பனையூர் என்றொரு பல்கலைக்கழகம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 2, 2023
பார்வையிட்டோர்: 3,682 
 

விமான நிலையத்துக்கு வந்திருந்த நண்பன்தான் அந்தக் கடிதத்தைச் சுகுமாரனிடம் கொடுத்தான். கடிதம் பெரியம்மா சொல்வது போல் பக்கத்து வீட்டுப் பெண்ணின் கையெழுத்தாலோ, அல்லது வேறு யாருடைய கையெழுத்தாலோ எழுதப்பட்டிருந்தது. பெரியம்மா அவனைக் கண்டிப்பாக ஒரு நடை கிராமத்துக்கு வந்து விட்டுப் போகச் சொல்லி எழுதியிருந்தாள்.

ஸ்டேட்ஸிலிருந்து பம்பாயில் வந்து இறங்கியதும் இறங்காததுமாக உடனே சென்னைக்குப் போய் அங்கிருந்து முந்நூறு மைலுக்கு மேல் ஓர் இரவு மேலும் ஒரு மணி நேரமும் இரயிலில் பயணம் செய்து கிராமத்துக்குப் போக வேண்டும் என்று நினைத்தபோதே சுகுமாரனுக்குச் சலிப்பாகவும் அலுப்பாகவும் இருந்தது. பெரியம்மா மிகவும் சாமர்த்தியமாக அவன் பம்பாய் வந்து இறங்கியதுமே நிச்சயமாக அவனைச் சந்திக்கிற ஓர் உறவுக்கார நண்பனின் விலாசத்துக்கு அந்தக் கடிதத்தை அனுப்பி, அவனிடம் வந்ததுமே சேர்க்கச் சொல்லியிருந்தாள். நண்பன் கர்மசிரத்தையாக, அந்தக் கடிதத்தை அவனிடம் சேர்த்ததோடு மட்டுமின்றிக் கிராமத்துக்குப் போய் விட்டு வரச் சொல்லி அவனை வற்புறுத்தவும் செய்தான்.

சலிப்பும் அலுப்பும் ஒருபுறம் இருக்கக் கிராமத்துக்குப் போய்ப் பெரியம்மாவைப் பார்க்க அவனுக்குக் கூச்சமாகவும், தயக்கமாகவும் இருந்தது. எதற்காக அழைத்திருப்பாள், என்ன கேட்பாள் என்பதையும் இங்கிருந்தே அவன் அனுமானிக்க முடிந்தது. ஜுலியோடு கிராமத்துக்குப் போவதா, தனியாகப் போவதா என்பதும் ஒரு சிந்தனைக்குரிய பிரச்னையாயிருந்தது. ஒருவேளை ஜூலியைப் பற்றிப் பேசுவதற்கும், கோபித்துக் கொள்வதற்குமே பெரியம்மா கூப்பிட்டிருந்தால், ஜுலியோடு அவள் முன் கிராமத்தில் போய் நிற்பது நன்றாயிராது. பெரியம்மாவுக்கும் அது எரிச்சலூட்டுவது போல் இருக்கும். அவன் யோசித்தான். மேற்படிப்புக்காகப் போன இடத்தில், அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கும் போது ஜுலியை அவன் காதலித்துத் திருமணம் புரிந்து கொள்ள நேர்ந்திருந்தது. இந்த விஷயம் முதலில் பம்பாயிலிருக்கும் தம் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மெல்லத் தெரிந்து, அப்புறம் பராபரியமாகக் கிராமத்தில் இருந்த பெரியம்மாவுக்கும் எட்டியிருக்க வேண்டும் என்பதை அவனால் சுலபமாக அனுமானிக்க முடிந்தது. “வயதான காலத்தில் உன் முகத்தை ஒரு தடவை பார்க்கணும்னு ஆசைப்பட்டு வரச் சொல்லி எழுதியிருக்கா. போயிட்டுத்தான் வாயேன். நீ வெளிநாடு போய்ப் படிக்கத் தேவையான பண உதவி பண்ணினதுக்காகவும் நீ உங்க பெரியம்மாவுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கே” என்றான் நண்பன்.

ஜூலியைத் தனியே பம்பாயில் விட்டு விட்டுப் போவதா அல்லது தன்னோடு சென்னை வரை அழைத்துச்சென்றுவிட்டு அங்கேயே கன்னிமரா ஹோட்டலிலாவது வேறெங்காவது தங்கச் செய்த பின் தான் மட்டும் கிராமத்துக்குப் போய பெரியம்மாவைப் பார்த்துவிட்டுத் திரும்புவதா என்று சுகுமாரன் சிந்தித்தான் இன்னும் சில வாரங்களில் டில்லியிலோ, வேறு ஏதாவது வடஇந்திய மாநிலத் தலைநகரங்களிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்திலோஸ்பேஸ் டெக்னாலஜி-விண்வெளி சம்பந்தமான துறை ஒன்றின் தலைமைப் பதவியை அவன் ஏற்க வேண்டியிருக்கும். கிராமத்துக்கு போய் பெரியம்மாவைப் பார்த்துவிட்டுத் திரும்புவதாயிருந்தால் அதற்கு முன்பே போய்விட்டுத் திரும்பினால்தான் உண்டு.

நிறைய நிலபுலன் சொத்துடன் பால்யத்திலேயே விதவையாகி விட்ட அந்தப் பெரியம்மாதான் – தாய் தந்தையற்று அநாதையாகிவிட்ட அவனைச் சிறுவயதிலேயே எடுத்து வளர்த்துப் படிக்க வைத்து ஆளாக்கியிருந்தாள். கல்லூரிப் படிப்பு வரை அவனுடைய செலவுகளைக் கவனித்துக் கொண்டதோடு மட்டுமின்றிப் படிப்பு முடிந்ததும் அவன் சில ஆண்டுகள் விரிவுரையாளராக இருந்தபின் மேற்படிப்புக்காக மேல்நாடு புறப்பட்போது அதற்குப் பணஉதவி செய்ததும் பெரியம்மாதான். இவற்றையெல்லாம் நினைத்தபோது கிராமத்துக்குப் போய் பெரியம்மாவைப் பார்க்காமல் தட்டிக் கழிப்பது நியாயமில்லை என்றே தோன்றியது.

மேல்நாட்டிலிருந்து வந்து இறங்கிய தினத்தன்று மேல் நாட்டுப் பாணி வாழ்வில் பழகிய ஒரு தென்னிந்திய மலையாளி சிநேகிதனின் குடும்பத்தோடு அவனும் ஜூலியும் பம்பாயில் தங்கினர். ஒர் இடத்துக்குப் போகும் முன்னோ, தங்கும் முன்னோ அந்த இடம் ஜூலிக்கு அசெளகரியம் இல்லாமல் இருக்குமா என்பதையும் இப்போது அவன் நினைத்துப் பார்த்தாக வேண்டியிருந்தது.

“சென்னை வரை விமானத்தில் போய் அப்புறம் கிராமத்துக்கு இரயிலில் போய்த் திரும்பிவிட்டு மறுபடியும் சென்னையிலிருந்து பம்பாய்க்கு விமானத்திலேயே திருப்பினர்களாயின் நாலைந்து நாட்களை மீதப்படுத்தலாம். ஜுலியைப் பற்றிக் கவலை வேண்டாம். நீங்கள் திரும்பி வருகிறவரை அவள் இங்கேயே எங்கள் குடும்பத்தோடு ஒரு குறைவும் இன்றி இருக்கலாம்” என்றார் சிநேகிதர்.

சுகுமாரன் இந்தப் பிரயாண விஷயமாக ஜூலியைக் கலந்தாலோசித்தபோது, ‘தன்னைத் தவிர்த்துவிட்டு அவன் தனியே பெரியம்மாவைப் பார்க்கப் போக வேண்டும்’ என்று கூறியதை மட்டும் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.“ஏன்? உங்கள் பெரியம்மாவையும், ஒர்அமைதி நிறைந்த இந்தியக் கிராமத்தையும் காண நானும் உங்களுடன் கூட வருவதில் என்ன தவறு?” என்று கேட்டாள் அவள் அவளுக்கு விளக்குவது அவனுக்குத் தர்மசங்கடமாயிருந்தது.

“நீ நினைப்பதுபோல் எங்கள் இந்தியக் கிராமங்களில் அமைதியும் அழகும் மட்டும் இல்லை. வம்பு பேசுவதும் நாகரிகக் குறைவான வார்த்தைகளால் நேருக்கு நேர் விசாரிப்பதும், புதுமையை அங்கீகரிக்கவும் ஏற்கவும் தயங்குகிற கிணற்றுத் தவளை மனப்பான்மையுமே இன்னும் எங்கள் கிராமங்களில் இருக்கின்றன, தாராள மனப்பான்மை குறைவு.புறம்பேசுதல் அதிகம், ஆழமான விருப்பு வெறுப்புக்கள் நிறைய இருக்கும்.”

இப்படி அவன் கூறியதை அந்த அமெரிக்க யுவதி உடன்நம்பிவிடவில்லை.“நீங்கள் அநாவசியமாக மிகைப்படுத்திச் சொல்கிறீர்களோ என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது” என்றுதான் சிரித்தபடி அவள் அவனிடம் கூறினாள். அவளை ஒருவாறு பம்பாயில் இருக்கும்படிசமாதானப்படுத்தி ஒப்புக் கொள்ளச் செய்தபின்பே மறுநாள் காலை அவன் சென்னைக்கு விமானம் ஏறினான்.

கிராமத்தில் எந்தக் கேள்வியை அவன் அநாகரிகமாக எதிர்பார்த்தானோ, அதைப் பம்பாயிலும், சென்னையிலுமே பலர் அவனைக் கேட்டுவிட்டார்கள்.

பம்பாயில் அவன் வந்து இறங்கியபோதும், ஜூலி அருகிலிருந்தபோதும் அவனைக் கேட்கத் தயங்கிய கேள்விகளையெல்லாம் தனியே அவனிடம் கேட்டே விட்டார்கள். கொச்சையாகவும், பச்சையாகவுமே கூடக் கேட்டார்கள்.

“எங்கேடா பிடிச்சே இந்த வாளிப்பை?” என்றான் ஒரு சம வயது நண்பன்.

“அவள் உங்கிட்ட மயங்கினாளோ நீ அவள் கிட்ட மயங்கினியோ?” என்றான் இன்னொரு குறும்புக்காரச் சிநேகிதன்.

“முதல் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போறே? அவ சொல்ற பேரா? நீ நினைக்கிற பேரா?” என்றார் ஒரு நடுத்தர வயது நண்பர்.

வேடிக்கையாகவும் சகஜமாகவும் இந்தக் கேள்விகளை அவன் எடுத்துக் கொண்டாலும் ஒரு தனிமனிதனின் சொந்த விஷயம்-அதாவது-பிரைவேட் அஃபேர் பற்றிப் படித்த நண்பர்கள்கூட இந்தியாவில் இவ்வளவு அலட்டிக் கொள்வது ஏன் என்றுதான் அவனுக்குப் புரியவில்லை. இழுத்து நிறுத்தி வைத்துச் சொல்லத் தொடங்கினாலும் அடுத்தவனுடைய சொந்த விஷயத்தைப் பற்றி அலட்டிக் கொள்ளாத நாகரிகமும் பண்பும் உள்ள நாடுகளில் சில ஆண்டுகள் வாழ்ந்துவிட்டுத் திரும்பிய பின் இங்கே படித்த இந்தியன் கூடப் பின்தங்கியிருப்பதாகவே தான் தோன்றியது சுகுமாரனுக்கு.

முதலில் ஸ்பேஸ் டெக்னாலஜி கற்றுக் கொடுப்பதற்கு முன் காசியிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள இந்தியர்களுக்கு ‘பிளிஸிங் மேனர்ஸ்’ கற்றுக் கொடுப்பதற்குப் பலநூறு பல்கலைக்கழகங்களை உடனே திறக்க வேண்டும்போல் சுகுமாரன் எண்ணினான்.

‘ஒன்ஸ் மேரேஜ் இஸ் எ பிரைவேட் அஃபேர்’ என்று சிரித்துக்கொண்டே கூறும் பல வெளிநாட்டு நண்பர்கள் அவன் நினைவுக்கு வந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் அவனைச் சந்தித்த உறவினர் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அவன் செய்த மிகப் பெரிய திருட்டு ஒன்றுக்காக அவனை விசாரிப்பது போன்ற குரலில், “ஏண்டா ஒரு அமெரிக்கன் லேடியைக் கூடவே கூட்டிண்டு வந்திருக்கியாமே?” என்று கேட்டபோது அவனுக்குத் தாங்க முடியாத எரிச்சல் மூண்டது. அவர் விசாரித்த விதம் அப்படி இருந்தது. அவன் ஜூலியைத் திருமணம் செய்து மனைவியாக அழைத்துக்கொண்டு வந்ததைக்கூட ஒப்புக் கொள்ளாமல் கூடவே கூட்டிண்டு வந்திருக்கியாமே?’ என்று எதையோ எப்படியோ கேட்பதுபோல் அவர் விசாரித்ததைக் கண்டு,

‘கடவுளே! என் நாட்டவருக்கு முதலில் நாகரிகத்தைக் கற்றுக் கொடு’ என்று வாய்விட்டுக் கதற வேண்டும் போலிருந்தது அவனுக்கு. புகழ் வாய்ந்த பழமையும் குழப்பமான தற்காலமும், புரியாத எதிர்காலமும் உள்ள ஒரு நாட்டின் பண்பாட்டு வறட்சியைப் பொறுக்க முடியாமல் தவித்தான் அவன்.

சென்னையில் அவன் கிராமத்துக்கு இரயிலேறுவதற்கு முன் தங்கியிருந்த அரை நாளில் எதிர்கொள்ள முடியாததும் அவன் பதில் கூறத் தர்மசங்கடப்படுவதுமான உரையாடல்களை இப்படி நிறையக் கேட்டு விட்டான்.

சென்னையில் அவன் தங்கியிருந்த வீட்டிலே அவன் உட்கார்ந்திருந்த அறையின் ஜன்னலருகே அந்த வீட்டின் படித்த நாட்டுப் பெண்கள் இருவரே கீழ்வருமாறு உரையாடியதை அவன் கேட்க நேர்ந்தது:

“ஜூலியோ, கோலியோ, யாரோ ஒரு பெண்ணை இழுத்துண்டு வந்துட்டானாமே?”

“ஆமா! அவளைப் பெரியம்மாவுக்குப் பயந்து பம்பாயிலேயே விட்டுட்டு வந்திருக்கானாம். இவனைத் திட்டித் தீர்க்கறதுக்காகப் பெரியம்மா கிராமத்துக்கு வரச் சொல்லியிருக்களாம். அதான் வந்திருக்கிறான். இன்னி ராத்திரி ரயில்லே போறான் பனையூருக்கு.”

“சொத்தெல்லாம் செலவழிச்சுப் படிக்க வச்சதுக்குக் கிழவிக்கு இதுவும் வேணும்! இன்னமும் வேணும் பாவம் அவ யாரோகோமுவையோ ஜானுவையோ ஜாதகத்தைத் துருவித் துருவிப் பார்த்துத் தயாரா இவனுக்காக வைச்சுண்டிருந்திருப்பா. இப்போ இப்படிக் கேள்விப்பட்டாக் கிழவிக்கு ஏமாத்தமா இருக்காதா பின்னே?”

இந்த உரையாடலைக் கேட்க நேர்ந்ததும் பனையூருக்குப் போய்ப் பெரியம்மாவைப் பார்க்காமலே திரும்பிவிடலாமா என்றுகூடத் தோன்றியது அவனுக்கு, தெற்கே போகப்போகக் கிணற்றுத் தவளை மனப்பான்மை அதிகமாகிறதோ என்றும் அவனுக்குப் பயமாயிருந்தது. யாரோ, “இங்கே ஏன் வந்தாய்? வந்த வழியே திரும்பி ஒடிப்போய்விடு” என்று பிடித்துத் துரத்துவதுபோல் இருந்தன இந்தப் பேச்சுக்கள். “ஒருபுறம் உலகளாவிய பரந்த மனப்பான்மையைப் பற்றிய மேடைப் பேச்சுக்கள், மறுபுறம் சாதாரண விஷயங்களைக்கூட சகஜ பாவத்தோடு ஏற்காத குறுகலான புத்தி, இந்த இரண்டும் தான் இன்றைய இந்தியாவாக இருக்கிறதோ என்றெண்ணி அஞ்சினான் அவன். இன்னும் பனையூருக்குப் போனால் பெரியம்மா எதை எதையெல்லாம் தன்னைக் கேட்டு வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளப் போகிறாளோ என்று தயங்கினாலும் அவன்பனையூருக்குப்போவதை நிறுத்தவில்லை. ஒரே ஒருநாள் தானே?பொறுத்துக் கொள்ளலாம் என்று புறப்பட்டான்.

ரிஸர்வ் செய்திருந்தபடியே அன்று இரவே பனையூரில் நிற்கிற பாஸஞ்சர் இரயிலாகத் தேடிப் பிடித்து ஏறிப் புறப்பட்டிருந்தான் சுகுமாரன்.

பனையூர் இரயில்வே ஸ்டேஷனிலிருந்து கிராமத்துக்குள்ளே போக ஆற்றோரமாக மூன்று மைல் நடந்து வேறு ஆக வேண்டும். காலை ஏழு மணிக்குப் பனையூர் வந்து சேர வேண்டிய பாஸஞ்சர் வண்டி ஒரு மணி முப்பத்தைந்து நிமிஷ்ம் லேட்டாக எட்டு முப்பத்தைந்துக்கு வந்து சேர்ந்தது.

இரயிலிலிருந்து இறங்கி அவன் நடந்து கிராமத்துக்குள் போய்ச் சேர்ந்தபோது காலை ஒன்பதரை மணி ஆகிவிட்டது.

அவன் வீட்டுக்குள் நுழைகிறபோது பெரியம்மா காப்பி போட்டுக் கொண்டிருந்தாள்.

“வா…”

“…..”

“செளக்கியமா? சித்தே இரு முதல் டிகாஷன் இறங்கியிருக்கு நல்ல காப்பியாத் தரேன், சாப்பிடு.”வெகுதூரத்திலிருந்து அமெரிக்காவிலிருந்து அவளுக்குப்பிடிக்காத எதையெதையோ பண்ணிக்கொண்டு வந்துவிட்டவனை வரவேற்பதுபோல் இல்லாமல் பக்கத்து ஊரிலிருந்து வருகிறவனை வரவேற்பது போல் சுகுமாரனுக்கு இந்த வார்த்தைகள் இயல்பாகவே இருந்தன. அவனும் தயங்கித் தயங்கிப் பெரியம்மாவைச் செளக்கியம் விசாரித்தான்.

காப்பியை அவனிடம் நீட்டும்போது, “நீ கொஞ்சம் வெளுத்திருக்கே” என்றாள் அவள். அவன் புன்முறுவல் பூத்தான்.

“குளிர் தேசமோல்லியோ” என்று அதற்குக் காரணம்போல மேலும் இரண்டு வார்த்தையையும் அவளே சேர்த்துச் சொல்லிக் கொண்டாள்.

இந்த அமைதி, இந்தப்பதவாகம், இந்த நறுவிசு எல்லாம் அவள் எந்தக் கணத்திலும் எவ்வளவு வேகமாகவும், தன்மேல் போர் தொடுக்கத் தொடங்கலாம் என்பதற்கு முன்னடையாளங்கள் போல் அவனுக்குத் தோன்றின. ஆனால் உடனே அப்படி எதுவும் நடக்கக் காணோம். பெரியம்மா வீட்டுப் பண்ணையாளைக் கூப்பிட்டு, “தோட்டத்திலே நல்ல பிஞ்சுக் கத்திரிக்காயா இருந்தாப் பறிச்சிண்டு வா! வந்திருக்கிறவருக்குக் கத்தரிக்காய் எண்ணெய்வதக்கல்னா ரொம்பப்பிடிக்கும்” என்று அவன் முன்னேயே உத்தரவிட்டாள்.

இப்போதில்லாவிட்டாலும் பகல் சாப்பாட்டின்போது பெரியம்மா அந்தச் சண்டையை ஆரம்பிக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு. இரயிலில் தூக்கம் இல்லாததால் நன்றாகத் தூங்கிவிட்டுப் பகல் பன்னிரண்டு மணிக்குமேல் தான்.அவன் எழுந்திருந்தான். குளித்து உடைமாற்றிக் கொண்டு தயாரானபோது பெரியம்மாவந்து சாப்பிடக் கூப்பிட்டாள். சாப்பாடு எல்லாம் ரொம்பப் பிரியமாகக் கேட்டு, கேட்டுத்தான் பரிமாறினாள்.அதில் ஒன்றும் குறைவில்லை.

பெரியம்மாவின் அமைதி அவனுக்கு ஆச்சரியத்தையே அளித்தது. அவளிட மிருந்து இரண்டு விதமான தாக்குதல்களை அவன் எதிர்பார்த்தான். ஒன்று ஜூலி விஷயத்தை நேரடியாகக் குறிப்பிட்டு, ஏன்டா, இப்படித் தலையெடுத்தே நீ? என்று திட்டுவாள். அல்லது பெண்களுக்கே உரிய சாமர்த்தியத்தோடு, ‘இங்கே நல்ல பொண்ணாகப் பார்த்திருக்கேன்டா ஜாதகமெல்லாம் பிரமாதமாப் பொருந்தியிருக்கு பண்ணிக்கிறியா?’ என்று ஆரம்பிப்பாள் என்பதாக அவன் எதிர்பார்த்தான்.

ஆனால் இரண்டுமே நடக்கவில்லை, ரொம்ப அதிசயமாக வழக்கமில்லாத வழக்கமாகச் சாப்பிட்டு முடித்ததும் வெற்றிலை, பாக்குச் சுண்ணாம்போடு ஒரு தட்டை அவன் முன் நகர்த்தினாள் பெரியம்மா. பிரம்மச்சாரிகள் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொள்ளக்கூடாது என்ற அழுத்தமான கொள்கையை உடைய பெரியம்மா தனக்குத் தாம்பூலம் வைத்துக் கொடுத்தது, நீ செய்தது எனக்குத் தெரியும்டா திருடா என்பதுபோல் குத்திக் காட்டுவதாகத் தோன்றியது, சுகுமாரனுக்கு அவன் தாம்பூலம் போட்டுக் கொண்டான். மறுபடியும் ஓர் இரண்டு மூன்று மணி நேரம் துக்கம் போட்டான். விழித்து எழுந்திருக்கும்போது மாலை ஐந்துமணி. அவனுக்கு மிகவும் பிடித்தமான ரவா கேசரி, வெங்காய அடை, (வெண்ணையுடன்) சிற்றுண்டி தயாராக இருந்தது.

ஒருவேளை டிபனைக் கொடுக்கும்போது பெரியம்மா அந்தப் பேச்சை ஆரம்பிக்கலாமோ என்று பயந்தான் அவன்.

ஊஹாம்! பெரியம்மா அப்போதும் தன் போரைத் தொடங்கவில்லை.

“இன்னும் ரெண்டு அடை சாப்பிடுடா! உனக்காகச் சிரமப்பட்டுப் பண்ணியிருக்கேன். நாக்குச் செத்துப் போய் வந்திருப்பே” என்றாள். அவன் தான் அன்றே புறப்பட்டுப் போக இருப்பதை அவளிடம் சொன்னான்.

“சாயங்காலம் ஏழு மணி பாஸஞ்சருக்குத் திரும்பறேன், பெரியம்மா! வேலை ஆர்டர் இன்னும் கிடைக்கலே, டெல்லியிலேயோ, கல்கத்தாவிலேயோ, எங்கே கிடைக்கும்னும் இன்னும் தெரியலே. ஜாயின் பண்ணினப்புறம் சாவகாசமா இன்னொரு தரம் வரேன்.”

“மகராஜனாப் போயிட்டு வா! ஒண்னுமில்லே, உன்னைப் பார்க்கணும்போல இருந்தது. என்னமோ ஒர் ஆசையிலே மனசு கிடந்து அடிச்சுண்டுது. அதான் வரச் சொல்லிக் கடிதாசு எழுதினேன். மேல்நாட்டிலேர்ந்து வந்து இறங்கினதும் இறங்காததுமா உன்னைக் கஷ்டப்படுத்திட்டேனோ என்னமோ, நான் பழைய காலத்து மனுஷி! எனக்கு ஒரு நாகரிகமும் தெரியாதுடா… நீ என் கடிதாசை மதிச்சு வருவியோ வரமாட்டியோன்னு கூட நினைச்சேன் வந்துட்டே! அந்தமட்டிலே எனக்கு ரொம்ப சந்தோஷம்.” அவனுக்குக் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுப்பது போல் குறுகுறுத்தது. பெரியம்மா தன் கன்னத்தில் இரண்டு அறை ஓங்கி அறைந்திருந்தால்கூட அவனுக்குத் திருப்தியாக இருந்திருக்கும் போலிருந்தது. அவள் எதையுமே கேட்காதது அவனுக்கு என்னவோ போல் இருந்தது. மனம் தவித்தது.

ஆயிற்று. இரயிலுக்குப் புறப்பட வேண்டிய நேரமும் நெருங்கிவிட்டது. “சின்னையா! வண்டியைக் கட்டுடா. ஐயாவை ஸ்டேஷனுக்குக் கொண்டு போய் விட்டுட்டு வரணும்” என்று பெரியம்மா வேலைக்காரனுக்கு இரைந்த குரலில் உத்தரவு போட்டுக் கொண்டிருந்தாள். “வழியிலே கண்டதை வாங்கிச் சாப்பிட்டு வயத்தைக் கெடுத்துக்காதே! இந்தா, இதை வச்சுக்கோ” என்று இரவு உணவாக இரயிலில் சாப்பிடுவதற்கும் ஒரு பொட்டலம் கொடுத்தாள் பெரியம்மா. அதைவிடப் பெரிய ஆச்சரியம் வண்டியில் பெரியம்மாவும் ஏறிக் கொண்டு ஸ்டேஷன் வரை அவனோடு வழியனுப்பப் புறப்பட்டதுதான்.

அவன் கேட்டான். “நீ ஏன் சிரமப்படனும், பெரியம்மா! நான் போயிக்க மாட்டேனோ? நீ ரயிலடிக்கு வழியனுப்ப வரணுமா என்ன?”

“இருக்கட்டும்டா இதிலே என்ன தப்பு? நீ அத்தனை துரத்திலிருந்து அவ்வளவு பெரிய படிப்புப் படிச்சிட்டுவந்தவன் என் கடிதாசைமதிச்சு இங்கே வந்திருக்கே! நான் உன்னை வழியனுப்பக்கூட ரயிலடி வரை வரக்கூடாதா என்ன?”

ஒன்றும் எழுதப் படிக்கத் தெரியாத அந்தப் பெரியம்மாவின் நாட்டுப்புறப் பெருந்தன்மையை இதயம் நிறையத் தாங்கி ஏற்று மரியாதை செய்ய வேண்டும் போலிருந்தது அவனுக்கு. ஆனால் பம்பாய், சென்னையில் படித்த உறவினர்கள், ஐ.ஏ.எஸ். உறவினர்கள் நாகரிகத்தின் உச்சாணிக் கொம்பில் இருப்பதாக நினைக்கும் நகர நண்பர்கள் எல்லாரும் கேட்டதுபோல் ஒரு கொச்சையான அல்லது பச்சையான கேள்வியை இன்னும் பெரியம்மா ஏன் தன்னிடம் கேட்கவில்லை என்பதைத்தான் உள்ளுற எண்ணி எண்ணி வியந்து கொண்டிருந்தான் அவன். ஸ்டேஷன் வந்தது. அவன் வண்டியிலிருந்து இறங்கி டிக்கெட் வாங்கினான். பெரியம்மா இறங்கி அவனுடைய பைகளில் ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டு அவனுடன் உள்ளே வந்தாள். வெறிச்சோடிக் கிடந்த கிராமாந்தர ஸ்டேஷனின் உட்புறம் வேப்ப மரத்தடியில் அவர்கள் இரயிலை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தனர்.

அந்தக் கடைசி நிமிஷத்திலாவது பெரியம்மா, “ஏண்டா, எங்களுக்கெல்லாம் தெரியாமே அமெரிக்காவிலேயே ஒரு பொண்ணைக் கலியாணம் பண்ணிட்டு வந்திருக்கியாமே? என்று பச்சையாகத்தன்னைக் கேட்டுவிட்டால் கூட நல்லது போல் தோன்றியது சுகுமாரனுக்கு அவள் அப்படிக் கேட்காவிட்டால் குற்ற உணர்வில் இங்கே தன் நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது. ஆனால் அவள் கேட்கவில்லை. தொலைவில் இரயில் புகையும் தெரியத் தொடங்கிவிட்டது.

“எங்கேயிருந்தாலும் உடம்பைக் கவனிச்சுக்கோ எண்ணெய்க் குளி தவறாதே…” பெரியம்மா சகஜமாக விடை கொடுக்கும்போது சொல்லும் வார்த்தைகளை, சொல்லத் தொடங்கினாள். சொல்லும்போது அவளுக்குக் கண்கலங்கிவிட்டது.

புறப்படுவதற்குள் தானாகவே அதைச்சொல்லாத பட்சத்தில் பெரியம்மா அதைப் பற்றி கேட்கவே மாட்டாள் என்று தோன்றிவிட்டது அவனுக்கு. சொல்லாமல் போனால் அவன் நெஞ்சே வெந்துவிடும்போல் இருந்தது. இரயிலும் அருகே தென்பட்டது.

“பெரியம்மா! உங்கிட்ட ஒரு விஷயம். வந்து.”

“என்னது?. சொல்லேன். எங்கிட்ட என்னடா வெட்கம் வேண்டிக் கிடக்கு?”

“நான் அமெரிக்காவிலே படிக்கிறப்பவே ஜூலின்னு ஒருபெண்ணைக் காதலிச்சுக் கலியாணம் பண்ணிண்டு வந்திருக்கேன். அவளும் இங்கே என்னோட வந்திருக்கா நீ கோபிச்சுப்பியோன்னு நான் இங்கே அவளை அழைச்சிண்டு வரலை. பம்பாயிலேயே விட்டுவிட்டு வந்திருக்கேன்.”

“தெரியும்டா! நானும் கேள்விப்பட்டேன். அது உன் சொந்த விஷயம்; நீயாச் சொல்லாதபோது உன்னை எப்படி அதைக் கேக்கறதுன்னு தான் நான் அதைக் கேக்கலை.”

“நீ கோபிச்சிப்பியோன்னுநான் சொல்லலை.”

“நீ தப்பா நினைச்சிப்பியோன்னு தான் நான் கேட்கலை.”

“நீ இப்படி இருப்பேன்னு தெரிஞ்சிருந்தா அவளையும் என்னோட கூட்டிண்டு வந்திருப்பேன் பெரியம்மா”

“கூட்டிண்டு வராதது உன் தப்புதான். வந்திருந்தா நானும் சந்தோஷப் பட்டிருப்பேண்டா.”

சுகுமாரனுக்குத் தன் செவிகளையே நம்ப முடியவில்லை. பெரியம்மா எந்தப் பல்கலைக்கழகத்தில் நாகரிகம் படித்தாள்? அவளுக்கு இப்படி இருக்க யார் கற்பித்தார்கள்?’ என்று எண்ணி எண்ணித் தன் மனம் கொள்ளாமல் வியப்பதைத் தவிர அவனால் அவளிடம் ஒன்றும் பதில் பேச முடியவில்லை. இரயில் வந்து புகையை கக்கிக்கொண்டு பெருமூச்சு விட்டபடி நின்றது. அவன் முதல் வகுப்புப் பெட்டியைத் தேடி ஏறிக் கொண்டான். பிளாட்பாரத்து வேப்ப மரத்தடியில் கண்கலங்க நிற்கும் பெரியம்மாவைப் பார்த்துக் கையை ஆட்டினான். கையைப் பதிலுக்கு ஆட்டிவிட்டு வெள்ளைப்புடவைத் தலைப்பால் கண்ணிரைத் துடைத்துக் கொள்வது தெரிந்தது. இரயில் சிறிது தொலைவு சென்றதும் அவன் வளைவிலிருந்து திரும்பிப் பார்த்தபோது, அட்டையில் கட்டியது போன்ற சிறிய ஸ்டேஷன் கட்டமும் வேப்பமரமும் வில்வண்டியும் பெரியம்மாவும் ஒரு தெளிவான படத்தில் தெரிவது போல் தெரிந்தார்கள். இந்த உலகிலேயே மிகவும் நாகரிகமான ஒரு பெரிய மனுவியைப் பார்ப்பது போல பெரியம்மாவின் உருவத்தைப் பயபக்தியோடு திரும்பிப் பார்த்தான் அவன். பின்பு மெல்லத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் :-

‘இந்தக் கிராமத்தில் ஒரு பல்கலைக்கழகம் இருந்தால் நான் இங்கேயே வேலைக்கு வந்துவிடலாம். ஆனால்?’

‘வேண்டாம்! வேண்டவே வேண்டாம்! இதன் நாகரிகமும் அமைதியும் சீரழியும்படி இங்கு ஒரு பல்கலைக்கழகம் வேண்டாம். இது இப்படியே இருக்கட்டும்.’

பனையூருக்கு எதற்குத் தனியான ஒரு பல்கலைக்கழகம்?

பனையூரே ஒரு பல்கலைக்கழகம் தானே!

அவன் கண்களில் மெல்ல நீர் கரைந்து பார்வை உழன்றது. இரயிலின் வேகம் அதிகமாயிருந்தது.

– கல்கி, தீபாவளி மலர், 1970, நா.பார்த்தசாரதி சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி), முதற்பதிப்பு: டிசம்பர் 2005, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *