தேன்மொழி அக்கா ஊருக்கு வருகிறார் என்றால் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான்.. அவரவர் வீட்டில்தேட மாட்டார்கள். இரவு வீடு திரும்பினால்தான். சாப்பாடு கூட தேன்மொழி அக்கா வீட்டிலேயே கிடைத்துவிடும்.
’பாரேன்.. வருசம் முச்சூடும் நாம இருக்கமான்னு கூட பார்க்க மாட்டேங்குது. இவ வந்துட்டா சோறு.. தண்ணி.. பீ.. மூத்திரம்.. எல்லாம் இங்கேயேதான். ஊர்க் கோழியெல்லாம் நம்ம கூட்டுல’
அக்காவின் அம்மாவுக்கு வார்த்தைகள் பளிச்சென்று வரும். எங்களுக்கோ எதுவும் காதில் விழாது. அக்காவின் ஏவல்களில் ‘நான் முந்தி.. நீ முந்தி’ என்று ஓடுவோம்.
”ஏய்.. விழப் போறிங்க. மெல்லமாப் போனாத்தான் என்னவாம்”
அடுத்த வேலைக்கு யார் முதலில் வருவது என்கிற போட்டியில் இருக்கும் எங்களுக்கு எதுவும் காதில் விழாது.
கனகுவும் நானும் பெரும்பாலும் சணடை போட மாட்டோம். ஆனால் செல்வம் வந்துவிட்டால் எல்லாம் மாறிவிடும். அக்காவின் கட்டளைகளைக் கேட்டு அதை ரகவாரியாகப் பிரித்து, முக்கியமில்லாத, உடம்பு நோகிற வேலைகளை மட்டும் எங்களுக்குக் கொடுத்து விடுவான்.
அதையும் சலித்துக் கொள்ளாமல் செய்வோம். முனகினால் அக்காவிடம் போட்டுக் கொடுத்துவிடுவான் என்கிற பயம்.
காலையில் எழுந்திருப்பதிலிருந்து இரவு படுக்கப் போகிறவரை எல்லாம் அக்கா இஷ்டப்படிதான்.
’என் வேலையை எப்படிச் செய்யணும் என்று எனக்குத் தெரியும்’
அக்கா கொஞ்சம் வாயாடி. கண்களில் எப்போதும் குறும்பு கொப்பளித்துக் கொண்டிருக்கும். விளக்கேற்றி வைத்த மாதிரி முகத்தில் ஒரு பளபளப்பு.
‘நீங்க ரொம்ப அழகு’ என்றால் சிரிப்பார்.
ஆற்றில் குளிக்க துணிமூட்டையை எடுத்துக் கொண்டு போவோம். துணி மூட்டை அப்படியே தரையில் கிடக்கும். பெயர்தான் ஆறு. மழைக் காலங்களில் நீரைப் பார்க்கலாம்.
அக்கா பாவாடையை உயர்த்திக் கட்டி ஆற்றில் ஒற்றைக் கோடாய் ஓடுகிற நீரில் இறங்குவார். அதற்குள் போட்டி போட்டுக் கொண்டு பள்ளம் பறித்து வைத்திருப்போம். அதுதான் எங்கள் நீச்சல் குளம். மறுபடியும் மணல் அரித்து வந்து பறித்து வைத்திருந்த குழியை மூடி விடும். ஒரு மணி நேரமாவது நீரில் அலைவோம். கனகு குளிரில் நடுங்குவது போல் ஆடுவாள். உடம்பு ஜில்லிட்டுப் போய் விடும்.
’ஐஸ் பொட்டிலேர்ந்து வர மாதிரி இல்ல.. இவ ஒடம்பு விரைச்சுக் கிடக்கு’
வெய்யிலில் நின்று கொண்டிருப்பாள். நாங்கள் துணி துவைத்து மணல் மேட்டில் உலர்த்துவோம். தலை முடி நுனியில் முடிச்சு போட்டுக் கொண்டு அக்கா ஒவ்வொரு துணியாய் நீரில் அலசித் தருவார்.
அக்காவிற்கு சுருள் முடி. முகத்தில் வழிந்து அழகாய்ப் பரவியிருக்கும். தலைமுடி நுனியில் சொட்டு சொட்டாய் நீர் கசியும். புடவையை நாலாய் மடித்து மேலேபோட்டுக் கொண்டு தெருவில் நடந்து வருவார். பின்னாலாயே நாங்கள் ஓடி வருவோம்.
கனகு எப்போதும் ஏதாவது ஒரு துணியை கீழே போட்டு விடுவாள்.
’பாரேன்.. இதைக் கூட தூக்க முடியலே.. மணல்ல போட்டு புரட்டிக் கொண்டு வந்திருக்கா’ என்று அவள் அம்மா திட்டும் போது அக்காதான் சமாளிப்பார்.
’எதிர்ல வண்டி வந்திருச்சா.. தடுமாறீக் கீழே போட்டிருச்சு’
அக்காவை அந்த நிமிஷம் எங்களுக்கு அதிகமாய்ப் பிடித்து விடும். ஈர உடை என்று பாராமல் மேலே ஒட்டிக் கொள்வோம். துணி மாற்றிக் கோள்கிற அவகாசம்தான். மீண்டும் அக்காவைத் தேடிப் போய் விடுவோம். செல்வம் ஒரு வாரமாய் வராதிருந்தவன் நேற்று வந்தானாம். நாங்கள் வரும் போது அவன் இல்லை. கிளம்பிப் போய்விட்டானாம்.
’செல்வம் வந்தானாக்கா’
அக்கா முகத்தில் இருளடித்திருந்தது. பதில் சொல்லவில்லை. ஏதோ ஒரு கடிதம் போல படித்துக் கொண்டிருந்தவர் எங்களைப் பார்த்ததும் மறைத்து விட்டார். நான் செல்வத்தை பற்றி மறுபடியும் கேட்டேன்.
’அவனைப் பத்தி பேசாதே’
அக்கா சிரிக்காமல் பேசியது அப்போதுதான்.
’கொடுத்தவந்தான் புத்தி இல்லாம கொடுத்தா, இவனுக்கு அறிவு எங்கே போச்சு.. கையை நீட்டி வாங்கிகிட்டு வந்திருக்கான்.. புத்தி கெட்ட பய..’ என்று முனகியதும் செல்வத்தைத்தான் சொல்கிறார் என்று எங்களுக்கு சந்தோஷமாக இருந்தது.
அன்று மாலை செல்வம் வந்தான்.
‘அக்கா.. அவன் வரான்’
காதைத் தீட்டிக் கொண்டு நின்றோம்.
’உம்மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்க’
அக்கா சீறியதும் செல்வம் எங்களைப் பார்த்தான்.
”வெளியே போங்க”
நாங்கள் அக்காவைப் பார்த்தோம். அக்கா பேசவில்லை. செல்வம் மறுபடி அதட்டியதும் எங்களுக்கு வேறுவழி தெரியவில்லை. வாசலில் போய் நின்றோம். செல்வம் திரும்பி வரும் போது அழுவாச்சியா வருவான்.. கேலி செய்து சிரிக்கலாம் என்று காத்திருந்தோம்.
பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு செல்வம் வந்தான். விசில் அடித்தான். கனகுவின் தலைமுடியைப் பிடித்து இழுத்தான். போய் விட்டான்.
உள்ளே எட்டிப் பார்த்தோம். அக்கா அதே கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்தார். இந்த முறை அவர் முகத்தில் மலர்ச்சி. அக்கா எழுதிய பதிலை செல்வம் கொண்டு போனான்.
எங்களுக்குக் கையொடிந்த மாதிரி ஒரு பிரமை. அக்கா முன்பு போல இல்லை. நாங்கள் வந்தாலும் கவனிப்பதில்லை. செல்வத்திற்கு செலவிற்கு பணம் கொடுப்பதைப் பார்த்து எங்களுக்கு அழுகையே வந்து விட்டது.
அக்காவின் அம்மாவிடம் ஒரு நாள் மாட்டிக் கொண்டோம்.
’யாருடி கடுதாசி கொண்டு வர்றது’
முன்னால் நின்ற என் ஜடையைப் பிடித்து இழுத்தார்.
கனகு பயந்து ஓடிப் போய் விட்டாள்.
”நான் இல்ல” என்றேன்.
”வேற யாரு”
“தெரியாது”
“தெரியாது?”
”ஆணை வுட்டேன்.. தெரியாது..” என்றேன் அழுதபடி.
அக்கா பாவம் . நான் மாட்டிவிடக் கூடாது.
“அவளுக்கு ஒரு வழி பண்றேன்.. பாவி மக.. எம்மானத்தை வாங்கிருவா.. இப்படியே வுட்டா”
தேன்மொழி அக்காவிற்கு அவசரம் அவசரமாய் வரன் பார்த்தார்கள். வந்தவன் லேசான தொப்பையுடன் இருந்தான். பெரிய மீசை. கண்களில் சிவப்பு. அக்காவைப் பிடிச்சிருக்கு என்று அப்போதே சொல்லி விட்டார்கள். பாக்கு, வெத்தலை மாற்றிக் கொண்டார்கள். மெகானிக் ஷாப் வைத்திருக்கிறாராம். பெரிய பைக் வச்சிருக்காராம். அக்காவும் சம்மதமென்று தலையாட்டியது. கல்யாணத்திற்கு நாள் குறித்து விட்டார்கள்.
செல்வம் ஒரு நாள் வந்து ஏதோ கேட்டுக் கொண்டிருந்தான். அக்கா அலட்சியமாய் நின்றார். செல்வம் தலையைத் தொங்க போட்டுக் கொண்டு போனதும் எங்களுக்கு மகிழ்ச்சி வரவில்லை.
கல்யாணத்தில் எங்களையும் ஒரு பக்கம் உட்கார வைத்து சோறு போட்டார்கள். கனகு கூச்சப்படாமல் இன்னொரு தரம் பாயசம் கேட்டு வாங்கிச் சாப்பிட்டாள்.
அக்கா ஒரு மாசம் கழிச்சு வந்தபோது அவர் வீட்டிற்கு போனோம்.
”யாரு இவுங்க” என்றார் அக்காவின் வீட்டுக்காரர்.
”தெருப் புள்ளைங்க..அக்கா.. அக்கான்னு சுத்தி வரும்”
”எனக்கு சத்தமே பிடிக்காது.. எப்ப பாரு கூட்டம் போட்டாப்ல இருந்தா.. இது வீடா.. இல்ல சந்தையா”
எங்கள் பிரியமான அக்கா உடனே எங்களைப் பார்த்துச் சொன்னார்.
”போங்கடி.. இனிமேல இங்கே வந்தா”
’தமாஷுக்கு’ என்று கண் சிமிட்டுவார் என்று பார்த்தோம். இல்லை.
கண்களில் குறும்பு கொப்பளிக்கிற அக்காவிற்குப் பதிலாக வேறு யாரோ நின்று எங்களை வாசலுக்கு விரட்டினார்.
– ஜூன் 2011