தாலி ஒரு சுமை..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 9, 2021
பார்வையிட்டோர்: 2,974 
 

“அப்புறம் முடிவா என்ன சொல்றே செங்கமலம்..?” பஞ்சாயத்து தனசேகரன் அவளை பார்த்துக் கேட்டார்.

ஊர் கூடி இருந்தது.

பஞ்சாயத்து மேடைக்கு அருகில்… வலப்புறம் அவள் கணவன் முருகையனும், இடது புறம் செங்கமலமும் எதிர் எதிரே நின்றார்கள்.

“ஐயா ! நான் படுற கஷ்டம் இந்த ஊருக்கேத் தெரியும். இந்த மனுசன் தன் வருமானத்தை மட்டும் குடிச்சி அழிச்சா பரவாயில்லே. நான், நாத்து நடவு, கொளுத்து வேலைன்னு போய் சம்பாதிச்சு புள்ளைக்குட்டிகளைக் காப்பாத்தற வருமானத்தையும் புடுங்கி குடிச்சி அழிக்கிறான்ய்யா. குடல்ல மறைச்சு வச்சிருந்தாலும் தோண்டி, துருவி எடுத்து அடிச்சி, உதைச்சி பிடுங்கிப்போய் குடிக்கிறான்ய்யா. புள்ளைங்களெல்லாம் அடிக்கடி பசி, பட்டினியாய்க் கிடக்கு. நானாவது பச்சைத் தண்ணியைக் குடிச்சி இடுப்புத் துணியை இறுக்கி கட்டிக்கிட்டு சுருண்டு படுத்துடுவேன். புள்ளைங்க பாடு கண் கொண்டு பார்க்க முடியல. பெத்த வயிறு பத்திக்கிட்டு எரியுது.

ஐயா! கட்டின தோசத்துக்கு நான் பொருத்துப் பார்த்தேன் திருந்தலை. அடி , உதை பட்டு திருத்திப் பார்த்தேன். திருந்தலை.! இனியும் மல்லுக்கு நின்னு நானும், என் புள்ளைகளும் கஷ்டப் படுறதாய் இல்லே. இந்த மனுசன் உறவு வேணாம். வெட்டி விட்டுடுங்க. விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கிக் கொடுங்க..”- தன் அவலங்களையும், முடிவையும் அழமாட்டாத குறையாகச் சொல்லி முடித்தாள் செங்கமலம்.

‘நிசம்தான்!’ தனசேகரனுக்குக் கேட்கவே கஷ்டமாக இருந்தது. ஆனாலும் இவள் வாக்குமூலத்தை மட்டும் கேட்டு நியாயம் சொல்வதோ, நீதி சொல்வதோ எப்படி சரியாகும்…? அதனால்….

“நீ என்ன சொல்றே முருகையா…?” அவனைப் பார்த்துக் கேட்டார்.

முருகையன் கண் கலங்க மனைவியை ஏறிட்டான்.

“செங்கமலம்! இனிமே சாமி சாத்தியமா நான் குடிக்க மாட்டேன் புள்ளே. திருந்திடுறேன் !” கமறினான்.

சட்டென்று அவனைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்ட அவள்…

“சாமி! உன் சத்தியம் எனக்குத் தெரியும். திருந்திட்டேன்ன்னு பொண்டாட்டியைப் போட்டு தாண்டிட்டே. புள்ளைங்களைப் போட்டுத் தாண்டிட்டே. ஏன்…. இதோட சாமி மேல ஆயிரம் தடவைகளுக்கு மேல் சத்தியமும் பண்ணிட்டே!!. இனி நான் ஏமாறுறதாவும் இல்லே. உன்னை நம்புறதாவும் இல்லே. அத்துக்கிட்டு வாழுறதுதான் ஒரே வழி. ஆளை உடு.”கறாராய்ச் சொன்னாள்.

“இது கடைசி மன்னிப்பா இருக்கட்டும் புள்ளே.!”

“வேண்டாம்ப்பா.. ! ”

“செங்கமலம் ! செங்கமலம்…!!” கெஞ்சினான்.

அவன் கெஞ்சலைப் பார்த்துப் பரிதாப்பட்ட தனசேகரன்…

“அவன்தான் இப்படி ஊர் மொத்தத்துக்கும் நடுவுல மன்னிப்புக் கேட்டு கெஞ்சறானில்லே. போனாப்போவுது. இந்த ஒரு தடவை மட்டும் மன்னிச்சி விடேன் செங்கமலம்…!” என்றார்.

“ஐயா ! இந்தாளை பத்தி உங்களுக்குத் தெரியாது. பத்து வருசமா இருந்து குப்பைக் கொட்டுற எனக்குத்தான் தெரியும். ஆயிரம் தடவைகளுக்கு மேல் மாப்பு கொடுத்துட்டேன். இந்த ஜென்மத்துல இவரு திருந்தப் போறதில்லே. இந்த ஆம்பளையோட நடிப்பும், பசப்பும் உங்களுக்குத் தெரியாது. நான் இந்த ஆளை விட்டு விலகிட்டேன்னா… குடிக்க காசும், படுக்கப் பொண்டாட்டியும் கெடைக்காதுன்னு கெஞ்சறான்ய்யா. இவன் பேச்சை நம்பாதீங்க. எனக்கு இவர் சாவகாசம் வேணாம்.” கண்டிப்பாகச் சொன்னாள்.

இவன் குடிப்பதும், அடிப்பதும், மனைவி, மக்களைக் கொலைப் பட்னி போடுவதும் ஊருக்கேத் தெரியுமென்பதால் மக்கள் இவளைப் பார்த்துப் பச்சாதாபப் பட்டார்கள்.

‘என்ன செய்யலாம். எப்படி தீர்ப்பு வழங்கலாம் ..?’ என்கிற யோசனையில் சிறிது நேரம் மெளனமாக இருந்த தனசேகரன்…

“இதோ பாரு முருகையா. உன் மனைவி சொல்றது உண்மை என்கிறது எனக்கு மட்டுமில்லாம ஊருக்கே தெரியும். நீங்க பிரியறதுதான் நல்லது. அதனால இந்த நிமிசத்திலேர்ந்து உனக்கும், அவளுக்கும்….. பொண்டாட்டி புள்ளைங்கன்னு எந்த உறவும் கிடையாது. அவ சோலிய அவ பார்த்துப்பா. உன் சோலிய நீ பார்த்துக்கோ.”

“நீயாய்த் திருந்தி என்னைக்கு உன் மனசுல பொண்டாட்டி, புள்ளைங்க வேணும்ன்னு வர்றியோ. அன்னைக்கு வா. இதே மாதிரி பஞ்சாயத்துக்கு கூட்டி, உன்னையும் செங்கமலத்தையும் சேர்த்து வைச்சுடுறோம். என்ன… நான் சொல்றது சரிதானே ..?” என்று தன்னுடன் அமர்ந்து இருக்கும் மற்றவர்களையும், எதிரே இருக்கும் மக்களையும் பார்த்துக் கேட்டார்.

“சரிதானுங்க…”எல்லோரும் தலையாட்டி முணுமுணுத்தாள்.

முருகையன் தலை கவிழ்ந்து நின்றான்.

“ஐயா! ஒரு நிமிசம் !” என்ற செங்கமலம் தன் கழுத்தில் கிடந்த தாலியைக் கழட்டினாள்.

“கட்டின பொண்டாட்டியைக் காப்பாத்த முடியல. பெத்தப் புள்ளைங்களுக்குச் சோறு போட முடியல. இது எதுக்கய்யா.. என் கழுத்துல கிடந்து கனக்கனும் ..? அந்த ஆளுகிட்டேயே கொடுத்து குடிக்கச் சொல்லுங்க. இல்லை…. திருந்தின பிறகு எடுத்துக்கிட்டு வந்து கட்டக் சொல்லுங்க. அப்போதான் அதுக்கு மரியாதை.!!” சொல்லி தனசேகரன் முன் வைத்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வேகமாக நடந்தாள்.

கூட்டம் மொத்தமும் ஸ்தம்பித்து வாய்ப்பிளந்தது.

முருகையன் கூனிக் குறுகி நின்றான்.

‘நியாம்தான்!’ – தனசேகரன் முணுமுணுத்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *