‘உங்களில் யார் கோடீஸ்வரன்’ நிகழ்ச்சி. ‘உலகத்தோட எந்த மூலையில இருக்கற நாட்டைப் பத்தியும் தெரியும். தினம் தினம் பேப்பர் படிச்சு அப்டேட்டா இருக்கேன்’’ என்று மார் தட்டிக் கொண்ட செல்வரத்தினம், அந்த பிரபல நடிகர் கேட்ட கேள்விகளுக்கு மின்னல் வேகத்தில் பதில் சொன்னார்.
‘‘லீச்டென்ஸ்டைன் என்பது..?’’
‘‘ஆஸ்திரியா அருகிலுள்ள ஒரு நாடு!’’
‘‘ரஷ்யாவில் கார்பசேவ் கொண்டுவந்த மாற்றம்…’’
‘‘பெரஸ்தராய்க்கா!’’
‘‘ஐ.சி.பி.எம் என்பதன் விரிவாக்கம்?’’
‘‘இன்டர் கான்டினென்டல் பாலிஸ்டிக் மிசைல்…’’
‘‘சூப்பர்! உங்களுக்குத் தெரியாத விஷயமே இல்லை போலிருக்கே’’ என்று எழுந்துவந்து அந்த நடிகர் கட்டிப் பிடிக்க, பரவசத்தின் உச்சிக்கே போனார் செல்வரத்தினம். பெரிய பரிசுத் தொகையை வென்று, மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தவரின் கைபேசி சிணுங்கியது. அவரது மகன் கௌதம் படிக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் பேசினார்.
‘‘மிஸ்டர் செல்வரத்தினம், உங்க பையன் கௌதம் ஒரு மாசமா பள்ளிக்கூடம் வரல. என்ன பண்றான்னு விசாரிச்சோம். யாரோ சில ரௌடிப் பசங்களோட சேர்ந்து ஊர் சுத்திக்கிட்டிருக்கான்னு தெரிய வந்தது. கொஞ்சம் உங்களை சுத்தி என்ன நடக்குதுன்னு பாருங்க. சொந்தப் பையன் என்ன பண்றான்னு கூட தெரிஞ்சு வச்சுக்காம அப்படி என்னதான் பண்றீங்களோ தெரியல!’’
பதில் பேச முடியாமல் சிலையானார் செல்வரத்தினம்.
– 01 ஜூலை 2013
Good one!