கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 7, 2023
பார்வையிட்டோர்: 2,440 
 
 

சத்தத்தைக் குறைச்சு வைச்சும் ஃபோன், லேசாகச் சிணுங்குகிறது!

‘ஹலோ…’

சே…அலுப்புக் களைப்பெண்டு, ஒரு கொஞ்சநேரம் நித்திரைகொள்ள விடாதுகள்!

‘ஹலோ…ஹலோ…. ஆர்… சுபாவே கதைக்கிறது?’

ஏதோ புதுசா இண்டைக்குத் தான் இவர் என்ரை குரலைக் கேக்கிறார்!

‘ஓமோம் சொல்லுங்கோ நடா அண்ணை… சுபாதான் கதைக்கிறன். ஏன் குரல் தெரியேல்லையே?’

பாசாங்குக்குக் கதைக்க, எனக்கும் நல்லாப் பழக்கிப் போட்டாங்கள்.

‘மகள் கதைக்கிறா எண்டு நினைச்சுப் போட்டன். ரெலிபோனிலை குமரி மாதிரியெல்லே உம்மடை குரல் கேக்குது…ஹி…ஹி…ஹி’

சிலேடையும் சேட்டையும் சேர்ந்த, நரிச் சிரிப்பு ஃபோனுக்குள்ளாலை தெரியுது. ஆள் நல்ல வடிவா ‘வழியுது.’

‘இண்டைக்குப் புதன் கிழமையெல்லே, நடா அண்ணை? சுஜி ஸ்கூலுக்குப் போயிருப்பாளெண்டு உங்களுக்குத் தெரியுந்தானே…?’

புலுடாப்பண்ண மட்டும் நல்லாத் தெரியுது, இதுகளுக்கு.

‘சும்மா உம்மோடை ஒரு பகிடிக்கெல்லோ சொன்னனான், சுபா…’

பகிடிவிட நான் என்ன இவருக்குப் பெண்சாதியோ, சிநேகிதியோ… இல்லை இவற்றை…வாற எரிச்சலக்கு…!

‘சரி சரி… சொல்லுங்கோ நடா அண்ணை…’

விட்டால் தொடர்ந்து இழுபடும்…பிலாப்பால் மாதிரி.

‘ஒண்டும் விசேசமாயில்லை. அருளைக் கண்டு ஒரு கிழமையாப் போச்சு. ஒருக்கால் பாக்கவேணும் எண்டு சோட்டையாக் கிடக்கு. வீட்டிலை ஆள் நிக்கிறாரே?’

ஓ..! அருளிலை அன்பு மழை பொழியுது!

‘என்ன நாடா அண்ணை கதைக்கிறியள்? வெள்ளென விடியக் காத்தாலை வெளிக்கிட்டால், அவருக்கு ஐஞ்சு மணிக்கு வேலை முடியும். அதுக்குப் பிறகு உந்த ஊர்த் துளவாரம் எல்லாம் பாத்து முடிச்சுப் போட்டு, பத்துப் பதினொரு மணிக்குத்தான் கட்டைக்குத் திரும்பிறது. நானே மனிசனை ஒழுங்காக் காணக் கிடைகிறதில்லை. எல்லாந் தெரிஞ்சுகொண்டும் புதினமாக் கேக்கிறியள்?’

இது வேறை ஒண்டுமில்லை, கள நிலவரம் அறியிற கள்ளக் குணம்!

‘ஓமோம்…தெரியுந் தெரியும். உங்கடை குடும்பமும் எங்கடை குடும்பமும் ஒண்டுக்கை ஒண்டு மாதிரி எண்டபடியாலைதான் கேக்கிறன், குறை நினையாதையும், சுபா.’

அதென்ன ஒண்டுக்கை ஒண்டு…?

‘சீ..சீ..உங்களை நான் குறை நினைப்பனே? வேறையென்ன, சொல்லுங்கோ நடா அண்ணை…’

கை நீட்டி வாங்கின கடன் காசை உடனை தாவெண்டு இவன்பாவி கேட்டுப்போட்டால்?…ஐயோ…கடவுளே…இப்ப நானெங்கை போவன்…!

‘நீர் ‘நைற் ஷிப்ற்’; எண்டு இரவிரவாக ‘கிளீனிங்’ வேலைக்குத் திரியிறீர். அருள் என்னெண்டால் உந்தக் கண்டறியாத ‘டெலிவறி’ வேலையெண்டும், பிறகு தேலையில்லாத சிநேகிதக்காறரோடை சேந்து பாட்டியெண்டும் தண்ணியெண்டும் இரவு பகலாக றோட்டளந்தபடி.’

நக்கல் நளினம் மட்டும் ஒருநாளும் விட்டுப் போகாதே!

‘என்ன செய்யிறது நடா அண்ணை? எல்லாம் தலை விதி.’

ஓமோம்…இப்பிடியெல்லாம் கதை கேட்க வேணுமெண்டு விதிதானே!

‘எனக்கிருக்கிற கவலை என்னெண்டால், நீங்கள் ரெண்டுபேரும் இந்த மாதிரி இருந்துகொண்டு எப்பிடிக் குடும்பம் நடத்திறியள் எண்டதுதான்’

அது சரி…. அது சரி…. இந்த ஓநாய்க் கவலை எல்லாருக்கும் வராதுதான்!

‘எனக்கென்னவோ, அருள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளுறார் போலை கிடக்கு, சுபா. காசு பணம் ஒரு பக்கம் கிடக்கட்டும். அது வரும் போகும். ஆனால் புருசன் பெண்சாதிக்கிடையிலை அன்பு, பாசம், பிணைப்பு எண்டது எப்பவும் இருக்கவேணும். உமக்கென்ன வயது போவிட்டுதே? கேக்கிறன் எண்டு குறை நினையாதையும் சுபா……. உம்மைத் தன்னிலும் அவர் அன்பாகக் கவனிக்கிறாரே…?’

அனுதாபம் எல்லா ஆடுகளிலையாக்கும் எண்டு நினைச்சன். அது பிழை. மறியாட்டிலை மட்டுந்தான் மனிசனுக்குக் கரிசனை!

‘கொஞ்சம் பொறுப்பீனமும் ஊதாரித்தனமும் உங்கடை சினேகிதருக்கு இருக்குத்தான், நடா அண்ணை. ஆனால் எனக்குச் சீலை சட்டை வாங்கித்தாறார். கோயில் கொண்டாட்டங்களுக்குக் கூட்டிக்கொண்டு போய் வாறார். இடைக்கிடை வூட்சைட் சினிமாவிலை தமிழ்ப் படத்துக்குக் கூட்டிக்கொண்டு போறார். பிறகென்ன அன்பில்லாமலே?’

மடத்தனமான மறுமொழியெண்டாலும், பிடிகுடுக்காமல் கதைக்க எனக்கும் தெரியுது!

‘நீர் மனிசனை விட்டுக் குடுக்கக்கூடாதெண்டு மூடிமறைக்கிறீர். அருள் என்னட்டைக் கடன் பட்டிட்டாரே எண்டு நீர் கவலைப்படத் தேவையில்லை, சுபா. நானென்ன பிறத்தியே? உம்மடை உந்த முகத்துக்காத்தான் காசை உடனை வையெண்டு அருளை நான் நெருக்கிறதில்லை. விளங்குதே? உமக்கேதாவது காசுகீசு தேவைப்பட்டால் அசுக்கிடாமல் என்னைக் கேளும். என்ன தேவையிருந்தாலும் என்னட்டை எப்பவும் நீர் உரிமையோடை கேக்கலாம், சுபா. நான் சொல்லுறது உமக்கு விளங்குதே?’

வெள்ளை மனசை விளங்காமல் போகுமே!

‘உங்கடை நல்ல மனம் எனக்குத் தெரியாதே. ‘தாங்ஸ்’ நடா அண்ணை. போனிலை ஒரே இரைச்சலும் சத்தமுமாக் கிடக்கு. எங்கையிருந்து பேசிறியள்?’

வெட்டி விடுறதைத் தவிர வேறை வழியில்லை.

‘நான் உம்மடை வீட்டுக்குக் கிட்டத்தான், ‘மல்வேர்ன் மோல்’ போனிலை, காசு போட்டுக் கதைக்கிறன்.’

அதுதானே இங்கை ‘அண்ணோண் நம்பர்’ எண்டு விழுகிது.

‘சரி நடா அண்ணை, நான் இப்ப கொஞ்ச நேரம் படுத்தால்தான் பிள்ளையள் ‘ஸ்கூல்’ முடிஞ்சு வாறநேரம் எழும்பச் சரியாய் இருக்கும். இண்டைக்கு அருளைக் கண்டால் நீங்கள் ‘கோல்’ எடுத்ததெண்டு சொல்லிவிடுறன். அப்ப சரி… நான் வைக்கிறன் நடா அண்ணை. சரியே … ‘ஓகே …. பாய்’ நடா அண்ணை!’

பதிலுக்கென்று காத்திருக்காமல் வெடுக்கென்று வெட்டிவிடுகிறேன்.

பல்லுக்காட்டக் கூடாதவங்களிட்டையெல்லாம் இளிச்சாச்சு. கை நீட்டிக் கடன் பட்டாச்சு. இந்த நரகல் எல்லாத்தையும் நான் சகிக்கத்தானே வேணும்! பட்டு உத்தரிக்கிறன்!

இந்த நாடாவுக்கு மனிசி மக்கள் மருமக்கள் பெறாமக்களெண்டு கனடாவிலை பெரிய குடும்பம். அவ மனிசிக்கு ஒரு நல்ல ஒஃபீசிலை கனகாலம் வேலை. ஓவரைம் அது இதெண்டு இராப்பகலாக உழைச்சுழைச்சு, பாவம், மனிசி ஓடாப் போச்சுது.

இந்தாள் இப்பவும் புதுசா அவிச்சுக் கொட்டின புட்டுக்கட்டி மாதிரி மொழுமொழுவெண்டு. ஆனால் வேலை வெல்லட்டிக்குப் போறதில்லை.

அழுது விழுது மாசாலங் காட்டி, அரசாங்கத்திட்டையிருந்து கறந்தெடுக்கிற ‘வெல் ஃபெயர்’ காசு ஒரு பக்கம். மைம்மல் பொழுதுகளிலை தமிழ் வீடுவீடாப் போய் ‘ஊரிலை போர்’ எண்டு தந்திரமாய்ச் சொல்லி – சில சமயம் சத்தம்போட்டு – அதுவும் சரிவாராவிட்டால் சண்டித்தனம் காட்டி, உண்டியலில் சேர்க்கிற காசு இன்னொரு பக்கம்…என்னென்ன வழியிலெல்லாம் இந்தாளுக்குக் காசு வசியமாகுது!

வட்டிக் காசை வைச்சுக்கொண்டு வாழ்க்கையை ‘அந்தமாதிரி’ அனுபவிக்கிறார். அவருக்கென்ன குடுத்து வைச்சவர்!

ஈழம், இனம், மொழி என்று உண்மையாக வாழ்ந்து, உயிரை அழிச்சதுகள் ஏராளம் பேர் இருக்கினம்தான். ஆனால் ஊரிலை பிரச்சினையெண்டும், ஊரிலை சண்டையெண்டும் சொல்லிச் சொல்லி, ஒண்டும் தெரியாத அப்பாவிச் சனங்களை ஏமாத்தி ஏமாத்தி; இங்கை காசு பொருள் சேர்த்துப் பணக்காரரானதுகள், இப்ப தெருத்தெருவாக் குழுப்பிடிச்சலையிதுகள். ஊரவையின்ரை காசிலை நல்லாத் திண்டு குடிச்சுக்கொண்டு தினவெடுத்துத் திரியுதுகள்.

நீதி நியாயம் நேர்மையோடை வாழ நினைக்கிற எங்களுக்குத்தான் எல்லாக் கஷ்டங்களும் கவலையளும்! சீ…என்ன சீத்துவக்கெட்ட வாழ்க்கை!

முழு உடலையும் போர்வைக்குள் புதைக்கின்றேன். கண்களை இறுக மூடிக்கொள்கிறேன். தூக்கம் விழிக் கோளங்களுக்குள் சுமையாகக் குவிந்து கிடந்து துன்புறுத்துகிறது. ஆனாலும் தூக்கமுடியவில்லை, குழம்பிவிட்டது!

நெஞ்சிலிருந்து மூக்காலும் வாயாலும் பீறிட்டு வெளியேறும் அனல்க் காற்று, போர்வையை நிரப்பிக்கொள்கிறது. மூச்சுத் திணறுகிறது! தலை மூடியிருந்த போர்வையின் மேற்பகுதியை விலக்கிக்கொண்டு, மறுபக்கம் திரும்பிச் சுருண்டு படுக்கிறேன்.

மனம் தூங்க மறுத்து அடம்பிடிக்கிறது!

கனடா பற்றிய நினைவுகள் கானடா ராகம் மாதிரி இனிப்பாயிருந்த ஒரு காலம் இருந்ததுதான். என்னைப் பொறுத்தவரைக்கும் ‘அது வெறும் கானலடா’ என்றாகிப் பத்து வருசங்களுக்கு மேலாகிவிட்டன. ‘ஏன் கனடாவுக்கு வந்தாய்?’ என்று இப்போதெல்லாம் என்னையே நான் அடிக்கடி கூண்டிலேற்றிக் குறுக்கு விசாரணை செய்துகொண்டிருக்கிறேன்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பட்டமெடுத்த கையோடு எங்கள் இருவருக்கும் வேலை கிடைத்திருந்தது. அதிஷ்டவசமாக ஒரே பாடசாலையில் படிப்பிக்கும் வாய்ப்பும் வந்து கிடைத்திருந்தது. ஆசிரியத் தொழிலானாலும், சுளை சுளையாகப் பெரிய சம்பளம். குடும்பச் சுமையென்று பெரிதாக ஒன்றுமிருக்கவில்லை.
சொளகரியமாகத்தான் வாழ்ந்து வந்தோம்.

ஒருசில வருடங்களின் பின்னர் இயக்கங்களினதும் இராணுவத்தினதும் கெடுபிடிகள் அதிகரித்தன. பாதுகாப்பும் சுதந்திரமும் பறிபோயின. இனியும் நிம்மதியாக வாழமுடியாது என்ற நிலை ஏற்பட்டது. இவர் எப்படியோ ஒரு ஏஜென்ஸியின் காலைக் கட்டிப் பிடித்துக் கனடா வந்து சேர்ந்தார்.

மூன்று வருடங்களுக்குப் பிறகு, எங்களை ‘ஸ்பொன்ஸர்’ பண்ணும் வாய்பு;புக் கிடைத்தது. அதைக் கைவிட இவருக்கு விருப்பமில்லை. ஊரை விட்டு வெளிக்கிட எனக்கு விருப்பமில்லை. எவ்வளவோ நான் சொல்லிப் பார்த்தேன். என்னுடைய கதை எடுபடவில்லை. கடைசியில் இவரது விருப்பத்தின்படி ஊரிலுள்ள சொந்த பந்தம், சொத்து சுகம் எல்லாவற்றையும் அப்படியே கைவிட்டுவிட்டு வெளிக்கிட்டேன். அப்போது ஆறு வயதாயிருந்த சுஜியையும், நாலு வயதாயிருந்த சுதர்சனையும் அள்ளிக் கட்டிக்கொண்டு நாங்களும் கனடா வந்து சேர்ந்தோம்.

இவர் இங்கு வந்து ஒரு கௌரவமான உத்தியோகம் பார்த்துக் காசுழைக்கவில்லை. கல்லைப் பிளந்து காசுழைத்தே எங்களைக் கனடாவுக்குக் கூப்பிட்டார். வந்து சேர்ந்த பிறகுதான் எனக்கு இந்த உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கசியலாயின.

நாங்கள் இரண்டுபேரும் சுயபாஷைப் பட்டதாரிகள். அடிச்சுப் போட்டாலும் ஆங்கிலம் வாய்க்குள் நுழையுதில்லை.

எங்களாலை ஊரிலிருந்து கொண்டுவர முடியாதது, ‘கனடியன் எக்ஸ்பீரியன்ஸ்’ என்கின்ற இன்னொரு ‘கறுமம்.’ கக்கூசு கழுவாத குறையாகக் கழுவித் துடைக்கிற வேலைதான் எனக்குக் கிடைத்தது. அவருக்கும் ‘அண்டண்டாடு ஆக்கித் தின்னுறதுக்கு’ மட்டும் போதுமான வருமானமுள்ள வேலை.

இந்த லட்சணத்தில் இரண்டு பிள்ளைகள், இரண்டு கார், வீடு, வீட்டுக்குத் தளபாடம், தட்டுமுட்டுச் சாமான், ஊரிலை சகோதரங்களுக்கு காசுதவி, எல்லாத்துக்குமெனப் பட்ட கடன் ….. அது இதெண்டு எல்லாத்தையும் சம்பளத்தாலை எப்பிடிச் சமாளிக்கிறது?

கழுத்திலை சுருக்குக் கயிற்றைக் கட்டி, நடுக்கிணத்துக்கை இறக்கி வைச்சிருக்கிறது மாதிரி வெருட்டி வெருட்டிக் கிறெடிட் கார்ட் கொம்பனிகள் நாங்கள் உழைக்கிற காசை மாசம் மாசம் கறந்தெடுத்தபடி!

நினைக்க நெஞ்சு படபடக்குது! உடம்பு கொதிக்குது! கொஞ்சம் குளிரான தண்ணீர் இதமாயிருக்கும். கட்டிலை விட்டெழும்ப நினைக்கையில் …….

‘கோலிங் பெல்’ அடிக்கிறது!

இந்த நேரத்தில் யாராக இருக்கும்? எந்தக் கடன்காரனோ? மேற்கொண்டு எதையும் சிந்திப்பதற்கு முன்னர் மீண்டும் மணி ஒலிக்கிறது.

மெதுவாக எழுந்து, மாடியிலிருக்கும் படுக்கையறை யன்னலின் திரைச் சீலையை ஒரு சொட்டுப்போல விலத்தி, கண்ணாடி யன்னலூடாக வெளியே வீட்டின் முகப்பைப் பார்க்கிறேன்.

‘புளு ஜேய்ஸ்;’ தொப்பிதான் கண்ணில் படுகிறது. உற்றுப் பார்க்கிறேன். மயிர் உதிர்ந்த மண்டையை மறைக்கத் தொப்பி போட்டபடி, வீட்டு வாசலின் முன்னால் நடா அண்ணர்!

‘இந்த மனுசனுக்கு எத்தினைதரம் சொல்லுறது?’

ஓசையெழுப்பாமல் பூனைபோல மெதுவாக அடியெடுத்து வைத்துப்போய், மீண்டும் கட்டிலில் படுத்துப் போர்வைக்குள் என்னைச் சுருட்டிக்கொள்கிறேன்.

முகப்பு மணி மூன்றாம் முறை அடிக்கவில்லை. அது பெரிய நிம்மதி. ஆனாலும் சினம் அடங்கவில்லை!

மனம் நெஞ்சாங்கூட்டை விட்டு வெளியேறி அலைந்துலையத் தொடங்கி நெடுநேரமாகிவிட்டபோது –

தொலைபேசி மீண்டும் ஒருமுறை முனகிச் சினுங்குகிறது. இம்முறையும் ‘அண்ணோண் நம்பர்’ தான்!
எடுக்கவா, விடவா? ….. தயங்கியபடி தொலைபேசியைத் தூக்குகிறேன்.

‘ஹலோ…’

என்னவோ ஏதோ என்ற ஏக்கத்துடன் குரல் கொடுக்கிறேன்.

‘ஹலோ சுபா…நீர் என்ன, வீட்டிலை இல்லையோ?’

நடா அண்ணர்தான் முறுமனையில்.

‘என்ரை வீட்டு போன் நம்பருக்குத்தானே நீங்கள் இப்ப அடிக்கிறியள்?’

‘இல்லை…. இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னம் நான் வந்து ‘பெல்’ அடிச்சனான். நீர் கதவு திறக்கயில்லை. அதுதான் வீட்டிலை இல்லையோ எண்டு கேட்டன் …’

‘அவர் வீட்டை இல்லை எண்டு சொன்னனாலெல்லே, நடா அண்ணை’

‘அது தெரியுமெனக்கு, சுபா’

‘ஒ…வட்டிக் காசு இந்தமுறை கொஞ்சம் பிந்தப்போகுது, நடா அண்ணை. அவர் சொல்லியிருப்பாரெண்டு நினைச்சன்…’

‘அதுகும் தெரியுமெனக்கு…நான் சும்மா உந்தப் பக்கம் வந்தனான். கொஞ்சம் தாகமாயிருந்திது…அதுதான்…’

‘மல்வேர்ண் மோலுக்கை ஒரு ‘கூல் ட்றிங்’ வாங்கிக் குடிச்சிருக்கலாமே நடா அண்ணை, அப்பிடித் தாகமாயிருந்தால்!’

‘அதில்லைச் சுபா, உம்மட கையாலை சூடாக் குடிக்கிறாப்போலை வருமே…!’

ஒரேயொரு கணம் தான்! கோவம் உச்சியில் ஏறியது!

‘வையடா ஃபோனை…பொறுக்கி!’

தொலைபேசியைப் படாரென்று அடித்து வைக்கிறேன்.

கட்டுக்கடங்காத ஆத்திரத்தினால், வீடு அதிர்கிறது!

– ஜீவநதி – பங்குனி 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *