செல்லம்மாளின் மறுமணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 14, 2021
பார்வையிட்டோர்: 4,153 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘டக் டக்’ என்ற பூட்ஸ் சத்தம் , அந்த ‘ ஸ்பெஷல் வார்’டில் நிறைந்திருந்த அமைதியை மிகைப்படுத்திக் காட் டிற்று. அந்தச் சத்தம் நாலாம் நம்பர் அறையை நெருங்கிய போது செல்லம்மாளின் கட்டிலைச் சுற்றி நின்று கொண்டி ருந்த எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். டாக்டர், படுக்கையருகே சென்று ஒரு முக்காலியில் அமர்ந்து செல்லம்மாளின் உடல் நிலையைச் சோதித்துப் பார்த்து விட்டு, ஒன்றும் பேசாமல் அப்படியே கொஞ்சநேரம் உட்கார்ந்திருந்தார். பிறகு, மீண்டும் ஒரு தடவை செல்லம்மாளின் நாடியைப் பிடித்துப் பார்த்தார். அப்புறமும் சற்று நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தார். பிறகு திடீரென்று எழுந்திருந்தார். இரண்டடி பின்னுக்கு வந்து ராமலிங்கத்தின் தோளில் லேசாகத் தட்டி, தம்முடன் வருமாறு சைகை செய்தார். ராமலிங்கம் திடுக்கிட்டவராக டாக்டரைப் பின் தொடர்ந்தார். டாக்டர் அவரை ஓர் ஓரமாக அழைத்துச் சென்று, பூர்வ பீடிகை ஏதுமில்லாமல் சொன்னார். “உம்முடைய மனைவிக்கு இன்னும் ஒரு தடவைதான் நினைவு திரும்பலாம். அது வந்து போய் விட்டால் …… அவ்வளவு தான் ……”

ராமலிங்கம் தரையை நோக்கியவாறு உணர்ச்சி எதை யும் காட்டிக் கொள்ளாமல் அந்தச் செய்தியை ஏற்றார். இருவரும் கட்டிலுக்குத் திரும்பினார்கள். மற்றவர்கள் எல்லோரும் ஆவலுடன் இருவர் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தார்கள். அவர்களால் எதையும் ஊகிக்க முடிய வில்லை .

‘டக்டக்’ சத்தம் அந்த அறையிலிருந்து கிளம்பி, தாழ்வாரமெங்கிலும் எதிரொலித்து மங்கி மறைந்தது.

ராமலிங்கம் செல்லம்மாளின் முகத்தையே கண் கொட் டாமல் பார்த்துக் கொண்டு நின்றார். எழுபது வருஷம் வாழ்ந்து வைரம் பாய்ந்திருந்த அவருடைய தேகம், எல்லை யற்ற மனக்கிளர்ச்சியால் துவண்டு போய் விகாரமாகத் தோற்றமளித்தது.

கட்டிலின் ஒரு பக்கத்தில் மகன் வைத்தியும், மருமகள் சரோஜாவும், பெண் உஷாவுடன் நின்று கொண்டிருந் தார்கள். காலடியில் மகள் கமலாவும், மாப்பிள்ளை மணியும், பையன் ரங்குவும் நின்று கொண்டிருந்தார்கள். அவர் ஏதேனும் சொல்ல மாட்டாரா என்று அவர்கள் எல்லோரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.

செல்லம்மாள் கட்டை போல் படுத்துக் கிடந்தாள். அவளையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்த ராமலிங் கத்தின் முகத்தில், திடீரென்று ஒரு மலர்ச்சி தென்பட்டது ; அவருடைய உடல் ஒரு தடவை சிலிர்த்துக் கொண்டது. உடனே எல்லோரும் செல்லம்மாளைப் பார்த்தார்கள். இது வரை அசைவற்றுக் கிடந்த அவளுடைய உடம்பு , சற்றே அசைந்ததாகத் தோன்றிற்று. செல்லம்மாளுக்கு நினைவு திரும்பிக் கொண்டிருந்தது.

அப்போதுதான் யாரும் எதிர்பார்க்காத காரியம் ஒன்றை ராமலிங்கம் செய்தார். கதவுப் பக்கம் நகர்ந்து கொண்டே அவர் சைகை காட்டி எல்லோரையும் வெளியே அழைத்தார். மணி, வைத்தி, கமலா, சரோஜா, ரங்கு, உஷா- ஆறு பேரும் அவர் பின்னே சென்றார்கள்.

அரை நிமிஷம் கழித்து ராமலிங்கம் மட்டும் உள்ளே வந்தார். பாய்ந்து கட்டிலருகில் போய், செல்லம்மாளின் காலடியில் நின்று கொண்ட அவருடைய கண்களிலிருந்து நீர் வழிந்தது; உடல் நடுங்கிற்று.

அவர் மனத்தில் அடைபட்டுக் கிடந்த உணர்ச்சிக ளெல்லாம் உடைப்பெடுத்துக் கண்ணீர்ப் பிரவாகமாய்ப் பெருக ஆரம்பித்தன. ராமலிங்கம் தம் முகத்தை இரு கைகளாலும் மூடிக் கொண்டு உடல் குலுங்க, உள்ளம் குலுங்க அழுதார்.

செல்லம்மாள் திடீரென்று ஒரு தடவை புரண்டு விட்டுக் கண் விழித்தாள். அதே சமயம் ராமலிங்கம் தம் கைகளுக்குள் புதைந்திருந்த முகத்தை நிமிர்த்திப் பார்த் தார். மறுகணம், ”என் அருமைச் செல்லம்மா ! என்னை மன்னிப்பாயா?” என்று கதறிக் கொண்டே அவள் காலடியில் விழுந்து, அவளுடைய இரு பாதங்களையும் எடுத்துத் தம் முகத்தோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். செல்லம்மாளின் உடல் முழுவதிலும் மின்சார வேகத்துடன் புது சக்தி ஒன்று பாய்ந்தது. ”ஐயோ , நான் எங்கிருக்கிறேன்?” என்று தீனமான குரலில் கேட்டாள் அவள்.

நாற்பது வருஷங்களுக்குப் பிறகு முதல் தடவையாக இன்று தனது அறுபத்தேழாவது வயதில், அதுவும் மரணப் படுக்கையில், அவள் கணவனின் ஸ்பரிசத்தை உணர்ந்து இன்பம் பெற்றாள்.

அருமையாகத் துவங்கிய மண வாழ்க்கை அது. ராமலிங்கத்தை அவருடைய அறிவுக்காகவும், ஆண்மைக் காகவும் கணவனாகத் தேர்ந்து கொண்டவள் செல்லம்மாள். ஆரம்பத்தில் அவர்களுக்கு மண வாழ்க்கை இன்ப மயமா யிருந்தது ; இருவர் உள்ளங்களிலும் ஒருவித இன்னிசை எந்நேரமும் ஒலித்துக் கொண்டிருந்தது. ”நம் திருமணத் தின் வெள்ளி விழாவையும், பொன் விழாவையும், புதிதாக மறுபடி நாமிருவரும் கல்யாணம் செய்து கொண்டு ஊர் அழைத்துக் கொண்டாட வேண்டும்” என்று ராமலிங்கம் செல்லம்மாளிடம் அடிக்கடி சொல்லுவார்.

முதலில் வைத்தியும், பின்பு கமலாவும் பிறந்கார்கள். கமலா பிறந்தபோது தான் ராமலிங்கம் பெரிய உத்தியோகம் ஒன்றில் ஊன்றி நின்றிருந்தார். அங்கே மேன்மேலும் பெயர் பெருகிற்று. கமலா பிறந்தபோது பதவியில் அவருக்கு உயர்வு கிடைத்திருந்தது. கமலா அதிர்ஷ்டக் காரி என்று பெயர் வாங்கினாள்.

அதற்கப்புறம் நாலைந்து வருஷங்களுக்கு நல்ல சுக்கிர தசை அடித்தது. உத்தியோகத்தில் அவர் தொட்ட தெல்லாம் பொன்னாயிற்று. பதவி எப்படி யெல்லாமோ உயரப் போகிறது என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த சமயத்தில், ஒரு நாள் ராமலிங்கம் வேலையை விட்டு விட்டார். அவர் ஏன் இவ்வளவு அருமையான உத்தியோ கத்திலிருந்து விலகினார் என்பது யாருக்கும் தெரியாது. ஏன், அவருக்கே தெரியாது.

இந்த மாதிரி ஒரு மன நிலை எல்லோருடைய வாழ்க்கை யிலும் ஏதாவதொரு சமயம் ஏற்படத்தான் செய்யும் என்று தோன்றுகிறது. பணம், அந்தஸ்து, சூழ்நிலை – எல்லாம் அளவுக்கு மிஞ்சித் திருப்தியளிக்கக் கூடியதாய் இருக்கும்; ஆனால் மனத்தில் திருப்தியிராது. தாங்க முடியாத குறை ஒன்று அழுத்திக் கொண்டிருப்பதாகத் தோன்றும். இந்த மாதிரி ஒரு மன நிலைக்குப் பதில் சொல்லத் தெரியாமல் தான் ராமலிங்கம் அவ்வளவு நல்ல பதவியை உதறித் தள்ளி யிருக்க வேண்டும்.

செல்லம்மாளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் தன் கணவர் செய்தது சரியாகத்தான் இருக்க வேண்டும் என்ற நினைப்பில் சும்மா இருந்து விட்டாள்.

ராமலிங்கம் வேலையை விட்டு மாதம் இரண்டாயிற்று. புதிய வேலை ஒன்றும் அவரைத் தேடி வராததால் அவரும் புதிய வேலையைத் தேடிப் போகவில்லை. ஆனால் பாவம், அவரை அறியாமலே ஒருவிதத் தேக்கம் அவருடைய வாழ்வில் புகுந்து கொண்டது. தாம் எதிர்பார்க்கும் அளவுக்குப் பெரியதான பதவி ஒன்று தம்மைத் தேடி வராது என்ற உணர்வு அவருக்கு ஏற்பட்ட போது, நிலைமை கட்டுமீறிப் போயிருந்தது. தாமே வேலை தேடிப் போவ தென்ற பொறுப்பைத் தள்ளிப் போட்டார். இறுதியில், யாரிடமும் வேலை கேட்பதில்லை என்ற தீர்மானம் அசைக்க முடியாதபடி உறுதிப்பட்டு விட்டது.

ராமலிங்கம் சேர்த்து வைத்த பணம் கொஞ்சம் இருந்தது. அது படிப்படியாகக் கரையத் துவங்கிய போது தான் செல்லம்மாள் திகிலடைந்தாள். ஆரம்பத்தில் அவளால் கணவனின் வேலையின்மை பற்றிக் கவலைப்படா மலே மாதக் கணக்கில் இருக்க முடிந்தது. ஆனால் கவலை என்பதாக ஒன்று தோன்றியவுடன், அது நாளுக்கு நாள் வளர்வதை உணர்ந்தாள்.

இந்த நிலையில் தான் ஒருநாள் அந்தப் பெரும் புயல் மூண்டது. அன்று மாலையில் ராமலிங்கம் எங்கோ வெளியில் சென்றிருந்தார். செல்லம்மாளைக் காலை முதலே ஒருவித மனச்சோர்வு வாட்டிக் கொண்டிருந்தது. “இப்படியே இன்னும் எத்தனை நாள்?’ என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். மாலை ஸ்கூலிலிருந்து திரும்பி வந்திருந்த வைத்தி அந்தச் சமயம் பார்த்து ஏதோ சொல்லி வைத்தான். “அம்மா, நாளைக்கு ஸ்கூலுக்குப் போகும்போது எல்லாமாகச் சேர்த்து பத்து ரூபாய் கொண்டு போயாக வேண்டும்” என்று கத்தினான் அவன். உடனே ஆத்திரத்தில் செல்லம்மாள் தன்னை மறந்து அவன் முதுகில் ஒரு அடி வைத்தாள். முதன் முதலாகக் குழந்தையையும் அவள் அப்போது தான் கை நீட்டி அடித்தாள். அடித்தபோது அவள் தன் வசத்தி லில்லை; அடித்து விட்டு, கூடவே சில வார்த்தைகளைக் கொட்டினாளே, அப்போதும் அவள் தன் வசத்திலில்லை.

உன் அப்பாவுக்கு மறுபடி குடும்பப் பொறுப்பு வந்து. அவரும் மற்றவர்களைப் போல் பணம் சம்பாதித்து இங்கே கொண்டு வருவார் பார், அதுவரை காத்திருந்து அவரிடமே அந்தப் பத்து ரூபாயை வாங்கிக் கொண்டு போ… போதும் எனக்கு…”

கடைசி வார்த்தைகள் நாக்கை விட்டுப் பிரிந்து கொண்டிருந்த போதே, செல்லம்மாள் தன் பார்வையின் விளிம்பில் ஏதோ நிழலாடுவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள். அங்கே ராமலிங்கம் நின்று கொண்டிருந்தார்.

ராமலிங்கத்தைக் கண்டவுடன் அவள் நடுங்கிப் போனாள். பாய்ந்து ஓடி ராமலிங்கத்தின் காலடியில் சுருண்டு விழுந்தாள். ராமலிங்கம் விலகிக் கொண்டார் செல்லம்மாள் எழுந்து அப்படியே, குன்றிப் போய் நின்று அவரை நிமிர்ந்து பார்த்தாள். அவருடைய முகத்தில் சற்றும் மாறுதலில்லை.

“ஐயோ, அந்த வார்த்தைகள் நிஜமாகவே என் வார்த் தைகளில்லை ; உங்கள் செல்லம்மாளின் வார்த்தைகளில்லை. அவை என் வாயிலிருந்து எப்படி வந்தன என்பது என் மனத்துக்கே தெரியாது. என்னை நம்புங்கள்” என்று கை கால் பதற அவள் கெஞ்சினாள்.

ராமலிங்கம் அப்போதும் கோபித்துக் கொள்ளவில்லை. ஆனாலும் அவர் மனத்தில் பற்றிக் கொண்ட நெருப்பு, வார்த்தைகளாக வெளி வந்தது, அமைதிப் பூச்சுடன்.

“செல்லம்மா, உன் மனத்தை அறிந்து வெட்கத்தால் குன்றிப் போகிறேன். எனக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது என்பது இப்போதுதான் தெரிகிறது. நீதான் என் கண் களைத் திறந்து விட்டாய். இனி என் கடமையைத் தவறாமல் நான் செய்தாக வேண்டும்…” என்று சொல்லிக் கொண்டே, பக்கத்திலேயே இருந்த தம்முடைய பெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டார்.

செல்லம்மாள் அவர் பின்னாலேயே ஓடிப் போய், “ஐயோ, எங்கே கிளம்புகிறீர்கள்?” என்று கத்தினாள்.

ராமலிங்கம் ஒரு உதறு உதறித் தம்மை அவளுடைய பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு , “செல்லம்மா, நான் திரும்பி இந்த வீட்டுக்கு வரவேண்டுமென்றால், என்னை நீ தடுக்காதே!” என்று சொல்லிவிட்டு, விடுவிடென்று போய் விட்டார்.

மூன்று நாள் கழித்துத் திரும்பி வந்து சேர்ந்தார் அவர். அவளை நேராகக் கூடப் பார்க்காமல் பேசினார். “இன்னும் இரண்டு நாளில் நாம் இங்கிருந்து வேறு ஊருக்குப் போகிறோம்.”

மேற்கொண்டு ஒரு தகவலும் கிடையாது. சாப் பாட்டை அரையும் குறையுமாகக் கொரித்து விட்டு, மூட்டை கட்டக் கிளம்பி விட்டார். செல்லம்மாள் என்ன வெல்லாமோ பேசிப் பார்த்தாள். எதற்கும் ஒரே வார்த் தையில் பதில் சொல்லி விட்டு வேலையில் முனைந்திருந்தார் ராமலிங்கம்.

புது ஊர் போய்ச் சேர்ந்த போதுதான், செல்லம் மாளுக்கு ராமலிங்கம் அந்த மூன்று நாளில் செய்திருந்த ஏற்பாடுகளெல்லாம் தெரிய வந்தன. பெரிய தொழிற்சாலை ஒன்றில் உயர்ந்த உத்தியோகம் ஒன்று அவருக்குக் கிடைத் திருந்தது. தொழிற்சாலைப் பகுதியிலேயே பெரிய பங்களா ஒன்றை அவருக்காக ஒதுக்கி யிருந்தார்கள். யந்திர நுட்பத்தில் பெரும் பயிற்சியெல்லாம் முடித்து நிபுணரா யிருந்ததால், அவரை அந்தத் தொழிற்சாலை முதலாளி விசேஷச் சலுகையுடன் ஏற்றுக் கொண்டிருந்தார்.

புது ஊர் போய்ச் சேர்ந்தபின், ராமலிங்கம் வீட்டில் தங்காமல் தொழிற்சாலையிலேயே பழியாய்க் கிடந்தார். குழந்தைகளை மட்டும் அழைத்துக் கொண்டு அடிக்கடி வெளியில் சுற்றுவார். செல்லம்மாளுடன் அளந்து தான் பேசுவார். அவளை ஏறிட்டுப் பார்ப்பதில்லை என்று தாம் வைராக்கியம் பூண்டு விட்டதாக அவர் ஒரு நாள் வெளிப் படையாகச் சொல்லியே விட்டார். ”பத்து வருஷங் களுக்குப் பொறுப்பில்லாமல் வாழ்ந்தாயிற்றே! அது போதும். இனி குழந்தைகள் தான் நம் இருவருக்கும் இடை யிலுள்ள ஒரே பிணைப்பு. மண வாழ்க்கை என்ற அர்த்த மற்ற வாழ்க்கை வேண்டாம் ; இனிமேல் பண வாழ்க்கை நடத்துவோம். அது போதும்” என்று சொன்னார். செல்லம்மாளுக்குத் ‘திக் ‘கென்றது.

வேண்டுமென்றே , செல்லம்மாளுடன் தனிமையில் தங்காமல் தட்டிக் கழித்தார். குழந்தைகள் ஸ்கூலுக்குப் போகுமுன் ஆபீஸுக்குப் போய்விடுவார். மாலையில் குழந்தைகள் திரும்பிய பிறகுதான் திரும்பி வருவார். இரவில் குழந்தைகளுடனேயே படுத்து அவர்களுக்கு முன்பே தூங்கிப் போய் விடுவார். ஒருநாள் செல்லம்மாள் பொறுமை இழந்து, குழந்தைகள் முன்னிலையிலேயே அவர் காலில் விழுந்து கெஞ்சினாள். அதற்கு அவர், “இந்த அவலப் போராட்டம் குழந்தைகளுக்குத் தெரிய வேண்டாம்” என்று சொல்லிவிட்டு வெளியே போய் விட்டார். அன்று பூராவும் வீட்டுக்கே திரும்பவில்லை.

இன்னொரு நாள் தனிமையில் அகப்பட்டுக் கொண்டார் ராமலிங்கம். அன்று இரண்டிலொன்று தீர்ந்தபோது செல்லம்மாளுக்குப் பேரிடி ஒன்று தலைமேல் விழுந்து விட்டது போலிருந்தது. அவர் சொன்னார் : “இதோ பார், நம்முடையது புது மண வாழ்க்கையல்ல. இனிமேல் என்னால் அந்தப் பொறுப்பற்ற வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது. என் திறமைக்கு அருமையான உத்தியோகம் இருக்கிறது. என் அன்புக்கு மணியான குழந்தைகள் இருக்கிறார்கள். அதுபோதும் எனக்கு. நீ இன்னமும் இளம் பெண்ணல்ல… உன்னைப் பொறுத்த மட்டில் இனி நான், பணம் சம்பா தித்துக் கொட்டும் ஒரு யந்திரமே தவிர வேறில்லை.”

செல்லம்மாள் தோற்றுப் போய் விட்டாள்.

நாளடைவில் போராடுவதற்குக்கூட மனத்தில் தெம்பு இல்லாமல் போய்விடும் என்று தோன்றியபோது, செல் லம்மாள் திடீரென்று வைராக்கியம் பூண்டு வீட்டு வாழ்க் கையிலேயே துறவு மேற்கொண்டாள். சுயநலத்தை உதறி யெறிந்தாள். பத்து வருஷத்து மணவாழ்வுடன் திருப்தி யடைந்தவளாகத் தன் குழந்தைகளிடம் அதிக அன்பு செலுத்தத் தொடங்கினாள்.

ராமலிங்கமும் குழந்தைகளுடன் ஒன்றி விட்டார். அவர் களுடைய வாழ்வின் எல்லா அம்சங்களுக்கும் திட்டங்கள் வகுத்து அனைத்தையும் நிறைவேற்றி வைத்தார்.

இப்படிப் பல வருஷங்கள் ஓடின. திருமணத்தின் வெள்ளி விழா வந்து போயிற்று. அன்று செல்லம்மாளின் மனம் துடித்த துடிப்பு, யாருக்குத் தெரியும்?

வெளி உலகத்துக்குத் தெரியாமல் – குழந்தைகளுக்குக் கூடத் தெரியாமல் – இந்த வைராக்கிய வாழ்க்கை மேலும் ஐந்து வருஷம் நீடிப்பதற்குள், கமலாவுக்கும், வைத்திக்கும் அடுத்தடுத்துக் கல்யாணம் நடந்தது.

வைத்திக்கு தாம் வேலை பார்த்த தொழிற்சாலையில், தமது பதவியிலேயே அமர்த்துவதற்கு, ஆரம்ப முதலே அவனைச் சரியானபடி தயார் செய்து வைத்திருந்தார். கல்யாணத்துக்குப் பின் வைத்தி, சரோஜாவுடன் அங்கேயே மண வாழ்க்கை நடத்தத் துவங்கினது, ராமலிங்கத்துக்கு இதமாயிருந்தது.

அறுபதாவது வயதில் ராமலிங்கம் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார். முப்பது வயதில் இருந்த அதே உடலுறுதியுடன் அவர் ஓய்வு பெற்றுக் கொண்டது வினோதமா யிருந்தது. ஆனால் தொழிற்சாலையுடன் தமக் கிருந்த தொடர்பை அவர் அப்புறமும் பூராவாக விட்டு விடவில்லை. இது எல்லோருக்கும் திருப்தியளித்தது – செல்லம்மாளைத் தவிர. ஆனால் அவள் மட்டும் ஏதோ ஒரு கொள்கையை ஸ்தாபிக்கப் போகிறவள் போல் உறுதியுட னிருந்தாள். முப்பது வருஷ ‘ஒற்றை வாழ்வு’ அவளைச் சுட்ட பொன்னாக்கி யிருந்தது.

உஷாவும், ரங்குவும் பிறந்தது செல்லம்மாளின் வாழ் வுக்குப் புது ஒளி ஊட்டிற்று. உயிர் வாழவேண்டுமென்ற உறுதி, அவர்கள் வருகையால் மேலும் வலுப்பட்டது. உஷாவின் வளர்ச்சியை நாள்தோறும் நேரில் கண்டு செல்லம்மாளின் கண்கள் குளிர்ந்தன. கமலாவும் கணவன் வீட்டிலிருந்து ரங்குவுடன் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தாள்.

இப்படி ஒரு தடவை கமலாவும் ரங்குவும் வந்திருந்த போது, கூடத்தில் எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண் டிருந்தார்கள். ராமலிங்கம் அடுத்த அறையில் ஏதோ படித்துக் கொண்டிருந்தார். வைத்தி பேச்சுவாக்கில், தான் ஆபீஸ் அலுவலாக வெளியூர் போக வேண்டியிருக்கும் என்று செல்லம்மாளிடம் சொன்னான். உடனே செல்லம்மாள், “எப்போது போக வேண்டும்?” என்று கேட்டாள்.

அதற்கு வைத்தி, ”ஏப்ரல் பதினைந்தாம் தேதிதான் போக வேண்டும். இன்று நாலாம் தேதிதானே! இன்னும் …” என்று சொல்லி முடிப்பதற்குள், செல்லம்மாள், “ஆ, இன்று ஏப்ரல் நாலாம் தேதியா?” என்று கூச்சல் போட் டாள். எல்லோரும் திடுக்கிட்டுப் பேச்சை நிறுத்தினார்கள்.

“ஏப்ரல் நாலாம் தேதி!…. வைத்தி, எனக்குக் கல்யாண மாகி இன்றோடு ஐம்பது வருஷமாகிறதடா …. பொன் விழா” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தவள் மூர்ச்சையானாள்.

அன்று முதல் செல்லம்மாள் படுத்த படுக்கையானாள். ராமலிங்கம் தவியாய்த் தவித்தார். பிரபல டாக்டர்கள் பலரைக் கொண்டு வந்து காண்பித்தார். பணம் தண்ணீ ராய்ச் செலவழிந்தது.

செல்லம்மாளுக்கு ஏதோ திகிலடித்து விட்டது என்று டாக்டர்கள் சொன்னார்கள். ஆனால் உண்மையில் ராமலிங் கத்துக்குத் தான் திகிலடித்து விட்டதோ என்று தோன் றிற்று. செல்லம்மாளின் கட்டிலருகிலேயே இரவு பகலாக உட்கார்ந்திருந்தார். செல்லம்மாள் தூங்கும் போது அவளையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பார்.

“செல்லம்மா! உன் அருகிலேயே தவம் கிடந்து உன்னை மறுபடி அடைந்தே தீருவேன்” என்று அவர் மனத்தில் ஓர் ஓலம் கேட்டது திடீரென்று. அந்த ஓலம் வர வர உரத்து, அவருடைய இதயத்தின் ஒவ்வோர் அணு விலும் எதிரொலித்தது.

செல்லம்மாள் தான் விழித்திருந்த போதெல்லாம் அவரைப் பார்க்கவும் அஞ்சினாள் ; அவள் உண்மையில் அவரைப் பார்க்க விரும்பவேயில்லை. தவறிப்போய் வெளி வந்த சில வார்த்தைகளுக்காக நாற்பது வருஷ காலம் தன்னை அவர் தண்டித்து விட்டாரே என்பதுகூட முக்கியமா யில்லை; மண வாழ்வின் துவக்கத்தில் எத்த னையோ கனவுகளுக்குக் காரணமாக இருந்த வெள்ளி விழாவும் பொன் விழாவும் கொண்டாட்டமில்லாமலே வந்து போய் விட்டன; இரண்டு பேரும் உயிரோடு இருந்தும் கொண்டாட முடியவில்லை. இந்த எண்ணம் தான் செல்லம் மாளை வெகுவாக வதைத்தது. செல்லம்மாள், தன் அறுபத் தேழாவதுவயதில், தன் மண வாழ்வின் பெரும்பகுதி வீணாகி விட்டது பற்றிய பெருந் துயரத்துக்குத் தன்னைப் பலியாக்கிக் கொண்டிருந்தாள்.

மாப்பிள்ளை மணியும் ஊரிலிருந்து வந்து சேர்ந்தான். எல்லோரும் எப்போதும் செல்லம்மாளின் படுக்கையைச் சுற்றியே உட்கார்ந்திருந்தார்கள். ராமலிங்கம் வாய் திறந்து யாருடனும் பேசாமல் எங்கேயோ வெறித்துப் பார்த்தவாறு தவித்துக் கொண்டிருந்தார். அவர் உடம்பு நாளுக்கு நாள் தளர்ந்து வந்ததை எல்லோரும் பார்த்தார்கள். அவ ருடைய மனம் வலுவிழந்து, உருவிழந்து சிதறிக் கொண் டிருந்ததை யாரும் பார்க்கவில்லை. அது அவருக்கு மட்டும் தான் தெரியும்.

முடிவில் ஆஸ்பத்திரியிலே, ‘ ஸ்பெஷல் வார்’டில் செல்லம்மாளைச் சேர்த்தார்கள். அங்கே சேர்த்த பத்து நாட்களுக்குள் ராமலிங்கத்தின் நம்பிக்கை யெல்லாம் போய் விட்டது. ‘இனி செல்லம்மாள் பிழைக்கமாட்டாள் என்பது தெரிந்து போயிற்று. இப்போது அவர் மனத்தில் ஒரே ஒரு விருப்பம் தான் மிஞ்சி யிருந்தது. செல்லம்மாள் நல்ல நினைவுடன் இருக்கும்போது, தன் பாபத்துக்காக அவளிடம் மன்னிப்புக் கேட்டுவிட வேண்டும் என்பதுதான் அது.

செல்லம்மாளுக்கு நினைவு வந்து வந்து போய்க் கொண்டிருந்தது. ஒவ்வொரு தடவையும் நினைவு வரும்போது, ராமலிங்கம், அவள் காலைப்பிடித்துக் கதறியழுது மன்னிப்புக் கேட்கத் துடிப்பார். எழுந்தும் விடுவார். ஆனால் கடைசி நிமிஷத்தில் தைரியம் வராது. அதற்குள் செல்லம்மாள் நினைவிழந்து விடுவாள். அடுத்த தடவை நிச்சயம் என்று சொல்லிக் கொள்வார். ஆனால் அவள் முடிவு இவ்வளவு சீக்கிரம் வந்துவிடும் என்று அவர் நினைக்கவேயில்லை.

கணவனின் ஸ்பரிசம்பட்டு, ஆனந்த மிகுதியால் செல்லம்மாளுக்கு மூச்சு இரைக்க ஆரம்பித்தது. படுத்த வாக்கிலேயே நாற்புறமும் பார்த்தாள். கால் பக்கத்தில் கணவன் இருந்ததைப் பார்த்தவுடன் , பதறிப் போய் “ஐயையோ, என் காலை நீங்கள் தொடலாமா? இங்கே என் அருகில் வாருங்கள்” என்று முணுமுணுத்தாள்.

ராமலிங்கம் முன்னே தாவி வந்து அவளை அணைத்துக் கொண்டு, “நாற்பது வருஷ காலத்துக்கு விட்டுப்போன இன்பமெல்லாம், உன்னுடைய இந்த ஓர் அழைப்பில் எனக்குக் கிடைத்துவிட்டது செல்லம்மா!” என்று கதறினார்.

செல்லம்மாள், “இனி நான் நிறை வாழ்வு வாழ்ந்த நிம்மதியுடன் உயிர் விடலாம்…” என்றாள் நா தழுதழுக்க.

ராமலிங்கம் செல்லம்மாளின் வாயைப் பொத்தினார். திடீரென்று அவருக்கு ஒரு யோசனை தோன்றிற்று. “செல்லம்மா, நம் கல்யாணத்துக்குப் பொன் விழா கொண்டாட வேண்டாமா? மறுபடி நாம் ஊரறியக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டாமா, கொட்டு மேளத் தோடு?” என்று கொஞ்சலாகவும், கெஞ்சலாகவும் கேட்டார்.

செல்லம்மாளின் உடலில் இவ்வளவு சக்தி எங்கிருந்து வந்தது திடீரென்று? முகத்தில் இவ்வளவு தெளிவு எப்படி வந்தது? உரக்கச் சிரித்துக் கொண்டே, “உங்களை எத்தனை தடவை வேண்டுமென்றாலும் கல்யாணம் செய்து கொள்கிறேன். என் இஷ்டத்தை வேறு கேட்க வேண்டுமா? என் உயிர் நிச்சயம் போகாது. இந்த ஆனந்தத்துக்காக இந்த நாற்பது வருஷமும் உயிரைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்தவள், இப்போது அதைப் போகவிடுவேனா?” என்றாள் உணர்ச்சி மிகுதியில்.

“வைத்தி!……. கமலா!…… நம் செல்லம்மா பிழைத்து விட்டாள்” என்று கத்திக்கொண்டே ராமலிங்கம் கதவுப் பக்கம் ஓடினார்.

உண்மையாகவே செல்லம்மாள் பிழைத்து எழுந்து விட்டாள். எந்த உறுதியைக்கொண்டு நாற்பது வருஷமாக உயிரோடு இருந்தாளோ, எந்த உறுதியைக்கொண்டு இந்த முப்பது நாட்களாய்க் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருந்தாளோ, அதே உறுதியுடன் மரணத்தைத் துறந்து பிழைத்தெழுந்து விட்டாள்.

மறு மாதமே, மேளதாளம் முழங்க, வேதமந்திரம் ஒலிக்க, ராமலிங்கமும், செல்லம்மாளும் ‘மறுமணம்’ செய்து கொண்டார்கள். சுமார் ஐம்பது வருஷத்துக்கு முன் ஒரு நாள் ஏற்பட்ட அந்த இன்பம், சற்றும் குறையாமல் இன்றும் அவர்களுக்கு ஏற்பட்டது!

– சிறுகதைக் கோவை (பதின்மூன்று சிறந்த எழுத்தாளர்களின் உயர்ந்த ஓவியங்கள்), முதற்பதிப்பு: மே 1961, எஸ்.ஆர்.சுப்பிரமணிய பிள்ளை பதிப்பகம், திருநெல்வேலி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *