மாலதி ஈமெயில் அனுப்பியிருந்தாள். ‘உன் ரிடர்ன் டிக்கெட்டை உடனே கேன்செல் செய். வெள்ளி இரவு ஹாம்பர்கிலிருந்து லுப்தான்ஸாவில் நான் மும்பை வருகிறேன். நாம் இருவரும் சேர்ந்து திருப்பனந்தாள் போய் மாமாவை பார்க்கிறோம்’ என்று எழுதியிருந்தாள்.
மாமா! திருப்பனந்தாள் சேது மாமா! நினைத்ததுமே இனிக்கும் அந்த வார்த்தைகள் என்னை கிறங்க அடித்து பின்னோக்கி இழுத்து சென்றன.
எங்கள் சின்ன வயசு விஷம காலங்களில் மாமாவைப் போல் இனிதான விஷயம் வேறு எதுவும் இருந்ததாக நினைவில்லை. என் அப்பாவுக்கு உகான்டா இந்திய தூதரகத்தில் வேலை என்பதால் நாங்கள் எங்கள் பாட்டி வீட்டில்தான் வளர்ந்தோம். செங்கல்பட்டில் வேலை பார்த்துக் கொண்டு சனி ஞாயிறுகளில் வந்து போகும் சேதுதான் எங்கள் உற்ற நண்பன். அதனால்தான் என்னவோ எங்களுக்கு சேதுவுக்கு மாமா என்ற ச·பிக்ஸ் கூட தேவையில்லாத வார்த்தையாக இருந்தது. வெள்ளிக்கிழமை நெருங்க நெருங்க எங்கள் பேச்சு சேதுவை பற்றியே இருக்கும். அதே மாதிரி ஞாயிறு இரவு பழி சோகம் அப்பிக்கொள்ளும். வெள்ளிக்கிழமை வரை எங்களோடு ஒட்டிக் கொண்டிருக்கும் உள்ளூர் தோழர் தோழிகளை சனி ஞாயிறுகளில் டூ விட்டு விடுவோம்.
ஒவ்வொரு முறையும் இந்த தடவை சேது வரும் வரை எப்படியாவது முழித்துக் கொண்டிருப்பது என்று நாங்கள் தீர்மானம் செய்வோம். ஆனால் அது நடக்காது. எட்டரை மணி ஆனதும் என் தலையாட்டம் ஆரம்பித்துவிடும். மாலு அடிக்கடி மூஞ்சி அலம்பி விட்டு என்னை கவலையாக பார்ப்பாள். தாத்தாவின் ரயில் வண்டி புகை மாதிரியான தொடர் திட்டுகள் ஆரம்பித்து விடும். ‘போடு லெட்டரை. உகான்டாவுக்கு அனுப்பு இந்த வானரங்களை. கல்யாணம் பண்ணி விட்டாச்சு. கடமை முடிஞ்சுது. எனக்கெதுக்கு இந்த தலைவலி ?’ என்று ஆரம்பித்துவிடுவார். மாலு விறுக் விறுக்கென்று என்னையும் இழுத்துக் கொண்டு தேரடி பஸ் ஸ்டாப் வரை நான்கைந்து முறை போய் வருவாள். ‘எனக்கு தூக்கம் வர்றதுடி’ என்று நான் நச்சரிக்க ஆரம்பிப்பேன். தூரத்தில் தெரியும் ஒவ்வொரு இரட்டை வெளிச்ச புள்ளிகளையும் காண்பித்து அதுதான் சேது வரும் பஸ் என்பாள். ஆனால் அது அதுவாக இருக்காது. கடைசியில் வெறுத்துப்போய் என் பிடுங்கல் தாங்காமல் வீட்டுக்கு வந்துவிடுவோம். இத்தனைக்கும் பத்து மணிகூட ஆகியிருக்காது.
சொல்லி வைத்த மாதிரி ஒவ்வொரு தடவையும் எங்கள் தலை சாய்ந்த பிறகே மாமா வருவாராம். ‘பேய் மாதிரி ராத்திரி பதினோரு மணிக்கு என்னடா சாப்பாடு? செங்கல்பட்டுலேயே சாப்புட்டு வரக் கூடாது. இதே வழக்கமா போச்சு. அதுகள் அஞ்சு நாள் அடிக்கற லூட்டிய தாங்கமுடிலைன்னா, இவனும் அதுகளோட சேர்ந்துக்கிட்டு…’ என்ற தாத்தாவின் கீறல் விழுந்த பிளேட்டை எங்களை மாதிரியே மாமாவும் சட்டை செய்யமாட்டாராம். விடிகாலையில் அரைதூக்கத்தில் நான் காலை தூக்கி போடவும் அதில் மாமாவின் ஸ்பரிஸம் புரியும். ‘சேது’ என்று விழி அகல ஆச்சர்யப்பட்டு மாமாவை கட்டிக் கொள்வேன். அந்த சந்தோஷத்திலேயே ஒரு பத்து நிமிஷம் குட்டித் தூக்கம் போடுவேன். ஒவ்வொரு முறையும் நாங்கள் ‘சேது’ என்று உரக்க சப்தமிட்டு கூப்பிட ‘அவன் முழங்கால் அளவு கூட இல்லை, என்னவோ இதுக பேரு வச்சமாதிரி சேதுன்னு கூப்பிடதுக. டேய்! மாமான்னு சொல்லணும் புரிஞ்சுதா’ என்று பாட்டி எவ்வளவோ சொல்லியும் நாங்கள் கேட்டதே இல்லை. அஞ்சரை அடி ஒல்லிபிச்சான் சேது எங்களோடு பழகும் போது மூன்றடி சிறுவனாகி போய்விடுவார்.
வார நாட்களில் வீட்டுக் கொல்லையிலேயே பல் தேய்ப்பது, குளிப்பது என்றால் சனி ஞாயிறுகளில் எங்களுக்கு எல்லாம் மண்ணியாற்றில்தான். மாமா ஒரு துண்டை எடுத்து முண்டாசு கட்டிக் கொள்வார். இடுப்பு வேட்டியில் பிரஷ், பேஸ்ட், சோப்பு டப்பா வகையறாக்களை முடிந்து கொண்டு எனக்கும் ஒரு சின்ன முண்டாசு கட்டி விடுவார். ‘சேது. சங்கரை அழைச்சிகிட்டு போ. மாலு வேண்டாமே’ என்று பாட்டி சொல்லிக் கொண்டே இருப்பாள். ‘போ பாட்டி. முடியாது. நானும் போவேன்’ என்று மாலு எங்களுக்கு முன்னால் கிளம்பிவிடுவாள். தெரு தாண்டும் வரைதான் அமரிக்கையாக வருவாள். செல்லியம்மன் கோயில் வந்ததும் அவளும் ஆம்பிளை காமாட்சி ஆகிவிடுவாள். கலியமூர்த்தி கடையில் இரண்டு வாடகை சைக்கிள் எடுத்துக் கொள்வோம். மாமா என்னை டபுள்ஸ் ஏற்றிக் கொள்ள மாலு இன்னொரு சைக்கிளில் வருவாள்.
மண்ணியாற்றில் ஒரு மூலையில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். அரையடி ஆழ தண்ணீரில் எதிர்பக்கமாக தடதடவென ஓடி பொத்தென்று விழுவோம். கண்கள் சிவந்து போகும் வரை கைகால்கள் பரப்பி மல்லாந்து படுத்துக் கொண்டு தண்ணீரில் ஊறிக் கொண்டிருப்போம். குளித்து கரையேறியதும் கரையோரம் வந்து இடுக்குகளில் ஒளிந்திருக்கும் தண்ணீர் பாம்புகளை சீண்டுவோம். மாமா பாம்பின் தலை எந்த பக்கம் இருக்கிறது என்று பார்த்துக் கொண்டு வால் பக்கம் குத்துவார். பாம்பு சீற்றத்தோடு வெளியே வரவும் கவட்டை மாதிரி இருக்கும் குச்சியால் தலையை அமுக்கிவிடுவார். சரண்டர் ஆன பாம்பின் வால் சரசரவென வெளியே வரும். நிதானமாக வாலை பிடித்து தீபாவளி பட்டாசில் சாட்டையை பிடிப்பது மாதிரி தூக்கிப் பிடிப்பார். அது ஸ்ப்ரிங் ஆக்ஷனில் சுழன்று சுழன்று வாயை பிளக்கும். நான் பயந்து ஓடுவேன். ஆனால் திரிதண்டி மாலு கொஞ்சமும் பதட்டப்படாமல் மாமாவின் தைரியத்தில் கொஞ்ச நேரம் பிடித்துக் கொண்டு என் பக்கம் ஆட்டுவாள். மாமா ஒரு வீர விளையாட்டுக்காக பாம்பை பிடிப்பாரே தவிர அதை கொல்ல மாட்டார். மறுபடியும் தண்ணீரில் வீசி எறிந்து விடுவார். அது தண்ணீரில் எஸ் போட்டுக் கொண்டே போவது வேடிக்கையாக இருக்கும்.
ஆற்றங்கரைக்கு பக்கத்திலேயே நிறைய மாந்தோப்புகள் உண்டு. மாமாவும் மாலுவும் வேலியை பிரித்து தோட்டக்காரனுக்கு தெரியாமல் மரத்தில் ஏறுவார்கள். வடு மாங்காய்களை பறித்து ஆற்றில் வீசி எறிவார்கள். என் வேலை அதை பொறுக்கி வைத்துக் கொள்வதுதான். இத்தனைக்கும் அந்த தோட்டத்தின் முதலாளி மாமாவுக்கு தெரிந்தவர்தான். என்ன இருந்தாலும் திருட்டு மாங்காயின் ருசியே தனிதான்.
மாமாவுக்கு இயல், இசை நாடகம் எல்லாமே அத்துபடி. எல்லாவற்றிலும் நகைச்சுவை கொஞ்சம் தூக்கலாக இருப்பதுதான் ஸ்பெஷாலிடி. மாமாவுக்கு நல்ல சங்கீத ஞானம் உண்டு. லேடஸ்ட் சினிமா பாடல்களை சுருதி சுத்தமாக பாடி காட்டுவார். வேடிக்கைக்கு சோகப் பாடல்களை டப்பாங்குத்து மெட்டில் பாடி எங்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். சினிமா கதை சொன்னால் முதல் எழுத்து போடுவதில் ஆரம்பித்து சீன் பை சீனாக பிஜிஎம்மோடு சொல்வார். நம்பியார் அப்படி திரும்பி பார்ப்பார், ‘டண்ட்ர டைன்’ என்று ம்யூசிக் எ·பக்டோடு சொல்லும் போது நாங்கள் நம்பியாரையே நேரில் பார்ப்போம். பைட் சீன் சினிமாவில் பத்து நிமிடங்கள் வந்தால் மாமா குறைந்த பட்சம் அதை மூன்று நிமிடங்களுக்கு குறையாமல் ‘எம்.ஜி.ஆர். இப்படி கையை மடக்கி குத்து விட்டார். ஜெஸ்டின் அப்படி உருண்டு விழுந்தான்’ என்று விளக்கிச் சொல்வார். அவர் சொல்ல சொல்ல என் கை மற்றும் முக பாவனைகள் அதற்கு ஏற்ற மாதிரி போகும். மாலுவும் நானும் சண்டை போட்டுக் கொள்ளும் போது கூட அந்த உத்திகள் வெளிப்படும். அதே மாதிரி மாமா தான் அமர்சித்ரகதாவில் படித்த டூப்டூப் முதலை, சமடாகா நரி, காலியா காக்கை பற்றிய கதைகள் சொல்லும் போது முகத்தில் ஏக சேஷ்டைகள் செய்து சொல்வார்.
திருப்பனந்தாளில் பச்சை காளி பவழ காளி திருவிழா நடக்கும். பச்சையிலும் சிவப்பிலும் பெரிது பெரிதாக முகமூடிகளை கட்டிக் கொண்டு நடு ரோட்டில் நடனம் ஆடிக் கொண்டு காளிகள் வரும். அந்த வாரம் எங்களுக்கு மாமா பச்சை காளி பழவ காளி டான்ஸ் ஆடி காட்டுவார். அதற்கும் வாயாலேயே ‘டன்டனக்கா, டன்டனக்கா’ என்று ம்யூசிக் போட்டுக் கொள்வார். அப்போதெல்லாம் சினிமாவில் ட்விஸ்ட் நடனம் ரொம்பவும் பாபுலர். ஒரு முறை மாலு அது மாதிரி எப்படி ஆடுவது என்று கேட்டு வைக்க, மாமா எளிதாக கற்றுக் கொடுத்தார். ‘ரொம்ப சிம்பிள். மாலு. தையல் மிஷினில் டைலர் துணியை தள்ளுவது பார்த்திருக்கிறாயா? அதே மாதிரிதான் இதுவும்’ என்று சொல்லி அதே மாதிரி செய்து காட்டுவார். இதை நான் என் ஸ்கூலில் அபிநயம் செய்து ஹெட்மாஸ்டரிடம் பேர் வாங்கினேன்.
மாமா சீட்டுக் கட்டில் பல பிரமிக்கதக்க விளையாட்டுக்கள் செய்வார். அதில் சில விளையாட்டின் சூட்சுமங்களை சொல்லியிருக்கிறார். அது தெரிந்ததும் சே! இவ்வளவுதானா என்று தோன்றும். சிலவற்றுக்கு எவ்வளவு கெஞ்சியும் சொல்ல மாட்டார். ‘வேண்டாம் சங்கர். சில ரகசியங்கள் ரகசியங்களாகவே இருக்கட்டும். அப்பத்தான் அதுக்கு மதிப்பு’ என்பார். அதில் முக்கியமான விளையாட்டு இன்னும் ஞாபகம் இருக்கிறது. சீட்டுக் கட்டிலிருந்து பத்து கார்டுகளை எடுத்து தான் பார்த்துவிட்டு பத்து பேர்களிடம் கொடுப்பார். பத்து பேர்களும் அவர் சொன்ன இடத்தில் நிற்க வேண்டும். தங்கள் கார்டை இன்னொருவரிடம் எத்தனை முறை வேண்டுமானலும் யாரிடமும் மாற்றிக் கொள்ளலாம். பத்து பதினைந்து பரிவர்தனைகளுக்கு பிறகு மாமா யாரிடம் என்ன கார்டு இப்போது இருக்கிறது என்று சரியாக சொல்வார். அது எப்படி சாத்தியம் என்று இன்று வரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ‘ரொம்ப சிம்பிள் சங்கர். என்னென்னு தெரிஞ்சா ஒண்ணுமேயில்லை’ என்பார்.
மாலு பெரியவள் ஆனதும் தாத்தாவின் நச்சரிப்பு அதிகமானது. அந்த சமயத்தில் அப்பாவுக்கும் இங்கிலாந்துக்கு டிராண்ஸ்பர் ஆனது. எங்கோ ஒரு பலவீனமான சந்தர்பத்தில் பாட்டி ஏதோ யாரிடமோ சொல்லப்போக அதற்கு கைகால் முளைத்து வேறு விதமாக என் அப்பாவுக்கு போய் சேர்ந்தது. அதன் பலன் ஒரே வாரத்தில் நாங்கள் திருப்பனந்தாளிலிருந்து பிடுங்க்கப்பட்டு லண்டனில் நடப்பட்டோம். மாலு சமாளித்துக் கொண்டாள். நான்தான் ரொம்ப கஷ்டப்பட்டேன். அதைப்பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. பெரியவர்கள் போட்ட யுத்த சத்தத்தில் எங்கள் மாமா கோவில் குளத்தில் கரைத்த வெல்லம் மாதிரி காணாமல் போனார். மாலு கல்யாணம் ஆகி ஹாம்பர்க் போனாள். நான் படிப்பை முடித்ததும் நாரதர் மாதிரி திரிலோக சஞ்சாரி ஆகி தற்போது சிட்னியில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன். இப்போது மாலுவுக்காக காத்திருக்கிறேன்.
சொல்லி வைத்த மாதிரி மாலு வெள்ளி இரவு வந்தாள். படபடவென திருப்பனந்தாள் போக எல்லா ஏற்பாடுகளும் செய்தாள். சென்னை போய் டூரிஸ்ட் டாக்சியில் அமர்ந்து தாம்பரம் தாண்டியதும் மாமாவை பற்றிய அதிர்ச்சியான விஷயங்களை சொல்ல ஆரம்பித்தாள். என்னால் நம்பவே முடியவில்லை.
“ஏன் மாலு. மாமா கல்யாணமே பண்ணிக்கலை. மாமாவுக்கு இப்ப 60 வயசு இருக்குமா?”
“இருக்கும். சிரிக்க சிரிக்க பேசறவங்க பின்னாடி ஒரு சோகம் இருக்கும்னு சொல்வாங்க இல்லையா? அது மாமாவுக்கும் ஒட்டிக்கிடுச்சுன்னு நினைக்கிறேன். மாமாவுக்கு குழந்தை மாதிரி வெள்ளை மனசுடா. வெள்ளந்தியா எல்லாகிட்டையும் பழகுவாரு. அதுவே அவருக்கு பல சமயங்கள்ல பலவீனமா போயிருக்கு. ஒரு பொண்ணை உயிருக்கு உயிரா காதலிச்சாராம். அது அவரை ஏமாத்தின அதிர்ச்சியை அவரால தாங்க முடியலையாம். ஒரு வழியா சமாளிச்சு எழுந்து நின்னவரை பிசினெஸ் பண்ணலாம் வான்னு சொல்லி அவரோட ஒரு சில நண்பர்களே அவரை கவுத்துட்டாங்களாம். இதெல்லாம் நடந்து இருபது வருஷத்துக்கும் மேல ஆயிருக்குது. திடீர்னு ஒரு நாள் மாமா ஊர விட்டு ஓடி போய் எங்கேயோ கண்கணாத இடத்தில இருந்தாராம். போன வருஷம்தான் ஏதோ கொஞ்ச காசு பணம் சேர்த்துக்கிட்டு ஊருக்கு திரும்பி வந்திருக்கிறாராம். சொல்லிக்கிற மாதிரி இல்லையாம். ஒரு வாடகை வீட்டிலே இருக்காராம். இதெல்லாம் நம்ப அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சிருக்குடா. நம்ம கிட்டே சொல்லவே இல்லை. எனக்கு போன வாரம்தான் தெரிஞ்சுது. ஆடி போய்டேன்டா.”
மாலு அழ ஆரம்பித்தாள். டிரைவர் திரும்பி பார்க்கவும் கொஞ்சம் நாசூக்காக குறைத்துக் கொண்டாள். ஒரு தலைகாணியை எடுத்து வயிற்றில் கட்டிக் கொண்டு, பொட்டலம் கட்டுவது போல பேப்பரை கூம்பு மாதிரி சுருட்டி தலையில் குல்லாவாக வைத்துக் கொண்டு, ‘ஜின்ஜினுக்கான் சின்னக்கிளி, சிரிக்கும் பச்சைகிளி’ என்று ப·பூன் மாதிரி ஆட்டம் ஆடின சேதுதான் மனதில் வந்து போனார். அவருக்கு இப்படி ஒரு நிலைமையா?
திருப்பனந்தாள் வந்ததும் மாமாவை இதுதான் அந்த சேது என்று அடையாளம் காண வெகு நேரம் ஆயிற்று. அதை வீடு என்று கூட சொல்ல முடியாது. பத்துக்கு பத்து ஒரு ஷெட் என்றுதான் சொல்ல வேண்டும். சுத்தமாக ஓட்டையாண்டி. எங்களுக்கு டீ வாங்கிக் குடுக்க காசுக்கு தடுமாறினார். கூடு விழுந்த கண்கள். அழுக்கான தாடி. இரும ஆரம்பித்தால் சங்கிலியாக ஐந்து நிமிடங்களுக்கு குறைவில்லாமல் இருமினார். கைகள் நடுங்கின.
எங்களை பார்த்ததும் கூட்டம் கூடி விட்டது. எல்லோரும் கோரஸாக ‘நீங்கள் கூட்டிக் கொண்டு போய்விடுங்கள்’ என்று சொன்னார்கள். மாமா ரொம்பவும் முரண்டு பிடித்தார்.
அதிர்ச்சியில் உறைந்து போய் பேச்சற்று போன நான் ஏதோ ஒரு வேகத்தில் மாமாவை தரதரவென காரை நோக்கி இழுத்து வந்தேன். பின் கதவை திறந்து நின்ற டிரைவர் கூட அசூயையாக பார்த்தான். மாமாவை உள்ளே தள்ளி ‘வண்டியை எடு’ என்று சத்தம் போட்டேன். அடுத்த சில நிமிடங்களில் மாலு அங்கு உள்ள எல்லா கணக்குகளையும் செட்டில் செய்தாள்.
வண்டி அணைக்கரையை தாண்டும் வரை நாங்கள் இருவரும் பேச்சற்று இருந்தோம். பிறகு எனக்குதான் பேச தைரியம் வந்தது. “என்ன ஆச்சு மாமா? ஏன் இப்படி? எங்ககிட்ட சொல்லியிருக்கலாம் இல்லையா ? “
மாமா கண்ணை மூடிக் கொண்டார். “சங்கர், சில விஷயங்கள் ரகசியங்களாகவே இருக்கட்டுமே. விட்டுடேன்” மாமாவின் மூடிய கண்களிலிருந்து நீர் கோடாக இறங்கிக் கொண்டிருந்தது.
– 06 பிப்ரவரி 2008