தலை கீழ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 19, 2019
பார்வையிட்டோர்: 9,246 
 
 

யாராச்சும் பேப்பரை தலை கீழா வைத்து படிப்பாங்களா? பேப்பர் என்றால் சும்மா வெறும் பேப்பர் இல்லை. தினப் பத்திரிகை, வாரப் பத்திரிகை, மாத சஞ்சிகை, சினிமா புத்தகம் எல்லாம்தான். முதன் முதலில் எல்லோரும் தலை கீழாகத்தான் எழுதுவோம். பிறகு போகப் போக நேராக எழுத ஆரம்பித்துவிடுவோம். ஆனால் இவன் இன்னமும் தலைகீழாகத்தான் எழுதுகிறான். மாறவேயில்லை. வயசு என்ன? இப்போதும் கூட தலை கீழாகத்தான் எழுதுகிறான். இவன் தலை கீழாக எழுதுவதை அவனே வாசிக்க வேண்டும். அப்படி அவன் வாசித்தால் எல்லோருக்கும் நன்றாகப் புரியும். பின்னே என்ன குழப்பம் இவன் இப்படியே எழுதட்டும், வாசிக்கட்டும் என்று இவன் உம்மாவும் சொல்லிவிட்டாள். வாப்பா எதுவும் சொல்லாமலே விட்டுவிட்டார்.

மரத்தில் இலைகள் எல்லாம் தலை கீழாகத்தானே இருக்கு. அது நமக்கு புரியவில்லையா? யாரும் மரத்தை வாசிக்க படித்து பட்டம் பெற வேண்டுமா? என்று தன் மகனைப்பற்றி கதை எடுப்பவர்களுக்கு இவன் உம்மா கொடுக்கும் பதில் இதுதான். இவனுக்கு பெயர் என்ன என்று நினைக்கிறீங்க. இவனுக்கு வாப்பா வைத்த பெயர் – இவன்-

வாப்பாவின் கூட்டாளிகள் மகனைப் பற்றிக் கேட்டால் “இன்றைக்கு எந்த மனிதன் நேராக நிற்கிறான் யாரைப் பாரு தலைகீழாத்தானே நிற்கிறான்” என்பது அவரின் நறுக்கென்ற பதில். இது இவனுடைய ஊரில் எல்லாத் தெருக்களிலும், பேச்சளக்கும் எல்லோரும் அறிந்து வைத்திருக்கும் விடயம்.

இவன் பள்ளிக் கூடத்து வாத்தியார் மிகவும் பொறுமையான மனிசன். இவன் வாத்தியாரிடம் அப்பியாசக் கொபியையும் தலை கீழாய்த்தான் நீட்டுவான். இவன் கொப்பியில் சில இடங்களில் கேள்விக் குறியை தலைகீழாய்த் தானும் இடுகிறோம் என்று தெரிந்தே இவன் கொப்பிகளில் ஆரம்பித்துவிட்டார்.

ஆனாலும் அதிக மார்க் இட்டிருப்பார். 80,93 இவன் கொப்பிகளில் எங்கு பார்த்தாலும் இருக்கும். “உன் தலைமேல் எழுதிய எழுத்துடா இது” என்று தொப்பை வயிறு குலுங்க சிரிப்பார். இவன் வாத்தியார் கேட்கும் கேள்விகளுக்கு வாயால் நேராக பதில் சொல்வான். இவனிடம் வாத்தியார் “வாயால் எழுதேன்” என்று பல முறை சொல்லியிருக்கிறார்.

இப்படித்தான் ஒரு முறை இவன் சிறு பிள்ளையாக இருக்கும் சமயம் கையைப் பிடித்து நேராக எழுதப் பழக்கியும் பார்த்தாள் உம்மா றாவியா. அவள் கைகளிலே இவன் தலை கீழாய் உறங்கத் தொடங்கிவிட்டான். றாவியாவும் உடம்பு பெருத்த ஆள் என்பதால் கொஞ்ச நேரம் கைகளில் தாங்கியிருந்துவிட்டு இவன் நன்றாக உறங்கியதும் கட்டிலில் கொண்டுபோய் கிடத்திவிட்டாள்.

இரண்டு கால்களும் இல்லாமல் சக்கரங்கள் பொருத்திய சிறு பலகைத் துண்டில் எச்ச வாயை வைத்து அமர்ந்து கொண்டு ஒரு கைக்கு பாதணி அணிந்து அந்தக் கையால் கெத்திக் கெத்தி பல வீதிகளைக் கடக்கும் விதியுடையவர்களும் தலை கீழ் ஆனாவர்கள்தான். சூரியன், நிலவுக்குக் கூட கால்கள் இல்லை ஆனால் தலை நிமிர்ந்து நிற்கிறதே. எல்லோருக்கும், எல்லாவற்றிக்கும் ஒரு திறமை, ஆற்றல் இருக்கிறது. இதை நீங்கள் போற்ற வேண்டாம் தூற்றாமலிருந்தால் போதுமே. என்று பாடசாலை விழாக்களில் பேசி எல்லோர் மனங்களையும் கொள்ளை கொண்ட இவன்தான் வீட்டிலே மூத்த பிள்ளை. இரண்டாவது, பெண். ஊமை. பிறவியிலே. பார்த்தால் ஊமை என்று யாரும் சொல்ல மாட்டார்கள். முகத்தில் அப்படியொரு வெளிச்சம். கழுத்தில் சின்னதாக ஒரு அரைப் பவுனும் இருக்காது தங்க மாலை. எட்டு அல்லது ஒன்பது துளிப் பாலில் ஒரு துளி கறுப்பு பொட்டு வைத்தாற்போல் கண்களும். அவளைத் தூக்கும் அழகின் இறகுகள் ஆகின.

மூன்று வயசு இருக்கும்போது வீட்டைத் தலைகீழாக்காமல் தூங்கவே மாட்டான். இவன். “டேய் இவன விர்ரா அந்த கோழிய தலகீழா புடிக்காத கொத்தும் என்ட இவனே கோழிய விர்ரா…….ஆ…..” என்று கத்திக் கத்தி இவனோடு பெரும் பாடாப் போச்சு றாவியாவுக்கு. இப்போது இவனுக்கு இருபத்தி நாலு வயசு இருக்கும். ஒரு பதின்நான்கு வயசு இருக்கும் போது வாப்பாவின் விசிறியை எடுத்து கொசு அடிப்பான். அடித்த கொசுக்களை தலைகீழாக வரிசைப் படுத்தி வைப்பான். அதை இந்த இருபத்தி நாலு வயசிலும் மறக்காமல் செய்து வருகிறான்.

இவனோடு மேற்படிப்பைத் தொடர வெளியூர் கிளம்பிய நண்பர்களையும் சேர்த்து ரூமில் மூன்று பேர்தான். கடந்த ஆறு மாதங்களும் ரூமில் சுவாரசியமாக கழிந்தன. ஒரு நாள் இவன் ஊரில் இருந்து வரும் போது கொண்டுவந்த மண் சட்டியில் பசும் பாலை சூடாக்கிக் கொண்டிருந்தான் பால் சூடாகி பொங்கி வரும் போது

“ டேய் மச்சான் இங்க பாரு இந்த பால தலைகீழா பிடிச்சித் தூக்கிக் காட்டுறன்” என்று பொங்கி வந்த பாலை சிறு கோப்பையினால் அள்ளி கையை மேலே உயர்த்தி மீண்டும் மீண்டும் சட்டிக்குள் ஊற்றினான்.

அதிசயமென்று ஓடிவந்து பார்த்த நண்பர்களில் ஒருவன்

“என்ற வாப்பா இவன் பின்னால போனா தலைக்க இருக்கிறதும் அழிஞ்சி போயுடும் ஆள விடு நான் படிக்கனும்” என்று சொல்லிச் சென்று ரூமில் அடைந்து கொண்டான். இரண்டு நாளைக்கு முன்தான் தன் தங்கச்சிக்கு கல்யாணம் என்று சொல்லி பெட்டி படுக்கையை கட்டியவன் இன்னும் திரும்பி வரவில்லை.

அந்த வார கல்லூரி விடுமுறையை ஊரிலே கழிக்க பஸ் ஏறி விட்டார்கள் இவன் நண்பர்கள் இருவரும். ஊருக்குப் போய் இறங்கிய பின் தான் ஊர் தலைகீழாகிக் கிடப்பது தெரிய வந்தது.

எண்ணிலடங்கா வண்ணத்துப் பூச்சிகள். பல நிறங்களில் ஊரையே நிறைத்துப் பறந்து கொண்டிருந்தன. ஆள் நடமாட்டம் மிகக் குறைவு. – சிறுவர்களின் கண்ணில் படாமல் பூத்தது அந்த வண்ணத்துப் பூக்கள்- என்றாலே தலை கீழ்தான்.

ஒரு பூச்சை எட்டிப் பிடிப்போமே என்று இவன் நண்பர்கள் இவர்களுக்கும் தோணவேயில்லை பாருங்களேன்.

“நம்மட ஊர இந்த வண்ணத்துப் பூச்சிகள்தான் தூக்கி இப்புடித் தலகீழா போட்டிருக்குமோ” என்று பேசுவதிலேயே குறியாய் இருந்தார்கள்.

ஊருக்குத் தெற்கே இருக்கும் புளிய மரத்தில்; சொல்லும் போதே எச்சில் ஊறுது. அவ்வளவு இனிப்பும், புளிப்பும் கலந்த பழங்கள் குலை குலையாத் தொங்கும்.

மரத்தின் கீழ் இவனும் தலை கீழாய்த் தொங்குகின்றான். அருகில் சென்று கேட்ட நண்பர்களுக்கு; வண்ணத்துப் பூச்சிகளை தலை கீழாய் நின்று பார்த்தால் ஒரு பூந்தோட்டம் எழுந்து பறப்பது போலிருக்கும் என்று சொல்கிறான். இவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று அவர்கள் எண்ணாமல் போனால் அதுவும் தலைகீழ்தான். இவன் பேச்சைக் கேட்டு நின்ற குளத்துப் பள்ளி வாத்தியார் அக்கம் பக்கம் யாராச்சும் வர்ராங்களா என்று பார்த்துவிட்டு ஒரு புறமாக ஒதுங்கி தலைகீழாய் நின்று வண்ணத்துப் பூச்சிகளைப் பார்க்கத் தொடங்கினார். இதை கண்டும் காணாதவர்கள்போல் கடந்து செல்கிறார்கள் இவனின் நண்பர்கள் இருவரும். வாத்தியாரின் தொப்பை வயிறு அவரை ஒரு நிமிசம் கூட தலை கீழாய் நிற்க விடவில்லை.

இன்னும் சில தினங்களே இருக்கின்றன இவன் தங்கையின் கல்யாணத்திற்கு. மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்த தகவலைச் சொல்ல இவனை ஊரெங்கும் தேடித் திரிகிறாள் றாவியா.

பட்டாம் பூச்சிகள் தலை மேல் பறந்தால், அதன் நிழல்கள் தலை கீழாகத்தான் பறக்கின்றன.

என்று தனக்குள்ளே பேசிக்கொண்டு தலை கால் புரியாத சந்தோசத்தில் குதித்துத் திரிந்த இவனைக் கண்ட றாவியா கையோடு வீட்டிற்கு அழைத்துச் சென்று “மன வீடே தலை கீழாக் கிடக்கு கெதியா வெளிசாக்கனும்டா தங்கச்சிட கலியாண வேலயும் தலக்கி மேல கிடக்கு நீ இப்புடி தல கீழா நின்டு திரிஞ்சா எப்புடிடா மன” என்றதும்

“அங்க பாரு உம்மோ சுவருல பல்லியும் தல கீழாத்தான் இரிக்கி…..ஹி…ஹி……ஹா…”

சத்தமாக சிரித்துவிட்டான்.

“இவனுக்கு எல்லாம் பகடிதான்” என்று முதுகில் செல்லமாய் தட்டிவிட்டாள் றாவியா.

இவனுக்கு தலைகீழாய் பாடம் சொல்லிக் கொடுக்க முடியாது என்று இவனைத் தனியே கூப்பிட்டு கல்லூரிக்கு இனி வரவேண்டாம் என்று அதிபர் சொன்னதை உம்மாவைத் தவிர வேறு யாரிடமும் இவன் சொல்லவில்லை.

“கோ….றாவியா…ஆ…கோ…ஒ…வெளியால வாகா றாவியோ…” பட படத்த பதட்டம் நிறைந்த குரலில் செய்னுதீன் மனைவி ஓடி வந்து

“இவர்ர போட்டுலதான உன்ட புரிசனும் கடலுக்கு போற”

“அதுக்கென்னடி இப்ப” அவள் தோளைக் குலுக்கிக் குலுக்கி கேட்டாள் றாவியா.

“நடுக் கடல்ல போட்டு தல கீழா பெரன்டுட்டாம்டி”

சொன்னதுதான் தாமதம்

“என்ட அல்லோ…ஓ… என்ற அல்லோ…ஓ..நான் என்ன செய்வன் இப்ப…டே…மகேன்…வாடோ..ஓ..போய்ப் பாக்க..ஏ…”

ஒப்பாரியோடு வந்த றாவியாவின் துடி துடித்த குரலுக்கு பதில் குரலாய்

“எங்க போய் யார பாக்கப்போற றாவியா” கணவனின் குரல்.

கொஞ்ச நேரம் ஆடிப்போன றாவியா எதிரில் வந்து நின்ற புரிசனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

“போட்டு கடல்ல பெரன்டுட்டாமே…”

இது செய்னுதீன் மனைவி.

“எவன் சொன்ன..கத…அது கரையேரக்க கொஞ்சம் லோடு கூடிட்டு.. இவனுகள் எல்லாத்தையும் தல கீழாத்தான் சொல்வானுகள்.. ஒரு பிரச்சினையுமில்ல..” என்றதும் றாவியா விட்டாள் பாரு ஒரு பெரும் மூச்சு அருகில் வந்த பட்டாம் பூச்சிக் கூட்டத்தை ஒதுக்கிக்கொண்டு போனது.

“இஞ்சப் பாருங்க புள்ளட கலியாணம் முடியங்காட்டிலும் கடலுக்கு போக வேணாம்” என்று கட்டளை போட்டாள்.

“வாங்கோ ஊட்ட போக..ரோட்டுல நின்டு பேசாம…இனி ஊரே தெரண்டு வரப்போகுது..

மாப்புள வீட்டயும் கோல் பண்ணி சொல்லுங்க பிரச்சன ஒன்டுமில்லண்ணு.. கேள்விப்பட்டு கேள்விப்பட்டு வார ஆக்கள நான் பாக்குறன் நீங்க போய் தண்ணிய வாருங்கோ..”

நிறுத்தாமல் பேசிய றாவியா மீண்டும் “இஞ்சப் பாருங்கோ இந்த கலியாணத்த ஒரு எசகு பிசகும் வந்துடாம நடத்தி முடிச்சோமென்டா ஏழு கடலையும் தாண்டின மாதிரித்தான்..போய்த் தண்ணிய வாருங்கோ..நான் சமக்கிறன்”

“ப்…பா…நீ பேசப் புடிச்சா தொங்கலே தெரியமாட்டா” என்றவாறு தொண்டைக்குள்ளிருந்து வந்த சளியை சுவர் ஓரத்தில் துப்பிவிட்டு பூனை பேண்டு மூடுவது போல மூடி கிணற்றடிக்குச் சென்றார் றாவியாவின் கணவன் கபூர்.

கிணற்றடிக் கிடுகு வேலியில் அவர் வழமையாக செருகி வைத்த பிறஸ்ஸை எடுத்து வாய் நிறைய நுரை தள்ள பல் துலக்கிக் கொண்டு வாசலில் நிற்கும் நெல்லி மரத்துக்கும், கிணற்றடிக்கும் திரும்பித் திரும்பி நடந்து கொண்டிருக்கும் கபூரின் மனதில் சிறு கவலை.

“இன்னும் குளிக்காம கெணத்தடியில என்னதான் நடக்குது கெணத்துத் தண்ணிய ஒவ்வொன்டா எண்ணுறயளா…?” என்ற றாவியாவின் குரல் கிணற்றடிக் கிடுகு வேலியை பிய்த்தடித்துக் கொண்டு வந்தமாத்திரத்தில் கபூரின் மனதுக்குள்ளிருந்த கவலையின் கதவை “பளார்” என அடைத்துவிட்டது.

கல்யாணத்துக்கான வேலைகள் தொடங்கிவிட்ட இந்த தருணத்தில் வீட்டுச் சுவர்களுக்கு பெயிண்ட் பூசும் ஆட்களும் வந்து வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். இனி றாவியாவுக்கு ஒரு இடத்தில் அமரும் அவகாசமும் பறிபோய்விட்டது. வீசிக்கொண்டிருக்கும் மெல்லிய காற்றில் பெயிண்ட் வாசமும் கலந்து பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கு கல்யாணச் சாப்பாட்டை ஞாபகமூட்டியது.

கபூரின் மனதுக்குள் ஒரு குடைவு. முகமே சரியில்லை. உட்சாகமும் இல்லை என்னமோ போலிருந்தார்.

“என்ன மொகமெல்லாம் வாடி வதங்கினாப்போலிருக்கு. ஒடம்புக்கு ஏதுமென்டா சொல்லுங்க டொக்டருகிட்ட போகலாம்” என்று அவ்வளவு வேலைகளுக்கு மத்தியிலும் கணவனை நெருங்கி பரிவாக கேட்டாள் றாவியா.

“எனக்கு என்ன ஒடம்புக்கு நான் நல்லாத்தான் இருக்கன்…வாய் பேசாப் புள்ள கல்யாணம்…பண்ணிக்கிட்டு வாழப்போகுது..அதான் மனசு நெனச்சு கொஞ்சம் கவல வருது..” என்றார்.

தன் கவலையை வெளிக்காட்டாமல் ஒரு தியாகிபோல் நின்றாள் றாவியா.

ஒரு படியாக கல்யாணம், சாப்பாடு, மருதாணி, பாக்கு, வெற்றிலை, புது உடுப்பு, சொந்த பந்தங்களின் வரவு, செலவு எல்லாம் முடிந்துவிட்டது.

அது மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்கும் முதல் நாள் இரவு. “வாய் பேசா ஊமைய கல்யாணம் பண்ணிக்க ஊரில் இப்படி நாலு பேர் இருந்தால் போதும் அல்லாஹ் அள்ளிக் கொடுப்பான் இந்த ஊருக்கு செல்வத்த” என்று கல்யாணத்திற்கு வந்தவர்களில் பாதிப் பேரு மெது மெதுவாக பேசிக் கொண்டிருந்ததன் எதிரொலியாக இன்னும் இவன் காதுகளில் ஒலிக்கிறது.

நண்பர்களை வரவேற்ற களைப்பில் ஒரு வாழைப் பழத்தைக் கையில் எடுத்து தோலுரித்து மெது மெதுவாக சாப்பிட்டு ஒரு கிளாஸ் குளிர் பானத்தையும் குடித்துவிட்டு மேசை மீது அந்தக் கிளாஸை தலை கீழாக வைத்துச் சென்றான் இவன் தனது அறைக்கு.

வழமை போல் பொழுது புலர்கிறது. கல்யாணம் நடந்து ஓய்ந்த வீடு எப்படி இருக்கும்.?

எங்கு பார்த்தாலும் சுறுட்டி எறியப்பட்ட தாள்த் துண்டுகளும், வாழைப்பழ கோதுகளும் கலைந்து கிடக்கும் பிளாஸ்டிக் கதிரைகளும், புதிய பெயிண்ட்டு பூசப்பட்ட சுவர்களின் சில இடங்களில் தடவப்பட்டிருக்கும் சுண்ணாம்பும், காகங்கள் வந்து தாகம் தீர்த்து அலம்பிக் குளித்துவிட்டுப் போய் சில மணி நேரம் ஆன நீர்த் தேக்கம் போல் அமைதியாக கிடந்தது வீடு.

விடியற் காலை ஆறு மணியை மீறிக்கொண்டுபோகும் ஹால் மணிக்கூட்டு முட்கள்.

“டேய் மகேன்…எழுந்திருடா..உங்க வாப்பா எங்கடா படுத்திருக்காரு காணயுமில்ல..ஊடெல்லாம் தேடிட்டன்..நீயும் எழும்பித் தேடு மனிசன் எங்கடா போய்த் தொலஞ்சாரு..” இது றாவியா.

“கொஞ்சம் பொறுங்க என்ன ஏதென்டு தெரியாம பொரியாதொங்கோ…உம்மா” என்று சொல்லியவாறு தலையணையை இரவெல்லாம் முட்டி மோதிய முகத்துடன் எழுந்தான் இவன்.

“இன்னா வாராங்கம்மா வாப்பா” விரிந்து கிடந்த கேற்றைத் தள்ளி மெதுவாக அடைத்துவிட்டு மௌனமாக வந்தார் கபூர்.

பேய் முழி முழித்தாள் றாவியா.

“மகேன் இங்க கொஞ்சம் வா..” என்று வாசலில் கேட்பாரற்றுக் கிடந்த கால் தட்டியைத் தூக்கி உதறி உள்ளிருந்த மண்ணையெல்லாம் வெளியேற்றிவிட்டு வீட்டின் இடது பக்கமாக இருக்கும் தனி அறைக்கு முன்பதாக போட்டுவிட்டு உள்ளே நுழைகிறார் கபூர்.

“என்னாப்பா” என்றான் இவன் அறையினுள்ளே இருந்து கொண்டு.

“தலகீழா நின்னு பாத்தா வண்ணத்துப் பூச்சிகள் வருதாமே..ஏன்டா…உன்ட ஸ்க்கூல் வாத்தியாரு சொன்னாரு..நானும் அந்த புளிய மரத்தடிக்குப் போய் தலகீழா நின்னுட்டுதான் வர்றன் அப்புடி ஒன்டையும் காணலியடா..” என்று

மகனின் காதுக்குள் குசு குசுத்தார் கபூர். இவனின் வாயிலிருந்து வந்தது அடக்க முடியாத சிரிப்பு. “அது…ஹி….ஹி….” சிரித்தபடி அறையை விட்டு வெளியேறுகிறான் இவன்.

“என்னயாம் வாப்பாவும் மகனும் காலமில்லாக் காலம் சிரிச்சிக் கொட்டுறயள் என்றாள் றாவியா நடந்துகொண்டு.

நல்ல நேரம் பார்த்து புதுத் தம்பதியினரின் அறையிலிருந்து “ங்குவா…ங்குவா..ங்குவா…” குழந்தை அழும் சத்தம் வந்தது.

“என்னடியிது இப்பதிய புள்ள அழுற சத்தம்” என்றார்.

“அது மருமகன்ட டெலிபோன்லயாக்கும் யாரோ கோல் எடுக்குறாங்க..நீங்களுமா தலகீழா யோசிக்கத் தொடங்கிட்டயள்” என்று சொல்லிக்கொண்டு தன் புடவை முந்தானையை இடுப்பில் எடுத்து இறுக்கமாக செருகி நடந்தாள் றாவியா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *