சுகங்களும் சுமைகளும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 28, 2014
பார்வையிட்டோர்: 9,006 
 

தலைக்கு மேலே சுழற்சி..

தயவு தாட்சண்யமில்லாமல் கொளுத்துகின்ற வெயிலையும் பொருட்படுத்தாமல் மத்தியானம் சாப்பாட்டுக்காக முருகன் கபேக்குச் சென்று வந்ததால் ஏற்பட்ட உடலின் அயற்சியைப் போக்குகின்ற காற்றின் சுகமான விசுறல்.. மின்விசிறியின் சிரமதானம். கதிரவேலுவின் மனதில் யாருக்கென்று புரியாத நன்றியுணர்வும் அற்பப் பெருமிதமும் ஏற்பட்டது. “கௌவ்ன்மேன்ட் அலுவலராக இருக்கிறதிலையும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்யிது..“ பெரிய மனித தோரணையுடன் கால்களை நீட்டி நிமிர்ந்து சொகுசாக அமர்ந்தான். அயற்சியைப் போக்கவதற்காக காற்றை அதிகமாக உள்ளிழுத்தபொழுது, அது பெருமூச்சாக வெளிப்பட்டது.

“அரசாங்க உத்தியோகத்தனாய் இருந்து கண்ட பலன் இதுதான்..!” – மீண்டும் சலிப்படைகின்ற மனது. இது அடிக்கடி மனதை அரிக்கின்ற வியாதிதானென்றாலும், அதிகாலையில் கிடைத்த மிஸிஸ் அருள்நாயகத்தின் முளுவியளத்திற்குப் பிறகு சற்றுக் கடுமையாகிவிட்டது.

மாதா மாதம் ஐந்தாம் திகதிக்கு முன்னர் அறை வாடகையை மனுசிக்குப் பசியாற வேண்டும். அது தவறினால் மனுசியின் கண்ணிற் படவே தேவையில்லை. கண்களிற் படாமல் கழன்றுவிடவேண்டும் என்ற திட்டத்துடன்தான் அதிகாலையிலேயே எழுந்தான் கதிரவேலு. அவசர அவசரமாக கருமங்களை முடித்துக்கொண்டு வெளியேறியபோதுதான் திட்டமெல்லாம் தவிடுபொடியாகிவிட்டதை உணர முடிந்தது. வாசற் கதவருகில் மகராசி “விளக்குமாறும் கையுமாக“ காட்சியளித்துக்கொண்டிருந்தாள். முற்றத்தைக் கூட்டுவதற்காகத்தான் விளக்குமாற்றைக் கையிற் பிடித்தபடி அம்மா நிற்பதாகத் தன் மனதைச் சாந்தப்படுத்திக்கொண்டு, அம்மாவைக் காணாதவன்போல கதிரவேலு நழுவிக் கொண்டிருந்தபோது….

‘மிஸ்டர் கதிரவேலு”- மிஸிஸ் அருள்நாயகத்தின் அழைப்புதான். அந்தக் குரலுக்கு எவ்வளவு சக்தி! மந்திரத்தாற் கட்டுண்டவனைப்போல அவனது கால்கள் சட்டென நின்றன.

‘இன்றைக்கு என்ன திகதி?” கேட்கப்டப்ட தொனி அதட்டல் நிறைந்ததாயிருந்தது. பதில் தெரியாத ஒரு மொக்கு மாணவனைப்போல இவன் மௌனம் சாதித்தான். ‘பதினெட்டாம் திகதியாச்சு… இன்னும் வாடகைக்காசு தரவில்லை?” எசமானியின் குரலையும் அவளடைய சன்னதமான பார்வையையும் கண்டு பக்கத்தில் நின்ற சடைநாய் (செல்லக் குஞ்சு!) “வாள் வாள்“ எனக் கத்தல் போட்டு தனது செஞ்சோற்றுக் கடனைச் செலுத்தத் தொடங்கியது.

கதிரவேலு தனது சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தான்.

‘எனக்கு எந்த நியாயங்களும் தேவையில்லை….” அடிக்காத குறையாக, அம்மா அடித்துக் கூறினாள். கடமைப்பட்டவன்போல இவன் கட்டுப்பட்டு நின்றான்.

‘நீங்களெல்லாம் வெக்கமில்லாமல் லோங்ஸ்சைப் போட்டுக்கொண்டு திரியிறீங்களே?” அதற்குமேல் இவனுக்கு எதுவுமே கேட்கவில்லை.

‘மிஸ்டர் கதிரவேலு…! இன்றைக்கு ஒரு முடிவு தெரியவேணும்… எத்தனையோ பேர் அறை கேட்டு வருகினம்… நான் உங்களுக்கு புண்ணியத்துக்கு இடம் தரேலாது.”

இவன் சோர்வுடன் நடக்கத் தொடங்கினான்.

“இன்டைக்கு என்ன பாடுபட்டாவது ஆரிட்டையேனும் வேண்டிக்கொண்டு வந்து மனிசியின்ரை மூஞ்சையிலை காசை எறிஞ்சு போட்டுத்தான் மற்ற வேலை பார்க்கிறது…

…எத்தினை வருசமாய் இருக்கிறன்… நாலு வருசத்துக்கு மேலையிருக்கும்… இன்னும் இவளுக்கு என்னிலை நம்பிக்கையில்லையே… ஒரு மனேஸ் தெரியாத சனங்கள்.. மனிசன்ரை கஷ்டநஷ்டம் விளங்காத சென்மங்கள்.. மனிசனைத் தேவையில்லை… காசுதான் முக்கியம்!..

…பெரிய திறமான அறையே…! நானெண்டபடியால் இருக்கிறன்…! ரெண்டு கட்டில் போட இடம் காணாது… அதுக்குள்ளை ரெண்டு பேரை இருத்திக் காசு கறக்கிறாள்… வாடகைக்கு விட்டிருக்கிற ஐஞ்சு அறையிலையும் நாங்கள் எடுக்கிற ஒரு மாதச் சம்பளம் கிடைச்சிடும்..!

…முகத்திலை அடிச்சமாதிரி இந்த அறையை விட்டிட்டுப் போயிடலாம்… விட்டிட்டும் எங்கை போறது? வெள்ளவத்தையிலை ஒரு அறை எடுக்கிறதெண்டால் லேசுப்பட்ட காரியமே… சீ…! என்ன கேள்வி கேட்டாள்! இந்த உடுப்பு, சப்பாத்து எல்லாம் சும்மா பேருக்குத்தானே! உண்மையிலேயே இதையெல்லாம் கழட்டி எறிஞ்சு போட்டுத்தான் நடக்கவேணும்… கிளீன் சூட்… எம்ரி பொக்கற்!’

மன வெதுவெதுப்புடன் காலைச் சாப்பாட்டையும் மறந்து அலுவலகத்தையடைந்து தனது கதிரையில் தஞ்சமடைந்தான். மாலை நாலுமணி வரைக்கும்தான் அந்தக் கதிரையும் தஞ்சமளிக்கும். அதற்குப் பின்னர் எந்த முகத்துடன் அறைக்குப் போவது?

ஒவ்வொரு மாதமும் “சலறி அட்வான்ஸ்” எடுத்தவுடன் வாடகைக்காசைக் கொடுத்துவிடுவது வழக்கம். இம்முறை சம்பள முற்பணத்தை எடுத்துக்கொண்டு ஊருக்குப் போய்வந்த குற்றத்துக்காக மனிசத்தன்மையில்லாத ஒருத்திக்கு முன்னால் தலையைக் குனிந்துகொண்டு நிற்கவேண்டியேற்பட்டுவிட்டது.

0

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு சுபநாளில் கதிரவேலுவுக்குத் திருமணம் நடந்தேறியது. பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்! கொழும்பிலே உத்தியோகக்காறனாய் இருக்கின்ற மாப்பிள்ளைக்குச் சீதனங்கள், சீர்வரிசை கொண்டாட்டங்கள்.. எல்லாம் வெகு தடல்புடல்! இதற்கெல்லாம், தான் தகுதியுடையவன்தானா என நினைக்கத் தோன்றுகின்ற அளவுக்குப் புதுமாப்பிள்ளைக்கு ஒரு ராசாவைப்போல வரவேற்பு உபசாரங்கள், எக்கச்சக்கம்!

“சுவீப் அடிச்சமாதிரித்தான்… பொம்பிளையும் நல்ல வடிவு… சீதனமும் பிழையில்லை..” எனக் கதிரவேலு மகிழ்ச்சிக் கடலில் மூழ்க ஆரம்பித்தான். ஆனால் தகப்பனுக்கு கிடைத்த “டொனேசன்“ அவரது கடன்தொல்லைகளைப் போக்குகின்ற பணியில் கரைந்தது. இவனுடைய பெயரில் பொருள் பண்டமாகவும் காசாகவும் இருந்த தொகையில் கை வைக்க முடியாது. கொழும்பிலே கொழுத்த சம்பளம் வாங்குகின்ற ஒரு மாப்பிள்ளை (அப்படித்தான் பெண் வீட்டாருக்குச் சொல்லப்பட்டது!) சுய கௌரவத்தையும் மறந்து சீதனப் பணத்தைத் தொடலாமா? அதுதான் கைக்கெட்டவில்லை.. அழகான மனைவியையாவது கொழும்புக்கு அழைத்து வரலாமென்றால்…. கொழும்பிலே வீடு எடுப்பது லேசுப்பட்ட காரியமல்ல.. அப்படியே ஒரு வீடு கிடைத்தாலும் அது முழு உழைப்பையும் விழுங்குகிற வாடகையைக் கேட்கிறது.

கட்டிய மனைவியை ஊரிலே விட்டு இங்கு எத்தனை நாட்களுக்குத்தான் கடைச்சாப்பாட்டை நம்பிக்கொண்டிருக்க முடியும்? அதனால் ஊருக்குப் போகவேண்டுமென்ற பொல்லாத ஆசை இந்ததப் புதுமாப்பிள்ளைக்கு அடிக்கடி ஏற்படுகிறது. இளம் மனைவியைப் பார்க்கவென்று வெளிக்கிட்ட பின்னர் வெறுங்கையுடன் போக மனம் வருமா?

சம்பள முற்பணத்தை எடுத்துக்கொண்டு (வீட்டுச் சொந்தக்காரியின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு) மனைவியை மகிழ்விக்கின்ற பண்டங்களுடன் பயணப் பட்டாயிற்று. (மனைவியை மகிழ்விக்கின்ற பொருட்களில் மாமா, மாமிக்கு ஏதாவது வேண்டியாக வேண்டும்! “மருமகன் எங்கள்ளை நல்ல பட்சம்!” என அவர்கள் சொல்வதை அவள் வந்து, இவருடைய காதுகளில் போடுவதைக் காது குளிரக் கேட்கலாம். பாவம் அம்மா, பெற்றுப் போட்டு ஊணுறக்கமின்றி வளர்த்து ஆளாக்கிவிட்ட குற்றத்துக்காக அவள் மனம் மகிழ என்ன செய்திருக்கிறான்? அன்றைக்கும் இல்லை, இன்றைக்கும் இல்லை.)

ஊருக்கு வந்தாலே ஒரு புது உலகம்போல, எல்லாப் பிரச்சினைகளுமே மறந்துவிடுகிறது… விருந்து கொண்டாட்டங்கள், சினிமா இத்தியாதி! கைகளின் வறட்சியை மனைவிக்குக்கூடக் காட்ட விரும்பாமல் (பெரிய இடத்துச் சம்பந்தம்) ஊரிலே “பிஸ்னஸ்” செய்கின்ற நண்பர்களிடம் “றோலிங்!”

அனுமதி பெற்றுக்கொண்டு வந்த லீவு நாட்கள் முடிவடைந்ததும் அலுவலகத்துக்கு ஒரு “சிக்..பெக் லீவ் – கதிரவேலு”

இப்படியாக ஒரு சொர்க்கலோக சஞ்சாரத்தை முடித்துக்கொண்டு பதினேழாம் திகதி இரவு பூனையைப்போல வந்து அறையில் நுழைந்தாயிற்று!

0

‘வாடகைக் காசைக் குடுக்க வக்கில்லை… மனிசியிட்டைப் போயிட்டாரோ… வரட்டுக்கும்!” என வழிமேல் விழி வைத்துப் பார்த்துக்கொண்டு நின்ற அருள்நாயகம் (மிஸிஸ்) அசுகை அறிந்தவுடன் அடுத்தநாள் அதிகாலையிலேயே எழுந்து கையும் களவுமாகப் பிடிப்பதற்கு வாசற்கதவருகிலேயே வந்துநின்ற சங்கதி இந்தப் பூனைக்குத் தெரியாது. அப்பாவியைப்போல வந்து அம்மாவின் புலிப் பாய்ச்சலில் மாட்டிக்கொண்டது.

அலுவலகத்துக்கு சக ஊழியர்கள் வந்துகொண்டிருந்தார்கள். ஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரைக்கும் இவன் வாடியிருந்தான். மத்தியானம் வரைக்கும் எந்த மீனும் அகப்படவில்லை. இவனிடம் உச்சி விளையாடிய மீன்கள் எப்படி அகப்படும்?

கூட வேலை செய்கின்ற பரமலிங்கம் மதியச் சாப்பாட்டுக்குப் போய்விட்டு வருவதைக் கண்டதும் “இவரிட்டைக் கேட்டுப் பார்த்தாலென்ன?” என்ற எண்ணம். கதிரையில் வந்து அமர்ந்து விரலிடுக்குகளில் பொடியை எடுத்து, மூக்கில் வைத்து பெரிய ஓசையுடன் உறிஞ்சி அதன் தொடர்ச்சியாக வெளிப்படுகின்ற தும்மல்களை கைலேஞ்சியினால் தடுத்தாட்கொள்கிற தனது வழக்கமான சடங்கை ஆரம்பித்தார் பரமலிங்கம்.

“மனுசன்… வைச்சிருந்தால் தரும்.. மறுப்புச் சொல்லாது…’ என மனது கணக்குப் போட்டது.. ‘சிலவேளை இல்லையெண்டிட்டால்… எவ்வளவு பரிசுகேடு…!’ தயக்கம் தடுத்தது. ‘அங்கை போய் அவளுக்கு முன்னாலை தலை குனிஞ்சுகொண்டு நிக்கிறதை விட இது பரவாயில்லை… ஆக்களும் இல்லைதானே… கேட்டுப்பாப்பம்…!’

‘என்ன தம்பி… கதிரவேலு… நல்லாய் யோசிக்கிறாய்… மனிசியைப் பிரிஞ்சு வந்த கவலையோ?” அவனுடைய மனதைச் சீண்டிவிட்டதாக நினைத்துக்கொண்டு அட்டகாசமாகச் சிரித்தார் பரமலிங்கம். இவன் பொடி வைத்தான்.

‘இல்லை அண்ணை… உங்களுக்குச் சொன்னாலென்ன சிநேகிதப் பொடியனொருத்தன் இப்ப சாப்பாட்டுக் கடையிலை கண்டாப்போலை கேட்டான்…. ஏதோ அவசர தேவையாம்…. அம்பது ரூபா வேணுமாம்…. நானும் ஊருக்குப் போனாப்போலை கையிலை கிடந்த காசெல்லாம் சிலவழிச்சிட்டு வந்திட்டன்… பின்னேரம் எப்படியும் தாறனெண்டு ஃபிரென்டுக்கு சொல்லியிட்டன்… உங்களிட்டை இருந்தால்…”

பரமலிங்கம் மீண்டும் தன் உடல் குலுங்கச் சிரித்தார்.

‘என்ன தம்பி…. பகிடி விடுகிறியே…? இருந்தால் உனக்கு இல்லையெண்டு சொல்லுவேனே…” தொடர்ந்து அவர் சொன்ன நியாயங்கள் இவனுக்குக் கேட்கவில்லை.

‘சீ! என்ன மானம் கெட்ட சீவியம்… போயும் போயும் இந்த மனிசனிட்டைக் கேட்டேனே…!”

மதிய இடைவேளை நேரம் முடிந்துவிட்டது. மீண்டும் அலுவல்கள் ஆரம்பித்தன. கதிரவேலும் சில விபரத்தாள்களை எடுத்து மேசைமேல் வைத்தான், கடமைக்காக. விசிறுகின்ற காற்றுடன் பறந்துவிடத் துடிக்கின்ற தாள்கள் சுலபமான வாழ்க்கையை விரும்பும் மனிதனின் மனநிலையை உணர்த்தின. தாள்கள் பறந்துவிடாதவாறு ஒரு பாரத்தை எடுத்து வைத்தான். காற்றோடு சேர்ந்து தாள்கள் படபடத்தாலும் அவற்றின் சக்திக்கு மீறிய சுமையை மீற முடியவில்லை.

பிற்பகல் இரண்டு மணியைப்போல பீயோன் பொடியன் புஞ்சிபண்டா வந்து, கதிரவேலுவை யாரோ தேடி வந்திருப்பதாகக் கூறினான். “யாராக இருக்கும்?” என்ற யோசனையுடன் எழுந்து நடந்தபோது நெஞ்சில் “ரைப்றைட்டரின்“ தட்டல்கள்.

‘எட பாஸ்கரனே…! என்ன இருந்தாப்போலை வந்திருக்கிறாய்?” சம்பிரதாயத்துக்காக முகத்தில் ஒரு சந்தோஷ உணர்வைக் காட்டியாயிற்று. ‘சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்கிறான்… என்னவோ… ஏதோ!“ என்ற மனப் படபடப்பு ஒருபுறம்.

“நாளைக்கு ஒரு இன்ரவியூ. நேற்றுப் பின்னேரம்போலதான் தந்தி கிடைச்சது… அதுதான் வந்தனான்!” பாஸ்கரன் மகிழ்ச்சியோடு சொன்னான்.. கொழும்பு உத்தியோகக்காரானாகப் போகின்ற உற்சாகம் அவனுக்கு.

வந்திருப்பவன் கதிரவேலு மணம்கொண்ட மனைவியின் சகோதரன். கனம்பண்ணி அனுப்பவேண்டிய கடமை. “கையிலை ஒரு சதத்துக்கும் வழியில்லாமல் நிக்கிறன்… இவனும் வந்து நிக்கிறான்…. இப்ப எங்கை கொள்ளைக்குப் போறது?” மனதை அரிக்கின்ற வெட்கம் கலந்த பய உணர்வு.

பாஸ்கரன் எடுப்பான உடையுடன் மிடுக்காக நின்றான். “பசை”யுள்ள இடத்துப் பிள்ளை. வெறும் கையாக வந்திருக்கமாட்டான் என்ற நம்பிக்கை சற்றுத் தெம்பளித்தது.

‘…. அக்கா உங்களுக்கு ஏதோ சாப்பாடு தந்துவிட்டவ!” மச்சான்காரனுடைய மாறாட்டத்தை பாஸ்கரன் கவனித்துவிட்டானோ என்னவோ, அவரை மகிழ்விக்க எண்ணிப்போலும் அக்கா தந்தனுப்பிய “ஸ்பெசலை“ நினைவூட்டினான். சகதர்மினி நினைவுக்கு வந்ததும் கதிரவேலுவுக்கு ஒரு தலைகால் புரியாத சந்தோஷம். “பாவம் எவ்வளவு கரிசனையோடை செய்து அனுப்பியிருக்கிறாள்.”

‘சரி பாஸ்கரன்… இதிலை இருந்துகொள்… நான் ’ லீவு போட்டிட்டு வாறன்.”

கதிரவேலுவுக்கு இந்த நேரம் புது யோசனை ஒன்று தோன்றியது. பாஸ்கரன் சிலவுக்கு காசு கொண்டு வந்திருப்பான்…. அவனிட்டை வேண்டி வாடகைக்காசைக் குடுத்திட்டு… நாளைக்கு எப்பிடியாவது யாரிடமாவது மாறி இவனுக்குக் கொடுக்கலாம்… அடுத்த கணமே, “சீ அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்?“ என்ற கௌரவப் போராட்டம்.

அலுவலக ரைப்பிஸ்ட், மிஸ் மென்டிஸ் இவனைக் கண்டதும் புன்முறுவல் பூத்தாள். அவளிடம் எப்பொழுதுமே இதற்குக் குறைவிருக்காது – புன்னகை மலர்த்துவதற்குத் தவறாத பண்பாடு. இப்பொழுது அவளது சிரிப்பைக் கண்டதும் எரிச்சல் ஏற்பட்டது. பின்னர்தான் “இவளிட்டையும் ஒருக்கால் கேட்டுப் பார்க்கலாமே?“ என்ற எண்ணம் தோன்றியதும் வலிந்து சிரித்துக்கொண்டான்.

‘மிஸ்…!” அவள் பார்வையைக் கேள்வியாக்கினாள். இவன் பல்லவியைத் தொடங்கினான். இப்பொழுது பல்லவியில் சிறிது மாற்றம். ஊரிலிருந்து சடுதியாக மைத்துனன் வந்து நிற்பதால் உடனடியாக காசு தேவைப்படுகிறதென்றும் இந்த நேரத்தில் பாங்கில் காசு எடுக்க முடியாமலிருக்கின்றதென்றும்… ஐம்பது ரூபாயாவது தந்துதவினால் பெரிய காரியமென்று சாரப்படக் கூறினான்.

இவனுடைய சங்கடத்தை அனுதாபத்துடன் உணர்ந்து கொண்ட மிஸ் மென்டிஸ், சினேகிதி சுவர்ணாவிடம் சென்று கதைத்து ஐம்பது ரூபா பெற்றுவந்து கொடுத்தாள்.

‘மிஸ், என்னால் உங்களுக்குத் தேவையில்லாத சிரமம்!” இவன் அசடு வழிந்தான். அவளது புன்னகை, “பரவாயில்லை” என்றது.

“அப்பாடா!” பெரியதொரு பாரம் தலையைவிட்டு இறங்கிய சுகம்.

பாஸ்கரனை அழைத்துக்கொண்டு நேரடியாக “எக்கவுன்ட் கடைக்குப்’ போனான் கதிரவேலு. ‘வந்தவனுக்கு ஒரு ரீயாவது வேண்டிக் கொடுக்கவேண்டும்.“

தேநீரை அருந்திக்கொண்டிருந்தபொழுது கதிரவேலு சொன்னான்: ‘பாஸ்காரன்..! பாய்க்கை இஞ்சை கடையிலை வைப்பம்… பிறகு இரவைக்கு அறைக்குக் கொண்டு போகலாம்.”

அறைக்கு “விசிற்றேஸ்” எவரையும் அழைத்து வரக்கூடாதென்பது மிஸிஸ் அருள்நாயகத்தின் கடுமையான கட்டளை.

பாஸ்கரன் புரியாமல் கேட்டான்: ‘ஏன் வேற எங்கையாவது போக வேண்டியிருக்கோ?”

‘இல்லை…. றூம்மேற் நிப்பானோ தெரியாது… அவனிட்டைத்தான் திறப்பு இருக்குது… அவன் இல்லாட்டி அலைய வேண்டிவரும். பாய்க்கை இஞ்சை வைப்பம்.. பிறகு வந்து எடுக்கலாம்தானே?”

பயணப்பையுடன் அறைக்குச் செல்வது, தங்குவதற்கு யாரோ வருகிறார்கள் என்பதைச் சுலபமாகப் புரியவைத்துவிடும். இரவில் வீட்டுக்காரர் உறங்கிய பின்னர் கொண்டுபோகலாம் என்பது கதிரவேலுவின் தந்திரமான திட்டம்.

பாஸ்கரனுக்கு “சப்”பென்று போய்விட்டது. அவனைப் பொறுத்தவரையில் இரண்டு முக்கியமான விஷயங்களுக்காக இப்பொழுது அறைக்குச் சென்றாகவேண்டும். ஒன்று மச்சானுக்கு அக்கா ஆசையோடு தந்தவிட்ட பலகாரத்தைச் சமர்ப்பித்து அவருடைய மகிழ்ச்சியில் பங்குகொண்டு நல்லபெயர் எடுக்கவேண்டும். அடுத்தது, பயணத்தால் உடல் வியர்த்துக் களைத்துவிட்டதால் நன்றாக ஒரு குளிப்பு எடுக்கவேண்டும்.

‘அதுக்கென்ன…? இது பெரிய பாரமே…? போய்ப் பார்ப்பம்… உங்கட ஃபிரென்ட் இல்லாட்டி திருப்பிக்கொண்டு வரலாம்தானே? உங்கட அறையையும் பார்க்கலாம்… நான் குளிக்கவும் வேணும்!” பாஸ்கரனது விஷயம் புரியாத பிடிவாதம்.

அடுத்த குண்டு… அவன் குளிக்கவேண்டுமாம்… இனிச் சரணடைய வேண்டியதுதான்.

‘இல்லை…. பாஸ்கரன்… அங்கை வீட்டுக்காரி சொல்லி இருக்கிறாள்… விசிற்றேஸ் ஒருத்தரையும் கூட்டி வரக்கூடாதெண்டு! இப்ப போனால் விளங்கியிடும்… பிறகு அவள் பத்திரகாளிதான்… அதுதான்… இரவைக்கு அவையள் படுத்தபிறகு போவம் எண்டனான்..”

பாஸ்கரனுக்குக் கவலையேற்பட்டது. மைத்துனரின் நிலை புரியாமல் வற்புறுத்திவிட்டதையுணர்ந்து வேதனைப்பட்டான்.

‘அப்ப சரி… இஞ்சை வைப்பம்..!”

இப்போது கதிரவேலுக்குக் கவலையாயிருந்தது. பயணக் களைப்புடன் பாஸ்கரன் நிற்கிறான். அவனுக்கு முகம் கழுவுவதற்காவது வசதி செய்து கொடுக்க முடியாவிடில் தான் என்ன மனிசன் என நினைத்தான்.

‘பாஸ்கரன்…. அப்பிடியெண்டால் பாய்க்கை இஞ்சை வைச்சிட்டுப் போவம்… சத்தமில்லாமல் போய் முகத்தைக் கழுவியிட்டு வந்திடலாம்.”

‘வேண்டாம்.. போறது பிரச்சினையெண்டால்… பிறகு என்னத்துக்கு?”

‘பரவாயில்லை… அவதானிச்சு அவையளுக்கு விளங்காமல் போவம்.”

வீட்டினுள் இருவரும் நுழைந்தபொழுது ஒரு புதிய முகமும் வருவதைக் கண்ட பியூட்டி (நாய்) “இங்கிலீசில்” குரைத்துக்கொண்டு ஓடிவந்தது.

வீட்டின் கோடிப்பக்கமாகச் சென்று அறைக்கதவைத் திறந்தான் கதிரவேலு. உள்ளே சென்று கட்டிலைக் காட்டி பாஸ்கரனை அமர வைத்தான்.

‘பாஸ்கரன்…! இருந்துகொள்… முகம் கழுவத் தண்ணி எடுத்துக்கொண்டு வாறன்.”

தனக்காக மச்சான் கஷ்டப்படுவது இவனுக்கு சம்மதமில்லை. ‘ஏன்!… பாத்றூமுக்குப் போய்க் கழுவுவம்”

‘அது கொமன் பாத்றூம்…. வீட்டுக்குள்ளாலைதான் போகவேணும்… அவையள் கண்டால் வில்லங்கம்… தண்ணியை இஞ்சை எடுத்துக்கொண்டு வாறன்..”

இவனது தலை ஏதோ நியதிக்குட்பட்டதுபோல அசைந்து சம்மதித்தது.

குடிநீருக்காகப் பாவிக்கின்ற போத்தலை எடுத்துச் சென்று தண்ணீர் நிரப்பிக் கொண்டு வந்தான் கதிரவேலு, ‘தண்ணீர் எடுத்துத் தர வேறை ஒண்டும் இல்லை… நான் ஊத்துறன்…. கழுவு!” என்றவாறே அறைக்கு வெளியே கூட்டிச் சென்றான். உடையை மாற்றுவதற்குக்கூட வசதியில்லாமற்போனது பாஸ்கரனுக்குப் பெரிய மனக்குறை. சேட்டைக் கழற்றி வைத்துவிட்டு தண்ணீரை ஏந்தி முகத்தைக் கழுவினான்.

‘நாளைக்கு விடியப்புறத்தோடை ஒருத்தரும் எழும்பமுதல் எழும்பினால் குளிக்கலாம்.” தனது விருந்தோம்பலில் உள்ள குறைபாட்டை உணர்ந்து கதிரவேலு சமாளிப்பாகக் கூறினான்.

பாஸ்கரன் சிரிப்பை உதிர்த்து மைத்துனரைச் சமாதானப்படுத்தினான். தனது தலைவிதியையா அல்லது அவரது தலைவிதியையா எண்ணி நோவது என்பது புரியவில்லை.

‘கொழும்புச் சீவியமெண்டால் இப்பிடித்தான். எதிலையும் ஒரு சகிப்புத்தன்மை இருக்கவேணும்..” என உபதேசித்தவாறே சீப்பையும் பவுடரையும் நீட்டினான் கதிரவேலு.

அறையை விட்டு வெளியேறி காலி வீதியில் வந்து ஏறும்வரை அடுத்து என்ன செய்யலாம் என்று ஒரு திட்டமும் இல்லை.

‘பாஸ்கரன்… நீ எங்கையாவது போக வேண்டியிருக்கோ?”

‘இல்லை.”

சற்று நேர யோசனை. பின்னர், ‘அப்ப இப்பிடியே கோல்ஃபேஸ் வரையும் நடப்பம்… பின்னேரம்தானே பொழுதுபோக்காயிருக்கும்!” வெள்ளைத்தையிலிருந்து காலிமுகம்வரை நடந்து செல்வதுதென்பது கதிரவேலுவுக்கு இலகுவான காரியமல்ல. இருந்தும் நிலைமையைச் சமாளிக்க இதைவிட்டால் வேறு வழியும் இல்லை.

இருவருமாக நடக்கத் தொடங்கினார்கள். கடைகளில் கண்ணாடிகளினுள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள விற்பனைப் பொருட்களையும், கடைகளையும் ஆவலோடு பார்த்துக் கொண்டே வந்தான் பாஸ்கரன். சில இடங்களில் நின்றும் பார்த்தான். ஓர் இடத்தில் அவன் கேட்டான்.

‘மச்சான், நல்ல வடிவான சேர்ட்.. என்ன?”

‘ஓ…! நல்லாய்த்தான் இருக்கு!”

‘என்ன விலையாயிருக்கும்?”

‘கொன்ற்றோல் பிறைஸ்தான்…. நாப்பத்தைஞ்சு ரூபா!”

‘என்ரை…. சைசிலை இருக்குதோ… தெரியாது?”

‘வேணுமெண்டால் உள்ள போய் கேட்டுப் பாப்பம்!”

கடையினுள் நுழைந்து விசாரித்தபொழுது அவர்கள் கேட்ட அளவில் பல அழகான நிறங்களில் சேர்ட்டுக்கள் மேஜைக்கு வந்தன.

பாஸ்கரனுக்குக் கொள்ளை ஆசை.

‘யாழ்ப்பாணத்திலையெண்டால்… இப்படி எடுக்கேலாது.”

‘விருப்பமெண்டால்… எடன்!”

பாஸ்கரன் ஒரு சேர்ட்டை எடுத்துக்கொண்டான்.

‘அவசரத்திலை வந்ததாலை மேலதிகமாய் காசு கொண்டு வரவில்லை… உங்களிட்டை இருந்தால் குடுங்கோ… போனவுடனை அனுப்பிவிடுறன்.”

கதிரவேலுவின் தலை சுழற்சியடைவதுபோல… ‘ஓ…! அதுக்கென்ன?” கை மானத்துக்குப் பயந்து பொக்கட்டினுள் நுழைந்து ஐம்பது ரூபா நோட்டை இழுத்தது.

கடைக்காரன் கொடுத்த மிகுதி ஐந்து ரூபாயை கதிரவேலு வேண்டியபொழுது, “இரவைக்கு வீட்டுக்காரர் படுத்தபிறகு ரகசியமாக அறைக்குப் போறதெண்டால் ரெண்டாம் காட்சி படத்துக்குப் போகவேணுமே.. என்ற நினைவு ஏற்கனவே மனதில் அடித்துக்கொண்டிருந்தது.. இப்ப அதுக்கு என்ன செய்யிறது..“ என்ற கனதியான சுமையும் நெஞ்சில் ஏறிக்கொண்டது.

(சிரித்திரன் – 1978)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *