(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சித்திரை மாதம். ஊரே இலை அசையாப் பம்மலிலும் பொருமலுமாகக் கிடந்தது. காலையிலே வியர்த்துக் கொட்டியது.
வெளித் திண்ணையில் குந்தியபடி மண் சுவரில் முதுகைச் சாய்த்துக்கொண்டு படித்தது எனக்குச் சிரமத் தைத் தந்தது. தாள முடியவில்லை. புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன்.
முற்றத்துப் பலாமரத்தின் மொக்குந் தக்குமாக இருந்த முடிச்சுக்களில் பலா காய்கள் தொங்கிக் கொண்டி ருந்தன. இன்னும் சில நாள்களில் பலாப் பழங்களின் சுகந்தம் ஊரையே பரிமளித்து நிரப்பும். பட்டித்திடல் பலாப் பழங்கள், திருகோணமலை வட்டாரத்திலேயே புகழ் பெற்றவை.
முற்றத்தைக் கடந்து வேலிப் படலையைத் திறந்து தெருவிற்கு வந்தேன். மட்டக்களப்பு மெயின் வீதிக்கு அப்பால் தெருவிற்குச் சமாந்தரமாக மாவலியின் செம் புலப் பெயல் நீர் வாய்க்கால் கரையில் உயர்ந்து நிழல் கவித்த மருத மரத்தினடியில் அமர்ந்து கொண்டு மீண்டும் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன்.
மருதமரத்தின் பழுத்த இலைகள் பூட்டவிழுந்து வாய்க் காலில் வீழ்ந்து எங்கு போகிறோம் என்ற பிரக்ஞையே இன்றிப் போய்க் கொண்டிருந்தன. தூரத்தே கோடைப் போக விதைப்புக்காக, வயலைச் சேறாச்சுக் கடாப் பிணையல்களை வளைப்பவர்கள் ஓகோகோ …என்று அவைகளை விரட்டும் சப்தம் சன்னமாகக் கேட்டு கொண்டிருந்தது.
மெயின் றோட்டில் எப்போதாவது ஓடிக் கொண்டி ருக்கும் துவிச்சக்கர வண்டிச் சில்லுகளில் காலைச் சூரியனின் ஒளி பிரதிபலித்து மினுக்கிக் கொண்டிருந்தது. புழுக்கமும் இருளும் மண்டிய என் மண் குடிசையை விட, அம்மருதமரத்து நிழலின் குளுமையும் அம்மரத்தின் சடைத்த இலைகளைப் பீறிட்டுக் கொண்டு பாயும் சூரிய ஒளியும் இதமாகத்தான் இருந்தன.
ஆனாலும் மரத்தின் வேர் முட்டிற் குந்தியபடி மரத் திற் சாய்ந்து கொண்டு படிப்பது சிரமமாகத்தான் இருந் தது. பாடசாலைக்குச் சென்றால் அங்கு கதிரையும் மேசையும் இருக்கும் படிப்பதும் சௌகரியமாகத்தான் இருக்கும். ஆனால் அங்கு போக மனம் ஒப்பவில்லை. ஆனாலும் எதிரேயிருந்த பாடசாலையை எட்டிப் பார்க்கிறேன்.
அங்கே, அப்போதுதான் தலைமுழுகி விட்டு வந்தி ருந்த ரீச்சர், விரிந்த கூந்தலில் நீர் சொட்டத் தான் தோய்த்து வந்திருந்த புடவைகளைக் கொடியிற் காயப் போட்டுக் கொண்டிருக்கிறாள். ஈரப்புடைவைக்குள் திமிறிய அவளின் பிருஷ்டபாகம் அவளின் முப்பத்தைந்து வயதை அனாயாசமாக மறைத்துக் காட்டுகின்றது.
நான் நான்காம் வகுப்புப் படிக்கையிலேயே அவள் எங்களூர்ப் பாடசாலைக்கு ஆசிரியையாக வந்தாள் அப்போது பாடசாலையிற் தலைமை வாத்தியாரோடு இன்னும் ஒரு உதவி ஆசிரியரும் இருந்தார். மூன்றாம் ஆளாக வந்த ஆசிரியை எங்களூரில் எல்லாராலும் தையலக்கா என்றே அழைக்கப்பட்டாள். அப்போது ரீச்சர் என்ற வார்த்தை ஊரில் எவருக்குமே தெரியாது!
தலைமை வாத்தியாரும் மற்றவரும் பாடசாலை முடிந்ததும் துவிசக்கர வண்டியில் மூதூருக்குப் போய் விடுவார்கள். அவர்களுக்கு எங்களூரிற் குடியிருக்க விருப்பமில்லை.
ஆனால் தையலக்கா மட்டும் பாடசாலையிலிருந்த அதிபரின் குவாட்டர்ஸிலேயே தன் தாயோடு குடியிருந் தாள். பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக இன்னமும் அங்கேதான் இருக்கிறாள் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த இளமைச் சௌந்தர்யம் இன்றும் இல்லை எனச் சொல்ல முடியாது. ஆனாலும் மலடடித்துக் கிடக் கும் கலட்டித்தரையில் தீய்ந்து கருகிக் கிடக்கும் கோரைப் புல்லை மேயும் வெள்ளாட்டின் கண்களில் தெரியும் சோகம் அவள் கண்களிலும் தேங்கிக் கிடக்கும்.
அச்சோகம் கப்பிய கண்கள் என்னைக் கண்டு விடுமோ என்ற பயத்தில் நான் மெதுவாக அரக்கி அரக்கி நகர்ந்து மரத்தின் மறுபக்கமாக அமர்ந்து கான் கிறேன்.
ரீச்சரிடம் எனக்கு மதிப்பும் மரியாதையும் அன்பும் இருக்கின்றது நன்றியறிதலுங்கூட நான் ஐந்தாம் வகுப்புப் படிக்கையில் அவள்தான் என்னை ஸ்கொலர்ஷிப் பரீட்சைக்கு ஆயத்தப் பண்ணினாள். நான் பரீட்சை சித்தியடைந்ததும் என் தந்தையாரிடம் ஆர்வத்தோடு சிபார்சு செய்து வந்தாறுமூலை மகாவித்தியாலயத்திற்கு என்னை மேற்படிப்புக்கு அனுப்பி வைத்தாள். ஒவ்வொ விடுமுறைக்கும் நான் ஊருக்கு வந்ததும், என் படிப்பைப் பற்றி அக்கறையோடு விசாரித்து என்னை ஊக்கப்படுத்தி னாள். அவளது ஊக்குவிப்பினாற்தான் நான் இன்று பேராதனைச் சர்வகலாசாலை மாணவனாக இருக்கிறேன்.
நான் இங்கே மருதமரத்தின் கீழ் இருந்து படிப்பதைப் பார்த்தால், அவள் நிச்சயமாக அதை அனுமதிக்க மாட் டாள். ஆனால் பாடசாலையில் எத்தனை சௌகரியம் இருப்பினும் எனக்கு அங்கு போவது விருப்பமில்லாமலிருக்கிறது.
நான் ஐந்தாம் வகுப்புப் படிக்கையில் ஒரு சாயந்தர வேளை தையலக்கா என்னை ஸ்கொலர்ஷிப் பரீட்சைக் குப் படிப்பித்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே வந்த அவள் அம்மா சொன்னாள்.
“எடியே! இந்தப் பறப்பயலுக்கு எதுக்குப் படிப்பு உவன் படிச்சுச் சக்கிடத்தார் ஆகப் போகிறானே”.
எனக்கு நெஞ்சிலே ஈச்சம் முள்ளுக் குத்தியதுபோல இருந்தது. அந்த வேதனையோடு நான் “அக்கா நான் வீட்ட போறேன். இனிப் படிக்க வரல்ல” என்று சொல்லி எழுந்தபோது தைலக்கா சொன்னாள். அம்மா கிடக்கிறா விடு. அவ பழைய கிழடு. அது அப்படித்தான் சொல்லும். அது சொல்றதக் காதில விழுத்தாட்டாம நீ படி.
அந்தக் கிழவி சொல்றதுக்காகவாவது நான் படிக்கத் தான் வேண்டும் என்ற வைராக்கியம் என்னுள் கெட்டித்தது.
ஆனாலும் தையலக்கா என்னதான் ஆறுதல் சொன்னாலும் அந்தக் கிழவி அழிச்சாட்டியம் பிடித்தவளாகத்தான் இருந்தாள். அந்தக் கிழவி அவ்வூருக்கு வரும் வரையும் பாடசாலைக் கிணற்றிலே பிள்ளைகள் எல்லாரும் தங்கள் இஷ்டம் போல தண்ணீர் அள்ளினார்கள்; குடித்தார்கள். பாடசாலையின் அய லுள்ள ஊர் மக்களும் கிணற்றில் தண்ணீர் அள்ளினார்கள்.
ஆனால் அந்தக் கிழவி தான் புழங்கிற கிணற்றில் இந்த எளிய சாதிகள் தண்ணீர் அள்ளக்கூடாதென்று அடம்பிடித்தாள். தலைமை வாத்தியாரும் எங்களைப் பாடசாலைக் கிணற்றிலே தண்ணீர் அள்ளவேண்டாம் எனப் பணித்தார்.
காலையிற் பாடசாலை வாளிகளில் எல்லாம் அந்தக் கிழவியே தண்ணீர் நிரப்பி வைத்துவிடுலாள். நாங்கள் அத்தண்ணீரைச் சிரட்டையால் அள்ளி வாய் வைக் காமல் கை மண்டையில் இன்னொருவர் ஊற்றக் குடிக்க வேண்டும்.
பாடசாலைப் பிள்ளைகள் எல்லோருமே அக்கிழவிக் குக் குற்றவேல் செய்யவேண்டும் ஏன் பெரியவர்கள் கூடச் செய்யவேண்டும். பெண்கள் அவளுக்கு நெல் குற்றிக் கொடுப்பார்கள். ஆண்கள் விறகு கொத்திக் கொடுக்க வேண்டும்.
ஆனாலும் ஊரவர்கள் இவைகளையெல்லாம் குருவிற்குச் செய்யும் பணியாகவே கருதினார்கள். அந்தக்கிழவி பெரியவர்களைக்கூட வாடா போடா என்று அழைப்பதைக்கூட அவர்கள் சகித்துக் கொண்டார்கள்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னே அப்போதுதான் நான் சர்வகலாசாலையிற் பிரவேசித்திருந்தேன். ஆவணி விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது அக்கா நீண்டநாள் களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் போக இருப்பதாக அறிந்தேன். தையலக்காவிடமே நான் விசாரித்தபோது அவள் நாணிக் கொண்டு சொன்னாள்.
எனக்குக் கல்யாணம் ஒழுங்காகியிருப்பதாக சித்தப்பா கடிதம் எழுதியிருக்கிறார். அதுதான் போகிறேன்.
அப்படியா. மெத்த சந்தோஷம் ரீச்சர். கல்யாண மானால் இங்கு வரவே மாட்டீர்களா?
அதெப்படி சொல்ல முடியும்?
நான் மேற்கொண்டு கதைப்பதற்கு முன்னே அந்தக் கிழவி என்னைக் கூப்பிட்டாள். டேய் பொடி. இங்கே வாடா…
நான் கிழவிக்கு இரண்டு கிழி கிழிப்போமா? என மனதில் எண்ணிக் கொண்டே என்ன அலுவல். சொல் லுங்க. என்றேன் சற்று விறைப்பாக.
இந்தா. இந்த மூட்டையெல்லாம் பஸ் ஸ்ராண்டில் கொண்டு வையடா.
அம்மா. பஸ்ஸிற்கு இன்னம் நேரம் இருக்குதணை என்ற தையலக்கா நீங்க போங்க தம்பி. சாமான் தூக்க நான் வேறு யாரையும் பார்க்கிறன் என்றாள் என்னிடம்.
பரவாயில்லை. ரீச்சர். நான் உங்களுக்கு இந்த உதவியாவது செய்யக்கூடாதா? பஸ்ராண்டிற்கு நானே உங்கள் மூட்டை முடிச்சுகளைத் தூக்கிவாறன் என்று சொல்லிக்கொண்டே பாடசாலையைத் தாண்டி குவாட்டர்ஸுக்குப் போனேன்.
அங்கே அரிசி மூட்டை,மா மூட்டை அவல் மூட்டை!
ஏனம்மா எங்களூரிலே பலாப்பழமும் வாழைப் பழமும் கூட விசேஷம். மலிவுங்கூட அவைகளையும் கொண்டுபோகலாமே என்றேன் நான் நக்கலாக. யாழ்ப்பாணத்தில்லில்லாத பலாப்பழமும் வாழைப் பழமுமே என்றாள் கிழவி.
நான் ஒவ்வொரு மூட்டையாக பஸ்ராண்டுக்குச் சுமந்து சென்றபின், ரீச்சரையும் தாயையும் அழைத்துக் கொண்டு பஸ்ராண்டை அடைந்தேன். பஸ்பிடித்து மூதூருக்கு வந்து இருவரையும் லோஞ்சில் ஏற்றித் திருக்கோணமலைக்கு வழியனுப்பினேன்
போன ஆனால் யாழ்ப்பாணம் மகளும் தாயும் பத்துநாள்களுக்குள் மீண்டும் ஊருக்குத் திரும்பி வந்து விட்டார்கள்.
நான் ஓடோடிச் சென்று ரீச்சர், நீங்கள் மாலையும் கழுத்துமாக வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன் என்றேன்.
அந்தக் கதையை விடும் தம்பி என்று ரீச்சர் சொல்கையில் அவள் கண்களில் ஏமாற்றம் ததும்பி நின்றது.
என்ன நடந்தது ரீச்சர்?
தம்பி! நீர் யாழ்ப்பாணத்து நிலைகளைக் கேள்விப்பட்டிருப்பீர். ஆனநலும் நிதர்சனமாக உமக்குத் தெரியாது.
நீங்கள் என்ன சொஎகிறீர்கள்?
எனக்குச் சீதனம் கொடுக்க நான் இன்னமும் பத்து வருடங்கள் உழைத்துச் சேமிக்க வேண்டும்.
அதற்குள்…
கிழவியாகிவிடுவேன் என்று சொல்லப் போகிறீர்கள். அம்மா இரைந்தாள், வந்ததும் வராததுமா அவனோடு என்னடி கதை? வாடி இங்க…
ரீச்சர் போகும்போது அவள் கண்களில் நீர் சொட்டிற்று.
சீதனப்பணம் போதாததால் அவள் கல்யாணம் தடைப்பட்டுவிட்டதே என்று எண்ணியபோது என் கண்களும் பனித்தன.
புத்தகம் விரிந்தபடியேதான் இருந்தது. என் மனதில் பழைய சம்பவங்கள் நிழலாடுகையில்…
தம்பி! இங்கேயா இருந்து படிக்கிறீர். வாரும் பாடசாலையில் இருந்து படிக்கலாம்…அங்கே சௌகரியமாக இருக்கும்.
வேண்டாம் இங்கே சௌகரியமாகத் தானிருக்கிறது.
இப்படி மரத்தோடு சாய்ந்து கொண்டிருந்தால் முதுகு கூனிப்போகும்.
அங்கே வந்தால் மனம் கூனிக்குறுகும்.
தைரியமிருந்தால் கூனிக்குறுக நேராது.
தைரியமிருக்கிறது. ஆனால் உங்கள் அம்மாவிடம் வீண்வம்பை விலைக்கு வாங்க விரும்பவில்லை.
ரீச்சர் என்னை மிக மிக அண்மித்து விட்டாள். கையைப்பிடித்து எழுப்பி இன்னமும் இருந்தால் என் இழுத்துக் கொண்டே போய்விடுவாள் போலத் தோன்றியது. நான் எழுந்து முன்னால் நடந்தேன். ரீச்சர் என பின்னால் வந்தாள். இருவரும் பாட சாலையை அடைந்தோம்.
ஆசிரியர் மேசைக்கருகில் கதிரையை இழுத்து வைத்து இதில் இருந்து படியும் என்று சொல்லிக் கொண்டே ரீச்சர் குவாட்டர்ஸ் பக்கம் போனாள். நான் கதிரையில் அமர்ந்துகொண்டு புத்தகத்தைப் புரட்டினேன். ஆமாம் வெறுமனே புரட்டினேன். படிக்க முடியவில்லை.
சில நிமிடங்களில் ரீச்சர் தேநீரோடு வந்தாள். ஆவி பறக்கும் தேநீரை மேசையில் வைத்துவிட்டு இன்னோர் கதிரையை இழுத்து வைத்துக்கொண்டு என் எதிரே அமர்ந்தாள்.
தேநீரைக் குடியுங்கள்.
கப் அன்ட் சோசரில் எனக்குத் தேநீர் தந்ததைக் கண்டாலே உங்கள் தாயார் குமுறுவாளே. ஏன் மூக்குப் பேணி இல்லையா?
நான் அம்மா காலத்தவளல்ல.
ஆனாலும் அந்தக் கட்டுக்கோப்பில் வளர்ந்தவர்.
அது என் குற்றமல்ல அதை விட்டுவிட்டு தேநீரைக் குடியுங்கள் என்ற ரீச்சர் என் புத்தகத்தை இழுத்தெடுத் துப் பார்த்தாள். அது கால் மாக்ஸின் மூலதனம்.
இதையா படிக்கிறீர்கள்? நான் பாடப்புத்தகம் என்றிருந்தேன்.
சில சமூக அநீதிகளை எதிர்க்கப் பாடப்புத்தகங்களை மட்டும் படித்தாற் போதாது. இத்தகைய புத்தகங்களையும் படிக்க வேண்டும்.
அப்படியா கால்மாக்ஸின் தத்துவங்கள் இப்போது அழிந்து கொண்டு வருகின்றன.
இல்லை. அவர் தத்துவங்கள் என்றைக்குமே அழியாது.
ஓ! கால்மாக்ஸைப்பற்றி நன்கு தெரியுமோ?
ஓரளவு தெரியும்.
அவர் மனைவி அவரை விட வயதிற்கூடியவள்.
தெரியுமே. அவர் மட்டுமல்ல. முகம்மது நபி ஷேக்ஸ்பியர் போன்ற பெரியோர்களின் மனைவிமாரும் அவர்களைவிட வயசில் மூத்தவர்கள்தான்.
ஆனால் அவர்களுக்கிருந்த தைரியம் எல்லாருக்கும் வராது.
உள்ளேயிருந்து தாயின் முழக்கம் என்னடி அந்த எளிய சாதியோட கதை?
நான் உக்கிர கோபத்தோடு கதிரையைப் பின் தள்ளி விட்டு தடாரென்று எழுந்து நிற்கிறேன். ரீச்சர் என் கையைப் பிடித்தவாறு என் மார்பில் அணைகிறாள்!
ஆ! எத்தனை மென்மையான ஸ்பரிசம்! எனக்குத் தைரியம் வந்துவிட்டது!
– வீரகேசரி 1995
– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை
அருமை அருமை நல்ல கதை இனியது