தாத்தாவின் நினைவாக

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 24, 2012
பார்வையிட்டோர்: 10,654 
 

முப்பதாயிரம் டாலர்கள் ! ஏறக்குறையை பன்னிரெண்டரை லட்சம் ரூபாய் !

செக்கை வாங்கும்போதே எனக்குக் கை நடுக்கியது. ஆனந்தப் பரவசத்தில் உடம்பு ஒரு நிமிஷம் உலுக்கிப் போய்விட்டது.

“உன் உழைப்புக்குக் கிடைத்த பரிசு ! பாராட்டுக்கள் !” என்று அழகான அமெரிக்க ஆங்கிலத்தில் கல்லுhரி முதல்வர் ஜpம் என் முதுகில் தட்டிப் பாராட்டினார்.

என் உழைப்புக்குக் கிடைத்த பரிசு என்பதைவிட என் தாத்தாவின் உண்மைக்கும்இ நேர்மைக்கும் கிடைத்த பரிசு என்பதில் நெஞ்சு நெகிழ்ந்தது.

நான் படிக்கும் லூஸியானா யூனிவர்சிடியில் உலகின் நாடுகளில் சுதந்திரப் போராட்டத்திற்கு உழைத்த தியாகிகள் பற்றிய கட்டுரைப் போட்டி நடந்தது..

நான் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்ற என் தாத்தா சின்னசாமியைப் பற்றி எழுதிவிட்டேன்.

சின்னசாமி தீவிரமான சுதந்திரப் போராட்ட வீரர். சலுகைகளை மறுத்து ஒதுக்கிவிட்ட நேர்மையான மனிதர். அதனாலேயே வீட்டில் அம்மாவிடம் பிழைக்கத் தெரியாத மனிதர் என்ற பட்டம் வாங்கிக் கொண்டவர்.

தியாகம் பண்ண வேண்டியதுதான

அதுக்காக எந்தச் சலுகையும் வேண்டாம்,

பென்ஷனும் வேண்டாம்னு உங்க தாத்தா பிடிவாதமா இருக்காரு.. . அம்மா முணுமுணுப்பாள்.

“அம்மா ! தாத்தாவினால் நமக்கு எவ்வளவு பெருமை தெரியுமா ? பள்ளிக்கூடத்தில் நான் சின்னசாமியின் பேரன் ” என்றால் மதிப்பாய்ப் பார்க்கிறார்கள்.

“ஆமாண்டா சந்துரு.. .. மதிப்பும் மரியாதையும் சோறு போட்டுடுமா? மனுஷன் ஒரு பைசா சேர்த்து வைக்கலை.. . ”

“நல்ல பெயர் சேர்த்து வச்சிருக்கார் தாத்தா ! அது போதும்மா. ”

“போறும்டா. நீதான் உன் தாத்தாவை மெச்சிக்கணும். மாரடைப்பில் போன வருஷம் உங்கப்பா வேற போயிட்டார். குடும்பம் சோத்துக்கே லாட்டரி அடிக்குது. யாரையாவது பிடிச்சி, ஏதாவது செய்து, நாலுகாசு மருமகளுக்குத் தரலாம்னு கிடையாது. சதா தக்ளி நூத்துட்டு, கதர்சட்டை போட்டுட்டு வந்தே- மாதரம்னு வாய்நிறைய முழங்கிக்கிட்டு இருக்காரு. ”

“தாத்தாவின் பெருமையை நாடே புகழுது, நீயோ அவரைக் கரிச்சிக் கொட்டறே ! அம்மா ! ஒரு நாள் நான் என் தாத்தாவின் பெயரை உலகமறிய வைக்கத்தான் போறேன் !”

சிறுவனாக இருக்கும்போது சபதம் செய்ததை இன்று நிறைவேற்றி விட்டேன்.

இன்று தாத்தாவிற்குத் தொண்ணூறு வயது. மேற்படிப்புப் படிக்க அமெரிக்கா புறப்பட்ட என்னை வாய்நிறைய ஆசி கூறி அனுப்பி வைத்தார். அவரைப் பற்றி எழுதி நான் பரிசு வாங்கியதை அவருக்கே சமர்ப்பணம் செய்ய மனம் விழைந்தது. கல்லூரியிலும் தாத்தாவின் போட்டோ மற்றும் அரை மணிக்கு அவரைப் பற்றிய வீடியோ படம் எடுத்து வரும்படி கேட்டுக் கொள்ளவும் இந்தியா புறப்பட்டுவிட்டேன்.

“சந்துருவா ?” வாசல் திண்ணையிலேயே தக்ளி நூற்றுக் கொண்டிருந்த தாத்தா என்னை வரவேற்றார். விவரம் கூறி அவர் காலில் விழுந்ததும், அமெரிக்கா காரனுக்கு ரொம்பப் பெரிய மனசு ! என்ற மகிழ்ந்து பாராட்டினார்.

“தாத்தா ! நீங்க காந்திஜpயுடன் உப்புசத்தியாகிரகத்தில் கலந்து கொண்ட க்ரூப் போட்டோ, அவருடன் பிரார்த்தனைக் கூடத்தில் இருந்த போட்டோ, கடைசியாய் ஜெயிலில் தாடியுடன் இருக்கும் போட்டோ எல்லாத்தியும் கொடுங்க. கல்லூரி புஸ்தகத்தில் போடணும். ”

“எதற்குச் சந்துரு அதெல்லாம் ? நான் ரொம்ப சாதாரண சேவை செய்த ஒரு அல்ப ஆத்மா. என்னைக் கொண்டு உச்சியில் வைக்காதே. ”

“அதெல்லாம் இல்லை. அப்புறம் தாத்தா, தயாராய் இருங்க. ஒரு வீடியோகிராபரைக் கூட்டிட்டு வரேன். உங்களைப் பத்தி சின்ன டாகுமெண்டரி படம் எடுக்கணும். ”

“சந்துரு. இந்தக் கிழவனை நீ ரொம்பவும் உயர்த்தி வைக்கிறாய் !”

பெருமையும், நெகிழ்வுமாய் தாத்தா உள் அறைக்குச் சென்று தனது பழைய உடைமைகளைத் தேடினார். கை ராட்டைகள் ஃப்ரேம் போட்ட புகைப்படங்கள், கதர்க்குல்லாய்கள், டைரிகள், வல்லபாய் படேலிலிருந்து ஜவஹர் வரை தொடர்பு வைத்துக் கொண்ட கடிதங்கள் என்று அறை ஒரமாய் அவர் பெஞ்சு மீது வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் அங்கு இல்லாதது கண்டு திடுக்கிட்டார்.

“நீலா ! ” மருமகளை அழைத்தார்

“என்னவாம் சொல்லித் தொலைங்க ?” கரண்டியுடன் வந்து அதட்டினாள் அம்மா. இன்னும் அவளிடம் நான் முப்பதாயிரம் டாலர்களைப் பற்றி மூச்சு விடவில்லை.

தாத்தா கேட்டார். “நீலா ! இந்த பெஞ்சு மேலே இருந்த என் பொருள்கள் எங்கேம்மா ?”

அம்மா முகத்தைச் சுளித்து விட்டு, “ஆமாம். பெரிய பொக்கிஷம்தான் போங்க. நான் எல்லாத்தியும் தூக்கிக் குப்பையில் கடாசி ஒரு வார மாச்சி”. என்று கூறி உள்ளே போனாள்.

தாத்தா என்னைப் பரிதாபமாய்ப் பார்த்தார். நான் அம்மாவை கோபிக்க வாய் திறக்க பார்வையிலேயே என்னை அடக்கி விட்டார்.

“தாத்தா பொறுத்தது போதும். இன்னும் ஒரே வருஷம். படிப்பு முடிஞ்சதும் நான் உங்களை அமெரிக்கா அழைச்சிட்டுப் போய்த் தங்கமா பார்த்துக்கறேன். இந்த அம்மா ஒரு ராட்சஸி. ”

“சந்துரு அறிவு இருக்கும் இடத்தில் ஆத்திரம் கூடாது குழந்தை. தாயைக் குறை சொல்லக்சுடாது என் செல்வமே !”

“சரி தாத்தா. நான் போய் வீடியோகிராபரைக் கூட்டிட்டு வரேன். கதர்ச்சட்டை குல்லாய் போட்டுட்டு ரெடியா இருங்க. ”

“சரி சந்துரு ”

அடுத்த அரை மணியில் வீடியோ காமிரா சகிதம் வந்த விட்டல் என்பவருடன் வீட்டிற்குள் நுழைந்தேன்.

தாத்தா சொன்னபடி கதர்ச் சட்டை, குல்லாய் அணிந்து மரநாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தார். கையில் எப்போதும் அவர் விரும்பிப் படிக்கும் சத்திய சோதனை புத்தகம்.

“விட்டல் ! தாத்தாவை நாற்காலி போஸில் சிறிது நேரம் எடுத்துவிட்டு பிறகு அவர் பேசுவதையும் தக்ளி நூற்பதையும் எடுக்கலாம் ” என்றேன்.

“என்னடா கூத்து, எதற்கடா இந்தக் கிழத்துக்காக வீண் செலவு செய்கிறாய்?” அம்மா உள்ளிருந்தே எரிந்து விழுந்தாள்

ஐந்து நிமிடம் விட்டலின் வீடியோ காமிரா தாத்தாவை ஒரே இடத்தில் ஃபோகஸ் செய்தது.

“ஓக்கே தாத்தா. இனி நீங்க எழுந்து மெல்ல நடந்து காட்டலாம் ” என்றேன்.

தாத்தா நாற்காலியை விட்டு எழுந்திருக்கவில்லை.

“தாத்தா உங்களைத்தான்… ”

“தாத்தா பேசவில்லை. ”

“தா..த்..தா?”

திடுக்கிட்டு அவரை நெருங்கினேன். கரங்களைத் தொட்டேன். சத்திய சோதனை கீழே விழுந்தது. நிமிர்ந்து பார்த்தபோது தாத்தாவின் தலையும் வலப்புறமாய்ச் சாய்ந்து கொண்டே.. .

“தாத்தா ஆ ..ஆ..ஆ.. ”

வீறிட்டேன். புரண்டு அழுதேன்.

ஆயிற்று. தாத்தாவின் இறுதிக் காரியங்களை முடித்து இன்று அமெரிக்கா புறப்படுகிறேன்.

சட்டைப் பைக்குள்ளிருந்த முப்பதாயிரம் டாலர் செக் பற்றிய விவரம் சென்னைப் பத்திரிகையாளர்களுக்குத் தெரிந்து நேரில் வந்த என்னை பேட்டியெடுத்துவிட்டனர்.

“என்னடா ? அம்மா நம்ப முடியாமல் கேட்டாள். ஆமாம். அது என் பணமில்லை.. தாத்தா பணம்.. தாத்தா மாதிரி நாட்டுக்கு உழைத்துக் கடைசி காலத்தில் உன் மாதிரி மருமகள்களிடம் தவிக்கும் தியாகிகள் குடும்பத்துக்கு இந்தப் பணத்தைப் பிரித்துத் தரப் போவதாய் முடிவு செய்து விட்டேன். ”

“டே.. டேய் சந்துரு ? அம்மா அலறினாள். ”

நான் தாத்தாவின் “ஞாபகமாய் ஒரே ஒரு கதர்க் குல்லாயை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியேறினேன்.

– ஆகஸ்ட் 03, 2006

Print Friendly, PDF & Email

1 thought on “தாத்தாவின் நினைவாக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *