கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 27, 2024
பார்வையிட்டோர்: 1,579 
 
 

(1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இராமநாதய்யரும் அவர் மனைவி சீதாலக்ஷ்மியும் தங்கள் மோட்டார் வண்டியில் சைனா பஜாருக்குப் போய்ச் சில சாமான்கள் வாங்கிக்கொண்டு, பக்கத்தி லிருந்த சிற்றுண்டிச்சாலையில் பலகாரம் சாப்பிட்டு விட்டு, மறுபடியும் வண்டியில் ஏறிக்கொண்டார்கள்.

“கடலோரம் போகலாமா?” என்றார் இராம நாதய்யர்.

“பீச்சுக்கா? ஜனக்கூட்டமில்லாத இடத்தில் போய் வண்டியை நிறுத்தச் சொல்லுங்கள். கூட்டத் தைக் கண்டால் எனக்குப் பிடிக்கவேயில்லை. அதோ. டாய்ஸ் விற்கிறான். ஏதாவது இரண்டு வாங்குங்கள் குழந்தைக்குக் கொண்டு போகலாம்.”

சீதாலக்ஷ்மி இதைச்சொல்லி முடிப்பதற்குள் அவள் எண்ணத்தைப் பொம்மை வியாபாரி எப்படியோ அறிந்து கொண்டு வண்டியண்டை வந்தான். வண்டியி லிருந்து கொண்டே விலை கேட்டுச் சாமான்கள் பொறுக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது மற் றொரு கதவண்டை ஒரு வாலிபப் பெண், பிச்சைக்காரி, ஒரு சிறு குழந்தையைக் கையில் எடுத்துக் காட்டிக் கொண்டு, “ஐயா, தருமங் கொடுங்கள். பச்சைக் குழந் தையைப் பார். அம்மா என்றாள்.

‘எல்லாம் ஜப்பான் ‘டாய்ஸ் தானே?.. என்று கேட்டார் இராமநாதய்யர்.

“ஜப்பான் தான். வேறு ஏது? நம்ம ஊரில் இதெல்லாம் செய்வார்களா? என்றான் வியாபாரி.

பிச்சைக்காரி மறுபடியும் கெஞ்சினாள். ”வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது. இதென்ன சனியன் / இந்தப் பட்டணத்தில் பிச்சைக் காரர்கள் தொல்லை ஜாஸ்தியாய்ப் போய்விட்டது என்றாள் சீதாலக்ஷ்மி.

“பசிக்கிறதம்மா, கண்ணெடுத்துப் பாரம்மா , நீ மகராசியா யிருக்கணும்!” என்றாள் பிச்சைக்காரி .

“போகிறாயா, போலீஸ்காரனைக் கூப்பிடச் சொல்லட்டுமா?’ என்று அதட்டினாள் சீதாலக்ஷ்மி.

“பாலில்லாமல் தவிக்கிறது, அம்மா ! ஒரு அணா பிச்சை போடுங்கள். அம்மா! எவ்வளவோ செலவழிக்கிறீர்கள் ராஜா!

விலை தீர்த்து வாங்கிய சாமான்களை வண்டியில் எடுத்து வைத்துக்கொண்டு. “ஓட்டு வண்டியை. பீச்சுக்குப் போ!” என்றார் இராமநாதய்யர்.

மோட்டாரோட்டி. பிச்சைக்காரியை விலகச் சொல்லிவிட்டு, வண்டியை ஓட்டினான்.

“ஐயா, ஐயா” என்று பிச்சைக்காரி கொஞ்ச தூரம் வண்டியைப் பிடித்துக்கொண்டு ஓடினாள்.

“ஓடாதே. செத்துப் போவாய் என்றார் இராம நாதய்யர். அப்போது பிச்சைக்காரியின் முகத்தைப் பார்த்தார். எங்கேயோ முன்னே பார்த்த மாதிரி தோன்றிற்று.

வண்டி வேகமாய்ச் சென்றதும், ”ஐயோ, பாவம் சிறு பெண். முகத்தைப் பார்த்தால் நம் ஊர்க்காரி போல் தோன்றுகிறது என்றார்.

சீதாலக்ஷ்மி, “எந்த ஊரோ, சனியனோ, அவளைப் பற்றி நமக்கென்ன? கொடுங்கள் பார்ப்போம். அதென்ன புதிதாக இருக்கிறது. ஏரோப்ளேனா? சாவி கொடுப்பதா. அல்லது வெறும் பொம்மையா? என்று விளையாட்டுச் சாமான்களை யெல்லாம் ஒன்றொன்றாகப் பார்த்துக்கொண்டே கடலோரம் போனார்கள்.

சேலத்தில் பொன்னம்மாப்பேட்டை பெரியண்ண முதலித் தெருவில் ஓர் ஏழைத் தறிகாரர் குடும்பம்: வையாபுரிக்கு முப்பது வயது. அவன் தங்கை தேவானைக்கு இருபது வயது. விவாகமாகவில்லை : தாயார் பழனியம்மாள். மூவரும் தங்கள் பரம்பரைத் தொழிலான கைத்தறியைக் கொண்டு கஷ்ட ஜீவனம் நடத்தி வந்தார்கள். நாள் முழுவதும் மூவரும் உழைத்து வாரம் ஒன்றுக்கு நான்கு ரூபாய் சம்பாதித்து வந்தார்கள்.

வரவரக் கைத்தறி நெசவு வியாபாரம் குன்றிப் போய்க் கூலி குறைந்து கொண்டே வந்தது. பிறகு குறைந்த கூலியுங்கூட இல்லாமல் பலர் தவித்தார்கள். சேலத்தில் பல தறிகளுடன் வையாபுரியின் தறியும் சும்மா கிடந்தது. தேவானை இரண்டு பிராமண உத்தி யோகஸ்தர்கள் வீட்டில் வாசல் பெருக்கி, சாணி தெளித்துச் சில்லரைக் காரியம் செய்ய அமர்ந்தாள். அதில் மாதம் மூன்று ரூபாய் வந்தது. தாயார் பழனி யம்மாளும் இன்னொரு வீட்டில் காலையில் கூட்டிச் சாணி தெளித்து ஒரு ரூபாய் சம்பாதித்தாள் . வையா புரி, நெசவு முதலாளிகளிடம் வேலைக்காக அலைந்து அலைந்து திரிந்தான். ஓரிடத்திலும் வேலை கிடைக்கா மல் சில நாட்கள் சென்றபின். வையாபுரி தன் தாயா ரிடம் சொல்லிவிட்டுப் பெங்களூருக்குப் போய்விட் டான். அவ்விடம் எதாவது ஆலையில் வேலை பார்ப் போம் என்று சேலத்திலிருந்து அவனும் இன்னும் சில முதலிமார்களும் போனார்கள்.

போய்ச் சில நாட்கள் அலைந்து, வையாபுரி ஒரு மில்லில் சேர்ந்ததாகக் கடிதம் எழுதினான். வையா புரிக்கு எழுதப் படிக்கக் கொஞ்சம் தெரியும். சிறு வயதில் அவன் தகப்பனார் அவனைப் பொன்னம்மாப் பேட்டை முனிசிபல் பள்ளிக்கூடத்தில் போட்டிருந் தார். அந்தக் காலத்தில் நெசவுக்காரர்கள் வாழ்வு அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை.

“மிகவும் கஷ்டப்பட்டு யார் யாருக்கோ லஞ்சம் கொடுத்து ஒரு மில்லில் சேர்ந்தேன். தினம் எட்டணா கூலி , மாதத்தில் இருபத்தாறு நாள் வேலை. ஆகையால் பதிமூன்று ரூபாய் வரும். இந்த மாதச் சம்பளம். சாப்பாட்டுச் செலவுக்கும் கடன் பட்டதற்கும் செல் வாகிவிடும். பிறகு உங்களுக்கு மாதம் இரண்டு ரூபாய் அனுப்ப முடியும். ஆண்டவன் இருக்கிறான்’ என்று வையாபுரி எழுதியதைப் பக்கத்து வீட்டு மாரி யப்பமுதலி மகன் படித்துச் சொன்னான். கிழவிக்கும் தேவானைக்கும் உண்டான மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

பத்து நாளுக்குப் பிறகு இன்னொரு கடிதம் வந்தது.

“அம்மாவுக்குத் திக்கு நோக்கிச் சாஷ்டாங்க நமஸ்காரம். நான் இங்கே ஆண்டவன் அருளால் க்ஷேமம். நீயும் தேவானையும் சுகம் என்று நம்பு கிறேன். எனக்கு இந்த ஆலையில் வேலை செய்வது பிடிக்கவேயில்லை. வீட்டில் தறியண்டை உட்கார்ந்து வேலை செய்த நாட்களை நினைத்துக் கண்ணில் தண்

ணீர் வருகிறது. இங்கே எனக்குப் பைத்தியம் பிடித் தாப்போலிருக்கிறது. தலை கிறுகிறு என்கிறது. என் மன வருத்தமும் பல தொல்லைகளும் சொல்ல முடியாது. ஊரைவிட்டு ஏன் வந்தேனோ என்று தோன்றுகிறது. பக்கத்து வீட்டுப் பையனைக் கொண்டு கடிதம் எழுதமுடியுமானால் எழுதவும் . மல்லேசுவரம். கூலி லைனில், சேலம் பொன்னம்மாப் பேட்டை வையாபுரி முதலி என்று எழுதவும்.”

***

சாணி தெளித்துப் பெருக்கி வந்த வீடுகளில் ஒன்று, பென்ஷன் உத்தியோகஸ்தர் வீடு.

அவர் மனைவி நல்லவள். வேலை வாங்குவதில் கொஞ் சம் கொடுமையான போதிலும், மற்ற விஷயங்களில் அன்பாகத்தான் நடத்தி வந்தாள். பழைய புடைவை ஒன்று கொடுத்தாள். சமையல் செய்ததில் மிச்ச மானால் அவ்வப்போது கொஞ்சம் சாதமும் குழம்பும் கிடைக்கும். இப்படிச் சில நாட்கள் கழிந்தன.

இதைத் தெய்வம் பொறுக்கவில்லை போலும்! அந்த வீட்டில் வேலை செய்து வந்த சமையற்காரன், தேவானைக்கு மிச்சமான உணவு பதார்த்தங்கள் கொடுத்து வந்தவன், அவளிடம் விளையாட்டாகப் பேசுவான். பிறகு ஒரு நாள் அவன் அக்கிரமமாக நடந்து கொண்டான்.

தேவானைக்கு அடங்காத கோபம் வந்தது. ஆனால் யாரிடத்திலும் சொல்ல வெட்கப்பட்டாள். “எங்கேயும் சொல்லாதே. உனக்கு மாதம் இரண்டு ரூபாய் தருவேன்” என்று அந்த அயோக்கியன் வற்புறுத்தினான்.

வருத்தத்தை அடக்கிக்கொண்டு தேவானை வீட டுக்குப் போய்த் தாயாரிடம், “நான் அந்த வேப்பமரத்து வீட்டில் வேலை செய்யமுடியாதம்மா” என்றாள்.

ஏன் என்று விசாரிக்க, தேவானை வெட்கப்பட்டு மிகவும் வருத்தத்துடன் நடந்ததைச் சொன்னாள். கிழவி, “நான் அந்த வீட்டு எஜமானியிடம் சொல்லுகிறேன்” என்று கிளம்பினாள்.

“வேண்டாம், அம்மா. அவர்களிடம் சொல்லி என்ன பயன்? நான் மறுபடி அங்கே வேலை செய்யா முடியாது” என்றாள்.

வேறு இடத்தில் வேலைக்காகப் பார்த்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருத்தி வேலைக்கு இருந்தே வந்தாள். இரண்டு மாதம் அலைந்த பிறகு ஒரு வீட்டில் வேலை கிடைத்தது.

ஆறு மாதங்கள் கழிந்தன. பெங்களூரில் வையாபுரி இருந்த ஆலையில் ஒரு வேலை நிறுத்தம் ஏற்பட்டது. ஒரு மேஸ்திரியைத் துரை அடித்துவிட்டார். அதன்மேல் அவனையும் வேறு சில கூலிகளையும் வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள். இதன் காரணமாகத் தொழிலாளர்கள் யூனியன் கூட்டம் கூட்டி அந்த மாதக்கூலி வாங்கினதும் வேலை நிறுத்தம் செய்துவிட்டார்கள். வையாபுரியும் இதில் சேரவேண்டியதாயிற்று.

ஒரு மாதகாலம் இது நடந்தது. தொழிலாளர் பல கூட்டங்கள் கூடிக்கூடிக் கிளர்ச்சி செய்தார்கள். முதலில் உற்சாகம் அதிகமாயிருந்தது. பிறகு கையிலிருந்த காசு செலவாய்ப் போனதும் உற்சாகம் குறைந்தது. சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் சிலர் சமாதானம் செய் தார்கள். எல்லாரும் மறுபடியும் ஆலைக்குப் போனார்கள். ஒரு வாரத்திற்குப்பின் இருபத்தைந்து பேரை வேலையிலிருந்து நீக்கிவிட்டதாகவும், ஆலைக்குள் வரக் கூடாதென்றும். கேட்டில் விளம்பரம் போட்டுத் தடுத்துவிட்டார்கள். அந்த இருபத்தைந்து பேரில் வையாபுரி ஒருவன்.

“நான் ஒரு பாதகமும் அறியேன்; நான் புதிதாக வந்தவன் ; நான் எதிலும் சேரவில்லையே” என்று வையாபுரி தன்னுடைய மேஸ்திரியிடம் சொல்லிக் கொண்டான்.

“பெரிய துரை உத்தரவு. அந்தப் படுபாவி ‘டயம் கீப்பர் – ரங்கசாமி நாயக்கன் செய்த வேலை : உன் பெயரையும் சேர்த்துத் துரைக்குக் கொடுத்து விட்டான். நான் ஒன்றும் செய்ய முடியாது” என்று மேஸ்திரி சொல்லிவிட்டான்.

ரங்கசாமி நாயக்கனிடம் போய்க் கெஞ்சினான். அவன், “எனக்கு ஒன்றும் தெரியாது. சம்பளப் பட்டு வாடா குமாஸ்தா ஐயர் செய்தது என்றான். யாரி டம் அலைந்து கெஞ்சினாலும் பயனில்லாமல் போய்விட் டது. ”நீ எழுதப் படிக்கத் தெரிந்தவன். மற்றவர் களுக்குத் தூண்டுதல் செய்தவன். உன்னை எடுத்துக் கொள்ள முடியாது” என்று மானேஜர் சொல்லி விட்டார்.

பல நாட்கள் அலைந்து கையில் இருந்த காசு முழு வதும் செல்வாகி மிகவும் கஷ்டப்பட்டு வையாபுரி சென்னை போய்ச் சேர்ந்தான். அவனைப்போலவே நீக்கப்பட்டவர்கள், இன்னும் பத்து ஆலைத் தொழி லாளர்கள். அவன் கூடவே சென்னையில் வேலை தேடப்போனார்கள். சோற்றுக்குத் தங்களில் சிலரிட மிருந்த பணத்தை எல்லோரும் கடனாகப் பங்கு போட்டுக்கொண்டு, எட்டு நாள் ஆலை ஆலையாகச் சுற்றித் திரிந்தார்கள். வையாபுரிக்கு ஒரு மில்லில் வேலை கிடைத்தது.

கேட் டில் நிற்கும் ஆளுக்கும் சில்லறை உத்தி யோகஸ்தர்களுக்கும் கொடுக்க வேண்டிய மாமூல்களுக்கு ஐந்து ரூபாய் வேண்டியிருந்தது. இதற்காக வும் சாப்பாட்டுச் செலவு முதலிய கடன் தீர்க்கவும், தன் காதிலணிந்திருந்த பொன் திருகுகளை ஒருவனிடம் அடகு வைத்துப் பணம் வாங்கினான் வையாபுரி. சென்னை மில்லில் அமர்ந்த சில நாட்களுக்கெல்லாம் கஷ்டத்தை மறக்கக்கள் குடிக்க ஆரம்பித்துவிட்டான். சேலத்தில் அவனுக்கு இந்தப் பழக்கமில்லை. பிறகு சூதாட்டத்தில் சம்பாதிக்கலாம் என்று சில தோழர் கள் அவனுக்கு வழிகாட்டி, அந்தப் பழக்கமும் ஏற் பட்டது. சம்பாதிக்கும் கூலியில் சாப்பாட்டுச் செலவு, குடிசை வாடகை முதலியவை போக, மிச்சமானது ஊருக்கு அனுப்பவேண்டியதற்குப் பதில், இம்மாதிரிப் பலவிதத்தில் செலவாயிற்று. பட்டாணியானிடம் கட னும் ஏறிற்று. இந்தக் கஷ்டங்களை யெல்லாம் பொறுக்க முடியாமல், இன்னும் அதிகமாய்க் குடிக்கலானான்.

முதலில் ஏதோ சாக்குப் போக்குகள் சொல்லி, பிறகு தன்னால் ஏதும் அனுப்பமுடியாது. வேண்டு மானால் தேவானையும் சென்னைக்கு வந்து ஒரு ஆலையில் வேலையில் சேரலாம் என்று எழுதிவிட்டான். அந்தக் கடிதத்தைப் பார்த்துத் தேவானைக்கும் பழனியம்மாளுக்கும் உள்ளம் துடித்தது.

பல நாட்கள் பொறுத்துப் பிறகு ஒருநாள். “ஏனம்மா நானும் பட்டணம் போகலாகாது? வையா புரியுடன் நானும் உழைத்து ஏதாவது சம்பாதித்து உனக்கு அனுப்புகிறேன். பட்டணத்தில் அனேகம் பேர் பெண் பிள்ளைகள் ஆலையில் வேலை செய்கிறார் களாமே?” என்றாள் தேவானை.

தாயார் முதலில் சம்மதிக்கவில்லை. “அது எங்கே யாவது உண்டா? அறியாப்பிள்ளை அங்கெல்லாம் போகவா? என்றாள். சில நாள் இப்படியே வாதாடி, பிறகு கிழவியும் சம்மதித்தாள். பக்கத்து வீட்டு மாரப்பனிடம் தன் காதிலிருந்த பொன்னோலைகளை அடகுவைத்து. ரூபாய் பன்னிரண்டு கடன் வாங்கி, தேவானை சென்னைக்குப் புறப்பட்டாள்.

***

சென்னையில் வையாபுரி தேவானையை ஒரு மில்லில் நூல் நூற்கும் டிபார்ட்மெண்டில் சேர்த்து வைத்தான் . வையாபுரி இருந்த ஆலை வேறு. இது வேறு. இவளைப்போல் இன்னும் சுமார் நூற்றைம்பது பெண்கள், சிறியவர்களும் பெரியவர்களும், அந்த ஆலையில் வேலை செய்து வந்தார்கள். தேவானைக்கும் அவளுடன் பத்துப் பேர்களுக்கும் மேல் ஒரு “ஜாபர்”. இவன் தேவானையை முதலில் மிகப் பிரியமாக நடத்தினான். பிறகு வேலையில் அதட்ட ஆரம்பித்தான். திட்டுவதும் உண்டு. தனியாகக் கண்ட காலத்தில் காரணமில்லாமல் மிகுந்த சல்லாபமாய்ப் பேசுவான்.

“இதென்ன, இவர் இம்மாதிரி செய்கிறார்?” என்று தன்னுடன் வேலை செய்து வந்த ஒருத்தியைக் கேட்டாள் தேவானை . அவள் சிரித்து, “உனக்கு இது தெரியாதா? நீ பாவம், நாட்டுப்புறம். அவரிடம் சரி யாக நடந்து கொள்ளாமற் போனால் சம்பளத்தில் பாதிக்குமேல் அபராதமாகவே பிடித்தம் ஏற்படும். அவர் சந்தோஷமா யிருந்தால், பல சௌகரியங்களுண்டு” என்றாள்.

ஏழைகளுடைய கஷ்டத்தை யார் அறிவார்கள்! அதிலும் ஏழைப் பெண்பிள்ளையாகப் பிறந்து ஆலை யில் கூலி வேலையில் அமர்வது. முன் ஜன்மத்தில் பாவம் செய்தவர்கள் தான் என்று சொல்லலாம்.

தேவானை சிலநாள் எல்லாவற்றையும் பொறுத்து வந்தாள். பிறகு தெய்வமேது. ஒன்றேது என்று மேஸ் திரியின் செயல்களை எதிர்ப்பதை விட்டாள். மனதை சரிப்படுத்திக்கொண்டு அவனுடன் சிரித்துப்பேச ஆரம்பித்தாள். வரவர அதில் சந்தோஷமுமடைய லானாள். கூலியும் உயர்ந்தது.

சில மாதங்கள் கழிந்தன. தேவானைக்குத் தேகத் தில் தொந்தரவுகள் கண்டன. குழந்தை உண்டா யிருப்பதாக அறிந்து கொண்டாள். தனக்குத் தெரிந்த தெய்வங்களை யெல்லாம் வேண்டினாள். ‘ யாரிடம் சொல்லுவேன்?. என்று காட்டில் வேட்டைக்குத் தப்பியோடும் மானைப் போல் மிரண்டு திகைத்தாள். தமையன் வையாபுரியிடம் சொல்ல அஞ்சினாள். அவ ளுடன் வேலை செய்துவந்த சிலர் அவள் நிலையை யறிந்து சிரித்து வேடிக்கை செய்தார்கள். ஊருக்குப் போய்விடலாமா என்று யோசித்தாள். பிறகு, சாதியி லிருந்து தள்ளிவிடுவார்களே யென்று பயந்தாள். தாயார் இதையறிந்தால் எப்படிப் பொறுப்பாள் என்று ஊருக்குப் போகும் எண்ணத்தை விட்டுவிட் டாள். தெய்வமே கதியென்று தைரியம் செய்து கொண்டு அந்த நிலையிலேயே ஆலையில் வேலை செய்து கொண்டு வந்தாள்.

ஒருநாள் மறுபடி மனம் திடுக்கிட்டது. ‘ஐயோ நான் என்ன செய்வேன்? என் குலத்தைக் கெடுத் தேனே ” என்று ஒருத்தியிடம் அழுதாள்.

“பயப்படாதே. தேவானை . இதென்ன, எல்லா ருக்கும் உண்டாவது தானே! இதற்கு மருந்து உண்டு. உடனே கழிந்துவிடும் ” என்றாள்.

“ஆமாம். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பயமாயிருக்கிறது. உயிர் போய்விடுமோ என் னமோ ! கடவுளே, நான் எங்கே போய் ஒளிந்துகொள்ளுவேன் என்று அலறினாள்.

“இரண்டு ரூபாய் கொடுத்தால், முத்துசாமி ஆசாரி தெருவில் ஒரு அம்மாள் இருக்கிறாள்; அவள் எல்லாம் செய்துவிடுவாள் ” என்றாள் தோழி.

போலீசாருக்குத் தெரிந்துவிட்டால் பிடித்துப் போவார்களாமே?” என்றாள் தேவானை.

“அதெல்லாம் பயப்படாதே. அந்த அம்மாளுக் கும் போலீசாருக்கும் ரொம்ப சிநேகம். ரூபாய்தான் எல்லாம் செய்யுமே, உனக்குத் தெரியாதா?.. என் றாள் அவள்.

“ஐயோ, நான் ரூபாய்க்கு எங்கே போவேன்? தெய்வமே என்னை இப்படி மறந்தாயே நான் இந்தப் பாழாய்ப்போன ஊருக்கு ஏன் வந்தேன்? சேலத்தில் சோறில்லாமல் செத்திருந்தாலும் நன்றாயிருந்திருக் குமே என்று கதறினாள்.

சில நாட்களுக்குப் பின் மற்றொருத்தி வேறு யோசனை சொன்னாள் : குழந்தையைக் கொல்லக் கூடாது அம்மா! அது மூன்று ஜன்மத்திற்கும் தீராத பாவமாகும் என்று சொல்லுகிறார்கள். பிள்ளையார் கோயில் தெருவில் ஒரு பாட்டியம்மா இருக்கிறாள். அவள் ரொம்ப நல்லவள். அவளிடம் போனால் எல்லாம் பார்த்துக் கொள்வாள். உன்னைப்போல் அனேகம் பேர் அவள் வீட்டில் இருந்து குழந்தை பெற்றிருக்கிறார்கள். நீ பயப்படாதே” என்றாள்.

“நீ மகராஜியாய் இருப்பாய், அக்கா! – என்று தேவானை அவளை வாழ்த்தினாள். பிறகு . தேவானை பிள்ளையார் கோயில் தெருவில் குடியிருந்த அந்தப் பரோபகாரியம்மை வீடு போய்ச் சேர்ந்தாள். கிரம மாய்ப் பிரசவம் நடந்தது. குழந்தையைத் தொட்டு எடுத்தவுடன் தேவானைக்கு உலகமே வேறு உருக் கொண்டது. எல்லாக் கஷ்டமும் மறந்துவிட்டாள். குழந்தை ஒன்றே உலகம் என்றெண்ணினாள்.

“தெய்வம் கொடுத்த குருந்து. இது என்ன செய் தது. பாவம் நான்தான் குலபாதகி” என்று குழந் தையை எடுத்துப் பாலூட்டுவாள். இவ்வாறு சில நாட்கள் கவலைகளை மறந்திருந்தாள்.

“நீ வேலைக்கு இப்போது போக முடியாது. தேவானை . இங்கேயே இன்னும் சிலநாள் இரு என்று, பிள்ளையார் கோயில் தெருப் பரோபகாரி யம்மை வெகு பரிதாபமாகச் சொன்னாள்.

“இவ்வளவு நல்லவர்கள் உலகத்திலிருக்க, நான் தெய்வத்தை நொந்தேனே” என்று ஆண்டவனைத் தேவானை வாழ்த்தினாள்.

ஒருமாதம் கழிந்ததும் உண்மை தெரிந்தது. அந்தக் கிழவி, மாந்தர்களால் ஏமாற்றப்பட்ட அனாதைப் பெண்களை வைத்து அக்கிரமத் தொழில் நடத்தி வருபவள். தேவானையும் இந்த வலையில் சிக்கிவிட்டாள். பிறகு அவள் ஆலைக்குப் போகவேயில்லை.

“சேலத்தில் நம் வீட்டில் வேலை செய்துகொண் டிருந்த தேவானை உனக்கு ஞாபகமில்லையா? அவளைப் போலவே யிருந்தாள் இந்தப் பிச்சைக்காரி” என்றார் இராமநாதய்யர்.

தேவானை சேலத்தில் முதலில் வேலை செய்து வந்த வீட்டு எஜமானரான பென்ஷன் உத்தியோகஸ்தருடைய மூத்த குமாரர் இராமநாதய்யர். இவருக்குச் சென்னை யில் ஒரு பெரிய பாங்கியில் காஷியர் வேலை.

“சேலத்துப் பெண் இங்கே என்னத்துக்கு இருப் பாள்? உங்களுக்குப் பிரமை” என்றாள் சீதாலக்ஷ்மி.

“என்னமோ, எப்படியோ. யாராக இருந்தாலும் குழந்தையை வைத்துக்கொண்டு இம்மாதிரி பெண்கள் பிச்சை யெடுக்கலாயிற்றே; நம் தேசம் என்ன நிலைக்கு வந்தது!” என்றார் இராமநாதய்யர்.

“உங்களுக்கு எப்போதும் தேசந்தான் யோசனை நம்முடைய குடும்பத்தை நாம் கவனித்தால் போதாதா?” என்றாள் மனைவி.

மறுநாள் மாலையும் இராமநாதய்யருக்கு அந்தப் பிச்சைக்காரி ஞாபகம் விடவில்லை. ஆபீசிலிருந்து சைனாபஜாருக்கு நேராய்ப் போனார். அவளை மறுபடி அவ்விடம் காணலாம். கண்டு விசாரிக்கலாம் என்று எண்ணி அந்த வழியாகச் சென்று அந்த சிற்றுண்டிச் சாலையண்டை வண்டியை நிறுத்திக் கொஞ்சநேரம் இருந்தார். பல பிச்சைக்காரர்கள் வந்து, ‘ஐயா, ஐயா..’ என்று சுற்றிக்கொண்டார்கள். ஆனால் அவளைக் காணவில்லை.

அடுத்த சனிக்கிழமை சாயந்திரம் இராமநாதய்யரும் மனைவியும் மறுபடி சைனாபஜார் பக்கம் போனார் கள். “அதோ, உங்கள் பிச்சைக்காரி” என்றாள் சீதாலக்ஷ்மி.

குழந்தையைக் கையில் ஏந்தி, “அம்மா, ஒரு அணா கொடு. இந்தக் குழந்தையைப் பார். அம்மா” என்று கெஞ்சிக்கொண்டு அங்கே கொஞ்ச தூரத்தில் வந்து நின்ற வேறொரு மோட்டார் வண்டியண்டை ஓட்டம் ஓட்டமாக அந்தப் பிச்சைக்காரி ஓடினாள்.

இராமநாதய்யருடைய வண்டிச் சாயல் பார்த்த தும் அதிலிருப்பவர்கள் ஒன்றும் கொடுக்கமாட்டார் கள் என்று பிச்சைக்காரி எண்ணி வேறு வண்டி யண்டை போனாள். பிச்சைக்காரர்களுக்கு இது அனுபவத்தால் வரும் அறிவு. எதிலும் புத்தி கூர் மையும் வேலைத்திறமையும் உண்டல்லவா? தூர நிற்கும் பிச்சைக்காரியைக் கூப்பிட இராமநாதய்யர் வெட்கப்பட்டார். ஆகையால் கொஞ்ச நேரம் சும்மா இருந்தார். அந்த வண்டியண்டை வேலை முடிந்ததும் தம்மிடம் வருவாள் என்று நினைத்தார். ஆனால் அவள் கூட்டத்தில் மறைந்து போய்ப் பிறகு காணப்பட வில்லை .

“சரி. போகலாம்” என்றாள் சீதாலக்ஷ்மி.

எட்டு நாள் கழித்து இராமநாதய்யரும் சீதா லக்ஷ்மியும் ஸினிமாவுக்குப் போனார்கள். கதை : நளோபாக்கியானம்.

கேட்டில் பெருங்கூட்டம் : புதிய ஸ்டார் டி. கே. தனபாக்கியம், தமயந்தி பார்ட்.

“அடுத்த காட்சிக்குத்தான் போக முடியும் – இந்தக் காட்சிக்கு டிக்கட்டுகள் முடிந்துவிட்டன என்றார்கள்.

“வீட்டுக்குப் போய் வரலாமா என்றார் இராம. நாதய்யர்.

சீதாலக்ஷ்மி பதில் சொல்லுவதற்குள்ளாக “அம்மா பிச்சை கொடு அம்மா” என்றாள் ஒருத்தி மோட்டார் கதவண்டை.

சேலத்துப் பெண்ணா என்று பார்க்க இராமநாதய் யர் திரும்பிப் பார்த்தார். அவருக்கு அதே பைத்தியம் அவளல்ல, வேறொருத்தி.

“இங்கே வண்டி நிறுத்தினால் பிச்சைக்காரர் கள் தொல்லை. வீட்டுக்குச் சீக்கிரமாக ஓட்டு. இரா மன் நாயர்” என்றாள் சீதாலக்ஷ்மி மோட்டாரோட்டிக்கு.

அதே சமயம் ஒரு போலீஸ்காரன் தடியை வீசி அந்தப் பிச்சைக்காரியைத் துரத்தினான்.

அன்றிரவு இராமநாதய்யர் கனவில் பிச்சைக் காரியைக் காண்கிறார்.

“நீ தேவானையல்லவா? எந்த ஊர் நீ?” என்றார்.

மகிழ்ச்சியால் கண்கள் அகன்று, தன் குழந்தை யைத் தழுவிக்கொண்டு. “சாமி! சாமி ! நீங்கள் சேலமல்லவா? வேப்பமரத்து வீட்டு மகனல்லவா?” என்றாள் பிச்சைக்காரி.

‘நாயர்! இவளை முன்னால் ஏற்றிக்கொள்” என்று மோட்டார் ஓட்டிக்குச் சொன்னார்.

வீடு போனதும், “இவள் யார்? இந்தச் சனியனை ஏன் வீட்டுக்கு அழைத்து வந்தீர்கள்?” என்றாள் மனைவி.

“நம் வீட்டில் இவளை நாம் ஏன் வேலைக்கு வைத் துக்கொள்ளக்கூடாது? சாப்பாடு போட்டு நாலு ரூபாய் சம்பளம் தரலாம்” என்றார்.

“நல்ல யோசனை செய்தீர்கள்! கெட்டுப்போனதுகளை யெல்லாம் வீட்டில் சேர்த்துக்கொள்ளவா? நல்ல புத்திசாலித்தனந்தான்! போ வெளியே!..” என்றாள் சீலாலக்ஷ்மி

“நான் திருடமாட்டேன், அம்மா! இட்ட வேலை யெல்லாம் செய்வேன். அம்மா” என்றாள் பிச்சைக் காரி.

‘முடியாது. போ வெளியே” என்றாள் சீதாலக்ஷ்மி.

ஒரு ரூபாய் கொடுத்தனுப்பலாம் என்று இராம நாதய்யர் பையை எடுக்கப்போனார். பை ஜேபியில் காணவில்லை. தேடித் தேடி அலைந்தார். பிச்சைக்காரியின் குழந்தை பலக்க அழ ஆரம்பித்தது..

விழித்துக்கொண்டார்….கனவு தம் குழந்தை ராதா படுக்கையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தது.

“நல்லவேளை, சீதாலக்ஷ்மி உண்மையில் இவ்வளவு குரூரமாயிருக்கமாட்டாள்: கனவுதானே” என்று இராமநாதய்யர் சந்தோஷப்பட்டார்.

பிறகு பலநாள் வரையில் இராமநாதய்யர், கடை ரயில்வே ஸ்டேஷன். சினிமா எங்கேயும் பார்த்துக் கொண்டேயிருப்பார். ஆனால் அந்தப் பிச்சைக்காரியை மட்டும் அவர் காணவேயில்லை. அவள் என்ன ஆனாளோ, யாருக்குத் தெரியும்?

– ராஜாஜி சிறுகதைகள், முதற் பதிப்பு: 1944, புதுமைப் பதிப்பகம், காரைக்குடி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *