செண்பகத்தாயின் அழுகை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 8, 2020
பார்வையிட்டோர்: 20,527 
 
 

செண்பகத்தாயின் அழுகைசெண்பகத்தாய் வீட்டினுள் சுவரில் சாய்ந்த வண்ணம் கால்களை நீட்டி அமர்ந்திருந்தாள். அவளுக்கு அருகாமையில் சுவரில் சாய்த்து நிறுத்தியிருந்த போட்டோவுக்கு போடப்பட்டிருந்த மாலை வாடிப்போயிருந்தது. போட்டோவில் இருக்கும் செண்பகத்தாயின் கணவர் நாச்சிமுத்து நான்கு நாட்களுக்கும் முன்பாக மாரடைப்பால் மரணமடைந்திருந்தார்.

நாச்சிமுத்து இந்திய இராணுவத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்றதும் சும்மாயிராமல் பதினைந்து வருட காலமாக பக்கத்து ஊரிலிருக்கும் பெரிய நூல் மில் ஒன்றிற்கு வாட்ச்மேனாக சைக்கிளில் சென்று வந்து கொண்டிருந்தார். மூன்று ஷிப்டுகள் என்று மாற்றி மாற்றி வாரம் ஒருமுறை வரும்.

ஒரு நாளும் ‘உடம்புக்கு முடியலை’ என்று விடுப்பே போடாதவர் நாச்சிமுத்து. அவரது ஹெர்குலிஸ் சைக்கிள் வாங்கி பதினைந்து வருடகாலமிருப்பினும் இப்போதும் புதிய சைக்கிள் போலவே மினுங்கிக் கொண்டு வீட்டின் பின்புறத்திலிருக்கும் சாலையில் நின்றுகொண்டிருந்தது. தினமும் அதை வாசலில் நிறுத்தி அரைமணி நேரம் துடைக்காமல் ஒருநாளும் அவர் இருந்ததேயில்லை. சைக்கிளை ஒரு குழந்தையைப்போல பாதுகாத்த சொற்ப மனிதர்களில் அவரும் ஒருவர்.

நாச்சிமுத்து இராணுவத்தில் பணியிலிருந்ததால் இந்தி தெரியும். ஆனால், இங்கே பேசுவதற்கு ஆள் யாருமில்லாததால் அப்படி ஒரு மொழி தனக்குத் தெரியுமென்பதையே இந்த பதினைந்து வருட காலங்களில் மறந்திருந்தார். நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும் பணியும் தெரியும் என்றாலும் அடுத்தவருக்கு கார் ஓட்டுனராகச் செல்ல விருப்பமில்லாமல் ஒதுக்கி விட்டார். சைக்கிளையே பயன்படுத்தியவர் தனக்காக ஒரு டிவிஎஸ் வண்டி கூட வாங்கிக் கொள்ளவில்லை.

நாச்சிமுத்துவுக்கும் செண்பகத்தாய்க்கும் மூன்று ஆண் பிள்ளைகள். மூவருக்கும் திருமணமாகி பக்கத்து பக்கத்து கிராமங்களில்தான் வசித்தார்கள். சொல்லி வைத்தாற் போல மூவருக்குமே இரண்டிரண்டு ஆண் பிள்ளைகள்தான் பிறந்திருந்தனர். நாச்சிமுத்து மூன்று மகன்களையும் தன்னைவிட மேல் படிப்பு படிக்க வைத்து பெரிய இடத்தில் பணியில் அமர்ந்திருப்பதை பார்க்க ஆசை கொண்டிருந்தாலும் மூன்று பேரின் படிப்புமே பத்தாவதோடு நின்று விட்டது. அதில் பெரியவன் மட்டும் குறுநகரில் டெய்லரிங் கடை வைத்து சம்பாதித்துக் கொண்டிருந்தான். சின்னவர்கள் இருவரும் நூல் மில்லில் பணியில் இருந்தார்கள்.

நாச்சிமுத்து சைக்கிளிலேயேதான் ஒவ்வொரு குடும்பத்தையும் சென்று பார்த்து பேரக்குழந்தைகளிடம் விளையாடி மகிழ்ந்து வருவார். பள்ளியில் விடுமுறை என்றால் பேரக் குழந்தைகள் அனைத்தும் பாட்டி வீட்டில்தான் இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்ணும் பொருட்களுக்கு பாட்டி வீட்டில் பஞ்சமே இருக்காது. நாச்சிமுத்து வெளியில் எங்கு சென்று வந்தாலும் குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் நிறைந்த ஒரு கட்டைப்பையோடுதான் வீடு வந்து சேருவார்.

இயற்கை வைத்தியம் தெரிந்திருந்த அவரிடம் பலர் வியாழன், ஞாயிறு தினங்களில் காலையில் நேரமே வந்து மருந்து வாங்கி குடித்து விட்டுப் போவார்கள். தீராத சளி என்றும், மூட்டு வலி என்றும் தொலைவிலிருந்து வாகனங்களில் வருவார்கள். அவர்களிடமிருந்து வைத்தியத்திற்காக பணம் எதையும் வாங்கிக் கொள்ள மாட்டார். ஒரு ரூபாய் நாணயம் மட்டும் வாங்கிக் கொள்வார். அதுவும் சாமி உண்டியலுக்குள் போய்விடும்.

மருந்துச் செடிகளுக்காக மாதத்தில் இரண்டு நாட்கள் காடு மேடெல்லாம் சுற்றும் வழக்கமுடைய நாச்சிமுத்துவுக்கு வயது எழுபது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

அப்படியிருந்தவர் முதல் ஸ்ட்ரோக்கிலேயே, அதுவும் வீட்டுக்கு அருகாமையிலேயே போய்ச் சேர்ந்து விட்டார். கையில் பெரிய இருப்பெல்லாம் வைத்திருக்காத மனிதர் பெரிதாக நிலம், நகை என்று எதையும் சேர்த்து வைக்கவில்லை. அதற்கு அவரது பையன்களின் போக்குகள் பிடிக்காததே காரணம்.

ஒரு மருத்துவமனை செலவு என்றாலும், ஒரு திருவிழா என்றாலும், பையன்கள் தங்களின் மனைவிமார்களை தந்தையாரிடம் அனுப்பி எப்படியும் பணத்தைக் கறந்து கொண்டு வரும்படி செய்து விடுவார்கள். மருமகள்கள் வீட்டுப்படியேறி பணம் என்று வந்து விட்டார்களே என்று செண்பகத்தாயும் தவித்துப் போய் விடுவாள். இது தெரிந்துதான் நாச்சிமுத்து அவர்களுக்கு வேண்டியதை எப்போதும் கொடுத்து விடுவார்.

நல்ல மனிதரின் இறப்புக்கு பக்கத்து ஊர்கள் என்றில்லாமல் தூரத்து ஊர்களிலிருந்தெல்லாம் சனம் வந்து கண்ணீர் சிந்திப் போனார்கள்.
துக்கம் கேட்க வந்த வெளியூர் பெண்களெல்லாம் வீடு போய்ச் சேரும் வரை ஒரே விசயம்தான் பேசினார்கள். அது, செண்பகத்தாய் ஏன் கணவர் இறந்தும் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை?

செண்பகத்தாய் நிதானத்தில்தான் இருந்தாள். அவளுக்கு எதுவும் ஆகிவிடவில்லைதான். அழத்தான் அவளால் முடியவில்லை. எப்போதும் போலவேதான் இருந்தாள். மருமகள்கள் மூவரும்தான் துக்கம் கேட்க வந்த பெண்களோடு சேர்ந்து ஒப்பாரி வைத்து அழுதார்கள்.

அதில் பெரியவன் மனைவி வாய்விட்டே சொல்லி அழுதாள். ‘‘இனி எனக்கு யாருங்க மாமா அத்து அவசரம்னா பணம் குடுப்பா?’’

செண்பகத்தாய் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு சுவரில் சாய்ந்து அமர்ந்தவள்தான். இதோ மூன்றாம் நாளான நேற்று கருப்பும் செய்து முடித்த பிறகும் இடத்தை விட்டு நகராமல் அமர்ந்திருக்கிறாள். அழுகை என்று அவளுக்கு வரவேயில்லை. “இப்பிடி உட்கார்ந்திருக்காதீங்க அத்தை, அழுதுடுங்க!” என்று மருமகள்கள் கூடி நின்றும் சொல்லிப் பார்த்து விட்டார்கள்.

வீட்டினுள் மூன்று மருமகள்களும் தங்கள் வீடு கிளம்பும் ஆயத்தத்திலிருந்தார்கள். ‘‘போயிட்டு வர்றனுங்க அத்தே!’’ என்று சொன்ன பெரிய மரு
மகள் கையில் பெரிய அண்டா இருந்தது. அடுத்தவள் கையில் கேஸ் அடுப்பு இருந்தது. கடைசி மருமகளும் தன் பங்குக்கு வீட்டில் பெரிதாக இருந்த இரண்டு செம்புக் குடங்களை எடுத்துக் கொண்டாள்.

அடுத்ததாக பெரியவன் வந்து அம்மாவிடம் நின்றான். “பெட்டு கட்டிலையும், டிவியையும் நானு எடுத்துட்டுப் போறேன்மா! வீட்டுல இருந்த டிவி ரிப்பேராப்போச்சும்மா!” என்றவன் வரச்சொல்லியிருந்த ஆட்டோவில் தூக்கிப் போட்டுக்கொண்டு போய்விட்டான்.நடு ஆள் வந்து அம்மாவிடம் நின்றான். “வெறும் கேஸ் ஸ்டவ்வை கொண்டு போயி என்ன பண்ணுறதும்மா? அந்த சிலிண்டரையும் எடுத்துக்கறேன். அப்பா சைக்கிள்ல சிலிண்டரைக் கட்டி எடுத்துட்டுப் போறேன்மா!” பதிலைக்கூட எதிர்பார்க்காமல் போய்விட்டான்.

அவனும் சென்ற பிறகுதான் சின்னவன் வந்து நின்றான் அம்மாவினருகில். பின்பாக சுவரில் சாய்த்து நிறுத்தியிருந்த தந்தையாரின் போட்டோவை எடுத்துக் கொண்டான். ‘‘அப்பா போட்ேடா ஊட்டுல இல்லீம்மா! நான் என் ஊட்டுல போயி இதை மாட்டிக்கறேன்! இது மட்டும் எனக்குப் போதும்மா!’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

எல்லோரும் சென்ற பிறகு வீடு அமைதியானது. செண்பகத்தாய் காலியாய் இருந்த வீட்டை ஒருமுறை பார்த்தாள். எல்லோரும் போய்விட்ட வெறுமை சூழ்ந்த வீட்டைப் பார்க்கையில் உதடு பிதுங்கியது. அழுகை முட்டிக் கொண்டு வர, “என்னைய உட்டுப்போட்டு நீங்க மட்டும் தனியாப் போயிட்டீங்களே ஐயா! ஒத்தையில நாங் கெடந்து என்னத்தப் பண்ணுவேனுங்க ஐயா!” என்று வாய் விட்டு சப்தமாக அழத் தொடங்கினாள்.

– ஜூலை 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *