தாயுமானவன்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 4,131 
 

சிவனே என் சிவனே!!!

அன்று காலை முதலே, பர்வதம் மிகவும் பரபரத்துக்கொண்டு, கோவிலுக்கு கொண்டு போக வேண்டிய சாமான்களெல்லாம் சரியா இருக்கா என்று பார்த்துப்பார்த்து எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள். சிவராமன், பர்வதம் சொன்னபடி எல்லா சாமானும் கடைக்குப் போய் தானே வாங்கி வந்தார்.

பர்வதம், குழந்தைகள் இருக்கும்போது, இதெல்லாம் சுலபமா நடந்த்துடீ. இப்போ நாம செய்ய வேண்டியிருக்கும்போது, இயலாமையா இருக்கு. நீ கொஞ்சம் குறைச்சுக்ககூடாதா? வயசானது அந்த சிவனுக்குத் தெரியாதாடீ? என்று தன் இயலாமையை இறக்கி வெச்சார்.

காலையிலேயே எல்லாம் ரெடி பண்ணிட்டு, ட்ரைவர் வந்து, காரையும் எடுத்துட்டு ரெண்டு பேரும் ஒரு லிஸ்ட் போட்டு சிவன் கோவில் ஒவ்வொண்ணா பார்த்துட்டு வரணும்னு திட்டம்.

பர்வத்த்தின் மூத்தமகள் சரண்யா ஆஸ்ட்ரேலியாவில் இருக்கிறாள். அவளுக்கு இப்போது ப்ரசவ நேரம். நிறைய தடைகள் இருக்கறதால் பர்வதம் அவளுக்கு உதவிக்கு போக முடியவில்லை. மனம் முழுதும் ஆசை, ஆனா இப்போ போக முடியாத சூழ்னிலையா போச்சு.

இங்க பாருங்க, எத்தன தடவ பார்த்திருக்கோம்னு இந்த கோவில மட்டும் கேக்காதீங்க. எனக்கு போயே ஆகணும். சொல்லிட்டேன். பர்வதம் கொஞ்சம் ஆக்ரோஷமாக சிவராமனிடம் வாதம். அவருக்கு பார்க்காத கோவில் பார்க்கணும். அவளுக்கு வேறு திட்டம் எப்போதும். ட்ரைவர், நான் சொல்ற கோவிலுக்கு போங்க நீங்க என்று அவனுக்கு வேறு ஒரு அதட்டு.

சன்னிதி இன்னும் திறக்கவில்லை. அவளுக்கு அவரைப்பார்ப்பது இப்போது அத்யாவஸ்யமானது. அவள் மனம் ரொம்பவே சங்கடமாக இருந்தது. என்னென்னவோ எண்ணங்கள். தன் பயத்தைப் போக்கிக்கொள்ள சிவராமன் என்னும் அப்பிராணியிடம் தடாலடி தான்.

ஏங்க கொஞ்சம் அசதியா இருக்கே! என்று சரண்யா கார்த்திக்கிடம் சொல்ல வந்தாள். அவனுக்கு ஆஃபீஸிலிருந்து கால். இரும்மா என்று சைகை காட்டி விட்டு, காலை எடுத்து, லேப்டாப்பை நோக்கி ஓடினான். வர அரை மணி நேரம் ஆனது. அவள் அப்படியே சோபாவில் அயர்ந்து சோர்ந்து தூங்கிட்டா.

என்ன சரண்யா ஆச்சு, என்று உலுக்க, லேசா கண் விழித்து, கொஞ்சம் தண்ணீ குடுங்க. ஆஸ்பிடல் போகலாம்னு தோணுதுங்க. ரொம்ப அனீஸியா இருக்கே என்றாள்.

தண்ணி குடுத்து, காரில், ஆர்கனைசரில் அவள் எடுத்து வைத்திருந்த அத்தனையும் தூக்கி காரில் போட்டுக்கோண்டு, அவளையும் கைத்தாங்கலாக காருக்கு அழைத்து வந்து, அதில் ஏற்றி, கொஞ்சம் தளர்வா தெரிந்தா, அவள் முகத்தைக் கொஞ்சம் ஆதூரமாகத் தடவிவிட்டு, பயப்படாதே, சீக்ரம் போயிடலாம் என்று சொல்லி, வீட்டைப்பூட்டிவிட்டு, வண்டியை எடுத்தான்.

அவன் வீடு இருக்கும் இடத்திலிருந்து ஆஸ்பத்திரிக்கு கொஞ்சம் தூரம் தான். நேரம் வேறு முன்னிரவு. அப்போது கொஞ்சம் வானமும் சத்தம் போட்டுக்கொண்டிருந்தது. மழை வருமென்று ஒன்றும் வானிலை அறிக்கை சொல்லவில்லை. ஆனால் எல்லமே அந்த சமயம் பயமாகத்தானே இருக்கும்?

புள்ளையாரப்பா, நல்ல படியா இவளக்கொண்டு சேர்க்கணுமே என்று பதட்ட்த்துடன் காரை ஓட்டிக்கொண்டு போனான். வழியில் ஒரு சின்ன காடு வேறு தாண்ட வேண்டும். மற்ற எத்தனையோ சமயங்களில் அவர்கள் இருவரும் இந்த பகுதியைத் தாண்டும்போது, வண்டினமுரலும் சோலை என்றெல்லாம் பாடிக்களித்து வந்த இடம் தான். இருட்டும், சரண்யாவின் முனகலும் இந்த பயணத்தில் ரசிக்க ஏதுமிலாதது போல் போக வைத்தது.

சொல்லுங்க அத்த, இல்ல அத்த, ஆஸ்பிடல்ல போயிட்டு இருக்கோம்.. கொஞ்சம் தைரியம் வந்த்து பர்வதம் குரல் கேட்டு. கிளம்பும் போது செய்தி அனுப்பிவிட்டான் அந்த அவசரத்திலும். பர்வதம், தம்பி, பயப்படாதீங்க. நான் ஸ்வாமி சன்னிதி ல தான் இருக்கேன். இன்னும் திறக்கல. திறந்ததும் சாமி கும்புட்டுடுவேன். நீங்களும் அதுக்குள்ள போயிடுவீங்க. தைரியமா இருங்க என்று அவனிடம் ஸ்பீக்கரில் சொல்லிக்கொண்டிருந்தாள் பர்வதம். பேச்சு முடிந்தது.

இருட்டில் சரியாகத் தெரியவில்லை, கொஞ்சம் வேகம் குறைத்தான். ரெண்டு கண்கள் மட்டும் பளிச்சென்று தெரிந்த்து, கொஞ்சம் நீல கலர், ஒரு கோணத்தில் பச்சை நிறக்கண்கள். நெருங்கும் போது, வயிற்றில் புளி கரைத்தது. அவள் நல்ல தூக்கத்தில் இருந்தாள். இவன் பயம் தெரியக்கூடாது என்று மூச்சு கூட மெதுவாக விட்டான். பெரிய நல்ல வளர்ந்த சிங்கம் ஒன்று ரோட்டின் நடுவில். காரையே முறைத்துப் பார்த்துக்கொண்டு நின்றிருந்த்து.

வியர்த்துக்கொட்டி, ப்ரேக்கில் கால் வைத்து அப்படியே நின்றான். உற்றுப்பார்த்த போது ஒரு 10 சிங்கம் அங்கங்கு ஓய்வில் இருந்த்து. காட்டின் ராஜா. அவன் இடம் ஓய்வெடுக்கிறான் என்று மற்ற சமயத்தில் கிண்டல் அடித்து, பார்த்து ரசித்து, முடிந்தால் ஒரு போட்டோ கூட எடுத்து இன்ஸ்டா முதல் அத்தனையிலும் போட்டிருப்பான். இன்று ஒண்ணூம் தோணல பயபீதியில் அப்படியே உறைந்து விட்டான்.. போலீஸ் உதவி எண்ணுக்குப் போட்டான்..

சன்னிதி திறந்த்து. முதலில் அம்பாளைப் பார்த்துடுங்கோ. இந்த குழந்தைகள் எல்லாம் வந்திருக்கான்னு அம்பாள் தான் ஈஸ்வரனுக்கு சொல்வாள். எங்க போனாலும் அம்பாள் தான் முன்ன பாக்கணும் என்று குருக்கள் அவர் வழக்கமாக சொல்வதை சொல்லி தார் போட வந்தவர்களிடம் தாரை வாங்கி சீட்டு கொடுத்து கடமையாற்றிக்கொண்டிருந்தார்.

பர்வதம், ஓடிப்போய் அம்பாள் சன்னிதியில் முன்னாடி நின்று கொண்டாள். கண்ணாடி வேற சரியா தெரியமாட்டேங்கறது. கொஞ்சம் கிட்ட இருக்கேன் என்று சிவராமனிடம் சொல்லிவிட்டு, முன்னேறிப்போய் நின்று கொண்டாள். சன்னிதி திறந்தது. அம்பாளுக்கு அன்று யாரோ உபயம், சிம்ம வாகன கவசம் அலங்காரம். நல்ல கண்குளிர தரிசனம். குங்குமம் வாங்கிட்டு, ஓடினாள் சிவன் சன்னிதிக்கு.

ஃபாரஸ்ட் துறை அப்போது காட்டுத்தீயணைக்கும் ட்யூட்டிக்கு போய் விட்டதால், கொஞ்சம் லேட்டா கார்த்திக்கின் மொத்த பயமும் உச்சத்துக்கு வந்த சமயம், ஒரு வண்டி வந்தது. இன்று இந்த வழித்தடம் வரக்கூடாது என்று உனக்கு தகவல் வரவில்லையா? எல்லோருடைய மொபைலுக்கும் அரசாங்கமே அனுப்பியிருக்கிறதே என்று கேட்டான்.

நான் பாக்கல, என் மனைவி ப்ரசவத்துக்கு கூட்டிட்டு போறேன் என்று காட்டினான். ஓ சரி சரி, என் வண்டி கூடவே வாங்க என்று சொல்ல, ஒருவர் பின் ஒருவராக, லைட்டும் கம்மியாக்கி, ஹார்ன்னும் உபயோகிக்காம வரச்சொல்லி மெதுவாக வண்டியை எடுக்கச் சொன்னான்.

சரண்யா, சட்டென்று விழித்துக் கொள்ள, அவளிடம், தயவு செய்து கண்ணை மூடிட்டிரு நான் சொல்லும் போது திற, மீறி திறந்தா நான் பொல்லாதவனாயிடுவேன் என்று ரொம்ப கோவமாக, கர்ஜித்துவிட்டு, பயத்தைக் காட்டிக்கோள்ளாமல் ஓட்டினான். எவ்ளோ நேரம் என்று அவள் வேறு குழந்தை போல் கேட்டு, இந்த பாரு செம்ம கடுப்புல இருக்கேன், சொல்றத செய்யி என்று ஒரு சத்தம் போட்டான். அவளும் அடங்கி அசந்து திரும்ப தூங்கிப்போனாள்.

ஸ்வாமி தாயுமானவர், எப்பேற்ப்பட்ட சிக்கலான ப்ரசவமானாலும், இவர் வந்து பார்த்து சுகமாக்கிடுவார், நீங்க நல்லா வேண்டிக்கோங்க என்று தீபாராதனை காட்ட, ஈஸ்வரன் திருமேனியிலிருந்து ஒரு சரம் பொத்தென்று விழுந்ததை பர்வதம் பார்த்து ஆனந்தம் ஆனாள்.

ஏங்க ரொம்ப வலி தாங்க முடியலங்க என்று அவள் முனக, என்ன செய்வதென்று தெரியாமல், முன்னால் போன வண்டிக்கு சிக்னல் குடுத்தான். அவர்கள் இரண்டு பேர் வந்து, என்ன? என்றார்கள். அவர்கள் வண்டி கொஞ்சம் பெரியது. உன் வண்டியை இங்கேயே விட்டுவிட்டு எங்கள் வண்டியில் ஏறிக்கொள். இன்னும் ஒரு அரை கிலோ மீட்டருக்கு விலங்குகள் இல்லை. சட்டென்று ஏறி விடுவாயா? என்றான். ஏதோ ஒரு தைரியத்தில் அவனும் ஏறி, அவளையும் ஏற்றினான். சட்டென்று அம்மா என்று அப்படியே படுத்தாள்………. வந்தவர்களில் ஒருவன் அவளுக்கு உதவிகள் செய்து, குழந்தையை எடுத்து தந்தான். கார்த்திக்குக்கு ஒன்றும் புரியவில்லை. எங்கு எப்போது எப்படி பிறக்க வேண்டும் என்று யார் நிர்ணயிக்கிறார்கள்?….

தம்பீ, என்ன போனே எடுக்கல? ஆஸ்பத்திரி போயிட்டீங்களா? என்ன புள்ள?…. கதையெல்லாம் சொல்லி, இன்னும் காட்டுக்குள்லேந்து போயிட்டு இருக்கோம் அத்த, பையன் என்று சொல்லி முடித்தான் கார்த்திக். “தாயுமானவன்”னு வைங்க தம்பி பேரு அதான் என்று பர்வதம் கண்ணீர் மல்க.

Print Friendly, PDF & Email

1 thought on “தாயுமானவன்

  1. சிவ சிவ. எவ்வளவு அருமையான கதை! மெய்சிலிர்க்க வைக்கிறது. எத்தனையோ பேருக்கு இதுபோன்ற தெய்வீக அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. தென்னாடுடைய சிவனே போற்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *