தாய்மனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 12, 2023
பார்வையிட்டோர்: 2,420 
 
 

பிரதான வீதியில் ஏதோ ஒரு வாகனம் விரைந்து போவது துல்லியமாகக் கேட்டது. அதைத் தொடர்ந்து வாகனங்கள் வேறும் ஏதாவது இரைகிறதா? என செவிகளை கூர்மையாக்கி அவ தானித்தாள் பாக்கியம். எதுவித அசுமாத்தமும் இன்றி வீதி அமைதியாய் இருந்தது. 

ஏனோ இன்று தூக்கம் வராமல் மனது சுமையாய் இருந்தது. குளத்தடி வளவுப் பக்கமா மயூரனும் இன்னுமொரு பொடியனும் சைக்கிள்ளை போறான்கள். 

காலையில அம்மன் கோயிலுக்கு மாலை கட்டும் மணியம் பூப்பிடுங்க வந்தபோது சொன்னதுதான் நினை வில் உழன்றது. 

மயூரன் ‘அங்காலை நிற்பதாகத்தான் யாரோ சொன்னார்கள். ஆனால் மணியம் அவனைத் தன் கண்களால் கண்டதாகச் சொன்னபிறகு மனது குழம்பி அலைந்தது. 

கொஞ்ச நேரத்திக்கு முதல் கேட்ட வாகனச் சத்தத்தின் பிறகு எதுவித ஓசையுமில்லை. 

இந்த ஊரில் மனித வாடையே இல்லையோ என்று எண்ணுமளவிற்கு ஊர் அடங்கிப் போயிருந்தது. 

ஜன்னல் கண்ணாடிகளுக்கு அப்பால் வெளியே நிலவு காலித்துக் கொண்டிருந்தது. நிலவு வெளிச் சத்தைப் பார்த்து கிளர்ச்சி கொண்டு ஊளையிடும் நாய்கள் கூட வாய் திறக்கவில்லை. 

வாற அமாவாசைக்கு அடுத்த நாள் தேப்பன்ர துவசம்… ஆரிட்டையும் சொல்லியெண்டாலும் விட வேணும்… நினைவு சுரந்தது. 

வழமையாக தகப்பனின் துவச நாளன்று நண்பர்களையும் கூட்டி வந்து பயூரன் உண்டுவிட்டுத்தான் போவான் என்பதை நினைத்துப் பார்த்து மனம் நொந்தாள். 

கணவன் உயிரோடு இருந்த போதெல்லாம், 

அவனை அவன்ர வழியில் விட்டுவிடு பாக்கியம் என்றுதான் சொல்லுவார். அவர் சொல்வதை தான் செயற்படுத்திவிட்டதாக இப்போது மனம் பூரித்தது அவளுக்கு. 

வேலி ஓரமாக யாரோ நடந்து போவது போன்று காலடிச் சத்தங்கள் கேட்டன. பொருட்படுத்தாமல் கிடந்தாள். 

நேற்று முன்தினம் அதிகாலை.

ஜீப் ஒன்றில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி, பெற்றோர் எல்லோரையும் ஊர்ப் பாட்சாலையில் ஒன்பது மணிக்கு கூடுமாறு அறிவித்தபடி சென்றது.. 

பாக்கியமும் போயிருந்தாள்.

எல்லோருக்கும் ரீயும் பிஸ்கட்டும்!: தரப்பட்டது. சீருடைகள் சிரித்துச் சிரித்து உபசரித்தது ஆச்சரிய மாயிருந்தது அவளுக்கு. 

நூற்றம்பது வரையான, வயதான இளமையான பெற்றோர்கள் எல் லோரும் வந்திருந்தார்கள்.

தடதடவென நிலத்தை மிதித்தபடி அதிகாரி வந்தான். எல்லோரையும் பார்த்து கைகூப்பிவிட்டு அமர்ந்தான். 

அவனருகே இன்னொரு உத்தி யோகத்தர் சாதாரண உடையுடன் இருந்தார். 

அதிகாரி அமர்ந்தபடியே பேசத் தொடங்கினான்.. ஒருவருக்கும் அவன் என்ன சொல்கிறான் என்று புரியவில்லை. 

அதிகாரி. பேச்சை நிடுவே நிறுத்த அருகே இருந்த உத்தியோகத்தர் அவன் சொன்னதை தமிழில் சொல்ல ஆரம்பித்தார்…. 

“நாங்கள் உங்களுக்கு நல்லதுதான் செய்வோம். உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தர நாங்கள் விரும்புகிறம். நீங்கள் யாரும் புலிகளை ஆதரிக்கக் கூடாது. அவர்களைக் கண்டால் எங்களுக்கு இனங்காட்ட வேண்டும். இல்லை யெண்டால் என்ன நடக்கும் என்பது நான் சொல்ல வேண்டியதில்லை…” 

ஒரு மணிநேரமாக அந்த அதிகாரி பேசியதன் சாராம்சம் இதுவாகத்தான் இருந்தது. 

கூட்டம் முடிந்து எல்லோரையும் போலத்தான் பாக்கியமும் வந்தாள்.  

அவன் சொன்னதைக் கேட்டியே. எங்களுக்கேன் வீண் சோலிய… பெடியளக் கண்டால் கதைபேச்சு வைக்காமல் போயிட்டா சரி 

ஊர் பெரியவர் ஒருவர் சொல்லிக் கொண்டு வந்தார். 

‘பாவம் எண்டு நாங்கள் நினைச்சு பெடியளுக்கு உதவினாலும் அவங்கள் மணந்து பிடிச்சிடுவான்கள்… பிறகு ஆர் தப்பிறது.? 

பழைய நினைப்பிளந்தவளுக்கு பின்கதவு மெதுவாகத் தட்டப்படும் சத்தம் கேட்டது. 

திடுக்கிட்டு காதுகளைக் கூர்மைப் படுத்தினாள். 

‘அம்மா..’ 

மீண்டும் காதுகளைக் கூர்மைப் படுத்தினாள். 

‘அம்…மா..’ 

பின்கதவடியில்தான் குரல் கேட்டது. மெதுவாகக் கண் களை முழித்துப் பார்த்தாள். 

சுவர் முனைக்குள் அரிக்கன் லாம்பு மினுங்கிக் கொண்டிருந்தது. 

‘அம்.மா.. ‘

கைகளை ஊன்றி எழுந்து பின்பக்கம் போனாள். 

‘ஆரது?.’ 

‘கதவை ஒருக்கால் திறவுங்கோ. சொல்லுறம்…’ 

மனதுக்குள் அச்ச உணர்வு சுரந்தது. கை கால்களில் மெதுவாக நடுக்கம் பரவ ஆரம்பித்தது. 

வெளியே நின்றவர்கள் புரிந்து கொண்டார்கள் போலும். 

‘பயப்பிடாதைங்கோ அம்மா… கதவைத் திறவுங்கோ உங்கட பிள்ளையள்தான் வந்திருக்கிறம்… ‘

நெஞ்சுக்குள் குளிர் பரவ மெல்ல கதவை நீக்கினாள். 

‘ஆர் – மயூரனே…’ 

“இல்லையம்மா… நாங்கள் செட்டியும் குமணனும்…’

‘என்ன தம்பியவை?’

‘குமணனுக்கு சரியான காய்ச்சல்… பனடோலும் குடிக்கிற தண்ணியும் தாருங்கோ’ 

இருளில் தட்டுத் தடவி உள்ளேபோய் பனடோலும் தண்ணியும் எடுத்துவந்தாள். 

மடக் மடக்கென்று செம்புத் தண்ணி முழுவதையும் ஒருவனே குடித்து முடித்தான். 

‘நாங்கள் நிண்ட இடம் காலமை துவக்கம் றவுண்டப் ஒருமாதிரிச் சுழிச்சுப்போட்டு வந்திட்டம்…’ 

‘என்னம்மா பயமாக் கிடக்கே….. ஒருமாதிரியாய் பேசாம நிக்கிறியள்…’ 

‘ச்சா….’ என்றாள். ஆனால் உள்மனம் லேசாக நடுங்கியது. பிள்ளைகளைத் திரும்பிப் பார்த்தாள். இருவரும் ஆழ்ந்த நித்திரையில் கிடந்தார்கள். 

அந்த அதிகாரியின் அகோரத் தோற்றம் ஒருமுறை நெஞ்சில் வந்து நிழலாடியது. 

‘காலமை துவக்கம் ஒண்டும் சாப்பிடவுமில்லையம்மா…. ‘ நெஞ்சின் ஆழத்தில் எதுவோ குத்தியது போன்ற வலியை அவள் உணர்ந்தாள். 

‘உள்ளுக்கு வாங்கோ… புட்டு இருக்கு… சாப்பிடலாம்…’ கதவை அகலத் திறந்தாள். 

குளிர்ந்த காற்று சில்லென்று அவள் முகத்தில் தொற்றியது. 

அந்த இருவரும் உள்ளே வந்தார்கள். 

இருளில் துரிமதமாக அவளது கைகள் இயங்கின. 

எதிரியின் கட்டுப்பாட்டிலிருக்கும் பெண் என்பதைவிட தான் ஒரு அன்பான… உணர்வுமிக்க தாய் என்கின்ற பெருமிதத்தை அவன் முகம் பிரதிபலிப்பது போலிருந்தது.

– 12.08.1998, களத்தில் செய்தி தாள் (167).

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *