தெரியாத பக்கங்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 26, 2014
பார்வையிட்டோர்: 8,809 
 
 

(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த வீட்டின் வாசலுக்கு வந்து சைக்கிளை நிறுத்தி ‘இதுதான் வீடு.. இறங்கு!” என மாமன்; சொன்னபோதுதான் நினைவு திரும்பியவள் போலானாள் பிரேமா.

சைக்கிளில் அமர்ந்தபடியே வீட்டைப் பார்த்தாள். பெரிய வீடு…. முன் பின் தெரியாத இடம். மிரட்சியடைந்து முகம் மாறினாள்.

‘பயப்பிடாமல் இறங்கம்மா!” சைக்கிளை ஒரு பக்கமாக மதிலிற் சாத்தினான்.

‘வா போகலாம்!”

பயமும் குழப்பமும் போகவிடாது தடுத்தன. பிரேமா சிணுங்கி மறுத்தாள். மாமன் சற்று அதட்டலாகப் பேசினான். ‘இந்தா…. சொல்லிப்போட்டன்…. உள்ளுக்குள்ள வந்து அழுதுகொண்டு நிக்கக்கூடாது.”

நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டவைபோல கால்கள் தயங்கித் தயங்கி அவன் பின்னே அடியெடுத்து வைத்தன.

மூன்று நாட்களுக்கு முன் மாமன் இதுபற்றி வீட்டில் கேட்டபோதுகூட கடைசியில் இப்படி வந்து முடியும் என்று பிரேமா நினைத்திருக்கவில்லை. அப்போது மாமனோடு அம்மா சன்னதம் கொண்டு எழுந்தாள்.

‘அதுகள் இஞ்சை சாப்பிடாமல் கிடந்து செத்தாலும் பரவாயில்லை. இன்னொருத்தர் வீட்டிலை வேலை செய்ய விடமாட்டன்.”

மாமன் விடவில்லை. எத்தனையோ சமாதானங்களைச் சொன்னான்.

‘அக்கா…. கொஞ்சமெண்டாலும் யோசிச்சுப் பார்…. அத்தானும் வருத்தக்காறன். நாலு குஞ்சுகளையும் வைச்சுக்கொண்டு எத்தனை நாளைக்குத்தான் அரிசி இடிச்சும்…. பாத்திரங்கள் தேச்சும் அதுகளைக் காப்பாத்துவாய்…?”

‘நான் சொல்றது நல்ல இடம்… அங்கை விட்டால் இவளெண்டாலும் மூன்று வேளையும் சாப்பிடுவாள்… அதை விட்டிட்டு உன்னோடை வைச்சு எல்லாத்தையும் பட்டினி போட்டு பலி குடுக்கப் போறியோ?”

‘மாசா மாசம் முன்னூறு நானூறு ரூபா சம்பளம் போட்டுத் தருவினம்…. மறுக்காமல் ஓமெண்டு சொல்லக்கா!”

இரண்டு நாட்களாக இப்படிப் பேசிப் பேசியே சம்மதிக்க வைத்துவிட்டான் மாமன். பிரேமாவுக்கும் புத்தி சொன்னான்.

‘நீ போய் வேலை செய்தாத்தானேம்மா…. தம்பி தங்கச்சியவையும் சாப்பிடலாம்!”

அந்த வார்த்தைதான் பிரேமாவின் மனதைக் கொஞ்சம் மசிய வைத்தது. எனினும் முழுமனதுடன் வரவில்லை. தன்னியல்பில்லாமல் ஏதோ ஒரு கட்டளைக்கு உட்பட்டு இயங்குவதுபோல, பிரமை பிடித்தது போலத்தான் பிரேமாவின் மனநிலை இருந்தது.

‘வா மணியம்…! சொன்னபடி கரெக்டாய் வந்திட்டாய்…”

வீட்டுக்காரரின் பேச்சில் மாமன் உச்சி குளிர்ந்தவன் போல அடக்கமாகச் சிரித்தான். பிரேமாவுக்கு எல்லாம் நெஞ்சுக்குள்ளே அனலை மூட்டிக்கொண்டிருந்தது. மலைப்புடன் வீட்டைப் பார்த்தபடி நின்றாள்.

அண்டை அயற் சிறுவர்களுடன் புளுதி அளைந்து ஓடி ஆடிய விளையாட்டுகள் இனி இல்லை. ஓலைக் குடிசையின் மண்குந்தில் நினைத்தபோது உருண்டு எழும் சுகம் இனி இல்லை. பசித்தால் அம்மாவிடம் கேட்கலாம்…. போட்டால் சாப்பிடலாம். இல்லாவிட்டால் அழலாம்…. அந்த சுதந்திரம் இனி இல்லை. இவர்கள் போட்ட சாப்பாட்டைத் தின்றுகொண்டு கிடக்க வேண்டியதுதான். தன் வீடு.. தான் என்ற உரிமை இனி இல்லை.

வீட்டுக்கார அம்மா பிரேமாவை ஏற இறங்கப் பார்த்தாள். ‘பெரிய பிள்ளையெண்டு சொன்னீர்… இவவுக்கு பன்ரெண்டு பதின்மூண்டு வயசும் வராதுபோல… எங்கட பிள்ளையளைவிட ரெண்டொரு வயசுதான் கூட இருக்கும்” என அபிப்பிராயப்பட்டாள்.

மாமன் பிரேமாவின் தகுதிபற்றிக் கதையளக்கத் தொடங்கினான்.

‘அவ ஆள் சின்னனெண்டாலும் எல்லா வேலையும் நல்லாய் செய்வா…. வலு சுட்டி…! இதுக்கு முதலும் ரெண்டு வீட்டிலை வேலைக்கு நிண்ட அனுபவமும் இருக்கு….”

பிரேமாவுக்கு எரிச்சல் மூக்கு நுனிக்கு வந்தது. கோபத்தைப் பற்களுக்குள் கடித்து அடக்கினாள். ஷஇந்த ஆளுக்கு வாய் திறந்தால் பொய்தான்!|

‘பிரேமா என்ர மருமகள்தான்… ஒரு குழப்படி கரைச்சலுமில்லாமல் நிப்பா!” என மாமன் வீட்டுக்காரருக்கு உறுதிமொழியும் வழங்கினான். ‘எண்டாலும்… நீங்கள் என்ர கொமிசனைத் தந்திடவேணும்!”

தன்னுடன் சேர்ந்து விளையாடிய அயலிலுள்ள வயது கூடியதும் குறைந்ததுமான பிள்ளைகள் சித்திரா, சுந்தரி, மல்லிகா போன்றோரின் நினைவு வந்தது. அவர்களையும் மாமன் வேலைக்கென பல வீடுகளிலும் கொண்டுபோய் சேர்த்துவிட்டிருக்கிறான். க~;டப்பட்ட சனங்களுக்கு உதவி செய்வதாக அவனுக்கு அங்கு நல்ல பெயருமுண்டு! அந்தப் பொறியில் தானும் அகப்பட்டுப்போன கதிக்கு மௌன அஞ்சலி செலுத்திக்கொண்டு நின்றாள் பிரேமா.

வீதியில் ஓடும் செஞ்சிலுவை சங்க முதலுதவி வாகனமொன்றில் அவலமான சைரன் அலறல் கேட்டு, ‘எங்கையோ குண்டு போட்டிட்டாங்கள் போல… ஆரார் செத்தினமோ!” என வீட்டுக்காரர் பெருமூச்செறிந்தார்.

பிரேமாவுக்கு அப்பாவின் நினைவு வந்தது. அப்பாவுக்கும் குண்டுதான் பட்டது. n~ல் வெடித்துப் பறந்த துண்டு வயிற்றை வெட்டி கிழித்ததாம். ஆஸ்பத்திரியிற் கொண்டுபோய் போட்டார்கள். ஒரு மாதம்வரை கிடந்தார். ஆனால் தொட்ட (பட்ட) சனியன் விடவில்லை. அடிக்கடி படுக்கையில் விழுந்தார். அவர் சுகதேகியாக இருந்து உழைத்துப் போட்டதுவரை பிரேமாவும் எல்லா வீட்டுப் பிள்ளைகளையும் போல உண்டு உடுத்து இருந்தாள்.

அம்மா பாவம்.. பிள்ளைகளுக்குச் சாப்பாடு போடவேண்டும். அப்பாவைப் படுக்கையிலிருந்து எழுப்பவேண்டும். மாடாக உழைக்கிறாள். ஆனால் ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமென்று கொண்டு திரியவும் முடியவில்லை – வாகன வசதியில்லை. ஊர்ப்பரியாரி ஏதோ க~hயங்களெல்லாம் செய்து கொடுக்கிறார். அதற்கு ஏதாவது பலன் தெரிவதாகவும் இல்லை. நல்ல மருந்து வேண்டுமாம்… இங்கே கிடையாதாம்… கொழும்புக்குத்தான் கொண்டுபோக வேண்டுமாம் – பரியாரி சொல்கிறார். கொழும்பு எந்த உலகத்தில் இருக்கிறது என யாருக்குத் தெரியும் என அம்மா புலம்புகிறாள்…

ஷஅப்பா! எங்களையெல்லாம் இந்தக் கதிக்கு ஆளாக்கி பேசாமற் படுத்திருக்க உங்களால் எப்படி முடிகிறது…? நீங்கள் எழுந்து வரவேண்டும். அப்பா! உங்கள் செல்லமகள் தன் வயிற்றுப்பாட்டுக்காக தானே உழைக்கப் புறப்பட்டிருக்கிறாள். தன் சின்னஞ்சிறு கால்களுடன். அது உங்களுக்குத் தெரியுமா?| – அழுகை உடைந்து வந்தது. பிரேமா வாய்விட்டு அழுதாள்.

‘என்ன இது மணியம்….? விருப்பமில்லாம பிள்ளையை வற்புறுத்திக் கொண்டுவந்த மாதிரி இருக்கு?”

‘என்னம்மா… அழக்கூடாதென்றெல்லே சொன்னனான்!”- மாமன் அதட்டினான்.

பிரேமா விம்மல்களுக்கிடையே, ‘அப்பா…. அப்பா!” என்று மட்டும் சொன்னாள். அதைக் கேட்டு மாமன் வீட்டுக்காரருக்கு மொழி பெயர்த்தான்.

‘தகப்பன் கொஞ்சம் சுகமில்லாமல் இருக்கிறார்… பிள்ளை அதை நினைச்சுத்தான் அழுறா!”

பிரேமா முயன்று குரலை வெளிப்படுத்தினாள். ஷஅப்பாவைப் பாத்திட்டு ரெண்டு நாளைக்குப் பிறகு வாறன்!|

வீட்டுக்கார ஐயா யோசிப்பது போலிருந்தது. பிறகு மாமனிடம் சொன்னார்:

‘உன்ரை கொமிசனைத் தாறன்…! நீ அவளைக் கூட்டிக்கொண்டு போ… மனம் ஆறின பிறகு கொண்டுவந்து விடு!”

மாமன் கடத்தினான்.

‘இப்ப வேறை ஒரு அலுவலாய் போறேனுங்கோ…. பின்னேரம் திரும்ப வந்து வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போறன்!”

தனது கொமிசன் ஐநூறு ரூபாவைப் பெற்றுக்கொண்டு மாமன் புறப்பட்டான். பிரேமா குசினிக்குக் கூட்டிப் போகப்பட்டாள்.

வீட்டுக்கார அம்மா சமையலில் ஈடுபட்டாள். பிரேமா ஒரு பக்கமாக அடக்க ஒடுக்கமாக நின்றாள். வீட்டிலென்றால் அம்மாவுடன் சண்டை பிடிக்கலாம். அது சரியில்லை, இது சரியில்லை என அடம் பிடிக்கலாம். இங்கே இவர்கள் சொன்ன சொற் கேட்கவேண்டும்.

‘இந்தா…! இந்த வெங்காயத்தைக் கொஞ்சம் உரிச்சுத் தாரும் பிள்ளை!”

அம்மா சமைக்கும்போது வெங்காயம் உரிப்பது, காய்கறி வெட்டுவது, தேங்காய் துருவுவது போன்ற வேலைகளைச் செய்து கொடுக்கவேண்டும் போலிருக்கும். அது ஒரு விளையாட்டுப் போல…. செய்யவேண்டும் போல ஆசையாக இருக்கும். அம்மா அதற்கு விடமாட்டாள்.

‘ஆய்க்கினைப் படுத்தாமல் போ பிள்ளை! நான் கைச்சுறுக்காய்ச் சமைச்சுப் போட்டு மா இடிக்கப் போகவேணும்!”

அம்மா ஓரிடத்தில் இருக்கமாட்டாள். ஒரே ஓட்டம்தான். காலையில் ஒரு வீட்டுக்கு வேலைக்குப் போவாள். பிறகு வந்து சமையல், மாலையில் இன்னொரு வீட்டுக்கு ஓடுவாள். அவள் ஒரு மெ~pன்.

ஷஅம்மா! எனக்கு நீ அதையெல்லாம் பழக்கியிருக்கலாம். என்னை நீ இப்படி இன்னொரு வீட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாயிருந்தால் ஏன் அவற்றைக் கற்றுத் தரவில்லை? நான் இப்போது என்ன செய்வேன்? ஏதாவது தவறு விட்டு இவர்களிடம் திட்டு வாங்குவதா?|

பிரேமாவின் கண்களில் நீர் முட்டியது. அசுகையின்றிக் கண்களைத் துடைத்தாள். கட்டுப்படவில்லை. சட்டெனக் குனிந்து சட்டையிற் கண்ணீரை ஒற்றி எடுத்தாள்.

‘என்ன பிள்ளை… வெங்காயம் உரிச்சுப் பழக்கமில்லையா….? கண் எரியுது போல?” வீட்டுக்கார அம்மாவின் அதட்டல்.

பிரேமாவுக்கு வீட்டுக்குப் போகவேண்டும் போலிருந்தது. அம்மாவிடம் இதையெல்லாம் சொல்ல வேண்டும். வெங்காயத்தைக் கையிலெடுத்தால் கை நடுங்குகிறது. அது பயத்தினாலா, பரிச்சயம் இல்லாததனாலா என்று புரியவில்லை. வேலையில் இப்படியெல்லாம் பிரச்சினை வருகிறது. எப்படிச் சமாளிப்பது என்று அம்மாவிடம் கேட்கவேண்டும். அம்மாவுடன் கூடச் சேர்ந்து வேலைக்குப் போய்வந்தால் நல்லது. சில நாட்கள் போனாலே பழகிவிடலாம். எப்படியாவது வீட்டுக்குப் போகத்தான் வேண்டும்.

‘சரி…. சரி… அதை வைச்சிட்டு எழும்பிக் கண்ணைக் கழுவும்!”

வீட்டுக்கார அம்மா ஒரு பக்கட் நிறைய உடுதுணிகளைக் கொடுத்துக் கழுவிவரச் சொன்னாள்.

அந்தப் பக்கட்டைக் காவிக்கொண்டு கிணற்றடிக்குப் போனாள் பிரேமா.

அதை வைத்துவிட்டு தலையிற் கை வைத்துக்கொண்டு அமரலாம் போலிருந்தது. அவளது உடுதுணிகளையெல்லாம் அப்பா தேய்ச்சுக் கழுவுவது நேற்றுப்போல கண்களிற் தெரிகிறது. அவர் பேசிய செல்லக்கதைகள் இப்போதும் காதுகளில் ஒலிக்கின்றன. ஷஎன்ர குஞ்சுகளுக்கு ஒரு குறையும் வைக்கமாட்டன்| – அப்பா இதோ உங்கள் குஞ்சு சிறகு முளைக்க முதலே இரை தேடிப் பறக்கிறது. சம்மதம்தானே?

துணியை எடுத்தபோது கைகள் நடுங்கின. சோப்பை எந்தப் பக்கமாகப் பிடித்து எப்படித் தேய்ப்பது என்றுகூடப் புரியவில்லை. கைக்குள் அடங்காது சோப் உயிர் மீனைப்போல நழுவி விழுந்தது. ஷஆண்டவனே! வேலைக்காகச் சிறுமிகளைப் படைக்கும்போது அவர்களின் கைகளையாவது நீ பெரிதாகப் படைத்திருக்கலாம்.|

அம்மா ஒவ்வொரு வீடாகப் போய் இவற்றையெல்லாம் எப்படிச் செய்து முடிக்கிறாள் எனப் பிரமிப்புத் தோன்றியது. அந்தக் கணமே பிரேமாவின் கைகள் ஓர் இயந்திரத்தைப் போல தொழிற்படத் தொடங்கின.

கண்கள் நீரை உகுத்துக்கொண்டிருந்தன.

வீட்டுக்கார அம்மா வந்து பார்த்தாள்.

‘என்ன பிரேமா…. அழுதுகொண்டிருக்கிறீரோ…. வேலை செய்கிறீரோ? அதை வைச்சிட்டு எழும்பும்… நான் செய்யிறன்”

அவள் ஏசுகிறாளா அல்லது இரங்குகிறாளா என்று பிரேமாவுக்குப் புரியாமலிருந்தது. குற்ற மனப்பான்மை உறுத்த பிரேமா சுருங்கிப்போய் நின்றாள்.

‘முகத்தைக் கழுவிப்போட்டு வாரும்…. சாப்பிட!”

வீட்டு அம்மா ஒரு கோப்பையிற் சோற்றைப் போட்டுக் கொடுத்தாள். பிரேமா ஒரு பக்கமாக அமர்ந்து சோற்றைக் கையிலெடுத்தாள்.

ஷதம்பி தங்கைகள் இன்றைக்குச் சாப்பிட்டிருப்பார்களா? அம்மா சமைத்திருப்பாளா?

சில வேளைகளில் அம்மா சமைப்பதில்லை. அரிசி கிடைக்காமற் போகும். மரவள்ளிக் கிழங்கு அல்லது பனங்கிழங்கு அவித்துத் தின்னத் தருவாள். ஆனால் சோறு…! அதற்கு உவப்பான கறிகளுடன் சாப்பிடும்போது எவ்வளவு சோக்காய் இருக்கும்! இன்றைக்குச் சோறுதான் வேண்டுமென்று தம்பி அடம்பிடித்துக் கொண்டு கிடப்பானோ என்னவோ! பிரேமாவுக்குச் சோறு இறங்கவில்லை. தொண்டையில் அடைத்துக் கொண்டதுபோல நோவெடுத்தது.|

‘இதென்ன பிள்ளை… அப்பிடியே வைச்சுக் கொண்டிருக்கிறீர்… சாப்பிடும்…!”

சாப்பிட வேண்டியிருந்தது.

வீட்டுக்கார அம்மா நனையவைத்த அரிசியைக் கொடுத்தாள். ‘இதை இடிச்சுக்கொண்டு வாரும்!”

பிரேமா சீவியத்தில் உலக்கை பிடித்து அறிவாளா? இனி இதெல்லாம் பழகத்தான் வேண்டும். இனிச் சிறுபிள்ளையல்ல. தம்பி, தங்கைகளை நினைத்துக்கொண்டு ஒவ்வொரு இடியாக இடித்தாள் – அவர்களும் என்னைப் போல் இன்னொரு வீட்டுக்குப் போய் இடிபடக்கூடாது.

வெளியே பிள்ளைகள் விளையாடினார்கள். ஒருவரை ஒருவர் அடித்து கூக்குரலிட்டு ஓடி…. ஆ…! எவ்வளவு முஸ்ப்பாத்தி! தம்பியோடு விளையாடும்போது சிறு சிறு தகராறுக்கெல்லாம் அடிபட்டிருக்கிறாள். அம்மாவிடம் கோள் சொல்லி அடி வேண்டிக் கொடுத்திருக்கிறாள். தம்பி! நான் இனி இந்த வேலைகளையெல்லாம் உங்களுக்காகச் செய்யப் போகிறேன். நீங்கள் வயிறு நிரம்பச் சாப்பிட வேண்டும். சந்தோ~மாய் இருக்க வேண்டும். அம்மா எப்போதும் சொல்வாள் ஷஉன்னைப் பார்த்தால் அப்பாவைப் போல| என்று. அந்த முகம் உன்னிடம் இருக்கிறது. நீ எங்களுக்கு அப்பாவைப் போல இருப்பாயா?

பதிலாகக் கண்ணீர் பொங்கி வந்தது. இடிப்பதை நிறுத்தி ஒரு கையால் முகத்தைப் பொத்தினாள் பிரேமா.

‘என்ன பிரேமா….? எந்த நேரமும் அழுதுகொண்டு…? விட்டிட்டுப் போ…! நான் செய்யிறன்!”

பிரேமா அழுதாள். தாழ்வாரத்தில் ஒதுங்கிநின்று அழுது தீர்க்க முயன்றாள். முடியாமல் அழுகை நீண்டுகொண்டிருந்தது. வீட்டுப்பிள்ளைகள் வந்து பார்த்தார்கள்.

‘ஏன் அழுகிறீங்க?” பதில் பேசாத பிரேமாவைக் கண்டு கலவரத்துடன் அம்மாவிடம் ஓடினார்கள். ‘அந்த அக்கா… அழுறா!”

‘அது தலைவிதி!… ஊரிலையுள்ள தொல்லைகளை எல்லாம் என்ர தலையில கொண்டுவந்து சுமத்திறதுதானே அப்பாவுக்கு வேலை!” என அம்மா சொல்வது கேட்டது.

ஐயா வந்தார். ‘என்னம்மா… ஏன் நெடுகலும் அழுகிறாய்?” பதிலாக பிரேமாவின் நெஞ்சு விம்மி விம்மி வெடித்தது… ‘அப்பா!”

இயலாமல் கிடக்கும் அப்பாவுக்கு வேண்டிய கருமங்களில் எதையாவது செய்து கொடுக்கும்படி எப்போதாவது அம்மா கேட்பதுண்டு. பிரேமா மறுத்து ஓடிவிடுவாள். விளையாட்டுப் புத்தி. இப்போது…. அப்பாவுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து கொடுக்கவேண்டும் போலிருந்தது. அவருக்கு உணவூட்டிவிடவேண்டும். வெந்நீர் வைத்துக் குளிப்பாட்டவேண்டும். இரண்டு நாட்களுக்கேனும் கூட இருந்து கண்ணும் கருத்துமாகப் பார்க்கவேண்டும். எப்படியும் வீட்டுக்குப் போய்த்தான் ஆகவேண்டும்.

‘அழாமல் சொல்லம்மா… அப்பாவுக்கு என்ன?”

‘இன்னும் ரெண்டு நாளைக்கு உயிரோட இருக்கிறதே…. பெரிய காரியமாம்… பரியாரியார் சொன்னவர்!”

‘சரி… அழாதை…. உன்ர மாமன் மணியம் வாறனெண்டவன்தானே… கூட்டிக்கொண்டு போக?”

‘அவர் வரமாட்டார்…. நீங்கள் குடுத்த காசுக்குக் குடிச்சுப்போட்டுக் கிடப்பார்!”

அம்மா சத்தம் போட்டாள். ‘பாத்தீங்களே… அவளே சொல்லுறாள்… அவன் வரமாட்டானென்று! இதுகள் திட்டம் போட்டே கிளம்பியிருக்குதுகள்…. முந்தி ரண்டு வீட்டிலை நிண்டவள் எண்டு சொன்னவன்தானே… இப்படித்தான் ஒவ்வொரு இடமாய் விட்டு விட்டு நாடகம் ஆடி அவன் காசை வேண்டிக் கொண்டு போறான்… நீங்கள் ஏமாந்துபோய்க் கிடவுங்கோ.”

ஐயா அந்தப் பேச்சைக் கேட்டுக்கொண்டு அப்பால் போனார். அம்மா தொடர்ந்து சொல்வது கேட்டது.

‘அவளைப் பார்த்தால் வேலை செய்யிறவள் மாதிரி தெரியயில்லை. எனக்கு உதவியும் வேண்டாம்… உபத்திரவமும் வேண்டாம்… கொண்டு போய் விட்டிட்டு வாங்கோ!”

சற்று நேரத்தில் ஐயா வந்து சொன்னார்.. ‘வெளிக்கிடம்மா…! நான் கொண்டுபோய் விடுறன்.”

அப்போது அவர் வெகு ஆதரவாகவும் மென்மையாகவும் பேசியது பிரேமாவுக்குக் கவலையளித்தது.

சைக்கிளில் கரியரில் ஏறி அமர்ந்தபோது வீட்டு அம்மா வந்து இருபத்தைந்து ரூபா காசை பிரேமாவின் கையில் கொடுத்தாள். ஐயா கேள்விக்குறியுடன் பார்க்க….

‘அவளைக் கொண்டு கொஞ்ச வேலை செய்விச்சனான்… திரும்ப வருவாளோ… மாட்டாளோ தெரியாது. இதைக் கொண்டு போகட்டும்.”

‘சில்லுக்கை காலைக் குடுத்திடாமல் கவனமாய் இரு பிள்ளை!” என அவதானம் சொன்னவாறு ஐயா சைக்கிளை மிதிக்கத் தொடங்கினார். மாமனைப் போல கனதூரம் சைக்கிள் ஓடிப் பழக்கமில்லை போலிருக்கிறது. அவருக்கு இழைக்கிறது.

பொழுது பட்டுக்கொண்டிருக்கிறது. பாதை தெரியவில்லை. மறைத்துக்கொண்டிருக்கும் அவரது முதுகுக்கு அப்பால் எட்டி எட்டிப் பார்த்து.. கிராமம் வந்ததும் வீட்டுக்குப் போகும் வழியைக் காட்டினாள் பிரேமா. தார் ரோட்டிலிருந்து மண்வீதியில் சைக்கிள் இறங்கி ஓடியது.

ஒழுங்கையின் திருப்பத்தில் கண்ட சொர்ணம் மாமி, ‘எடி பிரேமா!” என ஆச்சரியப்பட்டாள். பிரேமா ஒரு புன்னகையை உதிர்த்தபடியே போனாள். மாமி பிறகால் வந்துகொண்டிருந்தாள்.

சொந்த மண்ணும் பழகிய முகங்களும் மென்மையான குதூகலத்தை பிரேமாவின் மனதில் ஏற்படுத்தியது.

பூவரசங் கதியால்களில் நேர்த்தியாகக் கட்டப்பட்ட பனையோலை வேலி நீண்டுகொண்டிருந்தது. வேலி உள்வளைந்த வாசல்.

‘இதுதான் வீடு!” என.. சைக்கிளை நிறுத்தச் சொல்லி இறங்கியபோதுதான் பிரேமாவின் கண்களுக்குத் தென்பட்டது..

வாசலில் இரண்டு வாழைமரங்கள் கட்டப்பட்டிருந்தன… காய்க்குலையுடன். சின்னம்மா பெரியம்மா மாமி மச்சாள், என உறவினரும் அயலவரும் வீட்டில் கூடியிருந்தனர். பிரேமாவின் வருகையை உள்ளேயிருந்தவர்கள் கண்ணுற்றிருக்கவேண்டும்.. ஒப்பாரிச் சத்தமும் அம்மாவின் குளறலும் ஓவென உயர்ந்து காதுகளை அடைத்தது. அப்பா எல்லோரையும் விட்டு, தன்னையும் விட்டுப் போய்விட்டார் என்பது மட்டும் பிரேமாவுக்குத் தெரிந்தது.

– மல்லிகை 1994, மல்லிகைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2002, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.

– தெரியாத பக்கங்கள் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: பிப்ரவரி 1997, மல்லிகைப்பந்தல் வெளியீடு, யாழ்ப்பாணம்

Print Friendly, PDF & Email
விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம்புனைபெயர்: சுதாராஜ்கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு:முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்)சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட்,189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த,கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj)Seacrest Appartment,189/1, 6/1, Mahavithyalaya Mawatha,Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை)தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.comrajasinghamsivasamy@yahoo.com படைப்புகள்: (வெளிவந்த நூல்கள்) சிறுகதைத் தொகுப்பு பலாத்காரம் - தமிழ்ப்பணிமனை வெளியீடு -1977…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *