தீர்ப்பைத் திருத்துங்கள்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 18, 2020
பார்வையிட்டோர்: 6,762 
 
 

நினைக்க இதயம் கனத்தது. அது நெஞ்சுக்குள் ஆழமான காயமாக வலித்தது.

எவ்வளவு பெரிய இடி. ! இதை நாம்தான் தாங்கிக் கொண்டோமா…? ! என்பதே அவனுக்குச் சந்தேகமாக இருந்தது.

வீட்டை விட்டு எவ்வளவு தூரம் வந்திருப்போம் ..! என்பது அவனுக்குத் தெரியவில்லை. இருந்தாலும் கண்டைக்காலின் சதை வலிக்கவே… அதிக தூரம் வந்திருப்பது அவனுக்குப் புரிந்தது.

வெளிக்காற்றின் குளிர்ச்சி உள்ளத்தின் சூட்டை குறைக்க….அப்படியே ஓரம் உட்கார்ந்து நடந்து முடிந்ததை நினைத்துப் பார்த்தான்.

திங்கள் கிழமை. வாரத்தின் முதல் நாள்.

மில்லின் சங்கு பிடிக்க மூன்றடிக்க….. பதினைந்து நிமிடங்களுக்கு முன்பாகவே வேலைக்கு வழக்கம் போல புறப்பட்டுச் சென்றான்

கூப்பிடு தூரத்திலுள்ள பஞ்சு மில்லில்தான் அவனுக்கு வேலை.

அந்த மில்லில் மூன்று கட்ட வேலைகள். முதல் கட்டம்… காலை ஏழு மணியிலிருந்து பிற்பகல் மூன்று. அடுத்து…அந்த மூன்றிலிருந்து இரவு பதினொன்று. கடைசியாய்… இரவு பதினொன்றிலிருந்து காலை ஏழு.

அங்கு வேலை செய்யும் 1500 தொழிலார்களும் ஒரு கட்டத்திற்கு 500 பேர்கள் என்று மாறி மாறி வருவார்கள்.

சென்ற வாரம்.. இவனுக்கு முதல் கட்டம். இந்த வாரம் இரண்டாம் கட்டத்தின் முதல் நாள்.

மாலை 3.00. மணி என்றாலும் வீட்டை விட்டுக் கிளம்பும்போதே சித்திரை வெய்யிலின் தாக்கம் மண்டையைப் பிளந்தது. பொருட்படுத்தாது உள்ளே சென்று வேலையைத் தொடங்கிய போது… இயந்திரங்களின் சத்தத்தில் சன்னமாக ஆரம்பித்த தலைவலி நேரம் ஆக ஆக தீவிரமடைய…பற்களைக் கடித்துக் கொண்டு பொறுத்து , பத்து மணி வரை வேலை செய்துவிட்டு, பக்கத்து நண்பரிடம் தன் ஒரு மணி நேர வேலையை ஒப்படைத்து விட்டு… தங்கள் கண்காணிப்பாளரிடம் சொல்லி விட்டு ஒரு மணி நேரம் முன்பாகவே வீட்டிக்குக் கிளம்பினான்.

அந்த ஒரு மணி நேரம் முன்னதாகச் சென்றதுதான் தவறு.!! அங்குதான் கோளாறு, சிக்கல்… எல்லாம்.

வீட்டிற்கு வந்து காதவைத் தட்டச் சென்றவனின் கை… உள்ளே மனைவியின் சிணுங்கல் சத்தம் காதில் விழ… நின்றது.

அடுத்தாக ஆண் குரல் ஒலிக்க… சத்தம் வந்த திசை பக்கம் ஒதுங்க… படுக்கை அறை. !

இவன் மூளை தீவீரமாக வேலை செய்ய….

“சரசு ! சரசு ..!”அழைத்து வாசல் கதவை நான்கு தட்டு தட்டிவிட்டு, சட்டென்று ஓடி கொல்லை வாசலில் போய் நின்றான்.

இவன் கணக்கு, கணிப்பு சரியாக இருந்தது.

கொல்லைக் கதவு சடாரென்று திறக்கப் பட்டு…அள்ளிய ஆடைகளுடன் நிர்வாணமாக ஒரு ஆள் வெளிப்பட…

இவன் முரட்டுத்தனமாக ஒரே அமுக்கு அமுக்கி உள்ளே தள்ளி கதவைத் தாழ் போட…

அகப்பட்டவன்….

சென்ற நொடி வரை… உயிருக்கு உயிரான நண்பன். தற்போது…துரோகி..!!

சுவரின் மூலையில் பேயறைந்த நிலையில் மனைவி……

சென்ற கணங்கள்வரை இவனின் ஏக பத்தினி….!!

ரத்தம் கொதி நிலையைத் தாண்டிக் கொதித்தது. ஆத்திரம் தன் அறிவை இழக்கும் அபாய நிலையை நெருங்கியது.

நிதானம் ! நிதானம்..!! … நிதானம் !!! – எல்லாவரையம் இறுக்கிக் கட்டுப் படுத்தினான்.

கட்டுக்குள் வந்த சில வினாடிகளிலேயே….துரோகியைப் பார்க்க வில்லை. நிமிராமல் தலை குனிந்து….

“சரி. நீ போ…”சொன்னான்.

அவன் எந்தப் பேச்சும் பேசாமல் உடைகளை உடுத்திக் கொண்டு பட்டென்று வாசல் கதவு திறந்து வெளியேறினான்.

இவன் அந்தக் கதவைத் தாழ் போட்டு விட்டு மெல்ல வந்து நாற்காலியில் அமர்ந்தான்.

தூளியில் ஒன்றரை வயது குழந்தை அருண் தூங்கினான்.

சரசு கையும் மெய்யுமாய் பிடிபட்ட பயம், நடுக்கம்… விசும்பினாள்.

“ஏன் இப்படி செய்தே…?”சத்தமில்லாமல் மெதுவாக ஒலித்தாலும் குரல் கடுமையாக இருந்தது.

”……………………………”

“எனக்குத் துரோகம் செய்ய உனக்கு எப்படி மனசு வந்துது..?”

வாயில் முந்தானைப் பொத்தி உடல் குலுங்க கேவினாள்.

“உனக்கு நான் என்ன குறை வைச்சேன்..? துணிமணி, நகை, காசு, பணம், தாம்பத்தியம்… எதில் குறை சொல்லு…?”

“……………………”

“தின்றது பத்தாம.. உடம்பு திணவெடுத்துப் போச்சா…?”

“இ….. இல்லீங்க…”

“பின்னே..?”

”…………………..”

“காரணம் சொல்லு…?”

“வே…. வேணாம்ங்க…”

“ஏன்.. தாங்க மாட்டேனா…? இந்த இதைவிடவா இன்னொரு பேரிடி எனக்கு இருக்கப் போவுது.?? எதையும் தங்குவேன். நிதானம் இழக்க மாட்டேன் சொல்லு..?”

“நமக்குத் திருமணம் முடிஞ்சி அஞ்சு வருசமாகியும் குழந்தை இல்லே. என்னை மலடின்னும், உங்களைக் கையாலாகாதவன்னும்…..ஊரே நம்மைக் கேவலமா பார்த்து, பேசிச்சு. என்னை நிந்திக்கறதை தாங்கிக்கிட்டேன். ஆனா… உங்களைப் பேசுறதைத் தாங்க முடியல.

அப்புறம் ஒருநாள்… உங்க கைவசம் இருந்த நம்ம மெடிக்கல் ரிப்போட்டை எடுத்துக் போய்… நமக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டரிடம் காட்டி விபரம் கேட்டேன்.

‘எனக்கு குறை இல்லே. உங்களுக்குத்தான் குறை. உயிரணுக்கள் ரொம்ப ரொம்ப குறைவு. குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லே. தொடர் மருந்து , மாத்திரைகளினால் உற்பத்தியை அதிகரித்து குழந்தை பிறக்க வாய்ப்பை ஏற்படுத்தலாம். உங்க கணவன் அந்த முறையில் என்னிடம் சிக்கிச்சைப் பெற்று அவர் மருந்து மாத்திரைக்கள் எடுத்து வர்றார்.’- சொன்னார்.

‘சீக்கிரம் குணமாகி குழந்தை பிறக்குமா..? ‘கேட்டேன்.

‘ஆகலாம்….’சொன்னார். திரும்பிட்டேன்.”நிறுத்தினாள்.

இப்போது இவனுக்கு எல்லாம் தெள்ளத் தெளிவாக விளங்கி விட்டது.

“அப்போ… அருண் என் குழந்தை இல்லே. சரியா..?”

“ம்ம்ம்…”

“சங்கரன் குழந்தை. சரியா..?”

“ச… சரி…”

இப்போதுதான் இவன் நொறுக்கிப் போனான்.

இவள் உண்டான நாற்பது நாட்களிலேயே….இவன் தங்களுக்கு மருத்தவம் பார்க்கும் மருத்துவரிடம் ஓடினான்.

“என் மனைவி இப்போ கர்ப்பம். எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கா டாக்டர்..?”கேட்டான்.

“எண்ணிக்கை குறைவாய் இருந்தாலும்…. இருக்கே..? இதெல்லாம் கடவுள் அருள்.”சொன்னார்.

சந்தோசமாகத் திரும்பி வந்தான்.

இப்போது…..”இல்லை !”…….. எப்படித் தாங்க…?

அதான் தாங்க முடியாமல் வெளியே வந்தான்.

அப்படியே மரத்தில் சாய்ந்து வானத்தைப் பார்த்தான்.

பின் நிலவு பிரகாசமாய் இருந்தது. குளிர் காற்று முகத்தை வருடியது.

இப்போது என்ன செய்ய… ?

தாயும் மகனும்… வேண்டாமென்று விவாகரத்தா….?

அப்படித்தான் செய்ய வேண்டும்.!!

அப்படி செய்தால்…தொட்டவன் சட்டப்படி இழப்பீடு கொடுக்கலாமேத்தவிர ஏற்றுக்கொண்டு வாழ்நாள் முழுவதும் வைத்து காப்பாற்ற வழி இல்லை.

தாயும் பிள்ளையும் தனி. கஷ்டம். அடுத்ததாய் விசயம் எல்லாம் வெளிப்பட்டு…

தனக்கு பொண்டாட்டியைக் கட்டுக்குள் வைக்கத் தெரியாத கையாலாகாதவன் அவப்பெயர். உண்மை நிலவரம் ஊரறிந்து விட்டதால் தலை நிமிர முடியாத அவமானம்.

இது இல்லாமல் மன்னித்தால்….மூவரைத் தவிர விசயம் எதுவும் வெளியில் தெரியாது. ‘

இதற்காக மன்னிப்பு சரியா….?

நளாயினி… எப்படி கணவன் தவறுகளை மன்னித்து அவன் ஆசையை நிறைவேற்ற… அவனைத் தலையில் தூக்கி விபச்சாரி வீடு சென்றாள்..?

பெண் மன்னிக்கும்போது ஆண் மன்னிக்கக் கூடாதா..?

மன்னிக்கலாம்..! தொட்டுத் தூக்க…. குழந்தை உறுத்தும். பார்க்க…. மனைவி உமட்டுவாள்.

நிம்மதி…???? – இது விஸ்வரூபமாக உருவெடுக்கும்போதுதான்…

மறத்தலின் மொத்தம்தான் மன்னிப்பு. அப்படி என்கிறபோது… அதெல்லாம் எப்படி சாத்தியம்… !? படாரென்று தாக்கியது.

ஆமாம் மன்னித்தல்தான் சரி. தொடக்கம் கொஞ்சம் கசப்பு, அருவெறுப்பு இருக்கும். நாட்கள் ஆக ஆக.. அது தேயும். காலங்கள் மாற்றும் ! நினைவு வர…

மனசு தெளிவாக எழுந்தான்.

வீட்டிற்கு வந்தான். இருண்டிருந்தது. விளக்கைப் போட்டான்.

வீட்டில் மகனும், மனைவியும் இல்லை.

வெளியே வந்தான். தேடி நடந்தான்.

கிடைப்பார்களா, மாட்டார்களா..? – தெரியாது !!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *