கதையாசிரியர்:
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 3, 2023
பார்வையிட்டோர்: 3,419 
 
 

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாட்டக் குறிஞ்சியை விஸ்தாரமாகப் பாடி விட்டுத் தாளத்திற்கு ஆரம்பித்தாள் விசுவாநாதனின் கண்கள் எதிரே மாட்டியிருந்த காலண்டரின் தாளின் மீது சென்றன. தமிழில் கொட்டை எழுத்தில் தேதியின் கீழ், ‘புதன்’ என்று குறித்திருந்தது. லேசான முறுவல் ஒன்று அவன் அதரங்களிலே விளையா டியது. சுகன்யா கவனியாதது போல அதைக் கவனித்து விட்டு மேலே பாடத் தொடங்கினாள். “புதமாச்ரயாமி ஸததம்” என்று முதலடியைப் பாடி விட்டுக் கண்களை உயர்த்தி விசுவநாதனின் மீது ஒரு விநாடி கண்ணோட்டம் விட்டாள். பாட்டின் நடுவில் ஒருமுறை நிமிர்ந்தாள். உவகைப் பெருக்கெடுத்தது. 

விசுவநாதனின் வீட்டினர் சென்ற பிறகு சுகன்யா தனிமையில் அமர்ந் திருந்தாள். அப்பொழுது அவளுடைய தந்தை அங்கு வந்தார். 

“சுகன்யா, உன் பாட்டினாலேயே அவர்களைச் சொக்க வைத்துவிட்டாயே? தூண்டிலைப் போட்டு ஓர் இழுப்பு இழுத்துவிட்டாயே? ஊம், என்ன சொன்னார்கள், தெரியுமா?” என்று கேட்டார் அவர். சுகன்யா மௌன மாகவே நிமிர்ந்து நோக்கினாள். 

“இந்தப் பாட்டில் தெய்விக அருள் ஜொலிகிறது என்றார்கள்” என்றார் தந்தை. 

“போகட்டும். வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி” என்றாள் சுகன்யா. 

“ஏன் அப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டார் தந்தை. 

“அன்று வாணி ஹாலில் கச்சேரி நடந்ததல்லவா?”

“ஆமாம். உங்கள் பாட்டு வாத்தியார் பாடினாள்.” 

“அன்றைக்கு வகுப்பில் உள்ள எல்லாரும் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தோம். கச்சேரி முடிந்த பிறகு, ஆண் பிள்ளைகள் கூட்டம் ஒன்று நகர்ந்த பிறகு போக வேண்டும் என காத்திருந்தோம். அப்பொழுது ஓர் ஆண் பிள்ளை சொல்கிறான், ‘என்ன பாவம் பண்ணினதோ இந்தக் கச்சேரி கேட்க’ என்று. உடனே அதை இசையுடன் மற்ற ஒருவன் பாடிக் காட்டுகிறான். எல்லாரும் கொல் என்று சிரிக்கிறார்கள். நாங்கள் கவனிக்காதது போல வேகமாக நடந்து வெளியேறினாம். அப்பொழுது ஒருகுரல் சற்று அதிகமாகவே உரக்கக் கேட்டது. ‘அப்பனே, அசலே இவ்வளவு லட்சணமாக இருக்கிறதே, நகல் எந்தத் திவ்யத்தில் இருக்கும்?’ என்று ஒரு குரல் கேள்வி கேட்டது. உடனே ஒரு குரல் பதில் சொல்லிற்று, கடவுளே, ஒன்றா இரண்டா? இங்கேயே இருபது நகல் எண்ணிவிட்டேன். நம்மில் யார் அத்தகைய பாவம் பண்ணினவர்களோ? இதில் எந்த எந்த உருப்படி யார் யார் வீட்டுக்கு வரப்போகிறதோ?’ என்று. எங்களுக்குக் கோபம் தாங்கவில்லை. விடுவிடென்று வந்து விட்டோம்” என்று படபடப்போடு பேசினாள் சுகன்யா. 

“அதில் விசுவநாதனும் இருந்தானா?” என்று கேட்டார் தந்தை. 

“ஆமாம்.” 

“முன்பு என்ன சொன்னார்களோ, இனிச் சொல்ல மாட்டார்கள். இன்று அவன் தலையே நிமிராமல் நாத வெள்ளத்தில் மூழ்கியே போய் விட்டானே? கை தாளம் போட்டது; கண்கள் லயித்தன. இதற்கு வாய் என்ன?” என்று கூறிப் போய்விட்டார் தந்தை. 

சுகன்யாவை அன்று பெண் பார்க்க வந்தார்கள், விசுவநாதன் வீட்டினர். அவர்களும் அந்த ஊரிலேயே இருந்தார்கள். இருந்தாலும் இதுவரை இரண்டு குடும்பங் களுக்கும் பரிசயம் இல்லை. இன்று அவனைக் கண்டதும் அன்று கச்சேரியில் பார்த்த நினைவு சுகன்யாவுக்கு வந்தது. அவர்கள் பேச்சும் ஞாபகத்திற்கு வந்ததும் தன் பாட்டு அவனுடைய ரசனைக்குக் குறைந்ததில்லை என்று காட்ட வேண்டும் என்ற அவா உணடாயிற்று அவளுக்கு. முதலில் பைரவி வர்ணம் பாடினாள். அப்பொழுதே விசுவநாதனின் தந்தை தம்மை மறந்து ஓரிடத்தில் “ஹா, பேஷ்” என்று தலை ஆட்டினார். பிறகுதான் அவள் நாட்டக் குறிஞ்சியை எடுத்தாள். அதன் பிறகு ஜாவளி ஒன்றைப் பாடி விட்டு மத்தியமாவதியில் “பாலிஞ்சு காமாக்ஷி” என்று முடித்து விட்டு எழுந்தாள். 

அதுவரை கவிழ்ந்தேயிருந்த விசுவநாதனின் தலை நிமிர்ந்தது. சுகன்யாவின் கண்களும் அவன் கண்களும் கூடின. பேசின. திரும்பின. யுக யுகாந்தரங்களாக நடந்து பழமை யானதும் என்றும் புதுமையாகவே நிற்பதுமான இந்த நிகழ்ச்சி இங்கும் நடந்தது. சுகன்யா எழுந்து உள்ளே போய் விட்டாள். பிள்ளை வீட்டினர் சம்மதத்தைத் தெரிவித்துவிட்டுச் சென்றனர். சுகன்யாவின் தகப்பனார் அவளிடம் தெரிவிக்க வந்ததும், அவள் முன் நடந்ததைக் கூறினாள். தந்தை ஒரு புறம் போனார். மகள் ஒரு புறம் போனாள். 

அடுத்த புதன்கிழமையன்று அவளைச் சாப்பிட அழைத்த போது அவள் வந்து, “இரு, அம்மா. ஒரு நொடியில் குளித்து விட்டு வருகிறேன்” என்றாள். 

“காலையில் ஒரு தரம் குளித்தாயிற்றே? மறுபடியும் என்ன குளிப்பு?” என்று தாய் கேட்டாள். 

இல்லை, அம்மா. மாடியெல்லாம் ஒட்டடை அடித்தேன். உடம்பெல்லாம் தூசி” என்றாள் சுகன்யா. 

ஒட்டடை உன்மீது மட்டும் படியவில்லை; உன் மூளையிலும் படிந்திருக்கிறது” என்று தாய் முணுமுணுத் தாள். 

சுகன்யா கலகலவென்று சிரித்துக்கொண்டே குளிக்கும் அறைக்குப் போய்விட்டாள். தாயார் அவள் வரும் வரை ஏதோ தாழ்ந்த குரலில் அதிருப்தியுடன் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. சுகன்யா சிரித்துக் கொண்டே இலையில் அமர்ந்து தாயை விசாரித்தாள். 

“என்ன அம்மா? என்னையா வைகிறாய்?” என்று வினவினாள் அவள். 

“உன்னை வைவானேன், உன்னைப் பெற்ற நான் இருக்கும்போது? என்னைத் திட்டிக் கொண்டேன். பெற்ற வயிற்றில் கட்டிக் கொள்ள இந்தப் பட்டணவாசத்தில் பிரண்டை கூடக்கிடைப்பதில்லை” என்று அலுத்துக்
கொண்டாள் தாய். 

“ஏன்?” 

“ஏன்? உன்னை வந்து பார்த்துவிட்டுப் போய் நாள் எட்டாகிறது.” 

“ஆமாம்?” சுகன்யாவால் தன் ஆவலைக் கட்டுப் படுத்த முடியவில்லை. 

“உன் அப்பாவுக்கு அந்த இடம். வேண்டாமாம். பெண்களிடம் மரியாதை இல்லாதவனாம். நீ கண்டு விட்டாய்; அதற்கு மேல் உன் அப்பா கண்டுவிட்டார்!” என்றாள் தாய். 

“அப்பாவா சொன்னார்? நான் ஒன்றும்…” சுகன்யாவின் தொண்டை அடைத்தது. விசுவநாதனின் களை பொருந்திய முகம் ஸ்பெஷ்டமாக அவள் மனக் கண்முன் தோன்றிவிட்டு, எங்கோ போய்விட்டது போலப் பிரமை தட்டியது. 

நீர் துளிக்கும் தன் கண்ணைத் தாய் பார்க்கப் போகிறாளே என்று இலையில் தன் முழுக்கவனத்தையும் செலுத்தலானாள் சுகன்யா. 

“கிடக்கிறது. யார் புருஷனை யார் கட்டிக் கொண்டு போய்விடப் போகிறார்கள்? தெய்வம் என்றும் பிராப்தம் என்றும் உண்டென்றால் எது நடக்க வேண்டுமோ அது தான் நடக்கும். இதற்கு நீ எதற்குக் கண்ணில் ஜலம் விடுகிறாய்?” என்றாள் தாய். 

தன் நிலைமையைத் தாய் கண்டுவிட்டாளே என்று ஒரு விநாடி வெட்கினாள் சுகன்யா. பிறகு கண்களைத் துடைத்துக் கொண்டாள். “யார் இப்பொழுது கண்ணீர் விட்டார்களாம்!” என்று அநாவசியமான ஒரு சவால் விட்டாள். 

“யாரோ விட்டார்கள், கிடக்கிறது. உனக்குச் சொல்லி வைக்கிறேன். அடக்கம் என்றால், அது நடை உடை பாவனையில் தான் என்பதில்லை. பெண்ணுக்கு அடக்கம் உள்ளத்திலிருந்து வர வேண்டும். கண், மூக்கு, வாய், செவி ஒவ்வோர் இந்திரியமும் அடங்கித்தான் இருக்க வேண்டும். எல்லாம் உள்ளே கிரகித்துக் கொள்ளும் வழிகளாக இருக்க வேண்டுமே ஒழிய, வெளிப்படுத்த அகன்ற கதவுகளாக இருக்கக் கூடாது. முதலில் நாவடக்கம் வேண்டு பெண்களுக்கு. அதுதான் முக்கியம். எதை வேண்டுமானாலும் புருஷனிடம் சொல்லி விடும் பெண் குடும்பத்துக்கு லாயக்கற்றவள். தந்தையிடம் சொல்லத் துடிக்கிற வாய் நாளைக்குக் கணவனிடமும் வரும்” என்றாள் தாய். 

இதமான தாயின் மொழிகளில் அநுபவத்தின் ஆழம் இருந்தது. ஆயினும் சிறுபிள்ளை மனம் அதற்கு அப்படியே தலைவணங்க இணங்கவில்லை போலும். 

“நீங்கள்தானே எப்பொழுதும் என்னை அப்படிப் பழக்கி வைத்திருக்கிறீர்கள்? அப்பா வேறு, நீ வேறு என்று நினைக்கக் கூடாது என்று நீயே. நூறு தடவை…” 

“கிடக்கிறது, போ” என்று தாய் அதற்கு முற்றுப் புள்ளி வைத்தாள். 

சுகன்யா சாப்பிட்டு விட்டு எழுந்தாள். அவள் மனம் பாறாங் கல்லாகக் கனத்தது. அவள் மாடியில் போய் மறைந்து கொண்டாள். 


கீழே சுகன்யாவின் நாத்தனார் சின்னி வீணை கற்றுக்கொண்டிருந்தாள். “புதமாச்ரயாமி” யை மீட்டிக் கொண்டிருந்ததை உன்னிக் கேட்டுக்கொண்டே தாளம் போட்டுக் கொண்டிருந்தாள் மதனி. 

விசுவநாதன் அவள் கண்களைப் பொத்தினான். சுகன்யா கையை மெல்ல விலக்கிவிட்டு அவனைத் திரும்பிப் பார்த்தாள். 

“சுகன்யா, இன்றோடு ஐம்பத்திரண்டு புதன் கிழமைகள், உனக்கும் எனக்கும் உறவு ஏற்பட்டு” என்றான் அவன் உற்சாகமாக. 

சுகன்யாவின் மனம் பழைய கணக்குப் பார்த்தது. “புதன்கிழமையே நமக்கு முக்கிய தினமாக இருக்கிற துக்கு ஏற்றாற்போல…” என்று அவன் உற்சாகமாகப் பேசிக் கொண்டே போனான். சுகன்யா பரத்தியானமாக இருப்பதைப் பார்த்து அவளை லேசாகத் தட்டினான். 

“ஏய், நான் பேசுவதைக் கவனிக்க வில்லையே?” 

“கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். சொல்லுங்க” என்றாள் சுகன்யா. 

“இன்று முதல் என் ஜாதகத்தில் புதன் புக்தி ஆரம்பிக் கிறதாம். அதற்காகப் புதனுடைய படம் ஒன்று வாங்கி வந்தேன். நானும் வீட்டுக்குள் நுழைகிறேன். நம் சின்னி ‘புதமாச்ரயாமி’ பாடுகிறாள்!” என்று அவன் உற்சாக மாகக் கூறினான். 

சுகன்யாவின் மனம் அப்போது உற்சாகமாக இருக்க வில்லை. அதை ஒட்டியே அவள் தனிமையை நாடி வந்திருந்தாள். பாட்டைக் கேட்டதும் தன்னை அறியாது லயித்திருந்தாள். அவள் மனமும் பழைய நினைவுகளை எழுப்பிக் கொண்டிருந்தது. 

அன்று விசுவநாதனின் மனத்தை இழுக்கப் பாடிய சுகன்யாவுக்கும் இன்று இங்கு யோசனையில் ஆழ்ந் திருக்கும் சுகன்யாவுக்குந்தான் எவ்வளவு வித்தியாசம்! 

“சுகன்யா, ஏன் ஒரு தினுசாக இருக்கிறாய்?’ ‘என்று பரிவோடு விசாரித்தான் விசுவநாதன். 

“ஒன்றுமில்லையே?” என்றாள் அவள். ஆனால் அவள் தொண்டை கனத்தது. கண்களில் நீர் தாரையாக வழிந்தது. 

“என்ன உனக்கு வந்துவிட்டது? வீட்டிலே, மனஸ் தாபமா ? சே, இதற்குத்தான் ஒரு மனிதன் கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடாது என்பது. வெளிவீட்டுச் சனியன்களை விலை கொடுத்து வாங்கி நம்வீட்டுச் சுதந்தரத்தையும் நிம்மதியையும் பறி கொடுத்து நிற்கிறது!” என்று கசப்பாகக் கூறிவிட்டு அவன் மடமட் வென்று கீழே இறங்கி எங்கோ வெளியே போய்விட்டான். இரவு வெகு நேரமாயும் அவன் வீடு திரும்பவே இல்லை. 

“ஏனடி, எங்கே போயிருக்கிறான்?” என்று மாமியார் கேட்டாள். 

“எனக்குத் தெரியாதே?” என்றாள் சுகன்யா. 

“எல்லாம் அண்ணா மாடிக்குப் போய் மன்னியுடன் பேசின பிறகுதான் வெளியே போனான்’ என்று சின்னி மெதுவாகத் தன் தாயாரிடம் வெளிப்படுத்தினாள். சுகன்யாவின் செவியில் இது விழுந்தது. தனக்கு ஒன்றும் தெரியாது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று வாயைத் திறந்த அவள் ஏதோ நினைத்துக் கொண்டவளாக வாயை மூடிக்கொண்டு இருந்து விட்டாள். 

விசுவநாதனுக்குச் சாப்பாடு எடுத்துவைத்து விட்டு எல்லாரும் உணவை முடித்துக்கொண்டார்கள். வெகு நேரம் கழித்து விசுவநாதன் வந்தான். அப்பொழுது யாரையும் அழைக்காமல் அவன் தாயே அவனுக்கு உணவு அளித்தாள். 

சுகன்யா தன் அறையிலிருந்து எட்டி எட்டிப் பார்த் தாள். அவள் மனம் திக்திக்கென்று அடித்துக் கொண்டது. அவளுக்கு உறக்கமும் வரவில்லை. விழித்து கொண்டிருக் கவும் மிகவும் பயமாக இருந்தது. அன்று தன் வாழ் நாளிலேயே மிகவும் பயங்கரமான நாளாகத் தோன்றியது அவளுக்கு. 

ஒரு மாதகாலமாகவே குமுறிக்கொண்டிருந்த விவகாரம் இன்று உச்ச நிலையை அடைந்திருந்தது. 

சுகன்யாவுக்கும் மூத்தவள் ஒரு மருங்கள் பார்வதி என்று இருந்தாள். அவள் விசுவநாதனுக்கு மாமன் மகள். அதனால் சில சலுகைகள் அவளுக்கு அதிகமாகவே இருந்தன. இதன் நுட்பம் அறியாத சுகன்யா வெகுளித் தனமாக நடந்து கொண்ட படியால் பல சமயம் தர்ம சங்கடமான நிலைமைகளில் அகப் பட்டுக் கொண்டு திணறும்படியாக நேர்ந்துவிட்டது. 

ஒரு நாள் சின்னி வீட்டில் மூலை ளெல்லாம் தேடிக்கொண்டு இருந்தாள். சுகன்யா மூலை முடுக்குக அவளைக் கேட்கவும் அவள், வெங்காயப் பக்கவடா வாங்கி வைத்திருந்தேன். அப்புறம் தின்போம் என்று வைத்தேன். எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஹோட்டல் பண்டம் வாங்கித் தின்கிறோம் என்று தெரிந்தால் அப்பா திட்டுவார்” என்றாள். 

“வெங்காயப் பக்கவடாவா? பார்வதி மன்னி ரூமில் என்னவோ கடைப் பட்சண வாசனை வந்தது.ஒரு சமயம் அப்பாவுக்குத் தெரியக் கூடாது என்று அங்கே கொண்டு வைத்திருக்கிறாளோ என்னவோ!” என்றாள் சுகன்யா. 

சின்னி பார்வதியிடம் கேட்கவும் பார்வதிக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. 

“சின்ன மன்னி சொல்லாவிட்டால் நான் உன்னை வந்து கேட்கப் போவதில்லை. உன் விஷயந்தான் முன்பி லிருந்தே தெரியுமே?” என்று சின்னி சுடச்சுடப் பதில் சொல்லிவிட்டாள். 

“என்னடி அவளைப்பற்றி உனக்கு முன்பே தெரிந்து விட்டது?” என்று அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே வந்த மூத்த அண்ணன் ராமநாதன் வினவ, சின்னி ஆரம்பித்ததை விட இஷ்டப்படாமல் மேலே பேசினாள். 

“எனக்கு என்றைக்குமே மாமா வீட்டில் மோகம் கிடையாது. தன்னலத்தில் ஊறின. பேர்வழிகள். அம்மாவை அவர்கள் எத்தனை முறை அவமதித்திருப் பார்கள்! அதெல்லாம் உன் நினைவிலில்லாமல் இருக்கலாம். அப்பாவுக்கும் எனக்கும் ஒருபோதும் அவர்களிடம் மதிப்புப் பிறக்காது” என்று அவள் பதில் அளித்தாள். 

“மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடி போடுகிறது! அப்படி என்ன எங்கள் தாய் அத்தையை அவமதித்து விட்டாள்? நாத்தனார் ஹோதாவில் ‘அத்தை என்ன பண்ணினாரோ, உனக்கு மிகவும் தெரியுமோ?” என்று ஆத்திரமாகக் கேட்டாள் பார்வதி. 

“ஆமாம், ஆமாம். உங்கள் அம்மா எதிரே பேச இன்னும் ஒரு பிறவி எடுக்க வேண்டும்!” என்றாள் சின்னி. 

“சின்னி, பார்வதி உன் மன்னி என்பதை நினைவு வைத்து மரியாதையாகப் பேசு” என்று ராமநாதன் அடக்கிப் பேசினான். 

“என்றைக்குமே மறக்க முடியாதே அதை! அவர்கள் காலில் விழுந்து நீ கெஞ்சிக் கேட்டு அவளுக்கு அந்தப் பதவி தந்திருக்கிறாயே?” என்று கூறிவிட்டுச் சின்னி போய் விட்டாள். 

பார்வதி சுகன்யா மீது திருப்பிக் கொண்டாள். “சின்னி வாங்கி வைத்ததை நான் எடுக்கும் போது நீ பார்த்தாயோ? ஏன் வீண்பழி சுமத்துகிறாய்? நல்ல பெருச்சாளி போல இருந்து கொண்டு… 

“அவள் தேடினாள். உங்கள் அறையில் வாசனை வந்தது என்றேன்” என்று இழுத்தாள் சுகன்யா. 

அவரவர் வேலையோடு அவரவர் நின்றால் நன்றாக இருக்கும்” என்று பொதுப்படையாக மொழிந்து விட்டு. ராமநாதன் அப்பால் நகர்ந்து சென்றான். 

சுகன்யா பல்லைக் கடித்துக்கொண்டாள். சின்ன விஷயம் பிரமாதமாகும் என்று அவள் நினைக்கவில்லை. கண்களில் துளித்த நீரைச் சுண்டி விட்டுக் கொண்டே வேலைகளைக் கவனிக்கச் சென்றாள். 

என்னடி, ரகளை அங்கே?” என்று மாமியார் விசாரித்த போது என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்தாள். 

சின்னியே வந்து சொன்னாள். “இந்தப் பிரமாதத்தைச் சொன்னால் என்ன? வாயில் கொழுக்கட்டையா?” என்று சுகன்யாவைக் கேட்டாள். சுகன்யாவுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. 

“‘ஒத்தாள் ஓரகத்தாள் ஒரு முற்றம் நாத்தனார் நடு முற்றம்’ என்று ஆகிவிட்டது பார். சின்னி, உனக்கு ஏனடி மூளை இல்லை? சூடு சுரணை இருந்தால் அப்படி நாக்கை வளர்ப்பாயா? அப்பாவுக்குப் பிடிக்காததை இன்று  தின்னச் சொல்கிற சபல நாக்கு நாளைக்குப் புருஷன் வீட்டிலும் அப்படித்தானே கேட்கும்? திருட்டுப் பட்சணம் வாங்கித் தின்பது என்ன வழக்கம்? நீங்கள் எல்லாம் பெண்ணாய்ப் பிறந்தவர்களா?. சீ, சீ!” என்று சின்னியை அவள் தாய் இரைந்து கொண்டிருக்கையிலேயே பார்வதி வந்துவிட்டாள். சுகன்யாவை வெட்டி விடுபவள் போலப் பார்த்தாள். அன்றெல்லாம் வீட்டில் வெப்பமாகவே இருந்தது. அன்றிரவு சுகன்யாவை விசுவநாதன் தனிமையில் விசாரித்தான். 

“இன்றைக்கு என்ன? உணர்ச்சி தெர்மா மீட்டர் வெடிக்கிற அளவுக்கு இருந்தது போலத் தெரிகிறதே?” என்று அவன் கேட்டதும் சுகன்’ திடுக்கிட்டாள். 

“ஒன்றுமில்லையே. உங்களுக்கு எப்படித் தெரியும்? யார் என்ன சொன்னார்கள்?” என்று அவள் தட்டுத் தடுமாறினாள். 

விசுவநாதன் சிரித்தான். “அபஸ்வரம் இழை ஓடும் போல இருக்கிறது என்ற மாத்திரத்தில் உணரும் சங்கீத உள்ளத்துக்குச் சூழ்நிலையை அறியத் தெரியாதா?” என்று கேட்டான். 

சுகன்யாவின் உடல் குளிரில் நடுங்குவது போல ஒரு முறை சிலிர்த்துக் கொடுத்தது. 

“ஏன் சுகன்யா?” 

“உங்களுடைய உணர்ச்சி நிலை எவ்வளவு நுட்பமாக இருக்கிறது என்று நினைக்கும்போது எனக்குப் பயமாக இருக்கிறது” என்று பதிலளித்தாள் அவள். 

“அது இருக்கட்டும். என்ன நடந்தது?” என்று அவன் கேட்கவும் அவள் பதிலளித்தாள். 

“சுகன்யா, இன்று முதல் தெரிந்து கொள். ராமு பார்வதியை விரும்பி மணந்துகொண்டான். அவள் சொல்வது யாவும் சரி என்ற உறுதி அவனுக்கு. அதைக் கலைப் பதில் பயனில்லை. நம் குடும்பத்தின் கட்டுக்கோப்புக் கெட்டு விடும். சில விஷயங்களைப் பார்த்து நான் மணமே வேண்டாம் என்று இருந்தேன். என் பெற்றோர், அண்ணன், தங்கை இவர்களிடம் மிகப் பாசமுடையவன் நான். அதனால் நீ ஜாக்கிரதையாகத் தான் இருக்க வேண்டும். அருமையான அற்புதமான சங்கீதம் இருக்கும் உள்ளத் திலே மட்டமான எண்ணங்கள் இருக்க முடியாது என்பது என் எண்ணம். அதனால் தான் உன்னை மணந்தேன். என் வாழ்க்கையை நீதான் நலனுறச் செய்ய வேண்டும்” என்றான் விசுவநாதன். 

சுகன்யா மெளனியானாள். அவள் தலைமீது தாங்க முடியாத பளுச் சேர்ந்திருப்பதுபோல் தோன்றியது. ‘என்னால் இயன்றவரை உங்களுக்கு மனக் கஷ்டம் நேராமல் பார்த்துக் கொள்கிறேன்” என்று தாழ்ந்த குரலில் பதில் கொடுத்தாள். 

“சுகி, நீ தங்கமடி!” என்று அவன் உடனே தெளிந்து அவளை மெச்சினான். 

சுகன்யாவின் மனத்தில் அவுன் சொற்கள் உளியால் வெட்டியது போல் பதிந்திருந்தன. அவள் எவ்வளவோ ஜாக்கிரதையாகத்தான் பழகினாள். அப்படியும் தவறு நேர்ந்து விட்டது, அவளுடைய அநுபவமின்மையால். 

சின்னிக்கும் அவர்களுக்குத் தெரிந்த குடும்பத்துப் பையன் ஒருவனுக்கும் விவாகம் நடப்பதாகப் பேச்சு நடந்து கொண்டிருந்தது. 

அன்று மாலை கோவிலுக்குச் சின்னியும் சுகன் யாவும் போயிருந்தனர். அந்தச் சமயம் அந்தப் பையன் குரு மூர்த்தியும் வந்திருந்தான். சின்னியிடம் எதையோ கொடுத்து விட்டுப் போனான். அன்று வீடு வந்ததும் குரு மூர்த்தியைப் பற்றிப் பிரஸ்தாபம் வந்தது. அவன் கோவில் பக்கமே வர வில்லை என்று சின்னி சாதித்தாள். சுகன்யா ஒன்றும் வாயால் பேசவில்லை. ஆனால் சின்னி தீர்மான மாகப் பேசியபோது அவளை ஒரு விநாடி ஆச்சரியத் துடன் பார்த்து விட்டுக் கண்களைத் தாழ்த்திக் கொண் டாள். ஆனால் அந்த ஒரு விநாடிக்குள்ளே பெரிய விபரீத மாகச் சச்சரவு ஏற்பட்டு விட்டது. 

“சின்னி, நீ பொய் சொல்கிறாய். சுகன்யாவின் கண்கள் உண்மையைக் காட்டிவிட்டன. மறைக்காதே. இனி நீ கல்யாணம் முடியும் வரை வெளியே போகக் கூடாது” என்று சுகன்யாவின் மாமனார் கூறிவிட்டார். 

அதன் பிறகு வீட்டில் குமுறல்தான். நல்ல காலமாகப் பாட்டு வாத்தியார் வரவும் சின்னி பாட்டுக் கற்றுக் கொள்ளப் போய்விட்டாள். 

சுகன்யா மாடியில் தன் அறைக்கு வந்து விட்டாள். ‘புதமாச்ரயாமி’ என்ற பாட்டைக் கேட்டதும் அவளைப் பழைய நினைவுகள் வந்து மோதின. அன்று தாய் சொல்லிக் கொடுத்த புத்திமதியும், பிறகு தான் புக்ககம் வரும்போது தந்தை கூறிய சொற்களும் ஞாபகம் வந்தன. 

வண்டி கிளம்பும் தறுவாய். சுக்ன்யாவின் தகப்பனார் அவளிடம் வந்தார். “சுகன்யா, கணவன் வீடு போகிறாய். விசுவநாதன் கிடைத்தற்கரிய மாணிக்கம். அவனையும் அவன் வீட்டினரையும் என்றும் மதிப்பாக நடத்த வேண்டும். என் பெண் புக்ககத்தைக் கலைத்தாள் என்ற சம்சயம் வந்தால் கூட உன்னை இங்கே சேர்க்க் மாட்டேன். அப்பா அம்மாவுக்கு நல்ல பெயர் வாங்கி வைக்க வேண்டும்” என்று கூறினார். 

விசுவநாதனிடம் சரியாகப் பேசாமல் இருந்து விட்டதைக் குறித்து இப்பொழுது சுகன்யா மிகவும் வருத்தம் அடைந்தாள். அவன் படுக்கையறைக்கு வந்தான். அவளைத் திரும்பிக் கூடப் பாராமல் படுக்கையில் படுத்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு விட்டான். 

சுகன்யா வெடிக்கும் இருதயத்தைக் கையால் பிடித்துக் கொண்டு வெகு நேரம் அமர்ந்திருந்தாள். அப்பொழுது மேஜை மீது அவள் கணவன் வாங்கி வந்த புதனுடைய படம் கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தாள். அத்துடன் குறிப்பும் ஒன்று இருந்தது. சுகன்யா எடுத்துப் படிக்கலானாள்: 

“புதனைப் பக்தியுடன் பாடினாலும், அவன் மந்திரத்தை ஜபித்தாலும் இனிய கவிதை பாடும் வன்மை உண்டாகும்.” 

“புதனுடைய பிரத்தியதி தேவதை நாராயணன். பிருகு முனிவர் நாராயணனுடைய சாந்த இயல்பைச் சோதிக்கும் பொருட்டு அவனைத் தம் வலக்காலால் உதைத்தார். அதனால் சிறிதும் சினங்கொள்ளாமல், அப்பெருமான், ‘தேவரீர் திருவடி நோகுமே!’ என்று வருடினானாம். பிருகு முனிவருடைய வலது திருவடி நாராயணனுடைய இடத் தோளருகில் இருக்கும். 

“புதன் அறிவின் உருவம், அழகின் ரூபம்.” 

இதே போன்ற வாக்கியங்களைச் சுகன்யா படித்தாள். அவள் உள்ளம் எல்லாவற்றையும், வறண்ட பூமி மழையை ஏற்பது போல,ஏற்றுக் கொண்டது. 

வெகு நேரம் உறக்கம் வராமையால் அவள் விளக்கை அணைக்காமல் சிந்தனை செய்து கொண்டே அமர்ந் திருந்தாள். பிறகு சட்டென்று எழுந்து தன் பள்ளிக்கூடப் படமொன்றை ஆணியிலிருந்து எடுத்தாள். அந்தச் 
சட்டத்தி லிருந்து படத்தைப் பெயர்த்து எடுத்து விட்டு, புதபகவானுடைய படத்தை அதில் பொருத்தினாள். மேஜை மீது அதை வைத்து வணங்கிவிட்டுப் படுத்தாள். அவள் மனத்தில் சாந்தி குடிகொண்டது. 

மறுநாள் காலை விசுவநாதன் அலுவலுக்குப் போகு முன் அவனுக்கு வேண்டியதை எடுத்துத் தர வந தாள் சுகன்யா. 

“புதனுடைய படம் கொண்டு வந்தேனே, எங்கே அது ?” என்று கடுமையாகக் கேட்டான் கணவன். 

சுகன்யா அழகான புன்முறுவல் ஒன்றை வெளிப்படுத் தியவாறே மேஜைமேல் இருந்த படத்தின் மீது ரோஜா மலர் ஒன்றை வைத்து வணங்கினாள். 

“உன்னை யார் சட்டம் போடச் சொன்னது?” 

“நேற்று நடந்ததை மறந்து விடுங்கள். முதல் முதல் நீங்கள் என்னைப் பார்க்க வந்த புதன்கிழமையன்று அம்மா எனக்குப் புத்திமதி சொன்னாள். ‘வாய், நாசி, செவி, கண் முதலிய எல்லா இந்திரியங்களும் உள்ளே கிரகித்துக்கொள்ள உபயோகப்பட வேண்டுமே தவிர, மற்றச் சமயம் அடக்கமாக இருக்க வேண்டும். ஆடை அணிவதிலும், நடப்பதிலும் அடக்கமாக இருந்தால் போதாது’ என்றாள். அதன் பொருள் எனக்கு அப்பொழுது புரியவில்லை. நாசியின் தோஷமாக அன்று பார்வதியிடம் பிரமாதச் சச்சரவாகிவிட்டது. கண்ணின் தோஷமாக இன்று வீடு ரகளைப்பட்டது. நாவின் அடக்க மின்றி அன்று உங்களை அடையாமலே இருந்திருப்பேன். நேற்று இரவு நீங்கள் உறங்கின பிறகு புதபகவானுடைய படத்தையும் அதன் குறிப்பையும் கவனித்தேன் நாராயணப் பெருமானின் சாந்தமும் புதபகவானின் அறிவும் ஓரளவு கண்டு கொண்டேன்” என்றாள் சுகன்யா. 

”சுகன்யா, நீ சொல்கிற அளவுக்கு நீ தவறு செய்ய வில்லை. பார்வதியின் நாவடக்கமற்ற தன்மையும் சின்னியின் குணமும் எவ்வளவு சிரமத்தைக் குடும்பத்தில் கொண்டு வந்து விடுகின்றன? போகட்டும், என் மனமும் தெளி வடைந்தது. புதன் நமக்கு இஷ்ட தேவதையாகவே இருக்கிறார்” என்றான் விசுவநாதன். 

அப்பொழுது கீழே விசுவநாதனின் தாய் சின்னியைக் கண்டித்துப் பேசுவது கேட்கவும், சுகன்யா பீதியுடன் ஒரு முறை விசுவநாதனைப் பார்த்தாள். திரும்பவும் கீழே எழுந்த பேச்சைக் கவனித்தாள். 

“சுகன்யாவைப் பார். உங்களைப் போன்ற பெண் தானே? அதிர நடக்கிறாளா? உரக்கப் பேசுகிறாளா? குடித் தனத்தை விளங்கவைக்க வந்த குத்துவிளக்கு அவள். நீயும் நாளைக்குப் போய்…” 

“ஆமாம். அவளால் வரும் தொல்லைதான் எல்லாம். அழுத்தமாக இருந்து கொண்டு…” என்று சின்னி ஆரம்பித்தாள். 

“சீ, வாயை மூடு! அவளுடைய வெகுளித்தனந்தான் உன்னைக் காப்பாற்றியது” என்று தாய் அடக்கினாள். 

சுகன்யாவின் உடல் ஏனா பதறியது. தயக்கத்துடன் கணவனைப் பார்த்தாள். 

“சுகன்யா, நீ அம்மாவின் அன்பைப் பெற்று விட்டாய். இனி என் வாழ்க்கை ஆனந்த மயந்தான்” என்றான் விசுவ நாதன் உணர்ச்சி பூர்வமாக. 

அப்பொழுது படத்தின் மீதிருந்த ரோஜா மலர் கீழே விழுந்தது. 

“ஆமோதிப்புப் பிரசாதம்” என்று கூறிக்கொண்டே சுகன்யாவின் தோளைப் பற்றித் திருப்பி அவள் தலையில் அந்த மலரைச் சூட்டினான் விசுவநாதன். 

சுகன்யா கண்களை நிம்மதியுடன் மூடிக் கொண்டாள். அவள் கை கணவனின் கைக்குள் புகுந்தது. 

“புதமாச்ரயாமி ஸததம்” என்று இருவர் உள்ளமும் ஒன்றிப் பாடியது போலும். 

– கலைமகள் – 1956, பிரமாதமான கதைகள்

அநுத்தமா 16.4.1922 -ல் ஆந்திராவிலுள்ள நெல்லூரில் பிறந்தார் என்றாலும், பூர்வீகம் வட ஆற்காடு மாவட்டம்தான். இவரது இயற்பெயர் ராஜேஸ்வரி பத்மனாபன். படிப்பில் மிக ஆர்வமாக இருந்த ராஜேஸ்வரிக்கு எழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே அதாவது 14 வயதிலேயே திடீரென்று திருமணம் செய்து வைத்து விட்டார்கள். அதனால் படிப்பு தடைப்பட்டது. திருமணமாகி ஒன்பது வருடங்கள் கழித்து, சென்னையில் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதி, மாகாணத்திலேயே முதல் மாணவியாக வந்தார். அந்தக் காலத்திலேயே கதை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *