சுதந்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2014
பார்வையிட்டோர்: 8,976 
 
 

“மாதவனுக்காக நீச்சல் கத்துக்கிட்டே! இப்போ ஒனக்கே பிடிச்சுப்போச்சு போலிருக்கே!”

கணவனின் கேலியை ரசிக்க முடியவில்லை சாவித்திரியால். `ஏதோ, நாலு பேரைப் பாத்தாலாவது அவன் கொஞ்சம் தேறமாட்டானா என்கிற ஆசைதான்!” என்றாள், தழுதழுத்த குரலில்.

பூமியின்மேல் இரு பாதங்களையும் பதித்து நடக்க முடியாது, தன் தோளைப்பற்றி, உடன் நடக்கும் பிள்ளையை நினைக்கும்போதே சொல்லவொணா வருத்தம் எழுந்தது அத்தாய்க்குள். அவள் அருகில் இல்லாவிட்டால், எட்டு மாதக் குழந்தைபோல் தவழுவான்.

ஏதோ நினைப்பில் அவள் முகம் மலர்ந்தது. “அவன் நீஞ்சறப்போ நீங்க பாக்கணுமே! தண்ணிக்குள்ளே போய் குட்டிக்கரணம் போட்டு..! என்று ஆரம்பித்தவள், கொஞ்ச நேரம் அந்த இன்ப நினைவில் ஒன்றிப்போனாள். “அவன் தலையை மறுபடியும் மேலே பாக்கறபோதுதான் எனக்கு மூச்சு வரும்!”

“அதான் டாக்டர் சொல்லியிருக்காரில்ல? உயிருக்கு ஆபத்து வர்றமாதிரி எதுவும் செய்திட மாட்டான்னு!”

“இருந்தாலும், எனக்குப் பயம்தான்! ” என்று ஒப்புக்கொண்டாள் அந்த பேதைத்தாய். “நீங்கதான் எங்ககூட வரவே மாட்டேங்கிறீங்களே!”

“எனக்கு இந்த `தண்ணி` எல்லாம் பிடிக்காது!” சிரித்தார். “அதோட, அளவுக்கு அதிகமா க்ளோரின் போட்டிருப்பாங்க. கிருமிங்க சாகுதோ, என்னவோ, எனக்கு முடி கொட்டிடும்”.

சாவித்திரிக்குத் தெரியும் அவர் மறுப்பின் காரணம்.

தண்ணீரில் அமிழ்ந்திருக்கும்போது தான் அனுபவிக்கும் சுகத்தை வெளிக்காட்ட வேறு வழி தெரியாது, மாதவன் அர்த்தமற்ற பிதற்றல்களை இரைந்து கத்தும்போது, அங்கிருக்கும் அனைவரும் வேடிக்கை பார்ப்பதும், அருவருப்புடன் ஒதுங்குவதும் அந்தப் பெரிய மனிதருக்கு தலைகுனிவு.

எவ்வளவோ ஆசையாகப் பெற்ற மகன்!

மூன்று மாதத்தில் தன் முகம் பார்த்து இவன் சிரிக்கவில்லை, எட்டு மாதத்தில் உட்காரவில்லையே என்றெல்லாம் சாவித்திரிக்கு சந்தேகம் எழ, `எல்லாக் குழந்தையின் சுபாவமும் ஒரே மாதிரி இருக்குமா?` என்று சமாதானம் செய்தார் கணவர்.

மூன்று வயதானபின், `பசித்தாலும் சொல்லத் தெரியவில்லை, நெருப்பு சுடும் என்றாலும் புரியவில்லை,` என்ற நிலை வர, அதற்கு மேலும் தவிர்க்க முடியாது, மருத்துவர்களை நாடிப் போனார்கள்.

மாதவனுக்கு எட்டு வயதானபோது, `இவன் என்றுமே சிறு பிள்ளையாகத்தான் இருப்பான்!` என்று திட்டவட்டமாகப் புரிந்து போனது சாவித்திரிக்கு. நீரில் அமிழ்பவன், தத்தளிப்பை விடுத்து, தன் முடிவை ஏற்கச் சித்தமாவதுபோல் அமைதியானாள். எந்த தேவைக்கும் தன்னை எதிர்பார்க்கும் இந்த மகன் என்றுமே தனக்கு கைப்பிள்ளைதான் என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டாள்.

`ஆடிசம் குணமாக இதுவரை யாரும் மருந்து கண்டுபிடிக்கல. அவனால் இயன்றவரை, எல்லாவற்றையும் கற்க ஏற்பாடு செய்யுங்கள்!` என்று டாக்டர்கள் தெரிவித்தபோது, மாதவன் பியானோ கற்க ஒரு ஆசிரியை நியமிக்கப்பட்டாள்.

`விரல்களில் வலுவே இல்லையே!` என்று அவள் உதட்டைப் பிதுக்க, பரிதவிப்புடன், டாக்டரிடம் ஆலோசனை கேட்டாள் சாவித்திரி.

`உங்கள் மகனுடைய நல்ல காலம்தான் இப்படி பணத்தட்டுப்பாடு இல்லாத குடும்பத்தில் பிறந்திருக்கிறான். நீந்தவும் கற்றுக் கொடுக்கலாமே!`

`எப்படி டாக்டர்? இவனுக்கோ பிடித்துக்கொள்ளாமல் நிற்கவே முடியவில்லை..,` தாய் பயந்தாள்.

`தண்ணியில எடை குறைஞ்சமாதிரி இருக்குமில்லியா? அதனால, கால், கையெல்லாம் சீரா இணைஞ்சு, ஒடம்பும் சமநிலைக்கு வரும். நாளடைவிலே இருதயமும் பலமாகிடும்`.

நீச்சல் குளம் காலியாக இருந்தது. அனேகமாக, காலை எட்டு மணிக்குமேல் யாரும் வரமாட்டார்கள். பூமத்திய ரேகைக்கு ஏழு டிகிரி வடக்கிலிருந்த மலேசிய நாட்டில், நாள் முழுவதும் வெயில் கடுமையாகத் தாக்கும். எப்போது மழை பொழியும் என்றும் சொல்ல இயலாது.

வெளிர்நிற சருமம் கொண்டவர்கள் பகல் பன்னிரண்டு மணி வெயிலில் — ஒரே மணி நேரம் — காய்ந்தால்கூட, சருமப் புற்றுநோய் கண்டிப்பாக வரும் என்று ஆங்கில தினசா¢களில் எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருந்தார்கள்.
மேல்நாடுகளில் வசித்தவர்கள் டிசம்பர் மாதத்து குளிரைத் தாங்கமுடியாது, இங்கு வந்து, கடற்கரைப் பகுதிகளில், அல்லது நீச்சல் குளங்களுக்கருகே நாற்காலிகளில் அமர்ந்திருப்பது சாதாரணமாகக் காணக்கூடிய காட்சி. கூடியவரை ஆடைகள் எல்லாவற்றையும் களைந்துவிட்டு, காலையும் தலைக்குமேல் தூக்கி, இண்டு, இடுக்கு எல்லாம் ஒரே சீராக பழுப்பு நிறமாக வேண்டும் என்ற அவாவுடன் அவர்கள் இருந்தார்கள், `கான்சர் போன்ற வியாதி எல்லாம் பிறருக்குத்தான் வரும்,` என்ற மெத்தனத்துடன். மாதவனுக்கோ சூரியன் அளிக்கும் அந்த விட்டமின் D வேண்டியிருந்தது.
வழக்கம்போல், “ஒழுங்கா அந்தப் பக்கம் போயிட்டு வரணும், என்ன?” என்று உபதேசித்தாள் சாவித்திரி, மகனுக்கு அந்த அறிவுரை விளங்காது என்று தெரிந்திருந்தும்.

அவனோ, இரு மீட்டருக்குமேல் இருந்த குளத்தின் அடிப்பாகத்திற்கே சென்றான். மேலெழுகையில், அனுமார்போல் கன்னம் உப்பியிருந்தது.
“மாதவன்!” சாவித்தி¡¢யின் கண்டனக்குரல் தாமதமாகத்தான் வந்தது.
தலையை மேலே சாய்த்து, வாய் நிறைய இருந்த நீரை உமிழ்ந்தான். அந்த எச்சில் நீர் அருகே நின்றிருந்த ஒருவரின்மேல் அருவியாக ஊற்றியது.
பதைப்புடன் அவரை நோக்கியவள், “என் மகன்.. அவனுக்கு மூளை சரியில்லை! மன்னித்துக் கொள்ளுங்கள்!” என்று அவமானத்தில் இறுகிய முகத்துடன் வேண்டினாள்.

“இதற்கு மன்னிப்பு எதற்கு? இன்னொரு முழுக்கு போட்டால் போகிறது!” என்று பெருந்தன்மையுடன் கூறியவரை நன்றியுடன் நோக்கினாள்.
அவருக்கும் கிட்டத்தட்ட அவள் வயதுதான் இருக்கும். சற்றே நரைத்திருந்தாலும், அடர்ந்த முடி நெற்றியெல்லாம் படர்ந்திருந்தது.

“உன் பேரு என்னப்பா?”

தலையும், பார்வையும் இலக்கில்லாது, எங்கோ பதிந்திருக்க, இயந்திர கதியில் பதிலளித்தான் மாதவன்.

“அங்கிள் முகத்தைப் பார்த்துச் சொல்லு, மாதவன்!” என்று திருத்தினாள் தாய்.
அவன் அவர்புறம் திரும்பியபோது, மரியாதையாக, “என் பெயர் சேது!” என்று தெரிவித்தார், முறுவலுடன்.

“சேது!” என்று திரும்பச் சொன்ன மகனை மீண்டும் கண்டித்தாள் தாய்: “அங்கிள் சேது!”

“மீன் குட்டி மாதிரி தண்ணிக்குள்ளே என்னென்னமோ வித்தைகள் செய்யறானே!” சேதுவின் வியப்பு உண்மையாக இருந்தது.

பெருமையுடன் புன்னகைத்தாள் சாவித்திரி மாதவனைப் பாராட்டி, இதுவரை எவரும், எதுவும் சொன்னதாக நினைவில்லை அவளுக்கு.

“ஒவ்வொரு நாளும் இங்க கூட்டிட்டு வர்றப்போ, பயமா இருக்கு எனக்கு. அவனோ, எப்பப் பார்த்தாலும், `ஸ்விம்மிங் போகலாம்மா, ப்ளீஸ்!` என்கிறான்!”

“எதுக்குப் பயப்படறீங்க? சொல்லப்போனா, மாதவனைப் பாத்தா பொறாமையா இருக்கு எனக்கு”.

சாவித்திரி வியப்புடன் அவரை நோக்கினாள்.

“நாப்பது வயசுக்குமேலதான் நீச்சல் பழகினேனா! இப்போ.. ஒழுங்கா.. இந்தப் பக்கத்திலேருந்து அந்தப் பக்கம்தான் போகத் தொ¢யும். மீதி எல்லாம் பயம்!”

அவர்கள் இருவரும் மனம் விட்டுச் சிரிக்கையில், காரணம் புரியாமலேயே தானும் சேர்ந்து சிரித்தான் மாதவன்.

பூரிப்புடன் அவனது கன்னத்தைத் தடவினாள் தாய். இப்போது அக்கன்னம் முன்போல வழவழப்பாக இல்லை என்பதை உணரும்போதே, ஒரே சமயத்தில் பெருமிதமும், கவலையும் முளைத்தன.

ஒளிவுமறைவில்லாது பேசும் இவா¢டம் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நம்பிக்கையுடன், “ஒங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா?” என்றாள், கெஞ்சலாக.

பதிலாக, அவர் மிக லேசாக தலையை ஒருமுறை மேலும், கீழும் ஆட்டி, அவளுடைய கண்களையே உற்றுப் பார்க்க, சாவித்திரி தன் மனதைத் திறந்து கொட்டினாள் — தன்னைவிட உயரமாக வளர்ந்துவிட்ட மகனுக்குப் பல் விளக்க ஒவ்வொரு நாளும் தான் படும் பாடு (`அவனை நாற்காலியில உட்கார வைங்களேன்!`), யாராவது பேசும்போது அதை அரைகுறையாக விளங்கிக்கொண்டு, தவறாக அதை வெளியிட்டு மகன் தலைகுனிவை ஏற்படுத்துவது; அப்படித்தான் ஒருநாள், ஒரு பெண்மணி அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தபோது, அவளுடைய மார்பகத்தைச் சுட்டி, `குண்டு!` என்று அறிவித்தது, அப்போது வந்தவள் அடைந்த அதிர்ச்சி, கோபம் — இப்படியாக, தன்னை எப்போதோ பாதித்து இருந்த அனைத்தையும் பகிர்ந்துகொண்டாள். ஒருவரிடம் மனந்திறந்து பேசுவதே இனிய அனுபவமாக இருந்தது.

உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்த சேது, “தான் ஆண் என்பது மாதவனுக்குத் தெரியுமா?” என்று வினவினார்.

சாவித்திரி தலையசைத்தாள்.

“பொதுவா, ஒரு பையனுக்கு நாலு வயசாறப்போ, `அம்மாவோட ஒடம்பு என்னோடது மாதிரி இல்லையே!` அப்படின்னு வியப்பா இருக்கும். `அம்மா என்கூடவே இருக்கணும்` என்கிறமாதிரி ஒரு கவர்ச்சி ஏற்படும்”.

பிறகு, தான் படித்திருக்கும் பெருமையை இவளிடம் காட்டிக் கொள்கிறோமே என்று வெட்கியவராக, “ஆசிரியப் பயிற்சி எடுக்கும்போது, மனோதத்துவத்தில படிச்சது,” என்று சமாளித்தார். “மாதவனுக்கு ஒடம்புதான் வளர்ந்திருக்கு. ஆனா, மனசு இன்னும் சின்னப் பிள்ளையாத்தானே இருக்கு?” என்று நியாயம் கற்பித்தார்.

“மத்தவங்களுக்கு இது புரியுதா? எங்களைத் தப்பா நினைக்கிறாங்க!” சாவித்திரியின் முகத்தில் ஆழ்ந்த வருத்தம்.

“கெடக்கிறாங்க. நாம்ப எல்லாரையும், எப்பவும் திருப்திப்படுத்திக்கிட்டு இருக்க முடியாது!” கையை ஒருமுறை அலட்சியமாக வீசினார் சேது.

சிறிது நேரம் யோசித்துவிட்டு, ” நீங்க அவன்கிட்ட, `நீ அப்பா மாதிரி. அப்பாவும் ஒன்னைமாதிரி பையனாக இருந்தவர்தான். ஆனா, அம்மா ஒரு பெண்` — இப்படிச் சொல்லிப் பாருங்களேன்!”

“அவனுக்குப் புரியுமா?” சாவித்தி¡¢யின் நியாயமான சந்தேகம்.

“எந்த ஒண்ணையும் செய்கையால பு¡¢ய வைக்க முடியாதா, என்ன! அவசியமானா, ஒங்க ஜாக்கெட்டுமேல அவன் கையை வைங்க!” கூறப்பட்டது நுண்ணியமானதாக இருந்தாலும், கூறிய விதத்தால் ஆபாசமாக ஒலிக்கவில்லை.

“எந்த ஒண்ணும் நமக்குப் புரிஞ்சு போயிடறப்போ, அதில வேண்டாத ஆர்வம் இருக்கிறதில்ல,” என்று அழுத்தமாக மேலும் சொன்னார்.

சாவித்திரியின் நன்றி உணர்வையும் மீறி, பெருமூச்சு வந்தது. “நான் தெரிஞ்சுக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு!” சொல்லும்போதே சுயபச்சாதாபம் கிளர்ந்தது.

சேது மென்மையாகப் புன்னகைத்தார். “எல்லாமே தெரிஞ்சவங்களா இருந்தா, நாம்ப ஏம்மா இன்னும் இந்த ஒலகத்தில இருக்கோம்? சாமியா இல்ல ஆகியிருக்கணும்?”

கருணையும், அமைதியும் ததும்பும் அவரது கண்களைச் சந்தித்தபோது குழப்பமோ, குற்ற உணர்வோ இல்லை அவளிடம்.

நாளடைவில், சேது நீச்சல் குளத்தில் இருந்தால், தொலை தூரத்திலிருந்தே அவரைக் கண்டுவிட்டு, “அங்கிள் சேது!” என்று ஆனந்தப்படும் மாதவனுக்காக, அவன் கேட்பதற்கு முன்னாலேயே சாவித்திரி தயாராவது பழக்கமாயிற்று. அவளுடைய புதிய ஆர்வம் கணவருடைய கண்களுக்குத் தப்பவில்லை.

“எப்படா நீச்சல் குளத்துக்குப் போகலாம்னு, இவனைவிட நீதான் அதிகம் துடிக்கிறமாதிரி இல்ல இருக்கு!” என்று கேலி செய்தார்.

அவள் எதுவும் சொல்லுமுன், “அங்கிள் சேது!” என்றான் மாதவன், அசந்தர்ப்பமாக.

தம்புராவின் தந்தி அறுந்ததுபோல, இசைவு மறைந்த சூழ்நிலை எழுந்தது அங்கு.

சட்டென முகத்தில் மாறுதல் தெரிய, “யாரது?” என்ற கேள்வி பிறந்தது.
கூடியவரை இயல்பாக இருக்க முயன்று, “எப்பவாவது அங்கே பார்ப்போம். மாதவன்கிட்டே அன்பாப் பேசுவார்,” என்றாள்.

“என்ன உத்தியோகம்?” மிரட்டலாக வந்தது அடுத்த கேள்வி.

சாவித்திரியின் ஸ்ருதி இறங்கியது. “ஸ்கூல் டீச்சர்னு சொன்ன ஞாபகம்!”
கை, கால், முதுகு எல்லாம் தொ¢ய, மானம் காக்கும் அத்தியாவசியமான உறுப்புகள் மட்டும் மறைக்கப்பட்டால் போதும் என்னும் நோக்கத்துடன் தைக்கப்பட்டிருந்த உடையில் மனைவி நீச்சல் குளத்தில் இருக்க, அவளருகே ஓரிரு சாண் அகல உள்ளாடை மட்டுமே அணிந்த ஒரு ஆண்மகன்!

எப்படிப் பேசினால் பெண்களைக் கவரலாம் என்பதைக் கலையாகக் கற்றிருப்பவன் அவன் என்பதில் அவருக்குக் கிஞ்சித்தும் சந்தேகமில்லை.
பெற்ற குழந்தையைப் புகழ்ந்து பேசினால், அவள் எவ்வளவு கடின நெஞ்சுடையவளாக இருந்தாலும் இளகிவிடுவாளே! அப்படி இருக்கையில், மகனை நினைக்கையில், வேதனை மட்டுமே அனுபவித்திருக்கும் சாவித்திரி எம்மாத்திரம்!

மாதவனிடம் அன்பாகப் பேசுவானாமே!

தான் பெற்ற மகனுடன் கழிக்க சிறிது அவகாசத்தை ஒதுக்கவில்லை என்பதைக் குத்திக்காட்டுகிறாளோ!

இப்போது தாய், தந்தை இருவருமே தொடர, நீச்சலுக்குப் போனான் மாதவன். அவனுடைய கபடில்லா மகிழ்ச்சியைக் கண்டு ஆனந்தப்பட முடியவில்லை சாவித்திரியால்.

கணவருக்கு அப்படியொன்றும் மகன்மீது புதிதாகக் கரிசனம் பிறந்துவிடவில்லை, தன்னைக் கண்காணிக்கவே உடன் வருகிறார் என்று புரிய, வேதனையாக இருந்தது. மரியாதை கருதி, சேதுவை கணவருக்கு அறிமுகப்படுத்தினாள், வலிய வரவழைத்துக்கொண்ட புன்னகையுடன்.
தனது சொந்த கம்பெனியில் வந்து குவியும் பணத்தை கணவர் பிரகடனப்படுத்திக்கொண்டபோது, சேதுவுடன் அவளும் கூசிப்போனாள்.

`நான் யார் தெரியுமா? நீ மாதமெல்லாம் உழைத்துச் சம்பாதிப்பதை நான் ஒரே நாளில் ஈட்டிவிடுகிறேன்! என்னிடமா மோதுகிறாய்?` என்று மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தது தெளிவாகத் தெரிந்தது.

சில வாரங்கள் கழிந்தன.

இனிமேலும் தான் மனைவிகூட வருவது அனாவசியம் என்று அவர் நினைத்திருக்க வேண்டும்.

கணவர் தன் முழு கவனத்தையும் பழையபடி வேலை மற்றும் `பார்` நண்பர்களிடம் திருப்ப, சாவித்தி¡¢யால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
இப்போது மட்டும் என்ன, அவளிடம் புது நம்பிக்கையா?

மகனுடைய வளர்ச்சியில், மகிழ்வில் அக்கறையைவிட மனைவியைக் கண்காணிக்க வேண்டியதுதானே அவசியமாகப் போய்விட்டது அவருக்கு!

“அங்கிள் சேது!” என்று மாதவன் ஆர்ப்பா¢த்தபோது, தலைநிமிர்ந்த சாவித்திரியின் கண்கள் சேதுவின் தீர்க்கமான நயனங்களில் பதிந்தன.
அதில் அவள் கண்டது இரக்கமா, வேதனையா? அதை அலசும் மனநிலையில் இருக்கவில்லை அவள்.

வேகமாகப் பார்வையைத் திருப்பிக்கொண்டபோது, ஆத்திரம் பொங்கியது, இலக்கில்லாமல்.

ஆண்-பெண் நட்பு எவ்வளவுதான் மதிப்புக்குட்பட்டதாக இருந்தாலும், அதைக் கேவலமானதாகக் கருதுபவர்கள் இருக்கும்வரையில், எவருக்குமே பூரண சுதந்திரம் இல்லை.

நம் சமூகம் ஏன் இப்படி தனக்குத்தானே விலங்கிட்டுக் கொள்கிறது?
குளத்தின் அடியில் போய், வாய் நிறையத் தண்ணீருடன் மூச்சுத் திணற, தலையை வெளியே நீட்டிய மகனுடைய முதுகில் ஓங்கி ஒரு அறை விட்டாள் சாவித்திரி.

அதைக் காணாதமாதிரி, வேறு பக்கம் போனார் சேது.

(மலேசிய நண்பன், 28-9-2007)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *