கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 10,715 
 
 

வின்சென்ட் கொடுத்த ஆடைகளை அணிந்து ஹென்றி படுக்கையில் கிடந்தான். அவனைச் சுற்றி இரவு தன் வலையைப் பின்னியது. படுக்கையின் மென்மை உடலுக்கு அன்னியமாக இருந்தது. உடம்பு படுக்கையிலிருந்து வழுக்கிக்கொண்டு போய்விடும் என்று பயந்தான். நேற்றைய முன் தினம் யூட்டா மாநிலத்தில் ஏதோவொரு நகரத்தில் ஒரு நெடுஞ் சாலைப் பாலத்திற்கு அடியில் குளிர் உடலைப் புரட்டியெடுக்கப் படுத்திருந்தான். அவனுடைய பத்தாண்டுக் கால அலைச்சலில் பல கந்தல் துணிகளைச் சேகரித்துவைத்திருந்தான். அத்தனையும் உடல் மேல் போர்த்தி அதற்கும் மேலே ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பையையும் அணிந்து படுக்க வேண்டி யிருந்தது. அந்த இடத்தில் அவனைப் போலவே இரண்டு பேர் படுத்திருந்தார்கள். அந்தக் குளிர் இரவில் அவர்களுக்குள் பேசிக்கொள்ள எதுவும் இருந்திருக்கவில்லை. கணக்கற்ற இரவுகளை அவன் வெளியில் கழித்து விட்டுத் தான் இங்கே வந்திருக்கிறான். ஓயாத அலைச்சல் கொஞ்சமும் எதிர்பாராத இடத்துக்கு அவனை இழுத்து வந்திருக்கிறது.

o

ஹென்றி குளித்துக்கொண்டிருந்தான்.

ஷீலா வின்சென்ட்டிடம் எதுவும் கேட்காமல்தான் இருந்தாள்.

அவன் தானாகவே சொன்னான்:

‘ஹென்றியைப் பார்த்தபோது நம்பவே முடியவில்லை. அவன் எப்படி இங்கே . . . டென்வரில், அதுவும் இந்தக் கோலத்தில் . . . ஒரே குழப்பமாக இருந்தது”.

தோட்டத்துக்கும் அறைக்கும் நடுவில் இருந்த பெரிய கண்ணாடி ஜன்னல் எதிரே சோபாவின் ஓரத்தில் ஷீலா அமர்ந்திருந்தாள். அவள் பார்வை அவன் பக்கம் இருக்கவில்லை. வெளியே தோட்டத்தில் பனி தொடர்ந்து பொழிந்துகொண்டிருந்தது.

வின்சென்ட் அவள் எதிரே நின்றவனுக்குப் பக்கத்தில் அமர்ந்தான். அடுத்த கணமே எழுந்து நின்றுகொண்டான்.

‘சந்தேகமே இல்லை ஷீலா. ஹென்றிதான் அது. அதில் ஒரு சந்தேகமும் எனக்கு அப்போது இருக்க வில்லை. ஆனால் சூழ்நிலை என்னைக் குழப்பிவிட்டது.’

ஒரு கணம் நிறுத்தி அவனும் ஜன்னல் வெளியே பார்த்தான். அவனுடைய குறுந்தாடியில் நிரம்பியிருந்த நரைமுடிகளைக் கட்டைவிரலால் தேய்த்துக்கொண்டான்.

‘பத்து வருஷங்களுக்கும் முன்னால் இல்லையா ஷீலா! அவனைக் கடைசியாகப் பார்த்தபோது கலிபோர்னியாவில் பெர்க்கிலிப் பல்கலை வாசலில்!’

வின்சென்ட்டின் கையில் தக்கை போட்டு மூடியிருந்த வைன் பாட்டில் இருந்தது. மூடியைத் திருகிக்கொண்டே பேசினான்.

‘ஷீலா, இன்று போலவே அன்றும் கிறிஸ்துமஸுக்கு முன் தினம். பெர்க்கிலியில் அவனைப் பார்த்தபோது உள்ளுணர்வு என்னை எச்சரிக்கத்தான் செய்தது. அவன் ஒரு நிமிஷம்கூடத் தாமதிக்கவில்லை. ஓங்கி என் கன்னத்தில் அறைந்துவிட்டான்!’

o

ஹென்றி படுக்கையில் புரண்டான். களைப்பு அவனை அழுத்தியது. குளித்த பிறகு உடலில் உருக்கொண்ட அசதி அவன் விரும்பியபடி இருந்தது. கண்களில் தூக்கம் சொக்கியது.

அதே தருணத்தில் மனம் ஞாபகங்களைப் புரட்டியது.

பத்து வருடங்கள்! சான் பிரான்ஸிஸ்கோ நகரில் அலையும் பனிமூட்டம் அந்த இரவு அவனை அழைத்தபோது அதன் பின்னாலேயே ஹென்றி போயிருந்தான். ஷீலாவின் வாசனை பனியிரவில் அவன் கூடவே வந்தது. இரவின் குமிழிகள் உடைந்து குபுகுபுவென்று பெருகிய பனிமூட்டத்தினுள் அவனும் மிதந்தபடி தெருக்களில் அலைந்தான். அடர்ந்து ஈர மண்ணைப் போல இருள் பல இடங்களில் குழைந்துகிடந்ததை முதன்முறையாகக் கவனித்தபோது இன்னொரு உலகத்துக்குள் நுழைந்துவிட்டதைப் போலிருந்தது. நகரத்தின் மூலைகளில் இருள் மெழுகின் உருகலைப் போல் சொட்டிக்கொண்டிருந்தது. நிழல்கள் ஒளிந்தும் வெளிவந்தும் கண்ணாமூச்சிக் காட்டின.

அவனைப் போல பலர் அந்த இரவில் நகரமெங்கும் அலைந்துகொண்டிருந்தார்கள். ஒருத்தன் பழைய ஷூக்களை எடுத்து லேஸ்களைக் கோத்து மாலையாக இவன் கழுத்தில் மாட்டினான்:

“நண்பனே வா! இந்த நகரத்தை ஆடையாக அணிந்துகொள்வோம்” என்றான். பாலத்துக்கடியில் ஒரு கும்பல் குப்பைகளைச் சேர்த்து எரித்தது. எம்பிக் குதித்த ஜ்வாலைக்கு மேலே இரவின் விளிம்பு ஏறி இறங்கியது. அந்தக் கும்பலில் ஹென்றியை ஒருத்தன்கூட எங்கிருந்து வருகிறாய் உன் பூர்வீகம் என்ன என்றெல்லாம் விசாரிக்கவில்லை. நகரெங்கும் அலைந்த பனிமூட்டத்திலிருந்து இறங்கி வந்திருப்பவனாகவே அவனை அடையாளம் கண்டார்கள். அவர்கள் தங்களையும் அப்படித்தான் கூப்பிட்டுக்கொண்டார்கள். மூடுபனியின் குழந்தைகள் என்று.

அலைவது எப்படி என்று அவர்களிடமிருந்து ஹென்றி கற்றுக்கொண்டான். அது அத்தனை சுலபமானதல்ல. நிற்காமல் போக வேண்டும். சீரான வேகத்தில்! அதுவே குறிக்கோள். வெளிப்புறத்தில் பாய்ந்து சீறும் உலகின் எந்தச் சாயலும் மேலே விழுந்துவிடாதபடி நகர வேண்டும். கூட்டமாக இல்லாமல் தனித்தனியாக அலைய வேண்டும். போன பாதையில் திரும்பப் போகாமல் தன்னுணர்வுக் கழண்டுபோய் வெறும் பாதங்களாக உடம்பு மாறும் வரை.

o

வின்சென்ட் தொலைவில் இருக்கும் வார்த்தைகளை ஒன்றொன்றாகத் தேடி எடுத்துப் பேசுபவன் போல மெதுவாகப் பேசினான். ஷீலாவின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.

‘நான் குற்றவுணர்வுடன் ஹென்றி அடித்த அடிகளை ஏற்றுக்கொண்டேன். ஹென்றியின் நிலையில் நான் இருந்திருந்தால் நானும் அதைத்தான் செய்திருப்பேன் இல்லையா?’

வின்சென்ட் முகத்தில் ஒரு இளகல் ஏற்பட்டது. ஷீலாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டான். அவளைத் தோளோடு அணைத்துக்கொண்டான்.

‘ஷீலா செல்லமே! ஆமாம் நானும் அதையேதான் செய்திருப்பேன்!’ என்று முனகினான்.

ஷீலா முதன்முதலாகப் பேசினாள். அவளுடைய குரல் ஒரு பூனையின் மேனியைப் போல மிருதுவாக இருந்தது.

‘ஒரு நாள் அதிகாலை. ஹென்றி என்னை சான் பிரான்ஸிஸ்கோவுக்குக் கூட்டிப் போனான். கோல்டன் கேட் பாலத்துக்கு. கீழே கடல் மேலே வானம்! பாலத்தின் இருமுனைகளும் கண்ணுக்கே தென்படவில்லை. அவ்வளவு மூடுபனி அங்கே. அந்தரத்தில் நிற்பதுபோல இருந்தது. பாலத்தின் விளிம்பைப் பற்றிக்கொண்டு அவனும் நானும் நின்றோம். அப்போது மிகப் பெரிய இன்மையின் விளிம்பில் இருவரும் நிற்பதாய்த் தோன்றியது’

வின்சென்ட் அவள் சொன்னதில் லயித்துப்போனவன்போல் இருந்தான். ஜன்னலுக்கு வெளியே பனி சிதறிக்கொண்டிருந்தது. மேலிருந்து கீழே விழுவது போலவே இல்லை. ஒவ்வொரு துளியும் அந்தரத்தில் தொங்குவதுபோல இருந்தது.

“வெளியே பனி பெய்கிறதல்லவா?” என்று கேட்டாள். வின்சென்ட் தலையாட்டினான். பிறகு அவசரமாக ஆமாம் என்றான்.

பார்வையை அகற்றாமல் வார்த்தைகளை அளந்து பேசுபவள் போல ஷீலா மெல்லப் பேசினாள்:

‘எத்தனையோ பேர் அந்தப் பாலத்தில் இருந்து கடலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் அவர்களைப் பற்றிய ஞாபகம் எனக்கு எழுந்தது. பாலத்துக்குக் கீழே மிதக்கும் மூடுபனியில் விழுபவர்கள் எப்படி இறந்துபோக முடியும்? அந்தப் பாலமே அடிகால் அற்று அந்தரத்தில் எப்போதும் மிதந்துகொண்டுதானே இருக்கிறது!’

வின்சென்ட் அசைவற்று அவளையே சற்றுப் பார்த்தான். பிறகு வைன் பாட்டிலின் வாயில் அடைத்திருந்த தக்கை மூடியைப் பிடுங்கி எடுத்தான். டப்பென்னும் சிறு சத்தத்துடன் அது வெளியே வந்தது.

எழுந்து போய் மூடியை உணவு மேசைமீது போட்டான். அது அரை வட்டமாய் உருண்டு பின் படுத்தது.

குளியலறையிலிருந்து நீர் சீராக விழுந்த சத்தம் கேட்டது.

o

ஹென்றிக்கு யாரோ அறைக்குள் வந்ததைப்போலத் தோன்றியது. ஹென்றியின் மனம் இருளின் அடுக்குகளுக்குள் சரிந்து பின்பு விழித்தது. அங்கே எந்த ஓசையும் இல்லை.

ஆனால் அவன் பக்கத்தில் படுக்கையில் வந்து கிடக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டான். உள்ளுணர்வு காற்றில் அலையும் பனித்துளியைப் போலச் சிதறிக்கொண்டிருந்தது.

ஒரு கணம் முற்றிலும் இருளாகவும் அடுத்த கணமே தகிக்கும் ஒளியாக பிரக்ஞையை மேல்நிறுத்தியது. கண்கள் திறந்துகொள்ள மறுத்தன.

பத்து வருடங்களில் அவன் உடலை ஒட்டிக்கொண்டு யாரும் படுத்ததில்லை. குறிப்பாக ஷீலா.

கடைசியாக ஷீலா அவன் அருகே படுத்திருந்தபோது இருவரும் இருளையே வெறித்துப் பார்த்தபடி படுத்திருந்தார்கள். சற்று நேரத்தில் ஹென்றி படுக்கையை விட்டு வெளியேறி முன் அறைக்குச் சென்று சோஃபாவில் படுத்திருந்தான். வீட்டுக்குள் இருட்டு முனகிக்கொண்டிருந்தது. அதற்கு அடுத்த நாள் முகச்சவரம்கூடச் செய்யப் பிடிக்காமல் பல்கலைக்குப் போனான். வின்சென்ட் அட்டைப் பெட்டியில் அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்களைத் தூக்கி கார் ட்ரங்க்குக்குள் அடைப்பதும் மீண்டும் தன் அறைக்குச் சென்று அடுத்த பெட்டியை எடுப்பதுமாக இருந்தான்.

வின்சென்ட் வேலையை ராஜினாமா செய்திருந்தான். அவனுக்கு வேறொரு மாநிலப் பல்கலையில் வேலை கிடைத்துவிட்டிருந்தது. வின்சென்டின் மாணவன் ஒருவனும் புத்தகங்களையும் சாமான்களையும் எடுத்து வந்து உதவிக்கொண்டிருந்தான். ஹென்றி தன்னுடைய அறையிலிருந்து திடீரென்று வெளியே போனான். எதிரே வந்த வின்சென்ட் முகத்தைத் தாழ்த்திக்கொண்டான். அப்போது அந்த வளாகத்தில் மணிக்கூண்டு ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது. சிகரெட் புகை போல மேலே பரவியிருந்த குளிர் காலத்து வானத்தின் கீழே இறுக்கமாய் அணிந்திருந்த கோட்டுப் பாக்கெட்டில் கைகளை விட்டபடி நின்றான் ஹென்றி.

வின்சென்ட் இவனைப் பார்த்துச் சற்றுத் தயங்கினாற்போலவே இருந்தது. இவனை எதிர்கொள்ளும் அவஸ்தை வின்சென்ட்டின் முகத்தில் நிழலாடியது. அவன் கால்கள் பின்னிக்கொள்வதுபோல் ஹென்றிக்குத் தோன்றியது.

வின்சென்ட் இவனை மௌனமாகக் கடந்து இயற்பியல் துறை வாயிலுக்குள் நுழைந்தபோது இவன் பின்னாலேயே போய் அவன் சட்டையைப் பிடித்து இழுத்தான். எப்போதும் போலவே வின்சென்ட் இவனைவிட நேர்த்தியான ஆடைகளை அணிந்திருந்தான். லேசான ஆனால் படோபடம் இல்லாத நறுமணம் அவனிடமிருந்து வெளிப்பட்டது. வின்சென்ட் முகத்தில் மன்னிப்புக் கோரும் பாவம் தோய்ந்தது. “இதோ பாரு ஹென்றி . . .” என்று சொல்ல ஆரம்பித்தவனை ஹென்றி ஓங்கி அறைந்தான். சட்டைக் காலரைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளினான். ஹென்றி அடிகளைத் தடுக்க இருகைகளாலும் முகத்தை மூடிக்கொண்டான்.

கட்டடத்தின் உள்ளேயிருந்து வின்சென்ட்டின் மாணவன் ஹென்றியையே பார்த்துக்கொண்டிருந்தான். மறுநாள் கிறிஸ்துமஸ். விடுமுறையில் பல்கலையே காலியாகக் கிடந்தது.

ஹென்றியின் முகத்தருகே மிகவும் பழக்கமான அவளுடைய வாசனை வந்தது. அவள் வழக்கமாகப் போட்டுக்கொள்ளும் ஷாம்பூவின் வாசனை தான். அவன்கூட முன்னிரவு குளிக்கும்போது அதே ஷாம்புவைக் குளியலறையில் பார்த்தான். அதில் ஒரு சுருண்ட தலைமூடி ஈரத்துடன் இருந்தது. நடுங்கும் கையுடன் அதைத் தொட்டான்.

அவளிடம் கேட்கவென அவனுக்குக் கேள்விகள் இருந்திருக்கின்றன. இந்தக் கண்கள் திறக்க மறுக்கின்றன. என்ன பிடிவாதம் அவற்றிற்கு! இருளுக்குப் பழக்கப்பட்டவை தானே அவை!

படுப்பதற்கு முன்னால் அவன் நின்று பார்த்த ஜன்னல் வழி வெளியே தெரிந்த கொலரோடோ வானம் உறைபனியை எங்கும் உதிர்த்துக்கொண்டிருந்தது. கண்ணுக்குத் தெரியாத ஒரு பாதையை வகுத்து மெல்ல இறங்கும் பனித்துளி தூறல் கணங்களின் வேகத்தைக் குறைத்துக் காலத்தை ஒரு புள்ளியில் நிறுத்தப் பார்க்கிறது என்று இப்போது தோன்றியது.

அவனுடைய காலமும் ஒரு புள்ளியில்தான் நின்றுபோய்விட்டது. அவனுடைய உணர்வுகள் அந்த கிறிஸ்துமஸ் முன்னிரவில் வின்சென்டை குளிர்ந்த கையால் தாக்கிய இரவோடு உறைந்துபோய்விட்டன.

o

‘ஷீலா, நான்கூடத் தற்கொலைக்கு முயன்றிருப்பேன், நீ ஹென்றியை விட்டு விலகி வராமல் இருந்திருந்தால் . . .’

வின்சென்ட் குரலில் கடினத் தன்மை ஏறி இருந்தது. தொண்டையை செருமிக்கொண்டான்.

ஷீலா முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

‘ஹென்றியைக் கேட்கவே எனக்கு மனம் வரவில்லை தெரியுமா ஷீலா. முள்ளாய் உள்ளே குத்துகிறது. பெர்க்கிலிப் பல்கலை முழுக்க அடுத்த நோபெல் அவனுக்குத்தான் என்ற பேச்சு இருந்தது. எப்பேர்ப்பட்ட ஆளாய் இருக்க வேண்டியவன்!’

மேசை மேலிருந்த இரண்டு கண்ணாடிக் கோப்பைகளிலும் வைனை ஊற்றினான். ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டு அதற்குள்ளே எதையோ தேடுவதுபோலப் பார்த்துவிட்டுப் பேசினான்:

‘இங்கே வரும் வழியில் அவனே சொன்னான். வருஷக்கணக்காய் இலக்கற்று திரிந்துகொண்டிருந்ததாய். மாநிலம் மாநிலமாக அலைந்து கடைசியில் யூட்டாவில் ஸால்ட் லேக் ஸிட்டிக்கு வந்து சேர்ந்திருக்கிறான். அங்கிருந்து டென்வர் வரும் ஒரு ட்ரக்காரன்தான் இவனைக் கூட்டிக்கொண்டு வந்தானாம். டென்வர் ஐ-25 நெடுஞ்சாலையில் ட்ரை க்ரீக் திருப்பத்தில் கடும் பனியில் இறங்கியிருக்கிறான். கந்தல் கிழிசல்களையும் ப்ளாஸ்டிக்கையும் சுற்றிக்கொண்டு நின்றுகொண்டிருந்தான். நான் தற்செயலாக அங்கே போனதால் அவனைக் கூட்டிவர முடிந்தது’.

கோப்பையை உயர்த்தி மூன்று முழுங்கு குடித்தான் வின்சென்ட். நாக்கால் உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டான்.

ஹென்றி குளித்துக்கொண்டிருந்த சத்தம் வந்த திசையை வின்சென்ட் உற்றுப் பார்த்தான். அவன் உதடுகளில் சிறிய முறுவல் நெளிந்தது.

‘அவன் உள்ளே வந்தபோது நீயும் கவனித்திருப்பாய். அவன் உடலிலிருந்து வீசும் நாற்றத்தைத் தாங்கவே முடியவில்லை! அதுவும் பனிபெய்யும் இந்த இரவில் கார் கண்ணாடியைக்கூட இறக்கிவிட முடியவில்லை.’

கண்ணை மூடிக்கொண்டு தோளைக் குலுக்கியவன் தொடர்ந்தான்:

‘ஆனால் அவனை நம் வீட்டுக்கு அழைத்துவர ஒரு கணம்கூட நான் தயங்கவில்லை. எந்த யோசனையும் இன்றிதான் அவனைப் பார்த்து ஹென்றி ஹென்றி என்று பித்து பிடித்தாற்போல் கூப்பிட்டேன். காருக்குள் ஏற அவன் தயங்கித் தயங்கி நின்றான். எல்லாவற்றையும் மறந்தவன் போல. வின்சென்ட் . . . ஷீலா வின்சென்ட் ஷீலா . . . என்று மாற்றி மாற்றிக் கத்தினேன். உன் பெயரை அவனால் மறந்திருக்க முடியுமா? அந்த அடையாளத்தின் மூலமாக என்னை அவன் ஞாபகப்படுத்திக்கொள்ள முடியுமல்லவா?’

வின்சென்ட் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான். மேசையின் மேல் ஒரு கையை ஊன்றிக்கொண்டு கோப்பையை உயர்த்திக் குடித்தான். நின்றிருந்த மற்றக் கோப்பையில் வைன் மெல்ல அதிர்ந்தது.

o

அவளுடைய நெருக்கம்! ஹென்றிக்கு மூச்சு நின்றுவிடும் போலிருந்தது. அவன் உணரும் ஒவ்வொரு அசைவும் அதிர்வுகளை உருவாக்கியது.

காலத்தின் முத்திரை அவர்கள் எல்லோர்மீதும்தான் விழுந்திருக்கிறது. ஹென்றியை விட்டுவிட்டு வின்சென்டுடன் அவள் விலகிப் போனபோது அவள் முப்பது வயதைத் தொட்டிருந்தாள். அவர்கள் எல்லோருமே மெல்ல விலகும் இளமையின் காலடிச் சத்தங்களைக் கேட்கத் தொடங்கியிருந்தார்கள். காலம் ஒவ்வொருவருடன் ஒவ்வொரு பாதையை மேற்கொள்ளுகிறது. ஒரு தருணத்தில் ஹென்றி, ஷீலா, வின்செண்ட் மூவரின் பாதையையும் காலம் ஒரு புள்ளியில் இணைத்து நகர்ந்திருக்கிறது.

இவனுக்கு டென்வர் வருவதற்கான எந்தக் காரணமும் இருக்கவில்லை. நெடுஞ்சாலையில் இவன் உயர்த்தும் கட்டைவிரல் கோரிக் கையை ஏற்று நிற்கும் வண்டி எந்த ஊருக்குப் போகிறதோ அதுதான் இவனுடைய அடுத்த ஊர். இப்படித் தானே வருஷக் கணக்காய் அமெரிக்கா முழுவதும் அலைந்திருக்கிறான். இருளைச் சகிக்க முடியாததாகவும் மூர்க்கத்துடன் அதைக் கரைத்துவிடுவதாகவும் உறைபனி காற்றின் துணை கொண்டு நேற்றிரவு நகரத்தைத் தாக்கியது. பனித்துளிகள் சுழன்று இருட்சுவர்களைப் பிளந்துகொண்டிருந்தபோது ஒரு தரிசனம்போல் காரிலிருந்து வீசிய ஒளிக்கற்றைகளுக்கு இடையில் இவன் முன்னால் வின்சென்ட் தோன்றினான்.

சாலையில் கார்கள் போகும் இடம் மட்டும் கருமையாக மின்னியது. அதுவும் சில கணங்கள்தான். உடனே தரையில் விழுந்து பனி கருமையை மூட முனைந்தது. சாலைச் சந்திப்பில் போக்குவரத்து விளக்குச் சிகப்பிலிருந்து பச்சைக்காக மாற நின்ற ஒரே காரில் இருந்துதான் வின்சென்ட் இவனைப் பார்த்தான். ஹென்றி சாலையைக் கடக்க நடுவில் நடந்தபோது வின்சென்ட் காரின் கண்ணாடியை இறக்கி ‘என்ன . . . ஹென்றியா?’ என்றான்.

வின்சென்ட் அடையாளம் கண்டுகொண்டது ஆச்சர்யம்தான். அழுக்குக் கந்தல் உடை, பரட்டைத் தலை, பல நாள் தாடி, சதா அலைச்சலில் கடினப்பட்டுவிட்ட முகம் இவற்றையெல்லாம் மீறி வின்சென்டால் ஹென்றியை அடையாளம் கண்டுகொள்ள முடிந்திருக்கிறது. இவன் தான் திகைத்துப்போய்ச் செய்வதறியாது நின்றான். வின்சென்ட் கார்க் கதவைத் திறந்து ‘உள்ளே வா’ என அழைத்தான்.

வின்சென்ட் தன்னை என்னவென நினைக்கிறான் என்று ஹென்றியால் நிதானிக்க முடியவில்லை. அமெரிக்க நகரங்களில் இவனைப் போல ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் அலைந்துகொண்டிருக்கிறார்கள். ‘கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்’ என்று எழுதிய அட்டையைக் கையில் ஏந்திக்கொண்டு சாலை முனைகளில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்களில் இவனும் ஒருவன் என்று நினைத்திருப்பான். அந்த நிலைக்கு எப்படி வந்திருக்கக்கூடும் என்பது குறித்து அவன் மூளை அதிவேகத்தில் யோசித்திருக்கக்கூடும். எந்தச் சூழ்நிலை ஹென்றியை பெர்க்கிலிப் பல்கலையின் விரிவுரையாளர் பணியிலிருந்து டென்வரின் நட்டநடுச் சாலைக்குத் தள்ளியிருக்கக்கூடும் என்று வின்சென்டின் மனம் அலை பாய்ந்திருக்கும். ‘ஹென்றி நீயா?’ என்று தன்னுணர்வற்று அழைத்து விட்ட பிறகு வின்சென்ட்டுக்குப் பத்து வருடங்களுக்கு முந்தைய கிருஸ்துமஸ் முன்னிரவு நினைவுக்கு வந்து அவனைத் தடுமாறச் செய்திருக்குமோ? அழைத்துவிட்ட பிறகு என்ன செய்வது என்று தயங்கியிருப்பானோ? ஆனால் வின்சென்ட் ஹென்றியின் நிலையைப் பார்த்து தலையில் கைவைத்துக்கொண்டான். வின்சென்ட் முகத்தில்தான் எத்தனை வருத்தம்! அவன் கையைப் பிடித்துக் கொண்டபோது ஹென்றிக்குத் தன் தோற்றம் பற்றின தன்னுணர்வு முதல்முறையாக ஏற்பட்டது.

இவன் ஒருக்களித்துப் படுத்தால் அவளுடைய முகத்தைத் தெளிவாகப் பார்க்க முடியும். அப்போது அருகில் இருப்பது அவள்தான் என்ற நிச்சயம் ஏற்பட்டுவிடும். அதற்குப் பிறகு . . . அவள் சொல்லக்கூடிய வார்த்தைகள் என்னவாக இருக்கும்? இவனும் அவளும் வேறொரு உலகத்துக்குள் நுழையும் சாத்தியம் ஏற்படுமென்றால் அங்கே வின்சென்டின் இடம் என்னவாக இருக்கும்!

ஆனால் இவன் திரும்பாமல் அப்படியே கிடந்தான். எந்த அசைவும் சாத்தியமில்லாது. இந்தப் பொழுதின் மீது இறங்கும் பனித்துளிகள் இரும்புகுண்டுகளாய்க் கனம் கூடுகிறது. உலோகத்தின் வாசனை அறையெங்கும் மிதக்கிறது.

o

‘வின்சென்ட்’ என்று அழைத்தாள் ஷீலா. அவள் முகம் எங்கேயோ திரும்பித்தான் இருந்தது.

‘என்ன செல்லமே!’

‘உன்னைச் சந்தித்திருக்காவிட்டால் கூட நான் ஹென்றியை விட்டு விலகியிருப்பேன். அது நிச்சயம்தான். ஒரு விதத்தில் உன்னைச் சந்தித்தது எளிதாகப் போனது. என் விலகலைத் துரிதப்படுத்தியது.’

பார்வையை அவன் பக்கம் மாற்றிக்கொள்ளாமலே அவள் சொன்னாள்.

ஹென்றி ஷீலா பார்க்கும் திசையைப் பார்த்தான். ஜன்னலுக்கு அப்பால் பனித்துளிகள் இருளைத் திறக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தன.

வின்சென்ட் கோப்பையை ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு மாற்றிக்கொண்டு கையை ஜீன்ஸில் தேய்த்துக்கொண்டான்.

‘ஷீலா, பெர்க்கிலி இயற்பியல் துறையில் நான் புது விரிவுரையாளனாகச் சேர்ந்து ஓரிரு நாட்கள்கூட ஆகியிருக்கவில்லை. ஹென்றி என்னிடம் அப்படி அன்னியோன்னியமாக பழகத் தொடங்கிவிட்டான். எந்தக் காரணத்தாலோ அவன் என்னைச் சந்தித்த முதல் நாளிலிருந்தே காலகாலமாகப் பழகியவன்போல் இயல்பாக இருந்தான். நான்தான் தள்ளித் தள்ளி நின்றிருந்தேன். மிகவும் வற்புறுத்திய பிறகுதான் உங்கள் வீட்டுக்கு இரவு விருந்துக்கு வந்தேன்.’

வின்சென்ட்டின் பார்வை இப் போது ஷீலாவின் தலைக்கு மேல் இருந்தது.

‘உன்னை முதன் முதலாகப் பார்த்த போது . . . அப்பா! உன் கண்களில் மின்னிய ஓளி . . . அந்தச் சிரிப்பு! என்னால் தாங்கவே முடியவில்லை. எப்போதும் உன் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்ற பேராசை எழுந்தது. அப்பேர்ப்பட்ட ஈர்ப்பை நான் என்றுமே உணர்ந்ததில்லை. என் உலகமே தலைகீழாக மாறிவிட்டது. உன்னைத் தவிர எல்லாமே, ஹென்றி, என்னுடைய வேலை, கல்லூரி எல்லாமே பின்தள்ளிப் போய்விட்டன. நீ மட்டுமே என் ப்ரக்ஞையின் மத்தியில் அசைக்க முடியாமல் இருந்தாய். எந்தக் கணமும் என் உள்ளுணர்வு உன்னை நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தது. எதைச் செய்யவும் தயாராய் இருந்தேன்.’

‘உன்னுடைய ஞாபகம் எவ்வளவு தெளிவாக இருக்கிறது!’

ஷீலா மென்மையான குரலில் சொன்னாள். இயல்பான மென்மையாய் இல்லாமல் வலிந்து ஏற்படுத்திக்கொண்ட தொனி இருந்தது. தலையைப் பின்பக்கமாகச் சாய்த்துக் கோப்பையை உயர்த்திய கையுடன் உறைந்து நின்றான் வின்சென்ட். அதே நிலையில் இருந்து கண்களை மட்டும் சாய்த்து அவளைப் பார்த்தான்.

பிறகு உயர்த்திய கோப்பையில் இருந்து நீண்ட உறிஞ்சும் சத்தத்துடன் குடித்தான் வின்சென்ட்.

o

வின்சென்ட் ஷீலாவுக்கு நேர்ந்திருந்த விபத்தைப் பற்றி ஹென்றியிடம் வழியிலேயே சொல்லிவிட்டான். அதைச் சொன்ன விதம் வின்சென்ட் ஏற்கெனவே பலமுறை ஒத்திகைப் பார்த்த ஒன்றை அரங்கேற்றிக் காட்டுவதுபோல ஹென்றிக்குத் தோன்றியது. முகத்தில் அசாதாரண அமைதியுடன்தான் சொன்னான். ஆனால் அதேசமயத்தில் ஹென்றியால் அந்த அமைதிக்குப் பின்னால் இருக்கும் படபடப்பை உணர முடிந்தது.

கிறிஸ்துமஸ் விருந்துக்கு ராக்கி மலைத்தொடரின் இடுக்கில் வசிக்கும் வின்சென்ட்டின் பெற்றோர் வீட்டுக்குப் போனபோதுதான் அந்த விபத்து ஏற்பட்டுவிட்டது. அதற்கு முந்தைய நாள் வின்சென்ட் சரியாகத் தூங்கியிருக்கவில்லை. அதற்கான காரணத்தைப் பிறகு சொன்னான். வண்டியை ஓட்டிக்கொண்டு போகும்போது ஒரு கவனக்குறைவில் சற்று கண்ணயர்ந்துவிட்டான். பிறகு வின்சென்ட் மருத்துவமனையில்தான் விழித்தெழுந்தான். முன்னால் போய்க்கொண்டிருந்த ஒரு நீண்ட ட்ரக் சட்டென ப்ரேக் அடித்து வேகம் குறைத் திருந்ததை அவன் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது விபத்தில் முடிந்து விட்டது. வின்சென்ட் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஷீலாவுக்கு ஒரு கண் போய்விட்டது. முதுகிலும் நல்ல அடி. வின்சென்ட்டுக்கு உடலில் ஒரு காயமும் இல்லை. மருத்துவர்கள் அவனை அதிசயமாகப் பார்த்தார்கள். அதைவிட வின்சென்ட்டுக்கு விபத்து நடந்ததின் ஞாபகம் துளிகூட இல்லை. அவனுக்கு வீட்டைவிட்டுக் கிளம்பியதுதான் ஞாபகம் இருக்கிறது. காரை ஓட்டியபோது கண்ணயர்ந்து விட்டான் என்பதை ஷீலாதான் பின்னால் சொல்லியிருக்கிறாள். இதைச் சொல்லும்போது வின்சென்ட் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

பிறகு சொன்னான். முதலில் அந்தக் குற்றச்சாட்டை நம்ப மறுத்ததாகவும் ஆனால் ஷீலாவைப் பார்த்த ஒவ்வொரு கணமும் அந்தக் குற்றச்சாட்டு மீண்டும் மீண்டும் எழுந்து முகத்தில் அறைந்ததாகவும். ஆனால் தனக்குள் அது மாதிரி நடந்திருப்பதற்கான சாத்தியம் அதிகம் என்று அறிந்தபடியேதான் அதை வின்சென்ட் மறுத்துவந்திருக்கிறான். கிறிஸ்துமஸ் முதல் நாள் இரவை அவன் தூங்க முடியாதுதான் கழிக்கிறான். பெர்க்கிலியிலிருந்து கொலராடோ வந்ததிலிருந்து. இதைச் சொல்லும்போது வின்சென்ட்டின் குரலில் எந்த உணர்ச்சியும் இருக்கவில்லை.

ஹென்றியின் கன்னத்தில் மெல்லிய ஸ்பரிஸம் ஏற்பட்டது. அவள்தான் வருடிக்கொடுக்கிறாள். அவளுடைய சூடான மூச்சு இவனுடைய கழுத்தில் விழுகிறது. எல்லாமே இயல்பாகவே இருக்கின்றன.

வின்சென்ட் ஹென்றியை வீட்டுக்குக் கூட்டிவந்தபோது அவள் தன் அறைக்குள்தான் இருந்தாள். அவள் அதிகம் வெளியில் வருவதில்லை என்று வின்செண்ட் சொன்னான். அந்த விபத்து நடந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. முதுகெலும்பில் பட்ட அடியால் அவளால் சிரமத்துடன்தான் நடக்க முடிகிறது. ஒற்றைக் கண் பார்வையுடன்.

ஹென்றியின் விரல்களைச் சில்லென்ற ஸ்பரிசம் பற்றி இழுத்தது. மென்மையான ஒன்றில் அவன் விரல் நின்றது. அவளுடைய உதடு. அவன் கை மெல்ல வருடியது. கன்னம்! அவனுடைய கைவிரல் முள்ளைப் போல கீறுகிறது.

அவர்கள் இருவருக்குமிடையே ஒரு காலத்தில் காதல்போல ஒன்று இருந்திருக்கிறது. இருந்திருக்க வேண்டும். அதனால்தானே அவள் பிரிந்தவுடன் இவனுடைய பாதையே மாறிப்போனது. அந்தக் காதலின் விவரங்கள், தருணங்களின் துல்லியம் எதுவும் இவனுக்கு இப்போது தெளிவாக இல்லை. மூடுபனிக்குள் மங்கலாக எதுவோ இருக்கிறது. அது காதலா வருத்தமா இழப்பா எதையுமே அவனால் சொல்ல முடியவில்லை. அந்த மூடுபனி . . . பசிபிக் விரிகுடாவிலிருந்து எழுந்து சான் பிரான்ஸிஸ்கோவின் பிரும்மாண்டமான கோல்டன் கேட் பாலத்தைத்தையும் ஏன் வடக்குக் கலிபோர்னியா பிராந்தியத்தையும் ஸியர்ரா மலைகளையும் இருப்பிடம் தெரியாமல் கரைத்து அலையும் மூடுபனிதான் அவனையும் இழுத்துக்கொண்டது.

o

‘எல்லாமே விபத்துதானே ஷீலா? நான் உன்னைச் சந்தித்தது. கண்மூடித்தனமாய் உன்மேல் ஆசைப்பட்டது. அவனைப் பிரிந்து நீ என்னுடன் டென்வருக்கு வந்தது. உன் பிரிவைத் தாங்க முடியாமல் ஹென்றி ஊர் ஊராய் நாதியற்று அலைந்துகொண்டிருப்பது . . .’

அவள் பக்கத்தில் உட்கார்ந்தவனுக்கு மூச்சு வாங்கியது. கையை அவள் தோள்மேல் வைத்து தன் பக்கம் இழுத்துக்கொண்டான். அவன் மேல் சாய்ந்தவளின் உடல் விரைப்புற்றே இருந்தது. அவன் கண்கள் பனி சிதறும் வானத்தை நோக்கித் திரும்பின. அவனுக்குள் எப்போதும் ஓடும் பிரார்த்தனை மீண்டும் எழுந்தது. சத்தமில்லாத வார்த்தைகளை அவன் உதடுகள் முணுமுணுத்தன:

‘கர்த்தரே . . . உங்களை தேடிக்கொண்டிருக்கும் ஆத்மாக்கள் நாங்கள்.

‘உங்கள் கருணை எங்கள் மண்ணில் இன்றைய இரவும் கோடிக்கணக்கான பனித்துளிகளாய் விழுந்துகொண்டிருக்கிறது. அதில் ஒரு துளியையேனும் என்னிடத்தில் காட்டும். நாங்கள் அந்த கிறிஸ்துமஸ் முன்னிரவு டென்வர் நெடுஞ்சாலையில் பயணித்தபோது உங்களின் கண் இரப்பைகள் போன்ற மென் பனித் துளிகள் எல்லாவிடத்தின் மேலும் விழுந்துகொண்டிருந்தன! அந்த ஞாபகம்தான் எத்தனைத் துல்லியமாய் இருக்கிறது. உங்களின் இதயத்தைப் போன்ற வெண்மைக்குள் பொதிந்திருக்கிறது அந்தத் தருணத்தின் ஞாபகம் . . .’

o

ஹென்றியின் விரல் தானாக நகர்ந்தது. மெல்ல மேலேறிப் புருவத்தை வருடிக்கொடுத்துக் கண்ணைத் தொடும்போது அந்தப் பள்ளத்தில் விரல் சட்டென சரிவதுபோலிருந்தது அங்கேயே நின்றது. ஹென்றி அப்படியே கிடந்தான். எல்லா அசைவும் இயக்கமும் நின்றுபோயிருந்தது. இவன் அவள் பக்கம் திரும்பவேயில்லை.

ஹென்றி விழித்தபோது அறையின் கூரையிலிருந்து கீழிறங்கிய பிரும்மாண்டமான கண்ணாடிச் சன்னல் வழி அடர்ந்த உறைபனி சரசரவென விழுந்துகொண்டேயிந்ததைப் பார்த்தான்.

o

ஷீலா வின்சென்ட்டின் மணிக்கட்டை அழுத்திப் பிடித்தாள்.

‘வின்சென்ட் . . . அன்று ஹென்றியுடன் பாலத்தில் நின்றேனே.. அதைப் போலவே . . . ’

அவளுடைய குரல் தேய்ந்தது. வின்சென்ட் மண்டியிட்டவாறே அவளுடைய முழங்கையைத் தடவி விட்டான்.

‘என்ன?’

‘ஆமாம், வின்சென்ட்! இந்த ஒரு கணத்திலிருந்து எல்லாமே மாறிவிடப் போகிறது. இத்தனை காலம் கழித்து எதற்காக ஹென்றியை நீ திடீரென்று சந்திக்க வேண்டும் . . . எதற்காக நான் உன்னைத் திடீரென்று ஒரு நாள் சந்தித்தேன். . . எல்லாரும் . . . எல்லாமும் மாறி . . .’

ஷீலாவின் குரல் பதறியது.

‘ஷீலா . . . !’

‘வின்சென்ட் . . . நான் ஹென்றியுடன் சந்தோஷமாக இருப்பதாகவே நினைத்திருந்தேன். ஆனால் உன்னைச் சந்தித்த பிறகு எனக்குள் எதுவோ ஒன்று மாறிப்போனது. ஒரு நெருடல், இடறல் ஏற்பட்டுவிட்டது. இப்போது அந்த வாழ்க்கையின் ஞாபகம்கூடத் தெளிவாக இல்லை. கசப்பாய்க் குற்றவுணர்ச்சி மட்டுமே மிஞ்சியிருக்கிறது. உன்னைச் சந்திக்காமல் இருந்திருந்தால் . . . ஆமாம் . . . அப்படித்தான் இருக்க வேண்டும்!”

ஷீலாவின் முகம் பாறைபோல இறுகியிருந்தது. அவளுடைய முகம் ஒரு நுட்பமான ஆனால் திருத்தமான அசைவுடன் அவன் பக்கத்திலிருந்து இருள் நிரம்பிய ஜன்னல் பக்கம் திரும்பியது.

மண்டியிட்டு அமர்ந்தவிதமாகவே சற்று முன்னகர்ந்து வின்சென்ட் அவளை அணைத்துக்கொண்டான். அவள் நெஞ்சத்தின் படபடப்பு அவன் நெற்றிப் பொட்டில் அறைந்தது.

அவள் முகத்தை நிமிர்த்திக் கன்னத்தைச் சில்லிட்ட விரல்களால் பற்றினான்.

‘ஷீலா . . . ஒன்று சொல்லட்டுமா? நான் ஏன் ஹென்றியை பார்த்ததும் துடித்துப் போய் அழைத்து வந்தேன் தெரியுமா . . . அது இத்தனை நேரம் என் உள்ளுணர்வில் வார்த்தைகள் இல்லாமல் இருந்தது. அவன் என்னுள்ளில் கிளறிவிட்டது ஏக்கத்தைத்தான். எந்த விதத்திலோ எந்தக் காலத்திலோ எந்த விபத்திலோ நான் இழந்துவிட்ட உன்னை . . . முதன் முதலில் ஹென்றியுடன் பார்த்திருந்த அந்த ஷீலாவை மீட்கத்தான் அவனை இங்கே . . .’

“எதையுமே நிச்சயமாகச் சொல்லுவதற்கில்லை ஹென்றி” என்று மெல்ல உச்சரித்தாள் ஷீலா. வின்சென்ட் அதைக் கவனிக்கவில்லை.

o

வின்சென்ட் அறையோரத்தில் இருந்த ஸிடி ப்ளேயரில் இசைத்தட்டைப் பொருத்தி இயக்கினான். வால்ட்ஸ் இசை அறையெங்கும் பெருகியது. ஷீலாவின் கக்கத்தில் கையைக் கொடுத்து நிமிர்த்தினான். கோப்பையில் வைனை எடுத்துவந்து ஷீலாவின் கையைப் பற்றி வைத்தான். அவள் மெல்ல அருந்தினாள். வின்சென்ட் அவள் கண்களையே உற்றுப்பார்த்தான். அவளை மெல்ல இருக்கையிலிருந்து கைத்தாங்கலாய் எழுப்பினான். இன்னொரு கையை அவள் பின்னால் கொண்டுபோய் அடிமுதுகைப் பற்றிக்கொண்டான். ஒவ்வொரு அடியாக அவளை நகர்த்தி அறைக்கு நடுவில் அவளைக் கொண்டுவந்தான்.

ஹென்றி குளியலறையிலிருந்து வெளிவந்தபோது ஹாலில் தணிந்த வெளிச்சத்தில் வின்சென்டும் ஷீலாவும் அணைத்தபடி மெதுவாக நடனமாடிக்கொண்டிருந்தார்கள்.

ஹென்றி வந்ததை வின்சென்ட் கவனித்திருக்கவில்லை. அவனுடைய முதுகு ஹென்றியின் பக்கம் திரும்பி இருந்தது.

ஷீலா ஹென்றியைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள். ஒரு கணத்தில் அவளுடைய கரம் ஹென்றியின் திசை நோக்கி நீண்டிருந்தது.

வெளியில் பெய்யும் பனி கண்ணாடி ஜன்னலைத் தாண்டி அறைக்குள் வந்துவிட்டாற்போலஅவள் உடல் மெல்ல நடுங்கியது.

o

ஹென்றி அதிகாலையில் எழுந்து பார்த்தான். படுக்கையிலும், அறையிலும் யாருமே இல்லை. இரவு அவள் வந்ததைக்கூட இப்போது அவனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் பள்ளத்தில் சரிந்த அவன் விரல்நுனி மட்டும் துடித்துக்கொண்டிருந்தது.

ஹென்றி சன்னல் அருகே போய்ப் பார்த்தான். பனிப் பொழிவு முற்றிலுமாக அடங்கியிருந்தது. இருண்டிருந்த மேகங்கள் எல்லாம் கலைந்து போயிருந்தன. மிக மங்கலான ஆனால் நிச்சயமான ஒளி சூழலில் ஊன்றியிருந்தது. தரையில் கொட்டிய பால்போல பூமிமீது எங்கும் பனி படர்ந்திருந்தது.

ஹென்றி அந்த இருட்டிலேயே கோட்டையும் காலணியையும் சத்தமின்றி அணிந்து வீட்டு வாசலுக்கு வந்தான். வீட்டுக்குள் எந்தச் சலனமும் இல்லை.

ஷீலாவைக் கேட்க நினைத்து மறந்துபோன கேள்வி அப்போது ஹென்றிக்கு ஞாபகம் வந்தது. சான் பிரான்ஸிஸ்கோவின் மூடுபனி உனக்கு ஞாபகம் இருக்கிறதா என்னும் கேள்விக்கு அவள் என்ன சொல்லியிருப்பாள்? கொலரடோ வானம் உதிர்த்துத் தரையில் உறைவதும் அதே மூடுபனிதான் என்றிருப்பாளா?

ஷீலா அவனை நோக்கிக் கரத்தை நீட்டினாள் நேற்றிரவு. அவளுடைய அசைவுகளில், நடனத்தில் இயல் பற்ற தன்மையும் தயக்கமும் இருந்தன. அவர்கள் மூவரும் அந்த வீட்டை நகர்த்திக்கொண்டு அந்த இரவுக்குள்ளே பனித்துனிகளைத் தொடர்ந்து எங்கேயோ இழுத்துக்கொண்டுபோவது போல இருந்தது அவர்களின் நடன அசைவு.

கண்ணுக்கு எட்டின தூரத்திலிருந்து வாசல்படிவரை உறைபனி ஏறியிருந்தது. எந்தத் தடங்களும் அற்று.

இருளுக்கும் ஒளிக்கும் இடையில் இருந்த வீட்டின் முன்னால் நின்று இரு கைகளை நீட்டினான் ஹென்றி.

அந்தப் பொழுதில் எல்லாம் அமைதியாகவும் அசைவற்றும் இருக்கும் நேரத்தில் ஒரு நடனம் சப்த மற்றும் லயம் பிசிறாமலும் நிகழ்ந்துகொண்டிருந்ததை உணர்ந்தான். எல்லோருமே . . . ஹென்றி, வின்சென்ட், ஷீலா, அவனை யூட்டாவிலிருந்து அழைத்து வந்த ட்ரக்காரன், பாலத்துக்கடியில் படுத்திருந்த வீடற்ற ஆசாமி, சான்பிரான்ஸிஸ்கோவில் ஷூக்களை மாலையாக அணிந்தவன் … இந்தப் பனி அடரும் பூமி விரிந்து பரந்து பனியற்று, பாலையாகவும் புல்வெளியாகவும் கல்லாகவும் மண்ணாகவும் காடாகவும் மலையாகவும் உயர்ந்து சரியும் மண்ணுடன் உறவுகொள்ளும் ஒவ்வொருவரும் ஒரே சமயத்தில் பார்வையாளராகவும் பங்கேற்பாளராகவும் சேர்ந்து நிகழ்த்தும் நடனம் அது.

அங்கே எழுந்த காற்று எதிர் மரத்தின் கிளைகளில் தேங்கியிருந்த பனிக் கட்டிகளை இழுத்துக் கீழே தள்ளியது. அவன் உள்ளங்கையில் கையில் ஒரு துளிப் பனி மிதந்து வந்து உட்கார்ந்தது.

ஹென்றியின் காலடிகள் பனியில் பள்ளங்களை உருவாக்கின. அன்று கிறிஸ்துமஸ் தினம் என்பது திரும்பிப் பார்க்காது வெகுதூரம் போன பிறகு அவனுக்கு நினைவு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *