சிறிது நாட்களாக ராமநாதன் தம்பதியர், அவர்கள் வீட்டை ஒட்டியே கட்டி வாடகைக்கு கொடுத்திருந்த வீட்டில் வசிப்பவர்களிடையே ஏதோ சச்சரவு நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்களால் உணர முடிந்தது. நடுத்தர வயதுடைய கணவன் மனைவி இருவரும், மற்றும் வயதான தம்பதியர்.அவ் வீட்டில் வசிக்கிறார்கள்.
நடுத்தர தம்பதியர் இருவருமே வேலைக்கு செல்பவர்கள். வீட்டில் வயதான பெற்றோர், அளவான குடும்பம் என்பதால் அவர்களுக்கு ராமநாதன் தம்பதியர் வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக எந்த பிரச்சினையும் இல்லாமல்தான் ஓடிக்கொண்டிருந்தது. இந்த ஒரு மாதமாகத்தான் வீட்டிற்கு யார் யாரோ வருகிறார்கள், கொஞ்சம் சத்தமாக பேசுகிறார்கள், சில நேரங்களில் இவர்களின் குரல் கூட உயர்ந்து ஒலித்து. வாக்குவாதங்களாக கூட கேட்டு கொண்டிருக்கிறது.
அன்று ஞாயிற்று கிழமை. விடுமுறை என்பதால் ராமநாதன் நிதானமாக எழுந்து காலை கடன் எல்லாம் முடித்து விட்டு முன் அறையில் போட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து செய்தி தாளை நிதானமாக வாசித்து கொண்டிருந்தார். .
பக்கத்து வீட்டில் திடீரென்று குரல் உயர்த்தி யாரோ பேசிக்கொண்டிருப்பது இவர்களுக்கு கேட்டது. ராமநாதன் மனைவி அவரிடம் முகம் சுழித்து இந்த ஒரு வாரமாவே இப்படித்தான், நீங்க ஆபிஸ் போயிடறீங்க, இங்க என்னால இருக்க முடியலை, அவ்வளவு சத்தமா பேசிக்கிறாங்க. குற்றம் சாட்டும் பாவனையில் சொன்னாள்.
ராமநாதன் எழுந்துசென்று பக்கத்து வீட்டு வாசலில் நின்று புருசோத்தமன் சார் என அழைத்தார். அதுவரை குரல் சத்தமாய் பேசிக்கொண்டிருந்தது சட்டென்று அமைதியானது, புருசோத்தமன் வெளியே வந்தார். இவரை கண்டதும் கொஞ்சம் பதட்டமானார்.
என்னாச்சு சார் ஒரு வாரமா சத்தமா இருக்கு, ஏதாவது பிரச்சினையா? நட்பாய் கேட்பது போல கேட்டார்.
அதெல்லாம் ஒண்ணுமில்லை சார், ஊருல இருந்து சொந்தக்காரங்க வந்துட்டும் போயிட்டும் இருக்காங்க, சாரி சார்..இனி சத்தம் வராம பார்த்துக்கறேன். நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க.
என்னால ஏதாவது உதவி செய்யனும்னா சொல்லுங்க ராமநாதனின் இந்த கேள்விக்கு உணர்ச்சி வசப்பட்ட புருசோத்தமன் ரொம்ப நன்றி சார், இது சொந்தகாரங்களுக்குள்ள வந்துட்ட சிக்கல்தான் சார் சரி பண்ணிடுவேன் சார், தொந்தரவுக்கு மன்னிச்சுக்குங்க சார்..
ராமநாதனை பொறுத்தவரை தான் வாடகைக்கு விட்டிருக்கிறோம், அதனால் நாம் சொல்வதைதான் அவர்கள் கேட்கவேண்டும் என்கிற எண்ணம் எல்லாம் கொண்டவரல்ல..
இவர்களுக்கு முன்னர் இருந்த குடும்பம் பத்து வருடங்கள் வசித்து மகனின் மாற்றலினால்தான் வீட்டை காலி செய்து போனார்கள். அதற்கே அவர்கள் இவர்களை விட்டு பிரிவதற்கு அவ்வளவு அழுதார்கள்.
மறு நாள் எல்லோரும் வேலைக்கு சென்று விட்டார்கள். இவர் அரை நாள் விடுப்பெடுத்து பக்கத்தில் நடந்த ஒரு திருமண விழாவிற்கு காலை நேரத்திலேயே சென்று விட்டு வீட்டுக்கு பதினோரு மணிக்கு திரும்பினார். இனி வீட்டுக்கு போய் வேலைக்கு மதியம் போய் சேர்ந்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருந்தார்.
வீட்டுக்குள் நுழையும் போதே பக்கத்து வீட்டில் பேச்சு சத்தம் அதிகமாக இருந்த்து.
நேற்றுத்தானே சொன்னோம், அதற்குள், இலேசான கோபத்துடன் பக்கத்து வீட்டு வாசலில் நின்று புருசோத்தமன் சார்..கூப்பிட்டார்.
இரண்டு நிமிடம் அமைதி…புதிய முகம் ஒன்று எட்டி பார்த்தது, முப்பது முப்பத்தி ஐந்து வயது மதிக்கத்தகுந்த ஆண்.நின்று கொண்டிருந்தான்.
பிரபாகர் இல்ல்லயா? ராமநாதன் கேட்டார், இல்லை சார் அவங்க இரண்டு பேரும் வேலைக்கு போயிட்டாங்க. நீங்க? மீண்டும் கேள்வியை அவனிடம் கேட்டார்
சார் உள்ளே இருக்கற வயசானவங்களோட மூணாவது பையன், சார், அப்பாவையும் அம்மாவையும் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக வந்திருக்கேன்.
இல்லை வீட்டுக்குள்ள ஒரே சத்தமா இருந்துச்சே, அதனால பார்த்தேன், ராமநாதன் சொல்லவும், சார் நீங்க கொஞ்சம் வந்து சொல்லுங்க சார், இவங்க என்னோட வீட்டுக்கு வரமாட்டேங்கறாங்க.
ஆச்சர்யமாக இருந்த்து இராமநாதனுக்கு, இந்த காலத்தில் இப்படி ஒரு பிள்ளை வருந்தி வருந்தி அழைக்கிறான், போக மாட்டேனென்று அடம்பிடிக்கிறார்களே.
அவங்க இரண்டு பேரும் வேலைக்கு போறதுக்கு முன்னாடி அவங்களையே பேச சொல்லி கூட்டிட்டு பொயிருக்கலாமில்லை.
சார் பிரச்சினையே அவங்கதான் சார், இவங்களை அனுப்ப மாட்டேன்கறாங்க.
ஏம்ப்பா அவரும் ஒரு மகன்தானே, இவங்களை தானே வச்சுக்கணும்னு ஆசை இருக்காதா?
அவங்க இவங்களுக்கு பையனும் கிடையாது, அநதம்மா மகளும் கிடையாது சார், பணத்துக்காக இவங்களை இங்க கூட்டி வந்து வச்சுகிட்டு அனுப்ப மாட்டேங்கறாங்க சார், விட்டால் அழுது விடுவான் போலிருந்தது.
இவங்க அவங்களுக்கு பெற்றோரே இல்லாதப்ப எதுக்காக இவங்களை இங்க தங்க வச்சு அவங்க வாரிசுக கிட்ட அனுப்ப மறுக்கணும், யோசனையுடன் அவங்க வந்தா நீ கூட்டிட்டு போப்பா, ஆனா இங்க சத்தம் போடாதே, சொன்னவர் இதுக்கு ஒரு முடிவு கட்டியாகனும் என்று மனதுக்குள் நினைத்தபடி தன் வீட்டுக்குள் நுழைந்தார்..
மாலை அவர்கள் இருவரையும் தன் வீட்டுக்கே அழைத்தவர், இங்க பாருங்க, புருசோத்தமன் சார் உங்க சொந்த விஷயத்துல மூக்கை நுழைக்கறேன்னு நினைக்காதீங்க, அக்கம் பக்கம் எந்த பிரச்சினையும் இல்லாம இருக்கணும்னு நினைக்கறோம். அந்த பெரியவங்களை நீங்க கூட வச்சிருக்கறதுனாலதான் அவங்க பசங்க பொண்ணுங்க வந்து சத்தம் போட்டுட்டு போறாங்க. இது எங்களுக்கு இடைஞ்சலா இருக்குது, அதனால.. இழுத்தார்.
ஐந்து நிமிடம் அந்த தம்பதி அமைதியாய் இருந்தனர். எங்களுக்கு ஒரு இரண்டு மாசம் டைம் கொடுங்க சார், அதுக்குள்ள வேற வீடு பார்த்துக்கறோம். அவர்கள் இப்படி சொல்லவும் ராமநாதனுக்கு கோபம் வந்தது, வீட்டை காலி பண்ணி தர்றேன்னு சொல்றீங்களே தவிர அந்த பெரியவங்களை எதுக்கு நீங்க புடிச்சு வச்சிருக்கீங்க?
சார் உங்ககிட்டே ஒரு உண்மைய சொல்றேன் சார், அவங்க எங்களை பெத்தவங்க இல்லைதான். என் மனைவியோட சித்தப்பா ஆகணும், அதாவது என் மாமியாருக்கு தங்கை,. எங்களுக்கு கல்யாணம் ஆகி பதினைஞ்சு வருசமா குழந்தை இல்லை. சரி தத்து எடுத்துக்கலாமுன்னு நினைச்சுகிட்டிருந்தோம். ஒரு முறை எங்க ஊருக்கு போயிருந்தப்ப, இவங்க இரண்டு பேரும் எங்க ஊரு ஆத்துல குதிக்கறதுக்கு முயற்சி பண்ணிகிட்டிருந்தாங்க.
நாங்க அவங்களை காப்பாத்தி என்னன்னு விசாரிச்சப்ப அவங்க பையன் பொண்ணு எல்லாம் சேர்ந்து இவங்களை விரட்டி விட்டுட்டாங்க., தோட்டம் காடு எல்லாம் அவங்களுக்கு பிரிச்சு கொடுத்துட்டாங்களாம். அன்னாடம் அவங்ககிட்டே சாப்பாட்டுக்கு கையேந்தி நிக்கறதுக்கு அவமானப்பட்டு இந்த முடிவை எடுத்தாங்களாம். நாங்க அப்ப இவங்களையே தத்து எடுத்து கூட்டிட்டு போகலாமுன்னு முடிவு பண்ணி அவங்களை கூட்டிட்டு இங்க வந்து குடியிருக்கறோம்.
அஞ்சு வருஷமா குடியிருந்திட்டிருக்கோம், ஏதாவது பிரச்சினை வந்திருக்கா ? இப்ப அவங்க மூதாதை சொத்து கொஞ்சம் வந்திருக்கு, அதுக்கு இவங்க கையெழுத்து வேணும், அதுக்காக தினமும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வந்து சண்டை போட்டுட்டு இருக்காங்க. நாங்க போய் அவங்க என்ன கேக்கறாங்களோ அதுல போய் கையெழுத்து போட்டுட்டு வந்துடுங்கன்னு சொல்லிகிட்டுத்தான் இருக்கோம். ஆனா அவங்க அங்க போறதுக்கு பயந்துட்டு போகமாட்டேங்கறாங்க., எங்க மறுபடி அவங்க கையை எதிர்பார்த்து உட்கார வச்சிடுவாங்களோன்னு.
நாங்களும் என்ன ஆனாலும் சரி இவங்களை மறுபடி தனியா விடக்கூடாது அப்படீங்கற எண்ணத்துலதான் வீடு மாறிட்டாலும் பரவாயில்லைன்னு சொன்னேன் சார்.
ராம்மூர்த்தியும் அவர் மனைவியும் இதை கேட்டவுடன், சார் உங்களை பாராட்டறோம், நீங்க எங்கேயும் போக வேண்டாம், வீடு மாறினாலும் அவங்க அங்க வந்து சத்தம் போடமாட்டங்கன்னு என்ன நிச்சயம்?
அதுவும் சரிதான் சார் தலையை ஆட்டினார் புருசோத்தமன். ஒண்ணு பண்ணுங்க அவங்க எப்ப கூப்பிடறாங்களோ அப்ப நீங்க இரண்டு பேரும் பெரியவங்களை கூட்டிட்டு போய் அவங்க கையெழுத்து போட சொல்ற இடத்துல போட்டுட்டு கையோட கூட்டிட்டு வந்துடுங்க. வேற என்ன பண்ணமுடியும் நம்மால..!
ரொம்ப நல்ல ஐடியா சார், நாளைக்கு வந்தாங்கன்னா அவங்க பசங்க பொண்ணுக கிட்ட சொல்லி அனுப்பிச்சிடறோம்.
ராமநாதனுக்கு சொத்து எந்தளவுக்கு உறவுகளை மோசமாக்குகிறது என்று நினைத்து கொண்டார்.