கோகிலாவுக்கு முப்பது வயசு கூட நிரம்பவில்லை! ஒரு பெரிய நிறுவனத்தின் எம்.டி. அவள் கணவன் பரத் ஒரு தலை சிறந்த சாப்ட்வேர் கம்பெனியில் சீனியர் இன்ஜினீயர்.
அவர்களுக்கு சகல வசதிகளும் உண்டு. அவர்களுக்கு கிடைக்காத ஒரு விஷயம் நேரம் என்பது தான்! கிடைக்கும் நேரத்தை நன்கு அனுபவித்து மகிழும் ஜோடி! ஜாலிலோ ஜிம்கானா…டோலியோ கும்கானா தான்!
வீட்டில் எல்லா வேலைக்கும் ஆட்கள் உண்டு. இருவருமே செலவு செய்வதற்கும், மற்றவர்களுக்கு கொடுப்பதற்கும் அஞ்சாதவர்கள். தங்கள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி, சமையல்காரி, தோட்டக்காரன் எல்லோருக்கும் தாராளமாக சம்பளம் வழங்கினார்கள். அதனால் எல்லோருக்குமே அவர்கள் இருவர் பேரிலும் ரொம்ப மரியாதை!
அன்று காலை எட்டு மணியிருக்கும். கோகிலா குளித்து விட்டு, அவசர அவசரமாக டிரஸிங் டேபிள் முன் உட்கார்ந்து, ஆபிஸுக்குப் போக தயாராகிக் கொண்டிருந்தாள்.
அவர்கள் வீட்டு வேலைக்காரி முத்தம்மா படிக்காதவள். நீண்டகாலமாக அங்கு வேலை செய்கிறாள்.கோகிலா மனம் கோணாமல் நடந்து கொள்வாள்.
படுக்கையறையைக் கூட்டி விட்டு வந்தவள், தயங்கி, தயங்கி கோகிலா பக்கத்தில் வந்து நின்றாள்.
அவள் எதோ சொல்ல விரும்புகிறாள் என்பதைப் புரிந்து கொண்ட கோகிலா, “என்ன முத்தம்மா வேண்டும்?…தயங்காமல் சொல்லு!..”
“ வந்து…வந்து…” முத்தம்மா ரொம்பத் தயங்கினாள்.
“என்னவாக இருந்தாலும் தைரியமாச் சொல்லு!…”
“ தப்பா இருந்தா மன்னிச்சுக்கம்மா… தினசரி உங்க பெட் ரூமையும் நான் தான் கூட்டுகிறேன்….பல சமயங்களிலே கட்டிலுக்கு கீழே ஓரமா ராத்திரி பயன் படுத்திய சமாச்சாரம் எல்லாம் கிடக்குதும்மா!……அதெல்லாம் மற்றவங்க கண்ணிலே படக் கூடாதுங்க… வீடுங்கறது புனிதமான கோயில் மாதிரி!…நான் இதற்கு முன்பு லாட்ஜில் வேலை செய்திருக்கேன்..எனக்கு லாட்ஜ் ஞாபகம் வருதம்மா!….”
கோகிலாவை யாரே கன்னத்தில் ‘பளார் பளார்’ என்று அறைந்தது போல் இருந்தது.
“முத்தம்மா என்னை மன்னிச்சிடு!…இனிமே அதுமாதிரி தப்பு வீட்டில் நடக்காது!” என் கண் கலங்கினாள்.