுக்கும் குரலிற் கேட்டார்.எனக்கு எரிச்சலாக வந்தது.இந்த மனிஷன் நடுநிலையாகவிருந்து மொழிபெயர்ப்பார் என்று கூட்டிக்கொண்டு வந்தால்….

தேசாய் சொன்னது மீனாவுக்குக் கேட்டிருக்க வெண்டும்.

‘டேய் கிழவா,நீ நெற்றியில குங்குமமும்,கையில் பகவத் கீதையும் தூக்கிக்கொண்டு,போலி சாமியார் வேடம் போட்டு எத்தனை பெண்களுடன் படுத்தெழும்பினாய்? உன்னைப் போல ஆண்களுக்குக் கடவுளையும் தெய்வீகத்தையும்க் காட்டி எங்களப் போல பெண்களை அழிக்க என்னடா தைரியம்?’

திருவாளர் தேசாய் தனது காதுகளைப் பொத்தாத குறையாக,அவள் பக்கம் திரும்பி காறித்துப்பினார்.

‘டேய் கிழவா,என்னிடம் வந்து தங்கள் கோவணத்தை அவிழ்ப்பவர்கள் அடுத்த உலகத்திலிருந்து வருவதில்லை.உன்னைப்போல பெரிய மனுசன்கள்தானடா என்னைப்போல பெண்களை இந்த நிலைக்குத் தள்ளுகினம்’ அவள் பதிலுக்கு அவரை நோக்கிக் காறித் துப்பினாள்.

‘நீ ஒரு இந்தியப்பெண்,எங்கள் சமயத்துக்குக் கலாச்சாரத்துக்கு உங்களப்போல பெண்கள் சாபக்கேடானவர்கள்’ பகவத்கீதை கோபத்தில் வெடித்தது.

‘கிழவா,மும்பாயில்,டெல்லியில்,கல்கத்தாவில் இந்துக்கலாச்சாரத்திலிருந்த வந்த அபலைகள்தான்,தங்களின் வாழ்க்கைக்குத் திறந்துபோட்டுக்கொண்டு விபச்சாரம் செய்கிறார்கள்.அதைப் பார்க்கத் தைரியமில்லாமல்,அதைத்திருத்த ஒன்றும் செய்யாமல்,நீ ஏனடா லண்டன் தெருக்களில் இந்துக் கலாச்சாரத்தைத்தேடுகிறாய்.
உன்னைப்போல,உண்மையறிந்துகொள்ள முடியாத கயவர்கள் இருக்கும்வரை,என்னைப்போல பெண்களுக்கு அடையாள அட்டை இல்;லை. என்போல பெண்களுக்கு எங்த உலகத்திலும் பாதுகாப்பு இல்லை,எங்களுக்கு எது உலகம்,என்ன கலாச்சாரம்,என்ன மொழி, ‘ மீனா வெடித்துக் கொண்டேயிருந்தாள்.

ஆண்களால் வரையறுக்கப்பட்ட கலாச்சார,சமயக் கோட்பாடகளால் முதலுலகம், இரண்டாம் உலகம், மூன்றாம் உலகமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

பெண்களைச்,ஏமாற்றாமல், கவர்ச்சிப் பொருட்களாகப் பாவிக்காத,மனிதத் தன்மையுடன் சமமாக நடத்தும் நான்காம் உலகொன்றை மீனா கற்பனை செய்கிறாளா?

(யாவும் கற்பனையே)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *