திருநங்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 24, 2021
பார்வையிட்டோர்: 2,419 
 

தயாளினி மரத்தடியில் உட்கார்ந்து இருந்தாள்,மரத்தில் இருந்த காக்கைகளின் சத்தம் எரிச்சலை ஏற்படுத்தியது அவளுக்கு,ஏன் தான் இந்த காக்கைகள் இப்படி கத்தி காதை புண்ணாக்கிறது என்று மனதில் நினைத்தவள் தனக்குள் சிரித்துக் கொண்டாள்,கத்த சரி அதுகளுக்கு உரிமை இருக்கு,எனக்கு அப்படியா?வாயடைத்து உட்கார்ந்து இருக்கேன் என்று மனதில் தோன்றியது,அப்பா சௌந்தர்,அம்மா புவனா,தங்கை நளாயினி மத்தியில் தயாளன் என்று பிறந்து தற்போது தயாளினியாக உருவெடுத்து உட்கார்ந்து இருக்கேன்,கடவுளை குற்றம் சொல்வதா காலத்தை குற்றம் சொல்வதா,ஒன்னும் புரியாமல் இருக்கும் என்னை விட இந்த காக்கைகள் எவ்வளவோ மேல்,எவ்வளவு ஒற்றுமையாக இருக்கின்றது என்று நினைத்துக் கொண்டாள் தயாளினி,சௌந்தர் ஒரு கம்பனி மெனேஜர்,அம்மா தட்டச்சாளராக வேலை செய்கிறார்,மகள் நாளாயினி காலேஜ் போகிறாள் தற்போது,சில வருடங்களுக்கு முன்பு எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தான் தயாளன்,பார்க்க அழகாக இருப்பான்.

எப்போதும் சந்தோஷமாக அவனுடைய பாடசைலை நாட்கள் சென்றது நண்பர்களுடன் அரட்டை,பெற்றோர்களின் அளவு கடந்த செல்லம் என்று வாழ்ந்தவன் தான் தயாளன்,காலத்தின் கொடுமை தன்னை அறியாமல் சில மாற்றங்கள் அவனுக்குள் ஏற்பட்டது,அவனுக்கும் ஆரம்பத்தில் எதுவும் புரியவில்லை,வீட்டில் நளாயினி வைத்திருக்கும் பொட்டை எடுத்துக் வைத்துக் கொள்ள ஆசை ஏற்பட்டது,அவனும் எடுத்து வைத்துக் கொள்வான்,என்னடா பொம்பள புள்ளை மாதிரி பொட்டு வைத்துக்கிட்டு திரியிற என்ற திட்டியப் பிறகு கலட்டி வைத்து விடுவான்,இது தான் ஆரம்பம்,நாளாக நாளாக நளாயினி போடும் உடைகளை போட்டு பார்ப்பான்,அம்மாவின் சேலையை சுத்தி கட்டி கண்ணாடி முன் நின்று அழகு பார்ப்பான்,யாரும் அறைக்கு வருவதுப் போல் இருந்தால் உடனே சேலையை கலட்டி மறைத்து வைத்து விடுவான்,அம்மா வாங்கி வைத்திருக்கும் பூவை எடுத்து தலையில் வைத்துக் கொள்வான்,யாளினி அறையில் வைத்திருக்கும் அழகு சாதனப் பொருட்களை எல்லாம் போட்டு பார்ப்பான்,இப்படி அவனின் செய்கைகள் மெதுவாக மாறியது,அதை பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை வீட்டில்,சின்னப் பையன் ஏதோ விளையாட்டுத் தனமாக செய்றான் என்று நினைத்தார்கள்.

பாடசாலைக்கு போகும் போது பெண்களிடம் மட்டுமே பேச ஆரம்பித்தான் தயாளன்,ஆண்களை கண்டால் கூச்சப்படத் தொடங்கினான்,நளாயினியும் அதே பாடசாலையில் படித்ததால்,சில மாணவர்கள் நளாயினியிடம் வந்து கூறுவார்கள்,உங்கள் அண்ணன் என்ன எந்த நேரமும் பொம்பள புள்ளைகள் பின்னுக்கே திரிகிறான் ஏதாவது வருத்தமா என்று கிண்டல் செய்வார்கள்,நளாயினி வீட்டில் போய் அழதாத குறையாக அம்மாவிடம் கூறுவாள்,அண்ணன் பாடசாலையில் இப்படி நடக்குது என்று,அதன் பிறகு தான் புவனா மகனின் செய்கைகளை கவனிக்க ஆரம்பித்தாள்,ஒரு நாள் அவனுக்கு தெரியாமல்,அறையின் ஜன்னல் பக்கம் நின்று அவனை கவனித்த புவனாவிற்கு தூக்கி வாரிப் போட்டது,மகன் தயாளன் சேலையை கட்டிக் கொண்டு,கண்ணாடி முன் ரசித்து பார்த்துக் கொண்டு இருப்பதை கண்டு அவள் திகைத்து விட்டாள்,அவனுக்கு தெரியாது அம்மா ஜன்னல் பக்கமாக இருந்து பார்ப்பது,அவள் மெதுவாக அறை பக்கம் வந்து கதவை திறந்தவுடன் தயாளன் மிரண்டு போனான்,என்னடா செய்ற என்று அடிக்க ஆரம்பித்தாள் புவனா,அம்மா என்னை அடிக்காதே,எனக்கு நளாயினி மாதிரி இருக்க தான் ஆசையாக இருக்கு என்றதும்,வாயை மூடு என்று மேலும் அடித்தாள் புவனா

சௌந்தர் வந்ததும் புவனா நடந்ததை சொன்னாள்,என்னடி சொல்ற என்று அவர் பதறி போனார்,இருவருக்கும் என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை,அடுத்த நாள் ஒரு மனோதத்துவ டாக்டரிடம் தயாளனை அழைத்து போக முடிவு எடுத்தார்கள் இருவரும்,மறுநாள் தயாளனை ஒரு மருத்துவரிடம் அழைத்துப் போனார்கள்,அவர் தயாளனிடம் ஆயிரம் கேள்வி கேட்டார்,தயாளன் எதையும் காதில் வாங்கவில்லை,எனக்கு பெண்களை போல் தான் இருக்க வேண்டும்,எனக்கு அது தான் பிடித்திருக்கு என்பதில் பிடிவாதமாக இருந்தான் தயாளன்,அந்த டாக்டரும் முடிந்தளவு எடுத்து சொன்னார்,ஆனால் தயாளன் மனதை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை,ஒரு கட்டத்தில் சௌந்தர்,புவனாவிற்கு கோபம் வந்து விட்டது,ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கின்ற டாக்டர் சொல்வதை கேள் என்று அடிக்கவும் வந்து விட்டார்கள்,டாக்டர் அவர்களை தடுத்து விட்டார்,இல்லை இது அடித்து திருத்த கூடிய விடயம் இல்லை,அவன் உடலில் ஏற்படும் மாற்றங்கள்,அவன் மனதளவில் பாதித்து இல்லை,ஆனால் அவன் இனி பெண்ணாக தான் நடந்து கொள்வான் என்றார் டாக்டர்,இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் தயாளனின் பெற்றோர்கள்,டாக்டர் மேலும் சொன்னது,அவன் பெண்ணாக வாழ்ந்து விட்டு போகட்டும்,அருவை சிகிச்சை செய்து பெண்ணாக மாற்றி,உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள் என்றார் அவர்,இதில் அவன் தப்பு எதுவும் இல்லை,அவனை அரவணைப்பது உங்கள் கடமை என்றார் டாக்டர்,சரி என்று தலையை மட்டும் ஆட்டிவிட்டு வெளியில் வந்து விட்டார்கள் மூவரும்,அந்த ஆளுக்கு என்ன,எதுவும் வாயில் சொல்ல நல்லா தான் இருக்கும்,அந்த ஆளுக்கு இப்படி ஒரு பிள்ளை என்றால்,வீட்டில் வைத்து கொஞ்சிவாங்களாமா,எல்லாம் வாயில் சொல்லுவானுங்கள்,தங்களுக்கு என்று வந்தால் எதுவும் செய்ய தான் மாட்டான்கள் என்று டாக்டரை திட்டி தீர்த்தனர் தயாளன் பெற்றோர்கள்

அந்த கோபம் தயாளன் பக்கம் திரும்பியது,நம்ம மானத்தை வாங்கவே நம் வயித்தில் வந்து பிறந்திருக்கு சனியன் என்றார்கள்,அவனுக்கு எதுவும் புரியவில்லை,இத்தனை நாட்களும் என் மகன் என்று கொண்டாடியவர்கள் ஒரு நிமிடத்தில் காலி்ல் போட்டு மிதித்தார்கள்,அவர்களுடன் தயாளனுக்கு வீட்டுக்கு போகவே பயமாக இருந்தது,அழுத்துக் கொண்டே அவர்களுடன் சென்றான் அவன்,அதன் பிறகு அவனுக்கு வீட்டில் நரக வாழ்க்கை தான்,நளாயினி எந்த நேரமும் சண்டை தயாளன் அவளின் பொருட்களை எல்லாம் எடுப்பதாக கூறி,இது போதாது தயாளனை அடிக்க உள்ள கோபத்தை எல்லாம் வைத்து வெளுத்து வாங்குவார்கள் பெற்றோர்கள்,வீட்டை விட்டு போய்விட வேண்டும் நினைத்தான் தயாளன் அவனுக்கு பணம் தேவைபட்டது,அம்மாவின் நகைகளை எடுத்துக் கொண்டு ஒரு நாள் வீட்டை விட்டு வெளியில் வந்து விட்டான் தயாளன்

தற்போது என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை அவனுக்கு,ஏற்கெனவே போய் பார்த்த டாக்டரை தேடிப் போனான் அவன்,எப்படியாவது அருவை சிகிச்சை செய்யனும் என்று அழுதான்,அந்த டாக்டர் அவருக்கு தெரிந்த ஒரு டாக்டரை போய் பார்க்கும் படி சொன்னார்,தயாளனும் அந்த டாக்டரை தேடிப் போனான்,அவர் கேட்ட முதல் கேள்வி பணம் இருக்கா என்று,ஆமாம் நகையாக இருக்கு நகைகளை அவரிடம் கொடுத்தான்,திருட்டு நகையா என்றார் அவர்,அவன் இல்லை அம்மாவின் நகைகள் என்றான்,இங்கு நகையெல்லாம் வாங்க மாட்டோம் அதை எல்லாம் வித்து பணமாக கொண்டு வா என்றார் அவர்,எனக்கு யாரையும் இங்கு தெரியாது என்றான் தயாளன்,அடகு கடையில் வைத்து பணம் வாங்கு என்றார் அந்த டாக்டர்,தயாளன் நகைகளை பாதி விலைக்கு வித்து,பணத்தை கட்டி அருவை சிகிச்சை செய்து கொண்டான் தற்போது தயாளன் தயாளினியாக உருவெடுத்தாள்

அவளை சமுதாயம் ஏற்றுக் கொள்ளவில்லை,பல கேலி கிண்டலுக்கு ஆளானாள்,மற்றவர்களின் பார்வையே வித்தியாசமாக இருந்தது,எந்த இடங்களிலும் வேலை கிடைக்கவில்லை,பிச்சை கூட யாரும் போடுவதற்கு தயாராக இல்லை,பசி கொடுமை,வாய்விட்டு கேட்கும் ஆண்கள் பார்க்க அழகாக இருக்க ஒரு நாளைக்கு வாறீயா என்று,என்ன உலகம் இது,பகல் நேரத்தில் மட்டும் மட்டமாக பார்ப்வர்கள்,இரவில் படுக்க தயாராக இருந்தார்கள்,அந்த ஐந்து நிமிட சுகத்திற்கு ஜாதி,மதம்,பணம்,அசிங்கம் சிறுவர்கள்,திருநங்கைகள் என்று எதுவும் பார்க்கத் தோன்றவில்லை அவர்களுக்கு,பகல் நேரம் துஷ்பிரயோகத்திற்காக வாய்கிழிய பேசுபவர்கள் கூட இரவு நேரம் அடிமைகள் தான்,இவர்கள் மத்தியில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தாயாளினிக்கு தெரியவில்லை,இந்த சாக்கடையில் போய் விழவும் மனம் இடம் கொடுக்கவில்லை அவளுக்கு,ஒரு பள்ளியில் துப்பரவு வேலை கிடைத்தது,செய்ய ஆரம்பித்தாள்,தங்குவதற்கு இடம் இல்லை

யாரும் வாடகைக்கு வீடு கொடுப்பதற்கு கூட தயாராக இல்லை,பள்ளியின் ஒரு மரத்தடியில் படுத்துக் கொள்வாள்,இரவில் தூக்கம் வராது,தன்னை பாதுகாத்துக் கொள்ள விழித்திருப்பாள்,அதே பாடசாலையில் துப்பரவு வேலை செய்த மரகதத்துடன் யாளினிக்கு பழக்கம் ஏற்பட்டது

அவள் இருந்த குடிசையில் யாளினிக்கும் இடம் கொடுத்தாள்,மரகதம் திருமணம் செய்யவில்லை,வயதான அப்பா படுக்கையில் கிடந்தார்,இவள் உழைத்து கஞ்சி ஊத்திக் கொண்டு இருந்தாள்,எப்படி அக்கா இத்தனை வருடமாக தனியாக கல்யாணம் கட்டாமல் வாழ்ந்த,உன்னை மட்டும் எப்படி விட்டு வைத்தான்கள் என்றாள் யாளினி,அது எப்படி விட்டு வைப்பான்கள்,என்னை தூக்கிட்டு போனவன்கள் எல்லாம் என்னிடம் எதுவும் இல்லை என்று பயந்து தான் ஓடியிருக்கான்கள் என்று விரக்தியாக சிரித்தாள் மரகதம்,என்னக்கா சொல்லுறீங்கள் என்றாள் யாளினி,ஆமாம் உங்களுக்கு மாற்றங்கள் தெரியும்,கடவுள் சிலரை என்னை மாதிரியும் படைத்திருக்கான் என்றாள் மரகதம்,நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் குடும்பத்தோடு இருக்கீங்கள் என்றாள் யாளினி,

அடி பைத்தியமே இது என் அப்பாவே கிடையாது என்றாள் மரகதம்,என்னக்கா இப்படி சொல்லுறீங்கள் என்றாள் யாளினி,ஆமாம் நானும் வசதியான குடும்பத்தில் பிறந்து துரத்தி அடிக்கப் பட்டப்போது இந்த மனுஷன் எனக்கு ஆதரவு அளித்தார்,உன்னை மாதிரி நானும் தெருவோரம் இருந்தவள் தான்,அந்தோனி இவர் பெயர்,தெருவில் துணிகளை அயன் பன்னி கொடுக்கும் தொழில்,அடிக்கடி அவர் இருக்கும் இடத்தில் ஒரு மரத்தடியில் தான் நான் உட்கார்ந்து இருப்பேன்,என்னிடம் பேச ஆரம்பித்தவர் என் கதையை கேட்டு பரிதாப பட்டு இந்த குடிசைக்கு அழைத்து வந்து விட்டார்,இவர் மனைவி யாருடனோ ஓடி போய்விட்டதாக சொன்னார்,அக்கம் பக்கம் கேவலமாக கதைத்தார்கள்,இவர் எதையும் கண்டுக் கொள்ளவில்லை,நீ என் மகள் மாதிரி,நம்மை தப்பாக தான் பேசும் இந்த உலகம் அதை மாற்ற முடியாது,உனக்கு ஏதாவது வேலை கிடைத்தால் செய்,இல்லை என்றால் நான் செய்யும் தொழிலை நீயும் செய் என்றார்,நானும் அவருடன் துணிகளை அயன் செய்து கொடுக்க ஆரம்பித்தேன்,அதில் பெரிய அளவில் வருமானம் இல்லை என்றாலும்,கஞ்சி குடிக்க போதுமானதாக இருந்தது,நல்லா இருந்த மனுஷன் தீடீரென்று உடம்பு முடியாமல் படுத்து விட்டார்,நான் தனியாக வேலை செய்யும் போது பல சிக்கல்கள்,அவர்களிடம் இருந்து தப்பிக்க,இந்த வேலையை தேடிக்கொண்டேன் என்றாள் மரகதம், பெற்றெடுத்தவர்கள் கூட துரத்தி விட்டார்கள்,இவர் எனக்கு ஆதரவு கொடுத்து காப்பாற்றியவர் இவர் தான் என்னுடைய உண்மையான அப்பா,உயிருடன் இருக்கும் மட்டும் நன்றாக பார்த்துக்கனும் என்று கண் கலங்கினாள் மரகதம்

நாய்,பூனை குட்டிகளை கூட பார்த்து பார்த்து வீட்டில் வளர்க்கும் சிலர்,பத்து மாதம் சுமந்து பெற்றெடுக்கும் பிள்ளைகளுக்கு ஏதாவது குறை என்றால் தூக்கி எரிவதற்கும் தயங்குவது இல்லை,ஒவ்வொருவரின் குறையையும் குறையாக பார்க்காதீங்கள்,பெற்றோர்கள் தான் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு,அவர்களே தூக்கி எரிந்தால் அவர்களின் நிலமையை சற்று யோசித்துப் பாருங்கள்,வசதி வாய்புகளுடன் வாழவேண்டிய தாயாளினி,மரகதம் போன்றவர்கள் இன்று குடிசையில்,இனியும் இந்த மாதிரி தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வது பெற்றோர்களின் கடமை.

Print Friendly, PDF & Email

நிழல் பேசுகிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

பர்ஸனல் ஸ்பேஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)