கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 6, 2019
பார்வையிட்டோர்: 12,621 
 
 

( இதற்கு முந்தைய எனது ‘சமையல்காரன்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது ).

மனைவி மரகதத்தின் இறப்பிற்குப் பின் சபரிநாதன் மிகவும் வதங்கிப்போனார். நாட்களை தனிமையில் மிகவும் வேதனையுடன் நகர்த்தினார்.

அன்று சமையல்காரர் சிவக்குமார் சமைத்துப்போட்ட மத்தியான சாப்பாட்டை மன நிறைவுடன் சாப்பிட்டுவிட்டு எழுந்து கொள்ளாமல் அங்கேயே உட்கார்ந்திருந்தார்.

பருப்பு உருண்டை குழம்பு; மைசூர் ரசம்; முட்டைக்கோஸ் பொரியல், சேப்பங்கிழங்கு வதக்கல்… எல்லாம் கலந்த அறுசுவை உணவு அவரின் வயிற்றுக்குள் செரிமான திரவங்களை திணற வைத்துக் கொண்டிருந்தன.

சபரிநாதன் குறிப்புடன் சிவக்குமாரை நிமிர்ந்து பார்த்தார். அதன் அர்த்தம் – இரவுச் சாப்பாட்டிற்கான குறிப்பை சிவக்குமாருக்கு சொல்லிவிட்டு அவர் எழுந்து கொள்ளப் போகிறார்.

“சிவா…”

“சொல்லுங்க அண்ணாச்சி.”

“ராத்திரிக்கு தாளிச்ச மோரும்,கத்தரிக்கா கொத்சும் செய்திடு…”

“தொவையல் அண்ணாச்சி?”

“பெரண்டைத் துவையல் போதும்.”

சபரிநாதன் சிறிது சிரமப்பட்டுக்கொண்டே எழுந்தார். வரவர கீழே உட்கார்ந்து எழுந்து கொள்வதெல்லாம் கூட கஷ்டமாக இருக்கிறது. எல்லாமே மரகதத்தோடு போய்விட்டதே…!

கூடத்தில் மையமாகத் தொங்கிக் கொண்டிருந்த ஊஞ்சலில் போய் உட்கார்ந்து வலது காலை எந்தி ஊஞ்சலை ஆட்டி விட்டுக்கொண்டார். திம்மராஜபுரம் ஆட்கள் நான்குபேர் படியேறி வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் நால்வரும் சபரிநாதனைவிட வயதிலும் பண வசதியிலும் குறைந்தவர்கள்.

“வாரும்வே இசக்கி… மழை கிழை வருதா பாரு வெளியில…”

அந்த இசக்கி என்ற இசக்கியப்பனுக்கு அவ்வளவாகப் போதாது! ஒரு தரம் வெளியில் எட்டிப்பார்த்துவிட்டு “மழை இல்லீங்களே அண்ணாச்சி” என்றார்.

“நல்லா எட்டிப்பாத்த வாசல! வீட்டுப் பக்கம் நீ வந்து மாசக்கணக்கா ஆகுதேன்னு கேட்டேன்… சரி, சாப்பாடெல்லாம் ஆச்சா?”

“ஆச்சுங்க அண்ணாச்சி, நீங்க சாப்பிட்டாச்சா?”

“ஏதோ சாப்பிட்டாச்சி… இருக்கிற வரைக்கும் ஏதாவது சாப்பிட்டுத்தானே ஆவணும்.” சபரிநாதன் அலுத்துக்கொண்டார்.

சமையல் அறைக்குள் அப்போதுதான் சாப்பிட உட்கார்ந்த சிவக்குமாரின் காதுகளில் இந்தப் பதில் விழுந்தது. எதையாவது சாப்பிடுகிற மனுஷனைப் பார்க்க வேண்டுமே… என்று எண்ணி தனக்குள் சிரித்துக்கொண்டார்.

“முக்கியமான ஜோலியா அண்ணாச்சியைப் பாக்க வந்திருக்கோம்.”

“தெரியுமே நான்குபேர் சேர்ந்து வரும்போதே…”

சபரிநாதனுக்கு அவர்கள் தன்னை வற்புறுத்தி மறுமணம் செய்துகொள்ளச் சொல்வார்களோ என்கிற ஆசை துளிர்விட்டது….

“நேத்து நாங்க மந்திரியைப் பாக்கிறதுக்கு திருநெல்வேலி போயிருந்தோம்.”

“எந்த மந்திரி?”

“நம்ம மந்திரி அந்தோணிசாமி.”

“அவனை ஒரு மந்திரின்னு நீங்கள்ளாம்தான் மெச்சிக்கணும்.”

“ஒங்க மேல அவருக்கு ரொம்ப நல்ல அபிப்பிராயம் அண்ணாச்சி.”

“எதையாவது அசிங்கமா சொல்லிட கில்லிடப் போறேன் மாசானம். ஒன் மதினி செத்தப்ப என் கைப்பட அந்தப் பயலுக்கு கடுதாசி எழுதிப் போட்டேன்வே. ஒத்தவரி லெட்டர் அவன் கிட்டேருந்து எனக்கு வரலவே. அந்த அளவுக்கு மந்திரி வேலை பார்த்துக் கிழிக்கிறானோ சென்னைல..!? எனக்குத் தெரிந்து சோத்துக்கு வழி இல்லாம சீனிக் கெழங்க அவிச்சித் தின்னுகிட்டு இருந்த பய… இவன் எம்புட்டு கட்சிப் பணத்த அமுக்கிவிட்டு எம்புட்டு செலவழித்தான்னு எனக்குத் தெரியாதா?”

வந்தவர்கள் மெளனமாக இருந்தார்கள்.

சபரிநாதனுக்கு இது கூடப்பிறந்த குணம். யாரையாவது திட்ட வேண்டியிருந்தால் “திங்கட்கிழமை குத்தின கம்மங் கஞ்சியை புதன்கிழமை வரைக்கும் வச்சிருந்து சாப்பிடறவன் அவன்… வெறும் காணப்பருப்புத் தொவையலுக்குக் கூட வக்கத்தவன்! ஊளை மோரை ஊத்தி ஊத்திக் குடிக்கிறவன்…!” என்று சாப்பாட்டுடன் தொடர்பு படுத்தியேதான் திட்ட வரும் அவருக்கு.

“சரி, சரி ஏதோ ஜோலியா வந்ததா சொன்னீங்களே?” மூக்குப்பொடியை எடுத்து மூக்கில் வைத்துத் தேய்த்தவாறே கேட்டார்.

“வரப்போற தேர்தல்ல ஒங்களைத்தான் நம்ம தொகுதியில நிக்க வைக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்.”

“எப்படி… எப்படி?” சபரிநாதனின் அந்த மேட்டு விழிகள் ஆச்சர்ய பாவத்துடன் ஒரு நிமிஷம் விரிந்தன.

“மந்திரி அந்தோணிசாமிகிட்டேயும் ரொம்ப எடுத்துச் சொன்னோம். அவுங்களுக்கும் இதுல சம்மதம்தான். நீங்க சரின்னு சொல்லிட்டீங்கன்னா உடனே வேலையை ஆரம்பிச்சுரலாம்…”

“திடுதிப்னு வந்து என்னவே இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுறீய?”

“ஒங்களை கேட்டுட்டுப் போன் பண்ணச் சொல்லியிருக்காரு அந்தோணிசாமி.”

“என் பேரு எப்படி ஞாபகம் வந்திச்சின்னுதான் தெரியாம முழிக்கேன் நான்.”

“முருகபூபதி நீ சொல்லு.” மாணிக்கம் சொன்னார்.

“அது ஒண்ணுமில்லே அண்ணாச்சி, மதினி காலமாகி ஏழெட்டு வருஷம் ஆகியிருக்குமா?”

“இந்த ஆவணி வந்தா அஞ்சி வருஷம் முடியுது.”

“மதினி இருந்தப்பல்லாம் நீங்க இப்படியா அண்ணாச்சி இருப்பீங்க? எங்கே போனாலும் சபைக்கு அலங்காரமா அவுங்களையும் கூட்டிக்கிட்டேதானே போவீங்க, வருவீங்க? அவுங்ககூட ஒக்காந்து இங்கன பேசிச் சிரிச்சீங்கன்னா ஒங்க சிரிப்புச் சத்தம் படித்துறை வரைக்கும் கேக்குமே…?

“இப்ப ஒங்களைப் பாத்தா அதெல்லாம் நீங்கதானான்னு இருக்குங்க அண்ணாச்சி… எப்பவும் ஒத்தையிலேயே போறீங்க வர்றீங்க. ஒத்தையிலேயே வேற இருக்கீங்க.”

“……………………”

“அன்னைக்கி பாக்குறோம்… படித்துறையில் ஒத்தையா நின்னு வானத்தையே வெறிச்சுப் பாத்துகிட்டு இருக்கீங்க…”

சபரிநாதனுக்கு எரிச்சல் வந்தது. ரொம்பவும் அவர் மேல் யாரும் இரக்கம் காட்டி விடக்கூடாது ! அது அவருக்கு பிடிக்காத சாப்பாட்டை சாப்பிடுவது போல இருக்கும். வந்திருப்பவர்கள் ஏதோ பிடிக்காத சாப்பாட்டை அவருக்குப் பரிமாற வந்திருக்கிறார்கள்…! குறிப்பாக இப்போது அதை யார் பரிமாறப் போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை ! சபரிநாதன் முகவாயைத் தடவியவாறு காத்திருக்க, முருகபூபதிதான் மோசமான பத்தியச் சாப்பாட்டை மிகுந்த தயக்கத்துடன் பரிமாறினார் ! அந்த பத்தியச் சாப்பாடு சபரிநாதனின் தொண்டைக் குழியிலேயே நின்றுவிட்டது மாத்திரமில்லை; அவரது மனசையும் அது புண்ணாக்கி விட்டது. – விஷயம் இதுதான்.

சபரிநாதன் மனைவிக்கு போய்ச் சேருகிற வயசே இல்லைதான்! ஆனாலும் போய்ச் சேர்ந்து விட்டார்கள். அதுதான் கடவுளின் விருப்பம் என்றால் மனிதன் என்ன செய்துவிட முடியும்…! எத்தனை நாளைக்குத்தான் சபரிநாதன் இப்படி தனியாக நின்று வானத்தையும், வாழை மரத்தையும் பார்த்தபடி இருப்பார்… அவருக்கோ பிக்கல் பிடுங்கல் கிடையாது; பணமோ வண்டி வண்டியாக இருக்கிறது. ஆயுசும் தீர்க்காயுசு அவருக்கு !

முதலில் அவரை இன்னொரு கல்யாணம் செய்துகொள்ள சொல்லப் போகிறார்கள் என்று நினைத்து ஏராளமான சாப்பாட்டு வரிசையைப் பார்க்கப் போகிற கடோத்கஜன் மாதிரி தயாராகக் காத்திருந்தார்.

அதனால் சபரிநாதன் அவரின் மிஞ்சிய காலத்தை ஊருக்கு நான்கு நல்ல காரியம் செய்துகொண்டு அவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். ஊருக்காகவும் அவருடைய சந்தோஷத்திற்காகவும் கட்டாயம் வருகிற தேர்தலில் அவர் நின்று ஜெயித்துக் காட்டவேண்டும். அதற்காக அவர்கள் எல்லோரும் எந்த ஒத்தாசை செய்யவும் முதல் ஆளாக இருக்கிறார்கள்…

அதனால் இப்படிப் பித்துப் பிடித்தவர் போல் இருப்பதை விட்டுவிட்டு தேர்தல் என்கிற கோதாவில் குதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறார்கள் அவர்கள்! சபரிநாதன் அதற்கு நல்ல பதிலாகச் சொல்லவேண்டும்…!

ஆஹா ! இனிப்பான நெய் மணக்கும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை வாயில் போடப் போகிறார்கள் என்ற நினைப்பில் வாயைத் திறந்தபடி உட்கார்ந்திருந்த சபரிநாதன், ஊளை மோரை ஊற்றியதும் வந்தவர்கள் மேலேயே துப்பி விட்டார்.

“ஊரு பயலுவளுக்கு நாலு காரியம் செய்யறதுக்காக நான் வந்து தேர்தலில் நிக்க முடியாதுவே !” பட படப்புடன் சொல்லிக்கொண்டே சபரிநாதன் ஊஞ்சலில் இருந்து கீழே குதித்தார். அவருடைய முகம் ஏராளமாகச் சிவந்து விட்டிருந்தது.

“அது ஒரு பேச்சுக்குதாங்க அண்ணாச்சி…”

“ஒரு பேச்சுக்கோ, ரெண்டு பேச்சுக்கோ – இது எனக்குப் பிடிக்காத பேச்சுவே.”

“ஒங்களுக்கும் ஒரு நல்லதைச் செய்யணும் என்கிறதுதான் எங்களோட விருப்பம் அண்ணாச்சி..”

“எதுவே எனக்கு நன்மை?” சபரிநாதன் ஆத்திரத்துடன் கேட்டார்.

வந்தவர்கள் மெளனம் காத்தார்கள்.

“ஒத்தையில நின்னு நான் வானத்தையும் பாதாளத்தையும் பாப்பேன்… நீங்க யாருலே என்னை வந்து சொல்றதுக்கு?”

‘யாருலே’ என்று சபரிநாதன் கேட்டது இசக்கிக்கு பயங்கரக் கோபம் வந்துவிட்டது.

“எல… ஏல கீலேன்னு நாக்கு மேல பல்லு போட்டு நீ பேசினா மரியாதை கேட்டுப் போகும்லே…” இசக்கி பதிலுக்கு கத்தினார்.

சபரிநாதன் அந்த நால்வர் கூட்டணியை கழுத்தைப் பிடித்துத்தள்ளி வாசல் வரைக்கும் கொண்டுபோய் வெளியே தள்ளிவிட்டுத்தான் அடுத்த ‘சிமிட்டா’ பொடியை எடுத்து மூக்கில்வைத்து ரோஷமாக இரண்டு தேய்ப்பு தேய்த்தார்.

திம்மராஜபுரம் ஜனம் முழுசும் பார்க்கும்படி அந்த நால்வர் கூட்டணி தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு ஆளுக்கொரு பக்கமாக ஓட்டம் பிடித்தது. அவர்கள் ஓடிப்போய் நான்கு மணி நேரத்திற்கு மேல் ஆகியும்கூட சபரிநாதனின் நாடித் துடிப்பின் வேகம் குறைந்த பாடில்லை! அந்த வேகத்தில் மூக்குப்பொடியை தேய்த்து தேய்த்து அவருடைய மூக்குநுனி குடகு ஆரஞ்சுப் பழம்போல சிவந்து விட்டிருந்தது.

இப்படியொரு கோபம் வந்து விடுகிற தருணங்களில் சபரிநாதனுக்கு செத்துப்போன பெண்டாட்டியின் மேலேயும் அசாத்திய கோபம் வந்துவிடும். ‘பாதகத்தி’ இப்படி விட்டுட்டுப் போயிட்டாளே என்று… இது கிட்டத்தட்ட அப்படியொரு தருணம்…!

என் பெண்டாட்டி மண்டையைப் போட்டுட்டாளாம், இவனுங்க ஊருக்கு நான் நாலு நல்ல காரியம் பண்ணனுமாம்! எதுக்குலே?!

கோபத்துடன் செருப்பை மாட்டிக்கொண்டு சபரிநாதன் தெருவில் இறங்கி நடந்தார்.

Print Friendly, PDF & Email
என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *