ஜெயுச்சுட்டேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 8,805 
 

மீனாட்சிக்குத் தலைகால் புரியவில்லை. நல்ல வேளை! அவளுக்கு நடனம் தெரியாது. தெரிந்திருந்தால் ஒரு ஆனந்த நடனமே ஆடியிருப்பாள். என்ன ஒன்றும் புரியலையா? நான் பாட்டுக்கு இப்படிக்கு புதிர் போட்டிண்டிருந்தால் உங்களுக்கு எப்படிப் புரியும்?

மீனாட்சியின் ஏகப்புத்திரன் விஸ்வா என்கிற விஸ்வநாதன் வெளிநாடு போய் ஏழு வருஷம் ஆகிறது. அவனுக்குத்தான் இப்பொழுது கல்யாணம் நிச்சயமாகியிருக்கிறது. வேண்டாமென்று சொல்லிக்கொண்டிருந்தவன் ஒரு வழியாக ஒப்புக்கொண்டு, இங்கே அம்மா மீனாட்சியும் அப்பா சாந்தாராமும் அந்த ஊரிலேயே இன்னொரு பெரிய மனிதரின் பெண் தேவியைப் பேசிமுடித்தாகிவிட்டது. இண்டர்நெட்டில் பெண் பார்த்து, வாட்ஸ்ஏப்பில் சேட் பண்ணி நிச்சயதார்த்தம் வரை வந்தாச்சு.

மீனாட்சிக்கு, லேடிஸ் க்ளப் நண்பிகளிடமிருந்து ஃபோன் கால்கள். கல்யாணம் நிச்சயமானதுக்கு வாழ்த்துத் தெரிவித்து. இதோ மறுபடியும் இன்னொரு ஃபோன்.

“என்ன மீனாட்சி, ஜெயிச்சுட்டே போ. பிள்ளைக்குக் கல்யாணம் நிச்சயமாயிடுச்சுன்னு கேள்விப்பட்டேனே. உண்மையா?”-குரலில் மெலிதான பொறாமை எட்டிப்பார்த்தது.

“ஆமா, ஜெயிச்சுட்டேன் கௌரி, வர்ற 16ந்தேதி ஃப்ங்க்ஷன். அழைப்பு அனுப்புறேன். கண்டிப்பா வரணும்.”

இந்த கௌரியின் பையன் சைனாவில் இருக்கிறான். ஒரு சைனாப்பெண்ணைக் காதலித்துக்கொண்டிருக்கிறான். அவளைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன். இல்லையென்றால் இப்படியே இருக்கிறேன் என்று பிடிவாத்துடன் இருக்கிறான். கௌரி அதற்குமேல் பிடிவாதமாக அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

இந்த விஷயம் மீனாட்சிக்கும் தெரியும். தவிரவும் இன்னும் எத்தனையோ தெரிந்த வீடுகளில் இந்த மாதிரியான திருமணங்கள் நடப்பதையும் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அப்பொழுதெல்லாம் அவள் வயிற்றில் புளியைக்கரைக்கும்- தன் பிள்ளையும் இப்படி செய்துகொண்டு விடுவானோ என்று. அதையும் மீறி அவளுக்குள் ஒரு நம்பிக்கை உண்டு. தன் பையன் சத்புத்திரன். அந்தமாதிரியெல்லாம் செய்யமாட்டான்னென்று.

இதோ அவள் நினைத்தமாதரியே இப்பொழுது தங்கள் குடும்பத்திற்கு ஏற்ற இட்த்தில் சம்பந்தம். மகிழ்ச்சியில் திக்குமிக்காடினாள்.

அந்த நாளும் வந்த்து. சுற்றமும் நட்பும் சூழ மிக விமரிசையாக நிச்சயதார்த்தம் நடந்தேறியது. மிக அடக்கமான, அதேசமயம் நன்கு படித்த தேவி அவளுக்கு மருமகளாகப் போகிறாள். கல்யாணம் ஆறு மாதம் கழித்து அந்த ஊரிலேயே மிகப்பெரிய மண்டபத்தில். விஸ்வா நிச்சயம் முடிந்து அடுத்தநாள் ஊருக்கு விமானமேறினான்.

இங்கு திருமண ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தன. திருமணத்திற்கு முன்பாகவே தேவி எதிர்காலப் புகுந்தவீட்டிற்கு வந்து போய்க்கொண்டிருந்தாள். மீனாட்சி, அவளுக்குத் தன் பிள்ளைக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று வகுப்பு நடத்திக்கொண்டிருந்தாள்!!!

திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதம்தான் இருக்கிறது. அழைப்பிதழ்கள் அச்சாகி வந்துவிட்டன. மீனாட்சியும், சாந்தாராமும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அழைப்பிதழ்களை அனுப்பத்தொடங்கினர். கல்யாணவீடு என்பார்களே அதுபோல் வருவோரும் போவோரும் வீடே கலகலக்கத் தொடங்கியது. விஸ்வா, திருமணத்திற்கு இருநாள் முன்புதான் வரமுடியும் என்று சொல்லிவிட்டான். உதவிக்கு ஆள் இல்லாமல் தம்பதிகள் அவர்களே எல்லா ஏற்பாடுகளையும் பார்த்துப்பார்த்துச் செய்து கொண்டிருந்தனர். தெய்வமே இவர்கள் உதவிக்கு ஆள் அனுப்பியதுபோல் பிரபாகர் வந்தான். அவனுக்கும் வெளிநாட்டில்தான் வேலை. விஸ்வா வேலை பார்க்கும் அதே ஊரில்தான் அவனும் இருக்கிறான். சிறுவயதிலிருந்தே இருவரும் நண்பர்கள். அவன் வீட்டின் உள்ளே நுழைவதைப் பார்த்தத் தம்பதியர், இனி தங்களுடைய வேலைப்பளு குறைந்துவிடும் என்ற மகிழ்ச்சியில் அவனைப் பலமாக வரவேற்றனர்.

“வாப்பா,வா, நீயாவது விஸ்வா மாதிரி இல்லாமல் முன்பே வந்தாயே. இனி மத்த வேலைக்கெல்லாம் நீதான் பொறுப்பு. இந்தாப் பிடி லிஸ்ட்டை. இதில் மேற்கொண்டு என்னென்ன கல்யாணவேலை பாக்கி இருக்குங்கற விவரமெல்லாம் இருக்கு.”

வந்தவன் மௌனமாக அமர்ந்தான். எப்படி விஷயத்தை ஆரம்பிப்பது என்று யோசித்தமாதிரி இருந்தது. இவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பவர்களிடம் இந்த விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது? தைரியத்தை வரவழைத்துக்கொண்டான்.

“ஆண்ட்டி,அங்கிள், நான் ஒன்று சொல்லப்போறேன். என்னத் தப்பா எடுத்துக்காதீங்க. இந்த விஷயத்தை எப்படியாவது உங்களுக்கு தெரியப்படுத்தணும்னுதான் ஒரு மாதம் முன்னாடியே இந்தியா வந்தேன். விஸ்வா.”……….என்று இழுத்தான். பதறிப்போன பெற்றோர்களைப் பார்த்து, “ விஸ்வாக்கு ஒன்றுமில்லை. அவன் ரொம்ப நன்றாக இருக்கிறான். அவன் வெளிநாட்டு மனைவியுடன்” என்று தைரியமாக முடித்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *