தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 24, 2022
பார்வையிட்டோர்: 3,008 
 
 

உலகமே திடீரென்று வெறிச்சோடி போனது போல தோன்றியது சாரதாவுக்கு. தன் கணவர் நாகசாமி இல்லாத உலகில் இருப்பது பொறிக்குள் மாட்டிக் கொண்ட எலியின் நிலை மாதிரி இருந்தது அவளுக்கு.

ஆயிற்றே, பத்து வருஷங்கள்! உருண்டு ஓடிப் போயிற்றே, அவர் தெய்வமாகி! அப்போது மகன் சரவணன் இரண்டாவது வருஷம் மெக்கானிக்கல் இஞ்சினியரிங்க் படித்துக் கொண்டிருந்தான். மகள் சேவதி முதலாம் வருஷம் சிவில் படித்துக் கொண்டிருந்தாள். ரொம்ப சந்தோஷமான குடும்பம். யார் கண் பட்டது?

நல்ல ஓடி ஓடி உழைக்கும் நாகசாமிக்கு திடீரென்று உடம்புக்கு முடியாமல் போய்விட்டது. அலறியடித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்கள் எண்ணி இருபதே நாள் தான் போயாச்சு, இறைவனிடம். திருஷ்டிப் பட்டு விட்டது போல. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலிருந்தது சாரதாவுக்கு. சிறகொடிந்த பறவையைப் போலானாள்.

நாகசாமி இப்போது நம்மோடு இல்லை. அவர் நம்மிடம் திரும்பி வரமுடியாத படி வெளிநாட்டில் இருக்கிறார் என்று மனதை திடமாக்கிக் கொண்டாள்.

மாதா மாதம் பணம் (பென்ஷன்) அனுப்புகிறார் என்று மனதை தேற்றிக் கொண்டாள்.

பிள்ளைகளைப் பார்த்தாக வேண்டுமே. அவர் இல்லை என்று கவலைப் பட்டால் அவளுக்கும் உயிர் தரிக்காதே. அவ்வளவு அந்யோன்ய வாழ்க்கையாயிற்றே!

நிறைவாகும் வரை மறைவாக இரு, என்றிருந்தாள். வீடே கதியாயிற்று. தன் பிள்ளைகளே உலகமாய் வலம் வந்தாள் வேறு சிந்தனையே அவளுக்கு இல்லை.

சரவணன் படிப்பு முடிந்தது. நல்ல சம்பளத்துடன் வேலைக்கு வந்தான். மறுவருஷம் சேவதியும் படிப்பு முடிந்து நல்ல வேலையில் அமர்ந்தாள். சேவதிக்கு முதலில் திருப்தியாய் திருமணம் முடித்தாள் சாரதா. மறு வருஷம் உறவிலேயே நல்ல பெண்ணாகப் பார்த்து மகன் சரவணனுக்கும் திருமணம் செய்து, வீட்டிற்கு நல்ல நேரத்தில் மருமகளும் வந்தாயிற்று.

மகளுக்கு இரண்டு பிரசவம் பார்த்து பேரன் பேத்தியைக் கண்டு மகிழ்ந்தாயிற்று. மகனுக்கும் குழந்தைகள் பிறந்து பேத்தி, பேரனைக் கண்டு மனம் நிறைந்தாயிற்று. இதோடு நம் கடமை செவ்வனே முடிந்து விட்டது. இனிமேல் பிள்ளைகள் பாடு என நினைத்தாள்.

அதுவரை பிள்ளைகள் பிள்ளைகள் என்று அவர்களையே நன்றாக கவனித்தாள். நாகசாமி இல்லை என்ற குறை ஒன்றைத் தவிர வேறு குறை ஒன்றுமேயில்லை.ஓட்டம் ஓட்டம் ஒரே ஓட்டம் தான் வாழ்க்கையாயிற்று.

இப்போது ஒரு தேக்க நிலை, ஒரு நிறுத்தம் வந்தாயிற்று.

அம்மா வீட்டிலும் எல்லோரும் விரும்பும் நல்ல பெண்ணாக இருந்தாள், சாரதா.

புகுந்த வீட்டிலும் தன் கடமைகளை சரிவர செய்தாள். பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கும் அன்பு காட்டி, தன் கணவர் நாகசாமியின் அருமை, பெருமைகளைக் கூறி நல்ல தாயாய், நல்ல தோழமையுடையப் பாட்டியாய் இருக்கிறாள். இனி என்ன கடமை பாக்கியுள்ளது?

ஒரு வெறுமையாக இருந்தது.

நாகசாமி யோடு இருந்த பொழுது ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் தேவி உபாசனை செய்வாள் சாரதா. அம்மன் ஸ்லோகம் சொல்லும் போது “தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்” என்ற வாக்கியத்தின் பொருள் அப்போதெல்லாம் சாரதாவுக்கு சரியாகப் புரியவில்லை. அவளுக்குப் பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் ரொம்ப சந்தோஷமான, நல்ல மரியாதைப் பட்ட வாழ்வு தான். “அதென்ன தோற்றாலும்? நாம் எப்போதும் ஜெயித்துக் கொண்டு தானேயிருக்கிறோம்?” என்று எண்ணம் சாரதாவுக்கு. எனவே தோற்றாலும் என்ற பதம் அப்போதெல்லாம் பிடிக்கவே பிடிக்காது. பூஜை முடிந்து நாகசாமியின் கால்களில் விழுந்து வணங்கும் போது, அவர் தீர்க்க சுமங்கலி பவ என்று வாழ்த்தினாலும் பூஜையறையை விட்டு வெளியே வந்த பிறகு “என்னை முதலில் அனுப்பி விட்டு பிறகு நீ போம்மா. உன் பிள்ளைகளை நம்பி என்னை விட்டு விட்டு, சுயநலமாக நீ முதலில் போய்விடாதே அம்மா” என்பார்.

“தோற்றாலும்” என்ற பதத்திற்குள்ள பொருள் இப்போது நல்ல விளங்கியது. கணவரில்லாத வாழ்க்கை வாழ்வதால் சாரதா தான் தோற்றுப் போனவள். சிறிது கூட பிரிவு துன்பத்தை அனுபவிக்காமல் முதலில் சென்ற நாகசாமி தானே வாழ்க்கையில் சந்தேகமேயின்றி ஜெயித்தவர்?

வாழ்க்கையில் தோற்றாலும் தொடரந்து வாழத் தானே வேண்டும்? வாழ்க்கை என்பது காமாட்சி தேவியின் அருட் பெரும் கருணையல்லவா? கொடையல்லவா?

அப்போது தான் அவள் எப்போதோ படித்தது நினைவுக்கு வந்நதது.

பெண்ணிற்கு சிறந்த அணிகலன் அவளின் கணவனே ஆவான். சிறந்த அணிகலனாக விளங்கும் கணவனையிழந்த பெண்ணிற்கு மகன், பேரன் இருந்தால் அவளுக்கு அவளுடைய கணவனில்லாத குறை நிவர்த்தியாகின்றது என்று நமது சனாதன தர்மம் கூறுகின்றது.

நாகசாமி இப்போது இல்லையென்றாலும் அவரின் எச்சமாக மகன், பேரன்களை கடவுள் நமக்கு கொடுத்து ஆசீர்வதித்துள்ளார் அல்லவா? அதற்கு நாம் கடவுளுக்கு நன்றியுடையவளாக அவல்லவா இருக்க வேண்டும்? இப்போது மனம் சற்று சாரதாவுக்கு ஆறுதலானது.

தெளிந்த மனதுடன் பூஜையறைக்குள் சென்று விளக்கேற்றினாள், சாரதா. தொடுத்து வைத்திருந்த மல்லிகைச் சரத்தால் படத்தை அலங்கரித்தாள். பூஜையறையில் உள்ள கணவரின் படம் அவளைப் பர்த்து சிரிப்பது போலிருந்தது. சாரதா, “ஜெயித்தது நீங்கள் தான். நான்தான் தோற்றுப் போனவள்” என்றாள் கணவரின் படத்தைப் பார்த்து, கண்ணீருடன். அவள் உதடுகள் நடுங்கின. பார்வை சற்று மங்கலாயிற்று.

படத்தில் உள்ள நாகசாமி அவளைப்பார்த்துப் பேசுவது போல இருந்தது.

“நீ தோற்றுப் போனவள் இல்லை, சாரதா! நீ தான் ஜெயித்தவள். எனக்கு என்னோட ஐம்பது வயதையே தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஆனால் நீ இன்றுவரை வாழ்ந்து ஒற்றை மாடாக நம் குடும்ப பார வண்டியை சுமந்திருக்கிறாய். நம் வாரிசுகளைக் கண்ணிமை போலக் காப்பாற்றினாய். நம் சந்ததிகளைப் பெருக்கிப் பார்த்து விட்டாய். ஊருலகம் போற்ற நம் குலக் கொடியைத் தொடரச் செய்தாய். எனவே ஜெயித்தவள் நீ தான். ஒவ்வொரு விளையாட்டிலும் முதலில் வெளியறுபவர்கள் தான் தோற்றவர்கள். வாழ்க்கை எனும் விளையாட்டிலும் அவ்வாறே. கடைசி வரை நிலைத்திருப்பவர்களே ஜெயித்தவர்கள் ஆவார்கள்”. என்பது போல. சாரதா கணவர் படத்தையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். மனம் லேசாகியது போல உணர்ந்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டாள். புது தெம்பு வந்தது போலிருந்தது.

பின்னர் உலகத்தையாளும் காமாட்சி அன்னையை மனமுருக பிரார்த்தித்தாள்.

“தாயே! எங்கள் முன்னோர்கள் எல்லாம் தடையில்லாமல் மோட்ச லோகம் போகட்டும். அதற்கு கருணை செய் அம்மா. உன் பாதங்களே துணையம்மா. எங்கள் பின் வருபவர்களுக்கு எல்லாம் நிறைந்த ஆயுசு, ஆரோக்கியம், ஐஷ்வரிய அபிவிருத்தியுடன் நீண்ட காலம் சிறப்பாக வாழ அருள்புரி அம்மா. என்றும் உன் தயாளப் பார்வையால் எங்கள் குடும்பத்திற்கு அனுகிரகம் புரிவாய் தாயே”

சாரதா தன் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்து வைத்து படத்திலுள்ள தன் கணவர் நாக சாமியின் உதட்டில் வைத்தாள். பின் மிகுந்த காதலுடன் விரல்களைத் தன் உதட்டில் வைத்து மிக மென்மையாக முத்தமிட்டாள். மன உறுதியுடன் பூஜையறை விட்டு வெளியே வந்தாள். கிச்சனுக்குச் சென்றாள். கேசரியும், உருளைக்கிழங்கு போண்டாவும், தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னியும் செய்ய வேண்டும். பிள்ளைகளுக்குப் பிடிக்கும். இவை நாகசாமிக்கும் மிகவும் பிடத்தமானவையாயிற்றே.

கடவுள் நமக்களித்த நம் வாழ்க்கையை நாம் தோற்றாலும் ஜெயித்தாலும் நிறைவு பெரும் வரை நாமனைவரும் சந்தோஷமாக வாழத் தான் வேண்டும்.

“தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்
போற்றாத நாளில்லை தாயே உன்னை
பொன்னோடும் புகழோடும் வைப்பாய் என்னை”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *