ஞானோதயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 14, 2023
பார்வையிட்டோர்: 1,749 
 
 

(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சென்னையில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் தலைமை வகித்துச் சிறப்புரை ஆற்றிவிட்டுக் கையில் கனக்கும் மாலைகளுடன் சாங்கி விமான நிலையத்திலிருந்து வெளியே வருகிறாள். மஞ்சள் நிறக் காரில் வந்து ஏறுகிறாள் ஜானகி. ஓட்டுனர் அவளது உத்தரவுக்காகவே காத்திருந்தவனைப் போல் காரை “ஸ்டார்ட்” செய்கிறான். மெல்ல அன்னமாய் நகர்கிறது “ஹோண்டா சிவிக்”. கண்ணுக்குக் குளிர்ச்சி தந்து கொண்டிருந்த கருப்புக் கண்ணாடியைச் சுழற்றி லாவகமாய் மெல்லிய தாளினால் துடைக்கிறாள். மறுபடியும் கண்களில் பொருத்துகிறாள், வாகனத்தின் விளிம்பில் கை சாய்த்து வெளியில் கண்களை மேய விடுகிறாள். பசுமையான ஈஸ்கோஸ்ட் சாலையிலே அவள் பார்வை படர்கிறது.

ஒரு முப்பது மணித்துளி நேரத்தில் “மெரின் விஸ்தா” வந்தடைந்தபோது ஓடிவந்து கூர்க்கா கதவைத் திறக்கிறான். வாகனத்தை நிறுத்தி விட்டுக் காரின் கதவைத் திறந்துவிட்டு ஓட்டுனர் ஒதுங்கி நிற்கிறான். ஜானகி… கம்பீரமாய் உள்ளே நுழைகிறாள். பின்னாலேயே தொடர்ந்து வந்த ஓட்டுனர், மாலைகளையும் பரிசுப் பொருட்களையும் எடுத்து வந்து மேசையில் வைக்கிறான். அவற்றைப் பெருமையோடு பார்த்து மகிழ்ந்தவள் கண்களில் “அது” தென்படுகிறது. சட்டென்று அதிலே பார்வையை அழுத்துகிறாள்.

“அப்படீன்னா… மஞ்சுவா வந்திருக்கிறாள்” – ஜானகியின் மனத்தில் இனம்புரியாத் தவிப்பு…!”

அவளா இருந்தா இந்நேரம் வீடு திருவிழாக் கோலம் கொண்டிருக்குமே! அதெப்படி இத்தனை அமைதி. தானாகப் புலம்பிக் கொண்டிருந்தவளை வேலைக்காரி வந்து நிதானப்படுத்துகிறாள். “சின்னம்மா… அவுங்க மட்டுந்தான் வந்தாங்க, களைப்பா இருக்குன்னு படுத்திருக்காங்க… அவள் பேசிக் கொண்டே இருக்கையில் ஜானகி தன் மகள் உறங்கும் அறைக்குள் நுழைகிறாள். உறங்குவதற்கு மாறாக… மகள் புலம்பிக் கொண்டிருக்கின்றாள். அழுது அழுது கண்ணிமைகள் வீங்கி, கன்னம் கன்றிப் போய்க் காட்சி அளிக்கிறது. அடர்த்தியான கூந்தலில் எவ்வளவு நீளமான பின்னல்! அதையும் தாறுமாறாய் வெட்டி அலங்கோலப்படுத்திக் காயப் போட்டு… சொல்ல முடியாத மனத் தவிப்புடன் மகளை நெருங்கி அழைக்கிறாள் தாய்.

“அம்மா!” என்று கட்டிப்பிடித்துக் கொண்டு கதறுகின்ற மகளின் நிலைமை தாய்க்கு உண்மையை உணர்த்துகிறது. “ஏம்மா… ஏன் நீ மட்டும் வந்திருக்கே… மாப்பிள்ளை வரலியா…? தாயின் கேள்விக்கு மகள் பதில் கூறாமல் மௌனமாய் அழுது கொண்டிருக்கிறாள். அவளது மெளனம் பெற்றவளின் ஆத்திரத்தைக் கிளறுகிறது.

மூன்று மாதங்களுக்கு முன் ஊரார் பெருமைப்படும் அளவுக்கு மகளின் திருமணத்தை நடத்தி, கேட்டதற்கு அதிகமாகவே சீதனமும், செல்வமும் வாரி வழங்கி மகளைப் புருஷன் வீட்டுக்கு அனுப்பி வைத்தவளுக்கு மஞ்சள் கயிற்றின் நிறம் மாறும் முன்பே இப்படி ஒரு நிலை என்றால் அவள் மனம் வேதனைப் படாமல் என்ன செய்யும்?.

மகளின் தோளைப் பற்றி உலுக்கி “என்ன நடந்திச்சின்னு சொல்லிட்டு அழேன்டி… ஏன் இப்படி என் பிராணனை வாங்கறே…” ஆத்திரத்தால் பொறுமுகிறாள்.

“அவளை ஏன் தொந்தரவு பண்ற ஜானகி? என்னைக் கேளு… எல்லா விபரத்தையும் நான் சொல்றேன் உனக்கு.” நிதானமாகப் பேசும் பொன்னையாவின் குரலைக் கேட்டுத் தலை நிமிர்கிறாள் மனைவி ஜானகி…! அவரது பார்வையை நேருக்கு நேராகச் சந்தித்ததில் ஏற்பட்ட அவமானம், உடலெல்லாம் கூனிக்குறுகி… தடுமாறி… பின் தானாகவே சுதாரித்துக் கொண்டு..

“என்ன சொல்றிங்க நீங்க”கடுகு வெடிக்கும் தொனியில் மனைவியின் குரலைக் கேட்டு ஆச்சரியத்தால் விழிகள் மலர “…ஜானகி இப்ப என்ன நடந்து போச்சுன்னு இப்படி மனம் உடைஞ்சு போயிட்டே…? வாழ்க்கையிலே இதுமாதிரி நடக்கிறது ரொம்ப சகஜம். எத்தனையோ காரியங்கள் உன்னோட திறமையைக் காட்டி வெற்றி அடைஞ்ச நீ; இந்த சின்னதுக்கெல்லாம் மனதைப் போட்டு அலட்டிக்கலாமா?” மனைவி ஒரு இரத்த அழுத்த நோயாளி என்ற அனுதாப உணர்வுகள் மேலிட உண்மைக் கணவனின் பிரிவில் துடிக்கின்ற இதயத்தை மெல்லத் தன் வார்த்தைகளால் நீவி விடுகின்றார் பொன்னையா. இருந்தாலும் ஜானகியால் அமைதி கொள்ள முடியவில்லை.

“எதைப்போயி சின்ன விஷயம்னு சொல்றீங்க…? எம் பொண்ணுக்கு மூணு தலைமுறைக்கும் குறையாத சீரையெல்லாம் செய்து தானே அவுங்க வீட்டுக்கு அனுப்பி வைச்சேன்?”

ஜானகியைச் சமாதானப்படுத்தி வாசலில் இருக்கும் சின்னப் பூந்தோட்டத்திற்கு அழைத்து வருகிறார். உலகமே இருண்டு போய் விட்டது போல் சோகமாய் இருக்கையில் அமர்ந்திருக்கும் மனைவியைப் பார்க்கும்போது அவள் மேல் ஆத்திரம் வருவதற்குப் பதிலாக அனுதாபமே எழுகிறது.

மஞ்சுளா பள்ளிப் படிப்பை முடிக்கு முன்பே காதல் மயக்கத்தில் மாலனுடன் சுற்றுவதைக் கண்டு மனைவியிடம் அதுபற்றி அவர் பேசியபோது “உங்க மாதிரி பழைய பஞ்சாங்கத்துக்கு இதெல்லாம் எங்கே புரியும்…? ஒரு பையனும் பொண்ணும் பேசினா என்னதான் கொறைஞ்சிடப் போவுது? வீணா கண்டதை நெனைச்சி மனதைக் கெடுத்துக்காதீங்கோ…” என்று அவரிடம் எதிர்வாதம் செய்தவள் ஜானகி…! அவளாகவே முன் வந்து,”நம்ம பொண்ணு அந்தப் பையனை உயிருக்கு உயிரா மதித்துக் காதலிச்சுட்டுது…. கட்டிக்கிட்டா அவனைத்தான் கட்டிக்குவேன்னு அழறா… சீக்கிரம் கல்யாண ஏற்பாட்டைச் செய்யுங்க…” என்று ஆணையிட்டபோது திகைத்து நின்றார். அவன் குடும்பத்துக்கும் தன் குடும்பத்துக்கும் எந்த வகையிலும் பொருத்தம் இல்லை என்றுதானே ஆரம்பத்திலேயே கண்டித்தார். இப்போது இப்படி அவசரக் கல்யாணத்துக்குக் காரணம் என்ன…! சிறிது நேரம் யோசிக்கிறார். மறுபடியும் பேசுகிறார்…! “கல்யாணங்கிறது ஆயிரங்காலத்துப் பயிர். அதை அவசரப்பட்டுச் செய்ய முடியாது. கொஞ்சம் பொறுமையாத்தான் செய்யணும்; நீ கொஞ்சம் பொறுமையா இரு,” என்கிறார்.

“ஜானகிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. நீங்களும் நானும் பொறுமையா இருக்கலாம்… ஆனா உங்க பொண்ணு பொறுமையை இழந்து நிற்கிறாளே… அவ நம்மையெல்லாம் தலைகுனிய வெச்சிட்டாங்க…” கணவனை கட்டிப் பிடித்துக் கொண்டு கதறுகின்றாள் ஜானகி. பொன்னையா தலையிலே கனமான சம்மட்டி அடிகள் சரமாய் இறங்க… உணர்வுகள் கொதிக்க… நிலை தடுமாறி மறுகணமே குடும்பக் கௌரவத்தை எண்ணிப் பார்த்து மகளுக்காக அந்தப் பையனின் பெற்றோரைப் பார்த்துக் காலில் விழாத குறையாய்க் கெஞ்சிக் காரியத்தைச் சடசடவென்று முடித்து மனைவியின் வேதனையைக் குறைத்தார். அதன் பின் ஜானகிக்குக் கணவன் மேல் கொஞ்சம் மதிப்பு உயர்கிறது. சொல்லுக்குக் கொஞ்சம் கட்டுப்பட்டாள், மகள் புகுந்த வீட்டில் நிம்மதியாய் வாழ்வாள் என்று பெருமையாய் நினைத்துக் கொண்டு, இலக்கியக் கருத்தரங்குகளுக்கும், சமூகப்பணிகளுக்குமாய் அவள் ஆலாய்ப் பறந்து கொண்டிருந்த வேளையில்தான் தன் மகள் போன வேகம் குறையாமல் வந்து நின்றாள்.

காரணம் பெற்ற தாய்க்குப் புரியவில்லை என்றாலும் உருக்கொடுத்த தகப்பனுக்குப் புரிந்தது. செல்லமாய் வளர்த்த ஒரே மகள் சாதாரணக் குடும்பத்தில் எப்படிப் பேர் போடுவாள். அவளது ஆர்ப்பாட்டங்கள் அடாவடித்தனங்கள் பொறுக்காமல் மாப்பிள்ளைப் பையன் அடிக்கடி போனில் புகார் செய்து கொண்டிருந்தபோது அவனை மெல்ல மெல்லச் சமாதானப் படுத்தி வைத்தவராயிற்றே அவர். அந்தச் சாதாரண புகை இப்படிப் பூகம்பமாய் வெடிக்கும் என்று அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை தான்.

அதற்காக இப்படியா அவசரப் படுவது. வாயும் வயிறுமாய் இருக்கும் பெண்ணை “அம்போ” வென்று அனுப்பி விட்டு… பொன்னையா மனைவியைச் சமாதானப்படுத்துகிறார்.

“இங்கே பாரு ஜானகி, பிள்ளைங்கள நாம வளர்க்கிற முறை சரியா இல்லேன்னா இப்படித்தான் சிரமப்படனும்… நீ படிச்சவ… உலகத்தைப் புரிஞ்சவ… ஆனா உன்னோட பிள்ளையைப் பத்திப் புரிஞ்சிக்க மறந்துட்டியே… சின்ன வயசில நீ எனக்கு அடங்கி.. என் சொல்லுக்கு மரியாதை கொடுத்திருந்தேன்னா அவளும் தன் குடும்பத்தில குத்து விளக்கா இருந்திருப்பா. ஆனா இப்போ… எதுவுமே புரியாம்… எதுக்குமே உதவாம… ஐந்தில; வளய வேண்டிய பருவத்தில் வளைக்க மறந்ததால இப்ப வளய மறுக்கிறா. நீ கொட்டிக் கொடுத்த சீரும் செல்வமும் அவளை வாழவைக்கவே முடியாதுங்கறதை இப்பவாச்சும் புரிஞ்சிக்க… ஏன்னா, ஒரு பொண்ணை வாழ வைக்கிறது அவ தாய் வீட்டுச் சீதனமா வர்ற தாய் வழிக் குண இயல்புதான். அவ குணவதியா இருக்கணுமே தவிர, பணக்காரியா இருக்க வேண்டிய அவசியமே இல்லே…” கணவன் பேசப் பேச… ஜானகி தன்னைப் பற்றிய சிந்தனையில் இறங்குகிறாள்… அவள் கண்களின் எதிரே தோட்டக்காரன் ஒரு மல்லிகைச் செடியை அடியோடு பெயர்த்தெடுப்பது தென்படுகிறது.

“ஏன் பாலகிருஷ்ணா அந்தச் செடியைப் பிடுங்கிட்டே…?” சட்டென்று, கேட்கிறாள். எஜமானியின் கேள்வியைத் கேட்டுத் திடுக்கிட்ட தோட்டக்காரன்…” வேற ஒன்றுமில்லேம்மா… இந்த அடிமண் நல்லா இல்லே… செடிக்குத் தகுந்த தாய்மண் வளமா இருந்தாத்தான் நல்லா செழிக்கும், பூக்கும்… அதுதான். நல்ல இடமாய்ப் பார்த்து நடப் போறேன்” என்கிறான்.

தோட்டக்காரனின் பதில் அவளுக்கு “சுரீர்” என்று உறைக்கின்றது. மண்ணில் வளரும் சாதாரண மல்லிகைக்கே இப்படி என்றால்… வாழப் பிறந்த பெண்ணுக்கு…? அவள் உணர்ந்து கொண்டு விட்டாள்.

– ஆர்க்கிட் மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு) , முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2002. சிங்கை தமிழ்ச்செல்வம் வெளியீடு, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *