தத்து, ஆணா பெண்ணா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 4,092 
 
 

அரவிந்தனுக்கு நாற்பது வயது; மனைவி வனிதாவுக்கு முப்பத்தைந்து.

திருமணமாகி பதினைந்து வருடங்களாகக் குழந்தை கிடையாது. பணம், சொத்துக்கள் ஏராளமாக இருந்தாலும் ஒரு மழலைச் செல்வத்திற்காக அவர்கள் ஏங்கினர்.

தற்போது இருவரும் ஒரு பிரபல டாக்டர் முன் அமர்ந்திருந்தனர்..

“டாக்டர் என் பெயர் அரவிந்தன். எங்களுக்கு கல்யாணமாகி பதினைந்து வருடங்கள் ஆகிறது. முதல் ஐந்து வருடங்கள் ரொம்ப ஜாலியாக இருந்து விட்டோம். அதன்பிறகு நாங்கள் ஒரு குழந்தை வேண்டும் என்று முயன்றபோது அந்தப் பாக்கியம் எங்களுக்கு இன்னமும் கிடைக்கவில்லை… போகாத கோயில் இல்லை; குளிக்காத கடல்கள் இல்லை; இருக்காத விரதங்கள் இல்லை… இப்போது டாக்டர் டாக்டராக தேடிச் செல்கிறோம்.” என்று சொல்லி விரக்தியாகச் சிரித்தான் அரவிந்தன்.

“………………”

“எங்களை யார் பார்த்தாலும் ஏதாவது விசேஷம் உண்டா? என்று கேட்பது போலவே தோன்றுகிறது. இதனாலேயே கல்யாணம், காதுகுத்து, சீமந்தம், வளைகாப்பு என்று எதற்குமே இவள் போவதில்லை டாக்டர். இதனாலேயே நானும் எங்கும் வெளியே செல்வதில்லை…”

“புரிகிறது அரவிந்தன். குழந்தைப்பேறு இல்லை என்றால், ஆண்களைவிட பெண்கள்தான் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். எதிர்வீடு, பக்கத்துவீடு குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம் ஏக்கம் பொங்கும். அவர்கள் என் குழந்தை இப்படிப் படிக்கிறான்; அப்படி விளையாடுகிறான் என்று சொல்லும்போது துக்கம் மனசைப் பிழியும். சொந்தக்காரர்களுக்கு பதில் சொல்லி மாளாது…”

“அது மட்டுமல்ல டாக்டர்… மறைமுகமாக மலடி, ஆண்மை இல்லாதவன் என்ற பேச்சுக்களைக் கேட்டு கேட்டு, வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் மனநிலை ஏற்படுகிறது டாக்டர்…”

“புரிகிறது அரவிந்தன்…”

“இவள் ஒருநாள் என்னிடம் ஒரு கவிதை எழுதிக் காண்பித்தாள் டாக்டர். அதில் “நான் இறந்துவிட்டால்; என்னை எரித்து விடாதீர்கள்; தயைசெய்து புதைத்து விடுங்கள். அப்போதாவது என் வயிற்றில் புழுக்கள் நெளியட்டும்…” இதைப் படித்ததும் நான் கதறி அழுதேன் டாக்டர்.”

“வேதனையான விஷயம்தான் அரவிந்தன். நான் அடுத்ததாக உங்கள் விந்தை பரிசோதித்துப் பார்க்க வேண்டும். பரிசோதனையின் முடிவில் அதன் வீரியத்தைக் கணக்கிட்டு என்னால் உங்களிடம் குழந்தையை உண்டாக்கும் சக்தி இருக்கிறதா, இல்லையா என்பதை நான் தீர்மானிக்க முடியும்.”

“சரி டாக்டர். நான் என்ன செய்ய வேண்டும்?”

“நான் இப்போது ஒரு ஸ்டேரிலைஸ் செய்யப்பட்ட ஒரு டெஸ்ட்டியூப் தருகிறேன்… அதில் உங்களுடைய செமன் எடுத்துவர வேண்டும். இந்த வாரத்தில் எப்போது வேண்டுமானாலும் அதை என்னிடம் கொடுங்கள். நான் இரண்டு நாட்களில் முடிவைச் சொல்லி விடுகிறேன்.”

டாக்டர் டெஸ்ட்டியூப் எடுத்து வந்து கொடுத்தார். அதை அரவிந்தன் பத்திரமாக எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.

அரவிந்தன் தன்னுடைய செமன் எடுப்பதற்குள் உடம்பு வியர்த்து விட்டது.

அடுத்த இரண்டு நாட்களில் டாக்டரிடம் கொண்டுசென்று கொடுத்துவிட்டு வந்தான்.

மூன்றாவது நாள் டாக்டர் போன் பண்ணி அரவிந்தனை மட்டும் வரச் சொன்னார். டாக்டரிடம் போனான்.

“லெட் மி பி ஹானஸ்ட் டு யூ மிஸ்டர் அரவிந்தன். உங்கள் செமனில் கவுன்ட் ரொம்பக் கம்மியா இருக்கு… இம்மாதிரி சிலருக்கு ஏற்படுவதுண்டு. பொதுவாகவே இம்மாதிரி விஷயங்களில் ஆண்களிடம்தான் குறைபாடுகள் அதிகம். வயதுக்கு வந்தவுடன் பெண்களின் ஓவரி எப்போதும் கரு முட்டைகளுடன் தயாராகவே இருக்கும், ஒரு நல்ல விளை நிலம் மாதிரி. ஒழங்கான விதை போட்டால்தான் அந்த நிலம் விளைநிலம். அது மாதரிதான் உங்கள் நிலையும், உங்களிடம் தரமான விதைகள் இல்லை என நீங்கள் பொருள் கொள்ளலாம்…”

அரவிந்தனுக்கு முகம் சுருங்கியது.

“கவலைப் படாதீர்கள். கால விரயம் செய்யாமல் ஒரு ஆரோக்கியமான குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளுங்கள்… அதைக் கொஞ்சிக் கொஞ்சி ஏராளமான அன்பு செலுத்துங்கள்; அதனிடம் விளையாடுங்கள்; கல்வி புகட்டுங்கள்; சமுதாயத்தில் ஒரு பொறுப்புள்ள பிரஜையாக வளருங்கள்… உங்கள் வீட்டில் சந்தோஷம் பீறிடும்.”

“புரிகிறது டாக்டர்… ஆண் குழந்தையா, பெண் குழந்தையா?”

“அதை உங்கள் மனைவியுடன் விவாதித்து நீங்களே முடிவு எடுங்கள்…”

அரவிந்தன் வீட்டிற்கு சோர்வுடன் திரும்பினான். வனிதா ஆர்வத்துடன் காத்திருந்தாள்.

“டாக்டர் என்னங்க சொன்னாரு?”

அரவிந்தன் தன் விந்துக் குறைபாடு பற்றி மனைவியிடம் நேர்மையாக உண்மையச் சொன்னான். மனைவியிடம் எதையும் மறைத்து அவனுக்கு பழக்கமில்லை.

“பரவாயில்லைங்க…. ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க நமக்கு வசதியையாவது இறைவன் கொடுத்திருக்கிறானே…. அதற்காக அவனுக்கு நன்றி சொல்லுவோம்…” அவள் குரல் உடைந்தது.

“சரி உனக்கு என்ன குழந்தை வேண்டும் வணி?”

“எனக்கு பையன்தான் வேண்டும் அரவிந்த்…”

“ஏன் ஆண் குழந்தை வணி?”

“என்னங்க இப்படிக் கேக்கறீங்க? ஆண் குழந்தைதான் அம்மாவிடம் ரொம்பப் பாசமாக இருக்கும். நாம வளர்க்கும்போது அவனை வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வளர்க்க வேண்டாம். அவனைப் பொத்திப் பொத்தி பாதுகாக்க வேண்டாம். ஆண் என்றால் வீட்டிற்கே ஒரு கம்பீரம். அப்புறம்…”

“அப்புறம்?”

“ஒரு சின்ன ஆண் குழந்தை குஞ்சைத் தூக்கிண்டு வீட்டில் குறுக்கே நெடுக்கே ஓடுவதைப் பாத்தாலே ஒரு அழகுதான்…”

“அடச் சீ நாயே…”

அவளைக் கட்டியணைத்தான்.

“ஆனால் எனக்குப் பெண் குழந்தைதான் வேண்டும் வணி.”

“அதுசரி ஏன் பெண் குழந்தை?”

“பெண்கள்தான் குடும்பத்தின் ஒளி விளக்குகள்; மங்களகரமானவர்கள்; அவர்கள் கெளரவத்திற்கு உரியவர்கள்; பெண்களுக்கும் செழிப்புக்கும் எந்தப் பேதமும் இல்லை…நம்முடைய பெருமைகளை; கல்ச்சரை, தாத்பர்யங்களை திருமணத்திற்கு பிறகு அடுத்த வீட்டிற்கு கொண்டு செல்பவள்…”

“ம்… அப்புறம்?”

“பெண்கள் கெளரவமாக நடத்தப் படுகின்ற இல்லங்களில் தெய்வங்கள் மகிழ்கின்றன. இல்லையெனில் எல்லாக் காரியங்களும் பயனற்றுப் போகின்றன. பெண்கள் துன்பத்திற்கு ஆளாகாத இல்லங்களில் நலம் கொழிக்கிறது; பெண்கள் துன்பத்திற்கு உள்ளாகிற இல்லங்களில் நாசம் விளைகிறது.. பெண்கள் குடியிருக்கும் வீட்டில்தான் லட்சுமி கடாட்சம் தாண்டவமாடும்…”

“அடேங்கப்பா இவ்வளவு இருக்கா. சரி ஒப்புக் கொள்கிறேன். ஒரு பெண் குழந்தையைத்தான் நாம உடனே தத்து எடுக்கப் போகிறோம்.”

அன்று இரவு இருவரும் அந்த வீட்டிற்கு வரப்போகும் புதிய மகாலக்ஷியை எதிர்பார்த்து நிம்மதியாகத் தூங்கினர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *