கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 3, 2019
பார்வையிட்டோர்: 21,817 
 
 

என் நண்பருடைய கதையைக் கேட்டபோது, ‘‘வாட் எ கோயின்சிடன்ஸ்!’’ என்றேன். கோயின்சிடன்ஸ் என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை. தற்செயல், யதேச்சை… இதெல்லாம் எதற்கு? விஷயத்துக்கு வருகிறேன்.

‘எல்லோரிடமும் ஒரு நல்ல கதை இருக்கு’ என்று எழுத்தாளர்கள் அடிக்கடி சொல்லுவார்களே… அது போல் இருந்தது இந்தக் கதை. எழுதினால் ‘சும்மா கதை விடாதே’ என்று விமர்சிப்பீர்கள். இந்தக் கதையும் அப்படித்தான்! இருந்தாலும் சொல்லி விடுகிறேன்.

‘‘தம்பி, அம்மாக்கு உடம்பு சுகமில்லை… நீ வெள்ளனே கிளம்பி வா ராசா’’ என்று பக்கத்து வீட்டு ஆச்சி போன் செய்த பிறகு எதுவும் செய்யத் தோன்றவில்லை.

‘‘உடனே வர முடியாதே… அடுத்த வாரம் நீச்சல் போட்டி இருக்கு!’’

‘‘உடனே உன்னைப் பார்க்கணும்னு சொல்லுதே!’’

ஆச்சி குரலில் அவசரத்தை உணர முடிந்தது. அன்று இரவு ரயிலிலேயே டிக்கெட். படுக்க இடம் கிடைத்தாலும் தூக்கம் வரவில்லை. வேண்டாத நினைவுகள். அம்மாவிற்கு கடைசி ஆசை என்று எதுவும் இல்லை. ஆனால் நான் நீச்சல் அடிக்கக் கூடாது என்பதுதான் அம்மாவின் நீண்ட நாள் ஆசை. பொங்கலுக்கு ஊருக்குப் போனபோது ‘‘எனக்கு வாக்கு கொடு’’ என்று அம்மா ரயில் ஏறும் வரை அடம் பிடித்தாள். நீச்சல் சாம்பியன் எப்படி நீச்சல் அடிக்காமல் இருக்க முடியும்? இந்த முறை ஊர் ஆற்றில் நீச்சல் அடித்துக் காண்பிக்க வேண்டும்.

அப்பா அந்த ஆற்றில்தான் நீந்தப் போய் இறந்து போனார். அந்த நிகழ்வு எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது.

பதினான்கு வயதில் மஞ்சள் காமாலை வந்தது. பக்கத்து வீட்டு ஆச்சிதான், ‘‘கண் மஞ்சளா இருக்கு… மூத்திரத்தில சோத்தைப் போட்டு பாரு’’ என்று அம்மாவிடம் சொன்னாள். சோறும் லால்குடி ஆஸ்பத்திரியில் டாக்டரும் மஞ்சள் காமாலை என்று உறுதி செய்து விட்டார்கள். அப்பாவுக்குக் காட்டூர் பக்கம் சர்க்கரை ஆலையில சூப்பர்வைசர் வேலை. மாலையில் வீடு வந்தபோது என்னைப் பார்த்து மிரண்டு போய், ‘‘என்னடா… மூஞ்சி எல்லாம் விபூதி?’’ என்று கேட்டார்.

‘‘திரௌபதியம்மன் கோயிலுக்குப் போய் விட்டு வந்தேன்… புள்ளைக்கு மஞ்சள் காமாலையாங்க!’’

‘‘எங்கடா… கண்ணைக் காமி! ஆமா, கண் பூரா மஞ்சளா இருக்கே!’’ ‘கீழாநெல்லி அரைச்சுக் குடு’, ‘பத்தியச் சாப்பாடு போடு’, ‘இளநீர் நெறைய குடிக்கக் குடு’ என்று தெரு டாக்டர்கள் பலரும் அறிவுரை கூறினார்கள். அந்தக் கூட்டத்தில் யாரோ, ‘‘பொன்மலைப் பக்கம் கஷாயம் தராங்க. அஞ்சே நாள் சாப்பிட்டா சரியாயிடுமாம்’’ என்று சொல்ல, அப்பா ஆபீஸுக்கு பர்மிஷன் போட்டுவிட்டு என்னை தினமும் காலை லால்குடி பாசஞ்சரில் அழைத்துக்கொண்டு போனார்.

வெள்ளை தாடி வைத்துக்கொண்டு ஒரு பெரியவர் தினமும் கசப்பாகக் கஷாயம் தந்தார். கண்ணை மூடிக்கொண்டு ஏதோ மந்திரம் சொல்லிக்கொண்டே விபூதி இட்டுவிட்டு, பச்சை கலர் புளிப்பு மிட்டாய் தருவார். ஐந்தாம் நாள் ரயிலில் போகும்போது நாங்கள் ஏறிய ரயில் பெட்டியில் அழுக்கான சாமியார் ஒருவர் உட்கார்ந்து கொண்டிருந்தார். நெற்றி முழுவதும் திருநீறு; வியர்வையில் நடுவில் இருந்த பெரிய குங்குமப் பொட்டு மூக்கு மேல் வழிந்து இருந்தது. நாய் அருகே போனால் சூடாக ஒரு வாசனை வருமே… அதேபோல் அவரிடமிருந்தும் ஒருவிதமான வாசனை வந்தது. அவரைப் பார்க்கக் கூடாது என்று உள்மனம் சொன்னாலும், கண் அவரைப் பார்த்தது.

சிரித்தார்.

அப்பா கண்டுகொள்ளவில்லை, ஆனால் சாமியார் சிரித்துக் கொண்டு இருந்தார். பல் இடுக்குகள் எல்லாம் சிவப்பாகக் கறை படிந்து இருந்தது.

அப்பா இப்பொழுதும் அவரைக் கண்டுகொள்ளாமல் தன்னிடம் இருந்த பெட்ரண்ட் ரஸ்ஸல் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். ஆனால் அவர் எங்களையே பார்த்துக்கொண்டு இருந்தார்.

அப்பாவிடம் திடீரென்று, ‘‘கையை நீட்டு’’ என்றார்.

அப்பா அவரைப் பார்த்து விட்டு, மீண்டும் புத்தகத்திற்குள் போனார்.

‘‘சொல்றேன் இல்ல… கையை நீட்டு!’’

‘‘எதுக்கு?’’

‘‘நீட்டு! குறி சொல்லணும்…’’

‘‘என்கிட்ட காசு இல்லை!’’

‘‘உன் காசு யாருக்கு வேணும்? கையை நீட்டு!’’

‘‘வேண்டாம் சாமி… நம்பிக்கை இல்லை!’’

‘‘நீ படிக்கற புத்தகத்தைப் பார்த்தாலே தெரியுதே… கையைக் காமி!’’ – அவரது குரல் ஆணை போல் இருந்தது.

‘‘ஐயா, எனக்கு நம்பிக்கை இல்லை என்றால் விட்டுடுங்களேன்…’’

‘‘விதி வலியது… வாழ்க்கையில் எல்லா சம்பவங்களும் முன்பே தீர்மானிக்கப்பட்டது. கையை நீட்டு!’’

எனக்கு பயமாக இருந்தது.

‘‘எல்லாம் கட்டுக்கதை’’ என்றார் அப்பா.

‘‘சத்யம் சிவம் சுந்தரம்… உண்மை, நன்மை, அழகு… நம்பிக்கை இல்லை என்றால் இது எல்லாம் கிடையாது!’’

அப்பா பேசாமல் இருந்தார்.

‘‘மனிதனுக்கு மட்டும்தான் நம்பிக்கை இருக்கிறது. மிருகங்களுக்குக் கிடையாது! கெட்டவன், நல்லவன் எல்லாம் நம்பிக்கையினால் வருவது… சரி, உன் கையை நீட்டு!’’

அப்பா கையை நீட்ட, அதையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு, ஜன்னல் வழியே ஒரு தொலைதூரப் பார்வையும், பெருமூச்சும் விட்டார். ‘‘எட்டாம் வீடு… கண்டங்கள் நிறைந்தது… உன் பிறந்த தேதி?’’

அப்பா சொன்னார்.

‘‘உன் மரணம் தண்ணீரில்தான் நிகழும். உன் குடும்பத்திற்கே தண்ணீர் கண்டம் உண்டு… விதி வலியது… ஒன்றும் செய்ய முடியாது!’’

‘‘எனக்கு நீச்சல் நல்லாத் தெரியும். தினமும் ஆத்துத் தண்ணிலதான் குளிக்கறேன்… இவனும் நல்லா நீச்சல் அடிப்பான்… சுத்த பைத்தியக்காரத்தனம்!’’

‘‘உனக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்திருக்குமே?’’ – அவர் கேட்டவுடன் அப்பா அமைதியாகி விட்டார்.

‘‘ஆமாம், ஒரு வயசுல செத்துப் போச்சு!’’

‘‘எப்படி இறந்தது?’

‘‘டீஹைட்ரேஷன்!’’

‘‘நீரகற்றம்… பாருங்க, நீர் சம்பந்தமானது…’’

‘‘தற்செயல்!’’

பெருமூச்சு ஒன்றை விட்டு, பெரியவர் கண்களை மூடிக் கொண்டார்.

பொன்மலையிலிருந்து திரும்ப வரும்போது அப்பாவிடம், ‘அந்தப் பெரியவர் சொன்னது உண்மையா’ என்று கேட்டேன்.

‘‘எல்லாம் பொய்… இதெல்லாம் ஊரை ஏமாற்றிக்கொண்டு இருக்கும் பைத்தியங்கள்!’’ என்றார்.

‘‘எனக்கு முன்னால ஒரு பாப்பா செத்துப் போனதை சரியாச் சொன்னாரேப்பா… எதுக்கும் ஆத்துப் பக்கம் கொஞ்ச நாளைக்கு போக வேண்டாம்பா!’’

‘‘இதெல்லாம் தற்செயல்டா… பெரியவன் ஆனா உனக்கே புரியும்… அறிவியலில் நீயே படிப்ப… இப்ப பாரு, இங்கே தண்ணி ஓடுது; முழங்கால் அளவுதான் இருக்கு. அதில குளிச்சுட்டு வரேன்’’ என்று உள்ளே இறங்கியவர் வெளியே வரவில்லை. இறந்து போயிருந்தார்.

ஒரு வாரம் கழித்து அம்மாவிடம், ரயிலில் நடந்ததை எல்லாம் சொன்னேன். அம்மா பயந்துவிட்டாள். திரௌபதியம்மன் கோயில் பூசாரியிடம் சொல்ல, பரிகாரம் செய்தால் சரியாகிவிடும் என்று அவர் ஐந்நூறு ரூபாய் வாங்கிக் கொண்டு, தாயத்து ஒன்று தந்தார்.

சில மாதங்களுக்குப் பின் ஆடி மாதம் கொள்ளிடத்திலிருந்து தண்ணீர் வர, ‘‘வாடா… ஒண்ணும் ஆகாது’’ என்று நண்பர்கள் தைரியம் கொடுக்க, திரும்பவும் நீச்சல் அடிக்க ஆரம்பித்தேன். ஆனால் அம்மாதான், ‘‘தண்ணிகிட்ட போகாதடா’’ என்று மன்றாடிக்கொண்டே இருந்தாள். ஸ்கூல், காலேஜ் என்று நீச்சல் போட்டிகளில் எல்லாம் பரிசு வாங்கினேன். பரிசைக் காட்டும்போதெல்லாம் அம்மா பீதியானாள். மாவட்ட அளவில் நான்தான் முதல் இடம். படிப்பு முடித்தபின் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வங்கியில் வேலை கிடைக்கக் காரணமாக இருந்ததும் அந்த நீச்சல்தான்!

ஆனால் ஊருக்குப் போகும்போதெல்லாம் அம்மா, ‘‘நீச்சல் மட்டும் வேண்டாம் ராசா! எனக்கு பயமா இருக்கு’’ என்று புலம்பிக் கொண்டே இருப்பாள்.

‘‘நீச்சலுக்குதான்மா வேலையே… அடுத்த தடவை வரும்போது ஆத்துல அடிச்சுக் காமிக்கிறேன். நீயே பாரு, எப்படி அடிக்கிறேன் என்று!’’

ஆனால் அம்மாவுக்கு அதற்குள் உடம்புக்கு முடியாமல் போய் விட்டது. திருச்சிக்கு அழைத்துப் போய் பெரிய டாக்டர்களிடம் காண்பித்தேன். நரம்பு தொடர்பான ஏதோ ஒரு நோய் பெயரைச் சொன்னார்கள். எல்லாமே படுத்த இடத்தில்தான்.

ஆச்சி போனுக்குப் பிறகு ஊருக்குச் சென்றபோது அம்மா அப்படியே படுத்துக் கொண்டிருந்தாள்.

‘‘உன்னைப் பாக்கணும் போல இருந்தது ராசா’’ என்றாள்.

‘‘எப்படிம்மா இருக்கே?’’ – கையைப் பிடித்துக் கொண்டு கேட்டேன்.

‘‘என்னய்யா செய்யறது? படுக்கையில்தான் எல்லாமே… நீச்சல் மட்டும் அடிக்காதே. அந்தப் பெரியவர் சரியாதான் சொல்லியிருப்பார்!’’

டீ போட்டுக் குடித்துவிட்டு அம்மாவிற்கும் கொஞ்சம் கொடுத்தேன். திரும்பவும் நீச்சல் பேச்சு எடுத்தாள்.

‘‘அட, அதை எல்லாம் நம்பாதே… இரு, வெளியே போய்விட்டு வருகிறேன்’’ என்று அடுத்த வார நீச்சல் போட்டிக்கு பயிற்சி எடுக்க ஆற்றில் நீச்சல் அடிக்கக் கிளம்பினேன்.

சிறிது நேரத்தில் பக்கத்து வீட்டு செந்தாமரை ஓடி வந்து, ‘‘அம்மா நீச்சல் அடிக்க வேண்டாம்னு கத்திக்கிட்டே இருக்காங்க… உடனே வீட்டுக்கு வா’’ என்று கூப்பிட்டான்.
‘‘அதுக்குள்ள யாருடா அம்மாகிட்டா சொன்னாங்க?’’ என்று சலித்துக் கொண்டே கரைக்கு வந்து உடை மாற்றி வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அம்மா கண் அசையாமல் படுத்துக் கொண்டிருந்தாள்.

‘‘ரொம்ப கத்தினாப்பா… வந்துடுவான்னு சொன்னாலும் கேக்கலை. லொக்கு லொக்குன்னு நிக்காம இருமல்… நான்தான் கொஞ்சம் தண்ணி குடுத்தேன்’’ – அழுகையோடு சொன்னாள் ஆச்சி.

– ஜனவரி 2014

Print Friendly, PDF & Email

1 thought on “தற்செயல்

  1. தற்செயல் ஒரு சிறப்பான சிறுகதை.
    தற்செயல் என ஒதுக்கும் பகுத்தறிவுவாதிளுக்கும், விதியை நம்பும் பழமைவாதிகளுக்கும் இடையே காலங்காலமாக நடைபெறும் போராட்டத்தின் விளைவை சிறப்பாகச் சித்தரித்திருக்கிறார் கதாசியர் சுஜாதா தேசிகன். கதைக்குப் பாராட்டுக்கள். கதாசிரியருக்கு நல்வாழ்த்துக்கள்.
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *