தேவனுக்கும் அவர் மனைவி தேவிக்கும் இரவு தூக்கம் வரவில்லை. கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது. தாங்கள் கஷ்டப்பட்டுக்கட்டிய வீடு நாளை இடிக்கப்படவிருப்பதை நினைத்து கண்கலங்கினர்.
இன்றைய நாளின் இரவு மட்டுமாவது இங்கே வாழ்ந்து விடலாம். அல்லது இந்த வீடு இடிப்பதற்குள் மாண்டு விடலாம் எனும் முடிவில் இருவரும் தீர்க்கமாக இருந்தனர். வாழ்வில் மாடி வீடு கட்டி வாழ்ந்து விட வேண்டும் என சிறுகச்சிறுக சேமித்த பணத்தில் கட்டிய வீடு இது.
வீடு கட்டும் முன் சரியாக அளவீடு செய்து கட்டியிருக்க வேண்டும். சென்ற வருடம் கட்டி முடித்து உறவுகளை முறையாக அழைத்து புண்ணியர்ச்சனை செய்த போது வந்து விருந்துண்டு வாழ்த்திய பங்காளி பரமன், அடுத்த நாளே வீடு கட்டிய இடத்தை அளந்து பார்த்து விட்டு பாதி வீடு தனக்கு கிரையமான பகுதியில் கட்டியிருப்பதாகக்கூறி, வீட்டை இடிக்கச்சொல்லி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதால் கதிகலங்கி போயினர் தேவன் குடும்பத்தினர்.
உறவுகளைக்கூப்பிட்டு இந்த நிலத்துக்கு பதிலாக வேறு நிலம் கொடுப்பதாகவும், அல்லது மார்க்கெட் நிலவர மதிப்பில் பணம் கொடுப்பதாகவும் சொல்லியும் பரமன் ஒத்துக்கொள்ளாமல் வழக்குத்தொடுத்து, இன்று தன் பக்கம் சாதகமாக தீர்ப்பு வந்ததால் வீட்டை இடிக்க இயந்திரத்தையும், இடிப்பதை யாரும் தடுக்காமல் இருக்க காவல் துறையினரையும் காலையில் வரச்சொல்லி விட்டு தீர்ப்பு நகலோடு பக்கத்திலிருந்த தனது ஓட்டு வீட்டில் மகிழ்ச்சியுடன் ‘எப்போது விடியும்?’ என எதிர்பார்த்துக்காத்திருந்தார் பரமன்.
அதிக மகிழ்ச்சியால் பரமனும், அதிக மன உழைச்சலால் தேவனும் அவரது மனைவியும் இரவு உறங்காமலிருந்த நிலையில் நடு நிசிக்குப்பின் இடி மின்னலுடன், சூறாவளிக்காற்று வீச வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்தது. வெளியிலிருந்த நாய்கள் ஓலமிட , தவளைகள் தண்ணீரில் தாளமிட, மாடுகளும், கன்றுகளும், ஆடுகளும், கோழிகளும் மரணபயத்தில் கத்தியபோது தன்னை ஆபத்து சூழ்ந்துள்ளதை உணர்ந்து வீட்டைத்திறந்த போது அழையா விருந்தாளியாக மழைநீர் வீட்டிற்குள் நுழைந்து முற்றிலும் ஆக்கிரமிக்க, திடுக்கிட்டு அதிர்ச்சியுடன் வெளியே வந்து பார்த்த போது ஒவ்வொரு நொடியும் தண்ணீரின் அளவு கூடுவதைக்கண்டு பயம் பரமனின் மனதைக்கவ்வியது.
பொழுது விடிந்த பின் தன் தோட்டத்தைச்சுற்றிலும் முற்றிலுமாக மழை நீர் ஆக்கிரமித்திருந்தது புரிந்தது. மார்பளவு நீரில் வெளியே செல்லும் வழி தெரியவில்லை. மழை நீரில் ஊறிய தன் வீட்டின் சுவர்கள் விரிவதைக்கண்டு இனி வீட்டில் இருக்க முடியாது. ஒன்று பக்கத்தில் இருக்கும் வேப்பமரத்தில் ஏற வேண்டும். அல்லது பங்காளி தற்போது பகையாளியாகி நாளை தன்னால் இடிக்கப்போகும் தேவனின் மாடி வீட்டின் மீது ஏற வேண்டும்.
மரத்தைப்பார்த்தார். அதில் அமர்ந்திருந்த கோழிக்குஞ்சை ஒரு நாக பாம்பு விழுங்கிக்கொண்டிருந்தது. உயிரைக்காப்பாற்ற வேறு வழியே இல்லாமல் தேவனின் மாடி வீட்டின் மீது தயங்கித்தயங்கி குற்ற உணர்வுடன் குளிரில் நடுங்கியபடி ஏறினார் பரமன்.
மாடி மீது தேவனும் அவரது மனைவியும் குளிரில் நடுங்கியபடி அமர்ந்திருந்தனர். மாடிமேல் இருந்த படி தன் ஓட்டு வீட்டைப்பார்த்தார் பரமன். வீடு முற்றிலுமாக இடிந்து தண்ணீரோடு கரைந்து கொண்டிருந்தது. அடுத்த நொடி தன் இடுப்பு வேட்டியின் சொங்கில் தன்னை தற்போது தண்ணீரிலிருந்து காப்பாற்றிக்கொண்டிருக்கும் தேவனின் வீட்டை இடிக்க முடிந்து வைத்திருந்த கோர்ட் உத்தரவை எடுத்துக்கிழித்து தண்ணீரில் வீசினார் பரமன்.