(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 | அத்தியாயம்-9
மறுநாள் காலை ‘இதென்ன முழு அசட்டுத்தனம்?’ என்று தோன்றியது.
சூரிய வெளிச்சத்தில் ‘தேமே’ என்று நின்றது மொட்டை மரம்.
நேற்றிரவு அதன் கிளைகளில் ஊஞ்சலாடியது… என்ன அல்லது யார்?
அது முழுக்க உன் பிரமைதான்- என்று தன்னையே திட்டி அடக்கினாள்.
முன்புபோல வேலை நடக்கவில்லை.
ரவிக்கைகளை வாங்கிப்போக வந்த கடை பையன்கூட அலுத்துக்கொண்டான்.
‘என்னக்கா, அஞ்சாறு சோளிக்காய் பத்து மைலு சைக்கிள் மிதிக்க வச்சுட்டீங்களே?’ என்று.
“நாலைஞ்சு நாளாய் துணி வெட்டலைப்பா. பத்து இருவதுன்னு வெட்டிப் போட்டா ஒத்தாசைக்கு பொண்ணுகளைக் கூப்பிடுவேன்… தைக்கும்ங்க, ஊக்கு வைக்கும்ங்க அடுத்த வாரம் ஐம்பதாய் தந்திடறேன்.”
இவள் துணியை வெட்டிப் போட்டால் மற்ற பெண் சுறுசுறுப்பாய் முடிப்பார்கள். அனால் அவர்களையும் ஊக்கப்படுத்தித் தூண்டினால்தான் வேலை ஜரூராய் போகும். இல்லையெனில் இப்படி தேக்கம்தான்.
மனக்குதிரையை அடக்கி, வேலையில் விரட்டினாள். இரண்டு நாட்கள் வேலை மும்முரமாய் நடந்தது.
“இங்கேயே உக்காந்து கொக்கி வையுங்களேன். ஒருத்தருக்கு ஒருத்தர் பேசினபடி செய்தா அலுக்காம காரியமாகும்” என்று, வந்து வேலை வாங்கிக்கொண்டு போகும் பெண்களை உடன் இருத்திக்கொண்டாள்.
ஆள் நடமாட்டம் இருக்க – மனம் அதிகமாய் நினைவு, கனவுகளை மேயப் போகவில்லை.
பங்களாவிலும் ஆட்கள் வரப்போக என்று கலகலப்பு. இவளிடம் வந்து விவரம் சொல்லிப் போனான் பாஸ்கரன்.
“மெஷினரி சீக்கிரம் வந்திடும். வேலைக்கு ஆட்கள் வேணுமே! பத்திரிகைகளிலே விளம்பரம் தந்திருந்தேன். ‘இன்டர்வியூ’ நடக்குது.”
“சரி…”
“நீயும் வாயேன். பார்த்து உன் அபிப்ராயம் சொன்னா முடிவெடுக்க எனக்கு சவுகரியம்.”
“இந்த வாரத்துக்குள்ளே நாப்பது ரவிக்கைகளைத் தைக்கலேன்னா என் நிலைமை சிரமம். மறு மாசம் உங்களுக்கு வாடகை வராது” கசப்பாய் சிரித்தாள்.
“இது உன் வீடு… சொன்னது மறந்தாச்சா?” அவன் பேச்சிலும் சற்று கசப்பேறியது.
“மறக்கலை.”
*அந்தக் கடித விஷயமாய் பதில் ஏதும் நீ சொல்லலியே?”
அவன் குரல் ஏனிப்படி தடுமாறுகிறது?
“கேலி, கிண்டலுக்கெல்லாம் பதில் எதுக்கு?”
“கல்யாண விஷயத்திலா கேலி?”
‘சரக்’கென நிமிர்ந்தான்.
“அந்தப் பேச்சே வேணாமே… பிடிக்கலை…”
விலகி நடந்த வேகத்தில் அவன் கோபம் புரிந்தது.
எதற்கிந்த ஆத்திரம்?
அர்ச்சனா போன்ற அழகிகள் விழுந்து மொய்க்க, தான் ஒதுங்குவதில் இவனுக்கு என்ன நஷ்டம்?
அந்தக் கடிதத்தை முழுக்கப் படித்திருந்தால் இத்தனை குழப்பம் இராது.
அர்ச்சனா தினமும் வருகிறாளோ?
இருக்கும். ராணி வந்தால் விவரம் தெரியும்.
ராணியின் அரவமே காணோம். அவள் மூலமாகத்தான் தனக்கு விவரங்கள் தெரிந்தது என்று ஓட்டை வாய்த்தனம் காட்டியது தப்பு. பாஸ்கரன், ராணியை எச்சரித்திருப்பான். திட்டியிருக்கக் கூடும்.
யார் வந்தால் என்ன, எது சொன்னாலும் என்ன – என்ற ரீதியில் இருந்தால்தான் வாழ்வில் நிம்மதி.
வேலையில் மூழ்கியது மனம்.
ஆனால், மூன்றாம் நாள் இரவு… அந்தப் பயங்கரம் நேர்ந்தது! மறுநாள் காலை மொட்டை மரத்தைப் பார்த்து தன்னையே ‘அசடு’ என்று தேற்றிக்கொண்டது போல இம்முறை முடியவில்லை. மறுநாளும் கூட முந்தைய இரவு நேர்ந்ததை நினைக்க… வியர்த்தது.
இரவு அயர்ந்த தூக்கத்தில் இருந்தாள்.
யாரோ “ஸ்ஸ்” என்று உசுப்பி எழுப்புவதான பிரமை… சிரமத்துடன் கண் விழித்தாள் பரணி. ‘காற்றாய்தான் இருக்கும், என்றபடி மறுபடி விழிகள் சொருகுவதற்குள் அந்தக் குரலின் கிசுகிசுப்பு –
“நச்சத்திரா… நச்சத்திரா…”
விலுக்கென விழிப்பு தட்டியது.
உடம்பு முழுக்க காதானது போல… கவனித்தாள்.
“போ… போ… போயிடு… ஓடிரு…”
மந்திரம் போல, எங்கோ ஆழத்திலிருந்து கிளம்பி அந்தக் குரல் கேட்டது… அது வெறும் ஒலிதானா?
வியர்க்க ஆரம்பித்தது. பல்லி போல படுக்கையோடு அழுந்தினாள்.
‘நச்சத்திரா… விட்டிரு… ஓடு ஓடு… நச்சத்திரா.’
அமானுஷ்யமான உச்சரிப்பில் இவள் மேனி சிலிர்த்தது.
நரம்புகளை இறுக்கிச் சுருண்டாள்.
இதயம் எகிறித் துடித்தது.
மூச்சு சீரில்லாமல் விக்கியது.
எத்தனை நேரம் அந்த அவஸ்தை என்பது தெரியவில்லை. அரைகுறையான உறக்கமும், விழிப்புமாய் உதறி உதறி கழித்த இரவு, அது.
குழந்தையும் பயந்திருப்பாளோ?
ஆனால், அனு முகத்தில் வழக்கமான மலர்ச்சி.
ஆக அவள் எதையும் கேட்கவில்லை.
அத்தனையும் தன் மனப் பிரமையோ?
இல்லை… இத்தனை நாட்கள் இல்லாது இப்போது ஏன்? குரல் நிஜம்தான்!
சமையலை தொடங்க சமையலறை மேடைப் பக்கமாய் போனவளது புருவங்கள் முடிச்சேறின.
அந்தக் கருங்கல் மேடை முழுக்க சின்ன சின்ன காகிதத் துண்டங்கள்.
ஒவ்வொரு இரவும் சமையல் மேடையை துளி ஈரமோ, அழுக்கோ இல்லாதபடி துடைத்துவிடுவாள்.
பிறகெப்படி இவை வந்தன?
அவ்வறையின் சன்னல் சாத்தியபடிதான் இருந்தது. மேலே புகை போக இருந்த சிறு செவ்வகத் திறப்பு வழியே வந்திருக்கக் கூடுமோ?
காற்றில் சருகு, தூசி உள்ளே வரலாம்.
காகிதங்கள்… அதிலும் இத்தனைத் துண்டுகளா? பலவற்றில் வண்ண எழுத்துக்கள்…
நடுங்கும் விரல்களால் ஒரு துண்டை எடுத்துப் பார்த்தாள். ‘போ’ என்ற ஒரே எழுத்து.
மற்றவற்றையும் பார்க்க, அத்தனையிலும் அதே எழுத்து அல்லது சொல்.
இருபது, முப்பதாய் கிழிக்கப்பட்ட அத்தனைத் துண்டுகளிலும்! மறுபக்கத்தில் ‘ஸ்கெட்ச் பேனா’வில் பரணியின் எழுத்து…! என்னவா இருக்கும்?
பரபரப்பாய் காகத துண்டுகளை சேர்க்க முயற்சித்தாள்.
“சித்தி… பாலு வேணும்.”
“இதோ தரேன் அனு.”
அதன் பின் அன்றாட பிற வேலைகள் தொடர்ந்தன.
உப்புமா கிளறி- அனுவுக்கு மதிய உணவும் கட்டி அனுப்பி பிறகு மீண்டும் பதறும் மனம், விரல்களுடன் துண்டுகளை கோர்வைப்படுத்தினாள்.
இது… இது… அவள் பாஸ்கரனுக்கு… அனுவின் பிறந்த நாளுக்காய் தந்து அனுப்பிய அழைப்பிதழ்…
அப்படியென்றால் இதெல்லாம் அவன் வேலைதானா?
மனம் ‘ச்சீ’ என்றது.
தனியாய் இருக்கும் ஒரு பெண்ணை மிரட்ட இத்தனை தரங்கெட்ட முறைகளா?
இவளைத் துரத்திவிட்டால் ஏகபோகமாய் இங்கு அரசாட்சி செய்யலாம் என்பது அவன் திட்டமா?
ஏனோ அழுகை முட்டியது.
இத்தனை தாழ்ந்தவனா பாஸ்கரன் என்ற ஏமாற்றத்தில், இனி தனக்கென்று ஆதரவு யாருமேயில்லை என்ற துக்கத் தவிப்பில்!
– தொடரும்…
– ராணிமுத்து மார்ச் 1, 2009