கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 12, 2019
பார்வையிட்டோர்: 5,725 
 
 

(இதற்கு முந்தைய ‘கருப்பட்டி’ கதையை படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

பாளையங்கோட்டையில் உளுந்து துவரை மொத்தமாக விற்பனை செய்கிற வியாபாரிகள் நிறைய இருந்தார்கள். மணியாச்சி, சாத்தூர், கோவில்பட்டி போன்ற ஊர்களுக்கெல்லாம் பாளையங்கோட்டையிலிருந்துதான் பருப்பு வகைகள் சில்லரை வியாபாரிகளுக்கு அனுப்பப்பட்டு வந்தன. இதற்கென்றே இடைத் தரகர்கள் சிலர் இருந்தார்கள். அவர்களை நம்பி மொத்த வியாபாரிகளும் சரக்குகளை அனுப்பி வைப்பார்கள். சில்லரை வியாபாரிகள் கடன் சொல்லி வாங்கிக் கொள்வார்கள்.

இடைத்தரகர்கள் அவ்வப்போது போய் பணத்தை வசூலித்துவிட்டு வந்து கொடுப்பார்கள். கடனும் உடனே வசூலாகிவிடுமென்று சொல்லிவிட முடியாது. சில்லரை வியாபாரிகள் சுணங்குவார்கள். வியாபாரமே சரியில்லை என்று ஒப்பாரி வைப்பார்கள். துவரம்பருப்பு பற்றி நிறைய ஆவலாதி சொல்வார்கள். ரொம்பப் பண நெருக்கடி என்று புலம்புவார்கள். பாதிக் கிரயத்தைக் கொடுப்பார்கள். அதையும் இடைத்தரகர்கள் அப்படியே கொண்டுபோய் மொத்த வியாபாரிகளிடம் ஒப்படைத்து விடமாட்டார்கள். பணத்தை அவர்களின் சொந்தச் செலவுக்கு ரொட்டேட் பண்ணிக் கொள்வார்கள். சிலர் தங்களுக்கு இருக்கிற வேறு சைடு பிஸினசில் அந்தப் பணத்தைப் போட்டு ஒரு புரட்டு புரட்டிக்கொள்வார்கள். எல்லோருமே கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பார்கள். ஆனாலும் எவரும் மொத்தமாக மோசடி செய்துவிட மாட்டார்கள். முன்னே பின்னே ஆனாலும் பணத்தைக் கொடுத்துவிடுவார்கள். மொத்த வியாபாரிகளுக்கும் அந்த நம்பிக்கைதான் பிரதானம். இவர்கள் இல்லாவிட்டால் முன்பின் தெரியாத வெளியூர் புள்ளிகளுக்கு சரக்கை அனுப்பிவிட்டு அவன் துட்டுத் தராமல் கடையை இழுத்து மூடிவிட்டு ஓடிப்போய்விட்டால் என்ன செய்வது?

இந்த வெளியூர்களுக்கு துவரை உளுந்து வாங்கிப்போடுகிற தொழில்தான் செய்வதாய் பாண்டி முடிவு செய்தான். அனால் பாளை வியாபாரிகள் பாண்டியை நம்பி சரக்கு தூக்கி விடுவதற்கு பிரியப்படவில்லை. அவர்களுக்குத்தான் பாண்டியின் ‘குட்டுநட்டு’ ரொம்ப நல்லாத் தெரியுமே! கூடப்பிறந்த அண்ணன் தம்பிகளையே மோசம் செய்தவன் ஆச்சே! அதுவும் இல்லாமல் பாண்டிக்கு பாளை சொந்த ஊர் கிடையாதே. எங்கேயோ செந்தூரிலிருந்து இந்த ஊருக்கு பிழைக்க வந்த பனங்காட்டுப் பயல்தானே. அவனைப் போய் நம்ப முடியுமா? அதனால் அவனை நம்பி தங்கள் சரக்குகளை எந்த வெளியூருக்கும் தூக்கி விடத் தயாரில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

பாண்டி அசந்து விடவில்லை. தன்னுடைய சொந்தப் பணத்திலேயே எல்லாப் பருப்பு வகைகளிலும் கொஞ்சம் கொஞ்சம் கொள்முதல் செய்தான். சுத்து வட்டாரத்தில் இருக்கும் சின்னச் சின்ன வியாபாரிகளுக்கெல்லாம் வட்டிக் கணக்கே பார்க்காமல் சரக்கு சப்ளை செய்தான்.

அவன் ஒரே ஒரு சரக்கு மட்டும் கொள்முதல் செய்து விற்று வியாபாரம் செய்து கொண்டிருந்தால் பாளை வியாபாரிகள் பாண்டி எவ்வளவு சம்பாரிக்கிறான் எனக் குத்து மதிப்பாக கணக்கு போட்டுப்பார்த்து விடுவார்கள் – ஆனால் பாண்டி குறிப்பிட்ட இந்தச் சரக்குதான் கொள்முதல் செய்தான் என்றில்லையே! மல்லி கொள்முதல் செய்தான். நல்லெண்ணய் வாங்கினான். டிமாண்ட் இருக்கும்போது புளி கூட வாங்கி ஸ்டாக் செய்து வைப்பான். ஆகையால் அவன் எவ்வளவு டர்ன்ஓவர் பண்ணுகிறான் என்பதை அனுமானிக்கவே முடியவில்லை. ஆனால் ஓரளவு துட்டு சம்பாரிக்கிறான் என்பதை எல்லோராலுமே அனுமானித்துக்கொள்ள மட்டும் முடிந்தது.

எனவே பாளை வியாபாரிகள் ஆரம்பத்தில் சொல்லிக்கொண்டிருந்த மாதிரி பாண்டியை பிழைக்க வந்த பனங்காட்டுப் பயல் என்று சொல்வதையெல்லாம் விட்டு விட்டார்கள். செந்தூர்ப் பாண்டி என்று கொஞ்சம் மரியாதையுடன் குறிப்பிட ஆரம்பித்தார்கள். ஆனால் பாண்டி இதிலெல்லாம் மயங்கி விடவில்லை. அவன் பாட்டுக்கு மாடு மாதிரி உழைத்தான்.

நாலு துட்டு சம்பரித்துவிட்டான் என்ற செய்தி செந்தூரில் இருந்த பாண்டியின் அண்ணன் தம்பிகளுக்கும் எட்டியது. ‘ஒரு சோலியா கோவில்பட்டிக்கு வந்தோம், அப்படியே ஒன்னையும் பாத்துப்பிட்டு போகலாம்னு இப்படியே கிளம்பி வரோம்’ என்று சொல்லிக்கொண்டு பாண்டியை அவர்கள் பார்க்க வந்தார்கள். என்ன ஆனாலும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைங்கதானே! அந்தச் சொந்தம் விட்டுப் போயிடுமா? ஆனாலும் பாண்டி அவர்களிடம் ரொம்ப ஒட்டவில்லை. தாமரை இலைத் தண்ணீர் மாதிரியே இருந்தான். யாரோ சொன்னார்கள் என்பதை வைத்துக்கொண்டு கொஞ்சம்கூட யோசிக்காமல் அரிவாளை தூக்கிக்கொண்டு வந்தவர்கள்தானே!

இருபத்தைந்தாவது வயதில் பாண்டி கருங்குளத்தில் ரொம்ப நல்ல குடும்பம் ஒன்றில் பிறந்து வளர்ந்த பூரணியை கல்யாணம் செய்துகொண்டான். பூரணி வந்த ராசியோ என்னவோ, பாண்டி தான் வாடகைக்கு குடியிருந்த வீட்டைக் கல்யாணமான ஆறாவது மாசமே ஒரு கிரயம் போட்டு எடுத்துக்கொண்டான். சப்ரிஜிஸ்ரார் ஆபீஸில் வீடு வாங்கிய பத்திரம் ‘ரிஜிஸ்டர்’ ஆகிய ரெண்டு மணி நேரத்தில் அந்தச் செய்தி பாளை பூராவும் பரவி ஊரே மூக்கில் விரல் வைத்தது. சப்ரிஜிஸ்ரார் ஆபீஸ் தாழ்வாரத்தில் இதற்கென்றே சில பயல்கள் துண்டை விரித்து படுத்துக் கிடப்பான்கள். ஊருக்குள் எவன் சொத்து வாங்குகிறான்; எவன் சொத்தை விற்கிறான்; நடையாய் நடந்து கொண்டிருக்கிறான் என்கிற செய்திகள் கிடைத்ததும், இந்தப் பயல்கள் உடனே வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து ஓடுவார்கள்.

சில பெரும் புள்ளிகளிடம் போய் இந்தச் செய்தியை காதோடு காதாக ஓதிவிட்டு விடுவார்கள். பெரும் புள்ளிகளும் இம்மாதிரியான செய்திகளுக்காக நாக்கைத் தொங்கவிட்டவாறு காத்துக்கொண்டிருப்பார்கள். அதென்னவோ அந்த மனுசங்களுக்கு இந்த மாதிரி சங்கதிகளில் ஒரு அலாதிப் பிரியம்.

காலையில் கடையைத் திறந்து உட்கார்ந்தால் இதுதான் முதல் சோலி. எவன் வீட்டில் என்ன நடக்கிறது… எவன் வீட்டில் தினசரி கோழிக்கறி வைத்துச் சாப்பிடுகிறான்… எவன் வீட்டில் யாருக்கு உடம்பு சரியில்லை, எந்தப் பயல் வீட்டில் புதிதாக நகை செய்திருக்கிறான், செய்திருக்கும் நகையின் பவுன் புதிதாக வாங்கிச் செய்ததா இல்லை பழைய நகையையே அழித்துச் செய்ததுதானா… ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறதே ! இம்மாதிரியான வம்பளப்புதான் பொழுது விடிந்து பொழுது போனால்.

சீக்கிரத்தில் பாண்டி அவன் குடியிருக்கும் தெருவில் இன்னொரு வீட்டையும் வாங்கி இடித்துப் பெரிசாக கட்டப்போகிறான் என்ற வம்பெல்லாம் வேறு கிளம்பியது.

“பாண்டி பயங்கர யோகக்காரன்.”

“அவன் சாதகத்துல பத்துல செவ்வா உச்சமாம். அதான் வெசயம்…”

“எல்லாம் அந்தப் பூரணி வந்த நேரம்யா, அதான் ஒரே தூக்கா தூக்குது.”

பாண்டிகிட்ட எவ்வளவு துட்டு இருக்குதுன்னு ஒருத்தருக்கும் தெரியாது. ஆனால் அவனிடம் பணம் எக்கச்சக்கமாக புரளுது என்பது எல்லோருக்கும் தெரியும். நாளடைவில் பாண்டியை வியாபாரிகள் சங்கத்துக்கு காரியதரிசியாக்கி விட்டார்கள். பாண்டி மனதிற்குள் சிரித்துக்கொண்டான். துட்டு வந்து சேர்ந்தால் எல்லாம் வந்து சேர்ந்துவிடும் போலும். ஆனால் இந்தப் பதவியெல்லாம் பாண்டியை ஒன்றும் செய்துவிடவில்லை. எப்பவும் போல அடக்கமாகவே இருந்தான். செக்கு மாடாக உழைத்துக்கொண்டே இருந்தான்.

அடிக்கடி பூரணியிடம், “நாமதான் கட்டும் செட்டுமா சூதானமா இருக்கணும் புள்ளே. நாளைக்கு நமக்கு ஏதாவதுன்னா ஒரு பயலும் நமக்கு துட்டு குடுத்து உதவமாட்டான்…” என்று சொல்வான்.

அவனின் இருபத்தியெட்டாவது வயதில் இசக்கிப்பாண்டி என்கிற பாண்டி வந்து மகனாகப் பிறந்தான். மகன் பிறந்திருக்கான் என்று மருத்துவச்சி வந்து சொன்னதும் பாண்டி பாவம் எவ்வளவு சந்தோஷப்பட்டான்… மகனைப் பார்க்கையில் தன்னையே ஒரு சிசுவின் உருவத்தில் பார்ப்பது போலிருந்தது அவனுக்கு. மகனை மடியில் எடுத்துப் படுக்க வைத்துக்கொண்டான். புதுக்கருப்பட்டி போலிருந்தது பிள்ளையின் உடம்பு. மகனை பாளையிலேயே பெரிய வியாபாரியாக ஆக்கப்போகிறேன் என்று பூரணியிடம் பீற்றிக்கொண்டான்.

இந்த எல்லாச் சந்தோசமும் பாவம் பதினைந்தே நாளுக்குத்தான்… மார் வலிக்குதுன்னு சொல்லிச் சாய்ந்தவன் சாய்ந்தவந்தான். என்ன ஏது என்று யோசிப்பதற்குள் உயிரே போய்விட்டது.

அவ்வளவுதான், ஒரே நிமிஷத்தில் ஊரே கூடிவிட்டது. செத்தவன் நாலு துட்டு சேர்த்து வீடு வாசலெல்லாம் வாங்கியவனாச்சே… ஊர் கூடாமல் என்ன பண்ணும்? பாண்டியின் கூடப் பிறந்தவன்களும் சொந்தக்காரன்களும் செந்தூரிலிருந்து அடித்துப் புரண்டு ஓடிவந்தார்கள். தரையில் புரண்டு புரண்டு ஒப்பாரி வைத்து அழுதார்கள்.

எத்தனை நாளைக்குத்தான் அழுது கொண்டிருப்பார்கள்? அடுத்து நடக்க வேண்டிய காரியங்களைப் பார்க்க வேண்டுமே! பதிமூன்றாவது நாள் காரியம் ஆனதும் ஆளுக்கு ஆள் பெரிய மனுஷன் மாதிரி அமர்ந்து கொண்டார்கள்.

பூரணியையும் அவளுடைய மகனையும் காப்பாத்த தயாராக இருப்பதாக ஒவ்வொருத்தனும் நான் நீயென்று போட்டி போட்டார்கள். பாண்டியின் வீட்டை சுத்தி சுத்திப் பார்த்தார்கள். நிலை, கதவு, ஜன்னல் எல்லாவற்றையும் தட்டிப் பார்த்தார்கள். எல்லாம் ஒசத்தியான தேக்கு என்பதில் அவர்களுக்கு பரம திருப்தி. உத்திரத்தையும் நன்றாக நிமிர்ந்து பார்த்துக்கொண்டார்கள்.

“நடக்கக்கூடாதுதேன்… என்னமோ நடந்திருச்சி. இனிமே நடக்க வேண்டியதைத்தேன் நாம பாக்கணும். புள்ளையைத் தூக்கிகிட்டு நீ பேசாம செந்த்தூருக்கு வந்திரு… நாங்க பாத்துக்கிறோம். பாண்டியை வளத்து படிக்கவச்சி ஆளாக்க வேண்டியது எங்க பொறுப்பு. இந்த வீட்டை வாடகைக்கு விட்டுருவோம். பாண்டி வச்சிட்டுப் போயிருக்கிற ரொக்கப்பணம் பூராவையும் எண்ணிப் பார்த்துட்டு நாலு பேரு சாச்சியா எங்ககிட்ட குடுத்துரு. பேசாம வட்டிக்கு போட்டு வெச்சிடலாம். அதுல ஒரு சல்லிக்காசு எங்களுக்கு வேண்டாம். நாளைக்கு ஒன் மவன் மேசரா ஆனபிறகு அதவச்சி கடையோ கிடையோ நடத்தி பொழைச்சிகிடட்டும். அதுவரைக்கும் நல்லதோ பொல்லாததோ நாங்க பாத்துக்கிறோம். இப்ப நீ பாண்டி வச்சிட்டுப் போயிருக்கிற ரொக்க ரூவா எவ்வளவுன்னு மட்டும் பார்த்துச்சொன்னா தேவலை… நாங்க மேற்கொண்டு ஆக[SK1] வேண்டிய சோலியைப் பார்க்கலாம்.”

ஆளுக்கு ஆள் பூரணியைச் சூழ்ந்துகொண்டு நெருக்கினார்கள். பாண்டி எவ்வளவு துட்டு வைத்திருக்கிறான் என்பதைத் தெரிந்துகொள்ள இது ஒரு சரியான சந்தர்ப்பம் ஆயிற்றே. பிடரியில் வழிகிற வியர்வையை தோளில் கிடந்த துண்டினால் துடைத்து விட்டபடி பூரணியையே பார்த்துக்கொண்டு நின்றார்கள்.

அவர்கள் எல்லோரையும் முழித்து முழித்துப் பார்த்துக்கொண்டிருந்த பூரணி திடீரென்று ஓவென்று பெரிய குரலில் ஒப்பாரி வைக்க ஆரம்பித்ததும் எல்லோரும் பதறிப் போனார்கள்.

“என் புருசன் ஒத்த சல்லிக்காசு கூட எனக்கு சேத்து வச்சிட்டுப் போகலையே. இந்த வீட்டு மேலேயும் கடனை வாங்கிவெச்சு என்னையும் என் புள்ளையையும் நடுத்தெருவுல நிக்க வெச்சிட்டுப் போயிட்டாக…”

ஒப்பாரியுடன் பூரணி இப்படிவேறு புலம்பியதைக் கேட்டதும் சுற்றி நின்றவர்கள் அத்தனைபேரும் “என்னது, என்னது” என்று கேட்டு தள்ளிப்போய் நின்று கொண்டார்கள்… காற்றுக்காக ஜன்னல் பக்கம் போய் நின்று கொள்கிற பாவனையுடன்.

“இன்னொருக்க சொல்லு பாண்டி ஒரு சல்லிக்காசு கூட வச்சிட்டுப் போகலையா?”

“வீட்டுமேல கூட கடனை வாங்கி வெச்சிருக்காரு…” மூக்கைச் சிந்தினாள்.

“கடைசியில் பாண்டி வெத்துவேட்டுப் பயல்தான் போலிருக்கு.”

“பெரிசா வீட்டை வாங்கி ஆயிரமாயிரமா மடியில துட்டு வச்சிருக்கிற மாதிரி அலட்டினான்….”

“ஒவ்வொருத்தனும் செத்தாத்தேன் வவுசி தெரிது.”

“கடவுள்தேன் ஒன்னையும் ஒன் புள்ளையையும் காப்பாத்தணும் பூரணி.”

“நாங்கள்ல்லாம் அப்ப கிளம்புறோம்… புள்ளையை நல்லபடியா பாத்து வள.”

சப்தமில்லாமல் செருப்பைப் போட்டுக்கொண்டு ஒவ்வொருத்தனும் கிளம்பி புறப்பட்டுப் போன பிறகுதான் பூரணி அப்பாடா என்று பெருமூச்சு விட்டாள்.

அவளையும், பாண்டியையும் காப்பாற்ற நான் நீயென்று போட்டி போட்ட சொந்தக்காரன்கள் ஒரு நிமிசத்தில் ஓடிப்போய்விட்டான்கள். துட்டு ஒரு சல்லிகூட இல்லை; வீட்டின்மேல் வேறு ஏகப்பட்ட கடன் வாங்கியிருக்கிறான் என்ற பூரணியின் சூதானமான பொய் எல்லா பயல்களையும் அடித்து விரட்டிவிட்டது.

எல்லாப் பயல்களும் முதலில் வக்கணையாய் மனசைத் தொடும்படிதான் பேசுவார்கள். கண்ணை இமை காப்பது மாதிரிதான் காப்பாற்றப் பார்ப்பார்கள். பின் கொஞ்சநாள் போனதும் சுய ரூபத்தைக் காட்ட ஆரம்பிப்பார்கள்.

முதலில் பூரணியின் பணத்தைக கொஞ்சம் கேட்பார்கள். வட்டியோடு திருப்பித் தருகிறேன் என்பார்கள். அந்த வீட்டில் நாங்கள் இருந்து கொள்கிறோம், உனக்கு எதற்கு அத்தனை பெரிய வீடு என்று லேசாக பேச்சை ஆரம்பித்து குழிபறிக்கப் பார்ப்பார்கள்.

கொஞ்சம்கூட நெஞ்சு கூசாமல் துரோகம் செய்துவிட்டு, நீயும் உன் பிள்ளையும் சாப்பிட்டதுக்கும் ஒன் துட்டுக்கும் சரியாகப் போய்விட்டது என்று சொல்லிவிட்டு கர்ம சிரத்தையாய் காது குடைய ஆரம்பித்துவிடுவார்கள். அப்புறம் பூரணிதான் நடுத்தெருவில் நிற்கவேண்டும். கூடப்பிறந்த பயலைக்கூட நம்ப முடியாது. காலம் அத்தனை தூரத்திற்கு கெட்டுப்போய் கிடக்கிறது… பாண்டி அடிக்கடி சொன்னது போல் சூதானமாய் இருக்க முடிவு செய்தாள் பூரணி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *