தவுட்டுக் குருவி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 17,807 
 
 

“அம்மா, அம்மா இங்க ஓடியாயேன், இந்தக் குருவியோட கூட்டுல, இப்ப வேற ஒரு பெரிய குருவி வந்து உக்காந்துருக்கும்மா. சீக்கிரமா வந்து பாரேன்” என் மகள் காளீஸ்வரி என்னை அவசரமாக அழைத்தாள்.

“அதெப்படிடி தேன்சிட்டு கட்டுன கூட்டுல போயி இன்னொரு குருவி உக்காரும்? அந்தக் கெளைல உக்காந்துருக்கும். பெறகு போயிரும்” முருங்கைக்கீரை உருவிக் கொண்டிருந்த நான் சொல்லிவிட்டு தொடர்ந்து கீரை உருவிக்கொண்டிருந்தேன்.

“இல்லம்மா. ஒரு பெரிய குருவி கூட்டுக்குள்ளயே உக்காந்திருக்கும்மா. நீயி வந்து பாரேன். இப்ப இன்னொரு பெரிய குருவியும் வந்து உக்காந்திருக்கும்மா. சீக்கிரம் வாயேன்”. மறுபடியும் கத்தினாள்.

“நீதான் போயி எட்டிப் பார்த்துட்டு வாயேன். கொழந்த கூப்புடுதுல” என் அம்மா பொன்னம்மா சொன்னாள்.

“போம்மா போ. ஒனக்கும் வேலையில்ல, அவளுக்கும் வேலையில்ல. பொழுது போகமுன்ன இந்தக் கீரைய உருவிப் பெரட்டலாம்னு பாக்கேன். அவதான் சின்னப்பிள்ளைன்னா நீயி அவளுக்கு மேல சின்னப்பிள்ளையா இருப்பெ போல. நீதான் போயி பாரேன்”. நான் சொல்லவும் அம்மா எழுந்து வீட்டுக்கு வெளியில் இருந்த செம்பருத்தி மரத்தில் இருந்த கூட்டைப் பார்க்கச் சென்றாள்.

சற்று நேரத்தில் அம்மாவின் குரல்.

“தாயம்மா இந்த கண்றாவிய வந்து பாரேன். ஓம்மகா சொன்னது சரிதான். அந்த ரெண்டு தேன்சிட்டுக்களையும் வெரட்டிட்டு இப்ப யாரு உக்காந்து இருக்கான்னு வந்து பாரு. அடப்படுக்காளி குருவிகா, மனுசனுங்கதான் அக்கிரமம் அநியாயம் பண்றானுங்கனா குருவிகளுமா இப்பிடி”

அம்மா சொன்னதைக் கேட்ட பிறகு எனக்கு உள்ளே உட்கார்ந்திருக்க முடியவில்லை. வேகமாக எழுந்து வெளியே சென்று பார்த்தேன். என்னாலும் நம்ப முடியவில்லை.

“என்னம்மா இது அநியாயமா இருக்கு. ஒருவாரமா என்ன பாடுபட்டு அந்த ரெண்டு தேன்சிட்டுக்களும் இந்தக் கூட்ட கெட்டுச்சுக. கெட்டி முடுச்சு குடியேறப்போகைல இந்த தவுட்டுக்குருவிக வந்து ஆக்கரமிச்சுகிட்டாளுக. மனுசக்கழுதைகதான் மனுசத்தன்ம இல்லாம நடக்கு றாகன்னு பாத்தா இந்தக் குருவிககூட இப்பிடி அடாவடி செய்துகளே”.

ஒருவாரமாக இரண்டு தேன்சிட்டுகள் அந்தக் கூட்டைக் கட்டிக்கொண்டிருந்தன. எங்கிருந்தோ பச்சைப் புல்லை அலகில் கொத்திக்கொண்டு வந்து அதை லாவகமாக வளைத்து வளைத்து அவ்வளவு அருமையாகக் கட்டின. காளீஸ்வரிக்கு அவற்றைக் கவனிப்பதில் மிகவும் ஆனந் தம். அந்தக் குருவிகள் மிகவும் அழகாக இருந்தன. கருப்பு நிறத்தில் சின்னஞ்சிறு உடம்பு. காளீஸ்வரியைப் போல. பளபளக்கும் கருப்புநிறத்தில், மெல்லிய, ஆனால் உறுதியான சிறிது நீண்ட, நுனியில் சற்று வளைந்த அலகு. பூவுக் குள் அலகை நுழைத்து தேன் குடிப்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். நொடிக்குள் ஒரு பூவில் குடித்து விட்டு அடுத்த பூவுக்குப் பறந்து செல்லும். நான்கைந்து பூக்களில் குடித்த பிறகு கிளையில் அலகினை அப்படியும் இப்படியுமாக உரசி சுத்தப்படுத்திக் கொள்ளும். அதைப் பார்க்கும்போது காளீஸ்வரி எப்போதும் சொல்வாள்: “அம்மா, நம்மள்ளாம் சாப்புட்டு வாய் கழுவுற மாதிரி இந்தக் குருவிகூட வாயத் தொடைக்குது பாரேன். அழகா இருக்குதுல்லமா? அதப் புடுச்சு நாம வளக்கலாமா?”

“சே சே, நாம என்ன வளக்குறது? அதுதான் அழகா கூடு கட்டி சந்தோசமா இருக்குதே. அதப்புடுச்சு வளக்க னும்னு சொல்லிக்கிட்டு அத இம்சிக்கக் கூடாதுடி. சுதந்திரமா பறந்து திரிஞ்சாத்தான் அது பறவை. நமக்குத்தான் அந்தக் குடுப்பின இல்ல. அதுகளாச்சும் நல்லா பறந்து திரியட்டுமே”.

“இதுக்குப் பேரு தவுட்டுக்குருவியாம்மா? யோசனை யில் இருந்த என்னிடம் காளீஸ்வரி கேட்டாள்: “ஆமா”

“எதுக்கும்மா அந்தக்குருவியோட வீட்ட இந்தக் குருவி எடுத்துக்கிருச்சி?”

“எல்லாம் கொளுப்புதான். அதுக பாவம். கூடு கட்டத் தான் முடுஞ்சது. இதுகள எதுத்து நின்னு வெரட்ட முடி யல. ஊரு ஒலகத்துல நடக்குற மாதிரிதான். பலமில்லாத வன பலசாலி வெரட்டுறான். இந்தா நாங் கெடக்கலயா? அப்படித்தான்.”

“நீயென்னடி சின்னப்புள்ள கிட்ட போயி, அதுக் கென்ன வௌங்கும் பாவம். அவ குருவியைப் பத்திக் கேட்டா குருவியப் பத்திச் சொல்லு வாளா…” அம்மா இழுத்தாள்.

நான் அமைதியாக வந்து விட் டேன். காளீஸ்வரி விடுவதாக இல்லை.

“பாட்டி பாட்டி, அந்தக் குருவிக்கு ஏம்பாட்டி தவுட்டுக்குருவின்னு பேரு வச்சாங்க? அம்மா எனிய தவுட்டுக்கு வாங்குனதாச் சொன்னாங்களே…அதுமாதிரி அந்தக் குருவியோட அம்மாவும் அதத் தவுட்டுக்கு வாங்குனாங்களா?”

“சே, சே.. அப்பிடியில்லடி ஏந்தங்கம். யாரு சொன்னது ஒனிய தவுட்டுக்கு வாங்குனதுன்னு? நீயி ஏந்தாயம்மா வகுத்துல பெறந்த ராசாத்திடி. ஏஞ்செல்லச் சீனிக் கட்டிடி. இந்தக்குருவிக தவுடு நெறத்துல இருக்குல்ல. அதுனாலதான் இதுகளுக்கு இந்தப் பேரு” எங்கம்மா சொன்னதை மறுத்து நான் சொன்னேன்.

“நெறத்துனால இல்ல. இந்தக் குருவிக ரைஸ்மில்லு கள்ள கூட்டங்கூட்டமா வந்து தவுட்டுல இருக்குற நொய்யி, அரிசிகளைப் பொறக்கித் திங்கும். அதுனால தான் இதுகளத் தவுட்டுக் குருவிம்பாங்க”

“ஒனக்கு எப்பிடிமா இது தெரியும்? இதுங்க கூட்டமா வந்து திங்கிறத நீயி பாத்திரிக்கியாமா? ரொம்பாக்… குருவிகளா… வருதுமாக்குமா?”.

“நாம் பாக்காத குருவிகளா? ஒங்க பாட்டி ரைஸ் மில்லுலதான் வேல செஞ்சா. அந்தத் தவுட்டுக்குள்ள தான ஏன கெட்டிப் போட்டு எனிய வளத்தா. ஒன்ன மாதிரி நாலுஞ்சு வயசுப் பிள்ளையா இருக்கைலயே நானும் அங்கதான வேல செய்ய ஆரம்புச்சேன். ஒன்னயே அங்கதானடி வாங்கியாந்தேன்”

“தவுட்டுக்கா?”

“…….”

“ஏம்மா, தவுட்டுக்கா வாங்கியாந்தெ?”

“இல்ல”

“ரூவாய்க்காமா?”

“ஒங்க பாட்டிக்கு வயசாகிப் போகவும் அவுகள வேலைக்கு வரவேண்டா முன்னுட்டாங்க. அப்ப நாமட்டும் அங்க வேலை செஞ்சுகிட்டு இருந்தேன்…. அப்ப ஒரு நாளு…” மேற்கொண்டு என்னைப் பேச விடாமல் அம்மா இடைமறித்தாள்.

“சரிதான் போ. போயி வேலையப் பாரு தாயம்மா. பச்சப் பிள்ளைட்ட கத சொல்ல வந்துட்டா. நாம் பாதகத்தி, சண்டாளி. ஏ வகுத்துல நீ பெறந்து பட்டது போதும். ஏதோ கெட்ட சொப்பனம்னு உட்டுட்டு இருப்பாளா… சரி, சரி. போயி கீரையப் பெரட்டிட்டு இத்தினி புளி ரசம் வச்சு சோத்தப் போடு. கொழந்த பசியோட இருக்கா.”

“ஆமாமா. பசிக்குதும்மா. இன்னைக்கு மத்தியானம் பால்வாடிலகூட எனக்குச் சோறு கெடைக்கலம்மா”.

“ஏங்கெடைக்கல? நாளைக்கு அவளுகள கேக்குறம் பாரு”.

“இல்ல பாட்டி. அந்தக் காவாயில பசங்க மீனு புடுச்சுக் கிட்டு இருந்தாங்களா… அதப்பாத்துக்கிட்டே நானு இருந்தேனா. அப்பறமா நானு போறதுக்குள்ள சோறு காலியாப் போச்சுன்னு சொல்லிட்டாங்க.”

“சரி சரி. இந்தா இப்ப ஒங்கம்மெ சோறாக்கிருவா. நல்லாச் சூடா ரசம் ஊத்தி, சுடச் சுடக் கீர வச்சு சாப்புடலாம்.”

“சரி. அதுவரைக்கும் எனக்குத் தவுட்டுக்குருவி பத்திக் கத சொல்லு பாட்டி.”

“நீ யென்னடி. அத உடவே மாட்டியா? தவுட்டுக் குருவியப் பத்தி என்ன கத இருக்கு? அது ஒரு படுக்காளிக் குருவி. பாடைல போற குருவி. அதப்பத்தி வேணாம். ஒனக்கு வேற நல்ல கத சொல்லட்டா? இங்க பாட்டிக் கிட்ட வாடி ஏஞ்செல்லம்”.

“ஏம்பாட்டி, ஒனக்குத் தவுட்டுக்குருவியப் பிடிக்காதா? அத எதுக்கு வைற பாட்டி?”

“ஊகும். புடிக்காது. அப்ராணிக அந்தச் சிட்டுக கட்டுன கூட்ட இவளுக புடுங்கிக்கிட்டாளுகள்ள… அதான். அப்டி எடுக்குறது தப்புதான? சொல்லு”.

“தப்புத்தான் பாட்டி. நாளைக்கு இந்தத் தவிட்டுக் குருவிகள வெரட்டி உட்டுட்டு அந்தத் தேன் சிட்டுக்களக் கூப்புட்டு கூட்ல உக்கார வைப்பமா பாட்டி?”

“ம்… ம்… வைக்கலாம், இப்ப நீயிச் சாப்புட்டுட்டு படுத்து ஒறங்கு. என்ன?”

“அப்பிடியெல்லாம் வைக்கமுடியாது. மனுசங்க கை பட்டா குருவிக திரும்பி வராது. நாளைக்கு மொத வேலையா இந்தத் தவுட்டுக்குருவிகள வௌக்கமாத்தக் கொண்டே அடுச்சு வெரட்டி உடுறம்பாரு. அப்பதான் அதுகளுக்குப் புத்தி வரும். சரி, சரி. வாங்க சாப்புட”. கோபத்தோடு சொன்ன என்னை, அம்மா பரிதாபமாகப் பார்த்தாள்.

சாப்பிடும்போது மாறுபடியும் அந்தக் குருவியைப்பற்றி காளீஸ்வரி பேச ஆரம்பித்தாள்.

“அம்மா, பாவம்மா அந்தக் குருவி. அத அடிக்க வேண் டாம்மா. இங்கயே இருக்கட்டும்மா. தேன் சிட்டுக வந்தா அதுகளுக்கே கூட்டக் குடுத்துருவோம். என்னம்மா?”

“ஒனக்கு என்னடி தெரியும்? இருக்கட்டுமா? நானு கேவலப்பட்டு, கெட்டுப்பட்டு நிக்கிறது ஒனக்கு எங்கத் தெரியப்போகுது? நீயி நெனச்சமாதிரியெல்லாம் கூட்ட இதுக்கு அதுக்குன்னு குடுக்க முடியாது. அடாவடி பண் ணுறவனுகளுக்குத்தான் காலம். அவனுக இந்தத் தவுட்டுக்குருவிக மாதிரிதான். நல்லா இருக்குறத எடுத்து நாஸ்தி பண்ணிப் போட்டுட்டு போயிடுவானுங்க. வாய மூடிட்டு சாப்புட்டு போயித் தூங்கு”. ஆங்காரமாகக் கத்தினேன்.

“வாய மூடிட்டா எப்பிடி சாப்புட முடியும்?”-காளீஸ் வரியின் இந்தக் கேள்வியால் என் கோபம் கொஞ்சம் குறைந்தது. சிறிது சிரிப்பும் கூட வந்தது. ஆனால் சிரிக்கவில்லை.

சிரிக்கக்கூடிய மனநிலையில் நான் இல்லை. என்னால் சாப்பிடவும் முடியவில்லை. சோற்றைப் பிசைந்து கொண்டு சூனியத்தை வெறித்துக் கொண்டி ருந்தேன். என் அம்மாவும் வேதனை நிறைந்த விழிகளால் என்னை உற்றுப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். எங்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்த காளீஸ்வரி தயங்கித் தயங்கிக் கேட்டாள்.

“எதுக்கும்மா அழுகுற? நாளைக்கு வேணும்னா அந்தத் தவுட்டுக் குருவிகள அடுச்சு வெரட்டிரலாம். நீயி அழாதமா”. அவள் அழுதுவிடுவாள் போல இருந்தது.

“அடுச்சு வெரட்ட முடியலயேடி… ஆனமட்டும் பாத்தனே… முடியலயேடி… என்னென்னமோ கனாக் கண்டுக்குட்டு கெடந்தேனே… அம்புட்டயும் நாசம் பண்ணிட்டானே சண்டாளப் பாவி…. இத்தினிக்கூட ஈவு எரக்கமில்லாமெ கூட்டக் கலச்சுட்டானே…” சத்தமாக அழுதேன்.

என் அம்மாவும் கண்களைத் துடைத்துக் கொண்டாள். முந்தானையில் மூக்கைச் சீந்திவிட்டு காளீஸ்வரியை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள்.

“அம்மா என்ன சொல்றாங்க பாட்டி? அம்மா கூடா கட்டுனாங்க? அத யாரு பாட்டி ஒலச்சு உட்டாங்க? அதுக்கா பாட்டி அம்மா அழுவுறாங்க?”.

“ஏஞ்செல்லக்குட்டி. ஏந்தங்கக்கட்டி. இந்தா பாட்டி ஊட்டி உடறேன். சாப்புட்டு தூங்கு கண்ணு”- காளீஸ் வரியைச் சாப்பிட வைத்து பாயை விரித்து அவளைப் படுக்க வைத்தாள் என் அம்மா. அவளும் சிறிது நேரத்தில் தூங்கிப்போனாள்.

அம்மாவும், நானும் அமைதியாக இருந்தோம். நீண்ட நேரத்துக்குப் பிறகு அம்மா என் அருகில் வந்தாள். என்னைக்கட்டிப் பிடித்து அணைத்தாள். சத்தமாக அழுதாள். அவள் மடியில் படுத்து குழுறிக் குமுறி நான் அழுதேன். சற்றுநேரத்தில் பக்கத்து வீட்டு பாட்டி வீராயி வந்தாள்.

“நல்லா இருக்குதங்கடி ஒங்க நாயம். அர்த்த ராத்திரியில அம்புட்டுச் சனமும் ஒறங்கலை தாயும் பொண்ணும் இப்பிடிக் கட்டிப் புடுச்சுக்குட்டு அழுதுகிட்டு கெடக்கீக. அம்புட்டையும் நானு கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். அந்த ரைஸ் மில்லுக்காரன் செய்றதயுஞ் செஞ்சுபோட்டு நாலுபேருக்கு முன்னால வெள்ளையுஞ் சொள்ளையுமா திரிறான். பிள்ளையும் பெறந்து வளந்து இப்ப பள்ளிக் கூடம் போற வயசாச்சு.

இம்புட்டு வருசத்துக்குப் பெறகும் இப்பிடி அழுது அழுது உசுர மாச்சுக்கப் போறீகளா என்ன? தாய்க்கும் மகளுக்கும் அன்னாடம் இதே பொழப்பாப் போச்சு.

அதயே நெனச்சு, நெனச்சு அழுதுக் குட்டு கெடந்தாப்ல என்னத்தப் புடுங்கப் போறீங்க? அந்த மில்லுக்குள்ள எம்புட்டெம்புட்டோ அக்குறும் பும், அநியாயமும் நடந்திருக்கு. ஆனா நீயி பாரு பொன்னம்மா. நம்ம கண்ணெதுருலயெ அவெ என்ன சாவு சாகுறாம்னு பாரு. ஆமா… இப்பிடி எத்தன பேரோட கண்ணீரு… அவனச் சும்மா உடாது”.

“இந்தக் குருவிக்கூட்டுனால வந்த வென பாத்துக்கோ. எனக்கும் இம்புட்டு வயசாச்சு. இப்பிடி நானு பாத்தது மில்ல கேட்டதுமில்ல. நாங்களும் பாக்க, ரெண்டு தேன் சிட்டுக்குருவிகதான் அந்த செம்பருத்தியில கூடு கட்டிக் கிட்டு இருந்துச்சுக. இப்பப் பாத்தா அதுகள வெரட்டிட்டு ரெண்டு தவுட்டுக்குருவிக வந்து அந்தக்கூட்டுல உக்காந் திருக்குதுக. என்னத்தச் சொல்ல? அதுலயும் அதுக கட்டுன கூட்டுமேல கொஞ்சம் வைக்கலக் கொண்டாந்து போட்டுக்கிட்டு, என்னமோ இவளுகதான் கூடுகட்டுன வளுக மாதிரி பம்மாத்துக் காட்டிக்கிட்டு உக்காந்திருக்காளுக”.

“அவளுக உக்காந்துட்டுப் போறாளுக பொன்னம்மா. அதுக்கெதுக்கு நீங்க ரெண்டுபேரும் அழுதுக்கிட்டு இருக்கனும்?”

“எதுக்கா? நாலுபேர போல நம்மளும் கலியாணங்காச்சி முடுச்சு வாழனும்னு ஏம்மகா எம்புட்டு எம்புட்டு கனாக் கண்டுருப்பா? எம்புட்டெம்புட்டு ஆசைகள வளத்து வச்சுருப்பா? அவா மனசுல கட்டுன கோட்டைய தர மட்டமாக்கிட்டானே… அந்தப் படுபாவிப் பெய. அந்தக் கூட்டயும் தவுட்டுக்குருவியையும் பாத்துட்டுத்தான் கஞ்சியும் குடியாமெ தண்ணியும் குடியாமெ கெடக்கா. இப்பிடித்தான். அழுதுதான் ஆத்திக்கிர வேண்டியிருக்கு. நம்மளப் போலவுகளுக்கு வேற என்ன கதி?”

“அவனுக்கு நானு பத்தோட ஒன்னுபதுனொன்னு ஆம்பளன்னா சேத்துல மிதிப்பானாம், ஆத்துல கழுவுவானாம். அப்பிடித்தான ஊரு ஒலகம் சொல்லுது. என்னால அப்பிடி முடியலயே”. நான் சொன்னதைக் கேட்ட வீராயிப் பாட்டி ஆவேசமாகக் கத்தினாள்.

“ஏம் முடியாது? முடியனும், கூடாவது, குருவியாவது. குருவி கூட்டக்கட்டி, முட்டையிட்டு, குஞ்சியப் பொறிக்கவும் என்ன செய்யுது? கூட்டுக்குள்ளயேவா ஒக்காந்து கெடக்குது? கூட்டவிட்டுட்டு ஓடிப்போகல? கூட்டுக்குள்ள ஒனக்கென்ன சோலி? கூட்டுக்கு வெளிய வந்து பாரு. விஸ்தாரணமா விரிஞ்சு கெடக்கு ஒலகம். சந்தோசமா பறந்து திரியறத உட்டுட்டு அழுது பொலம்பி என்னெ பெரயோசனம்? எல்லாம் நம்ம மனசுலதான் தெம்பு வேணும். சரி, எந்துருச்சு சாப்புடுங்க. சாப்புட்டுட்டு நல்லா ஒறங்குங்க. விடுஞ்சா எல்லாஞ் சரியாகும்.”

வீராயிப் பாட்டியின் வார்த்தைகள் என்னை விண்ணுக்குத் தூக்கிச் சென்றன.

– ஜூலை – செப்டம்பர் 2007

Print Friendly, PDF & Email

1 thought on “தவுட்டுக் குருவி

  1. மிகச் சாதாரணமாக எழுதப்பட்ட அற்புதமான வாழ்வியல் தத்துவம் பொதிந்த கதை. பாராட்டுக்கள். மனசு என்னவோ செய்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *