கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2019
பார்வையிட்டோர்: 9,017 
 
 

இந்த வாட்ஸாப் பேஸ்புக் இதுல வர ஜோக்ஸ் எல்லாம் யாரோட வாழ்க்கையிலோ நடந்து இருக்குமானு ரொம்ப நாளா ஒரு சந்தேகம், அதுல ஒண்ணு என் வாழ்க்கைல நடக்கும் வரை. .

படிக்கும் பொழுது இருக்கும் ஹாஸ்யம் நிஜத்துல நடக்கும் போது அவ்வளவு வேடிக்கையாக இல்லை என்பது தான் உண்மை.

நான் விஸ்வா. ஒரு சாப்ட்வே என்ஜினீயர். இது சொன்ன உடனேயே என்னோட சொந்த வாழ்க்கை எவ்ளோ சூனியம்னு உங்களுக்கு புரிஞ்சுப் போய் இருக்கும். வேலை நேரம் ஒன்பது மணி நேரம். வேலையை கண்டிப்பா அதுக்குள்ள முடிக்க முடியாம அதிகப்படியா ஒரு ரெண்டு அல்லது மூணு மணி நேரம். அடிச்சு புடிச்சு வீட்டுக்கு ஓடி வந்தாலும் ஓவர்சீஸ் கிளையண்ட் கால் அட்டென்ட் பண்றதுல ஒரு ரெண்டு மூணு மணி நேரம், இப்படியே பாதி, வீட்டுக்காரி தன்னை கவனிக்காத புருஷனுடன் போராடும் கஷ்டத்தைப் பற்றி புலம்புவதை கேட்பதில் மீதினு வாழ்க்கை ரொம்ப கஷ்டம்.

சனி ஞாயிறு வந்தா ஒரு பத்து மணி வரை தூங்கி, டிவி பார்த்து, போன்ல வர மேசேஜஸ் எல்லாம் படிச்சு, சாப்பிட்டு, திருப்பி தூங்கி சந்தோஷமா இருக்கணும் அப்படினு நினைக்கும் போது தான் மனைவிக்கு அவுட்டிங் போகணும்னு ஆசை வரும். கொஞ்சம் கெஞ்சி, கொஞ்சி ஒரு நாள் டயம் வாங்கி, நாளைக்கு னு சொல்லி பணிய வெச்சா, அடுத்த நாள் பைய ரெடியா வெச்சுகிட்டு கிளம்பி நிப்பா.

இந்த வாரம் வேண்டாம் நெஸ்ட் வீக் கண்டிப்பா போகலாம்னு சொல்லும் போது அவ முகத்துல ஒரு அக்னி குண்டம் எரிஞ்சு அணையும் பாருங்க. வீடே பத்திக்கிட்டு எரியப் போகுதோன்னு ஒரு பயம் வரும். ஆனாலும், அன்னிக்கி பூரா தின்னுட்டு தூங்க போற சொகத்த நெனச்சு, எத வேணா எதிர்கொள்ளலாம்னு வீரமும் சேர்ந்து வரும்.

என் மனைவி நிர்மலா ஒரு ஹோம் மேக்கர் . அது அவளா விருப்பப்பட்டு எடுத்த முடிவு. என் பங்கு அதுல எதுவுமே கெடையாது. ரெண்டு பேரும் வேலைக்கு போனா குடும்ப பொறுப்பை கவனிக்க ரொம்ப கஷ்டப்படணும். அவ அம்மா ஒரு பெரிய கார்பொரேட் ல நல்ல போஸ்ட்ல இருந்து ரிட்டையர் ஆனவங்க. படிக்கும் காலங்களில் அம்மாவின் அருகாமைக்கு ஏங்கி தனியே வேலை ஆட்களுடன் இருந்த வருத்தம் அதிகம். இவளும் மேத்ஸ் மேஜர். எம்.பில் . வேணும்னு தோணும் பொழுது வேலைக்கு போறேன். இப்போ வேண்டாம்னு என்கிட்டே ரொம்ப காதலுடன் சொன்ன பொழுது, வேலை விட்டு எத்தனை மணிக்கு வந்தாலும் சுட சுட சோறு போடா ஆள் இருக்குனு மனசு பட்ட சந்தோஷத்தை மறுக்க முடியாது தான்.

திருமணம் ஆகி மூன்று வருடம். காலச்சக்கரம் வேகமா ஓடுது , ஆனாலும் வாழ்க்கை தரம் நின்ற இடத்துலே நின்றது போல ஒரு மனப்பிரமை. அவளுக்கு ரொம்ப போர் அடித்தது. எவ்வளவு நேரம் சமைக்க முடியும், துணி துவைக்க வீடு சுத்தம் செய்ய என்று வேலை ஆட்கள் இருந்ததால், ஒரு குழந்தை இருந்தால் பொழுது போகும் என்று அவளுக்கு ஒரு எண்ணம். முதல் இரண்டு வருடங்கள் இதைப் பற்றி பெரிதாக இருவரும் கவலைப் பட வில்லை. நடக்கும் பொழுது நடக்கும் என்று காத்திருந்தோம், மூன்றாம் ஆண்டு முடிவில் அவளுக்கு கொஞ்சம் கவலை. எந்த காரணமும் இல்லாமல் கருத்தரிக்க முடியாத கவலை தொற்றிக் கொண்டது.

“விஸ், இந்த சாட்டர்டே வேற எந்த வேலையும் வெச்சுக்காத. நாம வெளிய போறோம்”, அடுத்த நாள் மீட்டிங் நினைப்பில் ப்ரெசென்ட்டேஷன் ரெடி செய்துக் கொண்டு இருந்த நான், அவளை திரும்பிப் பார்த்து புன்னகைத்துத் தலையை ஆட்டினேன்.

கொஞ்ச நேர மௌனம். “என்ன நீ, எங்கனு கூடக் கேக்க மாட்டியா?’, குரலில் கொஞ்சம் காரம் .

“இரும்மா இந்த வேலையை ஒரு அஞ்சு நிமிஷத்துல முடிச்சிட்டு வரேன். முக்கியமான மீட்டிங். இது சரியாய் செஞ்சா அடுத்த லாட் ஆப் ப்ரோமோஷன்ல என் பேர் இருக்கும் “, அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டேத் தான் பேசினேன். இந்த மூன்று வருடங்களில் நான் கற்றுக் கொண்ட முக்கியமான பாடங்களில் இது ஒன்று. கையில் எந்த வேலை இருந்தாலும் மனைவி ஒரு விஷயம் பேசும் பொழுது கண்டிப்பாக அவள் முகத்தை மட்டும் தான் பார்க்க வேண்டும். முகத்தை சீரியஸ் ஆக வைத்துக் கொள்ள வேண்டும். புருவம் சுருக்கி அவள் மீது அல்லாமல் வேறு எங்கும் நமக்கு கவனம் இல்லை என்றுக் காட்டிக் கொள்ள வேண்டும். புத்தி எங்கு வேண்டும் என்றாலும் சுற்றி வரலாம். பேசியது புரியாதது போல விழித்து அட்ஜஸ்ட் செய்யலாம். நாம ஒரு மக்குனு அப்போ அவங்க ப்ரூவ் பண்ணி நம்மள பார்த்து எகத்தாளமா ஒரு சிரிப்பு சிரிச்சு, திருப்பி விளக்கிச் சொல்லுவாங்க. பட் செகண்ட் தடவை கண்டிப்பா கவனிச்சுத் தான் ஆகணும்.

“நீ அந்த செகண்ட் விண்டோல ஓபன் பண்ணி வெச்சு இருக்குற பேஸ்புக் பேஜ மூடிட்டு செஞ்சா இந்த வேலைய எப்போவோ செஞ்சு முடிச்சு இருக்கலாம். வேல செய்யும் பொழுது என்ன சாட்டிங்?”. காரம் கொஞ்சம் கூடியது.

“ஏய். நானே இப்போ ஒரு பத்து நிமிஷம் முன்னாடி தான் ஓபன் பண்ணினேன். கரண் எதோ மெசேஜ் அனுப்பி இருக்கான். அடுத்த மாசம் வரான். அது விஷயமா சாட். உனக்கு நாள் புல்லா டயம் இருக்கு. நான் ஆபீஸ் விட்டு வந்து இப்போது தானே பாக்கறேன்.” இது சொல்லும் பொழுது நான் அவளை பார்க்கவில்லை. முதல் மிஸ்டேக்.

” பத்து நிமிஷம்? நான் அரை மணி நேரம் முன்னாடி செக் பண்ணும் போது நீ ஆன்லைன்ல இருக்கறத பாத்தேன். எதுக்கு பொய் சொல்றே?”

“நீ என்ன செக் பண்றியா? ஆன்லைன்ல இருந்தா சாட் பண்றேன்னு அர்த்தமா? வெறும லாக் இன் பண்ணி வெச்சு இருந்தேன்”, இப்போதும் அவள் முகம் பார்க்கவில்லை. இரண்டாவது மிஸ்டேக் .

“உன்ன நான் எதுக்கு செக் பண்ணனும். நீ தான், நான் நாள் புல்லா நான் இதைத் தான் பண்ணறேன் னு சொல்றே. நான் எதுவும் வேல வெட்டி இல்லாம இருக்கேனு குத்திக் காட்டறியா ?

உன் தட்டுல சோறு தானவா வந்து விழுது? வீடு தானே தன் வேலை எல்லாம் பாத்துக்குதா? நான் என்ன பேசறேன்னு ஒரு நிமிஷம் காது குடுத்துக் கேக்க உன்னால முடியல”,

அவசரமாக நிமிர்ந்து பார்த்தேன். என்ன இது சாதாரணமாக தொடங்கிய பேச்சு எங்கோ போகுது.

நான் ஒரு நாளும் அவளை சும்மா இருப்பதாக சொன்னதே கெடையாது. இது என்ன புதுசாக. கொஞ்சம் திகைப்பாக இருந்தது.

“சரி, சொல்லு . எங்க போறோம்?” லேப்டாப்பை மூடி வைத்து விட்டு அவள் பக்கம் திரும்பி உட்கார்ந்தேன்.

அவள் முகம் கோபத்தில் சிவந்து இருந்தது.

“ஒரு டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட். ஒரு குழந்தை வேணும்னு எனக்கு ஆசை. உனக்கு உன் வேலை, லேப்டாப் இருந்தா நான் கூட வேண்டாம். அது பத்தி பேச ஆரம்பிச்சேன். இப்போ எனக்கு மூட் போச்சு. நீ உன் வேலைய பாரு”, கடுப்பாகச் சொன்னவளிடம் என்ன சொல்லுவது என்று கொஞ்சம் யோசித்தேன். அவள் மனசு புண்படாது எதாவது சொல்லணும். அவள் எதோ சும்மா இருப்பதாக நான் சத்தியமாக நினைக்கவில்லை னு அவளுக்கு புரிய வைக்கணும் என்று நினைத்து பேச ஆரம்பித்தேன்.

“எதுக்கு இப்போ டாக்டர் எல்லாம்? இதெல்லாம் இயற்கையா அமையும். நேரம் வரணும். இதுல ஸ்ட்ரெஸ் வேண்டாம். உனக்கு வீட்ல பொழுது போகல. அதான் மனச போட்டுக் கலங்க விடற. இது ஒரு குறை இல்ல. நீ வேணா பேசாம ஒரு வேலைக்கு அப்ளை பண்ணு . ஒரு சேஞ்சு உனக்கும்.”

கொஞ்ச நேரம் கடிகார சத்தத்தை தவிர ஒன்றுமே இல்லை. தூரத்தில் ஒரு பல்லி கவுளி கேட்டது. எனக்கு கெட்ட காலம் தொடங்குற கவுளி .

“ஹ்ம் . எனக்கு பொழுது போகலைனு உன் கிட்ட நான் சொன்னேனா? இப்போ குறைங்கிற வார்த்தை இதுல எங்க வந்துச்சு? ஒரு டாக்டர் பாக்கணும் . எதுனால டிலேனு கேட்டா ஒரு தெளிவு கிடைக்கும். வாழ்க்கைமுறை மாற்றம் எதாவது தேவைப்பட்டா செஞ்சுக்கலாம். ஒரு அவார்னேஸ் , அவ்ளோதான். இது குறைனு உன் மனசுல இருக்கு. நீயே சொல்லிடு. குறைனு சொன்னியே, அது என் கிட்ட இருக்கா, இல்ல உன் கிட்டயா? நீ என்ன நினைக்கிற?”, சன்னமான குரலில் அவள் பேசிய வார்த்தைகளின் கடுமை எனக்கு புரியாமல் இல்லை. என்ன பதில் சொலவ்து என்பது தான் தெரியவில்லை.

ஒன்றும் பேசாமல் திரும்பிப் படுத்துக் கொண்டாள் . எனக்கு வேலை முடிக்க வேண்டிய கட்டாயம். சரி காலையில் பேசிக் கொள்ளலாம். விட்டு விட்டேன். வேலை முடித்து லேப்டாப் மூடிய போது மணி ஒண்ணு . தண்ணிக் குடிக்க எழுந்து மெதுவாக அவள் பக்கம் இருந்த வாட்டர் பாட்டிலை எடுக்கக் குனிந்த போது தான் தெரிந்தது, அவள் தூங்கவில்லை என்று.

அடுத்த நாள் காலையில் நிர்மலா எழுந்து வரவில்லை. எனக்கு சீக்கிரம் கிளம்ப வேண்டி இருந்ததால், அவள் எழுந்திருக்கக் காத்திருக்க முடியவில்லை. ஒரு சின்ன காகிதத்தில், டேக் ரெஸ்ட். நான் லஞ்ச் வெளிலே பாத்துக்கறேன். ஈவினிங் பார்க்கலாம். டாக்டர் கிட்ட பேசி வை. சாட்டர்டே போகலாம். லவ் யூ”, ஸ்டிக்கிட் நோட் அவள் கண்ணில் படும் படி பிரிட்ஜ் மேல் ஒட்டி வைத்து விட்டு ஒரே ஓட்டம். நாள் முழுக்க பழுக்கக் காய்ச்சி எடுத்து விட்டார்கள். லஞ்ச் சாப்பிடும் போது மணி மூணு. நிர்மலாவுக்கு போன் செய்து பார்த்தேன். பிக் அப் பண்ணவில்லை. அதற்கு பிறகு எனக்கு மறந்து விட்டது. வீடு வந்து சேரும் பொழுது மணி எட்டு. அவளுக்கு பிடித்த பரோட்டா குருமா பார்சல் ஒன்று வாங்கி கொண்டு வீடு வந்தவனுக்கு அதிர்ச்சி. வாசலில் லைட் எரியவில்லை. என் கையில் உள்ள சாவி வைத்து கதவை திறந்து உள்ளே போய் பார்த்தால் எங்குமே லைட் போடப்படவில்லை. பெட்ரூமில் மட்டும் சன்னமாய் வெளிச்சம். உள்ளேச் சென்று பார்த்ததில் நிர்மலா நான் விட்டுச் சென்றபடியே. பயந்து நடுங்கி அவளை எழுப்பினேன். அழுது வீங்கிய முகத்துடன் என் மனைவி.

“உடம்பு சரி இல்லயா? என்ன நிம்மி இது. ஒரு போன் பண்ணலாம்ல.” கேட்டுக் கொண்டே அவள் கழுத்தில் கை வைத்துப் பார்த்தேன். சூடு ஒன்றும் இல்லை.

“என்ன ஆச்சு நிம்மி? எதாவது பேசினா தானே எனக்குத் தெரியும். பயமுறுத்தாதே “,

என் குரலில் இருந்த கவலை அவளை அசைக்கவில்லை. பக்கத்து டேபிளில் இருந்து எதையோ எடுத்தாள் . ஒரு லெட்டர். அவள் கையெழுத்தில்.

“இதென்ன, நீயே சொல்லு. எதுக்கு லெட்டர்?” கெஞ்சலாகக் கேட்டேன். பதில் இல்லை.

நாள் முழுதும் அலைந்து வந்த களைப்பு. முதல் நாள் இரவு தூங்காத களைப்பு. பசி, எல்லாம் சேர்ந்து எனக்குள் ஒரு எரிச்சல். ராப்பகலா ஓடி இவளுக்காகத் தானே உழைக்கிறேன். இன்னிக்கி இந்த வகை வாழ்க்கை ஒருவன் சம்பாத்தியத்தில் செய்ய நான் படும் பாடு இவளுக்கு புரிய வேண்டாமா? எண்ணங்களில் ஒரு நமைச்சல்.

கடிதத்தை வாங்கி கிழித்து அவள் கையில் கொடுத்தேன். “உனக்கு எப்போ என் கிட்ட இது பத்தி பேசணும்னு தோணுதோ அப்போ பேசு. நான் வெயிட் பண்றேன்”, சொல்லி விட்டு வெளியே வந்தேன். வாங்கி வைத்த பரோட்டா பொட்டலம் என்னை அழைத்து. எடுத்து பிரித்து சாப்பிட்டேன். பக்கத்துக்கு ரூமில் சென்று படுத்த அடுத்த நிமிடம் குறட்டை.

இன்னியோட ஒரு வாரம் ஆகுது அவள் என்னுடன் பேசி. சமைத்த உணவை டேபிள் மேல் வைத்து விட்டு எங்கோ போய் விடுகிறாள். எங்கே என்று சொல்வதில்லை. நானும் கேட்பது இல்லை. சாப்பிட்டு வேலை, டிவி என்று பொழுது கழிகிறது. சனிக்கிழமை டாக்டரிடம் போகவில்லை. அவள் சொல்லட்டும் என்று நான் காத்திருக்கிறேன்.

தண்டனை என நினைத்து மனைவி கணவனுடன் பேசாமல் இருப்பதாய் ஒரு ஜோக் வாட்சப்பில். அது இங்கே நிஜமாகி விட்டது.

சில விதங்களில் சிரமம். பல விதங்களில் சௌகரியம். என்னிடம் வேலை ஏவுவது இல்லை. பேசாமல் இருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத் தான் செய்கிறது.

கிழித்துப் போட்ட கடிதத்தை படித்து இருக்கலாமோ என்று சில சமயம் தோணுவது உண்டு. அனால் அவள் சொல்லட்டும் என்று இன்னுமும் வெயிட் செய்கிறேன். அவள் அதை என்னிடம் சொன்ன அடுத்த நொடி இந்த வாரத்து கோபங்கள் மாறி விடும் என்று ஒரு நம்பிக்கை.

தினமும் ஒரு பத்து நிமிடம் கடவுளிடம் ஒரு கோரிக்கை. “கடவுளே எங்களுக்கு ஒரு குழந்தை கொடு. அவள் என்னிடம் இருந்து கவனத்தை அந்த பக்கம் திருப்பினால், எனக்கு கொஞ்சம் ஆசுவாசம்”

கடவுள் செய்வார் என நம்பிக்கை. ஒரு சிங்கிள் பிரார்த்தனையில் எல்லாத்தையும் கவர் பண்ணிட்டேன். அவள் முதலில் அதற்கு என்னிடம் பேசணும் இல்ல???

நிர்மலா: முதல் நாள்.

“என்ன ஒரு கொழுப்பு. எழுப்பி ஒரு வார்த்தை சொல்லிட்டு போகாம, ஸ்டிக்கிட் நோட். நான் லஞ்ச் வெளில சாப்டுக்கறேன்னு. தூங்கறாளே, அவளுக்கு என்ன ஆச்சுன்னு ஒரு கவலை இல்ல, நான் எப்படி லஞ்ச் சாப்பிடுவேன்னு ஒரு அக்கறை இல்ல. போய் சேர்ந்து நான் என்ன பண்ணினேன்னு கேட்டு ஒரு போன் கூட இல்ல. பேசினா தானே இனிமே? இப்படியே ஆபீசையும் லாப்டாப்பையும் கட்டிட்டு அழட்டும்”

நிர்மலா :ஒரு வாரம் கழித்து:

“இதென்ன இந்த ஆளு சாப்பாடு சாப்பிட்டு வேலைய பாத்துகிட்டு ரொம்ப நிம்மதியா செட்டில் ஆகிட்டாரு???

அந்த வாட்சப் ஜோக் எல்லாம் உண்மையா???

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *