சுரண்டல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 4, 2013
பார்வையிட்டோர்: 7,800 
 
 

வேணுகோபால் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கொண்டு விட்டான். ஆறு மணிக்குள் கார் வந்துவிடும். ராணிப்பேட்டை, மேல் விஷாரம், ஆம்பூர், வாணியம்பாடி என்று போய் ‘கோடவுன்’களை ஆய்வு செய்து விட்டு மாலை நான்கு மணிக்குள் பாரிமுனையில் உள்ள அவன் வங்கிக் கிளைக்குப் போய் விட வேண்டும். இந்தத் தொழிற்சாலைகளுக்கு அவன் போவது இதுதான் முதல் தடவை. அதனால் சரியாக எத்தனை நேரம் ஆகும் என்று தெரியவில்லை.

ஐந்து மணிக்கு எழுந்துவிட வேண்டும் என்ற நினைப்பிலேயே ராத்திரி சரியாகத் தூங்கவில்லை. இத்தனைக்கும் மனைவியிடமும், தாயாரிடமும் எழுப்ப வேறு சொல்லியிருந்தான். அலாரமும் வைத்திருந்தது. இது என்ன பாதுகாப்பு இன்மையா, ஜாக்ரதை உணர்வா என்ன இழவோ தெரியவில்லை.

அவன் மனைவி குறைந்தது இரண்டு மணி நேரம் முன்னதாகவே எழுந்து கொண்டு இருப்பாள். வெந்நீர் தயார் செய்து, டிபன் ஏற்பாடு பண்ணி, டிபன் டப்பாவில் தோசையும் கட்டி வைத்து விட்டாள். அவன் அம்மாவும் விழித்துக் கொண்டு விட்டாள் என்பதைக் கூடத்திலிருந்து வந்த இருமல் தெரியப் படுத்தியது. அம்மா அதைத் தெரியப் படுத்துவதற்காகவே கூட இருமியிருக்கக் கூடும். சந்தேகம், அது சின்ன சந்தேகமோ, பெரிய சந்தேகமோ அதற்குக் கருணையும், நாகரிகமும் கிடையாது. அது எப்போது யார் பற்றி எதற்கு வரும், வராது என்றும் தெரியாது.

இந்தக் காலைக் கடனும் அப்படித்தான். அவனுக்கு அதிகாலையில் கிளம்பிச் செல்ல வேண்டிய வேலை இருந்தால் மூளையில் இருந்து வெகு தூரத்தில் இருக்கும் வயிற்றுக்கு எப்படித் தெரியுமோ தெரியாது, அன்று ஸ்ட்ரைக்தான். காப்பி, இரண்டு குவளைத் தண்ணீர் எதற்கும் மசியாது. இன்றைக்கு என்ன செய்வது என்று அவன் குழம்பினான். ரோடு மேலே போய் விட்டு ஆற்றிலோ குட்டையிலோ சுத்தம் செய்து கொள்ள அவனுக்குத் தெரியாது. இவ்விதமான ஆய கலைகள் அறுபத்து நான்கில் பலவும் நகர வாசிகளுக்குத் தெரிவதில்லை.

சரி, போகிற இடங்களில் பார்த்துக் கொள்ளலாம் என்று இரண்டு தோசையும், காப்பியும் சாப்பிட்டுவிட்டு வேணு கிளம்பி விட்டான். போன இடத்தில் ‘டாய்லட் எங்கே’ என்று அதுவும் ‘இதற்காக’ என்று கேட்பதே கூச்சமான செய்கையாய் இருக்கும். அங்கே பக்கட், தண்ணீர் இருக்குமோ இல்லையோ. ஆனால் மணி ஆகிவிட்டது. காரும் வந்து விட்டது. ரமேஷ்குட்டியும் எழுந்து கொண்டாயிற்று. காற்றில் கைகளைக் குத்தி, கால்களால் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தது. இவனைப் பார்த்ததும் சிரித்தது. அது குளிக்கவில்லை. பல்லே இன்னும் முளைக்கவில்லை, தேய்ப்பதற்கு. ஆனால் புஷ்பம் போல் புதிதாக இருந்தது.

அதன் கன்னத்தில் ஆர முத்தமிட்டு விட்டு (“எச்சப் பத்து வரும்டா, கன்னத்தைத் துடைத்து விடு” என்று அம்மா கூடத்திலிருந்து கூறுவது அவனுக்குக் கேட்டது) அங்கே போய் “தூங்கினியாம்மா நன்னா” என்று கேட்டான். அம்மா தலை அசைத்தாள். அவளும் குழந்தை மாதிரிதான் இருந்தாள். அவளால் படுக்கையிலிருந்து நகர முடியாது. எழுந்து உட்கார இரண்டு மாதமாவது ஆகும் என்று டாக்டர் சொல்லியிருந்தார். அழகாகச் சிரித்தாள். அது மகனுக்கேயான சிரிப்பு. ‘ஜாக்ரதையா, பத்திரமா போய்ட்டு வா’ என்றாள்.

‘சரி வரேம்மா’ என்று சொல்லிவிட்டு சமையலறைக்குப் போய் மனைவியிடமும் சொல்லிவிட்டு, கவனமாக மறுபடியும் அம்மாவிடம் சொல்லிக் கொள்ளாமல் ஃப்ளாட் கதவை மூடிவிட்டுக் கிளம்பினான். வார நாட்களில் எத்தனையோ வாரங்கள் கழித்து இன்று சீக்கிரம் வீடு திரும்ப ஒரு வாய்ப்பு. சின்ன விஷயத்தில் கூட இன்று மனைவிக்கு கோபிக்க இடம் தந்து விடக் கூடாது.

டிரைவர் சலாம் வைத்துவிட்டு, பின் கதவைத் திறந்தார். வேணு புன்னகைத்தவாறே பின் சீட்டில் அமர்ந்துகொண்டு, டிபன் டப்பா, தண்ணீர் பாட்டில் இருந்த வலைப்பையை முன் சீட்டில் டிரைவர் சீட் அருகில் வைத்தான். ஒரு சிறிய தோல் பையில் அலுவலகக் காகிதங்கள் இருந்தன. அதையும் முன் சீட்டில் வைத்தான்.

வண்டி கிளம்பிய கொஞ்ச நேரத்தில் வெணுவுக்குத் தூக்கம் கண்ணைச் சுற்றிய மாதிரி இருந்தது. அப்படியே அம்பாஸிடர் காரின் பின் சீட்டில் குறுக்கிப் படுத்துக் கொண்டான். கண்களை மூடிக் கொண்டான். கார் ஒரே சீரான கதியில் ஓடிக்கொண்டிருந்தது.

சாயந்தரம் அலுவலகம் போனதும் அங்கே ஏகப்பட்ட வேலை காத்துக் கொண்டிருக்கும். மேனேஜர் வேறு லீவு. அதைத் தவிர வீட்டுக்குப் போகும் வழியில் அவர் கணக்கில் இருந்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஐந்து ரூபாய் நோட்டு புதுக் கட்டு ஒன்று கொண்டு வரச் சொல்லியிருந்தார். பாரிமுனையிலிருந்து ஆழ்வார்பேட்டை போகும் வழியில் நுங்கம்பாக்கம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. அவன் ஆய்வை முடித்துக் கொண்டு நேரே சீக்கிரம் வீட்டுக்குப் போய்விடுவானோ என்கிற சந்தேகம்தான். அவர் தொழிற்சங்கத் தலைவராக வேறு இருந்தார். ஒரு நாள் கூட ஐந்தரை மணிக்கு மேல் அலுவலகத்தில் இருந்தது கிடையாது. சில நாட்கள் இரவு ஒன்பது மணிக்கு தன்னந்தனியாக அந்த மூன்று மாடிக் கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருக்கையில் வேணுவுக்கு ‘என்ன வேலை இது, ஏன் இதில் வந்து மாட்டிக் கொண்டோம்’ என்று இருக்கும்.

இன்று ஸ்கூட்டரும் கிடையாது. போவது வாடிக்கையாளரின் கார். கார் இவனை மாலை அலுவலகத்தில் விட்டு விட்டுப் போய்விடும். ஒன்று வேண்டுமானால் செய்யலாம். காரை வங்கி வாசலிலேயே காத்திருக்கச் சொல்லிவிட்டு ஒரு மணி நேரத்தில் வேலையை முடித்துக் கொண்டு காரிலேயே போய் விடலாம்.

வெய்யில் அடிக்க ஆரம்பித்து, சளசளப்பும் வாகன சப்தமும் அதிகரித்தன. ஒரு ஐந்து நிமிடம் தூங்கி இருப்போம் என்று நினைத்தான். ஆனால் அதற்குள் தோல் ஃபாக்டரி வந்து விட்டது. வயிறும் நல்ல வேளையாக இதுவரை தொந்தரவு செய்யவில்லை.

ஃபாக்டரி முதலாளி ஒரு முக்கியமான பிரமுகர். அரசியல் தொடர்புகள் உள்ளவர். பல நாட்கள் வெளி நாட்டில்தான் இருப்பார். பல வருட வாடிக்கையாளர். வங்கியின் நன்மதிப்பைப் பெற்றவர். இந்த ஆய்வெல்லாம் ஒரு சம்பிரதாயத்துக்குதான். ஆச்சர்யமாக அன்று அவரும் ஃபாக்டரி அலுவலகத்தில் இருந்தார். நான்கு ஊர்களிலும் அவருக்குக் கிளைகள் இருந்தன. ஒரு உதவியாளரை கூட அனுப்பினார்.

வேலை டக் டக் கென்று முடிந்தது. நான்கு தொழிற்சாலைகளையும் மிகக் குறுகிய நேரத்திலேயே பார்த்து ‘ஸ்டாக்’ சரி பார்க்க முடிந்தது. தோல் பதனிடும் நாற்றம்தான் சகிக்க முடியவில்லை. இரசாயனங்களோடும், கழிவுகளோடும் பிளாஸ்டிக் உறைகளை கைகளிலும், கால்களிலும் சுற்றிக் கொண்டு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களுக்கு என்ன வியாதியெல்லாம் இருந்ததோ என்ன வியாதியெல்லாம் வருமோ. இந்த நிலைமையில் அவர்களிடையே, அந்த உதவியாளரைப் பார்த்தே, பிறர் உணரத் தக்க பயம் நிலவியதும் தெரிந்தது.

கடைசி ஃபாக்டரியில் உதவியாளர் இறங்கிக் கொண்டார். முதல் ஃபாக்டரிக்கு மறுபடியும் சில கோப்புகளை ஒப்பு நோக்கப் போகையில் சாலையில் மர நிழலில் காரை நிறுத்தி டிபன் பாக்ஸிலிருந்து தோசையையும், தண்ணீரில் பாதியையும் சாப்பிட்டான். டிரைவர், அவன் சம்பிரதாயத்துக்கு ‘சாப்டறிங்களா’ என்று கேட்டதற்கு, ‘ஆச்சுங்க. நீங்க சாப்பிடுங்க’ என்றார். அதுவும் சம்பிரதாயத்துக்கு இருக்கலாம். இது தவிர ஒவ்வொரு ஃபாக்டரியிலும் காஃபி, டீ என்று கிடைத்தது.

ஃபேக்டரியில் முதலாளி வேணுவை சாப்பிட அழைத்தார். அவன் தயங்கியதும், ‘வெறும் சப்பாத்தியும், டீயும்தான். எல்லாம் வெஜிடேரியன்தான்’ என்று புன்னகைத்தார். தான் அவசரமாக ஊர் திரும்ப வேண்டி இருப்பதாக அவன் சொன்னதும் மீண்டும் வற்புறுத்தவில்லை. அவனிடம் அந்த ஃபேக்டரி அலுவலகத்தின் கணக்கர் ஒரு பையைக் கொண்டு வந்து கொடுத்தார். அதில் ஒரு தோல் பையும், சுருட்டி வைக்கப் பட்ட, செருப்புகளுக்கான, கறுப்பு நிறத் தோலும் இருந்தன. ‘இதெல்லாம் எதுக்குங்க சார்’ என்று அவன் கேட்டதும், ‘இது ஒண்ணுமில்லீங்க. எங்க கிட்டே துண்டு விழுவதுதான். இங்கே வர்ற ஒவ்வொரு ஆபீஸருக்கும் அன்பாத் தர்றது. எடுத்துக்கோங்க’ என்றார். அவனுக்கு அது குறைந்த பட்சம் நானூறு ரூபாய் இருக்கும் என்று தெரியும்.

இருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு வேணு கிளம்பினான். நாளை சுதந்திர தினம். நாளைக்கு மறு நாளிலிருந்து மைலாப்பூரில் இருந்த அவனது வங்கியின் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் ஒருவாரம் அவனுக்கு ‘டிரயினிங்’ இருந்தது. ஒருவாரம் நிம்மதியாக இருக்கலாம். சொல்ல முடியாது சிலசமயம் மேனேஜர் ‘டிரயினிங் முடிந்த கையோடு கிளைக்குக் கொஞ்சம் வந்து விட்டுப் போங்கள்’ என்று அழைக்கவும் கூடியவர்தான்.

திரும்பும்போது வெயிலும், போக்குவரத்தும் அதிகரித்து இருந்தன. டிரைவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தான். அவரைப் போன்ற பலரை அவன் பல நிறுவனங்களில் பார்த்து இருக்கிறான். அதாவது சிறிய அளவு தனியார் நிறுவனங்களில். அனுசரணையாகவும், சமயோசிதமாகவும், எப்படியும் வங்கியில் தங்கள் அலுவலக வேலையைக் கட்டாயம் முடித்துக் கொண்டு போய்விடும் கெட்டிக்காரர்களாகவும் ஒவ்வொரு கம்பனியிலும் யாராவது ஓருவர் இருப்பார். உண்மையிலேயெ கம்பனிக்கு, அதாவது முதலாளிக்கு செருப்பாய் உழைப்பார்கள்.

அவர்கள் கிடைக்கிற சம்பளத்துக்கு உழைப்பதாகச் சொல்லவே முடியாது. ஏதோ அவ்வாறு உழைப்பதற்காகவே பிறந்தது போல் உழைப்பார்கள். சேலம் கிளையில் வேலை செய்கையில் ஒரு கார் விற்பனைக் கம்பனியில், ஒரு மாவு மில்லில் எல்லாம் பார்த்திருக்கிறான். வங்கி பனிரெண்டு மணிக்கு மூடினால் பனிரெண்டரைக்கும், இரண்டு மணிக்கு மூடினால் இரண்டரைக்கும் வருவார்கள். கையில் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கான வேலை வைத்திருப்பார்கள். என்ன திட்டினாலும், கோபித்துக் கொண்டாலும், கதவைத் தாள் போட்டாலும் கோபமே வராது. சிரித்தபடியே இருப்பார்கள். ஒவ்வொரு ஊழியரிடமும் அவர் தன்மைக்கும், ஸதானத்துக்கும் தகுந்த மதிரி பேசி, சிரித்து, எப்படியாவது வேலைகளை முடித்துக் கொண்டு போய் விடுவார்கள். இது தினசரி நடக்கும். ஏதோ கம்பனியே அவர்களுடையது மாதிரி ஒவ்வொரு பைசாவையும் கணக்குப் பண்ணி காரியம் செய்வார்கள். அவர்கள் ஆபீசில் போய் பார்த்தல்தான் அவர்கள் உண்மை நிலைமை புரியும்.

இந்த டிரைவரும் அப்படித்தான் போலும். ‘ஏதாவது சாப்டறீங்களா பாய்” என்று வேணு கேட்டதற்கு, ‘ஆச்சுங்க, நீங்க ஏதாச்சும் சாப்டறீங்களா” என்றார். ‘அதுக்கில்லீங்க” என்றான் வேணு. அவர் எப்போது சாப்பிடுவார், எப்போது சிறு நீர் கழிப்பார், எப்போது காரிலிருந்து தன்னைப் பிரித்து எடுத்துக் கொள்வார் என்றே தெரியவில்லை. அவர் கன்னங்கள் ஒட்டிப் போய் இருந்தன. பல வருடங்களாக இந்த முதலாளியிடம் இருக்கிறாராம். வண்டியில் இருப்பவர் மனதறிந்து ஓட்டினார். ஒரு குலுக்கல், அவசரம், சடன் ப்ரேக் இல்லை.

காரியமெல்லாம் நினைத்தவாறே நடந்து ஒரு நாளும் இல்லாத திருநாளாக ஏழு மணிக்கெல்லாம் வீடு திரும்பியாகி விட்டது. ஆபீஸிலிருந்து வீட்டுக்கு காரில் சென்றது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. மேனேஜர் வீட்டில் இல்லாததால் பணத்தை அவர் மனைவியிடம் கொடுத்துவிட்டு உடனே புறப்பட முடிந்தது.

வீட்டில் சாதாரணமாக ஒன்பது மணிக்கு வருபவன் ஏழு மணிக்கெல்லாம் வந்தது ஆச்சர்யம். அம்மாவிடமும், மனைவியிடமும் செருப்புத் தோலைக் காட்டினான். ‘இதை எதுக்கு வாங்கிண்டு வந்தே’ என்றாள் அம்மா. ‘கொடுத்தாங்க. வாங்கிண்டு வந்தேன். எல்லாம் வழக்கமா தரதுதான். அவனவன் ஆயிரம் பண்றான். இது வெறும் செருப்புத்தோல். நூறு இருநூறுதான் இருக்கும். எங்காபீஸ்ல இதெல்லாம் எல்லாருக்கும் கிடைச்சிண்டுதான் இருக்கு’ என்றான். தனக்கும் இதெல்லாம் லஞ்சமில்லை என்று சமாதானப் படுத்திக் கொள்ள இந்த வார்த்தைகள் போதுமானவையாய் இருந்தன.

********

சுதந்திர தினம் எல்லோருக்கும் விடுமுறை. ஆனால் செருப்புத் தைப்பவர்கள், காய் விற்பவர்கள், வண்டி இழுப்பவர்கள், ரிக்ஷாக்காரர்கள் என்று சம்பாதித்தால்தான் அன்றைய சாப்பாடு என்று இருப்பவர்களுக்கும், தடையில்லாமல் பண வரவு இருக்கவேண்டும் என்று இருக்கும் வியாபாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அது மற்றுமொரு வேலைநாளே!

நான்கு தெரு தள்ளி ஒரு செருப்புத் தைப்பவரைக் கண்டு பிடித்தான். அவரிடம் தோலைக் காட்டிக் கேட்டமைக்கு அவர் ஒரு ஜோடி பெரிய செருப்பும், ஒரு ஜோடி சின்ன செருப்பும் செய்யலாம் என்றார். வீட்டு விலசத்தை சொல்லி வரச்சொல்லிவிட்டு தோலை எடுத்துக் கொண்டு வந்தான்.

சற்று நேரத்தில் செருப்புத் தைப்பவர் வந்ததும் அவனும் மனைவியும் அளவு கொடுத்தார்கள். ஃப்ளாட் காம்பவுண்டில் ஸ்கூட்டர்கள் வைக்கும் இடத்தில் இருந்த நிழலிலேயே தன் உபகரணங்கள், பை இவற்றுடன் அமர்ந்து வேலையை ஆரம்பித்தார். ஒரு ஜோடிக்கு ஐம்பது ரூபாய் என்று ஆரம்பித்து ஜோடிக்கு நாற்பது என்று முடிவாயிற்று.

வேணு குளித்து, சாப்பிட்டுவிட்டு வந்த போது செருப்புகள் தயாராயிருந்தன. செருப்புத் தொழிலாளியிடமிருந்து லேசாக சாராய நெடி வீசியது. இதை முதலிலேயே கவனிக்கவில்லையே என்று நினைத்தான். நல்ல வேளையாக சில்லறையாக எண்பது ரூபாய் இருந்தது. அதை வாங்கிக் கொண்டு அவர் சென்று விட்டார்.

புதுச் செருப்புகளை வீட்டில் கொண்டு வந்து வைத்து விட்டு வேணு வெளியில் போக வேண்டுமாய் இருந்தது. நூலகத்தில் புத்தகங்களைக் கொடுத்துவிட்டு வந்தபோது மழை பிடித்துக் கொண்டது. அந்த சமயம் மழை வரும் காலமில்லை. என்றாலும் வெளியில் போகிற எண்ணம் போய் அன்று முழுவதும் தூக்கத்திலேயே கழிந்தது.

பயிற்சி மையம் ஸ்கூட்டரில் போக ஐந்து நிமிட தூரம்தான். பத்து மணிக்குப் போய்விட்டு மேனேஜர் தொந்தரவு இல்லையென்றால் ஐந்து மணிக்கு வந்து விடலாம். வந்தவர்களில் அவனுக்குத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. சென்னையிலிருந்து அவன் மட்டும்தான். வகுப்பு அறை குளிர் பதனம் செய்யப் பட்டு இருந்தது. ஒரு மணிக்கு ஒரு தரம் டீ பிரேக் இருந்தது. பயிற்சியாளரின் விரிவுரை முதற்கொண்டு தூங்குவதற்கான சகல தூண்டுதல்களும் இருந்தன. மதியம் சாப்பாட்டுக்குப் பின் தூங்குவதைத் தவிர்க்கவே முடியாது. ஒரு மணிக்கு சாப்பாட்டு நேரம். அங்கேயே சாப்பாடு கொடுத்தார்கள்.

இன்னும் நாற்பது நிமிடம் இடைவேளை இருந்தது. வெளியே வந்த வேணு நோக்கமற்று காலாற நடக்க ஆரம்பித்தான். கபாலி கோவில் குளத்தைப் பார்த்து நாளாயிற்று போகலாமா என்று எண்ணி அந்தப்புறம் திரும்பி பத்து அடி வைத்திருப்பான். வலது கால் செருப்பு ‘பட்’டென்று அறுந்து விட்டது. அவனுக்கு திடுக்கிட்டுப் போய் விட்டது. ‘என்ன சனியன், புதுச் செருப்பு இப்படி அறுந்து விட்டதே’ என்று. நல்ல வேளையாக கூப்பிடு தூரத்தில் ஒருவர் செருப்புகளோடு அமர்ந்திருந்தார். அவரிடம் போய் செருப்பைக் காட்டி ‘இதைத் தச்சுக் கொடுங்க. அப்படியே இந்த செருப்பிலும் ஒரு எக்ஸ்ட்ரா தையல் போட்டு விடுங்க’ என்று இடது கால் செருப்பையும் கொடுத்தான்.

அவர் இரண்டையும் கையில் எடுத்துப் பார்த்துவிட்டு ‘இது வராதுங்களே சார். நீங்க எத்தனை தச்சாலும் புட்டுக்கிடும்’ என்றார்.

‘ஏங்க?’ என்றான் வேணு.

‘இது வெறும் அட்டைதானுங்களே’ என்றார் அவர்.

‘என்னங்க இது, இப்படி சொல்றிங்க. தோல் ஃபேக்டரிலே வாங்கினதுங்க’.

‘இல்லீங்க. எங்களுக்குத் தெரியாதா? வெறும் அட்டைதான். வேணும்னா தையல் போடறேன். ஒரு நாளைக்குத் தாங்காது. இல்லே வேற யார்கிட்டே வேணாலும் கேட்டுக்கிடுங்க. அடுத்த தெருவுலே கூட ஒருத்தர் இருப்பாரு’.

வேணுவுக்கு திடீரென்று எல்லாம் புரிந்தது.

கம்மிய குரலில் ‘பரவாயில்லீங்க. நீங்க போடுங்க’ என்றான்.

– சொல்வனம், ஜூன் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *