நல்லதோர் வீணை!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 13,776 
 
 

சென்ற நூற்றாண்டின், நாற்பதுகளில் நம் நாட்டின் குக்கிராமங்கள் என்பவை, குகைகளை விட கொஞ்சம் வெளிச்சமானவை என்பது தான் உண்மை.

மின்சாரம் கிடையாது, சாலை வசதி, தபால் தகவல் தொடர்பு, எந்த வசதியுமே இல்லாத இருண்ட தீவுகளாகத் தான் இந்தியக் கிராமங்கள் இருந்திருக்கின்றன.

அப்படியொரு கிராமத்தில், படிப்பறிவே இல்லாத ஒரு பாமரனுக்கு மனைவியாய், பதினாறு வயதில், தன் வாழ்வை பலிகொடுத்த, பரிதாபத்திற்குரியவள்தான் என் அம்மா கல்யாணி.
அவர் தந்தை அதாவது என் தாத்தா, ஒரு கர்நாடக சங்கீத வித்வான். அதனால் தான், ராகங்களின் அரசியான கல்யாணி என்ற ராகத்தின் பெயரையே, தன் மகளுக்கு வைத்திருக்கிறார்.

ஆனால், அவள் மண வாழ்க்கையை தான், காம்போதி ஆக்கிவிட்டார் அந்த கபோதி.
நாற்பது வயதான என் அப்பா, தன் மூர்க்கத்தனத்திலும், முரட்டுத் தனத்திலுமே முதல் மனைவியை சாகடித்தவர்.

நல்லதோர் வீணை!

இரண்டாம் தாரமாய், என் அம்மாவை அவர் மணந்து கொள்வதற்கு, அவரது அளவற்ற வசதியை விட, என் அம்மாவின் அநியாய வறுமை தான் காரணம்.

அவரது அத்து மீறல், ஆக்கிரமிப்பு, அராஜகம், ஆணாதிக்கம்… அதில் அடங்கி ஒடுங்கி சுயம் என்பதையே சுத்தமாய் இழந்து, ஒரு அடிமையாய் மட்டுமே என் அம்மா கிடந்திருக்கிறாள். வாழ்க்கைச் சாலையில் வலி தாங்கியவளாகவே, நெடுந்தூரம் என் அப்பாவைத் தொடர்ந்திருக்கிறாள்.

என் அப்பாவிடம் அவள் பேசியதைக் கூட பெரும்பாலும் பார்த்திராத நான், தனிமையில் அவள் ஒரு நாள் பாடியதைக் கண்டதுமே, இன்பஅதிர்ச்சி அடைந்தேன்.

“காக்கைச் சிறகினிலே நந்தலாலா…’ என்ற பாரதியார் பாடலை, அவள் யதுகுல காம்போதி ராகத்தில் பாடியபோது, கோதை ஆண்டாளின் குரலாகவே, என் அம்மாவின் குரல், என்னை கரைய வைத்தது.

அதன் பின், அடுக்களையில் அவள் அருகில் அமர்ந்து, அவளைப் பாடச் சொல்லிக் கேட்டுக்கொண்டே இருப்பேன்.

“அப்பா, உன்னைப் பாடச் சொல்வாராம்மா… நீ பாடிருக்கியா?’

என் ஆவலான கேள்விக்கு, வெறும் விரக்தியான சிரிப்புடன் கூடிய, “இல்லை’ என்ற தலையசைப்புதான், அவளது பதிலாய் இருந்தது.

“ஏன்ம்மா… அப்பாவுக்கு உன் பாட்டு பிடிக்காதா?’

“அம்மாவையே பிடிக்காதுப்பா அவருக்கு…’

“ஏன்.. எதுக்கும்மா?’

“ம்… அது, அம்மாவோட தலைவிதி…’ என்று, அழுகையை அடக்கி, மிக உடைந்த குரலில் அவள் கூறும் பதில், என்னை கசிந்து கலங்க வைத்தது. என் அம்மாவின் கதையை, என் பெரியம்மாவிடம் ஒரு நாள் பேராவலுடன் கேட்டேன். அதன் மூலம், அப்பாவிடம் என் அம்மா அடைந்த துன்பங்கள், துயரங்கள், அவமானங்கள் அத்தனையும், அறிந்த போது, என்னால் அழத்தான் முடிந்தது.

என் பத்தொன்பது வயதில் ஒரு நிகழ்ச்சி. என் பெரியப்பா மகளின் கல்யாணத்திற்கு, என் அப்பா வழி உறவினர்கள் அனைவருமே வந்திருந்தனர்.

அவர்களின் முன்னால், என் அம்மாவைப் பாடவைத்து, அவள் ஒரு அற்புதமான பாடகி என்று, பெருமிதமாய் அவளை அறிமுகம் செய்ய நினைத்தேன்.

பாடவே மாட்டேன் என்று மறுத்த என் அம்மாவிடம், அழுது அடம் பிடித்து, பாட வைத்தேன்.

“நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத்திறனும் இன்றி…’ என்ற பாரதியார் பாடலை மிக உருக்கமாய் பாடினாள்.

நான் பெருமையோடு என் அம்மாவையும், பெருமிதத்தோடு என் உறவினர்களையும், மாறி மாறிப் பார்க்கத் துவங்கினேன்.

என் அப்பா வந்து விட்டார்.

“ஏ எருமை… என்ன இது ஒப்பாரி… எல்லாருக்கும் காபி போட்டுக் கொண்டு வா… ஓடு நாயே… பாட்டும், முகரையும்… கழுதைக வந்துடப் போகுது…’ என்று சொல்லி, என் அம்மாவின் கழுத்தைப் பிடித்து, வீட்டிற்குள் தள்ளி, தன் சொந்தங்களை எல்லாம் வயிறு வலிக்கச் சிரிக்க வைத்தார்.

“அண்ணாச்சீ… மதினி அழகாப்பாடுனாக… ஏன் விரட்டியடிச்சீக… போங்கண்ணாச்சீ…’

நெட்டூர் அத்தை சிரித்துக் கொண்டே தான், என் அப்பாவிடம் கோபப்படுவது போல் நடித்தாள்.

“கழுதைய நல்லாக் கட்டிப் போடலம்மா… கயிறு அவுந்திருச்சு போல… நீங்க யாரும் கவனிக்கல… வந்து இவ்வளவு நேரமும் கனைச்சிருக்கு… கட்ட வெளக்கமாற எடுத்து, அந்தாக்குல முகரையில அடிச்சு விரட்டீருக்க வேண்டாம்?’ என்று, தன் தங்கைகளிடம் கிண்டலாய் கேட்க, அவர்களை மேலும் சிரிக்க வைத்து, என் அம்மாவை அதிகபட்சமாய் அவமதித்த அப்பாவிடம், என் அம்மாவிற்காக பரிந்து பேசி அழுதது நான் மட்டுமே.
அதன் பின், அம்மாவை அடுக்களையில் சந்தித்து, அவளோடு சேர்ந்து நானும் அழுதேன்.

“உங்க அப்பா வழிச் சொந்தங்க முன்னால, அம்மா எப்படி அவமானப்பட்டேன் பாத்தியா… இதனாலதான்ப்பா நான் பாடுறதே இல்ல… நீ தான் பிடிவாதமாய் பாடச் சொன்ன… அம்மா அடஞ்ச கவுரவத்தை பாத்தியா?’ என்று, ஒரு விரக்திச் சிரிப்பை சிந்திவிட்டு, தேம்பித்தேம்பி அழுத அவளை தேற்ற முடியாமல், தவித்துப் போனேன்.

பிறகொருநாள் அம்மன் கோவிலில் அபிராமி அந்தாதி பாடியிருப்பாள் போலும்… பஞ்சாயத்துத் தலைவர், நாட்டாமை, கர்ணம், அத்தனை பேருமே, அன்று கோவிலுக்கு வந்திருந்ததால், அம்மாவின் பாடலை கேட்டு வியந்து, மகிழ்ந்து போன அவர்கள், மறுமாதம் நடக்கவிருக்கும் பொங்கல் விழாவிற்கு, அம்மாவையே பாட வைக்க முடிவெடுத்து விட்டனர்.

பொங்கலுக்கு முதல்வாரம் வீடு தேடி வந்து, தங்கள் விருப்பத்தை அவர்கள் சொன்ன போது, அவர்களின் கண் எதிரிலேயே, அம்மாவைச் செருப்பால் அடித்தார் என் அப்பா.

“கோவில்ல போய் பஜனை பாடி, கூட்டத்தக் கூட்டிருக்கியோ… இன்னைக்கு வீடு தேடி வந்திட்டாங்க… இனி மேடையேறி கடத்தடிக்கணும்ன்னு உனக்கு ஆசையோ… அவிசாரி மகளே…’ என்று, அவர் கேட்ட வார்த்தைகளில், சிவ சிவ என, காதுகளைப் பொத்தியபடி, வந்தவர்கள் ஓடிவிட்டனர்.

“சரியா ஒரு கொழம்பு வைக்கத் தெரியல… உப்பு உரைப்போட ஒரு சட்னி அரைக்கத்
தெரியல… உனக்கு பாட்டு ஒரு கேடா? ம்… இனி பாடுவியா… பாடுவியா… இந்த வாய் தான் பாடுது…இந்த வாய்தானே பாடுது?’என்று கேட்டுக் கேட்டு, அம்மாவின் வாயிலும், அவள் முகத்திலுமாய், தன் செருப்பால் ஏழெட்டு அறைகள் அறைந்த போது, என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அந்த ராட்சசனின் கையிலிருந்த செருப்பை பிடுங்கி எறிந்த நான், அவரையும் ஆவேசமாய்க் கீழே தள்ளினேன்.

கீழே விழுந்த அப்பா அதன் பின், எழுந்து போய் கட்டிலில் படுத்தவர் தான். பேசவே இல்லை. மறுநாள் அதிகாலையில், அவர் இல்லாத வெறுங்கட்டில் தான் வீட்டில் இருந்தது.

குளிக்கப் போயிருப்பார்; வருவார் என நினைத்து, தேட நினைக்கவில்லை. அவர் வரவே இல்லை. அதன் பின் தேடியலைந்த போது… கரை புரண்டு வெள்ளம் ஓடிய ஆற்றங்கரையில், துவைகல்லில் அவர் வேட்டி மட்டுமே வெள்ளியாய்ச் சிரித்தது.

வெள்ளத்தில் என் அப்பா அடித்துச் செல்லப்பட்டதற்கு, அவர் வேட்டி மட்டுமே மவுன சாட்சியாய் துவை கல்லில் கிடந்தது.

ஆற்று வெள்ளத்தில் எப்போதுமே எதிர் நீச்சல் அடித்துக் குளிப்பதுதான் அப்பாவின் வழக்கம். இப்போதும் அப்படியே இறங்கி, அநியாயமாய் அடித்துச் செல்லப்பட்டு விட்டார் என்பதுதான் ஊராரின் ஒருமித்த முடிவாய் இருந்தது.

அப்புறம் என்ன? இறந்து போன அப்பாவிற்கு நான் செய்ய வேண்டிய இறுதிக் கடன்களை எல்லாம் ஆற்றங்கரையில் சாஸ்திரிகள் முன் உட்கார்ந்து, அவர் சொல்லச் சொல்ல மந்திரம் சொல்லி… செய்யச் சொன்ன சடங்குகளை செய்துவிட்டு அவருக்குத் திருப்தியான தட்சணையைத் தந்து, வீடு வந்து சேர்ந்தேன்.

அம்மா வெள்ளைப்புடவையும், வெறும் கழுத்தும், வெறும் நெற்றியுமாய், வீட்டுச் சிறையில் இருந்த ஒரு வருட காலத்தில், அவளிடம் பேசிப்பேசி… வாதாடி… வழக்காடி… கெஞ்சிக் கூத்தாடி… ஒருவழியாய் பாடுவதற்கு மேடையேற, அவள் சம்மதத்தை வாங்கி விட்டேன்.
முதன் முதலாய் எங்கள் ஊர் அம்மன் கோவில் திருவிழா மேடையில்தான் பாடகியாய் ஏறினாள். அரங்கேறிய அவள் பாடலுக்கு, அம்மனின் ஆசிர்வாதம் மிக நிறைவாய் கிடைத்ததாலோ என்னமோ… அடுத்த வாரமே மாவட்டத்தில், கலை இலக்கியப் பெருமன்றம் நடத்திய பத்துநாள் கலை இலக்கிய விழாவில், தினசரி பாரதியார் பாடல்களைப் பாடும் வாய்ப்பை, என் இலக்கிய நண்பனின் மூலம், அம்மாவிற்கு வாங்கித் தந்தேன்.

கலை இலக்கிய விழாவில் அம்மாவின் பத்து நாள் பாடல். அவளை புகழ் ஏணியின் உச்சிக்கே கொண்டு சென்றது. அத்தனை ஊடகங்களிலும் அவள் தெரிந்தாள். அறிவுலகம் நடத்தும் அனைத்து விழாக்களிலும் பாடகியாய் என் அம்மாவே மேடை ஏறினாள்.

அம்மா பிரபலம் ஆனாள்.

கல்யாணி அம்மா மகனா நீங்க? பிரபல பாடகி கல்யாணி, உங்க அம்மாதானா? ஊரும், உலகமும் என்னை நோக்கிப் புருவங்கள் உயர்த்தியபோது… என் மனம் துள்ளிக் குதித்தது.
ஒரு மே மாதம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் திருவிழாவில், அம்மாவின் இன்னிசை விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோது… வழக்கம் போல கூட்டத்தின் நடுவே, மக்களில் ஒருவனாய் நின்று என் அம்மாவின் பாடலை ரசித்துக்கொண்டிருந்த நான், தற்செயலாய் திரும்பிய பக்கம், ஒரு ஓரமாய் நின்ற ஒரு ஆறடி உயரத்தைக் கண்டதுமே, அதிர்ச்சியின் உச்சத்தில் ஆடிப்போய் விட்டேன்.

மார்பு வரை இறங்கிய தாடியும், மாதக்கணக்கில் மழிக்கப்படாமல் பரட்டையாய் கிடந்த தலையுமாய், ஒரு கந்தல் கட்டிய முதியவர் என்னை நிலைகுலையச் செய்து விட்டார். அவர் யார் என்கிறீர்களா? வேறு யாருமில்லை… ஆற்று நீர் அடித்துச்சென்று விட்டதாய் முடிவுகட்டி, மொட்டையும் போட்டு, மொட்டைத் தலையில் முடியும் வளர்ந்த பிறகு… அடியேன் சாகவில்லையடா… என்று ஆறடி உயரமாய் அங்கே வந்து நின்றது என் அப்பாதான்.

அதிக பட்ச அதிர்ச்சியில், மெய்மறந்து சிலையாய் நின்ற என்னைக் கண்டு அவர்தான் கையெடுத்துக் கும்பிட்டார்; கண்ணீர் விட்டார். அம்மா பாடி கொண்டிருந்த மேடையைக் காட்டிக் காட்டி, எதையோ சொல்ல முயன்றார்.

தனியாக அழைத்துச் சென்று, கால் மணிநேரம் அவரோடு பேசிப் போராடிய பிறகே, ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விபத்தில் உயிரை இழக்காமல், பேரதிர்ச்சியில் பேச்சை மட்டுமே இழந்திருக்கிறார் என என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

அம்மா பாடகி ஆன கதையை, அவரிடம் அரைமணி நேரம் விரிவாய்ப் பேசி, விவரித்தேன்.
அதன்பின், அவரை ஒரு ஓட்டலுக்குக் கூட்டிச்சென்று வயிறார சாப்பிட வைத்து, உடுத்திக்கொள்ள புதிய துணிமணிகள் எடுத்துத் தந்து, அவர் செலவு செய்ய தேவைக்கு அதிகமாய் பணமும் தந்து, அங்கேயே ஒரு டாக்சி பிடித்து, என் நண்பர்கள் நால்வரை அவரோடு டாக்சியில் ஏற்றி, தாராபுரத்தில் இருக்கும் என் அமெரிக்க நண்பனின் இல்லத்திற்கு அனுப்பி வைத்தேன்.

நண்பன் அமெரிக்காவில் இருப்பதால், அவனது இல்லம் என் பொறுப்பில்தான் இருந்தது. வேறு யாருமே குடிபுகாத வெறும் வீடாகவே அது வெகுகாலம் கிடந்தது. இப்போது எனக்கு அது என் அப்பாவை அனுப்பிவைக்க வசதியாய் போனது.

தாராபுரத்தில் என் அப்பாவை விட்டு விட்டு, என் நண்பர்கள் வந்துவிட்டனர். மறுவாரமே, நான் அங்கு போய் அப்பாவிற்கு பணிவிடைகள் செய்வதற்கு, இரண்டு ஏழைத் தம்பதியரை நிரந்தரமாய் அந்த வீட்டில் நியமித்து விட்டு வந்தேன்.

அதன்பிறகும், அவரை மறந்து விடவில்லை. மாதம் ஒரு முறை போய் அவரைப் பார்த்துப்பேசி விட்டு வருகிறேன்.

அம்மாவிடம் தன்னை சேர்த்து வைக்கும்படி, கண்ணீர் வழியும் கண்களாலும், கைச்சாடைகளாலும், நான் போனபோதெல்லாம் என்னிடம் கெஞ்சிக் கேட்கத்தான் செய்கிறார். ஆனால், என் மனதை இளக விடவில்லை.

அவரது அந்த ஆசையை மட்டும் தாட்சண்யமற்ற கண்டிப்பான தலையசைப்பில் நிராகரித்துவிட்டு, அவரது மற்ற ஆசைகளை எல்லாம் மகனாய் நிறைவேற்றி வருகிறேன்.
அம்மாவிடமும், அப்பா பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை.

இனி, அம்மாவை அவர் சந்திக்கவே கூடாது. சந்தித்து விட்டால், இவரைக் கண்ட அம்மா நிலைகுலைந்து போய் விடுவாள். பின் அவள் பாடுவாளா என்பதும் கூட கேள்விக்குறிதான்.
ஏறக்குறைய இருபது ஆண்டுகள், என் அம்மா என்ற நல்லதோர் வீணை, அப்பா என்ற புழுதியில் நலம் கெடக்கிடந்தது போதும்.

இனி, அந்த புல்லாங்குழலை அடுப்பூத விடக் கூடாது.

இந்த விலைமதிப்பற்ற கலைப்பொக்கிஷத்தை, கணவன் என்ற காட்டுத்திமிரில், மிக மிக அலட்சியமாய் கையாண்டு, அந்த இன்னிசைக்குயிலை, தன் இருட்டு உணவாய் மட்டுமே இருபது ஆண்டுகள், தின்று தின்று சீரழித்த என் தந்தையை, நான் ஒன்றும் சேலம் சிறையிலோ, சென்னை புழல் சிறையிலோ வைத்திருக்கவில்லை. இரண்டு தம்பதியர் கவனித்துக்கொள்ளும் ஒரு வீட்டுச் சிறையில்தான் வைத்திருக்கிறேன்.

இன்னும் கொஞ்ச காலமே இருக்கும் அளவிற்கு தான், அவர் உடல்நிலையும் உள்ளது.
இப்படியே அவர் இருந்து, இறந்து போகட்டும். என் அம்மாவிடம் நான் சொல்லப் போவதில்லை.
நான் செய்வது தவறோ என்று கூட என் மனம் சிலநேரம் தவிக்கத்தான் செய்கிறது.

அதே சமயம், புகழின் உச்சத்திற்கே சென்றுவிட்ட ஒரு சிறந்த பாடகியை, மறுபடியும் ஒரு காட்டுவாசியின் வீட்டடிமையாய், வீணாக்க என் மனம் விரும்பவில்லை.

என் அம்மாவைப் பொறுத்தவரை, என் அப்பா தெய்வமாகி விட்டார். அவளது பூஜை அறையிலேயே. சந்தனமாலை தவழும் புகைப்படமாய் அவரது அமர வாழ்க்கை தொடரட்டும்.

– டிசம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *