செருப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 26, 2013
பார்வையிட்டோர்: 9,705 
 

750 ரூபாய்க்கு ஒரு செருப்பு வாங்கினேன். லேட்டஸ்ட் மாடல், தோலினாலானது, இன்னும் பிற செளகரியங்களுடன், கருஞ்சாம்பல் நிறத்தில், குறிப்பாக என் நிறத்திற்கு ஏற்றாற்போல அட்டகாசமாக இருந்தது.

”வாவ் இட்ஸ் வெரி க்யூட்”, என்றாள் என் சக ஊழியை.

என்னைச் சொல்லவில்லை., என் செருப்பைத்தான் ‘க்யூட்’ என்கிறாள் என்பது சிறிது வருத்தமாக இருந்தாலும், ‘தேங்க்ஸ்’ என்ற வார்த்தையை உதிர்த்துவிட்டு வேலையைத் தொடர்ந்தேன்.

மாலை பெருமாள் கோவிலுக்குச் சென்ற நான் செருப்பை வெளியில் கழற்றிப் போட வேண்டிய நிர்பந்தம். தரிசனம் முடித்து வெளியில் வந்து பார்த்தபோது செருப்பு விட்ட இடத்தில் இல்லை. 750 ரூபாய் கோவிந்தா! சுவாமியைச் சேர்ந்ததோ? ஆசாமியை சேர்ந்ததோ?

இரண்டு நாட்கள் கழித்து, மீண்டும் அதே கோவிலுக்குச் சென்றிருந்தேன். இந்த முறை செருப்பு போடவில்லை. முதல் அனுபவம் பசுமையாக (?) என் மனதில் நின்றுகொண்டிருந்தது. அங்கிருந்த அர்ச்சகரிடம் சென்ற முறை செருப்பு தொலைந்ததைப் பற்றிக் கூறினேன்-செருப்பு கிடைக்கிறதோ, இல்லையோ, மன நிம்மதியாவது கிடைக்கும் என்ற எண்ணத்தோடுதான்.

அவர் உடனே,”லோகத்துல எந்தவொரு வஸ்துவும் காணாம போறதில்ல. எங்கேயாவது இடம் பெயர்ந்திருக்கும். ஒரு வஸ்து ஒரு குணாதிசயத்தோட மறைந்தாலும் வேற ஒரு குணாதிசயத்தோட திரும்ப பிரத்யட்சமாகும். இந்த ‘குணாதிசயம்’ கிறதில அளவு, வடிவம், மதிப்பு, வண்ணம், எல்லாம் அடங்கும். ஒண்ணும் கவலைப்படாதீங்கோ. பகவானோட பாதுகையால ஆசீர்வாதம் பண்றேன்., இழந்ததெல்லாம் திரும்ப கிடைக்கும்”, என்று சொல்லி பெருமாளின் பாதம் பதித்த கிரீடத்தை என் தலையில் வைத்தார்.

அவர் சொன்னது என்னவோ ‘நியூட்டன்’ விதியை ஞாபகப்படுத்தினாலும், மனம் லேசானதுபோல் ஒரு உணர்வு. ஒரு தெளிவு. அந்த தெளிவான மன நிலையில் வெளியே வந்து பார்த்தபோது… என்னவொரு ஆச்சரியம்!!!

என்னுடைய அதே செருப்பு!!!…அதே 750 ரூபாய் வஸ்து, அதே அளவு…ஆனால் கருஞ்சாம்பல் நிறமல்ல., வெந்நிறத்தில்

சற்றும் யோசிக்காமல் அணிந்துகொண்டு வீட்டை நோக்கி நடந்தேன்.

எனக்கும் ‘பகவானுடைய பாதுகையின் ஆசிர்வாதம்’ இருக்கிறது போலும்.

அடுத்த நாள் கோயிலுக்குச் சென்ற போது அர்ச்சகர் தனது செருப்பைக் காணவில்லை என யாரிடமோ புலம்பிக்கொண்டிருந்தார்.

– ஜூன் 2007

Print Friendly, PDF & Email

ஆதர்ச மனைவி(?)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

அச்சமில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *