நாகு பிள்ளை

0
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 4,876 
 

”எலே, நம்ம சொக்கலிங்கம் அப்பாவ வெட்டிட்டாங்க. கை தொங்கிட்டாம். அஞ்சு மணி நேரம் ஆபரேஷன் பண்ணித்தான் கைய ஒட்டுனாங்களாம்.”

குஞ்சு இந்த செய்தியைச் சொன்னபோது நம்பவே முடியவில்லை. சொக்கலிங்கத்தின் அப்பா தீத்தாரப்பன் அண்ணாச்சி எவ்வளவு பெரிய மனிதர். அவரையாவது… வெட்டுவதாவது?

”அப்பா நெலமையைப் பாத்தவுடனே சொக்கலிங்கமும் அருவாளோட கௌம்பி இருக்கான். சுத்தி இருக்கவங்கள்லாம் ‘ஏ… சொக்கா! வெட்டுனது ஒண்ணும் சாதாரண ஆளு இல்ல. நாகு பிள்ளையாக்கும்’னு சொன்னவொடனே நைஸா அருவாளக் கொண்டுபோயி அடுக்களைக்குள்ள வெச்சுட்டு, ‘எப்பா’னு கூப்பாடு போட்டு அழ ஆரம்பிச்சுருக்கான்” – சந்தேகத்தைத் தீர்க்கும்விதமாக இந்தத் தகவலையும் குஞ்சுவேதான் சொன்னான்.

தீத்தாரப்பன் அண்ணாச்சி, தொண்டர் நயினார் சந்நிதி பக்கம் கமிஷன் கடை வைத்திருந்தார். சைடு பிசினஸாக, வட்டிக்குப் பணம் கொடுத்து வந்தார். அந்தக் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்னையில்தான் வெட்டுப்பட்டு இருக்க வேண்டும்.

எப்போதும் தீத்தாரப்பன் அண்ணாச்சியைச் சுற்றி ஆட்கள் இருப்பார்கள்.

‘ராமையன்பட்டிக்காரன் என்னல சொல்லுதான்?

எலைக் கடக்காரனுக்கு ஒடம்பு என்னமா வருதுன்னு கேளு.

நாராயணன் வளயல் கடயத் தொடர்ந்து நடத்தணும்னு நெனைக்கானா என்ன?’

தொண்டர் சந்நிதியைக் கடந்து செல்லும்போது, தீத்தாரப்பன் அண்ணாச்சியின் கம்பீரக் குரல் காதில் விழும். வாகனங்களின் போக்குவரத்தும் ஜன நெருக்கடியுமான அந்த பஜாரில், அதுவும் தீத்தாரப்பன் அண்ணாச்சியின் கடையிலேயேதான் அவரை வெட்டி இருக்கிறார் நாகு பிள்ளை.

அம்மன் சந்நிதியில், பிராமணக் குடிக்கும் வெள்ளாளர்களின் வீடுகளுக்கும் இடையே உள்ள செக்கடியில் தான் நாகு பிள்ளை குடியிருந்தார். ஐந்தாறு வீடுகள் உள்ள ஒரு வளவில்தான் வீடு இருந்தது. அதனாலேயே அந்த வளவு ‘நாகு பிள்ளை வளவு’ என்று அழைக்கப் படலாயிற்று. அதில் அந்த வளவு வீடுகளின் சொந்தக் காரரான நயினார் பிள்ளைக்கு ஏக வருத்தம்.

”எங்க ஐயா இருக்குறவரைக்கும் வாத்தியார் பிள்ளை வளவா இருந்தது. வாடகைக்குக் குடி இருக்கவன் ஒரு வஸ்தாதுன்னவொடனே, அவன் பேரச் சொல்லில்லா வளவச் சொல்லுதானுவொ?

இது எந்த ஊரு நியாயம்னு கேக்கேன்?” – முக்கலும் முனகலுமாகத்தான் புலம்புவார். நாகு பிள்ளையை நேரில் பார்த்தால், மடித்துக் கட்டிஇருக்கும் வேட்டி தானாகக் கீழே இறங்கிவிடும். தோளில்கிடக்கும் மேல் துண்டும் கைக்கு வந்து விடும்.

”அண்ணாச்சியப் பாக்கவே முடியலயே, அசலூர் போயிருந்தேளோ?”

அநியாயத்துக்கு அசடு வழிவார். இத்தனைக்கும் நாகு பிள்ளையிடம் வாடகை வசூலிக்கவே போயிருப்பார்.

நாகு பிள்ளையின் உருவத்துக்கும் அவரது வீர சாகசக் கதைகளுக்கும் சம்பந்தமே இல்லை. செக்கச்செவேல் என்று மழுங்கச் சிரைத்த முகம். சின்னங்கள் எதுவும் இல்லாத வெற்று நெற்றி. பளபளக்கும் வழுக்கைத் தலை. பாலியெஸ்டர் வேட்டியை எப்போதும் மடித்துத்தான் கட்டியிருப்பார். சுருட்டிவிடப்பட்டு இருக்கும் பழுப்பு நிற வெள்ளை முழுக்கைச் சட்டை. பின்னங் கழுத்து காலருக்குள் இருந்து லேசாக எட்டிப்பார்க்கும் கட்டம் போட்ட புது கைக்குட்டையின் நுனி. டவுன் நேதாஜி போஸ் மார்க்கெட்டில் போலீஸ் ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் உள்ள கடையில் கால் அளவு கொடுத்துத் தைக்கப் பட்ட தோல் செருப்பு. கையில் கறுப்புப் பட்டை ஸ்ட்ராப் வாட்ச்சும், தோளில் தேங்காப்பூத் துண்டும் பிற அடையாளங்கள்.

நாகு பிள்ளையின் பலமே, அவரது நேர்மையும் தைரியமும்தான் என்பார்கள். தனக்கு நியாயமாகப் படாத எந்த ஒரு காரியத்தையும், யார் பொருட்டும் நாகு பிள்ளை செய்வது இல்லை என்றும், தான் செய்யும் வேலையைத் தான் மட்டுமே தனி ஆளாகத் துணிந்து செய்வார் என்றும் சொல்வார்கள். நாகு பிள்ளையின் மீது எப்போதுமே பத்துப் பதினைந்து வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன. அவை எல்லாமே கண் துடைப்புகளாக நடத்தப்பட்டு, மூடப்படும்போது, புதிதாகக் கணக்கில் பல வழக்குகள் வந்து சேரும். அநேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் நாகு பிள்ளையைத் தங்களின் நண்பராகவே பார்த்தன. அதனாலேயே தேர்தல் சமயத்தில் எல்லோரையும் தவிர்க்கும்விதமாக நாகு பிள்ளை கண்காணாத இடத்துக்குச் சென்றுவிடுவார். தேர்தல் முடிவுகள் வந்து, அரசியல் களேபரங் கள் ஓய்ந்த பின்னரே வீடு திரும்புவார்.

போலீஸ்காரர்களும் நாகு பிள்ளையின் நண்பர்களே. போக்குவரத்து போலீஸில் இருந்து ரோந்து வரும் போலீஸ் வரை நாகு பிள்ளையைப் பார்த்தால் விட மாட்டார் கள்.

”அண்ணாச்சி, வாங்க. காபி சாப்பிடலாம். ஒங்ககூட காபி சாப்ட்டு எவ்வளவு நாளாச்சு?”

நாகு பிள்ளைக்கு மனைவி இல்லை. வயதான தாயும், வயது வந்த ஒரே ஒரு மகளும் உண்டு. நாகு பிள்ளையின் தாய் சொர்ணத்தாச்சி யாரிடமும் பேச்சுவைத்துக்கொள்ள மாட்டாள். இளம் காவி நிறத்தில் அரக்கு பார்டர் போட்ட காட்டன் சேலையை முன்கொசுவம் வைத்து உடுத்தி, கல்லூரி செல்லும் பெண்கள்போல மார்போடு தேவார, திருவாசகப் புத்தகங்கள் அணைத்து, பூனை நடை நடந்து, காலை – மாலை இரு வேளை யும் நெல்லையப்பர் கோயிலுக்குப் போவாள். அம்மன் சந்நிதியில் போகும்போதும், வரும்போதும் எதிர் வரும் யார் முகத்தையும் பாராவண்ணம் தலை குனிந்தபடியே செல்வாள். உதடுகள் சிவ மந்திரத்தை முணுமுணுத்தபடியே இருக்கும்.

சொர்ணத்தாச்சி யாரிடமும் பேசுவது இல்லை என்பதால், அவள் குரல் எப்படி இருக்கும் என்பதே தெரியாது. ஆனால், அவளுக்குக் கணீர் என்ற வெண்கலக் குரல். அது தெரிய வந்தது, நெல்லை யப்பர் கோயிலில் நடந்த திருவாசக முற்றோது தலின்போதுதான்.

‘தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள்

ஊற்றான உண்ணா ரமுதே உடையானே

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப

ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று

போற்றிப் புகழ்ந்து இருந்து பொய்கெட்டு மெய்யானார்…’ – சொர்ணத்தாச்சியின் குரலுக்கு முன் மற்ற ஆச்சிகளின் குரல்கள் அமுங்கி ஒலித்தன.

”சொர்ணத்தக்காக்கு மகன் இப்டி சண்டியனா இருக்கானேன்னு கவலை; பாத்துக்கொ. அதான் யார்கிட்டெயும் பேசுனா, அவனப்பத்தி என்னமும் கேட்டுருவாங்களோன்னு ஒரு எண்ணம்” – சொர்ணத்தாச்சியின் மௌனத்துக்கான காரணத்தை நெல்லையப்பர் – காந்திமதியின் அபிஷேகத்துக்குப் பால் சுமக்கும் கல்யாணியாச்சி ஒரு முறை சொன்னாள்.

நாகு பிள்ளையின் மகள் ஆச்சியைப்போல் இல்லை. எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசுவாள். அவள் தாய் கறுப்பாக இருந்திருக்க வேண்டும். அதனாலேயே நாகு பிள்ளையின் நிறத்துக்கு மாறாக கறுப்பாக, ஆனால் களையாக, கோயில் சிலை மாதிரி இருப்பாள். ஒரு நாள் வாகையடி முக்கை நோக்கி நடந்து நாங்கள் செல்லும்போது, மாரார் ஸ்டுடியோ பக்கமாக வந்துகொண்டு இருந்த நாகு பிள்ளையின் மகளைக் காண்பித்து, ”அந்த அக்கா, நல்ல அக்கா” என்றான் குஞ்சு. எங்கள் சின்ன ஆச்சியின் வயதையத்த வைஜயந்தி மாலாவையே ஒருமையில் விளிக்கும் குஞ்சு, எங்களைவிட வயதில் இளையவளான நாகு பிள்ளையின் மகளை அக்கா என்று அழைத்ததில் எனக்கு ஆச்சர்யமே இல்லை. ”அந்த அக்கா, நல்ல அக்கா” என்று அவன் சொன்னது, அவள் அழகாக இருக்கிறாள் என்று சொல்லத் தைரியம் இல்லாமல் சொன்ன மாற்று வரி என்பது புரிய சிறிது நேரம் பிடித்தது.

ராயல் டாக்கீஸில் ‘தூங்காதே தம்பி தூங்காதே’ பார்க்க நானும் குஞ்சுவும் சென்று இருந்தோம். இடைவேளையின்போது, நாகு பிள்ளையின் மகள் எங்களுக்கு வலது பக்க மூலையில் அமர்ந்து இருந்ததைப் பார்க்க நேர்ந்தது. தன் பக்கத்து வீட்டு ரைஸ் மில்காரர் மனைவியுடன் வந்திருந்தாள். குஞ்சு அவளையே பார்த்துக்கொண்டு இருக்க, நான் தலையைத் திருப்பிக்கொண்டேன். சிறிது நேரத்தில் நாகு பிள்ளையின் மகள், குஞ்சு

தன்னைப் பார்த்துக்கொண்டு இருப்பதைப் பார்த்துச் சிரித்துவிட, பதற்றத்தில் குஞ்சு தலையைச் சுளுக்கு எடுப்பவன்போல் இடமும் வலமுமாக ஆட்ட ஆரம்பித்துவிட்டான். பிறகு, படம் முடியும் வரை சம்ஹாரத்து சூரபத்மன்போல தலையை ஆட்டிக்கொண்டே இருந்தான்.

நாகு பிள்ளையை ஒரே ஒரு முறை நேருக்கு நேர் பார்த்திருக்கிறேன். சதக்கத்துல்லா கல்லூரி யில் படிக்கும்போது எதிரே இருந்த கோர்ட் டீ கடையில் டீ குடிக்கும்போது, உடன் ஒரு வக்கீலுடன் நாகு பிள்ளை வந்தார். இரண்டு டீக்கு ஆர்டர் பண்ணிவிட்டு, பாட்டிலில் இருந்து

பிஸ்கட்டை எடுத்துக் கடித்தவர், டீ குடித்துக்கொண்டு இருக்கும் என்னைப் பார்த்தார்.

”என்னடே, பள்ளியூடத்துக்குப் போகலியா?” என்றார்.

”போகணும் அண்ணாச்சி” என்றவாறே அவசர அவசரமாக டீயை முழுங்கி, கிளாஸை வைத்துவிட்டு காசு கொடுக்கப் போனேன்.

வாய் நிறைய பிஸ்கட்டுடன், ”ம்ம்ம்… நீ போடே, நான் குடுத்துக்கிடுதென்” என்றார்.

நாகு பிள்ளைக்கு, பழைய பேட்டையில் ஓர் ஆசை நாயகி இருந்ததாகப் பேசிக்கொண்டார்கள். டவுன் ஆட்கள் யாரும் அந்தப் பக்கம் சென்றால், அந்த வீட்டுப் பக்கம் செல்லாமல் சுற்றிச் சென்றார் கள். அந்தப் பெண்ணைப் பார்த்த ஒரே ஆள் டாக்ஸி டிரைவர் செல்லையா மாமாதான். எத்தனை தடவை கேட்டாலும் கதைபோலச் சொல்லுவார்.

”திருச்செந்தூருக்கு பாளையங்கோட்ட செல்வராஜ் நாடார் வீட்டு சவாரி பாத்துக்கோ. கோயிலுக்குள்ளெ எல்லாரும் போயாச்சு. நான் போற வார ஆளுகளப் பாத்துக்கிட்டு வண்டியிலயே உட்கார்ந்திருந்தென். வெளிப் பிராகாரத்துல ஒரு புருசன் பொண்டாட்டி வந்தாங்க. ஆள எங்கெயோ பாத்த மாதிரி இருக்கேனு உத்துப் பாக்கென். நம்ம நாகு பிள்ள. அந்தப் பொம்பள எப்புடி இருந்தாங்கெ?”

”எப்புடி?”

”சங்கராபரணம் மஞ்சா பார்கவி மாதிரில்லாவே இருந்தா.”

”யோவ், அது மஞ்சு பார்கவிய்யா.”

நாகு பிள்ளை கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும், யாரிடமும் தானாகச் சென்று வம்பு வளர்த்ததே இல்லை. அவர் உண்டு, அவர் வேலை உண்டு என்றே இருந்தார். பொதுக் காரியங்கள் எதிலும் கலந்துகொள்வது இல்லை. நெல்லையப்பர் கோயிலின் ஆனித் தேர்த் திருவிழாவின்போது மட்டும் நாகு பிள்ளையைத் தேருக்கு அருகில் பார்க்கலாம். பிரமாண்ட தேர்ச் சக்கரங்களுக் குப் பின் தடி போடுபவர்களை உற்சாகப்படுத்தும்விதமாக அவர்களுடனேயே இருப்பார். அப்போது மட்டும் தோளில்

எப்போதும்கிடக்கும் தேங்காப்பூ துண்டு தலைப்பாகையாக மாறியிருக்கும். தேர் நிலையத்துக்கு வந்த பின், அன்று இரவு தடி போட்ட தொழிலாளிகள் எல்லோருக்கும் நாகு பிள்ளை சாராய விருந்து அளிப்பதாகச் சொல்வார்கள்.

”நாகு பிள்ளை வாங்கிக் குடுக்கற சாராயம்லா நெல்லையப்பர நெலயத்துக்குக் கொண்டுவருது.”

தாமிரபரணி ஆற்றுக்குப் போகும் வழியில் குறுக்குத் துறை ரோட்டில் உள்ள பூமாதேவி கோயிலின் திண்டில் ஒரு மதியப் பொழுதில் நானும் குஞ்சுவும் அமர்ந்து இருந்தோம். அந்தரங்கமாக, அமைதியாகப் பேசுவதற்குத் தோதான ஓர் இடம் அது. குஞ்சு அப்போது தன் மூன்றாவது காதலில் தோற்று இருந்தான். கவிதைபோன்ற உளறல் மொழியில் அவன் ஏதோ சொல்ல வாயெடுத்த நேரம், மருத மரங்கள் அடர்ந்த அந்தப் பகுதியில், எப்போதாவது ரயில் வருகிற லெவல் கிராஸிங்கை ஒட்டிய ஓடையை நோக்கித் திமுதிமுவென ஒரு கூட்டம் ஓடியது. ‘ஓ… ஓ…’வெனக் குழப்பமாக ஒரே சத்தம். கூட்டத்தோடு கூட்டமாக நாங்களும் சென்று ஓடையை எட்டிப்பார்த்தோம். சிதைந்து, கருகிப்போன முகத்துடன், ஏகப்பட்ட வெட்டுக்காயங்களுடன், கையில் இறுக்கக்கட்டிய கறுப்புப் பட்டை ஸ்டிராப் வாட்ச்சுடன் உப்பலாக நாகு பிள்ளை மிதந்துகொண்டு இருந்தார். அது நாகு பிள்ளை தான் என்பதை அவரது தாய் சொர்ணத்தாச்சியும், அவரது மகளும் நம்பவே இல்லை, இன்றுவரை!

– டிசம்பர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *