தாதாக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 6,724 
 

கோபாலன் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் நினைத்ததற்கு நேர்மாறாக நடந்தது. தன்னைக் கண்டு, தன் வரவைக்கண்டு அச்சப்படும் வேதவல்லி, இன்று இத்தனை சாமர்த்தியமாய் காரியம் நிறைவேற்றி விட்டாளே என்று நினைத்தபோது அவன் கோபம் இரு மடங்காய் பெருகியது.

கோபாலன் ஒரு ஐடி இஞ்சினியர். தனக்கு என்ன நேருமோ, தன்னைப் போலீஸார் கைது செய்வார்களோ, யாரைப் பிடித்து எப்படி இந்தப் பிரச்னையில் இருந்து வெளியே வருவது என்று யோசனையாய் எஸ்ஐக்கு எதிர்புறம் போடப்பட்டிருந்த நீள பெஞ்சில் உட்கார்ந்து லாக்-அப் ரூமைப் பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளே ஒருத்தன் வெறும் அரையாடை அணிந்து வெற்று உடம்பாய் சோகையாய் பரட்டைத்தலையுடன் ஒடுங்கி உட்கார்ந்திருந்தான்.

“இன்ஸ்[பெக்டர் வருவார், அவர் வந்தப்புறம் மீதி விஷயத்தைப் பேசிக்கலாம். அப்படி உக்காருங்க சார்…”

ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கோபாலன் பெஞ்சிலிருந்து எழுந்து நின்றான். வாசலில் எட்டிப் பார்த்தான். உயரமாய் யாரேனும் உள்ளே நுழைந்தால், அது இன்ஸ்பெக்டராக இருக்குமோ என்ற பயமும் ஆவலுமாய் பார்த்தான்.

“ஒரு போன் பணிக்கலாமா ஸார்?” என்று கோபாலன் மீண்டும் எஸ்ஐயிடம் கேட்க, “இன்னும் கொஞ்ச நேரத்ல இன்ஸ்பெக்டர் வந்தவுடன் செய்யலாம்” என்று எஸ்ஐ பொறுமையிழந்து பதில் சொன்னார். இன்ஸ்பெக்டர் வந்தாலன்றி தன்னால் எதுவும் செய்யமுடியாது என்ற நிலையில், அமைதியாய் காத்திருப்பது என்ற முடிவுக்கு கோபாலன் வந்தான்.

அவன் மனைவி வேதவல்லி ஸ்டேஷனுக்கு வெளியில் இரண்டு மூன்று பேருடன் காத்திருந்தாள். கோபாலன் ஸ்டேஷன் பெஞ்சிலும், அவன் மனைவி வேதவல்லி தனக்கு வேண்டியவர்கள் சகிதமாய் வெளியிலும் இன்ஸ்பெக்டருக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

“எந்தப் பிரச்னையாய் இருந்தாலும் நீ அதை உன் வீட்டோட வச்சுக்க. இந்த மாதிரியெல்லாம் இந்த வீட்ல நடந்தா அவருக்குச் சுத்தமா பிடிக்காது. நாங்க யாராவது குரலை உயர்த்திப் பேசினாலே அவரு கோவப்படுவாரு. எனக்கு ஒண்ணும் இல்லை துலுக்காணம்… நீ வேற வீடு பாத்துக்க. இதோட இது நாலாவது தடவை. உன் சோம்பேறித்தனம்னு என்னை அவரு திட்டறாரு. கஷ்டமோ நஷ்டமோ இனி நானே செஞ்சுக்கிறேன்.” மாதத்தின் இருபதாம் நாளன்று கணக்குப் பார்த்து, துலுக்காணம் வாங்கியிருந்த ரேஷன் அட்வான்ஸ் ஐம்பது ரூபாய் பிடித்துக்கொள்ளப்பட்டு வேலையில் இருந்து நிறுத்தப்பட்டாள்.

“உன் ஒத்த வீடு இல்லீன்னா என்ன? சொல்லிக்கினே இருக்கேன். ரொம்பத்தான் சிலுத்துக்கிறியே! நாளு கெயமைன்னா எனக்கு ‘எஷ்டா’ குட்து கூப்டாமலா போவப்போறே? வேலைல எதுனா குறை இருந்தா சொல்லு. அத்த உட்டுட்டு இப்டி திடுதிப்புனு நின்னுக்க சொல்றயே?” என்று கத்திக்கொண்டே புடவையை உதறி செருகிக்கொண்டு வெளியே போனாள் துலுக்காணம்.

துலுக்காணத்தின் துக்கமும், வேதவல்லியின் துக்கமும் ஒரே பிரச்னைதான். துலுக்காணம் படிக்காதவள். வீட்டு வேலை செய்யும் வேலைக்காரி. மாதம் மூன்று வீடுகளில் செய்யும் வேலைக்கு ஐயாயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்தது. அதோடு சேர்த்து காலையிலும் மாலையிலும் பால் எடுக்கும் வேலை பார்த்தாள். கூடமாட வேலைசெய்ய மகள் லட்சுமி வந்துபோனாள். பால்வேலை; வீட்டுவேலை; எக்ஸ்ட்ரா பால் வியாபாரம் என்று மொத்தமாக மாதம் எழாயிரம்வரை சம்பாதித்தாள். வீட்டு வேலை செய்யும் இடத்தில் கொடுக்கும் சாப்பாடு வகைகளில் பொறுக்கி எடுத்து அன்றாடம் சாம்பார், பொரியல் என்று வீட்டுக்கு வரும் கணவன் மச்சக்காளைக்கும் போட்டு விடுவாள். அதுபோக மீதம் இருப்பதை வாயில் அள்ளிப் போட்டுக்கொண்டு வேலைக்கு ஓடுவதற்கே நேரம் சரியாய் இருக்கும். சாம்பாரும், பொரியலும் அமையாது போகும் நாட்களில் அவர்களுக்குள் அடிதடி தகராறு நடக்கும்.

நேரத்துக்கு மச்சக்காளை வீட்டுக்கு வரவில்லை என்று துலுக்காணம் வீட்டு வேலைக்குப் புறப்பட்டால், மச்சக்காளை அவள் வேலைசெய்யும் இடத்துக்கே சரியான குடிபோதையில் வந்து கத்துவான். அவனை அந்த நேரத்துக்கு அவசரமாக அங்கிருந்து அனுப்பிவைக்க ஐம்பது, நூறு என்று கொடுத்து துலுக்காணம் அவனை அப்புறப் படுத்துவாள்.

இப்படிச் சாதாரணமாக தொடங்கிய இந்தப் பழக்கம், நாளடைவில் அவளுடைய கணவன் மச்சக்காளைக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது. பணம் தேவைப்பட்ட போதெல்லாம் அவள் வேலை செய்யும் வீடுகளுக்குத் தேடிப்போய் சத்தம் போட்டான். “என் பெண்டாட்டியை என்னக் கேக்காம எவன்டா வேலைக்கு வச்சிருக்கிறது?” என்று பெரிதாகக் கூப்பாடு போடுவான். சமயத்தில் அங்குள்ள தென்னை மரத்தடியிலோ, கிணற்றடியிலோ உட்கார்ந்துகொண்டு கத்துவான். சகலவிதமான அவப் பெயர்களையும் சொல்லி துலுக்காணத்தை அழைப்பான். அங்கிருத்து நகரமாட்டேன் என்று அழிசாட்டியம் செய்வான்.

பொறுமையிழந்து துலுக்காணம் ஒன்றிரண்டு வார்த்தைகளை வெளியே விட்டு விட்டாலோ, தன்னை அவள் ஏமாற்றி விட்டதாகவும், அலட்சியப்படுத்தி விட்டதாகவும், அவமானப்படுத்தி விட்டதாகவும் குடிபோதையில் அழுது புரளுவான். தான் இரண்டு நாளாக சோறு சாப்பிடாமல் பட்டினி கிடப்பதாகக் கதறுவான்.

பீடியும் சாராய நாற்றமுமாய் தங்கள் வீட்டுத் தென்னை மரத்தடியிலோ; கிணற்றடியிலோ ஒருவன் கத்துவதையும் அழுவதையும் நடுத்தர வர்க்கத்துக் குடும்பங்கள் சகித்துக்கொள்ளது என்பதே நடைமுறை. அதனால் துலுக்காணம் பல இடங்களில் வேலையைவிட்டு நிறுத்தப்பட்டாள். படிப்பறிவில்லாத மச்சக்காளை, துலுக்காணத்தை மிரட்டிப் பணம் பறித்துக் குடித்ததிற்கும், வாய்க்கு ருசியாய் சோறு வேண்டும் என்று சண்டை போட்டு அழுததற்கும், வேலைசெய்யும் இடங்களில் தன் மனைவியை சிறுமைப் படுத்தியதற்கும், படித்த கோபாலனின் நடத்தைக்கும் அத்தனை பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

கோபாலன் தென்னை மரத்தடியிலோ, கிணற்றடியிலோ உட்கார்ந்து சண்டையிடவில்லை; மாறாக, வேதவல்லியை அவள் வீட்டு வாசலிலேயே மடக்கினான். வேதவல்லியும், கோபாலனும் வேலை நிமித்தம் வேறு ஊர்களில் இருந்தாலும், இதோ என்று கிளம்பினால் சென்னை வந்து சேருவது கோபாலனுக்கு மிகச் சுலபமாக இருந்தது. வேதவல்லி அவள் அலுவலக குவார்ட்டர்ஸில் தங்கி இருந்ததால், அவளை மடக்குவது அவனுக்கு மிக எளிதாய்ப் போனது. பல சீனியர் ஆபீசர்ஸ் குடியிருக்கக்கூடிய அந்தக் குவார்ட்டர்ஸில் சைண்டிஸ்ட் ‘ஏ’ கிரேடாக இருந்த வேதவல்லி, கோபாலனின் மிரட்டல்களுக்கு கட்டாயம் மண்டியிட வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது.

கோபாலன், அவளின் ஒட்டப்பட்ட சம்பளக் கவரைப் பெற்றுக்கொள்ளவும், போனஸ் வாங்கிக்கொள்ளவும்; அந்தப் பணத்தில் தன் பெயரில் வீட்டு மனை வாங்கிக்கொள்ளவும்; தன் செளகரியத்திற்காக டிவி, ப்ரிட்ஜ் என்று அவன் வேலை செய்த ஊரில் வாங்கிப் போடவும், ஸ்காட்ச் விஸ்கி அடிப்பதற்கும் வேதவல்லியைப் பிழிந்து எடுத்தான்.

வேதவல்லி மறந்தும் அவனிடம், “உங்கள் சம்பளத்தை என்ன செய்தீர்கள்?” என்று கேட்கமாட்டாள். ஆனால் அன்று குவார்ட்டர்ஸ் வாசலில் வந்து மறித்து நின்றுகொண்டு, “பி.எப்.லோன் போட்டு உடனே ஐம்பதாயிரம் எடுத்துக்கொடு என்று கோபாலன் கேட்க, முதல் முறையாய் “உங்க சம்பளம் என்ன ஆச்சு? இப்ப என்னால முடியாது…” என்று வேதவல்லி மறுத்தாள். ஆனால் அது ஏற்படுத்திய விளைவை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

கோபாலன் மிக மோசமாய் கத்தினான். அவளையும், அலுவலக சக ஊழியர்களையும் ஏகவசனத்தில் தரக்குறைவாய் ஏசினான். குறிப்பிட்ட ஒருத்தன் பெயர் சொல்லி, “அவன் கேட்டால் கொடுப்பாயா?” என்று பால்கனியில் நின்றுகொண்டு கத்தினான். அதுவரை வெற்றிகரமாய் தான் காப்பாற்றிய கோபாலனின் குணக் கேடுகளை, அன்று அவனே போட்டு உடைத்துவிட, வேதவல்லிக்கு அவமானமும், துக்கமும் பீறிட்டது.

“உங்க சம்பளத்தை என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டதற்காக, வேதவல்லி என்ற ஒரு ‘ஏ’ கிரேட் சைண்டிஸ்ட் கன்னத்தில் அறையப்பட்டாள். “நீ வேலைக்குப் போனா, நான் வாயைப் பொத்திக்கிட்டு சும்மா இருப்பேன்னு நெனச்சியா?” என்று எச்சரிக்கப்பட்டாள்.

கெளரவமான ஒரு குடியிருப்பில் ஒருவன் தன் மனைவியுடன் சண்டைபோட்டு கன்னத்தில் ஓங்கி அறைந்ததைப் பார்த்து, அங்கிருந்த சக ஊழியர் போலீஸில் புகார் கொடுக்க, கோபாலன் இன்ஸ்பெக்டரின் வருகைக்காக இப்போது போலீஸ் ஸ்டேஷனில் காத்துக்கிடக்க நேர்ந்துவிட்டது.

மச்சக்காளை – கோபாலன் இருவருக்கும் உள்ள வேற்றுமை அவர்களின் கல்வித் தகுதி மற்றும் பின்னணி. மச்சக்காளை சாராயம் குடித்தான். கோபாலன் பீரும், விஸ்கியும் குடித்தான். மச்சக்காளை சோறும் பதார்த்தமும் சரியில்லை என்று சண்டைபோட்டான்; கோபாலன் வாழ்க்கையும் வசதியும் போதவில்லை என்று தகராறு செய்தான். கிணற்றடியில் படுத்துப் புரண்டால் மனைவிக்கு வேலை போகும், அவள் திமிர் அடங்கும் என்று மச்சக்காளை நினைத்தான்; குவார்ட்டர்ஸில் புகுந்து அடித்தால், சக ஆண் ஊழியருடன் இணைத்துப் பேசினால் அவமானம் கருதி மனைவி தனக்கு அடங்கிபோவாள் என்று கோபாலன் கணக்குப் போட்டான்.

ஆனால் மச்சக்காளை, கோபாலன் இருவருக்குமே பெண்டாட்டியின் சம்பாத்தியம் தேவைப்பட்டது. அதில் கிடைக்கும் செளகரியமும், சுகமும் தேவைப்பட்டது. அதுவும் புருஷன் என்ற பந்தாவோடும் அதிகாரத்தோடும், கெத்தோடும், அலட்டலோடும் தேவைப்பட்டது.

இவருடைய மனதிலும் ‘என்னை எவண்டா கேட்கமுடியும்? என் பெண்டாட்டியை அடிப்பேன் உதைப்பேன் என்ன வேணும்னாலும் செய்வேன்’ என்ற கீழ்மை, வக்கிரம், கொச்சையான எண்ணம், பரிணாம வளர்ச்சியற்ற மிருகப்போக்கு மட்டுமே தங்கியிருந்தது. பெண்டாட்டி என்பவள் தனக்கு அடங்கித்தான் போக வேண்டும் என்கிற ஆண் அகம்பாவம் கொடிகட்டிப் பறந்தது.

இதை இத்தோடு விட்டுவிடலாம் என்று வேதவல்லி நினைக்கலாம். போலீஸ் கேஸ், கம்ப்ளெயின்ட் என எதுக்கு என்று யோசிக்கலாம். ஆனால் அது கோபாலனை மட்டும் பலப் படுத்தாது. அவனைப்போல இன்னும் பலபேர் குடும்பத்திற்குள் ‘தாதா’க்கள் ஆவதற்கு அடித்தளமாய் அமையும். குடியிருப்பில் புகுந்து சர்வ சாதாரணமாய் மனைவியை அடித்துப் போடும் கோபாலனுக்கு, குறைந்த பட்சம் ஒருவாரம் ஜெயில் வாசம் நல்ல படிப்பினையாய் இருக்கும். இந்த முடிவை வேதவல்லி உறுதியாய் எடுப்பதே அவளுக்கும் சமுதாயத்திற்கும் நல்லது.

நமக்கு இடையேயும் வேதவல்லி இருக்கிறாள். கோபாலனும் இருக்கிறான். அந்த வேதவல்லிகளுக்கு நாம் உதவிட வேண்டாமா? சரீர உழைப்பில் வாழ்க்கைப் போராட்டம் செய்யும் துலுக்காணத்தை வரவேற்று பக்கபலமாய் நாம் இருக்க வேண்டாமா? துலுக்காணத்தின் சம்பளக் கணக்கைத் தீர்ப்பது சர்வ சாதாரணம். ஆனால் குடும்பத் தலைவர்களே, தலைவிகளே! அந்தக் கணக்குத் தீர்த்தலோடு நம் பிரச்னை முடிந்து விடுகிறதா?

பண்பே இல்லாமல் நம்மிடையே இன்றும் உலவிக் கொண்டிருக்கும் இம்மாதிரி தாதாக்களை என்ன செய்யப் போகிறோம்?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *