தத்துப் பொண்ணு…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 22, 2020
பார்வையிட்டோர்: 3,967 
 

அவள் எங்கள் வீட்டுப் படியேறியதும்….

“மருமகன் பாராயினி…! மகள் பிரியாரிணி…! மந்தாரை வந்து விட்டாள். பராக்..! பராக்..!!” – என்று கூவ ஆசை.

சிரமமப்பட்டு அடக்கிக்கொண்டு என் மனைவி மங்கம்மாளைப் பார்த்தேன்.

அவள் முகத்தை முறுக்கித் திருப்பிக் கொண்டாள்.

மந்தாரை எங்கள் தெரு. பத்து வீடுகள் தள்ளி கடைசி வீடு. என் மனைவிக்கு உதவி, ஒத்தாசைகள் செய்யும் சாக்கில் பேச்சுத் துணை தேடி வந்துவிடுவாள். சரியான தொணதொணப்பு..!

ஆனால்… கள்ளங்கபடமில்லாத ஐம்பது வயது மனுசி .

கணவன், மனைவி, நான்கு பிள்ளைகளில் கடைசி பிள்ளை இவளோடு இருக்கிறான். அவனுக்கு ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறான்.

சின்னக் குடும்பம். வேறு எந்த அக்கு தொக்கு வேலைகளும் கிடையாது. ஆகையால், சமையல் வேலை முடித்து மகனை வேலைக்கு அனுப்பிவிட்டு ,சாப்பிட்டுவிட்டு சரியாகப் பத்து மணிக்கு எங்கள் வீட்டிற்குப் பேச்சுத் துணைக்கு வந்து விடுவாள். அப்புறம் மதியம் சாப்பிடப் போவாள். சிறு தூக்கம் போடுவாள். மாலை நான்கு மணி வாக்கில் திரும்பி வந்து ஐந்து, ஐந்தரை வரை பேசிவிட்டு வீட்டிற்குச் செல்வாள். ஆறு மணிக்கு மகன் வருவான். அப்புறம் வரமாட்டாள்.

மறுநாள் காலையிலிருந்து தொடக்கம். இது தினப்படி வழக்கம்.

அவளுக்கு எப்போதும் மருமகனைப் பற்றி, மகளைப் பற்றித்தான் பீற்றி , ஓயாத பேச்சு. மகளை விட மருமகன் பேச்சு, பெருமைதான் அதிகமாக இருக்கும். அவள் உடனிருக்கும்போது அவள்தான் பேசுவாள் நாங்கள் பேச முடியாது.

அவளோ நாங்களோ எந்த பேச்சு எடுத்தாலும்…அதில் தன் மகள், மருமகனை இணைத்துக் கொள்ளவில்லை என்றால் அவளுக்குத் தூக்கம் பிடிக்காது.

நாங்கள் பேசாவிட்டாலும் அவள் அவர்களைப் பற்றி பெருமையாகப் பேச ஆரம்பித்து விடுவாள். இடையில் அவர்கள் குழந்தைகள் என்று….பேரன், பேத்திகளும் தொற்றிக் கொள்ளும் .

எத்தனை நேரம்தான் கேட்பது..? எவ்வளவு நாட்கள்தான் பொறுப்பது..? அதிகம் எதுவானாலும் அதுவே நஞ்சல்லவா..? காதுகளைப் பொத்திக் கொள்ள மனசு துடிக்கும். பாவம் அவள் மனசு வலிக்கும் என்பதால்… எங்களுக்குப் பல்லைக் கடித்துக் கொள்வதைத்தவிர வேறு இல்லை.

இவ்வளவிற்கும் இத்தனை ஏற்றிப் போற்றிப் பேசும் மகள்… இவள் சொந்த மகள் இல்லை. வளர்ப்பு மகள். தத்துப்பெண் !

மந்தாரைக்கு நான்கும் ஆண் குழந்தைகள்.

மூத்தவன் ஆந்திராவில் இருக்கிறான்.

இரண்டாமானவன் கேரளாவில் இருக்கிறான்.

மூன்றாவது பையன் கர்நாடகாவில் இருக்கிறான்.

கடைசி பையன் மட்டும் இவளோடு இருக்கிறான்.

மற்ற மூவரும் திருமணமாகி குழந்தை குட்டிகளுடன் பிழைக்கச் சென்ற இடங்களிலேயே சுபிட்சமாக வாழ்கிறார்கள். கடைசி பையனுக்கு வருவாய்க்கு ஒரு கம்பெனியில் வேலை என்றாலும் இன்னும் திருமணமாகவில்லை. பெண் கிடைக்கவில்லை.

மந்தாரைக்குத் தனக்கொரு பெண் பிள்ளை வேண்டுமென்பதற்காக தன் சொந்த தங்கையின் மகளைத் தத்தெடுத்துக் கொண்டாள்.

அவளுக்கு ஐந்தும் பெண் குழந்தைகள். அடுத்து ஆண், அடுத்து ஆண் என்கிற ஆசையில் வரிசையாக பெண்கள். ஒரே ஊர். அடுத்தடுத்த தெரு என்பதால்…. தன் ஏக்கத்தைப் போக்கவும், தங்கையின் பாரத்தைக்குக் குறைக்கவும் மந்தாரை இந்த ஏற்பாட்டைச் செய்து கொண்டாள்.

பெண்ணை கண்ணுக்குக் கண்ணாக வளர்த்தபோது கூட மந்தாரை தன் தத்து மகளை பற்றி இப்படி வாய் ஓயாமல் பேசியது கிடையாது. பெண்ணைக் கட்டிக் கொடுத்து மருமகன் வந்ததும்தான் இப்படி மாறிவிட்டாள்.

ஏன் இப்படி..? மகள் பாசமா…? !….

அப்படி என்றால் அவளை வளைக்கும்போதே இது பீரிட்டிருக்க வேண்டும். திருமணமான பிறகு… மாப்பிள்ளையும் சேர்த்துப் பீற்றக் காரணம்..? அதுவும் மருமகனைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடக் காரணம்….? – இப்படி கணவன் மனைவி நாங்கள் யோசிக்காத நாளில்லை.

“ஏன் மங்கை ! மந்தாரைக்கு மருமகன் மீது மையலா…?” ஒரு நாள் விளையாட்டாக என் மனைவியிடம் வார்த்தைகளை விட்டேன்.

“வாயைக் கழுவுங்க. வயசான பொம்பளை..”சொன்னாள்.

“வயசானால் ஆசை வரக் கூடாதோ…?! ”

“அம்பது வயசு. எல்லாம் அடங்கிப் போச்சு.”

“வந்து…..”

“ச்ச்சூ…!” அடக்கினாள்.

மந்தாரை ஐம்பதைத் தொட்டாலும் நல்ல கட்டான மேனி. கலையாத உடல். நோய்நொடி இல்லாத திடகாத்திரமான தேகம். தலையில் ஒரு நரை கிடையாது. சாயப் பூச்சு இல்லை. சீவி சிங்காரித்துக் கொண்டு கிளம்பினால் சின்னப் பெண் தோற்றாள். இவளுக்கு இத்தனைப் பிள்ளைகள், பேரன், பேத்திகள் இருக்கிறார்கள் என்று சத்தியம் செய்து சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள்.

மந்தாரைக்கு மருமகனைக் கவனிப்பதில் தனி அக்கறை. அவனுக்குப் பெண்ணை சோறுபோட அனுப்பமாட்டாள். மாறாக…. இவளே .. பணிவாய், குழைவாய்… பரிமாறுவாள். எதுவும் குறை வைக்காமல் பார்த்துப் பார்த்துப் பரிமாறுவாள். அவனுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காதென்று இவளுக்குத் தெரியும்.

மருமகனை அழைத்து , அன்றைக்குச் சாப்பாட்டிற்கு வரவில்லை என்றால்… இவளுக்கு அது துக்க நாள்.

“இந்த மனுஷன் ஏன் இப்படி பண்றாரு…?” புலம்பித் தள்ளுவாள்.

சமயத்தில் இவள் அன்பு, அக்கறை , உபசரிப்பு…எல்லாமே மகளுக்கு முகத்தைச் சுளிக்க வைக்கும்.!

மந்தாரை மகனுக்குச் செய்யமாட்டாள். மருமகனுக்கு ஜட்டியைத் தவிர மற்றதெல்லாம் துவைத்துப் போடுவாள்.

“வேலைக்குப் போற மனுஷன் இப்படியா அழுக்கோட போறது..? பாவம் அவள்தான் என்ன செய்வாள்..? ரெண்டு புள்ளைங்களையும் வச்சுக்கிட்டுத் திண்டாடுறாள்…”துவைக்கும் போதே வாயிலிருந்து வார்த்தைகள் கொட்டும்.

வார்த்தைகள் அவளுக்குச் சமாதானமா..? இல்லை பார்க்கும் மற்றவர்களுக் சமாதானமா, தான் மருமகனுக்குச் செய்வதைக் காட்டும் கண் துடைப்பா என்பதெல்லாம் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

பெண்ணின் வீடு எங்கள் கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தள்ளி நகரத்துப் பக்கம்.

இவள், அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவாள். பேரப்பிள்ளைகளைத் தூக்கி வந்து மாலையில் கொண்டு விடுவாள்.

இங்கிருந்து நியாயவிலைக் கடைகளில் கிடைக்கும் சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற பொருட்களை வாங்கித் தூக்கிச் செல்வாள்.

இரு நாட்களுக்கு ஒரு முறையாவது அவர்கள் முகத்தில் விழிக்காவிட்டால் இவளுக்குத் தூக்கம் பிடிக்காது.

புலம்பல்! நாங்கள் செத்தோம் !! .

‘ சரி. பெற்ற மகன், மருமகள்களை விட இவள் மகள் மீதும் மருமகன் மீதும் ஏனிப்படி பாசமாக இருக்கிறாள்…? தப்பான உறவிற்கோ, தவறான எடைக்கோ இடமில்லை. இருந்தும்…. இவள் ஏன் இப்படி அவர்கள் மீது அபரிதமான ஆசை, பாசங்களை வைத்திருக்கிறாள். இன்றைக்கு இதற்கு விடை வேண்டும்..!’ – என்று நினைத்துக் கொண்டு சமைலறைக்குச் சென்றேன்.

இப்போது அங்குதான் மந்தாரை என் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

“இப்படித்தான் மங்கை. என் மருமகன் நேத்திக்குத் திடுதிப்புன்னு வந்ததும் நான் ஆடிப்போயிட்டேன்…..”என் மனைவி ஏதோ சொல்லி இருக்க… இவள் தன் வழக்கமான ஆலாபனைக்கு வந்து விட்டாள்.

கேட்ட எனக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது. விடை வேண்டுமே…! அடக்கிக் கொண்டேன்.

“புள்ளய வேற தூக்கிக்கிட்டு வந்தாரா..? எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை….”அவள் தொடர….

“ஏன் மாமி ! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் உங்க மகள், மருமகன் பேச்சுதானா…?” அடக்க முடியாமல் கேட்டு விட்டேன்.

மந்தாரை திடுக்கிட்டுத் திரும்பி முகம் மாறி என்னைத் திகைப்பாய்ப் பார்த்தாள்.

“ஆமாம் மாமி. நீங்க ஏன் அவுங்களைப் பத்தியே அதிகமா பேசுறீங்க…?” தன் பங்கிற்கு என் மனைவியும் அடுத்த சூட்டுகோளைச் சொருகினாள்.

பாவம். மந்தாரையின் முகம் இருண்டு போனது.

‘சரி. இனி இங்கு ஒரு நிமிடம் இருக்க மாட்டாள். விறுக்கென்று எழுந்து போய்விடுவாள் ! என்று எதிர் பார்த்தேன். இல்லை. மாறாக…மந்தரை…. முகம் பம்மினாள்.

“என்ன மாமி..?” நான் பதறி போய் அருகில் அமர்ந்தேன்.

“என்ன மாமி..?” கேட்டு மங்கம்மாளும் அமர்ந்தாள்.

“நீங்க சென்றது நிஜம். நான் பேசுறது அதிகம்தான். !..”கரகரத்தாள்.

“மாமி…”

“ஏன் பேசுறேன்…?… எதுக்குப் பேசறேன்.?!… தத்துப் பெண்ணை ஆசாபாசமாய் வளர்க்கலைன்னு அக்கம் பக்கம் மட்டுமில்லாம பெண்ணைத் தத்துக் கொடுத்த என் தங்கையும் தப்பா நினைக்கக் கூடாது என்கிற பயம். அவளைக் கொண்டாடிவிட்டு மருமகனைக் கொண்டாடலைன்னா…தன் சொந்த மருமகனாய் இருந்தால் இப்படி பாராமுகமாய் இருப்பாளான்னு மகள், மத்தவங்க, பெத்தவங்களும் நினைக்கக் கூடாது என்கிற எச்சரிக்கை. அப்புறம்… அப்படியே பேரன், பேத்திகள்……”அதற்கு மேல் பேசமுடியாமல் அழுதாள்.

‘எவ்வளவு நுணுக்கமாக சிந்தித்து நடக்கிறாள்..! என்று கணவன் மனைவி எங்கள் இரண்டு பேருக்குமே வியப்பு திகைப்பு.

ஒருவரை ஒருவர் பார்த்தோம்.

“மாமி. நீங்க சொல்றது ரொம்ப சரி. !” என்று நானும் மங்கம்மாளும் போட்டிப் போட்டுக் கொண்டு அவள் கண்ணீரைத் துடைக்க…

மந்தாரை முகத்தில் அசாத்தியமான வெளிச்சம். !

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *