எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
” என்னடி..! உண்மையா..? ” – சேதி சொன்ன அந்த சிறுமியை அந்த இருட்டிலும் கூர்மையாகப் பார்த்தேன்.
” ஆமாக்கா.! அந்தக் குருட்டு செங்கமலம் பேருந்து நிலையத்துல ஆள் அரவமில்லாத இடத்துல வழக்கம் போல படுத்துத் தூங்கிக்கிட்டு இருந்தது. அந்த ரௌடி கோபால் நைசா வந்து அதோட வாயைப் பொத்தி தூக்கிட்டுப் போய்….” அதற்கு மேல் சொல்ல முடியாமல் நிறுத்தினாள்.
” வாடி !…” என்று சிறுமியை இழுத்துக் கொண்டு புறப்பட்டேன்.
தான் தினம் படுத்துறங்கும் இடத்தில் செங்கமலம் இடிந்து…… தலை கலைந்து, ஆடைகள் குலைந்து,முகம், கை, கால்களிலெல்லாம் நகக்கீறல்கள். அலங்கோலமாக அமர்ந்திருந்தாள் .
பார்க்கவே பகீரென்றது.
” என்னடி ஆச்சு..? ” பதறி உலுக்கினேன்.
” ஓ…. ஒன்னும் ஆகல…” – உடைந்து வந்தாலும் குரல் நிதானமாக வந்தது.
” கோவாலு உன்னை கற்பழிச்சானாமே..?!..”
” அ…. ஆமாம்…! ”
” வா… போலீஸ்ல சொல்லுவோம்..! ”
” வேணாம்..! ”
” பயப்படுறீயா…?! ”
” இல்லே..”
” பின்னே..? ”
” நடந்தது நடந்ததுதானே….! போலீஸ்ல சொன்னா மட்டும் அது இல்லேன்னு ஆயிடுமா..?”
” செங்கமலம்…! ”
” சொல்றதைக் கேளு ககா. இதுனால வயித்துல சுமை வந்தாலும் பெத்துக்க நான் தயாராய் இருக்கேன். காரணம்…? கண்ணில்லாத எனக்கு அந்தக் குழந்தை கண்ணா இருக்கும். எப்படியோ கஷ்டப்பட்டு அதை வளர்ந்துட்டா நான் நோய் நொடியாய்க் கிடந்தால் அது சம்பாதிச்சு வந்து சோறு போடும். எனக்கும் ஒரு குடும்பம் வந்திடுமில்ல..” முடித்தாள்.
” செங்கமலம். ! ” நெஞ்சு துடிக்க அவளை இழுத்து அணைத்தேன்.
அவள் இதமாக சாய்ந்தாள்.
கெட்டதையும் நல்லதாக ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.
அப்படி ஆனால்…. இவளைக் காப்பாற்றி பேறு காலம் பார்க்க வேண்டும்.! – எனக்குள் தாய்மை சுரந்தது.