சிவசு அய்யாவுக்கு அந்த வாசனை மட்டுப்பட்டது. மேலும் மூக்கைச் சுருக்கி அதை உறுதிப்படுத்திக்கொள்ள முயன்றார். அதே வாசனைதான்! ஏதோ யூகத்துடன் விறுவிறுவென கொல் லைப் பக்கம் சென்றார். கொல்லையின் புறத்திலிருந்து நீண்டிருந்த வயல்வெளி வரப்பில் முத்து சென்றுகொண்டு இருந்தான். புழக்கடைத் தொட்டித் தண்ணீரை அள்ளி முகத்தில் விசிறிக்கொண்டு இருந்தாள் செங்கு. அந்த வாசனை குறித்தான புதிர் ஒன்று இருந்தது சிவசு அய்யாவுக்கு. அந்தப் புதிர் அழைத்துச்செல்லும் விடை உண்மையாக இருக்கக்கூடாது என்ற உள்மன பதற்றமும் இருந்தது. அந்தப் புதிர் பொய்யாகப் போய்விட வேண்டுமென நினைத்தார்.
‘‘என்ன மாமா… காப்பித் தண்ணி போடவா..?’’
சேலையால் முகத்தைத் துடைத்தபடி வந்த சந்திரா, இவரின் முகக்குறி கண்டு சற்று நிதானித்து, வயல்பக்கமாகப் பார்வையை தாழ்த்தி, பின் ஏதுமறியாதவள் போல அடுப்பங்கரைக்குள் புகுந் தாள். எல்லாவற்றையும் சரியாகக் குறிப்பெடுத்துக்கொண்டார் சிவசு. உள்ளே எதுவோ, என்னவோ செய்தது.
கருப்பட்டித் தண்ணிக்குக் காப்பி என்று பெயரிட்டிருக்கிறார்கள் இந்த கல்லுப்பட்டி தாலுகா கிராமத்தில்.மௌனமாகக் காப்பியை உறிஞ்சிய படி வாசல் பார்த்தார் சிவசு அய்யா. செங்கு இன்னமும் அடுப்பில்தான் கிடந்தாள். கடைசி ரெண்டு மடக்கை வாசல் நாய் பக்கமாகக் கவிழ்க்க, அது சப் சப்பென நக்கி, மேலும் ஆவ லாய் டம்ளரை நக்க வந்தது.
‘‘சை… சனியன்! போ அப்பாலே… புது ருசி கேக்குதோ! ஓடிப் போயிரு!’’ என்றார். கண்கள் அடுப்பங்கரை வாசலை ரகசியமாகப் பார்த்தன. இவர் நினைத்தபடி அங்கே கையாளப்பட்டுக் கொண்டிருந்த சமையல் வேலையில் சில நிமிஷ நிதானம் பிறந்து, மௌனம் நிறைந்தது. கல்லுப்பட்டியில் சங்கரன் தன் படத்தைத் தானே வரைந்து வந்து மாட்டிய கறுப்பு வெள்ளைப் படம் ஆணியில் தொங்கியதை ஒரு முறை பார்த்துவிட்டு எழுந்தார்.
சங்கரன் ஏன் நாற்பது வயதில்சாக வேண்டும்? அப்பனுக்கு முன் பிள்ளை சாவதின் கொடுமை அடி வயிற்றைப் பொசுக்கியது.
‘‘ஏலா… இந்தப் படத்துக்கு குங்குமம் வையினு நாலு நாளா சொல்லுறேன். நெசமா முன்னால நின்னு சிரிக்கிற மாதிரி பிரமை பிறக்குதுலா… பொட்டை வச்சு விடு!’’ என்றபடி தெருவில் இறங்கினார்.
மனது கிடந்து அல்லாடியது. இந்தச் சங்கரன் பையன் செத்தும் அழ வெச்சான்… இப்ப வயசுப் பெண்டாட்டிய தனியா காவக் காக்கவெச்சும் பதறவைக்கானே! காலம் அப்பிடிக் கெடக்கு. சாவடில விஷயம் கசிஞ்சுபோச்சே! யூக மாத் தெரியாமலா பரமன் கேக்கான்? ‘அண்ணாச்சி! வீட்டு விஷயத்த கொஞ்சம் செரியா கவனிங்க, ஏதேதோ புகை யுது’ன்னு முந்தா நாள் காதக் கடிக்கான். காசு பணம் இல்லேன்னாலும், தோள்ல துண்டைப்போட்டு நடக்கக்காட்டி யாவது கொஞ்சம் கௌரதை இருக்கே… அதயாச்சும் கறையாக்கிடமா பாத்துக்கிட வேண்டும்ல? ஊசிமுனை கிடைச்சாலும் உருவம் வரைஞ்சு, பூ வெச்சு ஊர்வலம் விட்டுருவானுக இந்தப் பயக. ஏதோ கோமணத்துண்டு மாதிரி கெடக்குற இந்த பருத்திக் காட்டு மகசூலைப் பார்த் துக்க முத்துப் பயலைத் தவிர வேற நாதி இல்லை. இந்த வருசம் பருத்தி இல்லை, அடுத்த வருசம் நெலமே இல் லைனு வாயில போட்டுட்டுப் போற மனுசக் காட்டுல இவன் கொஞ்சம் சாது. வயத்தைப் பார்த்தா விவகாரம் வேற மாதிரி போயிடுமோனு பயமா இருக்கு. என்னத்தச் செய்யிறது!
பொங்கிய கோபம் ஆற்றாமையாக மாறி சுய கழிவிரக்க மாக உருவங்கொண்டது. தண்ணீர் தெளிக்கத் துவங்கி யிருந்த சாயங்காலத் தெருவில், தூசிப் படலத்தின் நடுவே மங்கலாய்த் தெரிந்த சாவடியை நோக்கி நடந்தார்.
இந்த நாலு நாளாய் பெருந் தரித்திரியம்! அரிசிப் பானையைக் கவிழ்த்துப் போட்டுவிட்டாள் செங்கு. திருமங்கலம் கமிஷன் மண்டியில் வரவேண்டியிருந்த கொஞ்சம் பாக்கியும் வரவில்லை. சிவசு அய்யாவுக்கு அப்பிடி ஒரு கோவம் வந்தது. பல் போன கிழட்டுச் சிங்கம் கிடைக்கின்ற மாமி சத்தை மெல்லவும் முடியாமல் துப்பவும் மனமில்லாமல் எச்சில் ஒழுக ஒழுக போராடுமே அது போன்றதொரு ஆவேசம். வயிற்றிலிருந்து பிறந்த கோபம் வாய் வழியாக எல்லோர் மீதும் வெறிகொண்டு பாய்ந்தது.
‘‘அம்புட்டுப் பெரிய கடைக்காரனுக்கு இந்த நூத்தம்பது ரூவா இல்லாது போச்சுதா! கடங்காரப் பய. இந்த முத்து நாயியையும்ல காணோம். ஒருவேளை கடனை வசூல் பண்ணிட்டு வேத்தூருக்கு பஸ் ஏறிட்டானா… ஒரு எழவும் பிடிபடலையே! இதுக்குத்தான் ஆயிரம் இருந்தாலும் நம்ம ரத்தத்துல ஒருத்தன் வேணும்கிறது! ஊருபேரு தெரியாத வன் காலையில்ல இப்பக் கட்டிட்டுக் கெடக்க வேண்டி யிருக்கு?’’
செங்கு சலனமே இல்லாமல் மூலையில் உட்கார்ந்து நைந்துபோன தலைகாணியைத் தைத்துக்கொண்டு இருந்தாள். சிவசு அய்யா தெருவுக்கு வந்து, பொடி டப்பாவைத் திறந்தார். அதன் அடிப்பாகம் மினுங்கியது. ‘சை’ எனத் திட்டிவிட்டு வேட்டியில் முடிந்தபடி களத்து மேட்டுப் பக்கமாக நடையைப் போட்டார். யார் வீட்டிலிருந்தோ கருவாடு சுடுகின்ற மணம் வந்தது. வாய் தன்னிச்சையாக ஒருமுறை எச்சிலைக் கூட்டி விழுங்கியது. சிவசு அய்யாவுக்குக் கரு வாட்டைவிட மிளகாய்த் துவையல் என்றால் உயிர். ஒவ்வொரு கவளத்திலும் சொர்க்கமே தெரிவதாக ருசித்துச் சாப்பிடுகிற நாக்கு. முன்னே நாச்சி இதைத்தான் பொழு துக்கும் வைப்பாள். பச்சை மிளகாய், வெங்காயம், நாலு பல் பூண்டு வறுத்து, மையமாய் அரைத்துவிட்டால் போதும்… வயக்காட்டில் பருத்தி பொறுக்கிக்கொண்டு இருக்கும் சிவசு அய்யா, மூக்கணாங் கயிற்றால் இழுத்துச் செல்லப்படுகிற காளையைப் போலத் தன்னியல்பாக வீட்டு வாசலில் வந்து நிற்பார். செங்குவுக்கும் அந்த கைமணம் உண்டென்றாலும், சங்கரன் இருந்த வரையில் அவனுக்குப் பிடிக்காத இந்தத் துவையலை அவள் செய்ததே இல்லை. அத்திபூத்தாற் போல எப்போதாவது வைப்பாள். ‘ம்… சும்மாவா சொல்லியிருக்காங்கெ, அம்மா செத்தா அரைப் பொணம்; பொண்டாட்டி செத்தா முழுப் பொணம்னு’ எனத் தனக்குள் நினைத்துக்கொண்டார் சிவசு அய்யா.
சமுத்திரம் அப்போது சாப்பிட்டுக்கொண்டு இருந்தான், வரப்பினூடே தவங்கித் தவங்கி சிவசு அய்யா வந்த பொழுதில் கை கழுவி விட்டுத் துண்டால் துடைத்தபடி,
‘‘வாங்க பெரியய்யா! என்ன இந்த வேணாத வெயில்ல இம்புட்டு தூரம்..?’’ என்றான்.
கலயத்திலிருந்த தண்ணீரை மடக்கு மடக்கென்று வழிந்தபடி குடித்த சிவசு அய்யா, சற்று நிதானத்துக்குப் பின்… ‘‘ஏலே சமுத்திரம்! கொஞ்சம் முடைடா. அதான் உன்னைப் பார்த்துட்டு போலாம்னு…’’
சிவசு அய்யாவையே உற்றுப் பார்த்தவன், பின்பு முகத்தை வேறு விதமாக மாற்றிக் கொண்டான்.
‘‘அதான் அந்த முத்துப் பய துணை போதும்னு கிடந்தீரே… இப்ப எப்பிடி வந்துச்சாம் முடை?’’
சிவசு அய்யாவுக்குச் சுருக்கென்றது. இதற்கு முன்னான சில பொழுதுகளில் அவர் பலரிடம் கடன் வாங்கியிருக்கிறார் என்றாலும், அந்தக் காலங்களில் கடன் கொடுத்தவர்கள் மனிதர்களாய் இருந்தனர். கடனே கொடுத் தாலும், செருப்பதிர எதிரே நடக்கவும், கக்கத் துத் துண்டைத் தோளுக்கு ஏற்றவும் முயலாத மனிதர்கள்! இன்று..? பொறுத்துக்கொண்டார் சிவசு அய்யா. வெத்துக் கௌரவத்தைவைத்து கால் பானை கஞ்சி பொங்கமுடியுமா?
‘‘கமிஷன் கடைல பாக்கி விழுந்திருச்சுடா! வசூல் பண்ணப் போன பயல நாலு நாளாக் காணோம். கொஞ்சம் பார்றா…’’
‘‘எங்கிட்ட ஏது பெரியய்யா பணம்? நானே செவலைக் காளைக்கு லாடங்கட்ட வழியில்லாம திரியறேன். உங்க உதவிக்குனா ஒண்ணு சொல்றேன். கோவப்படாதீங்க. அந்த முத்துப் பய எங்கே போனான், எப்ப வருவான்னு உம்ம மருமவகிட்டே கேட்டுப் பாருங்க, சங்கதி வெளங்கிடும்!’’
இதுதான் கிராமத்துக் குதர்க்கம். எதிராளியின் பல வீனத்தையே வலையாக்கி, அதிலேயே அவனை மாட்டி விடுகிற நுணுக்கத்தனம்! செருப்பால் அடித்தது போல இருந்தது சிவசு அய்யாவுக்கு.
வெயில் இறங்கிக்கொண்டு இருந்த தெருவில், வீட்டை நோக்கிச் சென்றார் சிவசு அய்யா. சமீபமாக மனசு இத்தனை காயம்பட்டதில்லை. காயத்தின் ரத்தத்தில்கொப் பளிக்கின்ற வன்மம் செங்குவின் மேல் திரும்பியது. சுருக்கம் விழுந்துபோன வயிறும் காய்ந்து போயிருக்க, ஆவேசமாக வீட்டுக்குள் நுழைந்த சிவசு அய்யாவுக்கு, சட்டென முகத்தில் அறைந்தது அந்த வாசனை. வாசலில் நுழைந்தபடி கொல்லைப்புறக் கதவில் ஆடிக் கொண்டு இருந்த கைப்பிடியின் சமீபத்திய அதிர்வைப் பார்த்தார். கொதிக்கின்ற கண்கள் செங்குவைத் தேடின. கழுத்துப் பக்க ஈரத்தைத் துடைத்தபடி வந்தாள் செங்கு. இவரைப் பார்த்தபடி அடுப்பங்கரைக்குள் சென்றாள். கோபம் பொங்கிக்கொண்டு இருந்தாலும் சடக்கென வார்த்தை வரவில்லை சிவசு அய்யாவுக்கு. தானாய் ஆத்திரம் பொங்கி, சிதறி வெளித்தெறிக்கின்ற அந்த கணத்துக்காகக் காத்திருந்தவரின் முன்னால் சோற்றுத் தட்டைவைத்தாள் செங்கு. அருகிலேயே மிளகாய்த் துவையல்.
மூலையில் கிடந்த பலசரக்கு மூட்டையையும், சுருட்டிவைக்கப்பட்டிருந்த (பருத்தி கொண்டுபோன) கோணிக் கட்டையும் பார்த்தார். கண்களில் மிளிர்ந்த ஆச்சரியம் மெள்ள மெள்ள விரிந்து, உடல் முழுவதும் ஆட்கொண்டது. மிளகாய்த் துவையலின் வாச னையை இப்பொழுது நாசி உணர்ந்தது. ஏதோ ஒன்றால்தான் இழுக்கப்படு வதாகத் தோன்றியது சிவசு அய்யா வுக்கு. உடலின் அதிர்வு மெள்ள அடங்கத் துவங்க, சற்று நேரம் சோற் றையும், துவையலையும் பார்த்தவர், மௌனமாகச் சாப்பிடத் துவங்கினார்.
சோற்றுத்தட்டில் தெறித்த எச்சில் வழிசலுடன் ஒரு கைப்பிடிச் சோற்றை வாய்க்குக் கொண்டு சென்றவரின் கண்களில், வாலை ஆட்டியபடி அவரைப் பார்த்த அந்த நாய் விழவும், நிமிஷ யோசனைக்குப் பின்…
‘‘தின்னுட்டுப் போ, கழுதை!’’
எனக் கூறியபடி அந்தக் கை சோற்றை அதன் முன் வைத்தார். அவரது தலை ஒருமுறை, புதிதாகக் குங்குமம் வைக்கப்பட்டிருந்த சங்கரனின் படத்தை நிமிர்ந்து பார்த்தது.
– வெளியான தேதி: 25 அக்டோபர் 2006