விருந்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 11, 2014
பார்வையிட்டோர்: 7,715 
 

அட சாந்தன்! நீங்கள் எப்ப ஒஸ்ரேலியா வந்தனியள்?

– ஆர் குமரனோ? நாங்கள் இஞ்சை வந்து ஒண்டரை வருஷமாப் போச்சு. எப்பிடி உன்ரை பாடுகள் போகுது? நீ வெளிக்கிட்டு ஒரு பத்துப் பதின்மூண்டு வருஷம் இருக்கும் என்ன?

– பரவாயில்லை சாந்தன். இப்ப நாங்கள் ‘டிலகேயிலை’ இருக்கிறம். நீங்கள்?

– நாங்கள் ‘அல்ற்ரோனா’விலை.

– அப்ப கிட்டத்தான். என்ன ஒரு பிள்ளையோடை நிப்பாட்டிப் போட்டியள் போல.

– உம். ஒண்டு காணும். இந்த ‘லவற்ரன் மாக்கெற்றிலை’ எல்லாம் மலிவு எண்டிச்சினம் குமரன். ஆனா வந்து பாத்தாத்தான் தெரியுது.

– பழைய இரும்புச் சாமானுகளும், படு குப்பை விலையும். அவிச்ச சோளன் ஒண்டு ஐஞ்சு டொலர் சொல்லுறான்.

– நீங்கள் வாற சனிக்கிழமை, எங்கடை வீட்டுக்கு டின்னருக்கு வரவேணும்.

– குமரன் இப்பென்ன அவசரம் டின்னருக்கு? இஞ்சாரும் பவானி, வாற சனிக்கிழமை என்ன மாதிரி?

– ஒரு புறோகிறாமும் இல்லை.

– அப்ப வரலாம் குமரன். ஆனா ஒண்டு குமரன். கனக்கச் சமைச்சுப் போடாதையுங்கோ.

– அப்ப என்ர பிஸ்னஸ்காட். இதிலை என்ர ரெலிபோன் நம்பரும் அட்றசும் கிடக்கு.

***

– ஆரப்பா அது? அடிக்கடி சாந்தன் சாந்தனெண்டு பேரைச் சொல்லிக் கூப்பிட்டது? ‘சேர்’ எண்டெல்லே உங்களோடை வேலை செய்யிற எல்லாரும் உங்களைக் கூப்பிடுறவை.

– அது அந்தக் காலம் பவானி. இப்ப படிப்பிக்கிற ரீச்சரையே, பிள்ளையள் பேர் சொல்லிக் கூப்பிடுகிற காலம். உவன் குமரன் எண்டு, நாச்சிமார் கோயிலடியிலை இருந்து அப்ப ‘சீமென்ற் பக்டரிக்கு’ வேலைக்கு வாறவன். ‘கிளறிக்கல்’ உத்தியோகம்.

– கண்ட கிண்ட ஆக்களிட்டையெல்லாம் சாப்பிடப் போக வேணுமே?

– என்ன செய்யிறது? நாலு மனிசர் தேவையெண்டா போகத்தான் வேணும்.

***

– ஆரோ ரெலிபோனை அடிச்சு அடிச்சுப் போட்டு வைக்கினம். ஹலோ எண்டாச் சத்தமில்லை. குமரனவையாத்தான் இருக்கும்.

– சரி பவானி. அதுக்கேன் சரியாக் கோபப்படுறாய்? எனக்குச் சரியாப் பசிக்குது. ஏதாவது இருந்தாக் குடும். சாப்பிட்டிட்டு கொஞ்சம் றெஸ்ற் எடுத்திட்டுக் குளிப்பம்.

– டின்னருக்குப் போறதுதானே எண்டு சொல்லி, ஒண்டும் நான் சமைக்கேல்லை. பிள்ளைக்கும் ‘சீரியல்’தான் குடுத்தனான். தண்ணியைத் தண்ணியைக் குடிச்சு ஒட்டகம் மாதிரி இருக்கிறன் நான்.

– ஒண்டையும் சாப்பிடாமல் போய் ‘எப்படா சாப்பாடு வரும் வரும்’ எண்டு காத்திருக்கிறதை விட கொஞ்சம் சாப்பிட்டிட்டுப் போனா நல்லா இருக்குமெண்டு. எங்கை பிள்ளை பவானி?

– அவள் உங்காலை எங்கையும் விளையாடிக் கொண்டிருப்பாள்.

– அது சரி பவானி உமக்கொண்டு சொல்ல வேணும். மற்ற வீடுகளிலை போய் குசினியையும் ரொயிலற்றையும் எட்டிப் பாக்கிறது போல குமரன் வீட்டிலையும் போய் மானத்தை வாங்காதையும். குமரன் நல்ல துப்பரவு.

– உது சரிவராது. குமரன் துப்பரவாக இருக்கட்டும். சமைக்கிறது அவற்றை மனிசிதானே! எனக்கு குசினி ரொயிலற் துப்பரவாக இருக்காட்டி சாப்பாடு செமிக்காது.

– என்னவோ சொல்லிப் போட்டன் பவானி. எங்கடை நட்பைக் குலைச்சுப் போடாதை.

***

– என்னப்பா மாட மாளிகையாக் கிடக்கு. இடம் மாறி வந்திட்டோமோ?

– சரியோண்டு நம்பரைப் பார் பவானி.

– இதுதான். இதுதான். நாங்கள் மூண்டு வீடு ‘றென்’றுக்கு மாறியாச்சு. வீட்டுக்குப் போகேக்கை ஒரு கழுவித் துடைப்பு, வீட்டை விட்டுப் போகேக்கை ஒரு கழுவித் துடைப்பு. ஆற்றையோ வீட்டைக் கழுவிக் கழுவித் துடைச்சு கையும் தேஞ்சு போச்சு.

– பொறுமப்பா இப்பதானே நாட்டுக்கை நுழைஞ்சிருக்கிறம். புதுசாக் கட்டுறதுதானே!

– அங்கை ‘கிளறிக்கல்’ உத்தியோகம் எண்டு சொன்னியள். கிளறி எடுத்த கல்லிலைக் கொண்டோ இப்ப இஞ்சை வீடு கட்டியிருக்கினம். நீங்களும் ஒரு ‘போமன்’ உத்தியோகமும். எப்பவோ சொன்னனான் வெளிநாடு போமன் போமன் எண்டு. கேட்டால்தானே இந்த ‘போமன்’.

– ஏய்! இஞ்சை பார். சுவரிலை ‘மைக்’ ஒண்டு கிடக்குது. நாங்கள் கதைக்கிறது எல்லாம் உள்ளுக்கை கேட்கப் போகுது.

– சரி. சரி. பெல்லை அடியுங்கோ.

***

– வாங்கோ சாந்தன். வாங்கோ, எப்பிடி இடத்தைச் சுகமாக் கண்டு பிடிச்சியளோ? நாட்டுப் புதினங்கள் எப்பிடி?

– உனக்கென்னப்பா குமரன், வீடெல்லாம் வாங்கி நல்ல வடிவா வைச்சிருக்கிறாய்.

அதுக்கு நான் பட்ட கஸ்டங்களைச் சொல்லி விளங்காது. இது என்ர மனிசி மகாலட்சுமி.

– வணக்கம்.

– வணக்கம். நான் சாந்தன். இது என்ர மனிசி பவானி. இது எங்கடை குழந்தை ரேனு. அண்டைக்கு நீங்கள் மாக்கெற் வரேல்லை என்ன?

– ஓம் பாருங்கோ.

– இஞ்சாருங்கோ? ரொயிலற் ஒருக்கா போக வேணும். எங்காலில் பக்கமெண்டு கேளுங்கோ?

– பொறு பவானி. உமக்கு முதல் அவசரமா நான் போக வேணும். ஆ குமரன், உங்கடை ரொயிலற்றை ஒருக்கா நான் யூஸ் பண்ணலாமோ?

– நீங்க இஞ்ச வாருங்கோ பவானி. பிள்ளை கையிலையே நித்திரை போலக் கிடக்கு. உள்ளுக்கை கொண்டு வந்து படுத்திப் போட்டு, இப்பிடி வாங்கோ நாங்கள் ஏதாகிலும் கதைப்பம்.

– உங்கடை குசினியை ஒருக்காக் காட்டுங்கோ மகாலட்சுமி அக்கா. நீங்க அக்காவோ தங்கச்சியோ? அக்காதானே! சட்டையிலை ஏதோ பிரண்டு போய்க் கிடக்கு.

– இதுதான். இதுதான்.

– இதென்ன பளிச் பளிச்செண்டு நல்ல பொலிஸ்சாக் கிடக்கு உங்கடை குசினி.

– இது சமைக்கிற குசினி இல்லை பவானி.

– அப்ப?

– இது வடிவுக்குக் கட்டின குசினி. சமைக்கிறதெல்லாம் கராஜ்சுக்கைதான். அங்கை சமைச்சுப் போட்டு, பிறகு இஞ்சை எடுத்து வந்து வைக்கிறனாங்கள்.

– ஏன் மகாலட்சுமி அக்கா இவ்வளவு சாப்பாடு கறியள்? உங்களுக்கு வீண் சிரமம்.

– ஒவ்வொரு கிழமையும் சனி அல்லது ஞாயிறு மட்டிலைதான் சமைக்கிறனான் பவானி. தேவைக்குத் தக்க மாதிரி குட்டிக் குட்டி பிளாஸ்ரிக் பாக்குக்குள்ளை போட்டு ‘பிறீசருக்குள்ளை’ வைச்சு விடுவன். நீங்கள் கிழமைக்கு எத்தினை தரம் சமைப்பியள்?

– ஏழ் மூண்டு இருபத்தொண்டு!

– இன்னும் ஏழாம் வாய்ப்பாட்டிலேயே இருக்கிறியளா?

– ஏன் சிரிக்கிறியள் அக்கா? இவருக்கு ஒவ்வொரு நாளும் சமைக்க வேணும். நீங்கள் எத்தினை தரம் சமைப்பியள்?

– வாய்ப்பாடே கிடையாது. கிழமைக்கு, வெறும் மூண்டுதான். உங்கடை பிள்ளைக்கு இப்ப என்ன வயசாகுது பவானி?

– மூண்டு முடிஞ்சுது அக்கா. உங்கடை பிள்ளைக்கும் அதே வயசுதானே. ஆனா நல்ல வளர்த்தியாக் கிடக்கு. ஏதாவது ஸ்பெஷலா சாப்பாடு குடுக்கிறனியளோ? நல்லா மொழு மொழுவெண்டு உருண்டு திரண்டு வடிவா இருக்கிறான்.

– அப்பிடியொண்டும் பெரிசா இல்லை. நானும் உயரம், அவரும் உயரம். அதாலை பிள்ளை கொஞ்சம் வளர்த்தி. நீங்கள் இரண்டு பேரும் கட்டை. அதாலை பிள்ளையும் கட்டை. வேணுமெண்டா கொஞ்சம் பாலைக் கூடக் குடுத்துப் பாருங்கோ. எங்க உங்கடை ஹஸ்பனட் இன்னும் ரொயிலற்றாலை வரேல்லைப் போல கிடக்கு.

– அவர் எதிலையும் ஸ்லோ(slow). எப்பிடி உங்கடை ஹஸ்பன்ரை வேலை போகுது? அவருக்கு வேலையிலை சற்றிஸ்பக்சன்(satisfaction) இருக்கா? இவரெண்டா சதா வேலை வேலையெண்டபடி.

– படிச்ச ஆக்களைக் கலியாணம் கட்டினா உப்பிடித்தான். வேலையையே கட்டிப் பிடிச்சுக் கொண்டு இருப்பினம்.

– மகாலட்சுமி அக்கா, உங்கடை அவருக்கு இப்ப என்ன சம்பளம் மட்டிலை வரும்?

– என்ன ஒரு நாப்பது நாப்பத்தைஞ்சு ‘கே’ (K) மட்டிலை வரும்.

– அதென்ன ‘கே’?

– எல்லாரும் அப்பிடித்தான் சொல்லினம். ஒரு வித்தியாசமா இருக்கட்டுமெண்டு நானும் சொல்லுறன். ஆ, உங்கை உங்கடை ஹஸ்பனும் வந்திட்டார்.

– என்ன சாந்தன் ரொயிலற் கழுவிப் போட்டு வாறாப் போல கிடக்கு.

– சரியாச் சொன்னியள் குமரன்.

– வாங்கோ சாந்தன், முதலிலை கொஞ்சம் தண்ணி வென்னி எடுப்பம். அப்பதான் சாப்பாடு இறங்கும்.

– சாப்பாடு நல்லாத் தூக்குத் தூக்குது குமரன்.

– அப்பாடா ஒரு மாதிரி ரொயிலற்ருக்குள்ளையிருந்து வந்திட்டியள் என்ன. நான் ஒருக்கா ரொயிலற் போயிட்டு வாறன் மகாலட்சுமி அக்கா.

***

– சாப்பாட்டுக்குத் தாங்ஸ் குமரன். சாப்பாடு ரொம்ப ரொம்ப பிரம்மாதம்.

– எனக்கு சொல்லாதையுங்கோ சாந்தன். இஞ்சை பக்கத்திலை நிக்கிறவாக்குச் சொல்லுங்கோ.

– மகாலட்சுமி, சாப்பாடு ரொம்பப் பிரம்மாதம். இரசம் சொல்லி வேலையில்லை. அதிலும் அந்த இறைச்சிக் கூட்டு, இறால் குழம்பு, அப்பப்பா. இதுகளின்ர றிசிப்பியை ஒருக்கா என்ரை மனிசியிட்டைக் குடுத்து விடுங்கோ.

– சும்மா புகழாதையுங்கோ. தப்பினோம் பிழைச்சோம் எண்டு ஒரே ஓட்டமா ஓடுறியள். உங்கட வீட்டையும் வந்து ஒருநாள் சாப்பிட்டா, பவானியின்ர கை வண்ணத்தையும் தெரிஞ்சிடலாம்.

– கட்டாயம் ஒரு நாளைக்கு எங்கடை வீட்டையும் வரவேணும் மகாலட்சுமி அக்கா. அப்ப நாங்கள் போட்டு வாறம்.

***

– இஞ்சாருங்கோ, பிள்ளையின்ர தொப்பியை மகாலட்சுமியக்கா வீட்டிலை விட்டிட்டு வந்திட்டோமப்பா. கொஞ்சத் தூரம்தானே வந்திருப்பம்.

– ஒருக்கா காரைத் திருப்புங்கோ.

– உமக்கு எப்பவும் ஏதாகினும் ஒண்டை விட்டிட்டு வராட்டி பத்தியப்படாது. சரி. போய் எடுத்து வருவம்.

– இதென்னப்பா இருட்டுக்கை நிண்டு கொண்டு குமரனும் மனிசியும் ஏதோ கொழுத்திப் போடினம். வெடிகிடி பூவுறிஸ் கொழுத்தி விளையாடினமோ? எங்கடை பேரும் இடைக்கிடை அடிபடுது. இப்ப போனா விஷயம் குழம்பிப் போகும்.

– உம். குனியுங்கோ. மூண்டு தரம் துப்புங்கோ. சம்பளம் கேக்க வந்திட்டாளாம் சம்பளம். எங்கையப்பா உவையளைத் தேடிப் பிடிச்சியள்?

– நாளைக்கு உங்கடை வேலை பறி போனாலும் போகும். நீயும் குனியடா ஒருக்கா.

– பிள்ளைக்கு விளங்காது. நீ சுத்திப் போடு மகாலட்சுமி.

– துப்படா மூண்டு தரம். மொழுமொழுப்பா இருக்கிறியாம். நாளைக்கு வயித்தாலை அடிச்சுக் கட்டிலிலை கிட.

– பிள்ளையின்ர நாக்கிலை தொட்டு வை மகா. நான் என்ன செய்யிறது. அவன்ர மனிசி உன்னைக் கேட்டதுக்கு. சாந்தன் ஏதேனும் கேட்டவனோ? அவன்தான் என்ர பிறண்ட். அந்தப் பிள்ளையின்ர தொப்பியை இப்ப என்ன செய்யிறது?

– அதை உங்கை வையுங்கோ. கார் அல்லது அடுப்புத் துடைக்க உதவும். ஹோம் லோன் என்னண்டு எடுக்கிறதாம். அது வேறை பிரச்சினை அவளுக்கு. நீங்க இரவிரவா திண்டது பாதி தின்னாதது பாதியா இரண்டு மூண்டு வேலை செய்ததெல்லாத்தையும் இனிச் சொல்லிக் கொண்டிருங்கோவன்.

– சரி வாப்பா மகா.

– நாவுறு எரிஞ்சு முடிஞ்சாப்போலதான் நான் வருவன். பாருங்கோ ஏதாகிலும் நெடிகிடி வருகுதாண்டு. சரியான நாவுறு.

***

– எட சாப்பாடு முடிஞ்சு வீட்டை போய்ச் சேர முதலே நாவுறு கழிக்கிறான்களப்பா. என்ன ஜென்மமோ? இந்த லட்சணத்தில தொப்பி இல்லாத குறை.

– என்னப்பா வெறும் கையோடை வாறியள்? ‘போக்கிமோன்’ தொப்பியல்லே?

– ‘போக்கிமோனோ’? நாட்டிலை இப்பிடியும் போக்கிரிமோன்கள் இருக்கினமெண்டு இண்டைக்குத்தான் தெரிஞ்சு கொண்டன் பவானி.

– என்னப்பா என்ன உளறுகிறியள்?

– நாங்கள் வீட்டை போய்ச் சேரமுதலே நாவுறு கழிக்கிறான்களப்பா! முதலிலேயே சொன்னனான்தானே! நீங்களும் உங்கடை ஆக்களும். குப்பைச் சனங்களப்பா. எடுங்கோ காரை. உங்களுக்கு இன்னுமொண்டு சொல்லவேணும். முதலிலை சொல்லியிருப்பன். சொன்னா என்ன சொல்லுவியள்? நட்பைப் பிரிக்கிறன் நாட்டைப் பிரிக்கிறன் எண்டு சொல்லுவியள்.

– புதிர் போடாம சொல்லு பவானி.

– ஹரே ராமா கோயிலுக்குப் போகேக்கை – வழியிலை பத்துச் சிக்கின், பத்து டொலர் எண்டு சொல்லி வாங்கி வந்தவையாம். அந்த நாறின சிக்கினைத்தான் எங்களுக்குச் சமைச்சுத் தந்திருக்கினம். நீங்களும் இறைச்சிக் கூட்டு வலு பிரமாதம் எண்டிட்டு வாறியள். அந்த லட்சணத்திலை சாப்பிட்டு முடிய முதல், பொலித்தீன் பாக்குகளுக்கை சாப்பாடு கறியளைப் போட்டு பிறீசருக்குள்ளை வேறை தள்ளுகிறா.

– ஒவ்வாக், ஒவ்வாக்.

– இன்னுமொண்டு. இதைச் சொல்ல எனக்கே சத்தி வருது. வாங்கி வந்த சிக்கினையும் வெட்டுறதுக்கு ஒரு இடம் இல்லையெண்டு, பாத்துறூமுக்கும் ரொயிலற்ருக்கும் போற இடைவெளியிலையல்லே வைச்சு வெட்டியிருக்கினம்.

– என்னண்டு உனக்கெல்லாம் இது தெரியும் பவானி?

– இறைச்சித் துண்டெல்லாம் பூ மழை போல சுவர் முழுக்கக் கிடந்ததைக் காணேல்லையே நீங்கள்?

– ஒவ்வாக்!

– விருந்து விருந்து எண்டு கூட்டி வந்தியள். இப்ப உந்தச் சத்திக்கு ஒரு மருந்து வாங்க முடியேலாமல் கிடக்கு. சத்தி எண்டாலும் ‘டொக்ரரிட்’டைக் காட்டி ஒரு ‘பிறிஸ்கிரிப்ஷன்’ வாங்கேலாட்டி ‘பாமஷிக்’காரன் மருந்து தரான். காருக்கை சத்தி எடுத்து எடுத்து காரே நாறிப் போச்சு.

– பொறு பவானி. நான் படுற அவஸ்தையிலை நீ வேறை. வயித்தை வலிச்சு வலிச்சு வருதப்பா!

– கெதியிலை ஓடி வீட்டை போய்ச் சேருங்கோ. ஏதோ பழமொழி சொல்லுவினம். விருந்தோ மருந்தோ எண்டு. ஒண்டுமே இப்ப வருதில்லையப்பா.

– இப்ப உதுவா முக்கியம்.

– எங்கே போகிறோம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மார்கழி 2007, அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம், அவுஸ்திரேலியா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *