கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 29, 2022
பார்வையிட்டோர்: 4,688 
 

இருபது வருடங்களுக்குப் பிறகு பிள்ளையைப் பார்க்க மனசுக்குப் பரவசமாக இருந்தது அன்னபூரணிக்கு. அதே சமயம் அவன் ஒட்டி, உலர்ந்து, தாடி மீசையுமாய் இருப்பதைப் பார்க்க…. துக்கம் வந்து தொண்டையை அடைத்தது.

“அப்பாடி.. ! ரோசம் !” என்று மலைத்து உள்ளுக்குள் பெருமூச்சு விட்டாள்.. அப்படியே கண்களை அகல விரித்துக் கடந்த காலம் சென்றாள்.

அப்போது…. சுந்தர் பத்தாம் வகுப்பு முடித்த வயசு பதினாறு பையன். படிப்பில் தோல்வி என்பதால் மேற்கொண்டு படிக்க இயலாமல் துண்டு விழுந்த பாடத்தை முடிக்க அறையில் படித்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் வீட்டிற்குள் வந்து கூடத்தில் அமர்ந்த தந்தை அழகேசன்…

“சுந்தர்..!” அறையை நோக்கி மகனை மென்மையாக அழைத்தார்.

உள்ளே அப்பாவின் குரல் கேட்ட அவன்.. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வெளியே வந்து…

“என்னப்பா..?” கேட்டு இரண்டடி தள்ளி நின்றான்.

“கிட்ட வாயேன்..!” மகனை வாஞ்சையாக அழைத்தார் அவர்.

“ஏன்..?” அருகில் சென்றான்.

“அப்பாவுக்கு மனசு சரி இல்லே. ஒரு சிகரெட் இருந்தா குடு…”கிசுகிசுப்பாய்க் கேட் டு கெஞ்சலாய்ப் பார்த்தார்.

அவ்வளவுதான் !!

சுந்தருக்கு ஆயிரம் தேள்கள் ஒன்றாக ஒரே நேரத்தில் கொட்டிய அதிர்ச்சி.

“அப்பா..ஆ…!” அலறி முகம் வெளிறினான்.

உடல் குப்பென்று வியர்க்க நடுங்கினான்.

அழகேசனுக்கு..அதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரம், கோபம். அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் அணைக்கடந்த வெள்ளமாய் திடீரென்று வெடித்தது.

படக்கென்று எழுந்து சடக்கென்று…

“படவா…ஆ ..!” ஓங்கி ஒரு அறை கன்னத்திற்கும் காதிற்கும் சேர்த்து விட்டார்.

இவன் அதிர்ச்சியில் உறைந்து பொறி கலங்கி நின்றான்.

‘காது ங்கோய்ய்’ என்றது. கன்னம் வலியில் விறுவிறுத்தது.

அடுப்படியில் வேலையாய் இருந்த அன்னபூரணி பையனுக்கு அறை விழுந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு….

“என்னங்க…?…” பதறியபடி ஓடிவந்தாள்.

“உன் புள்ள சிகரெட் பிடிக்கிறான்டீ…” அழகேசன் கோபத்தில் கூவினார்.

“அதுக்காக அடிச்சீங்களா…?”

“கொன்னே போட்டிருப்பேன். அறையோட விடுறேன் !” உறுமினார். கோபக் கொதிப்பில் அப்படியே நாற்காலியில் அமர்ந்தார்.

கணவனின் கோபம்…. இவளுக்கே கலவரமாய் இருந்தது. பய ம் நெஞ்சைக் கவ்வியது.

சுந்தர் அறை விழுந்த கன்னத்தைப் பொத்திக்கொண்டு கொஞ்சம் நகர்ந்து ஒதுங்கினான்.

“ஆளைப் பார்த்தியா..? மொளைச்சு மூணு இலை விடலை. அதுக்குள்ளே சிகரெட்டு. இது மட்டுமா… பொண்ணுங்க பின்னாடி சுத்தறான். சைட்டடிக்கிறான். இன்னும் என்னென்னமோ பண்றான். இந்த வருச படிப்புல தோல்விக்கே இந்த கெட்ட பழக்கங்கள்தான் காரணம்..!” சுந்தரை முறைத்தார்.

வயசு கோளாறு. அன்னபூரணிக்குத் தெளிவாகத் தெரிந்தது. இதை இப்போது சொன்னால்…மகனுக்குத் துளிர்விடும். தகப்பனுக்குக் கோபம் அதிகரிக்கும்.! – என்பதும் புரிந்தது.

“வாக்காலத்தாடி…”என்று கேட்டு தனக்கும் அறை விழும் என்பதும் இவளுக்குத் துல்லியமாகத் தெரிந்தது.

“உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது..?” கேட்டு கணவனைப் பயத்துடன் பார்த்தாள்.

“இவன் யோக்கியதையை ஊர்ல ரெண்டு, மூணு பேர் சொன்னாங்க. நாம நம்ம பையனை யோக்கியமா வளர்க்கிறோம். அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லேன்னு நம்பலை. அப்படியும் அந்த சேதி தொடர்ந்து என் காதுல விழுந்துகிட்டே இருந்தது.

இன்னைக்குத் தற்செயலாய் ஐயா கண்ணில பட்டார். ஊருக்கு ஓரம் ஒதுக்குப்புறம் உள்ள பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கிகிட்டு பின் பக்கம் மறைஞ்சார். நானும் இவர் கண்ணுக்கு மறைவா இருந்து கவனிச்சேன். பெட்டிக்கடை பின்னால புகை. அப்படியே…அதுக்கு எதர்க்கால ரோட்டுல நடந்து போற பொண்ணுங்களைப் பார்த்து புன்னகை, சிரிப்பு. பத்து நிமிசம் கழிச்சி இவர் ஆற அமர பிடிச்சுட்டு ஒரு வாசனைப் பாக்கைப் பிரிச்சி வாயில போட்டு மென்னுக்கிட்டு நல்ல புள்ளையாய் வெளியே வந்து நடந்தார்.

நான் இவரை அங்கேயே வழி மறைச்சு கை, காலை முறிச்சிருப்பேன். நடமாட்டம் உள்ள இடம் அசிங்கம்ன்னு நினைச்சி விட்டு வந்தேன். !” சொல்லி அழகேசன். புசுபுசு என்று மூச்சு விட்டார்.

பெற்றவனின் ஆத்திரம் புரிந்தாலும் மனசு ஒப்பவில்லை அன்னபூரணிக்கு.

”அதுக்காக, தலைக்கு மேல் உசந்த பிள்ளைகிட்ட இப்படித்தான் அநாகரீகமா நடந்துக்கிறதா..? திருப்பி அவன் உங்களைக் கை நீட்டிட்டா..?” காய்ந்தாள்.

“அப்பனை அடிடான்னு பாடம் சொல்லிக் கொடுக்குறீயா.? கெட்ட வழியில போற புள்ளையைக் கண்டிச்சி திருத்துறது அடாவடி, அநாகரீகமா..?! இதுவரைக்கும் அவனைத் தொட்டிருப்பேனாடீ ? பத்தாவது முடிக்கலையேன்னு இவன் மேல பரிதாபம் தான் பட்டிருக்கேன். ஆனா இன்னைக்கு அடியாத மாடு படியாது என்கிற முடிவுக்கு வந்துட்டேன்.

இதோ பார்டா சுந்தர்..! விடலை வயசு தவர்றது சகஜம். தப்பைத் திருத்திக்கோ. அப்புறம் ஒரு வேலை தேடி சுயமாய் இருக்கக் கத்துக்கிட்டு.. இல்லே சுயமாய் சம்பாதிக்கத் தெரிஞ்சிக்கிட்டு பீடி, சிகரெட் பிடி. அப்பன், ஆத்தா குடுக்கிற காசிலெல்லாம் சிகரெட் வாங்கக்கூடாது. !” காட்டமாகச் சொல்லி முடித்தார்.

இதற்கு மேல் நின்றால்.. இன்னும் ஆத்திரம் பொங்கி மகனைக் கை நீட்டி விடுவாரோ என்கிற பயம் அன்னபூரணி மனதில் தோன்றியது.

“நீ போப்பா.. உள்ளாற…” மகனைக் கை வைத்து தள்ளிக்கொண்டு அறைக்குள் வந்தாள்.

கட்டிலில் அமர்ந்த சுந்தர் முன் அமர்ந்து…

“அப்பா அடிச்சார்ன்னு வருத்தப்படாதே. நீ செய்ஞ்சது தப்பு. இந்த வயசுல கெட்டப் பழக்கமெல்லாம் கூடாதப்பா.”அவன் முகவாயைத் தூக்கி ஆதரவாக சொன்னாள்.

சுந்தர் ஆடாமல் அசையாமல் முகம் இறுக்கமாய் அப்படியே இருந்தான். ஆத்திரம், அவமானம் எல்லாம் அவன் முகம் முழுக்க மண்டிக் கிடந்தது.

மெல்ல எழுந்து வீட்டின் பின்புறம் உள்ள கொல்லைக்குச் சென்றான்.

மகன் மனசு ஆறி வரட்டுமென்று விட்டுவந்த வேலையைத் தொடர்ந்தாள்.

இரவு சாப்பாட்டிற்கு அவன் வீடு திரும்பவில்லை.

8.00. , 9.00 மணியைத் தாண்ட….

“என்னங்க..! சுந்தரைக் காணோம்….” கணவனிடம் வந்து பதைபதைத்தாள்.

“கோபத்துல நாய் எங்கேயாவது ஊர் மேய்ஞ்சுட்டு வரும்” அழகேசன் வெறுப்புடன் சொன்னார்.

“அப்படி இருந்தா இவ்வளவு நேரம் புள்ளை பசி பொறுக்க மாட்டானே..!”இவள் தவித்தாள்.

“கோபத்துல எல்லாம் பொறுப்பன் !” தப்பன் குரல் வீராப்பாய் வந்தது.

“ரோசத்துல தற்கொலை, கிற்கொலை…”அன்னபூரணி கணவனைத் திகிலாய்ப் பார்த்தாள்.

“அப்படி ஒன்னும் நடக்காது. பண்ணிக்க மாட்டான் !” என்று அழகேசன் சொன்னாலும் அவன் மனதிலும் திகில் பரவியது. கலவரம் மூண்டது.

“இரு. எதுக்கும் பார்த்துட்டு வர்றேன் !” சொல்லி டார்ச் லைட் எடுத்துக்கொண்டு வெளியேறினான்.

மனைவிக்கு முன் பதறக்கூடாது! – என்று நடித்த உடலும் உள்ளமும் வெளியே வந்ததும் தானாகத் துடித்தது.

‘மகனுக்கு ஒன்னும் ஆகக்கூடாது..!’ என்கிற நினைப்பில் அழகேசன் ஊரிலுள்ள மரம், மட்டை, குளம், குட்டைகள் என்று ஒன்றுவிடாமல் தேடினார்.

எங்கு தேடியும் கிடைக்காமல் வீடு திரும்பினார்.

இரவு கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு கண் விழித்திருந்தார்கள். விடிந்து வெகு நேரமாகியும் சுந்தர் திரும்பாததால் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள்..

அவன் நண்பர்கள் வீடு, இவர்களுக்குத் தெரிந்த நட்பு, சொந்தம் வீடுகளுக்கு விசயத்தைச் சொல்லாமல் கொள்ளாமல் சென்று அலசி வந்தார்கள். ஒரு இடம் விடாமல் சல்லடைப் போட்டுத் தேடினார்கள். பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தண்ணீராகச் செலவழித்தார்கள். எங்கும் காணாமல் போக… காவல் நிலையத்திலும் புகார் கொடு த்து பலனில்லாமல் போக இடிந்து போனார்கள்.

கண்காணா இடம் சென்று செத்து விட்டானா..? ரோசத்தில் எங்காவது மறைவாக இருந்து உயிரோடு இருக்கின்றானா..? எந்த தகவலுமில்லை. ஆள் உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்று கணவன் மனைவிக்குள் ரொம்ப குழப்பம்.

வயசு கோளாறு என்று உணர்ந்து நாசூக்காக கண்டிக்காமல் முரட்டுத்தனம் காட்டியதால் பிள்ளை சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டான், இறந்துவிட்டான் என்கிற பாரம் அழுத்த… அழகேசன் ரொம்ப நொந்து, உடைந்து போனார்.

அப்படியேதான் அன்னபூரணியும் ஆனாள்.

வாழ்க்கைச் சக்கரம் இல்லை.. இல்லை காலச்சக்கரம் சுழல…

இதோ…

இருபது வருடங்களுக்குப் பிறகு சுந்தர் தாய் கண்ணெதிரில் திடுதிப்பென்று வந்து நிற்கிறான்.

அன்னபூரணிக்கு நிஜமா, பொய்யா தெரியவில்லை. பார்த்த பரவசத்தில் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.

“சுந்தர்ர்…” என்று விம்மி ஓடிப்போய் உள்ளே அழைத்து வந்தாள்.

சுந்தருக்கு முகம் மலர்ந்தாலும் வாய் பேசவில்லை. சுவரில் தொங்கும் அப்பா புகைப்படத்தைப் பார்த்துத் தலை குனிந்தான்.

“எங்கே போனே சுந்தர்..?” தாய் மகனை அமர வைத்துக் கேட்டாள்.

அவன் தலை நிமிராமல் இன்னும் இறுக்கமாக இருந்தான்.

“கோபமா..?” கேட்டாள்.

“ம்ம்ம்…”

“எங்கே போனே..?”

சொல்லவில்லை.

“இத்தனை நாளாய் எங்கிருந்தே..?”

“கோயம்பத்தூர்!”

“இருக்கேன்னு ஒரு வரி கடிதம் , ஒரு வார்த்தை போன்ல சொல்லி இருந்தா நாங்க அல்லாடி இருக்க மாட்டோமில்லே..”

“போடக்கூடாது, பேசக்கூடாது, தான் இருக்கும் இடம் தெரியக்கூடாது. இருக்கிறதா காட்டிக்கக்கூடாதுன்னாதான் அப்படி இருந்தேன். ‘’

“ஏன்…???…”

“ரோசத்தோடு போனவன் மனுசனா திரும்பனும்ன்னு ஆசை ”

“பெத்த மண் பித்து. பிள்ளை மனம் கல்லு சுந்தர் ! ..”அன்னபூரணி கமறினாள்.

“…………………………”

“உன் ஆசை நிறைவேறிடிச்சா..?”

“இ…..இல்லேம்மா. தோ… தோத்துட்டேன்.”

புரியாமல் பார்த்தாள்.

“நான் நம்பிப் போனா மாதிரி நாடு இல்லேம்மா. மொதல்ல வயித்து சோத்துக்கு வேலை பார்ப்போம். அப்புறம் அதைப் புடிச்சிக்கிட்டே.. வேறு ஒரு வழியில் புகுந்து காசு, பணம் சம்பாதிப்போம். அப்படியே பெரிய மனுசனாகி நெஞ்சு நிமிர்த்தி வந்து உங்க முன்னால நிப்போம்ன்னு நெனைச்சுதான் போனேன். முடியல…!! சாதாரண வேலை கூட கிடைக்காம மொதல்ல புகுந்த ஓட்டலே வாழ்க்கையாய்ப் போச்சு. அப்புறம் அதுகூட நிரந்தரமில்லாம அங்கே இங்கேன்னு அலைய வேண்டியதாப்போச்சு.” வருத்தமாய் சொல்லி பெருமூச்சு விட்டான்.

அன்னபூரணிக்கு இருபதாண்டுகளாய் மகன் பட்ட கஷ்டம் கண் முன் விரிந்தது.

அழகேசன் குடையுடன் எப்போதும்போல் வாசலில் செருப்புகளைக் கழற்றிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார்.

அவர் உள்ள நுழைந்ததுமே சுந்தர் குற்றவாளி போல் அடக்க ஒடுக்கமாக எழுந்து நின்றான்.

மகன் அருகே இருந்த அன்னபூரணியும் எழுந்து நின்றாள்.

பையன் வந்திருப்பதை கவனிக்கவில்லையா..? இல்லை கவனிக்காதது போல் இருக்கிறாரா.? நினைத்த அன்னபூரணி…

“என்னங்க…?” அழைத்தாள்.

“என்ன…?” ஏறிட்டார்.

“சு….சுந்தர் வந்திருக்கான்…”

“சந்தோசம்..!” அவனைப் பார்க்காமல் அழைக்காமல் நாற்காலியில் தலை குனிந்து அமர்ந்தார். .

மகன் மீது இன்னும் கோபம் தீரவில்லை! இவளுக்குப் புரிந்தது.

“புள்ள வாழ்க்கையில ரொம்ப அடிபட்டுத் திரும்பி இருக்கான்!”

“நல்லது!”

“இன்னும் அவன் மேல நீங்க கோபமாய் இருக்கிறது நல்லா இல்லே..”

“ம்ம்…..”

“என்ன ம்ம்…?”

“அந்த கோபம் அன்னையோட மறைஞ்சு போச்சுஅன்னபூரணி. அதனாலதான் பிள்ளையைத் தேடி அங்கே இங்கே ஓடினேன். இது வேற கோபம். ! ”

“என்ன..?”

“பெத்தவங்க மேல பாச நேசமிருந்தால்… அம்மா அப்பா அல்லாடுவாங்கன்னு நெனைச்சி, ‘ என்னைப் பத்தி யாரும் கவலைப் பட வேணாம். உயிரோட இருக்கேன். கோபம் தெளிஞ்சு திரும்பறேன். அதுவரை நீங்க வந்து அழைச்சாலும் வரமாட்டேன். இருக்கும் இடம் தெரிவிக்க மாட்டேன் !’ னு தன் நிலையைச் சொல்லி நம்ம வயித்துல பாலை வார்த்திருக்கனும். அதை விட்டுவிட்டு எதுவுமே தெரிவிக்காமல் இருபது வருசம் இருந்தால் என்ன அர்த்தம்..? காணாமல் தவிக்கட்டும். கண்டிச்சதுக்கு, அடிச்சதுக்கு அல்லல் படட்டும், அவதிப்படட்டும் நெனப்பு. புள்ள தப்பு செய்தா பெத்தவங்க கண்டிக்கிறதில்லையா..? அது தப்பா..? உரிமை இல்லையா..?

நாம உள்ளுக்குள் எத்தனை நாட்கள் புழுவாகத் துடித்சோம்..? சோகம், துக்கத்தில் எத்தனை நாட்கள் சோறு தண்ணி குடிக்காமல் இருந்தோம். இன்னைக்குத் தோத்து வந்ததால இங்கே நிக்கிறான். ஜெயிச்சிருந்தா வந்திருப்பானா..? வந்தாலும் தன் தவறை உணர்ந்து இப்படி கூனி குறுகி நிப்பானா..? நெஞ்சு நிமிர்த்தி நிப்பான். சொடக்குப் போட்டு கூப்பிடுவதுபோல் நம்மை துச்சமாய்ப் பார்ப்பான்.

என் மனசு மாறிப்போச்சு அன்னம். இறுகி கல்லாகிப் போச்சு. பெத்தப்புள்ள பழியே செய்தாலும் தாய் உள்ளம் மாறாது. பாசம் காட்டும் துடிக்கும். நீ அப்படியே இரு. அவன் இங்கே நம் மகனாய் இருக்கிறதை பத்தி எனக்கு ஆட்சேபனை இல்லே. அவன் எப்போதும் போல இந்த வீட்டு உரிமையாளனாய், சொத்துக்கு வாரிசாய் இங்கேயே இருக்கலாம். அதில் எள்ளளவு மாற்றமும் கிடைத்து. இது என் மேல் உறுதி. ஆனா… என் ஆயுட்காலம் முடியற வரைக்கும் நான் அவனிடம் பேசமாட்டேன். அவனும் என்னிடம் பேசக்கூடாது. நம்ம பெத்த பாசத்தை தூசாய் நினைச்சி குழி தோண்டி பொதைச்சி மிதிச்சதுக்கு அவனுக்குத் தண்டனை. !” முடித்து நிறுத்தினார்.

“அப்பா..ஆஆ …”சுந்தர் உள்ளுக்குள் கமறி கதறினான்.

அன்னபூரணி சிலையாக நின்றாள்.

கணவனின் ஆழ்ந்த பாசம், அதற்குள் இருக்கும் வலி, துன்பம் எல்லாம் தெரிய…. இந்த ‘ தண்ட னை ‘ யை ஏற்பவளாய்த் தலை குனிந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *