இறைவனின் முடிச்சு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 29, 2015
பார்வையிட்டோர்: 7,982 
 

“இந்த லோகத்திலே இறைவன் சந்தோசத்தையும் கொடுப்பான், அதன் பின்னால் துக்கத்தையும் கொடுப்பான்.” அதுபோலவே இன்றைக்கு சங்கரின் நிலைமையும் காணப்பட்டது, அவனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நர்ஸ் சொன்னவுடன் அவன் மனது எல்லையில்லா சந்தோசத்துடன் தன் மனைவியை பார்க்கச்சென்றான், அங்கே அவன் மனைவி புவனாவின் அருகில் ரோஜாவைப்போல அழகான குழந்தையை பார்த்தவன் மனதில் ஆயிரம் மத்தாப்புக்கள் வெடித்தது போல் இருந்தது, ஆனால் அவன் பார்வை குழந்தையின் கால்களை பார்த்தவுடன் கலக்கம் ஏற்பட்டு,அவன் சந்தோசம் அனைத்தும் வடிந்துவிட்டன.வலது கால் சற்று வளைந்து காணப்பட்டது, அவன் பார்வை சென்ற இடத்தில் தன் பார்வையை செலுத்திய புவனாவும் குழந்தையின் கால்களைப் பார்த்தவுடன் அவள் முகத்திலும் பொ¢ய சோகம் வந்து அப்பிக்கொண்டது.

இது பெரிய பிரச்னை இல்லை, ஓரிரு வருடங்கள் கழித்து நல்ல எலும்பு டாக்டரைப்பார்த்தால் இதை சரி செய்துவிடலாம் என்று டாக்டர் அவர்களுக்கு தைரியம் சொல்லி டிஸ்சார்ஜ் செய்து அனுப்பி வைத்தார்கள். வீட்டிற்குள் வந்தவுடன் சங்கரின் அம்மா குழந்தையைப்பார்த்து கண்படகூடாது என நெட்டி முறித்தார்கள் குழந்தயின் காலைப்பார்த்து ஒன்றும் சொல்லவில்லை, சங்கர்தான் மனம் பொறுக்காமல் அம்மா.. குழந்தை காலைப்பார்த்தாயா? என்று சோகத்துடன் கேட்க ஏண்டா காலுக்கு என்ன குறை? இது குறையில்லையடா உங்க அப்பா வம்சத்துல அவரோட அப்பா தம்பிக்கு இந்த மாதிரிதான் இருந்ததாம், அவர் நல்லா ராஜா மாதிரி வாழ்ந்துட்டுதான் போனாரு.. என்று சொல்ல “ஓ” இது உங்க பரம்பரை பிரச்னையா என புவனா சங்கரை முறைக்க அவன் நெளிந்தான்.

‘செல்வி’ என பெயர் சூட்டப்பட்டு சங்கர் புவனா தம்பதிகளின் குழந்தை வளர ஆரம்பித்தாள். குழந்தைகளுக்கே உரிய அனைத்து குறும்புகளும் செய்தாலும் சில நேரங்களில் “அளவுக்கு மீறிய கோபம் கொள்கிறாளோ” என இருவரும் யோசித்தனர் சங்கரின் அம்மா உங்க அப்பாவுக்கு வராத கோபமா? இது எல்லாம் உங்க பரம்பரையில இருக்கும்டா என சொல்ல புவனா சங்கரை முறைக்க அவன் வழக்கம்போல் நெளிந்தான்.

செல்வி வளர வளர அவள் பிடிவாதமும் வளர்ந்தது, அவளுக்கு ஐந்து வயது ஆனவுடன் டாக்டரை சென்று பார்த்தனர், டாக்டர் சிறு ஆபரேசன் செய்தால் சரி பண்ணிவிடலாம் என்றார், மேலும் இது ஒன்றும் செய்யாது என்றும் தைரியப்படுத்தினார், சங்கரின் அம்மாவும் சரி, புவனாவின் பெற்றோரும் சரி குழந்தைக்கு ஆபரேசன் செய்ய மறுத்துவிட்டனர். இதனால் இவர்கள் ஆபரேசன் எண்ணத்தை விட்டுவிட்டனர், செல்வி கொஞ்சம் விந்தி நடப்பதை பார்த்து மனம் வேதனைப்பட்டனர்.

செல்வியைப்பற்றி அவள் டீச்சர்ஸ் புவனாவிடம் புகார் சொல்ல ஆரம்பித்துவிட்டனர், அவள் படிக்கறதெல்லாம் நல்லா படிக்கறா ஆனா ஒரு இடத்துல உட்காருன்னா உட்காரமாட்டேங்கறா! ஒரே ஓட்டமாகத்தான் இருக்கறா! புவனா வீட்டிற்கு வந்தவுடன் ஏண்டி டீச்சர் உட்காருன்னு சொன்னா ஏன் உட்காரமாட்டேங்கற, செல்வி அழுத்தமாக நான் அவங்களை விட நல்லா ஓடுவேன், அதய டீச்சர் கிட்ட சொன்னா கேக்கமாட்டேங்கறாங்க அவங்க எனக்கு கால் சரியில்லேன்னு சொல்றாங்க என்றாள். புவனா ஒரு நிமிடம் திகைத்து பின் தன் குழந்தையை கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

செல்வி பொ¢ய வகுப்பு செல்ல செல்ல பள்ளி வாகனத்தில் செல்வதை குறைத்துக்கொண்டாள், பக்கத்தில் இருக்கும் அவள் வகுப்பு தோழிகளுடன் நடந்தே பள்ளிக்கு செல்வதை விரும்பினாள், சங்கரும்,புவனாவும் வீட்டில் இருக்கும் காரில் செல்லுமாறு வற்புறுத்தியும் ஏற்றுக்கொள்ளவில்லை அதற்கு அவள் சொன்ன காரணம் கார்ல போய் இறங்கி போனா இவளுக்கு நடக்க முடியாது அதனால தினமும் கார்லதான் கொண்டுவந்து விடுவாங்க அப்படீன்னு சொல்வாங்க.இவள் பிடிவாதம் சங்கருக்கும்,புவனாவுக்கும் மன வருத்தத்தை அளித்தன.

செல்வி வீட்டுப்பக்கத்தில் உள்ள கல்லூரியிலேயே படிப்பதற்கு ஜெனரல் கோட்டாவிலேயே விண்ணப்பித்தாள், விண்ணப்பத்தில் உடல் ஊனமுற்றோர் என காணப்பட்ட பகுதியில் ஒன்றுமே நிரப்பாமல் விட்டுவிட்டாள், கல்லூரி முதல்வர் நேர் காணல் அன்று இவளைப்பார்த்தவுடன் நீ ஏன் ஊனமுற்றோர் கோட்டாவில் விண்ணப்பிக்கவில்லை என கேட்டார்கள், அதற்கு “மாம்” நீங்கள் எனக்கு என்னோட மதிப்பெண் அடிப்படையிலேயே இடம் கொடுங்கள், ஊனமுற்றோர் இடம்தான் என்றால் எனக்கு இந்த கல்லூரியே தேவையில்லை என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டாள். கல்லூரி முதல்வர் ஒரு கணம் அதிர்ச்சியுற்றாலும் அவளின் தன்னம்பிக்கை பேச்சில் கவரப்பட்டு “குட் உனக்கு நீ வாங்கிய மதிப்பெண் அடிப்படையிலேயே சீட் தருகிறேன் என்றார்கள்.

கல்லூரிப்பருவம் இளம் பருவம், கனவுகள், கற்பனைகள் சஜ்சரிக்கும் பருவம், உலகத்தை மகிழ்ச்சியாக பார்க்கும் பருவம், ஆனால் இவை யாவும் இந்தப்பெண்ணின் மனதில் உதித்தாலும், அவளின் “தன்னை யாரும் பரிதாப பார்வை” பார்க்ககூடாது எனபதே இவள் மனதில் நிறைந்திருந்தது அதனால் தன் குறை பார்க்காமல் பழகும் தோழியர் மட்டுமுடனே நட்பு வைத்துக்கொண்டாள்,நிமிர்ந்து நேர் கொண்ட பார்வையுடனே நடந்தாள்.

இவள் நடையை பார்ப்பவர்களின் மீது அலட்சியப்பார்வையை வீசினாள், ஒரு சில இளைஞர்கள் இவளை நெருங்க இவள் “ஹலோ ப்ரண்ட்ஸ்” என கை கொடுத்து ஒரு கம்பீர பார்வையை வீசினாள், பையன்கள் மிரண்டு பின் வாங்கினர் அவ “சண்டி மாடு”
என செல்ல பெயரிட்டு கிசுகிசுத்தனர், அவளை கண்டால் மரியாதை கொடுத்து ஒதுங்கினர்.

கல்லூரிப்படிப்பு முடிந்தவுடன், புவனா மாப்பிள்ளை பார்க்கச்சொல்லி சங்கரிடம் வற்புறுத்தினாள், “செல்வியின் கால்” அவள் திருமணத்தில் முக்கிய பிரச்சினையாகுமோ என் பயந்தனர், அதை விட செல்வி என்னுடைய ஊனத்தப்பார்த்து பரிதாபப்பட்டு எவனாவது என்னை கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னா நான் கண்டிப்பா ஒத்துக்கமாட்டேன், பெற்றோரிடம் கண்டிப்பாகச்சொல்லிவிட்டாள்.

“இந்த லோகத்திலே எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்திவிடுவான் கடவுள்”

ஆம் ஒரு வழியாக ஜாதகப்பொருத்தம் முடிந்து பெண் பார்க்கும் படலமும் முடிந்து இப்பொழுது செல்வி மாப்பிள்ளையுடன் ஐந்து நிமிடம் தனியாகப் பேச வேண்டும் என்று சொன்னவுடன் சங்கர் தம்பதியினர் மிகவும் பயந்தனர்.ஆனால் மாப்பிள்ளை வீட்டார்
அதைப்பற்றி கவலைப்படாமல் குமார் போய்ட்டு வா என அனுப்பி வைத்தனர்.

குமாரைப்பற்றியும் ஒரு சில வார்த்தைகள் இங்கே சொல்லி விடுவோம், கல்யாணமே வேண்டாமென்றவன் செல்வியின் குணாதிசயங்களைப்பற்றி சங்கர் பெண் பார்க்க வருவதற்கு முன் அவர்களிடம் சொல்லிவைத்திருந்தான், அதில் அவன் செல்வியின்
மேல் ஒருவித காதலே கொண்டுவிட்டான், அவன் பெற்றோரும் அவன் விருப்பமே தங்கள் விருப்பம் என நினைப்பவர்கள், ”

செல்வி பெண்பார்க்க வந்த குமாரைப்பார்த்து உண்மையை சொல்லுங்கள் என்னை பார்த்து பரிதாபப்பட்டுத்தானே கல்யாணம் செய்துகொள்வதாக சொன்னீர்கள்?

ஆமாம் என்று சொன்னால் என்னால் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்ள முடியாது இல்லை என்று சொன்னால் நான் நம்ப மாட்டேன், நேருக்கு நேராய் கேட்கவும் குமார் ஒரு நிமிடம் கண்ணை மூடி நின்றவன், பின் மெதுவாக செல்வி இந்த நாற்காலியில்
உட்காரலாமா என்று சொல்லி அமர்ந்தவன் நீயும் உட்கார் என்றவன் உன்னைவிட வயதில் பெரியவன் என்பதால் வா போ என்கிறேன் இதற்கு கோபித்துக்கொள்ள மாட்டாய் என நினைக்கிறேன்.

என்ன கேட்டாய்? என்னைப்பார்த்து பரிதாபப்பட்டீர்களா என்று, இல்லை என்று சொன்னால் அது பொய்! பரிதாபம் அல்லது அனுதாபம் இவைகள் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை அவ்வப்போது தோன்றும் பின் மறையும், உன்னை ஒன்று கேட்கிறேன்
நீ எப்பொழுதாவது யாரைப்பார்த்தாவது பரிதாபப்பட்டிருக்கிறாயா? சொல்?

பா¢தாபப்பட்டுருக்கிறேன் என்றாள், நீ பா¢தாபப்பட்டதால் அவர்கள் உன்னிடம் வந்து சண்டையிட்டிருக்கிறார்களா? உண்மையிலேயே நீ உன் கால் ஊனத்தைவிட பிறர் நம் மேல் பா¢தாபப்படக்கூடாது என்ற எண்ணமே உன் மனதை ஆட்டிப்படைத்திருக்கிறது, அதை நிரூபிப்பதற்காக பிறரோடு போட்டி போட்டு உன்னை கஷ்டப்படுத்திக்கொண்டாய்? என்னை
பார்ப்பவர்கள் எல்லோரும் என் மீது பா¢தாபப்ப்டுகிறார்களென நினைத்துக்கொண்டாய்.

இதனால் சாதாரண சந்தோசங்களைக்கூட அனுபவிக்காமல் போய்விட்டாய், குழந்தையின் முன்னால் கையை காலை ஆட்டினால், அது சிரிக்கும் அதற்காக என்னை பார்த்து சிரிக்கிறது என சண்டைக்கு போவாயா? ஒன்றை புரிந்துகொள் இந்த உலகம் எந்த மனிதனையும் முழு மனிதனாகப்பார்ப்பதில்லை, ஏதோ ஒரு குறை,எப்பொழுதும் எங்கும் இருக்கும்.

மனிதன் அதை பெரிதுபடுத்தி, சிறுமைப்படுத்தி தன்னை சந்தோசப்படுத்திக்கொள்கிறான், அவ்வளவுதான் அதை அப்படியே விட்டுவிடவேண்டும்.

உண்மையிலேயே மிகவும் அழகான நீ உன்னை விரும்பும் ஒருவனுடன் தனிமையில் இருக்கும்போது கூட காதல் பரவசமான நிலை வரவில்லை என்றால் உன் மனதில் சுய பச்சாதாபமே மரமாக வேரூன்றிவிட்டது அதை உடனே வெட்ட முடியாவிட்டாலும்
கொஞ்சம் கொஞ்சமாக பட்டுப்போக வைக்கலாம்.இது நடக்க நடக்க உன் மனதில் மற்ற உணர்வுகள் தானாகப்பெருகெடுக்கும்.

மெதுவாக பேசிமுடித்த குமார் எதிரில் உட்கார்ந்திருந்தவளின் முகத்திற்கு நேராக வந்து இப்பொழுது சொல்கிறேன் உன் அழகுக்காகத்தான் உன்னை விரும்புகிறேன்.

அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த செல்வியின் மனதில் மெல்ல ஒரு கதவு திறந்து அதில் குமார் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான்.

அரை மணிநேரம் கழித்து வந்த இருவரில் தன் பெண்ணின் முகத்தில் முதன் முதலாக ஒரு வெட்கத்தின் சாயலை புவனாவும் சங்கரும் கண்டனர். தூரத்தில் இருந்து இந்த நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருந்த சங்கரின் அம்மா இப்படித்தான் நம்ம பரம்பரையிலே என்று ஆரம்பிக்க புவனா சங்கரை முறைக்க…. வழக்கம்போல நெளிந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *