காலை வெய்யில் இதமாக அடித்துக் கொண்டிருக்க படலையடியில் ‘றீங் றீங்’ பெல் சத்தம் யாரெனப் பார்போம் என வெளியில் வந்தாள் துளசி. ‘அட செந்தில் அண்ணையே… வாங்கோ’ என்று கூப்பிட்டுக் கொண்டே படலையை நோக்கி நகர்ந்தாள் துளசி.
‘அது பிள்ளை வந்து.. வீட்டுத்திட்டத்துக்கு கொஞ்சபேற்ற பேர் நோட்டிஸ் போட்டில போட்டிருக்கு உன்ர பேரும் போட்டிருக்கு போல இருக்கு போய் பார்’ என்று கூறிவிட்டு புறப்பட்டார் செந்தில்.
துளசிக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சி. படலையில் இருந்து ‘அம்மா அம்மா..’ என்று அழைத்துக் கொண்டு தாயை நோக்கி ஓடினாள் துளசி.
தாய் செல்லம்மா பேரப்பிள்ளைகளை கிணற்றடியில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள். கிணற்றடிக்குச் சென்ற துளசி ‘அம்மா வீட்டுத்திட்டத்தில எங்கட பேரும் வந்திருக்காம் நான் ஒருக்கா போட்டுவாறன். பிள்ளையள குளிப்பாட்டி விட்டு அரிசியை போடுங்கோ நான் வரேக்க மீன் வேண்டி கொண்டு வாறன்..’
தனது மிதிவண்டியை எடுத்துக் கொண்டு பெரும் ஆவலுடன் வேகமாக கிராம சேவகர் அலுவலகம் நோக்கி பறக்கிறாள் துளசி.
‘போரால் ஏற்பட்ட அழிவுகள் தான் எத்தனை.. ஆசை ஆசையா நானும் அவரும் கஸ்ரப்பட்டு கட்டின வீடு இப்ப இருந்த இடமே தெரியாமல் இருக்கு. இப்ப இவங்கள் தாற வீட்ட கட்ட என்னபாடு பாடப்பேறேனோ, தாற காசும் பாத்தாதெண்டுதான் ரதியும் சொன்னவள்… ம்.. அவளுக்கென்ன தமயன்மார் வெளியில் இருந்து அனுப்புவாங்கள் இவளும் நலாஞ்சு பேரை பிடிச்சு, தந்த காசவிட தானும் போட்டு பெரிய வீடாக் கட்டிப்போட்டாள். இப்பத்தான் எங்களுக்கும் கடவுள் கண் திறந்திருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுவம், எல்லாம் வெல்லுவம்’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டு கிராம சேவகர் அலுவகத்தினை சென்றடைந்தாள் துளசி.
நோட்டிஸ் போட்டினை மிகவும் ஆவலுடன் பார்க்கிறாள். முதலாவதே அவள் பேர் தான். பெரும் சந்தோசத்துடன் கிராம சேவகரின் உதவியாளரை, தான் என்னென்ன இனிச்செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டு சென்றாள்.
மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும்; மனதில் ஒரு பயமும் இருந்தது. ஒரு பெண்ணாக நின்று எப்படிக் கட்டி முடிக்க போகிறேன் என்ற மன ஏக்கம் தான் அது.
துளசியின் கணவன் இன்று உயிருடன் இல்லை. முள்ளிவாய்காலில் இடம்பெயர்ந்து இருந்த போது பிள்ளைகளின் பசியினை போக்குவதற்காக பால்மாவுக்கு வரிசையில் நின்ற போது இராணுவம் ஏவிய எறிகணை விழ்ந்ததில் உடல்சிதறி அந்த இடத்திலேயே தன்னுடைய மனைவியையும், இரண்டுபிள்ளைகளையும் விட்டு பிரிந்து விட்டான். அவனின் இறுதிக்கிரிகைகளை கூட அவள் செய்யவில்லை. அன்றில் இருந்து இன்று வரை தனியொரு ஆளாக நின்று தன் குடும்பத்தினை கவனித்துக்கொண்டு வருகிறாள்.
வீடு திரும்பிக்கொண்டிருந்த பொழுது, வீதியில் மேசன் குமாரைக் கண்டாள் துளசி. ‘குமாரண்ணை.. குமாரண்ணை.. உங்களத்தான் நினைச்சுக்கொண்டு வாறன்.. கும்பிட போன தெய்வம் குறுக்க வந்த மாதிரி வாறியள் என்றாள்’
‘சொல்லு பிள்ளை சொல்லு என்ன விசயம்’ என்று கேட்டார் குமார்.
‘அது வந்து குமாரண்ணை எங்களுக்கு வீட்டுத்திட்டம் இப்பதான் வந்திருக்கு, அதுதான் ஒரு நல்ல மேசனா பிடிக்க வேணும் என நினைக்கேக்க தான் உங்கட நினைப்பு வந்துது. நான் உழைக்கிறது சாப்பாட்டுக்கே காணாது அவங்கள் தாற காசு கூலிக்குக் குடுக்கத்தான் சரி. அது.. தான்; உங்கள மேசனா பிடிச்சால் நானும் ஒரு கையா நின்று வேலை செய்வன்….’ என இழுத்தாள்.
துளசியின் கதையினை கேட்ட குமாருக்கு சற்று இரக்கமாக இருந்தது ‘அது பரவாயில்;;லை பிள்ளை.. நீயும் நிண்டு கொண்டு, அவன் சுந்தரின்ர பொடியனையும் கூட்டிக் கொண்டு வாறன் அவனும் உனக்கு உதவியா இருப்பான். ஒண்டுக்கும் கவலைப்படாத அது வடிவாக கட்டி முடிக்கலாம்.’ என்று கூறிவிட்டு சென்றார் குமார்.
மீனை வாங்கிவந்த துளசி கறியை வேகமாக சமைத்து விட்டு பிள்ளைகளுக்கும் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுவிட்டு வேகமாக கந்தசாமியின் கச்சான் தறைக்கு சென்றாள். அங்கு சென்ற துளசி கச்சான் பிடுங்கும் வேலையினை செய்யத்தொடங்கினாள். தோட்டத்தில் கச்சான் பிடுங்கிக்கொண்டு இருக்கும் மற்றவர்களைபார்த்து. ‘எனக்கெல்ல வீட்டுத்திட்டம் வந்திட்டுது, இந்த ஊரில குமார் அண்ண தான் நல்ல மேசன்.. அவரத் தான் பிடிக்கப்போறன்’ எனத் திரும்பதிரும்ப எல்லோருக்கும் சொன்னாள். பிறபகல் வேலையினை முடித்துக்கொண்டு வீடு செல்ல முன்பு ‘கந்தசாமியண்ணை நாளைக்கு நான் வரமாட்டன் வாங்குக்கு ஒருக்க போக வேணும்’ என்றாள்.
‘சரி பிள்ளை போய் உன்ர வீட்டு வேலைய பார் ஏதும் உதவி தேவையெண்டால் பயப்பிடாமல் கேள்’ எனச்சொன்னார்.
வங்கியில் வீட்டு வேலைக்கான முதல்கட்டப் பணம் வந்திருந்த நிலையில் அங்கு சென்றிருந்த துளசி அதனை எடுத்துக் கொண்டள். அன்று மாலையே குமாரின், வீட்டுக்குச் சென்று ‘அண்ணை காசு எடுத்துக்கொண்டு வந்திட்டன் நாளைக்கு நல்ல நாளாம் நிலையம் எடுக்க சாத்திரி வறார். ஏலும் எண்டால் ஒருக்கால் வந்தீங்கள் எண்டால் உதவியா இருக்கும்…’ என்றாள்.
‘நாளைக்கு பிள்ளை கண்ணன் ஆக்களுக்கு வேலை முடியுது நான் வந்தால் அங்கால ஒருநாள் இழுபட வேண்டியதா போயிடும். நான் வரேலாது உன்ர சினேகிதியை கூட்டிக்கொண்டு போ அவளுக்கும் இஞ்ச ஒரு வேலையும் இல்லை தானே’ என தனது மனைவியை பார்த்து கிண்டலாகச் சொன்னார் குமார்.
நிலையமும் எடுத்தாச்சு, வீட்டு அத்திவாரம் போடவேண்டிய அனைத்து பொருட்களையும் துளசி கொண்டுவந்து சேர்த்திருந்தாள். நல்ல நாளாய்ப்பார்த்து குமாரும் வேலையினை தொடங்கயிருந்தார். குடிசை வாழ்க்கைக்கு ஒரு முடிவுகாலம் வரப்போகிறது என்ற ஆறுதல் அவளை ஆட்கொண்டது.
பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கூடம் சென்றவுடன் தாய் சமையலை கவனிக்க மேசனுக்கு ஒரு கையாளாக நின்று அத்தனை வேலைகளையும் செய்யத்தொடங்கினாள் துளசி, துளசியுடன் சுந்தரத்தின் மகனும் உதவிக்கு வந்திருந்தான். ஆனாலும் அவன் ஒழுங்காக வருவதுமில்லை துளசி தனியாக நின்று மேசனுக்கு வேண்டிய உதவிகளை செய்தாள்.
வீடும் கொஞ்சம் கொஞ்சமாக ரின்ரர் மட்டத்துக்கு நெருங்கியிருந்தது.
குமாருக்கும் இப்போது துளசி மீது இரக்கம் வந்துவிட்டது. ‘பாவம் மனுசனும் இல்லாம் எவ்வளவு கஸ்ரப்படுது இந்த வீட்ட கட்டி முடித்துவிட்டுத்தான் வேறு வேலைக்கு போக வேணும்’ என தன் மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.
‘குமார் துளசியின் வீட்டில் வேலை செய்யத் தொடங்கிய பிறகு வேறு ஒரு வீடும் எடுக்க வில்லை. இரண்டு மூன்று வீட்டுக்கு மேல எடுத்துப்போட்டு இழுத்தடிக்கும் குமாரா இப்படி மாறிட்டான் என ஊர் வாய் திறக்க தொடங்கிவிட்டது. அவளின்ற வடிவுக்கு இவ்வளவு நாளும் கந்தசாமிய மடக்கி வைச்சிருந்தாள். இப்ப குமார் தான் மாட்டியிருக்கிறேர். அவளுக்கு புருசன் இல்லாத குறைய குமார்தான் தீர்த்து வைக்கிறார் போல…..’ என பல வதந்திகள் ஊர் பூராகவும் பரவத்தொடங்கியது. இது ஒன்றும் துளசிக்கு புதுசல்ல…
இப்பட்ட கதைகளை கேள்விப்பட்ட குமாரும் துளசியை தப்பாக கருதத் தலைப்பட்டார். ‘இந்த வீடு கட்டி முடிக்க முன்னம் ஒரு நாளைக்கு கேட்கத் தான் வேணும்;’ என மனதில் எண்ணிக் கொண்டார். ‘சந்தர்ப்பம் வரும்வரை காந்திருப்பம், ‘நானும் துளசிக்கு எவ்வளவு வேலை செய்திட்டன். அவள் நாள் கேட்ட மறுக்க மாட்டாள்’ என தன் மனதுக்குள் எண்ணிக்கொண்டார்.
அன்று வெள்ளிக்கிழமை, கோயிலுக்கு கனநாளா போகவில்;;;;லை. இன்றைக்கு வேலையும் இல்லாதபடியால் துளசி கோயிலுக்கு செல்ல தீர்மானித்தாள். வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலில் அதிக சனம். அன்று கோயிலுக்கு மேசன் குமாரின் மனைவி சீதாவும் வந்திருந்தாள். துளசியை கண்ட சீதா ‘என்ன துளசி கனநாளா கோயில் பக்கம் காணவேயில்லை.. நல்லா வயக்கட்டு போனாய் என்ர மனுசன் நல்லத்தான் வாட்டி எடுக்கிறார் போல..’ என்று சொல்லி சிரிதாள் சீதா. ‘ஓமடி சீமெந்து வேலையென்டால், சொல்லவே வேணும்.. இப்பத்தான் வீடும் ஒருமாதிரி முடியுற கட்டத்தில இருக்கு அது முடியும் வரை கொஞ்சம் அப்படி இப்படித்தான்’ என்று சிரித்தாள்.
கோயில் பூசை முடிந்து திரும்பும் போது துளசியும் சீதாவும் பேசிக்கொண்டே வந்தனர். இடையில் துளசி தயக்கத்துடன் சீதாவைப்பார்த்து. ‘சீதா ஊருல உன்ர புருசனையும் என்னையும் இணைச்சு தப்பா ஏதோ கதைக்கிறாங்கள்’ என்றாள்.
‘எனக்கு எல்லாம் தெரியும் உன்னைபற்றியும் நல்லாத்தெரியும், என்ர புருசனப்பற்றியும் எனக்கு தெரியும், எனக்கு என்ர புருசன் மீது நல்ல நம்பிக்கை இருக்கு, நான் தான் அவருக்கு சொன்னான் உன்ர வீட்டு வேலை முடிச்சுப் போட்டுத்தான் மற்ற வேலையை பாருங்கோ எண்டு, நெடுகலும் நீ பாவம் நல்ல கஸ்ரப்பட்டு வேலை செய்றாயாம் எண்டு எனக்கு அடிக்கடி சொல்லுவார் உனக்கு தெரியும் தானே எங்கட ஊரப்பற்றி நீ ஒன்றுக்கும் கவலைப்படாத’ என்றாள்.
இப்பத்தான் துளசிக்கு உயிரே வந்தது. ஊர்ச்சனம் கதைக்கிறத வைச்சு சீதா தன்னை தப்பாக புரிந்துவிடுவாளோ என அஞ்சிய துளசிக்கு இப்பத்தான் நிம்மதி பெருமூச்சே வந்தது.
பெரிதாக அடம்பர வீடு இல்லாட்டியும் இரண்டு அறை, ஒரு விறாந்தை அத்துடன் ஒரு சமையல் அறை என வீட்டு வேலையும் இப்ப இறுதிக்கட்டத்தினை அடைந்து விட்டது. சுவாமி அறை பூச்சு வேலை நடந்து கொண்டிருக்கிறது. அன்று துளசியும் குமாரும் மட்டும்தான் வேலை செய்து கொண்டிருந்தனர்.
பிள்ளைகளும் துளசியின் தாயும் பள்ளிக்கூடத்தில் ஏதோ விளையாட்டுப் போட்டியாம் என சென்று விட்டார்கள் இப்போது துளசியை பார்க்கும் போதெல்லாம் துளசி பிழையானவள் தான் என ஊர் கதைப்பதை சரி என நினைத்த குமார் வேலையில் கவனத்தினை விடுத்து துளசியை கடக்கண்ணால் பார்பதும் பின்பு பார்க்காமல் இருப்பது போலும் இருந்தார். இதைவிட ஒரு சந்தர்ப்பம் வராது என நினைத்த குமார்.
‘துளசி நான் ஒன்று கேட்பன் நீங்க குறைநினைக்க கூடாது யாரிடமும் சொல்லக்கூடாது’ என்றார்.
‘சொல்லுங்கோ குமாரண்ணை’ என்றாள் துளசி.
‘இப்ப நானும் நீங்களும் தனியாத்தான் இருக்கிறம், உங்களுக்கும் சின்னவயசில மனுசன் செத்திட்டு எந்த சுகத்தினையும் பெரிசா அனுபவிச்சிருக்க மாட்டியள்….’ என இழுத்தார்.
கோபம் தலைக்கேறியது துளசிக்கு. நிதானமாக ‘குமாரண்ணை நீங்க இப்படி நினைப்பீங்க என்று நான் எதிர்பாக்கல ஊரில பலபேர் பல விதமாகக் கதைக்கும்போதெல்லாம் நீங்க என்னோட கூடப்பிறக்காத அண்ணா எண்டு தான் நினைச்சேனே தவிர நான் அப்படி பட்ட பொம்பிளையும் அல்ல. உங்கட மனிசி உங்க மேல நம்பிக்கை வைச்சிருக்கிறாள். அவளுக்கு உண்மையாக இருக்கப்பாருங்க, தயவு செய்து இந்த மாதிறி எண்ணத்தோட இஞ்ச வரவேண்டாம். நீங்க செய்த வேலைக்கு ரொம்ப ரொம்ப நன்றி தயவுசெய்து முன்னாடி நிக்காதிங்க பேயிடுங்க…’ என அழுதாள் துளசி.
குமாருக்கு இப்போது தான் பெரும் பிழை செய்துவிட்டமை புரிந்தது. ‘ஐயோ நான் இப்படி கேட்டிருக்க கூடாது. ஒரு பெம்பியையின் மனதை புண்படுத்திட்டேனே. இவ்வளவு நாளா சகோதரமா பழகீற்று கேவலம் கெட்டு நடந்திட்டேனே, நான் ஒரு மிருகத்த விட கேவலமாக நடந்திருக்கிறேனே, என்ர மனுசிக்கும் துரோகம் செய்ய துணிஞ்சிருக்கிறேனே..’ என தன்னை திட்டிய படியே வீட்டு வேலைகளை விட்டு விட்டு துளசியின் வீட்டை விட்டு வெளியேறினார்.
‘எல்லா மனிதர்களும் இப்படிப்பட்டவர்களா? ஊருல உள்ள பலரும் பலவிதமாகக் கதைக்கிறாங்க நம்பிப்பழகினவரு கூட தப்பா நடக்க முயற்சிக்கிறார். இந்த உலகத்தில வாழுறது எண்டால் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும்’ என எண்ணிக்கொண்ட துளசி இவ்வளவு நாளும் குமாருக்கு உதவியாக நின்றதில் ஒரளவு வேலை பழகியிருந்தாள். மீதமுள்ள பூச்சுவேலைகளை அவளே செய்து முடித்துவிட்டாள். ஊரார் பேசிய உப்புச்சப்பு இல்லாத வதந்திகளை எல்லாம் இன்று பொடிப்பொடியக்கிவிட்டாள் துளசி. இன்று எமது நாட்டில் எத்தனை துளசிகள் இன்று நம் கலாசரத்தினை மதித்து பெருமையுடன் வாழ்ந்துவருகின்றார்கள்.