சீதாராமன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 5, 2023
பார்வையிட்டோர்: 3,038 
 
 

(1943 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“பெரிய மனுஷாளாத்துப் பிள்ளையோடே சிநேகிதம் வச்சுகிறது சின்னவாளுக்குக் கொஞ்சம் ஆபத்துக்கிடம்தான்” என்றாள் அம்மா.

“என்ன அப்படி திடீர்னு ஒரு போடு போட்டே அம்மா?” என்றான் சீதாராமன் சிரித்துக்கொண்டே.

“நாலுபேர் நாலு சொல்லுவா! சாதாரணமான அந்த நேகிதமும் நீடிச்சு நிற்கும்னு நிலையில்லே. அப்பறம் நாப்புக் காட்டுவா எல்லோரும்” என்றாள் அம்மா.

“என்னமோ கூடப் படிச்சான். ஏதோ எங்கிட்டே அலாதியா பிரியமாயிருக்கான். தானா வந்து அழைச்சுண்டு போறான் என்னையும் மதிச்சு. உன் சிநேகிதம் எனக்கு வாண்டாண்டா, போடான்னு தாக்ஷண்யமில்லாமே எப்படிச் சொல்லி உதறித் தள்றது?” என்றான் சீதாராமன்.

சீதாராமனின் மனைவி மனோரமா குறுக்கிட்டாள்; “உங்க சிநேகிதர் காரிலே வந்து ஹாரன் அடிக்கறச்சே உங்களுக்கு உச்சி குளிர்ந்து போயிடறது. பாதி சாப்பிடறச்சே வந்தார்னாக்கூட, என்ன கிருஷ்ணன்னுண்டு கையலம்பாமே ஓடறேள்.அவர் சிநேகிதத்தைப் பற்றிச் சொன்னா…”

மனோரமா இதை சற்றுக் கேலியாகத்தான் சொன்னாள். ஆனால் அவள் குரலில் தொனித்த ஒரு அந்தரார்த்தம் சீதாராமனுக்குக் கோப மூட்டுவதாக இருந்தது. ஆத்திரத்தில் ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தான். ஆனால் எப்படியோ ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு சொன்னான்: “நானாவா அவனைத் தேடிண்டு போறேன்? அவனாக வரான். வந்து, வாடான்னு கூப்பிடறச்சே வரமாட்டேன்னு கிராக்கி பண்ணிக்க எனக்குத் தெரியல்லை, நான் என்ன செய்யறது?”. ஏதோ தப்புச் செய்துவிட்டு மன்னிப்புக் கேட்கிறவன் குரல்போல் ஒலித்தது அவன் குரல்.

அவன் அம்மா சொன்னாள்: “என்னவோ அப்பா, கிழவி நான்- எனக்குத் தெரிஞ்சதை சொன்னேன்; அவ்வளவுதான். ரொம்பச் சின்னவாளுடைய சகவாசமும் கூடாது- ஓஹோஹோன்னு ரொம்பப் பெரியவாளுடைய சகவாசமும் கூடாது. இரண்டும் ஆபத்துத்தான்- இரண்டும் அபவாதம்தான். அப்படிதான் என் காலத்திலே சொல்லுவா. அப்பறம் உன்னிஷ்டம்” என்றாள்;

தன் தாயாருக்கும் மனைவிக்கும் கிருஷ்ணனைப் எதுவும் ஆக்ஷேபம் சொல்ல அப்படி என்னதான் இருந்தது உண்மையாக என்று யோசனை செய்தவனாக சிறிது நேரம் மௌனமாக நின்றான் சீதாராமன். கையில் சீப்புடன் தலைவாரிக்கொள்ளப் போனவன் சீப்பும் கையுமாக யோசனையில் ஆழ்ந்து நின்றான்.

மீண்டும் அவன் தாயார் சொன்னாள்: “நீ படிக்காதவன் இல்லே. வயசோ அனுபவமோ போறாதவன் இல்லே உனக்குத் தெரியாத விஷயம்னு நான் சொல்ல வரல்லை. ஏதோ எனக்குத் தோணித்து; சொன்னேன்.”

கிராப் தலையைப் படிய வாரிக் கையால் அழுத்திக் கொண்டு, சீப்பைக் கண்ணாடிக்குப் பின்னால் தொத்த வைத்துவிட்டு, திரும்பித் தன் தாயாரைப் பார்த்துச் சொன்னான் சீதாராமன்; “இதோ பார், அம்மா. நீ சொல்றது எல்லாம் சரி, ஒப்புக்கறேன். நீ அவன் பணக்காரன் அவனுக்கு எத்தனையோ பணக்காரப் பழக்கங்கள் செய்து கொள்ள வசதியிருக்கு. எனக்கு இல்லை. வாஸ்தவம்தான். ஆனால் நான் அவனைத் தேடிண்டு போகாத வரைக்கும் சரிதான். தெரிகிறதா?” என்றான்.

அவன் தாயார் பதில் சொல்லவில்லை. அவன் மனைவிதான் ஏதோ பதில் சொல்ல வாய்திறந்து “இருந்தாலும்…” என்று ஆரம்பித்தாள். ஆனால் அவளைப் பேசவிடாமல் குறுக்கிட்டுச் சற்றுப் பதட்டமாகவே சீதாராமன் சொன்னான்: “அவன் பட்டணத்திலே இன்னும் இரண்டு மாசம் இருக்கானோ, மூணு மாசம் இருக்கானோ அதற்கப்புறம் நான் அவனைப் பார்க்க போறது எப்பவோ, எங்கேயோ! இந்த ரெண்டு மூணு மாசத்திலே ஒண்ணும் நீங்க நினைக்கறபடி எல்லாம் நடந்துடாது, பயப்படாதேயுங்கள்! நான் சொல்றது தெரிஞ்சுதா?” என்றான்.

கிருஷ்ணனைப் பற்றிய பேச்சை அத்துடன் முடித்துவிட சீதாராமனுக்கு இஷ்டம்தான். ஆனால் அவனுடைய குரலின் படபடப்பும் முகத்தின் கடுகடுப்பும் அவன் மனைவி மனோரமாவைத் தூண்டிவிட்டன. அந்தப் பேச்சைத் தொடர்ந்து நடத்தவே விரும்பினாள் மனோரமா. அவசியமான மற்ற பல அலுவல்களை எல்லாம் விட்டுவிட்டு, கிருஷ்ணன் வந்து கூப்பிட்டவுடனே தன் கணவன் கைக்காரியத்தையும் போட்டுவிட்டு, தன்னையும் லட்சியம் பண்ணாமல் போய்விடுகிறானே என்பது மனோரமாவுக்கு என்றுமே ஆத்திர மூட்டுவதாகவேதான் இருந்தது. அவள் மனசில் ஒரு மூலையில் தன் கணவனும் கிருஷ்ணனைப் போலப் பணக்காரனாக, கார் உள்ளவனாக, இல்லையே என்கிற ஒருகுறை ஓயாமல் துடித்துக் கொண்டிருந்ததை அவளே அறியவில்லை, பாவம்! முந்திய தினம் கீழ்வீட்டிலே குடியிருந்த லட்சுமி அம்மாள் வேண்டுமென்றோ, அசட்டுத் தனமாகவோ சொல்லிவிட்ட ஒரு வார்த்தையும் அவள் மனசில் துருத்திக் கொண்டிருந்தது.

மனோரமா சொன்னாள்: “நிலைமையிலே இவ்வளவு வித்தியாசப்பட்ட இந்த ரெண்டு பேருக்கும் என்ன சிநேகிதமோ, என்னவோ என்று ஊரிலே பேசிக்கமாட்டாளா? நீங்க இத்தே யோசனை பண்ணத்தான் வேணும்” என்றாள். வாயால் அகப்பட்டுவிட்ட எலும்புத் துண்டை எக்காரணத்தைக் கொண்டும் விடமாட்டேன் என்கிற நாய்க்குட்டியின் பிடிவாதத்தைப் போலிருந்தது அவள் பேசிய பாவனை.

திடுக்கிட்ட சீதாராமன் திரும்பித் தன் மனைவியை ஒரு நிமிஷம் பார்த்தான். பிறகு சாதாரணக் குரலில் அலட்சியம் தொனிக்கிற ஒரு பாவத்திலே சொன்னான்: “ஊரிலே எத்தனையோ சொல்லுவா! அதுக்கெல்லாம் நீயும் நானுமா பொறுப்பு?”

“உங்களையும் என்னையும் பற்றிப் பேசறதுக்கு நீங்களும் நானும்தான் பொறுப்பு” என்றாள் மனோரமா, விடாப்பிடியாக.

“அப்படி யாரும் எதுவும் சொல்லிவிட்டதாக எனக்கு இன்னும் எட்டலையே!” என்றான் சீதாராமன்.

“பாருங்களேன்-கீழ் ஆத்திலே குடியிருக்காளே லக்ஷ்மி அம்மாள் அவள் நேத்திக்கி என்னைக் கிண்டிக் கிண்டிக் கேட்கிறாள்- உங்க சிநேகிதர் கிருஷ்ணனைப்பற்றி. அவள் மனசிலே என்னத்தை வச்சுண்டு கேக்கறான்னு எனக்குத் தெரியறது. நாக்கைப் பிடுங்கிக்கலாமான்னு இருந்தது எனக்கு!” என்றாள் மனோரமா.

அதற்குமேல் சொல்ல வந்ததைச் சொல்ல முடியவில்லை அவளுக்கு. அவள் கண்கள் நிறைந்துவிடும் போலக் கலங்கின.

சீதாராமனின் தாயார் மனோரமாவின் உதவிக்கு வந்தாள்: “போடி அசட்டுப் பெண்ணே! கீழாத்து லட்சுமி அம்மாள் ரொம்ப யோக்யஸ்திதான் – உன்னைக் கேட்க வந்துட்டாள்! நெருப்புன்னா வாய் சுடுமாக்கும், சும்மா இரு! அசடாட்டமா! அவ கேட்டாளாம்! இவ வந்து சொல்றாளாம்!” என்று தன் மாட்டுப் பெண்ணைக் கடிந்து கொண்டாள்.

பிள்ளையார் பிடிக்கப்போனது இப்படியா முடிந்தது என்று பிரமித்தவனாக நின்ற தன் பிள்ளையின் பக்கம் திரும்பிக் கிழவி சொன்னாள்: “இதோ பார் சீதா! நீயும் அறிவுள்ளவனா, படிச்சவனா நடந்துக்கணும். தெரியறதா!” என்று உஷார்ப்படுத்தினாள்.

இதற்குள் கீழே வாசலில், தெருவில் கிருஷ்ணனுடைய காரின் ஹார்ன் சப்தம் கேட்டது. அந்த சப்தம் கேட்டவுடன் விழுந்தடித்துக் கொண்டு ஓடிப்போய் தன் சிநேகிதனை வரவேற்கிற வழக்கமுடைய சீதாராமன் இன்று சற்று மெதுவாகவே மாடிப்படியிறங்கி வாசல் பக்கம் போனான்.

2

மனோரமா எதையோ நினைத்துக் கொண்டு, ஏதோ ஒரு விஷயத்தில் ஏற்பட்ட வேகத்தில், தன் மனசில் எங்கேயோ பிரகாசமில்லாத ஒரு மூலையில் ஒளிந்துகொண்டிருந்த ஒரு சிந்தனையை அம்பலத்துக்கு இழுத்துவிட்டாள். பேச்சு வாக்கிலே நடந்துவிட்ட ஓர் அர்த்தமற்ற காரியம் அது.

உண்மையிலேயே அர்த்தமற்ற பேச்சுத்தானா அது என்று தன் கணவன் வாசல்பக்கம் போன பிறகு தன்னையே கேட்டுக் கொண்டாள் அவள்.

அப்படிப் பூரணமாகவே, அர்த்தமற்ற பேச்சுத்தான் அது என்று நம்பவும் அவளுக்குத் தைரியம் வரவில்லை. தானும் அறியாமலே தன் மனசில் வளரவிட்டுவிட்ட ஒரு அர்த்தம் இருந்தது அந்தப் பேச்சுக்கு என்றுதான் அவளுக்குத் தோன்றியது. அதைப்பற்றி நினைக்கவே பயமாக இருந்தது. ஆனால் நினைக்காமலும் இருக்க முடியவில்லை.

அவள் மனசிலே உட்கார்ந்துகொண்டு சமூக விதிகளின் எல்லைகளை மீறிய பயங்கரமான கனவுகளைத் துணிச்சலுடன் காண அவளைத் தூண்டிய அந்த ஆசாமி யார்?

துணிச்சல், கனவுகளில் மட்டுந்தானா? கனவுகளில் தொடங்கி காரியங்களில் இறங்கவும் துணிச்சல் தர அந்த ஆசாமிக்குத் தெம்பு உண்டா?

தெம்பு இல்லாதிருப்பதே நல்லது என்று எண்ணினாள் மனோரமா!

தெம்பு தோன்றிவிட்டால் என்ன பண்ணுவது?

இப்படி நினைக்கும்போதே மனோரமாவின் மனசும் உடலும் பதறின.

ஆனால் காரியத்தில் இறங்கத் தெம்பும் தைரியமும் வராத வரையில் தனக்கு, தன் பெண்மைக்குத் தோல்விதான் என்று அவள் அந்தரங்கத்தில் இன்னொரு பிடிவாதமான எண்ணமும் இருந்தது.

இந்த இரண்டு எண்ணங்களுக்கும் இடையே அகப்பட்டுக் கொண்டு அவள் ஒவ்வொரு வினாடியும் துடித்துக் கொண்டேயிருக்க வேண்டியதுதானா?

ஆனாலும் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் எது தோல்வி, எது வெற்றி என்று தீர்மானமாக முடிவுகட்ட மனோரமாவால் முடியவில்லைதான்.

மனோரமா படித்த பெண். சர்வ கலாசாலையில் பட்டம் பெறுகிற வரைக்கும் படிக்காவிட்டாலும், பள்ளிக்கூடம் தாண்டி, அதற்குப் பிறகு இரண்டு வருஷங்கள் கல்லூரியிலும் படித்தவள் தான். கலாசாலையிலும் பள்ளியிலும் பள்ளியிலும் மனோரமாவுக்குக் கெட்டிக்காரி என்றுதான் பெயர்.

ஆனால் வாழ்க்கையில் எழுகிற பிரச்னைகளுக்குக் கல்லூரிப் படிப்பு பதில் அளிப்பதில்லையே!

கிழ மாமியார் தன் மாட்டுப்பெண் நகத்தைக் கடித்துக் கொண்டு கூடத்தின் மத்தியில் சிந்தனையில் ஆழ்ந்தவளாக நிற்பதைக் கண்டு “நீ இருந்தாலும் அசட்டுப் பெண்ணடியே யோ!” என்றாள். கிழவி பள்ளியிலும் படித்ததில்லை-கலாசாலையிலும் படித்ததில்லை. தன்னுடைய படித்த மாட்டுப் பெண் அசடுதான் என்பது அவளுக்கு எப்படியோ தெரிந்துதான் இருந்தது.

நகத்தைக் கடிப்பதை நிறுத்திவிட்டு மனோரமா திரும்பித் தன் மாமியாரைப் பார்த்தாள். அவள் மாமியாரைப் பற்றிய வரையில் அவளுக்குப் பொறாமையாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அவள் மாமியாரின் பிரச்னைகள் அன்றே தீர்ந்து விட்டன. அவளுடைய மிகப்பெரிய பிரச்னைகள்கூட அவள் மனசையோ, உள்ளத்தையோ திரித்து விட்டிருந்ததாகச் சொல்ல முடியாது. பழமை, வழக்கம், அன்பு என்கிற மூன்று திடமான லக்ஷியங்கள் அவள் வாழ்க்கை-வழிகளைத் தெளிவாக்கித் தந்தன.

பழமை, வழக்கம் என்கிற லக்ஷியங்கள் தொலைந்தாலும் அன்பு என்கிற லக்ஷியமாவது கைகொடுக்க வேண்டாமோ ா சமயத்தில்? அதுவும் இரண்டுபடத் தொடங்கி விட்டதானால் என்னதான் செய்வது?

கீழ்வீட்டு லக்ஷ்மி அம்மாள் அம்மாள் முதல்நாள் முதல்நாள் சொன்ன வார்த்தைகளுக்கு அதிகப்படியான அந்தரார்த்தம் இல்லாமலே இருக்கலாம். உண்மையில் சாதாரண ஒரு ஸ்திரீயின், வம்பளப்பதில் பிரியமுள்ள ஒரு ஸ்திரீயின் சாதாரண பொழுது போக்குக்கான பேச்சாகவே இருந்திருக்கலாம் அது.

ஆனால், லக்ஷ்மி அம்மாளின் யோசனை எதுவானால் என்ன? அவள் உத்தேசமோ அந்தரார்த்தமோ என்னவானால் என்ன? மனோரமா அதுவரை எண்ணத் துணியாத பல எண்ணங்களைத் தூண்டி, போராட்டத்தை அவள் மனசிலே மூட்டிவைத்த பொறுப்பு அந்த லக்ஷ்மி அம்மாளுடையதுதான்!

ஆனால்… எத்தனை ஆனால் சொல்வது…?

ஆனால் எண்ணங்களை எழுப்பிய பொறுப்பு லக்ஷ்மி அமாளுடையதாகவே இருந்தாலும் அசட்டு எண்ணங்கள் மனசிலே தலைதூக்கி ஆதிக்கம் பெறாதவண்ணம் அமுக்கி வைக்கவேண்டிய பொறுப்பு தன்னுடையதல்லவா என்று தன்னையே கேட்டுக் கொண்டாள் மனோரமா. அசட்டு எண்ணங்களாக இருக்கலாம்!

ஆனால் அவை எண்ணங்கள் என்ற அளவிலே இன்பம் தருவதாகவும் இருந்து விட்டால்….?

இன்பமா? எது? என்று தன்னையே கேட்டுக் கொண்டாள் மனோரமா.

மனோரமா தான் என்ன செய்வாள், பாவம்! அசட்டு எண்ணங்களுக்கு எப்பொழுதுமே இந்தத் தன்மை உண்டு. அவை எப்பொழுதுமே ஓரளவு இன்பம் தருவனவாகவும் இருக்கும்.

மனசிலே மேலே மிதந்து கொண்டிருக்கிற அசட்டு எண்ணங்களை அலக்ஷியமாக ஒதுக்கித்தள்ளி விட்டுத்தான், அடியில் ஆழ்ந்து கிடக்கும் உண்மையான போக்கை, சிந்தனைகளை, ஆசைகளைக் கணிக்கவேண்டும்.

3

உண்மையைச் சொல்லப் போனால் மனோரமாவுக்குச் சீதாராமனிடம் அளவுகடந்த பிரேமை இருந்தது.

ஆனால் பிரேமை, அன்பு, காதல் என்பதெல்லாம் மிகவும் பலஹீனமான வார்த்தைகள். பக்தி என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

கலியாணமாவதற்குமுன் வேண்டுமானால் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடம் பிரேமை இருந்தது, அன்பு இருந்தது, காதல் இருந்தது என்று சொல்லலாம். கலியாணமான பிறகு வேண்டியது பக்தி ஒன்றுதான்.

அந்த பக்தி மனோரமாவுக்குத் தன் கணவனிடம் சற்று அதிகமாகவே இருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனால் அந்த பக்திக்குக் காரணமிருந்ததாகச் சொல்லமுடியாது. சீதாராமன் மனோரமாவுக்கு ஏற்ற புருஷ்ன், எல்லாவிதங்களிலும் ஏற்றபுருஷன் என்று சொல்ல முடியாது. அவர்கள் நிலைமையிலும், சுபாவத்திலும், பிறப்பு வளர்ப்பிலும் சற்று ஏறத்தாழத்தான்.

மனோரமா அழகி, இண்டர்மீடியட் வரை படித்தவள்,

சீதாராமனும் அழகன்தான். பி.ஏ.படித்தவன்தான்.

ஆனால் மனோரமா பணக்கார வீட்டில் பிறந்தவள். பணக்காரர்கள் வீட்டில், நாகரிகம் என்று அவர்கள் கருதுகிற புதுமை மோகத்துக்கிடையே வளர்ந்தவள். தன் நிலைமைக்கேற்றவாறு புருஷனை வரித்து நிலைமை மாறாது வாழ்க்கை நடத்தவேண்டும் என்று ஆதிகாலத்தில் கனவுகள் கண்டவள்.

சீதாராமன் பணக்காரன் அல்ல. அவன் ஏழைதான். இப்பொழுது ஏதோ சொல்பம் சம்பாதிக்கிறான், அவ்வளவுதான். அவன் சொல்ப சம்பாத்தியத்தை நம்பி கிராமத்தில் நாலைந்துபேர் வேறு இருக்கிறார்கள். கொஞ்சம் சிரமமான குடும்பத்திலே பிறந்து இன்னமும் சிரமமான வாழ்க்கை நடத்தி வருபவன்தான் சீதாராமன்.

தனக்கு சீதாராமன் கணவனாக வந்து வாய்த்தது பற்றி மனோரமா இப்பொழுது வருத்தப்பட்டாள் என்று சொல்ல முடியாது. அவனிடம் பணம் இருந்ததோ இல்லையோ, குணம் இருந்தது. தன் மனைவியிடம் எல்லையற்ற அன்பு செலுத்தினான் என்பதிலும் சந்தேகம் இல்லை. அவன் தன் சுக சௌகரியங்களைக் கவனிப்பதன்முன் எந்தக் காரியத்திலுமே அவள் சுக சௌகரியங்களைக் கவனித்தான் என்பதை மனோரமாவே ஒப்புக் கொள்வாள்!

பின் என்ன?

மனோரமாவின் மனசிலே இருந்ததெல்லாம் சரியாக உருவாகாத ஒரு அதிருப்திதான்!

ஆதிகாலத்தில், அதாவது மனோரமா பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதும் பிறகு கலாசாலையில் சேர்ந்து படிக்கும் போதும் சீதாராமனைப்போல ஒருவன் தனக்குக் கணவனாக வருவான் என்று அவள் கனவிலும் கருதியதில்லை.

அவளுடைய கனவு நாயகன் – எந்தக் கன்னிப் பெண்ணுக்கு ஒரு கனவு நாயகனாவது இல்லாதிருக்கிறான்? – எப்பொழுதும் காரில்தான் வந்து இறங்குவான். மிகவும் நாகரிகமாக ஆடை தரித்திருப்பான். அவள் வேதாந்தத்தையும் மற்றுமுள்ள முக்ய பிரச்னைகளையும் பற்றிப் பேசுகிறானோ இல்லையோ, உடுப்புகளையும் யார் யார், ஊரில் எந்தெந்தத் தையற்காரன் சரியாகத் தைக்கிறான் என்றும் தான் பேசுவான். நேற்று அவளைப் பார்த்தேன், இன்று காலை இவளைப் பார்த்தேன் என்று மிஸ்களையும்,மிஸ்ஸிஸ்களையும் பற்றிப் பேசுவான்.

இப்பொழுது தன் கணவனுக்குச் சிநேகிதனாக வந்த அந்தக் கிருஷ்ணனைப் போலத்தான் தன்னுடைய அந்த நாளைய கனவு நாயகன் இருந்தான் என்று மனோரமாவின் பலஹீனமான மனம் எண்ணாமல் இருக்கமுடியவில்லை!

பள்ளிக்கூடத்திற்கும் கலாசாலைக்கும் அவளே அந்த நாளில் காரில்தான் போவாள். அவளை அசாதாரணமான நாகரிகமணியாக மதித்துத்தான் சக மாணவர்களும் மாணவிகளும் பேசுவார்கள். நாகரிக உலகிலே, அதாவது அவள் நாகரிகமடைந்தது என்று எண்ணிய சமூகத்திலே, அன்று அதாவது கல்யாணமாகுமுன், மனோரமாவுக்கும் இடம் இருந்தது.

இன்னும் அவளுடைய தமக்கை தங்கைகளும், அண்ணன் தம்பிகளும் பழைய தோரணையிலேயேதான் வசித்து வந்தார்கள்.

மனோரமாவின் கணவன் மட்டும் தனி சுபாவம் படைத்தவன். சீதாராமனும் தன் தாய் தகப்பனையும், தம்பி தங்கைகளையும் மறந்துவிட்டு, தன் மாமனாருடனேயே வாழ ஒப்புக் கொண்டிருந்தானேயானால் மற்ற மாப்பிள்ளைகளுக்கு அவனும் சமமாக இருந்திருக்கலாம், மனோரமாவும் தன் பழைய நிலைமையில் சிறிதும் மாறுதல் இருந்திருக்கலாம்.

ஆனால் யோசித்துப் பார்க்கையில் மனோரமாவுக்கும் தெரிந்தது. தன் கணவன் தன் தகப்பனார் வீட்டிலே தங்க மறுத்தது சரியான காரியமே என்பது அவளுக்கும் தெரியாமல் இல்லை.

அப்படித் தங்கியிருந்தானானால் ஏற்பட்டிருக்கக்கூடிய நிலை செயற்கையான ஒரு நிலை-நீடித்திருக்க முடியாத ஒரு நிலை. அற்பமான ஒரு சந்தோஷத்திற்காக சுயமரியாதையைப் பலி கொடுக்கிற மாதிரியாகும் அது என்று மனோரமா அறிந்துதான் இருந்தாள்.

அவளுடைய தமக்கை தங்கைகளைப் போலவே அவளுக்கும் நாகரிகமான, பணக்கார இடத்திலே கல்யாணமாகியிருக்கும். ஆனால் விதி குறுக்கிட்டது. அவளுடைய பதினேழாவது வயசிலே, அவள் இண்டர்மீடியட் பரீக்ஷை கொடுத்திருந்த சமயத்திலே, அவளுக்கு ஒரு விதமான வலிப்பு வரத் தொடங்கியது. டாக்டர்கள் கைவிட்டுவிட்டார்கள். பாட்டிமார்கள் மட்டும் “கல்யாணமானால் சரியாகிவிடும்” என்று சொன்னார்கள். ஆனால் அந்தப் பாட்டிமார்கள் வார்த்தையை நம்பித் தன் பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைத்துவிட்டுப் பிறகு அவஸ்தைப்பட நேர்ந்துவிடப் போகிறதே என்கிற பயம் தகப்பனாருக்கு. எங்கேயாவது பணக்கார இடத்தில் வாழ்க்கைப்பட்டு விட்டு, வலிப்பு வருகிறது என்று அவர்கள் அவளை வாழாவெட்டியாகத் திருப்பிவிட்டால் என்ன பண்ணுவது என்கிற பயம் அவருக்கு.

சீதாராமன் ஏதோ தூர பந்து. ஏழைப் பையன். நன்றாகப் படித்திருந்தான். வீட்டோடு வைத்துக் கொள்ளலாம் என்று மனோரமாவின் தகப்பனாருடைய எண்ணம். தன் பெண் கஷ்டப்படக்கூடாதே என்கிற அன்பு ஞாபகம் ஒன்றுதான் அவருக்கு.

பெண்ணுக்கு வலிப்பு வருவதையும் கல்யாணமானால் சரியாகிவிடும் என்று பலர் சொல்வதையும் ஒளிக்காமல் சீதாராமனின் பெற்றோரிடம் தெரிவித்து விட்டே கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்தார் அவர். மனோரமாவைப் பார்த்தது முதலே அவளிடம் ஒரு பாசம் விழுந்துவிட்டது சீதாராமனுக்கு. கல்யாணம் நடந்தது. அதற்குப் பிறகு மனோரமாவுக்கு வலிப்பும் வரவில்லை தான்.

அந்த நாளில்…

அந்த நாளில், அந்த நாளில் என்று மனோரமா எண்ணினாளே தவிர, அதெல்லாம் நடந்து அப்படி ஒன்றும் அதிக நாளாகி விடவில்லை. கல்யாணமாகும்போது மனோரமாவுக்கு வயசு பதினெட்டு – இப்போது வயசு இருபத்தி மூன்று. ஐந்து வருஷங்களுக்கு முன் நடந்த சமாசாரங்கள்தான் இவை எல்லாம்.

கல்யாணமான புதுசில் தன் நிலைமை மாறப்போகிறது என்று அவள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஆறு மாதத்திற்குள்ளாகவே சீதாராமன் என்கிற அவள் புருஷன் அவள் மனசிலே நிறைந்து விட்டான்.

“எங்களுக்கெல்லாம் ஆம்படையான் வரல்லே! இவ ஒத்திக்கித்தான் எங்கேயோ சீமேலேருந்து லக்ஷியபுருஷன் ஒத்தன் வந்திருக்கான்” என்று அவள் சகோதரிகள். கேலியும் பொறாமையும் கலந்த விதத்தில், அவளைக் கேலி செய்கிற வரையில் வந்துவிட்டது.

அந்தக் கேலியை எல்லாம் மனோரமா பாராட்டவே இல்லை. தன் கணவனிடம் பக்தி வளரவளர அவள் புது ஸ்திரீயாகிக் கொண்டிருந்தாள். மேலே படிப்பது தேவையில்லை என்றான் சீதாராமன்-அவள் நிறுத்திவிட்டாள். வேலை ஒன்று கிடைத்ததும் அவள் தன்னுடன் வந்து தன் தாயாருக்கு உதவியாக, ஏழையாக வேண்டுமானாலும் இருக்கவேண்டுமே தவிர, பிறந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று சீதாராமன் சொல்லிவிட்டு வந்தான்- மறுநாளே தகப்பனாரைக் கொண்டு போய்விடச் சொல்லித் தொந்தரவு செய்து அவள் தன் கணவன் வீட்டுக்கு வந்துவிட்டாள்- பட்டணத்திலேயே, கோமளீசுவரன் பேட்டைக்கு.

அதற்குப்பிறகு அவள் தன் தகப்பனார் வீட்டுக்கு, மைலாப்பூருக்கு, இரண்டு மூன்று தடவைகள்தான் போய்விட்டு வந்தாள்.

மரத்திலிருந்து புளியம் பழங்களை உலுக்கிக் கிளைகளை ஆட்டுவதைப் போல, சிந்தனைகளைத் தன் மனசிலிருந்து உலுக்கிவிட விரும்புகிறவள் போல தன் அழகிய தலையை இரண்டு மூன்று தரம் ஆட்டினாள் மனோரமா.

அதைக் கவனித்த அவள் மாமியார் பரிவுடன் கேட்டாள்: “ஏன், மனோ? தலையைக் கிலையை வலிக்கிறதா?”

“இல்லை அம்மா! அந்த லக்ஷ்மி அம்மாளைப் பற்றி…” என்று சொல்லத் தொடங்கினாள் மனோரமா.

அவளை முடிக்க விடவில்லை கிழவி. “போடி அசடே!” என்று செல்லமாகக் கடித்து கொண்டாள். “போ, ராத்திரிக்கு அவன் வெண் பொங்கல் பண்ணிவைக்கச் சொன்னான், நிறைய முந்திரிப் பருப்புப் போட்டு…” கிழவிக்கு அனுபவ பூர்வமாகத் தெரியும்- குடும்பக் காரியங்களிலே ஈடுபட்டுவிட்டால் அசட்டு எண்ணங்கள் மனசிலே தலைதூக்க வொட்டாமல் செய்துவிடலாம் என்பது.

ஆனால் மனோரமா சமையல் அறைப்பக்கம் போகவில்லை. வெளிவாசல் வராண்டா பக்கம் போனாள்.

வெளியே அவள் போனதற்கும் தெரு விளக்குகள் எல்லாம் ஏற்றுவதற்கும் சரியாக இருந்தது.

தெருவிலே கூட்டம் ஜேஜே என்றிருந்தது. ஒரு பெரிய நீல நிற ஸெடான் கார் விர்ரென்று பாய்ந்து ஓடித் தெருமூலை திரும்புவதைக் கண்டபடியே நின்றாள்.

ஒரு பெருமூச்சு விட்டு விட்டுத் தெருவில் போகிறவர்களைப் பார்த்துக் கொண்டே நின்றாள் மனோரமா, கொஞ்ச நேரம்.

“ஏண்டா பழி! என்ன இத்தனை நாழி? உன்னை ஸ்பெஷலா ஒரு இடத்திற்கு அழைச்சிண்டு போகணும்னு வந்தேன். அவசரமாகப் போகலாம்னு…” என்றான் தன் காரில் உட்கார்ந்திருந்த கிருஷ்ணன், சீதாராமன் வந்தவுடனே.

அவன் பக்கத்தில் காரில் ஏறி உட்கார்ந்தபடியே சீதாராமன் சொன்னான்: “ரொம்ப அவசியமான இடமாயிருந்தாலொழிய எங்கேயும் போக வேண்டாம் கிருஷ்ணா. இன்னிக்கு மனசு அவ்வளவாக சரியாயில்லை எனக்கு. நேரே பீச்சுக்குப் போய்ட்டுத் திரும்பி விடுவமே!”

“உனக்கு என்னிக்கு மனசு சரியாக இருந்து கிழிச்சுது? மனசுதான் சரியாக சரியாக இல்லை! முகத்தையாவது சரியாக வச்சுக்கப்படாதோ? அதிலேயும் கூடவா சோம்பல். க்ஷவரத்தைப் பண்ணிண்டு, நீட்டா…” என்று இழுத்து நிறுத்தினான் கிருஷ்ணன், தன் நண்பனை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே.

கால் அங்குலம் வளர்ந்திருந்த ஏழெட்டு நாள் தாடியைத் தடவி விட்டுக் கொண்டே சீதாராமன் சொன்னான் “நான் என்னப்பா உன்னைப்போல சொஸைடி பிரமுகனா? தினம் பத்து பேர் சொஸைடிப் பெண்களைப் பார்க்கிறோமே – அவர்களில் யாராவது நம்ம தாடியைக் கண்டு நம்மைத் திரும்பிப் பார்க்காமே போயிடப் போறாளே என்று பயமா எனக்கு? எந்தக் காலேஜ் பெண் என்னைப் பார்க்காது தவிக்கப் போகிறாளோ என்று நான் பயப்பட வேண்டும்?” என்று தன் நண்பனுக்குக் காலேஜ் மாணவிகளிடையே இருந்த செல்வாக்கைக் கேலி செய்கிற மாதிரியிலே கேட்டான்.

கிளம்பிவிட்ட காரை வேகமாகச் செலுத்திக் கொண்டே சொன்னான் கிருஷ்ணன். “நீ கல்யாணம் பண்ணிண்டிருக்கயே, அந்தக் காலேஜ் பெண்ணுக்கு உன்னைச் சரியாக ஆண்டு வைத்துக் கொள்ளத் தெரியவில்லை, நான் சொல்லித்தரேன் பார் அவளுக்கு” என்றான்.

“நீ வேறு சொல்லித்தரப் போறயா அவளுக்கு? அது தான் பாக்கி,” என்று தலையில் தாங்க மாட்டாத பாரத்தைத் தூக்கிச் சுமப்பவன்போல, அலுத்துச் சலித்துப் போன குரலில் சீதாராமன் சொன்னான்.

அவனுடைய குரலில் தொனித்த கோபமும் அலுப்பும் தூக்கிவாரிப்போட்டது கிருஷ்ணனை. தான் கார் ஓட்டிக் கொண்டிருந்ததையும் மறந்துவிட்டு ஒரு வினாடி திரும்பித் தன் நண்பனையே பார்த்தான். அந்த வினாடியில் எதிரே வந்து கொண்டிருந்த லாரியில் மோதிச் சுக்குநூறாக உடைந்திருக்க வேண்டிய வண்டி, தெய்வாதீனமாக, மயிர் இழையில் தப்பியது. கெட்டிக்காரன் கிருஷ்ணன். வீட்டிலே ஏதோ தகராறு என்று அனுமானித்துக் கொள்ள அவனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.

ஆனால் தகராறு விஷயம் தானே என்பதை அவன் எப்படி ஊஹித்தறிந்து கொண்டிருக்க முடியும்!

“வீட்டிலே காட்டிக்கொள்ள முடியாத ஆத்திரத்தை எல்லாம் இப்போ எங்கிட்டே காட்ட ஆரம்பித்து விடாதேடாப்பா!” என்றான் கிருஷ்ணன், கேலியாகவே.

நண்பனின் கேலி சீதாராமனுக்கு ஆத்திர மூட்டுவதாக இருந்தது. “உம்” என்று உறுமினானே தவிர, வாய்திறந்து பதில் எதுவும் சொல்லவில்லை அவன்.

“உன்னைப்போலக் கல்யாணம் பண்ணிண்டவாளை எல்லாம் பார்க்கப் பார்க்க நான் கல்யாணம் பண்ணிக்காமல் இருக்கிறது எவ்வளவு நல்ல காரியம் என்பது உறுதியாகிறது!” என்றான் கிருஷ்ணன்.

“அப்படியா” என்றான் சீதாராமன் மெலிந்த குரலில். “என்றுமில்லாமல் இன்று, இப்படிப்பட்ட சம்பாஷணைத் திறன் உனக்கு எப்படியப்பா வந்தது?” என்றான் கிருஷ்ணன்.

சீதாராமனுக்கே வெட்கமாகத்தான் இருந்தது. கிருஷ்ணன் மேலோ அவன் மேலோ எவ்விதமான பிசகும் இல்லை. ஆனால் அவன் மனசு வெளியே கிளம்பு முன் அவன் அம்மாவும் அவன் மனைவி மனோரமாவும் சொன்ன விஷயங்களில்தான் லயித்திருந்தது. அவனால் வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் அச்சமயம் சிந்திக்க முடியவில்லை. சாதாரணமாக நன்றாகப் பேசக்கூடியவன், எது பற்றியானாலும் சுவாரசியமான விஷயங்களை அநாயாசமாகச் சொல்லக் கூடியவன் என்று நண்பர்களிடையே பெயர் வாங்கியிருந்த சீதாராமனின் சிந்தனைகள், வீட்டிலே நடந்த சம்பாஷணை என்கிற தண்டவாளத்தை விட்டு நகர மறுத்தபடியால், கிருஷ்ணனின் இந்தக் கேலிக்கு இலக்காகவேண்டி வந்தது!

ஒரு பெருமூச்சுடன் சீதாராமன் சொன்னான்: “இதோ பார் கிருஷ்ணா. இன்னிக்கு எனக்கு மனசு உண்மையிலேயே சரியாக இல்லை. நீ அவசர அவசிய இடம் என்று சொல்வது யாராவது உன் சிநேகிதி வீடாக இருக்கப் போகிறது. அந்த மாதிரி இடங்களுக்கெல்லாம் வரக்கூடிய மனோபாவத்திலே இல்லை நான் இன்று”.

“அப்புறம்?”

“என்னை மன்னித்துவிடு. நான் இப்படியே பீச்சுக்கு நடந்து போய்விட்டு வீடு திரும்புகிறேன். நீ வழக்கம் போல நாளைக்கு நீ வா” என்றான் சீதாராமன்.

”உத்திரவிடுகிற தோரணை பிரமாதமாகத்தான் இருக்கிறது. ஆனால் நீ சொல்கிறபடி நான் கேட்க விரும்பாவிட்டாலோ?” என்றான் கிருஷ்ணன், பாதி கேலியாகவும் பாதி நிஜமாகவும்.

“நான் உன்னோடு வந்து உன் நண்பர்களை – அதுவும் குறிப்பாக உன் சிநேகிதிகளை – பார்க்கும்போதெல்லாம், எனக்கும் அவர்களுக்கும் இடையே அவ்வளவாக ஒன்றும் இல்லாததால், நீங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு, கூத்தடிப்பதைப் பார்த்துக் கொண்டு, எதிலும் அவ்வளவாகக் கலந்து கொள்ளாமல்தான் இதுவரை வந்திருக்கிறேன். அதுபோல் இன்றும் இருந்துவிட்டு வர ஆக்ஷேபம் இல்லை” என்றான் சீதாராமன்.

அஸ்தமித்துவிட்டது. தெரு விளக்குகளெல்லாம் எரியத் தொடங்கிவிட்டன. தெருவிலே போவோரும் வருவோருமாகக் கூட்டம் சற்று அதிகமாகவேதான் இருந்தது. கூட்டத்திலே காரைச் செலுத்திய வண்ணம் சிறிது நேரம் மௌனமாகவே இருந்தான் கிருஷ்ணன்.

பிறகு சொன்னான்: “நீ இப்படி உணர்வாய் என்று எண்ணியிருந்தேனானால் நான் உன்னை அந்த மாதிரி இடங்களுக் கெல்லாம் அழைத்தே சென்றிருக்கமாட்டேன். என் தவறுதான் அது. இனி அவ்வாறு நேராது என்று நான் உறுதி கூறுகிறேன்” என்றான் கிருஷ்ணன்.

“எவ்வாறு நேராது என்று உறுதி கூறுகிறாய்? நான் கலந்து கொள்ளாமல் இருப்பது நேராது என்கிறாயா?” என்றான் சீதாராமன் முகத்தில் லேசாகப் படர்ந்து ஒரு புன்னகையுடன்.

சீதாராமன் புன்னகை புரிவதைப் பார்த்தவுடன் கிருஷ்ணனுடைய முகத்திலும் புன்னகை படர்ந்தது. “இதோ பார் ராஸ்கல். உன்னால் ஏற்கனவே கால்மணி நேரம் லேட்டாகி விட்டது. அவ்வளவு பேரும் உனக்காகவும் எனக்காகவும் காத்திருப்பார்கள்…”

“உனக்காகக் காத்திருப்பார்களோ என்னவோ, எனக்குத் தெரியாது- ஆனால் எனக்காக யாரும் காத்திருக்கமாட்டார்கள்-அது நிச்சயம்” என்றான் சீதாராமன்.

“மிகவும் கெட்டிக்காரனான நண்பன் ஒருவனையும் அழைத்து வருவதாகச் சொல்லிவிட்டு வந்திருக்கிறேனே நான்” என்றான் கிருஷ்ணன்.

“மிகவும் கெட்டிக்காரனாக ஒருவனைப் பார்த்து அழைத்துப் போயேன்” என்றான் சீதாராமன்.

“சுத்திச் சுத்திப் பேசிண்டிருந்து பலனில்லை. உனக்கிஷ்டமா இல்லையா, சொல்லு. மைலாப்பூரிலே மிஸஸ் மீனாக்ஷி ஆத்துக்குப் போறதாக எனக்கு உத்தேசம். நீ வரயா, இல்லையா?”

“இல்லை” என்றான் சீதாராமன் தீர்மானமாக.

“எனக்குப் பரிச்சயமில்லாத ஏழெட்டுப் பெண்களும் வந்திருப்பார்கள் – அவர்களுக்கு என்னைப் பரிச்சயம் செய்து வைப்பதாக மிஸஸ் மீனாக்ஷி சொல்லியிருக்கிறாள்” என்றான் கிருஷ்ணன்.

“அப்படிப்பட்ட பெண்களில் உனக்குப் பரிச்சயமாகாதவர்களும் பட்டணத்திலே இருக்கிறார்களா என்ன?” என்றான் சீதாராமன் ஆச்சர்யமடைந்தவனைப்போல.

“அப்படிப்பட்ட பெண்கள் என்று என்னவோ மூடமாக, மறைபொருள் உள்ள மாதிரிச் சொல்கிறாயே! அதுதான் எனக்குப் புரியவில்லை. நான் இன்று சந்திக்கப்போகிற பெண்கள் அப்படிப் பட்டவர்களுமல்ல – எப்படிப்பட்டவர்களுமல்ல! உயர் குடும்பத்துப் பெண்கள்தான் அவ்வளவு பேரும். இல்லாவிட்டால் மிஸஸ் மீனாக்ஷி ராமமூர்த்தி அவர்களை எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பாளா?” என்றான் கிருஷ்ணன்.

“உன் சிநேகிதிகளையோ, உனக்கு சிநேகிதமாகப் போகிறவர்களையோ பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது – என்னை பீச்சிலே கொண்டுபோய் விட்டுவிட்டு…” என்றான் சீதாராமன்.

“சரி, உன்னிஷ்டப்படியே செய்கிறேன். ஆனால் நீ பீச்சிலே உலாத்தவேண்டியதெல்லாம் உலாத்திவிட்டு, இதோ இந்த லாந்தக் கம்பத்தண்டை உட்கார்ந்திரு. நான் எட்டு, ஜாஸ்தியானால் எட்டரைக்குள் வந்துவிடுகிறேன். வீடு திரும்பிவிடலாம் சேர்ந்தே!” என்றான் கிருஷ்ணன்.

“நீ எட்டு, எட்டரைக்குள் வர முடியாமற் போய் விட்டால்?” என்று கேட்டான் சீதாராமன்.

“அப்படி எல்லாம் ஒன்றும் நேர்ந்துவிடாது. எட்டரைக்குள் வந்துவிடுவேன். பயப்படாதே!” என்றான் கிருஷ்ணன்.

சீதாராமனை பீச்சில் குறிப்பிட்ட ஓர் இடத்தில் இறக்கிவிட்டு, மைலாப்பூரை நோக்கிக் காரை விட்டுக் கொண்டு சென்றான் கிருஷ்ணன்.

5

அப்பொழுது மணி ஆறரையிருக்கும். இன்னும் இரண்டு மணிப்பொழுதில் எவ்வளவோ விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கலாம் என்று எண்ணியவனாக இறங்கி நின்றான் சீதாராமன்.

மாலைக் கடற்காற்று மனோரம்யமாகத்தான் இருந்தது. போவோரும் வருவோரும் கூட்டம் ஜேஜே என்றிருந்தது. கிழக்கே சந்திரன் மேகத் திரைகளினூடே மிகவும் மங்கலாக ஒளி பரப்பிக் கொண்டிருந்தான். பௌர்ணமிக்கு இன்னும் இரண்டு நாள் இருக்கிறது என்று ஞாபகம் வந்தது சீதாராமனுக்கு.

மனைவியும் மக்களுமாக எவ்வளவோ பேர் உல்லாசமாகக் கடற்கரையில் மாலைப்பொழுதைக் கழித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். வீடு திரும்பியவுடனே அவர்களை மீண்டும் குடும்பக் கவலைகள் சூழ்ந்து கொள்ளும். இரண்டொரு நாழிகை நேரமாவது இவற்றிலிருந்து விடுதலை பெற்றிருந்ததையே பேரின்பமாகக் கருதுகிறவர்கள் அவர்கள். குடும்பம், மற்றது எல்லாம் மட்டும் என்ன? அதுவும் இன்பம்தான் அவர்களுக்கு. சிற்றின்பம் என்று வைத்துக்கொண்டாலும், இன்பம் இன்பம்தானே!

தன் குடும்ப வாழ்க்கை… என்று எண்ணினான் சீதாராமன்- பெருமூச்செறியாத குறைதான், ஆனால் பெருமூச்செறிந்து என்ன பிரயோசனம்? அவன் என்னவோ மற்றவர்களைப் போல் இல்லைதான்.

மற்றவர்களை ஆடுகள் என்றும், உலகமே ஆட்டுப் பட்டி என்றும் சொல்லித் திருப்திப் பட்டுவிட்டால் போதுமா என்ன?

பொய்யோ மெய்யோ, உண்மையோ மாயையோ, இல்லாததோ உள்ளதோ, மற்றவர்களுக்கு இன்பம் என்கிற ஒன்றிருக்கத்தான் இருந்தது. நிலைக்காத, நீடிக்காத, திருப்தி அளிக்காத இன்பமாக இருக்கலாம் அது-ஆனால் இன்பம் என்னவோ இன்பம்தானே!

பாதையை விட்டு மணலில் இறங்கி நடந்து ஜலக்கரை ஓரமாக நடக்க ஆரம்பித்தான் சீதாராமன். தன்னைத் தாண்டியவர் களையும், தனக்கு முன் எதிர்ப்பட்டவர்களையும் கவனிக்கவில்லை அவன். சமுத்திர அலைகளில் அகப்பட்டுக்கொண்டு சந்திர வெளிச்சத்தின் நிழல் அல்லல்பட்டுத் தத்தளிப்பதும் அவன் கண்ணில் படவில்லை.

“கீழ் வீட்டு லக்ஷ்மி அம்மாள் சொன்னாளாமே! என்னமோ சொல்லிவிட்டாளாம் அவள்!” என்று தன்னையும் அறியாமல் சற்று உரக்கவே சொல்லிவிட்டான்.

நாலடிக்கப்பால் அவனைக் கவனியாமல் போய்விட்ட ஒருவன் அவன் தன்னுடன்தான் பேசுகிறானாக்கும் என்று திரும்பிப் பார்த்தான். பார்த்தவன் “ஓ! சீதாராமனா? என்னப்பா? இப்படித் தனியா, தனக்குத்தானே பேசிண்டு?” என்று கேட்டுக் கொண்டே அவனை நெருங்கி வந்தான்.

“பார்க்கவில்லை! சேகரனா? பார்த்து ரொம்ப நாளாச்சு. நீயா பேசாட்டா அடையாளம் கண்டு பிடிச்சிருக்கமாட்டேன் நான்’ என்றான் சீதாராமன் உண்மையை மறைக்காமல்.

“நீ எப்பவும் இப்படித்தான்!” என்றான் சேகரன்.

சேகரன் சீதாராமனுடனும் கிருஷ்ணனுடனும் அந்த நாளில் ஒரே வகுப்பில் படித்தவன். பரஸ்பர நண்பர்களைப் பற்றிப் பேசிக்கொண்டே இருவரும் சிறிதுநேரம், சிறிது தூரம் சேர்ந்து நடந்தார்கள்.

முதலில் கிருஷ்ணனைப் பற்றிய பேச்சை சீதாராமன் தான் தொடங்கினான்.

ஆனால் சேகரனுக்குக் கிருஷ்ணனை அந்த நாளிலேயே அவ்வளவாகப் பிடிக்காது “அவன் என்னப்பா பணக்காரன். பெரிய உத்தியோகத்திலே இருக்கிறான். நம்மைக் கவனிக்கப் போகிறானா?” என்றான்.

பணக்காரன் என்று அவனைத் தங்களிடமிருந்து பிரித்து சேகரன் சொன்னது சீதாராமனுக்குச் சுருக்கென்றது. ஆனால் சமாளித்துக்கொண்டு சொன்னான். “அப்படி ஒன்றும் இல்லை. என்கிட்டே கொஞ்சம் பிரியமாகத்தான் இருக்கிறான். இப்பகூடப் பீச்சுக்கு அவனோடே தான் வந்தேன். அவன் யாரையோ பார்க்கப் போயிருக்கான். திரும்பிவந்து எட்டு எட்டேகால் மணிக்கு அழைத்துக் கொண்டு போவான். இரேன் – நீயும் அவனைப் பார்க்கலாம்” என்றான்.

ஆனால் சேகரன் தாமதிப்பதாக இல்லை – கிருஷ்ணனைப் பார்க்க அவனுக்கு அவ்வளவாக ஆவல் இல்லை. “என்னவோ நம்ம நிலைக்கு மீறி உயர்ந்த சிநேகிதம் பிடிக்கிறதிலே எனக்கு என்னிக்குமே நம்பிக்கை கிடையாது” என்றான்.

சீதாராமனுக்கு இது காதில் விழுந்ததும் வாய் தானாகவே அடைத்துவிட்டது. அவன் வெகுநேரம் எதுவும் பேசாமல் யோசனையில் ஆழ்ந்தபடியே நடப்பதைக்கண்ட சேகரனுக்கு என்ன தோன்றிற்றோ என்னவோ. தானாகவே அர்த்தமற்ற கேள்விகள் கேட்கவும், அசட்டுப் பேச்சுக்கள் பேசவும் தொடங்கினான். “உனக்கு எத்தனை குழந்தைகளப்பா?” என்றான்.

“இரண்டு-நானும் என் மனைவியும்தான்!” என்றான் சீதாராமன் ஹாஸ்யமாக.

“சரிதான் குடும்பக் கவலை அவ்வளவாகத் தெரியாத ஆசாமி நீ!” என்று பொறாமையுடன் கூறுபவன்போலக் கூறிவிட்டு அவன் தனக்கு இரண்டு பெண்களும் ஒரு பிள்ளையும் இருப்பதையும், தன் மனைவி சதா நோய்வாய்ப்பட்டு ஊர்ப் பெரிய டாக்டர்களிடம் மருந்து வாங்கிச் சாப்பிடுவது பற்றியும் பெருமையாகச் சொல்லித் தீர்த்தான்.

கடைசியில் “மணி ஏழரையாகிறது. நான் வரட்டுமா? எட்டு மணிக்கு ஒருவனை ஒருவனை வீட்டுக்கு வரச்சொல்லியிருக்கேன். வரட்டுமா?” என்று சொல்விட்டு விடைபெற்றுக் கொண்டு சென்றான்.

6

சேகரன் போன பிறகு, சிறிது நேரம் ஒரு கட்டு மரத்தில் சாய்ந்து உட்கார்ந்து கடலையே பார்த்துக் கொண்டிருந்தான் சீதாராமன். ஓயாத கடலலைகள் ஏதேதோ புலம்பிக் கொண்டிருந்தன. ஆனால் அவற்றின் இசை அவனுக்கு இன்பமாகப் படவில்லை.

சேகரனும் தன் நண்பன் கிருஷ்ணனைப் பணக்காரன் என்று ஒரே வார்த்தையில் ஒதுக்கிவிட்டதுபற்றி அவனுக்கு வருத்தமாகத்தான் இருந்தது கிருஷ்ணன் பணக்காரனாக இருந்தது அவன்மேல் பிசகா? பணம் இருந்தால் நட்புக்கு லாயக்கில்லாதவனாகத்தான் இருக்கவேண்டுமா?

தன் அனுபவம் அப்படியில்லையே என்று சீதாராமனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

கிருஷ்ணனை நொந்துகொள்வதில் பலனில்லை என்று தன் குடும்பத்தைப்பற்றி எண்ணத் தொடங்கினான். சேகரன் தேவலை. இரண்டு பெண்ணும் ஒரு பிள்ளையும்-போதாது என்று நோயும் வைத்தியமும் குடும்பஸ்தனுக்குப் பொழுது இன்பகரமாகக் கழிவதற்கு இதைவிடச் சிறந்தது வேறு என்னவேண்டும்!

குழந்தைகள் இருந்தால் குடும்ப வாழ்க்கை பூர்த்தியாகிற மாதிரித்தான், இல்லையா! கிரஹஸ்தனுக்குக் குழந்தைகள்…

அதுவும் பெண்களுக்கு வாழ்க்கை பூரணத்வம் பெறுவது குழந்தைகளிடத்திலேதான். அது உண்டாகிவிட்டால் மனோரமாவும்…. அதை எல்லாம் உணர்ந்துதானோ என்னவோ, அவன் தாயார் இன்னும் குழந்தை பிறக்கவில்லையே என்று தினமும் சொல்லிக் கொண்டிருந்தாள் – உலகத்திலுள்ள எல்லாத் தெய்வங்களுக்கும் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தாள்.

குழந்தைகளைப் பற்றிய எண்ணத்திலே, தன் மனோபாவம் ஓரளவு மாறிவிட்டது என்பதை உணர்ந்தான் சீதாராமன். பீச்சுக்கு வரும்போதிருந்த கசப்பு இப்போது அவன் மனசிலே இல்லை.

சேகரனுடைய சம்பாஷணையோ, குழந்தை என்கிற ஞாபகமோ, கடற்காற்றோ – எதுவானால் என்ன? மனம் சற்று நிம்மதி யடைந்திருந்தது.

“மணி எட்டாயிருக்கும் போலிருக்கே!” என்று சொல்லிக்கொண்டே சீதாராமன் எழுந்தான். “வந்து பார்த்துவிட்டு எனக்கிருந்து அப்போதைய மனோபாவத்திலே தனக்காகக் காத்திராமல் போய்விட்டேன் என்று கிருஷ்ணன் குறைப்படப் போகிறான்! அதுவும் இன்று சாயங்காலம் அவனுடைய சிநேகிதிகளைப் பற்றி அனாவசியமாக ஏதேதோ சொல்லிவிட்டேன். அதுவே அவன் மனசில் கொஞ்சம் கூர்மையாகத் தைத்திருக்கும்” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டேதான் காத்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கி நடந்தான்.

சீதாராமன் இன்னும் இருட்டில், மணலில், நடந்து கொண்டிருக்கும்போதே கிருஷ்ணனின் கார் ரோட் ஓரமாக வந்து நின்றது. எட்டு மணிக்குள்ளாகவே சிநேகிதிகளை எல்லாம் விட்டுப் பிரிந்து வந்து விட்டானே நமக்காக என்று எண்ணியவனாக சீதாராமன் தன் நடையைத் துரிதப்படுத்தினான். ஆனால் நாலடி துரிதமாக நடந்து வெளிச்சமுள்ள பிரதேசத்தை எட்டுமுன்

திடுக்கிட்டு, நிழலான பிரதேசத்திலே நிலைத்து நின்றான்.

கிருஷ்ணனின் காரிலிருந்து முதலில் இரண்டு பெண்கள் இறங்கினார்கள். பிறகு கிருஷ்ணனும் இறங்கினான் கிருஷ்ணன் தன் நண்பனைத் தேடுகிறவன்போலச் சிறிது நேரம் சற்று முற்றும் பார்த்தான். பிறகு இரண்டு பெண்களுக்கும் நடுவில் அவர்களுடன் பேசிக்கொண்டே மைலாப்பூர் நோக்கி நடந்தான்.

அந்தப் பெண்களில் ஒருத்தியைச் சீதாராமனுக்குத் தெரியும்- நன்றாகவே தெரியும்!

அவளை அவன் அங்கு கிருஷ்ணனுடன் எதிர்பார்க்கவில்லை. அதுவே அவனுடைய பிரமிப்புக்குக் காரணம்.

அவர்கள் மூவரும் மைலாப்பூரை நோக்கி நடந்து கண்ணுக்கு மறையும் வரையில் அவர்களையே பார்த்துக்கொண்டு, சற்றே இருட்டான பிரதேசத்தில் நின்றான் சீதாராமன். பிறகு குறிப்பிட்ட இடத்திற்குப்போய் உட்கார்ந்துகொண்டான்.

கிருஷ்ணனுடன் அந்தப் பெண் திரும்பி வரமாட்டாள் என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரியும். அவள் வீடு மைலாப்பூரில்தான் இருந்தது. கிருஷ்ணன் மட்டும் வருவான் – அல்லது அவனும் இன்னொரு பெண்ணும் வருவார்கள் என்று எதிர்பார்த்தான்.

கிருஷ்ணன் தனியாகத்தான் வந்தான். அரைமணி கழித்து, எட்டரை மணி அடிக்கிற சமயத்தில் வந்தான்.

சீதாராமன் தோளில் கையைப் போட்டுக்கொண்டு நட்பு உரிமையிலே சொன்னான்: “போடா பழி! சற்று முன் வந்தேன். நீ இருந்தால் உனக்கு ஒரு பெண்ணை அறிமுகம் செய்து வைக்க எண்ணினேன். பி.ஏ. முதல் வகுப்பில் படிக்கிறாளாம்! என்ன அழகு! என்ன அறிவு! போடா. நீ துரதிருஷ்டக்காரன்” என்றான்.

“என் துரதிர்ஷ்டம் அவள் அதிருஷ்டமாக மாறிவிட்டால் என்ன பண்றது?” என்றான் சீதாராமன் வெடுக்கென்று.

“அப்படின்னா…”

“ஜின் வாசனை சற்று ஜாஸ்தியாவே அடிக்கிறதுன்னு அர்த்தம்! கிளம்பு நாழியாறது!” என்றான் சீதாராமன்.

அந்தப் பெண்ணைப்பற்றி இன்னும் சற்று நேரம் பேசிக் கொண்டே நிற்கத்தான் இஷ்டம் கிருஷ்ணனுக்கு. ஆனால் சீதாராமன் கிளம்பு கிளம்பு என்று அவனை அவசரப்படுத்தினான். “நீ என்னப்பா ஒண்டிக்கட்டை, கேட்பாரில்லை. நான் பிள்ளைக் குட்டிக்காரன்…” என்றான் சீதாராமன் மனசிலிருந்த வேதனையைத் தனக்குத் தானே மறைத்துக்கொள்ள கேலியாக.

“பிள்ளை குட்டிக்காரனா? புது மனுஷனாகப் பேசறயே அப்பா நீ!” என்றான் கிருஷ்ணன்.

கார் கிளம்பிய பின்தான் அன்று சேகரனைச் சந்தித்ததைப் பற்றிச் சொன்னான் அதிலே அவ்வளவாக கிருஷ்ணனும் உற்சாகம் காட்டவில்லை. நட்பு என்பது இரண்டு பக்கத்து உறவு என்று எண்ணிய சீதாராமன் வேறு எதையும் பற்றிச் சிந்திக்கவோ பேசவோ மனமில்லாதவனாக சேகரனைப் பற்றியே வழிநெடுகப் பேசினான்.

சீதாராமனை அவன் வீட்டு வாசலில் தன் காரிலிருந்து இறக்கிவிட்டு விட்டுப் போகும்போது “நாளை வரேன். ஐந்து மணிக்கே தயாராயிரு” என்றான் கிருஷ்ணன்.

சீதாராமன் இதற்குப் பதில் சொல்லுமுன் “அவள் பெயர் லீலா” என்றான் கிருஷ்ணன்.

அவனையும் மீறியே சீதாராமன் வாயிலிருந்து “தெரியும்” என்கிற வார்த்தை வெளிவந்து விட்டது.

“அவளை உனக்குத் தெரியுமா?” என்றான் கிருஷ்ணன்.

“தெரியும் ஆனால் நாளைக்குச் சொல்கிறேன் விஸ்தாரமாக, வரட்டுமா?” என்றான் சீதாராமன்.

கிருஷ்ணனுடைய காரின் சிவப்பு விளக்கு தெருவிலே ஓடி மறைகிறவரைக்கும் அங்கேயே நின்றான் சீதாராமன். பிறகு திடீரென்று ஏதோ அவசரத்தை உணர்ந்தவன்போல மாடிப் படிகளை இரண்டிரண்டாகத் தாவி ஏறினான்.

7

சட்டையைக் கழட்டி மாட்டிவிட்டுக் கைகால் அலம்பிக் கொண்டு, சீதாராமன் சாப்பிடப் போய் உட்கார்ந்தவுடன் அவன் அம்மா சொன்னாள்: “மணி பத்தடிக்கப் போறது. தினம் இதே மாதிரி நாழி பண்ணினா… அதுவும் இந்தச் சமயத்திலே அவ உடம்பைச் சரியாகப் பார்த்துக்க வேண்டாமா?” என்றாள்.

“என்ன அம்மா பண்ணச் சொல்றே! சாயங்காலமா டிபன் சாப்பிடறது, பசிக்கமாட்டேங்கிறது. தவிர வெளியே போனால் யாராவது கண்ணிலே தட்டுப்பட்டா அவாளோடு பேசமாட்டேன்னு ஓடி வர முடியறதா? என்ன அவசரப்பட்டாலும் இத்தனை நேரம்தான் ஆயிடறது, ஒரு நாளைப் பார்த்தாப்லே” என்று மன்னிப்பு கேட்கிற தோரணையிலே சொன்னான் அவன்.

“நீ சாப்பிடறச்சே மணி பத்து, அவ சாப்பிட்டுக் கையலம்பச்சே பதினொண்ணு அடிக்கிறது, ஒவ்வொரு நாளும். அதற்கப்புறம் காரியம் செய்துவிட்டுப் படுக்கப் பாதிராத்திரியாறது. அவளுக்கு உடம்புக்காகுமான்னு தான் கேக்கறேன்” என்றாள் அம்மா.

“காலாகாலத்திலே அவளைச் சாப்பிட்டு விட்டுப் படுத்துக்கச் சொல்றதுதானே?” என்றான் சீதாராமன்.

இதைக் கேட்டுக்கொண்டே முன் அறையிலிருந்து வந்த அவன் மனைவி மனோரமா சொன்னாள்: “மாமி தேகம் மாத்திரம் வஜ்ரம். வயசாச்சொல்லியா… கஷ்டப்பட்டுத் தானே ஆகணும்?” என்று கேலி செய்தாள்.

“ஒரு அம்மாவிடமும், ஒரு அகமுடையாளிடமும் அகப்பட்டுக் கொண்டு நான் தவிக்கிற தவிப்பு இருக்கே…”

“பொறக்காம இருந்திருக்கணும்… இல்லாவிட்டால் கல்யாணமாவது பண்ணிக்காமே இருந்திருக்கணும்!” என்றாள் மனோரமா.

“என்னத்தைப் பண்றது? பண்ணிண்டது தப்பிதம் – அது இவ்வளவு நாள் கழிச்சு இப்பத்தான் தெரியறது!” என்று சிரித்துக் கொண்டே சமாளிக்க முயன்றான் சீதாராமன்.

“உங்க சிநேகிதர்கிட்டே கத்துக்கறதுதானே! அவரைப் பாருங்கோ- கெட்டிக்காரத்தனமா கல்யாணம் பண்ணிக்காமலே இருக்கார்!” என்றாள் மனோரமா.

கிருஷ்ணனைப் பற்றிய பேச்சு தொடங்கியதே திக்கென்றது சீதாராமனுக்கு. சாயங்காலம் மாதிரி மீண்டும் ஏதாவது கசப்பான பேச்சு தொடங்கிவிடப் போகிறதே என்று பயம் அவனுக்கு.

மனோரமா சொன்னாள்: “ஆனால் ஒண்ணு, உங்க சிநேகிதருக்குக் கல்யாணம் ஆயிடுத்தானா அவர் ஒங்க மாதிரி இருக்கமாட்டார். ‘பெண்டாட்டியாத்தா பெரியாத்தா’ என்று அவ காலைச் சுத்திண்டே பெட்டிப் பாம்பா அடங்கிக்கிடப்பர்” என்றாள்.

“உனக்குத் தெரிஞ்ச பொண் யாராவது இருந்தால் சொல்லு. கெட்டிக்காரப் பொண்ணா, ஆமடையானை அடக்கி ஆளக்கூடிய பொண்ணா….”

அவன் அம்மா குறுக்கிட்டாள்! “யாராத்துப் புள்ளைக்கோ கல்யாணம் பண்ணிவைக்க என்னத்துக்கு நாம் சிரமப்படணும்? நாழியாச்சு… சாப்பிட்டாச்சானா எழுந்திரு” என்றாள்.

சம்பாஷணை சற்றுச் சிரமமான பாதையில் திரும்பு முன்னரே சமாளித்துக் கொண்ட தன் தாயாரின் சாமர்த்தியத்தை வியந்து கொண்டவனாக சீதாராமன் எழுந்தான். கையலம்பிவிட்டு, சாப்பிட இலையில் உட்கார்ந்த தன் மனைவியைப் பார்த்துச் சொன்னான்: “சாப்பிட்டு விட்டு வா மனோ. ஒரு விஷயம் இருக்கிறது-உன்னிடம் சொல்லவேண்டும்” என்றான்.

முன் அறைக்கு நகர்ந்ததுமே ‘ஏன் இதைச் சொன்னோம்!’ என்றிருந்தது அவனுக்கு. ‘என்ன என்று அவள் கேட்டுக்கொண்டு வருவாளே! என்னத்தைச் சொல்வது? ஏற்கெனவே கிருஷ்ணனிடம் அவளுக்குக் கோபம். இன்று மாலை நடந்த விஷயத்தைப் பற்றிச் சொன்னால் அவள் கோபம் அதிகரிக்குமே!’ என்று யோசித்தான்.

அரைமணி நேரம் கழித்து சமையலறைக் காரியங்களை எல்லாம் முடித்துக் கொண்டு, ஒரு கையில் காய்ச்சிய பாலுடனும், ஒரு கையில் வெற்றிலைத் தட்டுடனும் வந்தாள், அவன் மனைவி. “ஏதோ சொல்றேன்னேளே! என்ன?” என்று கேட்டுக் கொண்டுதான் வந்தாள்.

ஒரு வினாடி தயங்கினான் சீதாராமன். ஒரு வினாடி தான். பிறகு சொன்னான்; “இன்னிக்கு உன் தங்கையைப் பார்த்தேன்.”

“யாரை? பேபியையா? லீலாவையா?”

“லீலாவை”

“எங்கே? என்ன சொன்னாள்?” என்றாள் மனோரமா பிறந்தகத்தைப் பற்றிய இன்ப ஞாபகங்களுடன்.

”நான் அவளோடு பேசவில்லை. அவளும் என்னைப் பார்க்கவில்லை” என்று கூறிவிட்டு, மென்று முழுங்கிக் கொண்டே, கிருஷ்ணனும் அவளும் அன்று சந்தித்ததைப் பற்றியும், கிருஷ்ணன் அவளைப் பற்றித் தன்னிடம் சொன்னதையும், சொன்னான்.

ஆனால் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் மனசில் தான் செய்வது அசட்டுத்தனம் என்று ஓர் எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது.

அவன் சொல்வதை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்த மனோரமா அவன் சொல்லி முடித்த பின்னும் பதில் அளிக்கவில்லை.

இரண்டு நிமிஷத் தயக்கத்திற்குப் பிறகு சீதாராமன் சொன்னான்: “எனக்கென்னவோ லீலாவும் கிருஷ்ணனும் சந்தித்தது சரியாகப் படவில்லை.”

“உங்க சிநேகிதருடைய யோக்யதைப் பற்றி உங்களுக்குத் தெரியாதோன்னு நினைச்சேன். தெரிஞ்சிருந்தா சரிதான்” என்றாள் மனோரமா.

அவள் குரலில் தொனித்த பாவம் என்ன என்று சீதாராமனுக்குச் சரியாகப் பிடிபடவில்லை.

“நீ போய்ப் படுத்துக்கோ. நாழியாறது. நாளைக்குப் பார்க்கலாம்” என்றான் சீதாராமன்.

8

மறுநாள் மாலையில் கிருஷ்ணன் வழக்கப்படி சீதாராமனைப் பார்க்க வரவில்லை. சீதாராமன் தன் நண்பனை எதிர்பார்த்து வெளியே கிளம்பத் தயாராக சட்டை மாட்டிக்கொண்டு வாசல் வரண்டாவுக்கும் உள்ளுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.

“ஏன்? உங்க நண்பர் இன்னும் வரவில்லையோ!” என்று கேலி செய்தாள் மனோரமா.

மனோரமாவுக்காகவேனும் அன்று கிருஷ்ணனுடன் வெளியே கிளம்புவதில்லை என்று அதே வினாடி தீர்மானித்த சீதாராமன், “நீயும் நானும் இன்னிக்கு சினிமாவுக்குப் போறோம்” என்றான்.

“அப்படியா? இது என்ன என்னிக்கும் ல்லாத திருநாளாயிருக்கு!” என்றாள் மனோரமா.

“கிளம்பு கிளம்பு” என்று அவளை அவசரப்படுத்தினான் சீதாராமன், எப்படியானாலும் கிருஷ்ணன் வருவதற்குள் மனோரமாவை அழைத்துக்கொண்டு கிளம்பிவிடுவது என்கிற உத்தேசத்துடன்.

அவன் உதவிக்கு வந்தாள் அவன் அம்மா; “போயிட்டு வாயேன் ஒருநாள். அடுப்பங்கரைதான் தினம் இருக்கவே இருக்கு…” என்றாள்.

புதுப்புடவையை எடுத்துக் கட்டிக்கொண்டே மனோரமா சொன்னாள்: “சினிமா பார்த்து ஒரு வருஷத்துக்கு மேலே ஆச்சே! எப்படிப் பார்க்கறதுன்னுகூட மறந்து போச்சோ என்னமோன்னு சந்தேகமாயிருக்கு!” என்றாள்.

ஆனால் அவள் கால்மணி நேரத்துக்குள்ளாகவே தயாராகி விட்டாள். என்றுமில்லாது அன்று கணவனுடன் கிளம்புவதிலே இருந்த ஒரு சந்தோஷம் அவள் முகத்திலே பிரகாசித்தது. “நீங்களும் வாங்களேன்” என்று மாமியாரை வாயளவில் அழைத்தாள். அவள் ‘வரவில்லை’ என்றதில் பரம திருப்திதான் மனோரமாவுக்கு.

சீதாராமன், பஸ்ஸிலே போவதற்குப் பதிலாக, ஒரு டாக்ஸிக்கு ஏற்பாடு செய்திருந்ததைப் பார்த்து அநாவசியமாக இந்தப் பணம் வீணாகிறதே என்று மனோரமாவுக்கு வருத்தம். பணக்கார வீட்டிலே பிறந்து, ஏதோ நடுத்தரக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டிருந்த அவள் ரூபாய் விஷயத்தில் கருத்தாக இருந்துதானே ஆகவேணும்!

டாக்ஸி விஷயமாக அவள் தன் கணவனுடன் விவாதம் செய்யத் தொடங்கினாள். ஆனால் சீதாராமன் விவாதிக்க இடம் தராமல் சொன்னான்: “இதோ பார் மனோ. உன்னோடு தனியாக் கிளம்ப இதுதான் எனக்குப் பிடிக்கமாட்டேங்கிறது. நீ சொன்ன மாதிரி வருஷத்திற்கொருமுறை கிளம்பறோம். நாலு ரூபாய் பிரமாதமில்லை. பேசாமல் வா.”

அவர்கள் டாக்ஸியில் கிளம்புகிற சமயத்திலே கிருஷ்ணனுடைய வேலையாள் வந்து சீதாராமனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான். அதைப் பிரித்துப் படித்தான் சீதாராமன். “சரி போ” என்று கிருஷ்ணனின் வேலையாளிடம் சொன்னான்.

டாக்ஸியும் கிளம்பிற்று.

கிருஷ்ணனுடைய கடிதத்தைத் தன் மனைவியிடம் காண்பிக்கலாமா, காண்பிக்காமலே கிழித்தெறிந்து விடலாமா என்று தயங்கினான் சீதாராமன் இரண்டு நிமிஷம். பிறகு அவள் கையில் கொடுத்தான் அதை.

கடிதம் ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. “நேற்றுச் சொன்னேனே, அந்த லீலா என்கிற பெண்ணுடன் நான் சினிமாவுக்குப் போகிறேன். ஆகையால் இன்று சாயங்காலம் என்னால் வரமுடியாது. மன்னிக்கவும். கிருஷ்ணன்” என்று எழுதியிருந்தது.

அதைப் பார்த்தவுடன் ஏனோ தெரியவில்லை, மனோரமாவுக்குக் கோபம்தான் வந்தது. “உங்க சிநேகிதர் வராததினாலே தான் இன்னிக்கு…”

“அடி அசடே என்ன இப்படி உனக்கு அனாவசியமாக என்னல்லாமோ தோணறது! நாம் கிளம்பினப்புறம் தானே இந்தக் கடிதாசு வந்தது! என்னல்லாமோ சொல்றயே” என்று சற்றுக் கசந்த குரலில் சீதாராமன் சொன்ன பிறகுதான், தன் கோபத்திற்குக் காரணமேயில்லை என்பது மனோரமாவுக்கு ஞாபகத்துக்கு வந்தது. அனாவசியமாக அப்படிக் கோபத்துக்கு இடம் கொடுத்தது பற்றி அவளுக்கே வெட்கமாக இருந்தது.

“நம்ப எந்த சினிமாவுக்குப் போறோம்? அவாளும் அதே சினிமாவுக்கு வந்திருந்தால்…?” என்று கேட்டாள் மனோரமா.

“நல்லதாப்போச்சு! என்னிக்காவது ஒருநாள் நீ லீலாவைக் கோபிச்சுக்க வேண்டியவள்தானே? இன்னிக்கே கோபிச்சுக் கோயேன்” என்றான் சீதாராமன்.

“உங்க சிநேகிதரைத்தான் கோபிச்சுண்டா என்ன?” என்றாள் மனோரமா.

சீதாராமன் பதில் சொல்லவில்லை. ஒரு வினாடி கழித்து மனோரமாவே சொன்னாள்: “உங்க சிநேகிதர் லீலாவைக் கல்யாணம் பண்ணிண்டால்…”

“அவனா? தான் கல்யாணமே பண்ணிக்கப் போறதேல்லேன்னு சொல்லிண்டிருக்கான்…” என்றான் சீதாராமன்.

“அதுதான் சரி! நானும் லீலாவிடம் சொல்றேன்! அவர் பண்ற அட்டூழியங்களுக்கெல்லாம், லீலா அவரைக் கல்யாணம் பண்ணிண்டு வீட்டைவிட்டு வெளியே கிளம்பப்படாதுன்னு அடக்கிவச்சு…” என்று மனோரமா எவ்வளவு ஆத்திரத்துடன் சொன்னாள் என்பதைக் கவனிக்க சீதாராமனுக்கு விந்தையாகவே இருந்தது.

“அப்புறம் நீயும் கிருஷ்ணனை உங்க சிநேகிதர் – உங்க சிநேகிதர்னு கரிக்கமாட்டே. அதுவும் நல்லது தான்” என்று சொல்லிச் சிரித்தான் சீதாராமன்.

ஒரு நிமிஷம் கழித்துச் சொன்னான் அவனே; “இதோ பார் மனோ! இந்த விஷயத்திலே கிருஷ்ணனைக் குற்றம் சொல்றதிலே பிரயோசனம் இல்லை. படிக்கற பெண்களுக்கே இந்த மாதிரி விஷயங்களிலே கொஞ்சம் வியவஸ்தை குறைவாகத்தான் இருக்கிறது. படிக்கப் படிக்க அர்த்தமற்ற சுதந்திரமும், அந்த சுதந்திரத்தினால் விசித்திரமான ஆசைகளும், தோன்றி விடுகின்றன. இவர்களெல்லாம் பின்னால் எப்படி ஆகிறார்களோ-இப்போது அவர்கள் செய்வது சரியில்லைதான்”.

முகத்தைச் சுளித்துக் கொண்டாள் மனோரமா. ஆனால் தன் கணவன் சொன்னது ஓரளவு உண்மைதான் என்று அவளும் அறிந்தேயிருந்தாள்.

“லீலா ஒன்றும் அந்த மாதிரிப் பெண் இல்லை” என்றாள்.

“தங்கள் பெண் அப்படியில்லை என்றுதான் ஒவ்வொருவரும் எண்ணியிருக்கிறார்கள்” என்றான் சீதாராமன்.

ஒரு நிமிஷம் – வார்த்தைகளுக்கு அகப்படாத ஒரு பயம் மென்னியைப் பிடிப்பது போலிருந்தது மனோரமாவுக்கு.

இதற்குள் சினிமாக் கொட்டகையை அடைந்துவிட்டது டாக்ஸி. கூலியைக் கொடுத்துவிட்டு சீதாராமனும் மனோரமாவும் இறங்கினார்கள்.

டிக்கெட் வாங்கிக் கொண்டு, சினிமாக் கொட்டகைக்குள் போகிறபோதே, கிருஷ்ணனையும் லீலாவையும் மனோரமா பார்த்துவிட்டாள். மிகவும் சாதாரணமான ஒரு விஷயத்தைப்பற்றிப் பேசுகிறவள்போல “அதோ இருக்காரே உங்க சிநேகிதர்” என்றாள்.

“ஆமாம். என் சிநேகிதரும் உன் தங்கையும் தான்” என்றான் சீதாராமன் சற்றுக் குறும்பாகவே.

அவர்களைப் பார்த்ததாகக் காட்டிக் கொள்வதா வேண்டாமா என்று சீதாராமனோ மனோரமாவோ தீர்மானித்து ஒரு முடிவுக்கு வருமுன் கிருஷ்ணனும் லீலாவும் அவர்களைக் கண்டுவிட்டார்கள். தன் சிநேகிதனை வரவேற்க கிருஷ்ணனும், தன் அக்காவைச் சந்திக்க, சந்தித்துத் தன் பக்கத்திலிருந்தவரைப் பற்றிச் சொல்ல, லீலாவும் எழுந்து வந்துவிட்டார்கள்.

பலராலும் புகழப்பட்ட சினிமாதான் அது. ஆனால் புகழத்தக்க அம்சங்கள் அதில் என்னென்ன இருந்தன என்று அவர்கள் நால்வருக்கும் தெரியாது. நால்வருக்கும் என்று சொல்வதுகூடத் தவறு. கிருஷ்ணன் இந்த மாதிரிச் சங்கடமான சம்பவங்களுக்குப் பழக்கப்பட்டவன். அவன் சினிமாவை ஓரளவு கவனித்தான். ஆனால் மற்ற மூவரும் அன்று சினிமா டிக்கட்டுக்குக் கொடுத்த பணம் வீண்தான்.

இது எப்படி முடியப்போகிறதோ என்று உள்ளூர பயத்துடன் சீதாராமனும், இப்படி மாட்டிக்கொண்டோமே என்று லீலாவும், எப்படி முடித்து வைக்கலாம் என்று மனோரமாவும் அந்தரங்கத்தில் யோசனை செய்துகொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.

நால்வரும் சேர்ந்தே கிருஷ்ணனின் காரில் வீடு திரும்பினார்கள்.

லீலாவும் தன் அக்காளுடன் அத்திம்பேர் வீட்டிற்கே வந்தாள். மைலாப்பூரில் அவள் பெற்றோருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு வந்தான் சீதாராமன்.

9

இத்தனையிலும் தன் நிலைமைதான் வேடிக்கையாகப் பட்டது கிருஷ்ணனுக்கு. அந்த லீலாவைத் தனக்கும் தெரியும் என்று சீதாராமன் சொன்னபோது அவனுடன் படித்தவளாக இருப்பாள் என்றுதான் எண்ணியிருந்தான் அவன். சீதாராமனின் மனைவி படித்தவள், பணக்கார வீட்டைச் சேர்ந்தவள் என்பது அவனுக்குத் தெரியும் – அதற்குமேல் அவ்வளவாக ஒன்றும் தெரியாது அவனுக்கு.

சினிமாக் கொட்டகையிலும் லீலா உடனே சொல்லி விடவில்லை, தனக்கும் மனோரமாவுக்கும் உள்ள உறவை, தன்னையும் சீதாராமனையும்போல அவர்களிருவரும் சேர்ந்து படித்தவர்களோ என்று எண்ணினான் அவன். வயசு வித்தியாசத்தைப் பார்த்தால், சேர்ந்து படித்தவர்கள் மாதிரி இல்லையே என்று யோசித்தான். கூடப் படித்தவளுக்கு அக்காவாக இருக்கலாம் என்று முடிவுகட்டினான்.

ஆனால் சினிமாப் பார்த்துவிட்டு வீடு திரும்புகையில் லீலா சீதாராமனை “என்ன அத்திம்பேரே!” என்று அழைத்த பிறகுதான் உறவு தெரிந்தது.

அன்றிரவு நிலைமையைப் பற்றி யோசிக்க நிறைய அவகாசம் இருந்தது கிருஷ்ணனுக்கு.

கிருஷ்ணன் பணக்காரர் வீட்டுப் பிள்ளை – ஐந்து பிள்ளைகளில் மூத்தவன் நன்கு படித்தவன். பார்ப்பதற்கும் அழகாக இருப்பான். நல்ல உத்யோகத்திலும் இருந்தான். ஏழெட்டு வருஷங்களாகவே அவன் பெற்றோர் அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்துவிட முயன்று வருகின்றனர் எனினும், அவன் கல்யாணம் செய்து கொள்வதில்லை என்று பிடிவாதம் பிடித்து வருகிறான். வாழ்க்கையே விளையாட்டு என்றும், அந்த விளையாட்டிலே தனக்கிஷ்டப்பட்டபோது பங்கெடுத்துக்கொள்ளவே பெண்கள் என்று ஒரு பகுதியைக் கடவுள் சிருஷ்டித்திருக்கிறார் என்றும் எண்ணி நடப்பவன்.

அப்படி அவன் எண்ணி நடப்பதற்கு அனுசரணையாகவேதான் அவன் அறிந்த குடும்பப் பெண்களும் நடந்து வந்திருக்கிறார்கள் என்று சொல்வது மிகையாகாது. இது விஷயத்தில் அவன்பேரில் பிசகா, அவனுடன் பழகிய பெண்களின் பேரில் பிசகா என்று யாரும் சுலபத்தில் முடிவு கட்டிவிட முடியாது.

ஒரோரு சமயம் அவனுடைய சிநேகிதிகள் காரணமாக அவன் சில கஷ்டங்களுக்குட்பட நேரிட்டதும் உண்டு. ஆனால் அப்படி ஒன்றும் பெரிய கஷ்டம் இல்லை. சுலபமாகவே துடைத்துவிட்டு ஒதுங்கிவிடக்கூடிய மாதிரித்தான் இருந்து வந்தன. சில இடங்களில் சங்கடம் எதுவும் ஏற்படுவதற்கு முன்னமே அவனாகவே நகர்ந்து விடுவான் – அந்தப் பெண் அவனுக்கு எவ்வளவுதான் பிடித்திருந்தாலும் சரி, அவள் எப்படிப்பட்ட அழகியானாலும் சரிதான்.

அவனுடைய அடுத்த தம்பிக்குக் கல்யாணம் ஏற்பாடாகி யிருந்தது. இன்னும் ஒரு மாசத்தில் முகூர்த்தம் வைத்திருந்தார்கள். அதற்குமுன் தன் மூத்த பிள்ளைக்கும் கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டும் என்றுதான் அவன் தகப்பனார் ஆசைப்பட்டார். ஆனால் இந்த மாதிரி விஷயங்களில் பிள்ளைகள் சுதந்திரம் வேண்டுகிற யுகம் அல்லவா இது? சுதந்திரம் உண்டோ இல்லையோ, வீட்டில் உள்ளவர்கள் சொல்படி கேட்காதிருப்பது சர்வ சகஜம்தானே! அந்த உரிமையைப் பூராவும் பெற்று அனுபவித்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன். தன் தம்பிக்குக் கல்யாணம் ஆனால் ஆகட்டும், தனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டான் அவன்.

இது விஷயத்தில் அவன் தாயாருக்குத்தான் ரொம்பவும் வருத்தம். மற்றபடி வாழ்க்கையில் எவ்வித குறையுமில்லாத அவளுக்குத் தன் மூத்தபிள்ளை கல்யாணம் செய்துகொள்ள மறுத்தது பெரிய குறையாகப் பட்டது. கிருஷ்ணனுக்கும் சீதாராமனுக்கும் இடையே இருந்த நட்பை அறிந்திருந்த அவள், சீதாராமனிடம்கூடத் தன் பிள்ளைக்குப் புத்தி சொல்லச் சொல்லிக் கெஞ்சினாள். “நீதான் அவனுக்கு அண்ணா ஸ்தானத்தில் இருந்து சொல்லேன், சீதாராமா” என்றாள் ஒரு நாள், சீதாராமனுக்கு டிபனும், அவனுக்குப் பிடித்த மாதிரி திக்காகக் காபியும் கொடுத்துவிட்டு.

அது விஷயமாக சீதாராமன் தன்னிடம் பிரஸ்தாபித்தது கிருஷ்ணனுக்கு ஞாபகம் வந்தது. நண்பன் என்கிற தோரணையில் சற்று நெருங்கிய உரிமை கொண்டாடிக் கொண்டேதான் சொன்னான் சீதாராமன். இந்த உரிமையை அவனுக்குத் தரத் தயாராக இருந்த கிருஷ்ணன் அவன் சொன்னதைக் கேட்கத் தயாராக இல்லை. சீதாராமனிடம் இது விஷயமாகச் சொன்னது பற்றித் தன் தாயாரைக்கூட கோபித்துக் கொண்டான்.

அதெல்லாம் சரி, இப்பொழுது சீதாராமனின் மைத்துனி லீலா விஷயமாக என்ன செய்வது என்று படுக்கையில் படுத்துப் புரண்டு கொண்டே யோசித்தான் கிருஷ்ணன். அவன் அதுவரையில் கண்டிருந்த மற்றபெண்களை விட லீலாவை அவனுக்கு அதிகமாகத்தான் பிடித்திருந்தது. முதல்நாள் சந்தித்தபோதே அவன் அவள் அழகில் ஈடுபட்டுவிட்டான். இரண்டொரு நாழிகை நேரம் பழகுவதற்குள்ளாகவே அவளுடைய அசாதாரண அறிவும் மனப்பண்பும் அவனைக் கவர்ந்தன.

ஒதுங்கிவிடுவதா?

அல்லது, இன்னும் நெருங்குவதா?

இப்படிச் சிந்தித்துக்கொண்டே, லீலாவே ஞாபகமாகப் படுத்திருந்தவன் இரவு ஒரு மணிக்குத்தான் தூங்கினான். அசந்த தூக்கமல்ல அது-லீலாவைப் பற்றியும், தான் காணவேண்டிய முடிவு பற்றியும் கனவுகள்நிறைந்த தூக்கம். விடியற்காலையில், தானும் லீலாவும் மணப்பந்தலில் வீற்றிருப்பதாகவும், நண்பர்கள் எல்லோரும் கேலி செய்வதாகவும், கெட்டி மேளம் அடிப்பதாகவும் கனவு கண்டு விழித்துக்கொண்டான்.

அசட்டுத் தனமாக, ஒரு பலஹீனமான மனோநிலையில் தான் கனவு கண்டதைத் தன் தாயாரிடம், முதல் காரியமாக, காப்பி சாப்பிடுவதற்கும் முன்னரே சொல்லிவிட்டான்.

“விடியற் காலையில் கண்ட கனவு பலிக்கும் பாரேன்” என்றாள் அவன் தாயார், தெய்வாதீனமாக அவள் கனவு பலித்துவிடக் கூடாதா என்கிற ஒரு நம்பிக்கையுடன், ஆசையுடன்.

“அப்படி எல்லாம் என்னைப் பயமுறுத்தாதே!” என்றான் கிருஷ்ணன்.

“உங்களைப் பயமுறுத்த நானே வந்திருக்கிறேன்!” என்று சொல்லிக் கலகலவென்று சிரித்துக்கொண்டு உள்ளே வந்த லீலாவை அவன் அச்சமயம் அங்கு எதிர்பார்க்கவில்லை. தாயாரும் பிள்ளையும் எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாமலே தான் லீலா அவ்வார்த்தைகளைக் கூறினாள் என்பது கிருஷ்ணனுக்கும் அவன் தாயாருக்கும் வெளிப்படையாகவே தெரிந்தது. ஆனால் அவன் பயமுறுத்தல் பலித்து விடுமோ என்று

கிருஷ்ணனுக்கும், பலித்துவிட்டால் தேவலையே என்று அவன் தாயாருக்கும் இருந்தது என்று சொல்வது பொருந்தும்.

லீலாவைத் தொடர்ந்து வந்த சீதாராமனையும் மனோரமாவையும் பார்த்த பின்தான் கிருஷ்ணன் சமாளித்துக் கொண்டான். மற்றவர்களால் சமாளிக்க முடியாத எவ்வளவோ சந்தர்ப்பங்களில் சமாளித்துக்கொண்டு பழகியவன் கிருஷ்ணன். எனினும் இந்த சந்தர்ப்பத்தில் சமாளித்துக் கொள்வது சிரமமாகத்தான் இருந்தது.

“வாடா பழி, மாடிக்குப் போகலாம் வா, என்று சீதாராமனைக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு, லீலாவுடன் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் போகிறோமே என்பதை மறந்துவிட்டு, மாடிக்குப் போய் விட்டான்.

அப்படிக் கிருஷ்ணன் ஓடிப்போனது நல்ல சூசகமாகப்பட்டது மனோரமாவுக்கு. தான் உத்தேசித்திருந்த காரியத்தில் பாதி முடிந்த மாதிரித்தான் என்று தீர்மானித்துக்கொண்டாள் அவள்.

தன்னுடன் வந்திருந்தது தன் தங்கை என்றும், அவளுக்குக் கிருஷ்ணனைத் தெரியும் என்றும் கிருஷ்ணனின் தாயாரிடம் தெரிவித்துவிட்டு வேறு ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் மனோரமா அவளிடம்.

லீலாவின் அழகையும், அவள் நடை உடை பாவனைகளையும், பேச்சையும் கவனித்த கிருஷ்ணனின் தாயாருக்கு இந்த மாதிரி மனைவி கிருஷ்ணனுக்கு வாய்க்கக்கூடாதா என்றுதான் இருந்தது என்று சொல்லவும் வேண்டுமா?

10

அதெல்லாம் எப்படி நேர்ந்தது என்று பிற்காலத்தில் கேட்டிருந்தால் கிருஷ்ணனால் சொல்லியிருக்க முடியாது. உண்மை என்னவென்றால் அவனுக்கே தெரியாது. அவனும் கலியாண மானவர்கள் கோஷ்டியில் சேர்ந்துவிட்டான், அபாயம், அபாயம் என்று கூறிக் கொண்டிருந்தது போக.

இந்த மாதிரி சந்தர்ப்பங்களுக்குக் கிருஷ்ணன் பழக்கப் படாதவன் என்பதும் இல்லை; லீலாவைப் போன்ற அழகியை, அவளையும்விட அழகானவர்களை அவன் சந்தித்ததுண்டு; அவர்களுடன் பழகியதுண்டு. அவளைவிட அறிவுள்ளவர்களையும் அவன் அறிவான். ஆனால் அந்த அழகும் அறிவும் சேர்ந்த ஒரு பெண்ணைத்தான் அதற்குமுன் சந்தித்ததில்லை. அவள் அழகையும் அறிவையும் கண்டே தான் மயங்கிவிட்டதாக அவன் நினைப்பு.

ஆனால் லீலாவுக்கும் மனோரமாவுக்கும் தெரியும், இதெல்லாம் எப்படி நேர்ந்தது என்று. ஏனென்றால் இப்படித்தான் நேரவேண்டும் என்று நினைத்து விசைகளை முடுக்கி நடத்தி வைத்தவர்கள் அவர்களேயல்லவா? சீதாராமனுக்குக்கூட அவர்களுடைய யுக்திகளெல்லாம் சரிவரத் தெரியாது. அவற்றின் பலனைக் கண்டுதான் அவனும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான்.

கிருஷ்ணனுடைய மனதில் ஏற்பட்ட மாறுதல் பத்தே நாட்களில் நிகழ்ந்தது. அந்தப் பத்து நாட்களும் லீலா தன் சகோதரியுடன் கோமளீசுவரன் பேட்டையிலேதான் தங்கியிருந்தாள்.

முதல்நாள் இரவு லீலாவை மனோரமா கோபித்துக் கொள்ளத்தான் கோபித்துக்கொண்டாள். கிருஷ்ணனைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையுமாகச் சொல்லி லீலாவின் மனசைக் கலைக்க முயன்றாள். அந்த முயற்சி வெற்றி பெறாதது கண்டு, தன் தங்கையுடன் தானும் சேர்ந்துகொண்டு இருவரும் கிருஷ்ணனைப் பிடிக்க வலைவீசினார்கள்.

லீலா மட்டும் தனிப்பட்டவளாக இருந்தால், கல்யாணம் என்கிற தளையிலிருந்து கிருஷ்ணன் தன்னை சாமர்த்தியமாக விடுவித்துக் கொண்டு தப்பியிருப்பான். ஆனால் மனோரமா வினுடைய முதிர்ந்த அனுபவமும், அவளுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்த கிருஷ்ணனின் பழக்க வழக்கங்களும் உபயோகப் பட்டன, கிருஷ்ணனுக்கும் லீலாவுக்கும் கல்யாணமாகிற வழியிலே.

கிருஷ்ணன் அந்தப் பத்து நாட்களும் அதற்கு முன் வந்தது போல சீதாராமனைத் தேடிக் கொண்டு மாலையில் மட்டும் வருவதில்லை. காலையிலும் வந்தான்-நண்பகலிலும் வந்தான். முன்போலெல்லாம் கீழே காரிலிருந்தபடியே ஹார்ன் அடித்துத் தன் நண்பனைக் கூப்பிட்டுக் கொண்டு போய்விடுவதில்லை. ஒரு எட்டில் மூன்றுபடி, தாண்டி மாடிப்படி ஏறி வருவான். அதற்கு முன், எப்பொழுதாவது நேர்ந்தாலொழிய மனோரமாவுடன் அதிகமாகப் பேசாதவன், இப்பொழுது தினம் ஏதாவது பேசுவான்.

ஆனால் பேச்சு வேறு எதைப் பற்றித் தொடங்கினாலும் லீலாவிலே தான் போய் முடியும்.

இந்தப் பத்து நாட்களிலும் லீலா ஒரு பத்து தடவைகளுக்கு மேல் அவன் முன்வரவில்லை. வீட்டிலே தான் இருப்பாள். ஆனால் ரொம்ப அலுவலாக இருப்பதுபோல வந்துவிட்டு ஓடிவிடுவாள். ஒரே ஒரு நாள் மாலையில் தவிர கால்மணி நேரத்திற்குமேல் அவனுடன் தனியாக இல்லை. அப்படி அன்று தனியாக விடப்பட்டதற்கும், மற்ற நாட்களில் தனியாக இல்லாததற்கும் பொறுப்பு மனோரமாவே.

லீலாவைக் கிருஷ்ணன் சந்தித்த பன்னிரண்டாவது நாள் அவனுடைய தகப்பனார் யாரோ ஒரு பெண்ணுடைய ஜாதகத்தைக் கொடுத்துவிட்டு, “இந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்க கிருஷ்ணன் ஆக்ஷேபிக்க மாட்டான் என்று அவன் சிநேகிதன் சீதாராமன் கொடுத்தானே!” என்று அவர் மனைவியிடம் கூறுவது கிருஷ்ணனின் காதிலும் விழுந்தது.

சாதாரணமாக இந்த மாதிரிப் பேச்சு அவன் காதில் விழும்படியாக வீட்டில் நடந்தால் எரிந்து விழுவான் கிருஷ்ணன். ஆனால் இப்பொழுது சற்றே நிதானமாகக் கவனித்தான் பேச்சை.

“யார் அது?” என்றான் கிருஷ்ணனின் தாயார்.

“யாரோ மைலாப்பூர்க் காரராம். பொண்ணு பெயர் லீலா” என்றார் அவன் தகப்பனார்.

”மனோரமாவினுடைய தங்கை, ஆமாம். அவ அன்னிக்குக்கூட வந்திருந்தாள்!” என்றாள் அவன் தாயார். அந்த லீலாவின் அழகையும் குணங்களையும் பற்றி வர்ணிக்கத் தொடங்கினாள்.

இந்த வர்ணனை கிருஷ்ணனுக்கும் திருப்தியளித்தது என்றே சொல்லவேண்டும்.

கிருஷ்ணன் தங்கள் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருப்பது அவன் பெற்றோருக்கும் தெரியாமல் இல்லை.

வீணாக வளர்த்துவானேன்? கிருஷ்ணனுக்கும் லீலாவுக்கும் கல்யாணம் ஒரு நல்ல நாளில் நல்ல லக்னத்தில் சம்பிரதாயமான வழியிலே நடந்தேறியது.

இதில் யாருக்குத் திருப்தி அதிகம் என்று சொல்ல முடியாது. மனோரமாவுக்கா, லீலாவுக்கா, சீதாராமனுக்கா என்று தீர்மானிப்பது மிகவும் சிரமமான காரியமே.

ஆனால் இவர்களெல்லோரையும் விடத் தனக்குத்தான் திருப்தி அதிகம் என்று கிருஷ்ணனே சொல்லிக் கொண்டதை, முந்தைய பிரம்மசாரி விரதம் மாதிரி, வீண் வார்த்தை என்று ஒதுக்கிவிட முடியாதுதான்!

11

இப்பவெல்லாம் மனோரமா “உங்க சிநேகிதர், உங்க சிநேகிதர்” என்று கிருஷ்ணனையோ, சீதாராமனையோ ஏசுவதில்லை. “லீலா ஆத்துக்கார் லீலா ஆத்துக்கார்” என்று சற்றுப் பெருமையாகவே தான் சொல்லுகிறாள்.

“பணக்காரன், ஏழை -உறவானப்பறம் நான் ஒண்ணும் சொல்லப்படாது” என்று சீதாராமனின் தாயார் அதில் சம்பந்தப் படாமல் ஒதுங்கிவிடுகிறாள்.

கீழ்வீட்டு லக்ஷ்மி அம்மாளுக்குத் தன் வம்பு வார்த்தைகள் தான் இப்படிப் பலித்தன என்பது தெரியவே தெரியாது. இனி அவள் கேட்கமாட்டாள் “அவர் ஏன் உங்க ஆத்துக்காரரைத் தேடிண்டு வரார்?” என்று. கிருஷ்ணனைப் பற்றிப் பேச்செடுக்க இனி சந்தர்ப்பம் வாய்க்காதே என்று அவளுக்குச் சற்று வருத்தம்தான்.

“கிருஷ்ணன் என்றுதான் பெயர் வைக்கவேண்டும்” என்று சீதாராமனின் தாயார் சொல்கிறபோதெல்லாம், சீதாராமன் சிரித்துக் கொண்டே “எனக்கு பெண்தான் பிறக்கப் போகிறது, முதலில்” என்கிறான்.

மனோரமாவும் சிரிக்கிறாள். ஆனால் பதில் எதுவும் சொல்வதில்லை.

– 1943

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *