கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2023
பார்வையிட்டோர்: 2,128 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மும்பாய் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் பத்மினிக்காக காத்துக் கொண்டிருந்தான் வசந்தன். கையிலிருந்த பையைத் திறந்து ‘குங்குமம்’ எடுத்து கலைஞரைப் பற்றி எழுதியிருந்த கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்தபோது ‘ஹாய்’ என்று முதுகில் தட்டியவாறு வந்து நின்றாள் புவனா.

‘என்ன புவனா, இந்தப் பக்கம் ?’ என்று கேட்டான் வசந்தன்.

‘சின்ன மாமா ஊரிலே யிருந்து வருகிறார். அவரை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போக வந்தேன். மாமி இறந்து போன அதிர்ச்சியிலே ஆள் என்னவோ மாதிரி ஆகிவிட்டார். அவருக்கு இடம் மாற்றம் கொஞ்சம் வித்தியாசமாகவும் இருக்கும்.

இந்த வருடம் தீபாவளியும் மாமாவோடு கொண்டாடிய மாதிரியும் இருக்கும்.

ஆமா நீ ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டாள் புவனா.

‘பத்மினி தண்ணீர் எடுத்து வரப் போனாள். ஊருக்குக் கிளம்புகிறோம்’ புவனாவைக் கவனிக்காதவாறு சொன்னான் வசந்தன்.

‘ஓ உனக்குத் தலை தீபாவளியல்லவா. மறந்து போய்விட்டது’ தடுத்து நிறுத்திய கண்ணீர் குபுக்கென்று கன்னங்களில் கோடு போட, கர்ச்சீப் எடுத்துத் துடைத்துக் கொண்டாள்.

‘நாம் கொண்டாட வேண்டிய தலை தீபாவளி தெரியுமா?’ என்று அழுகையினூடே கேட்டாள் புவனா.

‘காரணம் நானில்லை புவனா. இப்படி ரயில்வே நிலையத்தில் நின்று அழுது கொண்டிருந்தால் எப்படி? கண்ணீரைத் துடை.மற்றவர்கள் என்ன நினைப்பார்கள். பத்மினி வந்து கொண்டிருக்கிறாள். அப்புறம் சந்திக்கலாமா?’ புவனாவை விரட்டினான் வசந்த்.

‘நான் உன் மனைவிகூட பேசக்கூடாதா?’

‘புவனா, நான் ஏற்கனவே வெந்து போயிருக்கிறேன். வெந்த புண்ணிலே வேல் பாய்ச் நினைக்கிறாயா?’

‘தப்பு நான் செய்திருந்தாலும் அன்று நீ அடம்பிடித்தால் நம் திருமணம் நிச்சயமாகியிருக்கும்’ என்றாள் கண்ணீரோடு.

‘ப்ளீஸ், புவனா உன்னை மறக்கவே நான் மும்பையில் வேறு இடத்தில் வீடு வாங்கி தனியாகக் குடியிருக்க ஆரம்பித்தேன். இப்போது வந்து பழையவைகளை நினைவுப் படுத்திக் கொண்டு… உன் மாமா வருகிற ரயில் வருகிறது என்று நினைக்கிறேன். போய்ப் பார்’

‘எனக்குத் தெரியும். நீ என்னை விரட்டப்பார்க்கிறாய்?’

‘அப்புறமென்ன? அன்று, நான் எவ்வளவு சொன்ன பிறகும் கேட்காமல் என்னை வெறுத்து ஒதுக்கி விட்டது மறந்து போய்விடவில்லை புவனா. என் மேலே காதலிக்கும் போதே நம்பிக்கை வைக்காத நீ, நல்ல வேளை திருமணம் முடிந்திருந்தால் வாழ்க்கையே நரகமாக போயிருக்கும்’.

‘ஐயோ ஏதோ ஒரு முறை தவறு செய்து விட்டேன் என்பதற்காக திரும்பத் திரும்ப அதையேச் சொல்லிக் காட்ட வேண்டுமா?’ புவனா பத்மினி வருவதைப் பார்த்துக் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

‘என்ன புவனா, உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. எப்படி இருக்கீங்க’ என்றாள் பத்மினி. தண்ணீர். பாட்டிலை கீழே வைத்தவாறு.

‘நல்லா இருக்கேன் பத்மினி, என்ன தலை தீபாவளி கொண்டாடுவதற்கு ஊருக்குக் கிளம்பி விட்டீர்கள் போலிருக்கிறது. பத்மினி கல்யாணத்திற்கு முன்னாலிருந்ததைவிட இப்போது அழகாயிருக்கிறாய்’

‘அதுதான் கல்யாணச் சந்தோசம்’ வேண்டுமென்றே குத்திக் காட்டினான் வசந்த்

வலியைத் தாங்கிக் கொண்டவள், ‘ரயில் வந்து விட்டது போலிருக்கே. சாமான்களைத் தூக்கி வைக்க நான் உதவி செய்யட்டுமா?’ என்று அருகிலிருந்த பெட்டியைத் தூக்கினாள் புவனா.

‘இல்லை புவனா உங்களுக்கு ஏன் சிரமம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்றாள் பத்மினி.

‘எனக்கு ஒன்றும் சிரமமில்லை’ என்று ஒரு சூட்கேஸைத் தூக்கி எல்லாப் பொருட்களையும் தூக்கிக் கொண்டு வசந்தனும், பத்மினியும் இடம் தேடி எல்லாவற்றையும் அடுக்கி வைத்தனர்.

‘உன் மாமா எந்த ரயிலில் வருகிறார்? ரயிலின் நேரமென்ன?’ என்று கேட்டான் வசந்தன்.

‘ஓ! மாமாவைக் கூட்டிப் போக வந்தீர்களா ? நீங்களும் ஊருக்குக் கிளம்பினீர்களோ என்று கேட்டேன்’ பத்மினி டீ வாங்கி புவனாவிடம் கொடுத்தார்.

‘வசந்தன் உங்களிடம் கொஞ்சம் தனியாகப் பேச முடியுமா?’ என்று புவனா கேட்டதும் வசந்தன், பத்மினியின் முகத்தைப் பார்த்தான்.

‘பத்மினி சிரித்துக் கொண்டே புவனா எங்க வீட்டுக்காரர் எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிவிட்டார். நீங்கள் இருவரும் காதலித்தது. நீங்கள் இவர்மேல் சந்தேகப்பட்டு நிச்சயம் பண்ணிய திருமணம் நின்று போனது…இப்போதும் பல நேரங்களில் உங்கள் நினைவில் வசந்தன் கஷ்டப்படுவது.. எனக்கு எல்லாம் தெரியும். இதையும் மீறி. நீங்கள் அவரிடம் தனியாகப் பேச வேண்டுமானால் உங்கள் விருப்பம்’ என்றவாறு எழுந்தாள் பத்மினி.

‘பத்மினி நீ உட்கார் சொல்லு புவனா என்ன விஷயம்’ என்றார் வசந்தன்.

‘இனியும் சொல்ல என்ன இருக்கிறது. நாம் காதலித்த விஷயம் உங்கள் பத்மினிக்குத் தெரியுமா என்பதைக் கேட்பதற்காகத்தான் உங்களைத் தனியாக பேச அழைத்தேன்’ என்றாள் புவனா.

‘இந்த உலகத்திலே யாருமே சுத்தமான ஆள் கிடையாது. ஆனால் உங்களுக்கு கிடைக்காத இந்த வசந்தன் எனக்குக் கிடைத்தது நான் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம்.

பாருங்கள் புவனா! நீங்கள் அன்று சந்தேகப்பட்டு உங்கள் திருமணம் நின்று போயிருக்காவிடில் எனக்கு இவ்வளவு அருமையான கணவர் கிடைத்திருப்பாரா?

இது இதுதான் வாழ்க்கை. இருக்கிறதை விட்டு விட்டு பறக்கிறதை விட, கிடைத்ததைக் கொண்டு சந்தோசிப்பதுதான் வாழ்க்கை.

எப்படிப் போனாலும் உங்கள் மனதின் ரணம் எளிதில் ஆறிப்போனது. என் வசந்தன் உங்கள் நினைவுகளால் எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பது எனக்குத் தெரியும்.

எது எப்படி இருப்பினும் இந்தத் தீபாவளி நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் தீப ஒளி ஏற்றிச் சிறக்கட்டும். ரயில் புறப்படப் போகிறது. இறங்கிக் கொள்கிறீர்களா?’ என்றாள் பத்மினி.

மனச் சாந்தியுடன் பெருமூச்சுடன் அமைதியாக இறங்கினாள் புவனா.

– நவம்பர் 2004 தமிழ் அமுதம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *